Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டாப் 5 நியூஸ்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,சித்தரிப்புப் படம்

5 மார்ச் 2025, 02:22 GMT

புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

இன்றைய (05/03/2025) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளிவந்துள்ள முக்கியச் செய்திகள் சில இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

திருவண்ணாமலை, ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பூமிக்கு அடியில் தங்கம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் இயக்குநர் விஜயகுமார் தெரிவித்துள்ளார் என தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. பேட்டரி தயாரிக்க பயன்படும் லித்தியம் என்ற கனிமமும் தமிழ்நாட்டில் பூமிக்கு அடியில் படிமங்களாக இருக்கின்றன என்றும் அவர் கூறியுள்ளதாக அந்த செய்தி குறிப்பிடுகிறது.

அந்த செய்தியில், "இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் இயக்குநர் சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசும் போது, நாடு முழுவதும் உள்ள கனிம வளங்கள் குறித்து புவியியல் துறை சார்பில் ஆய்வு நடத்தப்பட்டதாக தெரிவித்தார். "அந்த ஆய்வின் அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் நிலத்துக்கு அடியில் சுண்ணாம்புக் கற்கள் அதிகம் உள்ளன. திருவண்ணாமலை, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நிலத்துக்கு அடியில் தங்கம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. அது பற்றிய ஆய்வுகள் நடந்து வருகின்றன.

தமிழகத்தில் உள்ள கனிம வளங்கள் குறித்து ஆய்வு செய்தபோது, பேட்டரி தயாரிக்கப் பயன்படுத்தப்படும் லித்தியம் கிடைப்பது கண்டறியப்பட்டது. அது குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம்" என்று அவர் பேசினார்.

மேலும், பூமிக்கு அடியில் நில அதிர்வுகள் தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கும் என்றும் அவை உணரப்படும் அளவுக்கு இல்லாதவரை பாதிப்பில்லை என்று செய்தியாளர் சந்திப்பில் பேசினார். "வங்கக் கடலையொட்டிய தமிழக நிலப்பரப்பு, குறிப்பாக சென்னை மண்டலத்தின் கீழ்ப்பகுதியில் பூமிக்கு அடியில் கருங்கல் பாறைகள் உள்ளதால் சென்னைக்கு நிலநடுக்கம், பூகம்ப பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு குறைவு. எனினும் கடலோரப் பகுதிகளில் உயர்ந்த கட்டடங்களை கட்டாமல் இருப்பது நல்லது" என்றும் அவர் பேசினார்" என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்த சாதியினரும் கோயில்களுக்கு உரிமை கோர முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்

டாப் 5 நியூஸ்

பட மூலாதாரம்,Getty Images

கோயில்களை நிர்வகிக்க எந்த சாதியினரும் உரிமை கோர முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது என தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. நாமக்கல்லில் உள்ள ஒரு கோயிலின் நிர்வாகம் தொடர்பான வழக்கில் நீதிமன்றம் இதை கூறியுள்ளது என்றும் அந்த செய்தி குறிப்பிடுகிறது.

அந்த செய்தியில், "நாமக்கல்லில் ஒரே நிர்வாகத்தின் கீழ் இயங்கி வந்த மாரியம்மன் கோவில், அங்காளம்மன் கோவில் மற்றும் பொன் காளியம்மன் கோவில்களில் இருந்து, பொன் காளியம்மன் கோவிலை தனியாக பிரிக்க வேண்டும் என்று கணேசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதுதொடர்பான அந்த மனுவில், பொன் காளியம்மன் கோவில் தங்கள் சாதியை சேர்ந்தவர்கள் நிர்வகிக்கிறார்கள் என்றும், மற்ற கோவில்கள் வேறு சாதியினர் நிர்வகிக்கிறார்கள் என்றும் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சாதியை நிலைநிறுத்தும் வகையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கை ஏற்று கொள்ள முடியாது என்று கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக கருத்து தெரிவித்த நீதிபதி, "கோவில் என்பது அனைவருக்கும் பொதுவானது. அனைத்து பக்தர்களும் கோவிலை நிர்வகிக்கலாம், வழிபடலாம். எந்த சாதியும் கோவில்களுக்கு உரிமை கோர முடியாது. கோவிலை சாதி அடிப்படையில் நிர்வகிப்பது என்பது மத நடைமுறையும் அல்ல. பெரும்பாலான பொதுக்கோவில்கள், குறிப்பிட்ட சாதியினரின் கோவில்கள் என முத்திரை குத்தப்பட்டுள்ளன.

சாதிப்பாகுபாட்டில் நம்பிக்கை கொண்டவர்கள் மதப்பிரிவு என்ற போர்வையில் வெறுப்பை வெளிப்படுத்துகிறார்கள். பிரிவினைக்கான மைதானமாக கோவிலை பயன்படுத்துகிறார்கள்" என்று அவர் கூறினார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு லட்சம் வளர்ப்பு நாய்களுக்கு மைக்ரோசிப்ஸ் - கைவிடப்படுவதை தடுக்க சென்னை மாநகராட்சி முடிவு

டாப் 5 நியூஸ்

பட மூலாதாரம்,Getty Images

சென்னையில் வளர்ப்பு நாய்கள் கைவிடப்பட்டு, தெருநாய்களாக மாறுவதைத் தடுப்பதற்காக ஒரு லட்சம் வளர்ப்பு நாய்களுக்கு மைக்ரோ சிப்ஸ்களைப் பொருத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது என தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில்,"வளர்ப்பு நாய்களுக்கு பொருத்தப்படும் மைக்ரோசிப்ஸ்களில் உரிமையாளர்களின் பெயர், முகவரி, நாயின் இனம் மற்றும் தடுப்பூசி விவரங்கள் இடம் பெற்றிருக்கும். வீடுகளின் அளவை கணக்கில் கொண்டு , அங்கு வளர்க்க அனுமதிக்கப்படும் நாய்களின் எண்ணிக்கையையும் கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

இதற்கான செயலி தயாராகி வரும் நிலையில், நாய்களுக்கு மைக்ரோ சிப்ஸ் பொருத்தும் பணி , தரவு தளம் உள்ளிட்டவை தயாரானதும், நாய்களின் உரிமையாளர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு தடுப்பூசி தேதி உள்ளிட்டவை நினைவூட்டப்படும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது நாய்களுக்கான உரிமத் தொகையாக 50 ரூபாய் வசூலிக்கப்படும் நிலையில், மைக்ரோசிப்ஸ் பொருத்த எவ்வளவு கட்டணம் வசூலிக்கலாம்? என்பது மென்பொருள் தயாரானதும் முடிவு செய்யப்படும் எனவும், இந்த மைக்ரோசிப்ஸ் கட்டாயமாக்கப்படும் எனவும் மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாக தி இந்து செய்தி கூறுகிறது.

மேலும்," மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தெரு நாய்களின் எண்ணிக்கை 1.8 லட்சமாக அதிகரித்துள்ள நிலையில், உரிமையாளர்கள் தங்கள் நாய்களை கைவிடுவது, முறைப்படுத்தப்படாத இனப்பெருக்கம் இதற்கான காரணமாகக் கூறப்படுகிறது. சமீபத்திய கணக்கெடுப்பின்படி, சென்னையில் கருத்தடை செய்யப்படாத தெருநாய்கள் 71 சதவிகிதமாக உள்ளது. மாநகராட்சி ஒவ்வொரு ஆண்டிலும் 15,000 தெரு நாய்களுக்கு கருத்தடை செய்கிறது." என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையில் கால்நடை நலத்துறை மூலமாக நடத்தப்படும் 5 மருத்துவமனைகளிலும் மைக்ரோசிப்ஸ் பொருத்தும் பணி நடைபெறும் எனவும், இது தவிர 60 தனியார் கால்நடை மருத்துவமனைகள் மற்றும் 150 பதிவு செய்யப்பட்ட கால்நடை மருத்துவர்கள் மூலமாகவும் மைக்ரோசிப்ஸ்கள் பொருத்தும் பணி நடைபெறும் என தி இந்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாடு மீனவர்களை சந்தித்த யாழ்ப்பாணம் எம்.பி.

டாப் 5 நியூஸ்

பட மூலாதாரம்,தி இந்து தமிழ்திசை

இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாடு மீனவர்களை யாழ்ப்பாணம் எம்.பி. சிவஞானம் ஸ்ரீதரன் சந்தித்ததாக தி இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

"இலங்கை கடற்படையினரால் கடந்த ஜனவரி முதல் 18 படகுகள் சிறைபிடிக்கப்பட்டு, 131 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 38 மீனவர்கள் தண்டனை பெற்று, அங்குள்ள சிறைகளில் உள்ளனர். மேலும், தமிழகத்தைச் சேர்ந்த 42 மீனவர்கள், புதுச்சேரி மாநிலம் காரைக்காலைச் சேர்ந்த 13 மீனவர்கள் நீதிமன்ற காவலில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் 20-க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஆறு மாதம் முதல் இரண்டு ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்பட்டு கைதிகளாக உள்ளனர்." என்ற புள்ளி விவரங்கள் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளன.

மேலும், "இலங்கை சிறைகளில் உள்ள மீனவர்களையும், படகுகளையும் நிபந்தனையின்றி விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் பிப். 24 முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கடந்த ஐந்து நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதுபோல, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிப்பதை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி மாவட்ட மீனவர்களும் இலங்கையில் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சந்திப்பு குறித்து யாழ்ப்பாணம் எம்.பி. சிவஞானம் ஸ்ரீதரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "தங்களை விரைவில் விடுதலை செய்ய வேண்டும் என தமிழக மீனவர்கள் கேட்டுக் கொண்டனர். மீண்டும் இந்த பகுதிகளில் மீன்பிடிக்க வரமாட்டோம் என்று கூறினா். ஒரு மாதத்துக்கும் மேலாக சிறையில் உள்ள நிலையில் ஒருமுறை மட்டும் தான் குடும்பத்தினருடன் தொலைபேசியில் உரையாட அனுமதி வழங்கப்பட்டதாத தெரிவித்தனர். மீண்டும் குடும்பத்தினருடன் பேசுவதற்கு அனுமதி பெற்று தருமாறு கேட்டுக் கொண்டனர்," என்று அவர் கூறினார்." என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முப்படைகளுக்கான ஆட்சேர்ப்பு குறைப்பு தேசிய பாதுகாப்பில் தாக்கம் செலுத்தாது – இலங்கை அரசு

டாப் 5 நியூஸ்

பட மூலாதாரம்,வீரகேசரி

படக்குறிப்பு,இலங்கை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

ராணுவம் உள்ளிட்ட முப்படைகளுக்கான ஆட்சேர்ப்பு எண்ணிக்கை குறைப்பு தேசிய பாதுகாப்பில் தாக்கம் செலுத்துவதாக குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம் என இலங்கையின் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளதாக இலங்கையின் வீரகேசரி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில், " ராணுவம் உள்ளிட்ட முப்படை ஆட்சேர்ப்பு மற்றும் பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடு குறித்து விசேட நிபுணர்களின் ஆலோசனைக்கமையவே தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன. எனவே இவை தேசிய பாதுகாப்பில் தாக்கம் செலுத்துவதாக எவரும் மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தக் கூடாது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

செவ்வாய்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், ராணுவம் தொழிற்துறை நிபுணத்துவம் மிக்கதாக மாற்றப்படும். ராணுவமானது அரசுக்கு சார்பானதாக காணப்பட வேண்டுமே தவிர, ஜனாதிபதிக்கோ பாதுகாப்பு செயலாளருக்கோ பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கோ சார்பாக செயற்படக் கூடாது, தேசிய பாதுகாப்பே முப்படைகளின் பணியாகும்.

சிவில் யுத்தம் நிலவிய போது ராணுவத்துக்கான ஆட்சேர்ப்புக்கான எண்ணிக்கை தற்போதைய நிலவரத்தின் அடிப்படையில் மீளாய்வு செய்யப்பட வேண்டும்.

அதற்கமைய 5 ஆண்டுகளுக்கான திட்டமிடல்களையே ஜனாதிபதி முன்வைத்துள்ளார். அதற்கமைய தொழிநுட்ப ரீதியான காரணிகளை அடிப்படையாகக் கொண்டே பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது,

மறுபுறம் இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பு தொடர்பான கரிசணையும் இதில் உள்ளடங்கும். எனவே பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் எவரும் கலவரமடையத் தேவையில்லை." என்று பேசினார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cj0qmngl591o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருவண்ணாமலையில் நிலத்துக்கு அடியில் தங்கம் இருக்கிறதா? உண்மை என்ன?

திருவண்ணாமலையில் நிலத்துக்கு அடியில் தங்கம் இருக்கிறதா? உண்மை என்ன?

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,சித்தரிப்புப் படம்

கட்டுரை தகவல்

  • எழுதியவர்,முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  • பதவி,பிபிசி தமிழ், சென்னை

  • 17 நிமிடங்களுக்கு முன்னர்

தமிழ்நாட்டில் சில இடங்களில் தங்கமும் லித்தியமும் இருப்பதாக இந்திய நிலவியல் துறை தெரிவித்ததாக, ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் பின்னணி என்ன?

உண்மையில், தமிழ்நாட்டின் எந்தப் பகுதியில் தங்கம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன?

தமிழ்நாட்டின் திருவண்ணாமலை, ராஜபாளையம் ஆகிய பகுதிகளில் பூமிக்கு அடியில் தங்கம் இருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக இந்திய நிலவியல் ஆய்வு நிறுவனம் (Geological Survey of India) தெரிவித்ததாக சில நாட்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகின.

ஆனால், அது இரு தனித்தனி பகுதிகள் இல்லையென்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பகுதி என்று புவிவியல் ஆய்வு நிறுவனத்தின் தென் மண்டல இயக்குநர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

தங்கம் விலை தினமும் புதிய உயரங்களைத் தொட்டு வரும் நிலையில், இந்தச் செய்தி ஊடகங்களில் வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சில நாட்களுக்கு முன்பாக இந்திய நிலவியல் ஆய்வு நிறுவனத்தின் 175வது ஆண்டு விழா சென்னையில் உள்ள அந்நிறுவனத்தின் அலுவலகத்தில் நடைபெற்றது.

அந்த விழாவில் பேசிய அந்நிறுவன இயக்குநர் எஸ்.பி. விஜயகுமார் "திருவண்ணாமலை ராஜபாளையம் பகுதிகளில் பூமிக்கு அடியில் தங்கம் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன. அதேபோல, மின்கலங்கள் தயாரிக்கப் பயன்படும் லித்தியம் என்ற கனிமமும் தமிழக நிலப்பரப்பில் இருக்கின்றன," என்று அவர் கூறியதாக ஊடக செய்திகள் தெரிவித்தன.

தமிழ்நாட்டில் தங்கமும் லித்தியமும் உள்ள இடங்கள் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதா?

இது குறித்து பிபிசியிடம் பேசிய இந்திய நிலவியல் ஆய்வு நிறுவனத்தின் தமிழ்நாடு, புதுச்சேரிக்கான தென் மண்டல இயக்குநர் எஸ்.பி. விஜயகுமார், தான் சொன்ன தகவல்கள் அளவுக்கு அதிகமாகப் பெரிதுபடுத்தப்பட்டு விட்டதாகத் தெரிவித்தார்.

திருவண்ணாமலையில் நிலத்துக்கு அடியில் தங்கம் இருக்கிறதா? உண்மை என்ன?

பட மூலாதாரம்,Getty Images

"அந்த விழாவில் பேசும்போது, இந்திய நிலவியல் ஆய்வு நிறுவனம் 175 ஆண்டுகளாக இந்தியாவில் ஆற்றிய பணிகளை நினைவுகூர்ந்து பேசினேன். இந்திய நிலவியல் ஆய்வு நிறுவனம்தான் இந்தியாவில் பூமிக்கு அடியில் உள்ள கனிமங்களைத் தனது ஆய்வுகளின் மூலம் அறிந்து சொல்கிறது என்றெல்லாம் குறிப்பிட்டேன். அப்படிச் சொல்லும்போது தமிழ்நாட்டில் தங்கம் சில இடங்களில் கிடைக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தேன். அது மிகவும் பெரிதுபடுத்தப்பட்டு விட்டது" என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், திருவண்ணாமலையிலும் ராஜபாளையத்திலும் தங்கம் பூமிக்கு அடியில் இருப்பதாக செய்திகள் வெளியானது எப்படி?

இந்தச் செய்தியைப் படித்த பலரும் திருவண்ணாமலை மாவட்டத்திலும் ராஜபாளையம் (விருதுநகர் மாவட்டம்) பகுதியிலும் தங்கம் கிடைப்பதாகப் புரிந்துகொண்டனர். ஆனால், இங்கு குறிப்பிடப்படும் ராஜபாளையம் என்பது திருவண்ணாமலை மாவட்டத்தில் கட்டமடுவு ஊராட்சிக்கு அருகில் உள்ள ஒரு கிராமம்.

கடந்த 2022-23இல் திருவண்ணாமலை மாவட்டம் ராஜபாளையத்தில் இரும்புடன் சேர்த்து தங்கம் கிடைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்று இந்திய நிலவியல் ஆய்வு நிறுவனம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இந்த ஆய்வை நிலவியலாளர்களான ஆர். ராம்பிரசாத், சுபா ராய் ஆகியோர் மேற்கொண்டனர். இந்த ஆய்வின் முடிவுகள் 2024 பிப்ரவரியில் வெளியிடப்பட்டன. இந்த ஆய்வு முடிவுகளில்தான், அந்தப் பகுதிகளில் தங்கம் இருப்பது தெரிய வந்தது.

ஆய்வறிக்கை கூறும் தகவல்கள் என்ன?

தமிழ்நாட்டில் தங்கமும் லித்தியமும் உள்ளதா?

பட மூலாதாரம்,Geological Survey of India/Facebook

படக்குறிப்பு,இந்திய நிலவியல் ஆய்வு நிறுவனம் 175 ஆண்டுகளாக இந்தியாவில் ஆற்றிய பணிகளை நினைவுகூர்ந்தே பேசியதாகத் தெரிவிக்கிறார் எஸ்.பி.விஜயகுமார்

  • திருவண்ணாமலையில் உள்ள ராஜபாளையத்தில் எளிதாகப் பிரித்து எடுக்கக்கூடிய வகையிலான தங்கமாக, பிற உலோகங்களுடன் கலந்து என இரு வகைகளில் தங்கம் கிடைக்கிறது.

  • இந்த தங்கத் தாதுக்கள் பெரும்பாலும் இரும்புக் கல் எனப்படும் Banded Magnetite Quartzite (BMQ) பாறைகளிலேயே கிடைக்கின்றன. சில இடங்களில் வேறு உலோகங்களுடன் கலந்தும் கிடைக்கின்றன.

  • பொதுவாக தங்கச் சுரங்கங்கள் லாபகரமாக இருக்க வேண்டுமெனில், தோண்டி எடுக்கப்படும் தாதுக்களில் 500ppb (parts per billion) அளவுக்கு தங்கம் இருக்க வேண்டும். அந்த அளவுக்கு தங்கத் தாதுக்கள், அதாவது 554ppb - 24,293ppb தரமுள்ள தங்கத் தாதுக்கள் கிடைக்கக்கூடிய இடங்கள் ராஜபாளையம் பகுதியில் இருப்பதாக அறிக்கை கூறுகிறது.

  • இங்கு ஒட்டுமொத்தமாக 3.2 டன் அளவுக்குத் தங்கம் கிடைக்கலாம். ஆனால், இதை உறுதி செய்ய மேலும் சில ஆய்வுகளைச் செய்ய வேண்டும்.

'ஆறுகளிலேயே கிடைக்கும் தங்கம்'

திருவண்ணாமலையில் நிலத்துக்கு அடியில் தங்கம் இருக்கிறதா? உண்மை என்ன?

பட மூலாதாரம்,Getty Images

தமிழ்நாட்டின் சில இடங்களில் தங்கம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருந்தாலும், அவற்றை எடுப்பது பொருளாதார ரீதியில் பலனளிக்குமா என்பதில்தான் அதன் முக்கியத்துவம் இருக்கும் என்கிறார் விஜயகுமார்.

பல இடங்களில் தங்கத்தைத் தோண்டியெடுத்து அவற்றைச் சுத்திகரிக்கும் செலவு, தங்கத்தின் மதிப்பைவிட அதிகமாக இருக்கும். அம்மாதிரி இடங்களில் யாரும் தங்கத்தை எடுக்க மாட்டார்கள் என்கிறார் அவர்.

"கோலார் தங்க வயல் பகுதியில் இன்னும் தங்கம் கிடைக்கும். ஆனால், வெளியில் ஒரு கிராம் தங்கத்தை வாங்க செலவு செய்யும் தொகையைவிட அங்கு தங்கம் எடுக்க அதிகம் செலவு செய்ய வேண்டியிருக்கும். அதனால்தான் அங்கிருக்கும் தங்க வயல் கைவிடப்பட்டது.

ஆகவே ஓரிடத்தில் தங்கம் கிடைக்கிறதா என்பது முக்கியமல்ல. மாறாக, அதை எடுப்பது லாபகரமாக இருக்குமா என்பதுதான் மிகவும் முக்கியம். அதற்குச் சில இடங்களில் வாய்ப்புள்ளது. அங்கு தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும்" என்று விஜயகுமார் விளக்கினார்.

"நான் இயக்குநர் ஜெனரலாக இருக்கும்போது இந்தப் பகுதிக்குச் சென்றுள்ளேன். அப்போது அங்குள்ள ஆறுகளிலேயே சிலர் சலித்து தங்கத் தாதுக்களை பிரிப்பதைப் பார்த்திருக்கிறேன். ஆகவே, தங்கம் கிடைக்க வாய்ப்புள்ள பகுதிதான் அது. கூடுதல் ஆய்வுகளில் இதை உறுதி செய்ய வேண்டும்" என்றார் இந்திய நிலவியல் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் ஜெனரலான எஸ். ராஜு.

தமிழ்நாட்டில் லித்தியம் கிடைக்க வாய்ப்புள்ளதா?

தமிழ்நாட்டில் தங்கமும் லித்தியமும் உள்ளதா?

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,பல இடங்களில் தங்கத்தைத் தோண்டியெடுத்து அவற்றைச் சுத்திகரிக்கும் செலவு, தங்கத்தின் மதிப்பைவிட அதிகமாக இருக்கும்.

தமிழ்நாட்டில் லித்தியம் கிடைக்க வாய்ப்புள்ளதா என்று எஸ்.பி. விஜயகுமாரிடம் கேட்டபோது, "லித்தியம் தற்போது மிக முக்கியமான உலோகம் என்ற மதிப்பைப் பெற்றுள்ளது. இந்தியா முழுவதும் லித்தியம் கிடைக்கிறதா என்பது குறித்த ஆய்வுகள் நடந்து வருகின்றன. அதுபோல தமிழ்நாட்டிலும் ஆய்வுகள் நடந்து வருகின்றன. அதில் இதுவரை வெற்றி கிடைக்கவில்லை," என்று தெரிவித்தார்.

எஸ். ராஜுவும் இதே கருத்தை எதிரொலிக்கிறார். "பல இடங்களில் உப்பு வயல்களில் லித்தியம் படிவது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. அயர்லாந்து, பின்லாந்தில் உப்பு வயல்களில் லித்தியம் எடுக்கிறார்கள்.

நான் இயக்குநர் ஜெனரலாக இருந்தபோது தூத்துக்குடி பகுதியில் உள்ள உப்பு வயல்களில் லித்தியம் இருக்கிறதா என்று ஆய்வு செய்து பார்த்தேன். வெற்றி ஏதும் கிடைக்கவில்லை. வேதாரண்யம் உள்ளிட்ட பிற உப்பு வயல் அமைந்துள்ள பகுதிகளிலும் இதுபோன்ற ஆய்வுகளைச் செய்து பார்க்கலாம்," என்றார் அவர்.

கடந்த 2023 பிப்ரவரியில் இந்திய அரசு தனது பத்திரிகைத் தகவல் அலுவலகம் மூலம் ஒரு செய்தியை வெளியிட்டது. அதாவது, ஜம்மு - காஷ்மீரில் உள்ள ரியாசி மாவட்டத்தின் சலால் - ஹைமனா பகுதியில் பெரிய அளவில் லித்தியம் இருப்பதாக அந்தச் செய்தி கூறியது. அதுபோக, உலகளவில் தற்போது ஆஸ்திரேலியாவில்தான் மிகப்பெரிய அளவில் லித்தியம் கிடைத்து வருகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c99nmdnkz0ko

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.