Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
புற்றுநோய், இளம் தலைமுறை

பட மூலாதாரம்,LUISA TOSCANO

படக்குறிப்பு, பிரேசிலைச் சேர்ந்த 38 வயதான லுயிசா டோஸ்கானோ, தனக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டபோது அதிர்ச்சியடைந்ததாகக் கூறுகிறார். கட்டுரை தகவல்
  • எழுதியவர், லூயிஸ் பாருச்சோ
  • பதவி, பிபிசி உலக செய்திகள்
  • 4 பிப்ரவரி 2025, 03:47 GMT
    புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்

தனக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பதாக லுயிசா டோஸ்கேனோவுக்கு தெரிந்தபோது அவர் திகைத்துப் போனார்.

"இது முற்றிலும் எதிர்பாராதது," என்கிறார் பிரேசிலை சேர்ந்த லுயிசா. அவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. "நான் சிறப்பாக, ஆரோக்கியமாக, முழு உடற்தகுதியோடு இருந்தேன், எந்த ஒரு நோய்க்கான அபாயமும் இல்லை. இது எனக்கு ஏற்பட்டிருக்க வாய்ப்பே இல்லை. என்னால் இதை நம்ப முடியவில்லை. எனது வாழ்க்கையில் எனக்கு புற்றுநோய் ஏற்படும் என்பதை நான் கற்பனை செய்துகூட பார்த்ததில்லை".

கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் லுயிசாவுக்கு மூன்றாம் நிலை புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது, அப்போதே அவருக்கு புற்றுநோய் பாதிப்பு மிகவும் தீவிரமாக இருந்தது.

நான்கரை மாதத்துக்கு மேல் அவருக்கு கீமோதெரபி சிகிச்சை வழங்கப்பட்டது. மேலும், அவரது மார்பகத்தின் ஒரு பகுதியை நீக்க அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. பின்னர் ரேடியோதெரபி சிகிச்சையும் வழங்கப்பட்டது.

 

கடந்த ஆகஸ்ட் மாதம் லுயிசாவுக்கு புற்றுநோய் சிகிச்சை நிறைவடைந்தது, ஆனால் புற்றுநோய் மீண்டும் வராமல் இருக்க அவர் தொடர்ந்து மருந்துகளை உட்கொள்ள வேண்டியிருக்கிறது.

"கீமோதெரபி மிக தீவிரமாக இருந்தது, ஆனால் எனது உடல் அதனை நன்கு தாங்கிக்கொண்டது. அதற்கு நான் சுறுசுறுப்பாக இருந்ததும் உடலை வலுவாக வைத்திருந்ததும்தான் காரணம் என்பேன்", என்று அவர் நினைவுகூர்ந்தார்.

அதன் பின்னர் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

 

"நல்வாய்ப்பாக, எனது மார்பகத்தை முழுமையாக அகற்றவேண்டிய தேவை ஏற்படவில்லை. எனது முடியை இழக்க வேண்டியிருந்ததுதான் இதில் எனக்கு மிகவும் கடுமையாக இருந்தது. ஒவ்வொரு முறையும் கண்ணாடியில் என்னைப் பார்க்கும்போது, நான் பயந்துபோவேன். இது எனது குழந்தைகளையும் பாதித்தது."

லுயிசாவைப் போலவே உலக அளவில் பலருக்கும் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருகின்றது. குறிப்பாக இளம் தலைமுறையினருக்கு அதிக அளவில் புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானோரின் முன்னோர்களுக்கு இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உடல் ரீதியாகவோ, சூழலியல் மற்றும் வாழ்வியல் காரணங்களால் வயது முதியவர்கள் மத்தியில் புற்றுநோய் அதிக அளவில் காணப்படுகிறது. உதாரணமாக ஒரு நபர் வயதடையும்போது, உயிரணு பிரிதல் அதிகரிக்கும். இது பிறழ்வுகள் (mutation) உருவாக வழிவகுக்கிறது மற்றும் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது

எனவே, புற்றுநோயியல் நிபுணர்கள் நீண்ட காலமாக இளம் வயதினரிடையே மார்பகப் புற்றுநோயில் BRCA1 மற்றும் BRCA2 பிறழ்வுகள் போன்ற மரபணு காரணிகளுடன், இளம் வயதினருக்கு ஏற்படும் ஆரம்பகால புற்றுநோய் வருவதைக் கண்டறிவதை இணைத்து வருகின்றனர்.

இருப்பினும், லுயிசாவைப் போன்ற அதிகமான நோயாளிகளுக்கு, மரபணு காரணங்களால் புற்றுநோய் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை.

புற்றுநோய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, மார்பக புற்றுநோய் அதிகரித்து வருவதாக ஆரம்பகால புற்றுநோய்கள் குறித்த ஓர் அறிக்கை தெரிவிக்கின்றது.

அதிகரித்து வரும் புற்றுநோய் பாதிப்புகள்

பிஎம்ஜே என்னும் புற்றுநோய் இதழில் சமீபத்தில் வெளியான ஆய்வு முடிவுகளின்படி, 1990 மற்றும் 2019க்கு இடைப்பட்ட காலத்தில் உலகம் முழுவதும் 50 வயதுக்குட்பட்டவர்களின் ஆரம்பகால புற்றுநோயின் பாதிப்பு 9% அதிகரித்திருப்பதாகவும், இவர்கள் மத்தியில் புற்றுநோய் தொடர்புடைய மரணங்கள் 28% அதிகரித்திருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு 204 நாடுகளில் 29 வகையான புற்றுநோய்களை பகுப்பாய்வு செய்தது.

இதேபோல், தி லான்செட் பப்ளிக் ஹெல்த் இதழில் வெளியான அறிக்கையின்படி, அமெரிக்காவில் தலைமுறை தலைமுறையாக 17 வகையான புற்றுநோய் பாதிப்பு சதவிகிதங்கள் படிப்படியாக அதிகரித்து வருவதாகக் காட்டுகிறது, குறிப்பாக Gen X மற்றும் மில்லினியல்ஸ் (1965 மற்றும் 1996க்கு இடையில் பிறந்தவர்கள்) மத்தியில் இது அதிகரித்திருப்பதாக தெரியவந்திருக்கிறது.

2012 மற்றும் 2021க்கு இடையில் 50 வயதுக்குட்பட்ட வெள்ளையின பெண்கள் மத்தியில் மார்பக புற்றுநோய் ஏற்படும் விகிதம் ஆண்டுக்கு 1.4% உயர்ந்த நிலையில், அது 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மத்தியில் 0.7% ஆக இருந்ததாக, அமெரிக்க புற்றுநோய் சங்கத்தின் (ACS) புதிய அறிக்கை தெரிவிக்கின்றது.

பிஎம்ஜே புற்றுநோய் இதழில் நாசித் தொண்டை, வயிறு, பெருங்குடல் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்படும் புற்றுநோய்களும் இளைஞர்களிடம் அதிகரித்திருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புற்றுநோய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இளம் வயதினரிடையே புற்றுநோய் அதிகரிப்பதற்கான காரணங்களை கண்டறிய ஆய்வாளர்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள்

புற்றுநோய் ஏன் வருகிறது?

இதற்கான காரணங்களை கண்டறிய ஆய்வாளர்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். அதிகரிக்கும் புற்றுநோய் வளர்ச்சி, பல பத்தாண்டுகளாக புற்றுநோய் தடுப்பில் ஏற்பட்ட முன்னேற்றங்களை மாற்றியமைக்கக்கூடும் என்ற அபாயம் இருப்பதாக லேன்செட் ஆய்வு எச்சரிக்கிறது.

பிஎம்ஜே புற்றுநோய் இதழ் மற்றும் லேன்செட் அறிக்கைகளின்படி, சிவப்பு இறைச்சி (ஆடு, மாட்டிறைச்சி போன்றவை) மற்றும் சோடியம் அதிகம் உள்ள உணவுகள், பழங்கள் மற்றும் பால் குறைவாக உள்ள உணவுமுறை போன்றவற்றுடன், அதிகளவு மது அருந்துதல் மற்றும் புகையிலை பயன்பாடு போன்றவையே முக்கிய காரணிகளாக கருதப்படுகின்றன.

மேலும் உடல் பருமன் ஏற்படுவதால் வரும் உடல் வீக்கம் மற்றும் ஹார்மோன் ஒருங்கின்மை போன்றவையும் புற்றுநோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணிகளாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

அமெரிக்காவில் இளைஞர்களிடையே அதிகரித்து வரும் 17 வகை புற்றுநோய்களில் சிறுநீரகம், கருப்பை, கல்லீரல், கணையம் மற்றும் பித்தப்பை போன்ற 10 வகை புற்றுநோய்கள் உடல் பருமன் தொடர்பானவை என்று லான்செட் அறிக்கை குறிப்பிடுகிறது.

இருப்பினும், இந்த காரணிகள் அனைத்தும் நோய் பாதிப்பு ஏற்படுவதற்கான காரணங்களை விளக்கவில்லை.

ஆனால், அனைத்து புற்றுநோய் நேர்வுகளையும், இந்த காரணங்கள், விளக்குவதில்லை.

புற்றுநோய்க்கான மற்ற காரணங்களையும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மின் சாதனங்கள் அல்லது தெருவிளக்குகள் மூலம் செயற்கை ஒளி தொடர்ச்சியாக உடலில் படுவது நமது உடல்நிலையை பாதித்து மார்பு, பெருங்குடல், கருப்பை மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய்கள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக சிலர் வாதிடுகின்றனர்.

இரவில் அதிக நேரம் ஒளி படும்படியாக இரவு நேர பணியில் பணியாற்றுவது மெலடோனின் அளவுகளை குறைத்து, புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதை ஊக்குவிக்கக்கூடும் என பிற ஆய்வுகள் கூறுகின்றன.

ஜூன் 2023-ல் நியூசிலாந்தை சேர்ந்த பெருங்குடல் அறுவை சிகிச்சை நிபுணர் பிரான்க் பிரிசெல் பெருங்குடல் புற்றுநோயை உண்டாக்குவதில் நுண் நெகிழிகளின் பங்கு குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என அழைப்பு விடுத்தார். இது ஆணுறையில் ஊசியால் ஓட்டையிடுவதைப் போல பெருங்குடலின் மேல் உள்ள பாதுகாப்பு அடுக்கை சேதப்படுத்துவது போன்றது என்று குறிப்பிட்டார்.

புற்றுநோய்

பட மூலாதாரம்,LUISA TOSCANO

படக்குறிப்பு, மார்பகப் புற்றுநோய்க்கு எதிரான தனது போராட்டத்தில் தனது குடும்பத்தினரின் ஆதரவு முக்கிய பங்கு வகித்ததாக லுயிசா கூறுகிறார்

உயரமாக இருந்தால் புற்றுநோய் அபாயம் அதிகரிக்குமா?

உணவில் சேர்க்கப்படும் அதிகமாக பதப்படுத்தப்பட்ட எமல்சிஃபையர்கள் மற்றும் நிறமூட்டிகள், குடல் அழற்சி மற்றும் டிஎன்ஏ பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என ஆய்வாளர்கள் வாதிடுகின்றனர். புற்றுநோய் ஆய்வுக்கான அமெரிக்க சங்கத்தின் கூற்றின்படி, குடற் செயல்பாடு கோளாறு, பெருங்குடல் புற்றுநோயோடு மட்டுமல்லாது, மார்பக மற்றும் ரத்த புற்றுநோயோடும் தொடர்புப்படுத்தப்படுகிறது.

ஆன்டிபயாடிக் எனப்படும் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் பயன்பாடு குடல் நுண்ணுயிரிகளை பாதிப்பதால், அதுவும் புற்றுநோய்க்கு ஒரு காரணமாக இருக்கிலாம் என்கிறார்கள் சில ஆய்வாளர்கள். ஆன்டிபயாடிக் மருந்துகள் பயன்பாடு 2000-ம் ஆண்டிலிருந்து சுமார் 45 விழுக்காடு அதிகரித்திருப்பதாக, குறிப்பாக சிறார்கள் மத்தியில் அதிகரித்திருப்பதாக கணிக்கப்படுகிறது. இது, நுரையீரல் புற்றுநோய், நிணநீர் மண்டல புற்றுநோய், கணைய புற்றுநோய், சிறுநீரக செல் புற்றுநோய், எலும்பு மஜ்ஜை பிளாஸ்மா செல்களில் உருவாகும் ரத்தப் புற்றுநோய் ஆகியவற்றுடன் தொடர்புடையது என, 2019-ல் வெளியான அறிக்கையில் இத்தாலியை சேர்ந்த ஒரு விஞ்ஞானிகள் குழு தெரிவித்திருந்தது.

தலைமுறைகளுக்கிடையில் அதிகரிக்கும் சராசரி உயரம் கூட புற்றுநோய் உருவாவதற்கு பங்களிக்கலாம் என, ஸ்காட்லாந்தின் எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் பெருங்குடல் சிகிச்சை நிபுணரும், பிஎம்ஜே ஆன்காலஜி அறிக்கையின் இணை ஆசிரியருமான பேராசிரியர் மால்கம் டன்லப் குறிப்பிடுகிறார்.

"மனித இனத்துக்கு பொதுவாக உலகம் முழுவதும் உயரம் கூடிக்கொண்டிருக்கிறது. உயரத்துக்கும் பெருங்குடல் புற்றுநோய் உட்பட பல புற்றுநோய்களுக்கும் வலுவான நேரடித் தொடர்பு உள்ளது." என்கிறார் அவர். அதிக செல் உற்பத்தி, இயல்பாக உருவாகும் வளர்ச்சி ஹார்மோன் தாக்கம், அதிக பெருங்குடல் பரப்பு போன்றவற்றை அவர் புற்றுநோயுடன் தொடர்புப்படுத்துகிறார்.

புற்றுநோய் மரபியலில் உலகில் முன்னணி நிபுணர்களில் ஒருவரான மருத்துவர் டன்லப், ஒரே ஒரு காரணமல்லாமல், பல்வேறு காரணிகள் ஒரே நேரத்தில் இணைவதுதான் இளம் வயதில் புற்றுநோய் ஏற்பட காரணம் என்றும் இருப்பினும் அவற்றை அடையாளம் காண்பது கடினம் என்றும் நம்புகிறார்.

"பெரும்பாலான அபாய காரணிகள் உரிய சீரற்ற கட்டுப்பாட்டு சோதனைக்கு உட்படுத்தப்படுவதில்லை," என குறிப்பிடுகிறார்.

பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும், ஒட்டுமொத்த அபாயம் குறைவு என்பதால் இளையவர்கள் அனைவரையும் புற்றுநோய் சோதனைக்கு உட்படுத்துவது பொருத்தமான பொருட்செலவாக இருக்காது என்றும் கூறுகிறார்.

என்ஐசி எனப்படும் அமெரிக்க தேசிய புற்றுநோய் மையத்தின் கூற்றுப்படி, 80 விழுக்காடு புற்றுநோய்கள் 55 வயதுக்கு மேற்பட்டோரிடம்தான் கண்டறியப்படுகிறது.

புற்றுநோய்

பட மூலாதாரம்,BRAZILIAN SOCIETY OF CLINICAL ONCOLOGY

படக்குறிப்பு, தாமதமாக நோயை கண்டறிவது நோயாளி குணமடையும் வாய்ப்புகளை பாதிக்கும் என்கிறார், மருத்துவர் லெக்ஸாண்ட்ரே ஜேகோம்

புற்றுநோயின் புறக்கணிக்கக்கூடாத அறிகுறிகள்

இருப்பினும் வளர்ந்து வரும் இந்த சூழ்நிலை, இளம் நோயாளிகளிடம் தோன்றும் அறிகுறிகள் கவனிக்காமல் விடப்படக்கூடாது என்பதை உறுதி செய்வதற்காக, இளம் வயதிலேயே புற்றுநோய் ஏற்படுவது குறித்த விழிப்புணர்வை பொது மருத்துவர்களிடையே ஏற்படுத்த சர்வதேச புற்றுநோய் கட்டுப்பாட்டு ஒன்றியம் (UICC) போன்ற முக்கிய அமைப்புகள் ஏற்படுத்தி வருகின்றன.

"60 வயதுக்கு மேற்பட்ட ஒருவர் மலம் கழிப்பதில் சிரமம், சோர்வு, வயிறு வீக்கம் போன்ற அறிகுறிகளை சொல்லும்போது , மருத்துவர்கள் அதை கவனத்தில் எடுத்துக்கொண்டு முழு உடல் பரிசோதனை செய்ய பரிந்துரைப்பார்கள். இருப்பினும், 30களில் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியமுள்ளவர்களாக கருதப்படாதவர்களுக்கும் இந்த அறிகுறிகள் சாதாரண வலிகளாக கண்டுகொள்ளாமல் விடப்படலாம்." என விளக்குகிறார் பிரேசிலின் புற்றுநோய் மருத்துவத்திற்கான சங்கத்தின் இயக்குநர் மருத்துவர் அலெக்ஸாண்ட்ரே ஜேகோம். தாமதமாக நோயை கண்டறிவது நோயாளி குணமடையும் வாய்ப்புகளை பாதிக்கும் என அவர் விளக்குகிறார்.

"இவர்கள், தங்கள் இளமை காலத்தின் உச்சத்தில் இருப்பவர்கள், தங்களுக்கான குடும்பம் ஒன்றைத் தொடங்குபவர்கள், சிறப்பாக வாழ்பவர்கள். புற்றுநோய் இருப்பதாக கண்டுபிடிப்பது அவர்களையும் அவர்களது அன்புக்குரியவர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது," என்கிறார்.

ஆனால் நோய் ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டால், இளம் நோயாளிகள் பெரும்பாலும் தீவிர சிகிச்சைகளை சிறப்பாக தாங்கிக்கொள்வார்கள். இதனால் அவர்கள் குணமடைவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று மருத்துவர் ஜாகோம் குறிப்பிடுகிறார்.

இளமையிலேயே வரும் புற்றுநோய்களின் நீண்ட கால பாதிப்புகள் குறித்து கவலை தெரிவிக்கிறார் மருத்துவர் டன்லப்.

"இந்த புற்றுநோய்களால் பாதிக்கப்படும் இளைஞர்கள் இந்த அபாயத்தை தங்களது வயதான காலத்துக்கும் அனுபவிக்கக் கூடும்", என்று அவர் எச்சரிக்கிறார். "இது எதிர்காலத்தில் அதிகரிக்கப்போகும் புற்றுநோய் தாக்கத்தின் தொடக்கமா அல்லது ஒரு குறிப்பிட்ட வயதினருக்கு மட்டும் ஏதாவது பாதிப்பு ஏற்படுகிறதா?"

புற்றுநோய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இளமையிலேயே வரும் புற்றுநோய்களின் நீண்ட கால பாதிப்புகள் குறித்து கவலை தெரிவிக்கிறார் மருத்துவர் டன்லப்

வாழ்க்கையை மாற்றும் அனுபவம்

"கடினமான நாட்களையும், மகிழ்ச்சியான நாட்களையும் ஒரே விதமாக இருண்ட எண்ணங்கள் தோன்றியபோது, அவற்றை கடந்து செல்ல முயற்சி செய்கிறேன். நான் வலிமையாக உணர்ந்தபோது, இதுவும் கடந்து போகும் என்பதை அறிந்ததால் அந்த தருணங்களை நான் மிகவும் நேசித்தேன்", என்று புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்ற லுயிசா கூறுகிறார்.

"ஒவ்வொரு நாளையும் பொறுமையாக அணுகுங்கள். உங்கள் உடல் சொல்வதை கேளுங்கள்- சில நாட்களில் ஓய்வு எடுப்பதுதான் நீங்கள் செய்யக்கூடியதில் சிறந்தது, அவ்வாறு செய்வது தவறில்லை. புற்றுநோய் ஒருவரின் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம், ஆனால் நீங்கள் யார் என்பதை வரையறுக்க அதை நீங்கள் அனுமதிக்க வேண்டியது இல்லை. மிகவும் கடினமான நேரத்திலும் வாழ்க்கை, வளர்ச்சி மற்றும் ஒரு அர்த்தம் இருக்கிறது", என்று அவர் மற்றவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

பிப்ரவரி 4  -  உலக புற்று நோய் தினம்!

  • கருத்துக்கள உறவுகள்
On 4/2/2025 at 07:13, ஏராளன் said:

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

புற்றுநோய் ஏன் வருகிறது?

இதற்கான காரணங்களை கண்டறிய ஆய்வாளர்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். அதிகரிக்கும் புற்றுநோய் வளர்ச்சி, பல பத்தாண்டுகளாக புற்றுநோய் தடுப்பில் ஏற்பட்ட முன்னேற்றங்களை மாற்றியமைக்கக்கூடும் என்ற அபாயம் இருப்பதாக லேன்செட் ஆய்வு எச்சரிக்கிறது.

பிஎம்ஜே புற்றுநோய் இதழ் மற்றும் லேன்செட் அறிக்கைகளின்படி, சிவப்பு இறைச்சி (ஆடு, மாட்டிறைச்சி போன்றவை) மற்றும் சோடியம் அதிகம் உள்ள உணவுகள், பழங்கள் மற்றும் பால் குறைவாக உள்ள உணவுமுறை போன்றவற்றுடன், அதிகளவு மது அருந்துதல் மற்றும் புகையிலை பயன்பாடு போன்றவையே முக்கிய காரணிகளாக கருதப்படுகின்றன.

மேலும் உடல் பருமன் ஏற்படுவதால் வரும் உடல் வீக்கம் மற்றும் ஹார்மோன் ஒருங்கின்மை போன்றவையும் புற்றுநோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணிகளாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

அமெரிக்காவில் இளைஞர்களிடையே அதிகரித்து வரும் 17 வகை புற்றுநோய்களில் சிறுநீரகம், கருப்பை, கல்லீரல், கணையம் மற்றும் பித்தப்பை போன்ற 10 வகை புற்றுநோய்கள் உடல் பருமன் தொடர்பானவை என்று லான்செட் அறிக்கை குறிப்பிடுகிறது.

இருப்பினும், இந்த காரணிகள் அனைத்தும் நோய் பாதிப்பு ஏற்படுவதற்கான காரணங்களை விளக்கவில்லை.

 

புதிர் இது தான்: முன்னைய தலைமுறையினரை விட, தற்போதைய இளையோர் - குறைந்த பட்சம் மேற்கு நாடுகளில்- மது அருந்துவதும், புகை பிடிப்பதும் குறைவாக இருக்கிறது. மது விற்பனை கூட குறைந்திருக்கிறது. சிவப்பு இறைச்சியை, வேகனிசம், ஆரோக்கியம் போன்ற காரணங்களால் இளையோர் தவிர்ப்பதும் அதிகரித்திருக்கிறது.

இப்படி பல முன்னேற்றங்கள் இருந்தும், சில வகைப் புற்று நோய்கள் இளையோரில் அதிகரித்திருக்கின்றன. சில ஊகிக்கக் கூடிய காரணங்கள், தண்ணீர், சூழல் மாசடைதல், பிளாஸ்ரிக் (micro and nano-plastics) மாசு என்பனவாக இருக்கலாம். ஏனெனில், பல இள வயது புற்று நோய்கள், பெருங்குடல் புற்று நோய்களாக இருக்கின்றன.

இன்னும் சில காரணிகளாக, குடல் நுண்ணங்கிகளை (gut microbiome) மாற்றும் வெளிக்காரணிகள். உதாரணமாக, தூக்கமின்மை, அல்லது ஒழுங்கான தூக்கமின்மை, ஒளி உமிழும் (light) மூலங்களை மணிக்கணக்காகப் பார்த்து, தூங்கும் போது கூட குறைத்தூக்கம் கொள்வது. இவை கூட காரணங்களாக இருக்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புற்றுநோய்: மனித உடலில் எப்படிப் பரவுகிறது? அதில் எத்தனை வகைகள் உள்ளன?

புற்றுநோய்: மனித உடலில் எப்படிப் பரவுகிறது? அதில் எத்தனை வகைகள் உள்ளன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், மருத்துவர் திலிப் நிகம்
  • பதவி, புற்றுநோய் சிகிச்சை மருத்துவர், பாம்பே மருத்துவமனை, மும்பை
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

புற்றுநோய். இந்தப் பெயரைக் கேட்டாலே நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மத்தியில் மட்டுமல்லாது, மருத்துவர்கள் மற்றும் ஆய்வாளர்கள் மத்தியிலும் அச்ச உணர்வும், விரக்தியும் தோன்றுகிறது.

புற்றுநோயின் வரலாறு என்ன? எத்தனை வகையான புற்றுநோய்கள் மனிதகுலத்தைப் பாதித்துள்ளன? இவற்றை அழிப்பதற்கான முயற்சிகளின் பலன் என்ன?

உலகத்தில் புற்றுநோயின் வரலாற்றைப் பார்த்தால், கிரேக்க, ரோமானிய புத்தகங்களில் அதுகுறித்த குறிப்புகளைப் பார்க்க முடிகிறது.

கிமு 470 முதல் 370 வரை, கிரேக்க மருத்துவத்தின் தந்தை எனக் கருதப்படும் ஹிபோகிரேடஸ், புற்றுநோயைக் குறிப்பிட கார்சினோஸ் அல்லது கார்சினோமா என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தினார். கார்சினோஸ் என்றால் கிரேக்க மொழியில் நண்டு எனப் பொருள்.

 

பல புற்றுநோய் நோயாளிகளைப் பார்த்த பின்னர், அவர்களுக்கு கடினமான கட்டிகள் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.

அவை உடலின் ஒரு பகுதியிலிருந்து மற்ற பகுதிகளுக்குப் பரவுவதையும் கண்டுபிடித்தனர். நோயின் இறுதிக் கட்டங்களில் வலி பொறுத்துக் கொள்ள முடியாததாக இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

புற்றுநோய்க்கு நண்டின் பெயர் ஏன்?

நண்டின் முதுகுப் பகுதி மிகவும் கடினமாக உள்ளதுடன் அது தனது கொடுக்கு மூலம் உங்களைக் கடித்தால், தாங்க முடியாத வலி ஏற்படுகிறது. இந்த இரண்டு அறிகுறிகளும் புற்றுநோயாளிகளிடமும் காணப்படுகின்றன. அதனால்தான் இந்த நோய்க்கு கேன்சர் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

உடலில் புற்றுநோய் எப்படி பரவுகிறது

பட மூலாதாரம்,GETTY IMAGES

கிரேக்க மருத்துவரான கேலன், ஆன்சோஸ் என்ற பதத்தைப் பிரபலப்படுத்தினார். கிரேக்க மொழியில் ஆன்சோஸ் என்றால் வீக்கம் எனப் பொருள். ரோமானிய மருத்துவரான செல்சஸ் முதல்முறையாக கேன்சர் என்ற சொல்லைப் பயன்படுத்தினார்.

லத்தீன் மொழியில் நண்டு, கேன்சர் என அழைக்கப்படுகிறது. எனவே இந்த நோயைக் குறிக்க கேன்சர் என்ற சொல் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் புற்றுநோயைக் கண்டறிவது மிகவும் கடினமாக இருந்தது.

புற்றுநோய் புரிந்துகொள்ள முடியாத, குணப்படுத்த முடியாத நோயாகக் கருதப்பட்டது. புற்றுநோய் குறித்த உண்மையான ஆய்வு 17ஆம் நூற்றாண்டில் நுண்நோக்கி கண்டுபிடிக்கப்பட்ட பின்னர்தான் தொடங்கியது.

கடந்த 19ஆம் நூற்றாண்டில் மருத்துவம் முன்னேற்றம் கண்டபோது, புற்றுநோய் குறித்த மர்மங்கள் விலகத் தொடங்கின.

உடலில் புற்றுநோய் எப்படித் தொடங்குகிறது?

புற்றுநோய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, புற்றுநோய் குறித்த உண்மையான ஆய்வு 17ஆம் நூற்றாண்டில் நுண்நோக்கி கண்டுபிடிக்கப்பட்ட பின்னர்தான் தொடங்கியது

ஆனால் உடலில் புற்றுநோய் எப்படித் தொடங்குகிறது? அது எப்படி வளர்கிறது? அது உடலின் மற்ற பகுதிகளுக்கு எப்படிப் பரவுகிறது? இவற்றையெல்லாம் கண்டுபிடித்தது, இதுவரை செய்யப்பட்ட கண்டுபிடிப்புகளிலேயே இதை மிக முக்கியமானதாக மாற்றுகிறது. இந்தக் கண்டுபிடிப்புகள் புற்றுநோய் குறித்த பல கட்டுக்கதைகளைச் சிதறடிக்கச் செய்துள்ளது.

புற்றுநோய் குறித்து தெரிந்துகொள்வதற்கு முன், உடலின் வடிவம் குறித்தும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். மனித உடல் பல பில்லியன் உயிர் அணுக்களால் உருவானது, பல தசைகள் ஒன்றாக இணைந்து உடல் உறுப்புகளை உருவாக்குகின்றன.

புதிய உயிரணுக்களின் உற்பத்தி, அவை தங்களது வேலைகளை முறையாகச் செய்வது, அவற்றின் வேலை முடிந்ததும் அழிக்கப்படுவது, புதிய உயிரணுக்கள் உருவாக்கப்படுவது என அனைத்து செயல்பாடுகளும் நமது உடலில் நமக்குத் தெரியாமலேயே நடைபெற்று வருகின்றன. இந்த உயிரணுக்களில் உள்ள மரபணு இவற்றையெல்லாம் கட்டுப்படுத்துகிறது. அதனால்தான் நாம் ஆரோக்கியமாக இருக்கிறோம்.

புற்றுநோயை உண்டாக்கக் கூடிய காரணிகளுடனான தொடர்பு, தொற்று பாதிப்பு, அல்லது பரம்பரைக் காரணங்களால் மரபணுக்களில் சீர்குலைவு ஏற்பட்டால், மேலே குறிப்பிட்ட கட்டுப்பாடு இழக்கப்படுகிறது. உயிரணுக்கள் கட்டுப்பாடின்றி வளரத் தொடங்குகின்றன. அவற்றின் அளவு மற்றும் இயல்பில் மாற்றங்கள் நிகழ்கின்றன. இதுவே புற்றுநோய் எனப்படுகிறது. புற்றுநோய் அணுக்கள், சாதாரண அணுக்களைவிட குறைவான வேகமுடையவையாக இருப்பதுடன், கட்டுப்படுத்தப்படாத விகிதத்தில் வளரக் கூடியவை

புதுப்பித்துக் கொள்ளும் ஆற்றல் இருப்பதால் புற்றுநோய் உயிரணுக்கள் இறப்பதில்லை. அவை உடலின் தற்காப்பு அமைப்பில் இருந்து தப்பி, ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குப் பரவுகின்றன. அங்கே அவை மற்ற உயிரணுக்களையும் உறுப்புகளையும் சேதப்படுத்துகின்றன. இதைத் தடுப்பது மிகவும் கடினம்.

இருப்பினும், உடலில் உருவாகும் அனைத்து கட்டிகளும் புற்றுநோயுடன் தொடர்புடையவை அல்ல. சில நேரங்களில், சாதாரண கட்டிகள்கூட உருவாகலாம். ஒரு சாதாரண கட்டி ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குப் பரவுவதில்லை. ஆனால் ஒரு புற்றுநோய்க் கட்டி உடலின் எந்த உறுப்புக்கு வேண்டுமானாலும் பரவலாம். அது பரவுவதை வைத்து அது புற்றுநோயா இல்லையா என்பதைக் கூறமுடியும்.

எத்தனை வகையான புற்றுநோய் பரவல் உள்ளன?

புற்றுநோய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, புதுப்பித்துக்கொள்ளும் ஆற்றல் இருப்பதால் புற்றுநோய் உயிரணுக்கள் இறப்பதில்லை

நேரடிப் பரவல்: புற்றுநோய் உயிரணுக்கள் நேரடியாக அடுத்துள்ள உயிரணுக்கள் அல்லது உறுப்புகளைத் தாக்குகின்றன.

நிணநீர் பரவல்: புற்றுநோய் அணுக்கள் நிணநீர் அமைப்புக்குள் புகுந்து நிணநீர்க் கணுக்களில் வளர்கின்றன.

ரத்தம் மூலம் பரவல்: புற்றுநோய் அணுக்கள் ரத்த நாளங்கள் மூலம் நுரையீரல், எலும்புகள், கல்லீரல் மற்றும் மூளைக்குப் பரவுகின்றன.

புற்றுநோய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, உடலில் இருக்கும் அனைத்து கட்டிகளும் புற்றுநோயுடன் தொடர்புடையவை அல்ல

எத்தனை வகையான புற்றுநோய்கள் உள்ளன?

புற்று நோய்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

உடல் உறுப்பு வகையைப் பொறுத்து வகைப்படுத்துதல்: புற்றுநோய் எந்த உறுப்பில் தொடங்குகிறதோ அதைப் பொறுத்து பெயரிடப்படும். உதாரணமாக நுரையீரல் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் உள்ளிட்டவை.

உயிரணு அடிப்படையில் வகைப்படுத்துதல்

கார்சினோமா: இது சாதாரணமான புற்றுநோய் வகை. இது எபிதீலியல் உயிரணுக்கள் அல்லது உடல் உறுப்புகளில் தோன்றுகிறது. கார்சினோமாவின் கீழ் அடினோகார்சினோமா (நுரையீரல், மார்பகம்), பேஸல் செல் கார்சினோமா (தோல்), டிரான்சிஸ்னல் (சிறுநீரகம்) உள்ளிட்டவை உள்ளன.

சர்கோமா: இந்த வகைப் புற்றுநோய் இணைப்புத் திசுக்கள் மற்றும் உடலின் துணை உயிரணுக்களில் ஏற்படுகிறது.

மெலனோமா: இந்தப் புற்றுநோய், தோலில் மெலனின் உற்பத்தி செய்யும் மெலனோடைப் அணுக்களில் ஏற்படுகிறது. இதுவே உடலில் மிக வேகமாகப் பரவும் புற்றுநோய் எனக் கருதப்படுகிறது.

மூளைக்கட்டி: கிளியோபிளாஸ்டோமா மற்றும் அஸ்ட்ரோசைடோமா போன்ற புற்றுநோய்கள் இந்தப் பிரிவின் கீழ் வருகின்றன. இது மூளையில் உள்ள பல்வேறு செல்களால் உருவாகிறது.

ரத்தப் புற்றுநோய் வகைகள்

புற்றுநோய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஒரு புற்றுநோய் கட்டி உடலின் எந்த உறுப்புக்கு வேண்டுமானாலும் பரவலாம்

பல்வேறு வகையான ரத்தப் புற்றுநோய்கள் உள்ளன. அவை லுக்கீமியா, லிம்போமா மற்றும் மல்டிபிள் மைலோமா.

லுக்கீமியா: எலும்பு மஜ்ஜை வெள்ளை ரத்த அணுக்களை முறையாக உருவாக்குவதில்லை. இதன் விளைவாக, முற்றிலும் வளர்ச்சியடையாத அணுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி ரத்த நாளங்கள் மூலம் உடல் முழுவதும் பரவுகின்றன. இந்த நோயில் எந்தக் கட்டியும் காணப்படாமல் போகலாம்.

லிம்போமா: நிணநீர்க் கணுக்களில் (Lymph Node), நிணநீர் உயிரணுக்கள் கட்டுப்பாடின்றி வளர்ந்து நிணநீர்கணுக் கட்டிகளை உருவாக்குகின்றன.

மல்டிபிள் மைலோமா: நோய் எதிர்ப்பு அமைப்புக்குக் காரணமான எலும்பு மஜ்ஜையில் உள்ள பிளாஸ்மா செல்கள் கட்டுப்பாடின்றி வளர்ந்து எலும்புகளைச் சேதப்படுத்தும் மைலோமா அணுக்களை உருவாக்குகின்றன.

நண்டு போன்ற நோய் என்று ஹிபோகிரேட்டஸ் விவரித்ததில் தொடங்கிய புற்றுநோயின் பயணம் தற்போது உயர்தர அறிவியல் ஆய்வு மூலம் சிகிச்சையளிக்கும் நிலைக்கு முன்னேறியுள்ளது. உலகம் முமுவதும் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள், புற்றுநோய் போன்ற நோய்கள் வெல்லக் கூடியவைதான் என்ற நம்பிக்கையைத் தந்துள்ளன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.