Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய மக்கள் சக்தியை தமிழ், முஸ்லிம், மலையகக் கட்சிகளால் சமாளிக்க முடியுமா?

Sivarasa Karunakaran

475697971_1203419204487640_3240449016334

Photo, Anura Kumara Dissanayake fb official page

தேசிய மக்கள் சக்தியின் அலையைக் கடந்து, வடக்குக் கிழக்கின் அரசியலைத் தமிழ்த் தரப்புகள் முன்னெடுப்பது எப்படி? இந்தச் சவாலும் நெருக்கடியும் தமிழ்த் தரப்புகளுக்கு மட்டுமல்ல, வடக்குக் கிழக்கிலுள்ள முஸ்லிம் தரப்புகளுக்கும் உண்டு. ஏன் மலையகக் கட்சிகளும் இதை எதிர்கொள்ள வேண்டிய சவாலாக – நெருக்கடியாக – இந்தச் சூழல் உருவாகியுள்ளது. நேரடியாகச் சொன்னால், தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் அரசியல் எதிர்காலம் குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது இந்தச் சூழல். மறுவளமாகப் பார்த்தால் பிராந்திய அரசியல் கேள்விக்குள்ளாகியுள்ளது. இலங்கையில் சமூகம்சார் பிராந்திய அரசியல் (Socio Regional Politics) என்பது தேசிய அரசியலின் போதாமையினால் (Inadequacy of National Politics) உருவாகியதே.

ஆனால், சிலர் இந்த அடிப்படையைப் புரிந்துகொள்ளாமல், இதை வேறுவிதமாக வியாக்கியானப்படுத்த முற்படுகிறார்கள். இதில் ஒரு தரப்பினரின் அபிப்பிராயம், NPP க்குச் சாதமாக உள்ளது. அவர்கள் சொல்கிறார்கள், “NPP ஒரு மாற்றுச் சக்தியாக இப்போதுதான் அதிகாரத்துக்கு வந்துள்ளது. அது தன்னை நிலைப்படுத்திக் கொண்டு உரிய வேலைகளைச் செய்வதற்கு அவகாசம் கொடுக்க வேண்டும், அவசரப்பட்டு, எல்லாவற்றையும் குழப்பக் கூடாது” என்று.

இதற்கு அவர்கள் சொல்கின்ற நியாயம், “ஏற்கனவே ஒடுக்குமுறையைச் செய்து வந்த ஐ.தே.கவுக்கும் சுதந்திரக் கட்சிக்கும் ராஜபக்‌ஷர்களுக்கும் தாராளமாகச் சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டது. இருந்தும் அந்தத் தரப்புகள் தமிழ் பேசும் சமூகங்களின் எந்தப் பிரச்சினையையும் தீர்க்கவில்லை. பதிலாக மேலும் மேலும் நெருக்கடிகளையே உருவாக்கின. இறுதியில் ஊழல், அதிகார துஸ்பிரயோகம், பொருளாதார நெருக்கடி என நாட்டையே படுகுழிக்குள் தள்ளிவிட்டுள்ளன. இதையெல்லாம் ஒழித்துக் கட்டி, மாற்றமொன்றை ஏற்படுத்துவதற்காக, ஒரு மாற்றுச் சக்தியாக NPP வந்திருக்கிறது. அதுவும் இலங்கையின் வரலாற்றில் புதிய சக்தியாக. அதற்கொரு சந்தர்ப்பத்தை வழங்காமல், அவசரப்பட்டு நெருக்கடிகளைக் கொடுப்பது ஏற்கனவே இருந்த தீய சக்திகளை (UNP, SLFP, NPP போன்றவற்றை) மீளக் கொண்டு வருவதற்கே வழிவகுக்கும். இது வழமையைப்போல மக்களுக்கு விரோதமான அதிகாரத் தரப்புகளின் இரகசியக் கூட்டாகும். இதற்கு இடமளிக்க முடியாது” என.

மட்டுமல்ல, “NPP யின் எழுச்சியும் அதற்கு தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் ஆதரவு கிடைத்திருப்பதும் அறுதிப் பெரும்பான்மையோடு அது ஆட்சியைக் கைப்பற்றியிருப்பதும் புதிய அரசியல் ஒன்றுக்கான முழு மக்களின் அங்கீகாரமாகும். அதை எப்படி மறுதலிக்க முடியும்?” என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

இவர்கள் NPP ஐ முற்று முழுதாக நம்புகிறார்கள். அதனால் கேள்விக்கிடமில்லாமல் அதை ஆதரிக்கிறார்கள். அது தவறு செய்தால் அல்லது அது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை என்றால் என்ன செய்வது? என்பதற்கு இவர்களிடம் பதிலே இல்லை. மாறாக “அதற்கு வாய்ப்பொன்றைக் கொடுத்தால் கெட்டா போய் விடுவோம்?” என்று மட்டும் திரும்பத்திரும்பக் கேட்கிறார்கள்.

அரசியலில் நம்பிக்கை முக்கியமான ஒன்றுதான். நம்பிக்கையில்லாமல் எதையும் செய்ய முடியாது என்ற கருத்தையும் மறுதலிக்க முடியாது. ஆனால், எந்த நம்பிக்கையையும் ஒன்றுக்குப் பல தடவை சந்தேகிக்க வேண்டும். ஒவ்வொன்றைப் பற்றியும் ஒன்றுக்கு பத்துத் தடவை கேள்வி எழுப்புங்கள் என்பதும் அரசியல் மந்திரமே.

நம்பிக்கையில் முதலீடு செய்யப்பட்ட போராட்டங்களுக்கும் அரசியலுக்கும் நடந்த கதையெல்லாம் தெரிந்தவர்கள் நாம். நம்முடைய வரலாறே நம்பிக்கைத் தோல்வியின் கசப்புகள் நிரம்பியதுதான். ஆகவே, கண்களை மூடிக்கொண்டு நம்பிக்கையின் கயிற்றைப் பிடித்துப் பின்தொடர முடியாது. அந்தளவுக்குப் பொறுத்திருக்கக் கூடிய நிலையில் தமிழ் பேசும் சமூகத்தினர் இல்லை. அதாவது, ஒடுக்கப்பட்ட –  பாதிக்கப்பட்ட – மக்கள் இல்லை. பாதிக்கப்பட்ட மக்களிடம் அளவுக்கு மிஞ்சிய காத்திருப்பையும் பொறுமையையும் யாரும் எதிர்பார்க்கவும் முடியாது. அதைக் கோரவும் கூடாது. அது நீதியற்றது.

இன்னொரு தரப்பினரோ “இந்தப் பிராந்திய அரசியலின் காலம் முடிந்து விட்டது. அதாவது, இனத்துவ அடையாளத்தை முன்னிறுத்திச் செய்யப்படும் அரசியலுக்கு (Ethnic Politics) இனி இடமேயில்லை. எப்படியென்றாலும் அது இனவாதத்தில்தான் போய் முடியும். அதைத் தொட்டாலும் சரி, தொடர்ந்தாலும் சரி, எதிர்த்தரப்புகள் தமது இனவாதத்துக்கு அதையே வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளும். ஏதோ வகையில் இப்பொழுது மக்களும் அதை நிராகரித்து விட்டனர். மட்டுமல்ல, அவ்வாறான அரசியலினால் மக்களுக்குக் கிடைத்த நன்மைகளை விடத் தீமைகளே அதிகம். அந்த அரசியல் பெற்ற வெற்றிகளை விட அடைந்த தோல்விகளே கூடுதல். ஆகவே, அந்த அரசியலை இனியும் முன்னெடுப்பதால் பயனில்லை. அதற்கான காலச் சூழலும் இனி இருக்காது. சர்வதேச நிலவரங்களும் பிராந்தியச் சூழலும் உள்நாட்டின் நிலவரங்களும் மக்களின் உளநிலையும் அதைக் கடந்ததாகவே உள்ளது. இதை மக்கள் புரிந்து கொண்டபடியாற்தான் அவர்கள் NPP க்கு ஆதரவளித்துள்ளனர். இனி இந்த நிலைதான் தொடரும்” என வாதிடுகின்றனர். இதற்கு இவர்கள் சொல்கின்ற காரணங்களில் ஒன்று, நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் அரசியற் சக்திகளை மக்கள் ஓரங்கட்டி, NPP க்கு ஆதரவு அளித்ததை.

இவர்களும் ஏதோ ஒரு வகையில் NPP க்குச் சார்பாகவே உள்ளனர். NPP க்குச் சார்பாக இருப்பது தவறில்லை. அது அவர்களுடைய அரசியல் விருப்பாகவும் உரிமையாகவும் இருக்கலாம். ஆனால், இங்கே உள்ள கேள்வியும் தவிர்த்துச் செல்ல முடியாத பிரச்சினையாகவும் இருப்பது, தமிழ், முஸ்லிம், மலையக மக்களுடைய அரசியற் பிரச்சினைக்குத் தீர்வு என்ன? அதாவது, எண்ணிக்கையில் சிறுபான்மையினராக இருக்கும் தேசிய இனங்களுடைய பிரச்சினைக்கு, அவர்கள் மீது நிகழ்த்தப்படும் ஒடுக்குமுறைக்குத் தீர்வு என்ன? அதை NPP எப்படி, எப்போது வழங்கப்போகிறது? அதற்கான உத்தரவாதம் என்ன? என்பதாகும்.

அந்தப் பதில் எத்தகைய அழகான – புனிதப்படுத்தப்பட்ட வார்த்தைகளுக்கும் அப்பால், நடைமுறைச் செயல்களாக இருக்க வேண்டும். அதுவே NPP யும் அதை ஆதரிப்போரும் கூறிவரும் “நம்பிக்கைக் கொள்ளுங்கள். நன்மை நடக்கும்” என்பதை உறுதிப்படுத்தும். அதன் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தும்.

ஆனால், NPP யும் சரி, அதனை ஆதரிப்போரும் சரி இதில் கவனம் கொள்ள மறுக்கின்றனர். அவர்கள் பிரச்சினையைப் பொதுமைப்படுத்தப் பார்க்கின்றனர். இலங்கையில் அடிப்படையாக இருப்பது பொருளாதாரம் சார்ந்த பிரச்சினையே. அதுவே முதன்மையானது. அதனோடு இணைந்ததாகவே (வேலை வாய்ப்புப் பிரச்சினை, அபிவிருத்திச் சிக்கல்கள், சமநிலைக்குறைவு, முரண்பாடுகள் உள்ளிட்ட அனைத்தும் என) ஏனைய பிரச்சினைகள் (இனப்பிரச்சினை உட்பட) எனக் கருதுகிறார்கள்.

75 ஆண்டுகளுக்கு மேலாக எரிந்து கொண்டிருக்கும் பிரச்சினையை அவ்வாறு பொதுமைப்படுத்துவது, இந்தச் சமூகத்தினருக்கு மாறானது மட்டுமல்ல, இன்றைய உலகின் நடைமுறைகளுக்கும் போக்கிற்கும் கூட எதிரானது. அப்படிப் பார்க்க முற்பட்டதன் விளைவுகளே, இலங்கையில் அதிகாரத்துக்கு வெளியே உள்ள சிங்களரல்லாத மக்களாகிய தமிழ், முஸ்லிம், மலையக சமூகத்தினர் ஒடுக்குதலுக்குள்ளாக வேண்டியிருப்பதாகும்.

இது பின்நவீனத்துவ யுகம் (Postmodern Era). இந்த யுகம் அதாவது பின்நவீனத்துவக் காலம் மையநோக்கை ஏற்பதில்லை. மையம், அதிகாரம் மூலம் உருவாக்கப்படுவது. யதார்த்தமும் உண்மையும் கோருவது, மையத்தைச் சிதைத்து அல்லது உடைத்து அதிகாரத்தைப் பகிருமாறும் பரவலாக்கம் செய்யுமாறுமே. இலங்கையில் உள்ள பிரச்சினையும் இதுவரையும் நடந்த போராட்டங்களும் இப்போதுள்ள சிக்கலும் கூட அதிகாரத்தைப் பகிர்வதிலும் பரவலாக்கம் செய்வதிலும் உள்ள தயக்கத்தினாலும் மறுப்பினாலும் உருவாகியவையே. ஆகவே, இவற்றையெல்லாம் புரிந்துகொண்டே NPP யும் அதனை ஆதரிப்போரும் பேச வேண்டும்.

சில காரணங்களால் சில சந்தர்ப்பங்களில் மக்கள், சில அலைகளின் பின்னால் செல்வதுண்டு. அது தற்காலிகமானது. 1987 இல் இலங்கை இந்திய உடன்படிக்கை செய்யப்பட்டபோதும் அதையொட்டி இந்திய அமைதிப்படை இலங்கைக்கு வடக்குக் கிழக்கிற்கு வந்தபோதும் அதைத் தமிழ் மக்கள் வரவேற்றனர். உச்சக்கட்டமாக இந்திய அமைதிப்படைக்கு மாலை அணிவித்து வரவேற்ற நிகழ்ச்சிகளும் உண்டு. 1994 இல் சந்திரிகா குமாரதுங்க அதிகாரத்துக்கு வந்து சமாதானப் பேச்சுகளை ஆரம்பித்தபோதும் ஒரு நம்பிக்கை அலை அடித்தது. “தமிழ் மக்களுக்குப் பிரச்சினைகள் உண்டு. அவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனவாதத்துக்காக – சிங்கள மேலாதிக்கத்துக்காக – வெட்கப்படுகிறேன்; வருந்துகிறேன். அவர்களுடைய பாதிப்புகளுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும்” என்று கூறி, விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தையை அவர் ஆரம்பித்தபோது,  சமாதானத் தேவதையாகச் சித்தரிக்கப்பட்டார். மட்டுமல்ல, சந்திரிகா சீப்பு, சந்திரிகா Bag, சந்திரிகா செருப்பு என்று அன்றாடப் பாவனைப் பொருட்களுக்குப் பெயர் சூட்டி மகிழும் அளவுக்கு சந்திரிகா குமாரதுங்க மீதான விருப்பு அலை அடித்தது. ஆனால், பின்னர் என்ன நடந்தது என்று எல்லோருக்கும் தெரியும். அந்த விருப்பு அலை, வெறுப்பு அரசியலாக மாறியது.

ஆகவே, இங்கே கவனிக்க வேண்டியிருப்பது, இனப்பிரச்சினையை அல்லது தமிழ் பேசும் சமூகங்களின் பிரச்சினையை அதனுடைய அடிப்படைகளிலிருந்தும் ஆழத்திலிருந்தும் புரிந்துகொண்டு, தீர்வைக் காண வேண்டும் என்பதேயாகும். மேலோட்டமாக அவற்றை வியாக்கியானம் செய்ய முற்படுவதோ, அதை வேறு விதமாக மடைமாற்றம் செய்வதோ அல்ல.

தேசிய மக்கள் சக்திக்கு தமிழ் பேசும் சமூகத்தினர் வழங்கிய ஆதரவு என்பது, தங்களுடைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஒரு வரலாற்றுச் சந்தர்ப்பத்தை அளித்திருப்பதாகவே கருத வேண்டும். உண்மையும் அதுதான். இதை விட்டு, தமிழ் பேசும் மக்கள் சமூகப் பிராந்திய அரசியலில் அல்லது இனத்துவ அரசியலில் சலிப்புற்று, தேசிய அரசியலில் கரைந்துள்ளனர். இனி இனத்துவ அரசியலின் பக்கம் திரும்பவே மாட்டார்கள். தொடர்ந்தும் தேசிய அரசியலுக்கே அவர்கள் ஆதரிவளிப்பர் என்று அர்த்தப்படுத்தினால், அது மிகப் பெரிய தவறாகவே அமையும். அது NPP மீதான நம்பிக்கையிழப்பாக மட்டுமன்றி, அதன் மீதான வரலாற்றுக் கறையாகவும் மாறும். நாட்டை மீண்டும் இருண்ட யுகமொன்றுக்குள் தள்ளும்.

ஏனென்றால், பிரச்சினை தீர்க்கப்படாத வரையில் முரண்பாடுகள் நீடிக்கும். முரண்பாடுகள் நீடிக்கும் வரையும் பகையுணர்ச்சி தீராது. பகையுணர்ச்சி நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும் அமைதிக்கும் எதிரானது. ஒருமைப்பாடின்மையும் அமைதியின்மையும் நீடிக்குமாக இருந்தால் நாடு பின்னோக்கியே செல்லும்.

NPP யின் தற்போதைய உளநிலையில் இனப்பிரச்சினையைப் பற்றிய அதனுடைய புரிதல் மேலோட்டமானதாகவே உள்ளது. இல்லையென்றால், அதற்குக் கிடைத்துள்ள வரலாற்று வாய்ப்பைக் கொண்டு, அரசியமைப்பை மாற்றி அமைக்க முற்பட்டிருக்கும். அதற்கே முன்னுரிமை அளித்திருக்கும். அதைத் தாமதிக்க முற்படாது. தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் அது பின்னடைவை நோக்கியே செல்கிறது என்று அர்த்தமாகும்.

இந்தச் சூழலில்தான் சமூகப் பிராந்திய அரசியலை அல்லது இனத்துவ அரசியலை முன்னெடுக்கும் தமிழ் பேசும் சமூகங்களின் அரசியற் சக்திகள் தம்மை மீளெழுச்சிக்குள்ளாக்குவதைப் பற்றித் தீவிரமாகச் சிந்திக்க வேண்டும். அந்த மீளெழுச்சி என்பது மேலோட்டமானதாக – மறுபடியும் அதே பலவீனமான வழிகளில் அமையக்கூடாது. எவ்வாறான தந்திரோபயங்களைப் பயன்படுத்தி, NPP யிடமிருந்து தமிழ் பேசும் மக்களைப் பிரித்தெடுக்க வேண்டும்? என்று சிந்திப்பதற்கு அப்பால், தாம் எத்தகைய அரசியலை முன்னெடுக்க வேண்டும்? அதை எப்படி முன்னெடுப்பது? அதை எவ்வாறு சாத்தியப்படுத்துவது – வெற்றியடைய வைப்பது? என்று நிதானமாகச் சிந்திக்க வேண்டும். முக்கியமாக தோற்றுப்போன அரசியற் பிரகடனங்களையும் வழிமுறைகளையும் தயக்கமின்றி விலக்க வேண்டும்.

தற்போதைய அவதானிப்பில், ‘இந்தச் சூழலை எதிர்கொள்வதற்கு  முரண்பாடுகள் – வேறுபாடுகளுக்கு அப்பால் தமிழ்ச் சக்திகள் அனைத்தும் ஒருமுகப்பட்டு, ஒன்றிணைந்து நிற்பது அவசியம்’ என்ற கருத்து மேலெழுந்திருப்பதாகத் தெரிகிறது. அதாவது, தமிழ் அரசியற் கட்சிகள் மட்டுமன்றி, தமிழ்ச் சக்திகள் என்ற வகையில் அனைத்துச் சக்திகளும் ஒருமுகப்பட்டு நிற்பது என. அதற்கான முயற்சிகளும் நடக்கின்றன. இது ஒரு வகையில் தேவையானதுதான். ஆனால், இது மட்டும்போதாது. மட்டுமல்ல, இந்த ஒருங்கிணைவும் ஒரு முகப்படுதலும் நீடித்து நிற்கக் கூடியதல்ல. அதுவும் தேர்தல் அரசியலில்.

ஆகவே, அதற்கு அப்பாலும் இதைப்பற்றிச் சிந்திக்க வேண்டியுள்ளது. அதேவேளை, இந்த ஒரு முகப்படுதலையும் ஒருங்கிணைவையும் தமிழ் இனவாதத்தின் திரட்சி (Accumulation of Tamil Racism) என்று NPP யும் ஏனைய சிங்களத் தரப்பும் வெளியுலகும் தவறாகப் புரிந்துகொள்ளக் கூடிய அபாயமும் உண்டு. மட்டுமல்ல, அப்படி ஒரு தோற்றப்பாட்டை உருவாக்கி, NPP அரசாங்கம் தன்னுடைய வரலாற்றுப் பொறுப்பைத் தட்டிக் கழிப்பதற்கும் வேறு விதமாக இனப்பிரச்சினையைக் கையாள்வதற்கும் காரணமாகி விடும். ஆகவே, இதற்கெல்லாம் இடமளிக்கக் கூடாது.

மாறாக, அதற்கேற்ற வகையில் இதை மிகப் புத்திசாலித்தனமாகக் கையாள வேண்டும். அதில் முக்கியமான நிபந்தனைகளில் ஒன்று, NPP அரசாங்கத்தை முற்று முழுதாக எதிர்ப்பதாகக் காட்டாமல், அதனுடைய சரிகளுக்கு ஆதரவாகவும் தவறானவைகளுக்கு எதிராகவும் நிற்கிறோம் என வெளிப்படுத்துவது. அடுத்தது, நிரற்படுத்த வேண்டிய வேலைப்பட்டியலைப் பரிந்துரைப்பது –  பகிரங்கப்படுத்துவது. அதை மேற்கொள்ளும் வகையில் அழுத்தங்களை சினேகபூர்வமாகவும் அதற்கப்பாலும் அழுத்துவது. இவ்வாறு செய்யும்போது தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல, சிங்கள மக்களுக்கும் அடிப்படையான உண்மைகள் தெளிவாகும். தவறான புரிதலுக்கு இடமிருக்காது.

இன்னொன்று, சமூகப் பிராந்திய அரசியலின் முக்கியத்துவத்தை (Importance of Socio-Regional Politics) வழமையான வாய்பாட்டு அறிதல்களுக்கு அப்பால், உணர்த்துவது. அதாவது, இனரீதியான அல்லது சமூக ரீதியான அரசியலை முன்னெடுக்க வேண்டிய அவசியம் இன்னும் இருப்பது ஏன் என்பதை விளக்க வேண்டும். அதனுடைய நியாயத்தைத் தெளிவாக்குவது அவசியம். இது மிக மிக அவசியமானது. இதில்தான் கூடுதலாக வேலை செய்ய வேண்டும். இனவாதமாகச் சுருக்கவும் திரிவுபடுத்தவும் கூடிய அபாயமுள்ள இந்த விடயத்தை (அப்படித்தான் அதை மடைமாற்றம் செய்து வந்துள்ளனர்) பக்குவமாக – புத்திபூர்வமாகக் கையாள வேண்டும்.

கூடவே தனியே தமிழ் மக்கள் மட்டுமென்றில்லாமல், தமிழ் பேசும் சமூகத்தினர் என்ற அடிப்படையில் NPP ஐ எதிர்கொள்ள வேண்டியிருப்பதைப் பற்றிச் சிந்திப்பதும் நல்லது. குறைந்தபட்சம் வடக்குக் கிழக்கிலுள்ள முஸ்லிம்களோடாவது ஒரு பொது உடன்பாட்டுக்கு வரவேண்டும்.

வரவுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் தமிழ்ச் சமூகத்தின் சமூகப் பிராந்திய அரசியலை (Socio-Regional Politics) நெருக்கடிக்குள்ளாக்குவதற்கே NPP முயற்சிக்கும். ஆளும் தரப்பு அப்படி முயற்சிக்கும். அதற்காக அது கடுமையாகப் பாடுபடும். தேர்தல் அரசியலில் இது வழமையே. நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்ததால் தமது ஒட்டுமொத்த அரசியலும் பின்னடைந்து விட்டதாகவோ, அதற்கு இனிமேல் இடமில்லை என்றோ யாரும் கருத வேண்டியதில்லை. அப்படியென்றால், பெரும்பாலான காலமும் தோல்வியின் தளத்திலேயே நின்ற – பயணித்த ஜே.வி.பி. எப்போதோ இல்லாதொழிந்து போயிருக்க  வேண்டும். அப்படி நிகழவில்லையே. அது தன்னுடைய அரசியலைப் புத்தாக்கம் செய்வதாக, தன்னுடைய அணுமுறைகளையும் வடிவத்தையும் மாற்றிக் கொள்வதாகவே கொண்டிருந்தது. அதன் விளைவே NPP யும் அதனுடைய வெற்றியுமாகும்.

தமிழ்த் தரப்பும் தன்னை முன்னிலைப்படுத்துவதற்குத் தகுதியாக்கம் செய்ய வேண்டும். அது வெறுமனே தேர்தற் கூட்டுக்கான ஒருங்கிணைவாக இல்லாமல், சமூகப் பிராந்திய அரசியலுக்கான (Socio-Regional Politics) அந்த அரசியலின் வெற்றிக்கான ஒருமுகப்படுதலாக இருக்க வேண்டும். அதுவே அதனுடைய நெருக்கடிகளிலிருந்து அதை விடுவிக்கும். அந்த மக்களையும்தான். இதற்கு அதனுடைய வரலாற்றுப் படிப்பினைகள் உதவும்.

Karunakaran-e1717046995835.jpg?resize=11கருணாகரன்

https://maatram.org/articles/11989

  • கருத்துக்கள உறவுகள்
On 28/2/2025 at 18:08, கிருபன் said:

ஆகவே, அதற்கு அப்பாலும் இதைப்பற்றிச் சிந்திக்க வேண்டியுள்ளது. அதேவேளை, இந்த ஒரு முகப்படுதலையும் ஒருங்கிணைவையும் தமிழ் இனவாதத்தின் திரட்சி (Accumulation of Tamil Racism) என்று NPP யும் ஏனைய சிங்களத் தரப்பும் வெளியுலகும் தவறாகப் புரிந்துகொள்ளக் கூடிய அபாயமும் உண்டு. மட்டுமல்ல, அப்படி ஒரு தோற்றப்பாட்டை உருவாக்கி, NPP அரசாங்கம் தன்னுடைய வரலாற்றுப் பொறுப்பைத் தட்டிக் கழிப்பதற்கும் வேறு விதமாக இனப்பிரச்சினையைக் கையாள்வதற்கும் காரணமாகி விடும். ஆகவே, இதற்கெல்லாம் இடமளிக்கக் கூடாது.

சில யாழ் கள உறவுகள் எழுதும் கருத்தும் இதே மாதிரி இருக்கே."சிங்கள தரப்பும், அதி தீவிர தமிழ் தேசிய விரோத சக்திகளும் உலகுக்கு காட்ட வசதியாக இருக்கும்

On 28/2/2025 at 18:08, கிருபன் said:

மாறாக “அதற்கு வாய்ப்பொன்றைக் கொடுத்தால் கெட்டா போய் விடுவோம்?” என்று மட்டும் திரும்பத்திரும்பக் கேட்கிறார்கள்.

On 28/2/2025 at 18:08, கிருபன் said:

அது வெறுமனே தேர்தற் கூட்டுக்கான ஒருங்கிணைவாக இல்லாமல், சமூகப் பிராந்திய அரசியலுக்கான (Socio-Regional Politics) அந்த அரசியலின் வெற்றிக்கான ஒருமுகப்படுதலாக இருக்க வேண்டும்.

👍

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.