Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

'வெறும் 30 நிமிடங்களில் சென்னை டூ பெங்களூரு' - விமானத்தை விட வேகமான 'ஹைப்பர்லூப்' எப்போது வரும்?

ஹைப்பர்லூப், ஐஐடி மெட்ராஸ், தொழில்நுட்பம், இந்திய ரயில்வே, ஈலோன் மஸ்க்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,சித்தரிப்புப் படம்

கட்டுரை தகவல்

  • எழுதியவர்,சிராஜ்

  • பதவி,பிபிசி தமிழ்

  • 8 மணி நேரங்களுக்கு முன்னர்

'வான்வழி தவிர்த்து, சென்னையிலிருந்து- பெங்களூருக்கு 30 நிமிடத்தில் அல்லது சென்னையிலிருந்து மதுரைக்கு ஒரு மணிநேரத்தில் பயணிப்பதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?'

ஹைப்பர்லூப் எனும் தொழில்நுட்பத்தைக் குறித்து பேசும் போதெல்லாம், இத்தகைய உதாரணங்களே முன்வைக்கப்படும்.

ரயில் பயணத்திற்கு ஆகும் செலவை விட சற்று கூடுதலாக, அதேசமயம் விமானத்தை விட வேகமாக (சுமார் 1000 கிமீ வேகத்தில்) நிலத்தில் செல்லக்கூடிய ஒரு பயண அமைப்பாக ஹைப்பர்லூப் விவரிக்கப்படுகிறது.

ஹைப்பர்லூப் (Hyperloop) என்ற பெயரில் ஒரு தொழில்நுட்பத்தை 2013இல் முன்மொழிந்தார் ஈலோன் மஸ்க். இதுதொடர்பாக 'ஹைப்பர்லூப் ஆல்பா' என்ற பெயரில் ஒரு 58 பக்க ஆய்வறிக்கையையும் அவர் வெளியிட்டார்.

அவரது ஹைப்பர்லூப் திட்டத்தின் மூலம், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரிலிருந்து சான் பிரான்சிஸ்கோ வரையிலான தூரத்தை (563 கிமீ) வெறும் 35 நிமிடங்களில் கடக்க முடியும் என்றும், இந்த திட்டத்திற்கு 6 பில்லியன் அமெரிக்க டாலர் செலவாகும் (இன்றைய இந்திய ரூபாய் மதிப்பில் 52,266 கோடிகள்) என்றும் அப்போது தெரிவிக்கப்பட்டது.

படக்குறிப்பு,பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

உலகில் நடைமுறையில் இருக்கும் ரயில், சாலை, நீர்வழி மற்றும் வான்வழி போக்குவரத்தைக் காட்டிலும், இந்த ஹைப்பர்லூப் மூலம் அதிவேகமாகவும் குறைவான செலவிலும் மக்களையும் பொருட்களையும் கொண்டுசெல்ல முடியும் என்று மஸ்கின் ஆய்வறிக்கை கூறியது.

இந்த ஹைப்பர்லூப் ஒரு ஓபன்சோர்ஸ் தொழில்நுட்பம் என்றும், இதில் பங்களிக்க பலரும் முன்வரவேண்டும் என்றும் அப்போது ஈலோன் மஸ்க் வேண்டுகோள் விடுத்திருந்தார். 12 வருடங்கள் கழித்துப் பார்க்கும் போது, உலகின் மிகச் சில நிறுவனங்களே இந்த ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தில் இதுவரை ஆர்வம் காட்டியுள்ளன. காரணம், இந்தத் திட்டத்தில் இருக்கும் சவால்கள்.

ஹைப்பர்லூப், ஐஐடி மெட்ராஸ், தொழில்நுட்பம், இந்திய ரயில்வே, ஈலோன் மஸ்க்

பட மூலாதாரம்,Boringcompany

ஹைப்பர்லூப் என்றால் என்ன?

இந்திய ரயில்வே அமைச்சகத்தின் நிதி உதவியோடு, 410 மீட்டர் தொலைவுக்கு ஒரு ஹைப்பர்லூப் சோதனைப் பாதையை நிறுவியுள்ளது, ஐஐடி மெட்ராஸ் கல்வி நிறுவனம். செங்கல்பட்டு மாவட்டத்தின் தையூர் எனும் கிராமத்தில் உள்ள ஐஐடி மெட்ராஸின் டிஸ்கவரி வளாகத்தில் இந்த பாதை நிறுவப்பட்டுள்ளது.

எஃகு குழாய்களைக் கொண்டு, முழுவதுமாக சீல் செய்யப்பட்ட ஒரு வலையமைப்பு உருவாக்கப்பட்டு, அதில் குறைந்த அழுத்தச் சூழலில் பாட்களை (Pods- பயணிகள் அமர்வதற்கான, ரயில் கோச்கள் போன்ற ஒரு வசதி) அதிவேகமாகச் செலுத்துவதே இதன் முக்கிய அம்சம்.

"ஹைப்பர்லூப் ஒரு நவீன போக்குவரத்து அமைப்பாகும், அங்கு அதிவேக பாட்கள், காற்றின் உராய்வு இல்லாத குறைந்த அழுத்த குழாய்கள் வழியாக பயணிக்கின்றன. அதாவது வெற்றிடச் சுரங்கப்பாதையில் (Vaccum tunnel), விமானத்தின் வேகத்தில் நகரும் ஒரு ரயில் போல" என்கிறார் ஐஐடி மெட்ராஸ் பேராசிரியரும் ஹைப்பர்லூப் குழுவுக்கான ஆலோசகருமான சத்ய சக்கரவர்த்தி.

"இதில் சக்கரங்களுக்கு பதிலாக, மேக்னடிக் லெவிட்டேஷன் (மாக்லேவ்- Maglev) எனும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பாட்கள் மிதக்கின்றன. பின்னர் அவை மின்சாரத்தால் இயக்கப்படுகின்றன. இதனால் அதிவேகமாக, குறைந்த ஆற்றலுடன், குறைந்தபட்ச உராய்வு விசையுடன் ஹைப்பர்லூப்பை இயக்க முடியும்" என்றும் சத்ய சக்கரவர்த்தி கூறுகிறார்.

ஹைப்பர்லூப், ஐஐடி மெட்ராஸ், தொழில்நுட்பம், இந்திய ரயில்வே, ஈலோன் மஸ்க்

பட மூலாதாரம்,IIT-Madras

படக்குறிப்பு,இந்திய ரயில்வே அமைச்சகத்தின் நிதி உதவியோடு, ஐஐடி மெட்ராஸ் நிறுவியுள்ள 410 மீட்டர் ஹைப்பர்லூப் சோதனைப் பாதை

இந்த மேக்னடிக் லெவிட்டேஷன், அதாவது காந்த சக்தியைக் கொண்டு பாட்களை பாதையிலிருந்து சற்று மேலே மிதக்க வைத்து, பிறகு அதை அதிவேகமாக செலுத்தும் மாக்லேவ் தொழில்நுட்பம் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் ஒன்றுதான்.

உதாரணமாக சீனாவின் 'ஷாங்காய் மாக்லேவ்' ரயில், உலகின் 'அதிவேக ரயில் சேவைகளில்' ஒன்று. இது மணிக்கு 300 கிமீ வேகத்தை எட்டக்கூடியது.

ஆனால், ஹைப்பர்லூப் மூலம் மணிக்கு 1000 கிமீ என்ற வேகத்தைக் கூட எட்டமுடியும் என்கிறார் பேராசிரியர் சத்ய சக்கரவர்த்தி.

இருப்பினும், மாக்லேவ் ரயில்கள் மூலம் நூற்றுக்கணக்கான மக்கள் ஒரே சமயத்தில் பயணிக்க முடியும் என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், "ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்கள் தீர்க்கப்பட்டு, அவை பொதுப் போக்குவரத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டால், நிச்சயம் அதில் அதிகமான மக்கள் பயணிக்க முடியும்" என்கிறார்.

ஹைப்பர்லூப், ஐஐடி மெட்ராஸ், தொழில்நுட்பம், இந்திய ரயில்வே, ஈலோன் மஸ்க்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,சீனாவின் 'ஷாங்காய் மாக்லேவ்' ரயில்

ஹைப்பர்லூப் திட்டத்தில் இருக்கும் சவால்கள் என்ன?

நீண்ட தூரத்திற்கு சீல் செய்யப்பட்ட 'வெற்றிடக் குழாய் அமைப்பை' உருவாக்குவது அல்லது அதற்கான பிரத்யேக மாக்லேவ் பாதைகளை நிறுவுவது பொருளாதார ரீதியில் மிகவும் சவாலான ஒன்று.

"நகர அமைப்புகள் அல்லது இயற்கையை சீர்குலைக்காமல் ஹைப்பர்லூப்பிற்கு ஏற்ற நிலத்தைக் கண்டுபிடிப்பதும், கையகப்படுத்துவதும் எளிதல்ல. இதற்கு தீர்வு, ஏற்கனவே இருக்கும் நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில் பாதைகளுக்கு அருகிலேயே ஹைப்பர்லூப் பாதைகளை உருவாக்குவது தான்," என்கிறார் பேராசிரியர் சத்ய சக்கரவர்த்தி.

ஹைப்பர்லூப்பில் இருக்கும் மற்றொரு சவால், அதன் அதீத வேகத்தைக் கருத்தில் கொள்ளும்போது, பயணிகள் பாதுகாப்புக்கு என எவ்வித விதிமுறைகளும், மத்திய அல்லது மாநில அரசுகளால் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை.

"ஹைப்பர்லூப் தொழில்நுட்பம் நமக்கு மட்டுமல்ல உலகிற்கே புதிது. அது இன்னும் எங்கும் நடைமுறைக்கு வரவில்லை. இந்தியாவில் அப்படி வர தயாராக இருக்கும்போது, அதற்கு என புதிய விதிகளை அரசு கொண்டுவரும்" என்கிறார் அவர்.

ஹைப்பர்லூப், ஐஐடி மெட்ராஸ், தொழில்நுட்பம், இந்திய ரயில்வே, ஈலோன் மஸ்க்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,சித்தரிப்புப் படம்

பயணிகளின் பாதுகாப்பு குறித்த கேள்விகள்

ஹைப்பர்லூப் என்பது காற்றுப் புகாத, சீலிடப்பட்ட குழாய்கள் வழியாக அதிவேகத்தில் செல்லும் ஒரு போக்குவரத்து அமைப்பு எனும்போது, அவசர காலத்தில் பயணிகளின் பாதுகாப்பு குறித்த சந்தேகங்கள் எழுவது இயற்கையே.

"அதிக வேகத்தில் பாட் நகர்ந்தாலும், ஏதாவது தவறு கண்டறியப்பட்டால் அவற்றின் வேகம் படிப்படியாகக் குறைக்கப்படும். எனவே அது மோதுவதற்கான வாய்ப்புகள் கிடையாது. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக குழாயின் உள்ளே அவசரகால வெளியேற்ற அமைப்புகளும் நிறுவப்படும்.

மேம்பட்ட கண்காணிப்பு அமைப்புகள் மூலம் சிக்கல்கள் கண்டறியப்பட்டு, அவை ஆபத்தாக மாறுவதற்கு முன்பே தீர்க்கப்படும்" என்கிறார் பேராசிரியர் சத்ய சக்கரவர்த்தி.

சீலிடப்பட்ட குழாய்கள் வழியாக செல்வதால், பெருமழை, வெள்ளம் போன்றவற்றால் ஹைப்பர்லூப் போக்குவரத்து பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் குறைவு என்று அவர் கூறுகிறார்.

"இங்கே 1000 கி.மீ வேகம் ஒருசில வினாடிகளில் எட்டப்படாது. உள்ளே பயணிப்பவர்களின் நலனை கருத்தில் கொண்டு, படிப்படியாக அந்த வேகம் எட்டப்படும். அதேபோல நிறுத்தும் போது ஒரு குறிப்பிட்ட முறையில் வேகம் குறைக்கப்படும். இதனால் உள்ளே இருக்கும் பயணிகள் அதன் அதிர்வுகளை உணர மாட்டார்கள்" என்றும் அவர் கூறுகிறார்.

மற்றொரு முக்கியமான கேள்வி, ஹைப்பர்லூப் நடைமுறைக்கு வந்தால், அதில் பயணிப்பதற்கான கட்டணம் எவ்வளவு இருக்கும்? சாமானிய மக்களால் பயணிக்க முடியுமா?

"நிச்சயமாக முடியும். கட்டணம் குறித்த முடிவுகள் இதுவரை எடுக்கப்படவில்லை. ஆனால், ரயில் பயணத்திற்கு இணையான கட்டணத்தை நிர்ணயிப்பதே இலக்கு" என்கிறார் பேராசிரியர் சத்ய சக்கரவர்த்தி.

உலகில் இதற்கு முன் செய்யப்பட்ட ஹைப்பர்லூப் சோதனைகள்

ஹைப்பர்லூப், ஐஐடி மெட்ராஸ், தொழில்நுட்பம், இந்திய ரயில்வே, ஈலோன் மஸ்க்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,வில்லியம் ஹீத் என்ற ஓவியரால், 1829இல் வரையப்பட்ட ஓவியம்

ஹைப்பர்லூப் என்ற பெயரில் ஒரு தொழில்நுட்பத்தை முதலில் முன்மொழிந்தவர் ஈலோன் மஸ்க் தான் என்றாலும், ஒரு குழாய் வழியாக மக்கள் பயணிப்பது என்ற யோசனை மிகவும் பழமையானது.

வில்லியம் ஹீத் என்ற ஓவியரால், 1829-இல் வரையப்பட்ட ஓவியம் ஒன்று, வங்கத்தில் இருந்து (இந்தியா பிரிட்டிஷ் ஆட்சிக்குட்பட்டிருந்த போது) லண்டனுக்கு ஹைப்பர்லூப் போன்ற ஒரு அமைப்பில் மக்கள் பயணம் செய்வதைச் சித்தரித்தது.

ஆனால் அது, எதிர்காலத்தில் இத்தகைய போக்குவரத்து அமைப்புகள் இருக்கலாம் என்ற யோசனையை பகடி செய்து, கற்பனையின் அடிப்படையில் வரையப்பட்ட ஒரு ஓவியமே.

2013இல் ஈலோன் மஸ்க் வெளியிட்ட 'ஹைப்பர்லூப் ஆல்பா' ஆய்வறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, அவரது 'தி போரிங் கம்பெனி' என்ற நிறுவனம் ஹைப்பர்லூப் சோதனையில் ஈடுபட்டது.

இதற்காக 2016இல், கலிபோர்னியாவில் அந்நிறுவனம் 1287 மீட்டருக்கு ஒரு சோதனை ட்ராக்கையும் வடிவமைத்தது. சில சோதனைகள் நடைபெற்று, ஹைப்பர்லூப் பாட்கள் மணிக்கு 463 கிமீ என்ற வேகத்தை எட்டின என்று அந்நிறுவனத்தின் இணையதளம் கூறுகிறது.

ஆனால், தற்போது வரை அதன் ஹைப்பர்லூப் நடைமுறைக்கு வரவில்லை. நகரங்களில் ஹைப்பர்லூப் அமைப்பை கொண்டுவருவதற்கான ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக அதன் இணையதளம் கூறுகிறது.

ஹைப்பர்லூப், ஐஐடி மெட்ராஸ், தொழில்நுட்பம், இந்திய ரயில்வே, ஈலோன் மஸ்க்

பட மூலாதாரம்,Virginhyperloop

படக்குறிப்பு,'ஹைப்பர்லூப் ஒன்' நிறுவனத்தின் ஹைப்பர்லூப் பாட் அதிகபட்சமாக மணிக்கு 172 கிமீ என்ற வேகத்தையே எட்டியது

இந்தியாவில் ஹைப்பர்லூப் எப்போது சாத்தியம்?

2020இல் 'ஹைப்பர்லூப் ஒன்' எனும் நிறுவனம் (2022 வரை விர்ஜின் ஹைப்பர்லூப் என்ற பெயரில் இயங்கியது), தனது இரு ஊழியர்களை பயணிகளாகக் கொண்டு, உலகின் முதல் ஹைப்பர்லூப் சோதனையை நடத்தியது. அமெரிக்காவின், நெவெடா பாலைவனத்தில் இதற்காக அமைக்கப்பட்ட பிரேத்யேக 500 மீட்டர் நீள பாதையில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

அந்த சோதனையில் 'ஹைப்பர்லூப் ஒன்' நிறுவனத்தின் ஹைப்பர்லூப் பாட் அதிகபட்சமாக மணிக்கு 172 கிமீ என்ற வேகத்தையே எட்டியது. ஆனாலும், ஹைப்பர்லூப் போக்குவரத்து, உலகின் அதிவேக மாக்லேவ் ரயில்களை விட 10 மடங்கு அதிக செயல்திறன் கொண்டது என அந்த நிறுவனம் கூறியது.

அதன் பின்னர் 2022இல் பயணிகளுக்காக அல்லாமல், ஹைப்பர்லூப் மூலம் பொருட்களை (Cargo) கொண்டுசெல்வதில் மட்டும் கவனம் செலுத்தப்போவதாக அந்நிறுவனம் அறிவித்தது. பிறகு, 2023 டிசம்பரில் பல்வேறு காரணங்களுக்காக 'ஹைப்பர்லூப் ஒன்' நிறுவனம் மூடப்பட்டது.

ஹைப்பர்லூப் போக்குவரத்தை நடைமுறைக்கு கொண்டுவருவதில் பல சிக்கல்கள் இருக்கும் நிலையில், அதை இந்திய ரயில்வே துறையுடன் இணைந்து மெட்ராஸ் ஐஐடி-யின் குழு சாதித்தால், உலக அங்கீகாரம் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அதேசமயம் அது அவ்வளவு எளிதல்ல என்பதையும் பேராசிரியர் சத்ய சக்கரவர்த்தி ஒப்புக்கொள்கிறார்.

"இன்னும் சோதனை கட்டத்தில் தான் இருக்கிறோம். எல்லாம் சரியாக நடந்தால் அடுத்த 10-15 ஆண்டுகளில் இந்தியா தனது முதல் ஹைப்பர்லூப் போக்குவரத்து அமைப்பைப் பெறும்," என்கிறார் அவர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c93k0wll19po

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.