Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1358180.jpg?resize=750%2C375&ssl=1

மாநில உரிமைகளைப் பாதுகாக்க உயர்நிலைக் குழு – ஸ்டாலின்.

மாநில உரிமைகளைப் பாதுகாக்க ஓய்வு பெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மாநில சுயாட்சி தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் இ ன்று (15) விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதனை வெளியிட்டு அவர் கூறியதாவது:  மாநிலங்களின் நியாயமான உரிமைகளைப் பாதுகாக்க உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர்நிலைக் குழு ஒன்று அமைக்கப்படுகிறது. இந்தக் குழுவின் இடைக்கால அறிக்கை வரும் ஜனவரி 2026-ல் சமர்ப்பிக்கப்படும். இ றுதி அறிக்கை இரண்டு ஆண்டுகளில் சமர்ப்பிக்கப்படும். இக்குழு மாநில உரிமைகளை மீட்டெடுப்பதற்கான பரிந்துரைகளை அரசுக்கு வழங்கும்.

மாநில பட்டியலில் உள்ள கல்வி, மருத்துவம், சட்டம், நிதி ஆகியவற்றை மத்திய அரசு மடைமாற்றம் செய்ய முயற்சி செய்து வருகிறது. மருத்துவக் கொள்கையை நீட் தேர்வு நீர்த்துபோகச் செய்துள்ளது. நீட் தேர்வு காரணமாக பல மாணவர்களின் மருத்துவக் கனவு சிதைந்து போயுள்ளது. இதனால் பல மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

மேலும், மும்மொழிக் கொள்கை என்ற போர்வையில் ஹிந்தியை திணிக்க முயற்சி நடக்கிறது. ஜிஎஸ்டியை கொண்டு வந்தபோதே தமிழ்நாடு அதற்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. மத்திய அரசின் ஜிஎஸ்டி முறையால் மாநில அரசுகளுக்கு வருவாய் ,ழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறாக மாநில உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டு வருகின்றன.

மாநில உரிமைகளுக்கான முதல் குரல் தமிழகத்தில் இருந்துதான் ஒலிக்கத் தொடங்கும். அந்த வகையில் மாநிலங்களின் நியாயமான உரிமைகளை பாதுகாக்க ஓய்வு பெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் குழு அமைக்கப்படும். அனைத்து மாநிலங்களின் நலன் கருதி இந்த உயர்மட்ட குழு அமைக்கப்படுகிறது. இதில் ஓய்வுபெற்ற முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அசோக் வர்தன், திட்டக்குழு முன்னாள் தலைவர் நாகநாதன், ஆகியோர் குழுவின் உறுப்பினர்களாக இருப்பர். இந்தக் குழுவின் இடைக்கால அறிக்கை வரும் ஜனவரி 2026-ல் சமர்ப்பிக்கப்படும். இறுதி அறிக்கை ,ரண்டு ஆண்டுகளில் சமர்ப்பிக்கப்படும். இவ்வாறு முதலமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

https://athavannews.com/2025/1428497

  • கருத்துக்கள உறவுகள்

ராஜமன்னார் குழு: மத்திய அரசுக்கு தலைவலி கொடுக்கும் மாநில சுயாட்சி பரிந்துரைகள் என்ன?

ராஜமன்னார் குழுவின் பரிந்துரைகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், பாலசுப்ரமணியம் காளிமுத்து

  • பதவி, பிபிசி தமிழ்

  • 14 டிசம்பர் 2023

    புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்தியாவில் மாநிலங்கள் அதிகபட்ச தன்னாட்சி உரிமை பெற்றிட உரிய நடவடிக்கைகளை பரிந்துரைக்கவும் மத்திய - மாநில அரசுகள் இடையிலான உறவுகள் குறித்து ஆராய்ந்து பரிந்துரை அளிக்கவும் மூன்று பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை அமைத்துள்ளது தமிழ்நாடு அரசு. இந்நிலையில் ராஜமன்னார் குழு பரிந்துரைகள் தொடர்பாக பிபிசி தமிழ் 2023ம் ஆண்டு வெளியிட்ட செய்தித் தொகுப்பு மறுபதிப்பு செய்யப்படுகிறது.

சென்னை மயிலாப்பூரில், 1974ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.கருணாநிதி, “மாநில சுயாட்சியை நாம் கேட்கிறோம் என்ற காரணத்திற்காக திமுக அரசை மத்திய அரசு கலைத்தால் அதைவிட என் வாழ்வில் புனிதமான சரித்திர சம்பவம் வேறு எதுவுமே இருக்க முடியாது,” எனப் பேசினார்.

அன்று காலைதான் சட்டமன்றத்தில் மாநில சுயாட்சியைக் காப்பதற்காக அமைக்கப்பட்ட ராஜமன்னார் குழுவின் பரிந்துரைகளை ஏற்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. மத்திய - மாநில அரசின் உறவுகளை ஆராய்ந்து மாநிலங்களுக்கான உரிமைகளைப் பேசிய ராஜமன்னார் குழுவின் பரிந்துரைகள் 54 ஆண்டுகள் கழித்து இப்போதும் தமிழ்நாடு அரசியலில் பேசுபொருளாக உள்ளது.

சமீபத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ‘இந்தியாவிற்காக பேசுகிறேன்’ என்னும் தலைப்பிட்ட வலையொலியில் (Podcast) பேசும்போது நடப்பு அரசியல் சூழலில் ராஜமன்னார் குழுவின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசினார்.

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலதாமதம் செய்யும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் கண்டித்து சமீபத்தில் பேசும்போது ராஜமன்னார் குழுவைப் போன்று கூட்டாட்சியை மேம்படுத்த மற்றொரு கமிட்டியை அமைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்தியிருந்தார்.

இப்படியாக, அரை நூற்றாண்டிற்கும் மேலாக தமிழ்நாடு அரசியலில் தொடர்ந்து முக்கியப் பேசுபொருளாக இருந்து வரும் ராஜமன்னார் குழு குறித்து இங்கு பார்ப்போம்.

ராஜமன்னார் கமிட்டி குறித்து இப்போது ஏன் பேசப்படுகிறது?

மாநில சுயாட்சி கோரிக்கை: அரை நூற்றாண்டாக மத்திய அரசுக்கு தலைவலி கொடுக்கும் ராஜமன்னார் குழு

பட மூலாதாரம்,DAILYTHANTHI

தேசிய கல்விக் கொள்கை, நீட் தேர்வு, நிதிப் பங்கீடு உள்ளிட்ட பிரச்னைகள் தற்போது தமிழ்நாட்டு அரசியலிலும், சட்டப்பிரிவு 370 ரத்து தேசிய அளவிலும் மாநில சுயாட்சி குறித்த விவாதத்தை உயிர்ப்போடு வைத்துள்ளது.

மத்தியில் இருக்கக்கூடிய பாஜக அரசு மாநில உரிமைகளில் தலையிடுகிறது என பாஜக ஆளாத மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்டவை தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.

இதுகுறித்து 54 ஆண்டுகளுக்கு முன்பே 1969ஆம் ஆண்டு செப்டெம்பர் 22ஆம் தேதி அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதியால் மத்திய - மாநில உறவுகள் குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்டதுதான் ராஜமன்னார் குழு.

இந்தக் குழுவின் தலைவராக சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி பி.வி.ராஜமன்னார் நியமிக்கப்பட்டார். இந்தக் குழுவில் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் லட்சுமணசாமி முதலியார், சென்னை உயர்நீதிமன்றத்தின் மற்றொரு முன்னாள் நீதிபதி பி.சந்திரரெட்டி ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர்.

இந்தக் குழு அமைக்கப்பட்டதன் நோக்கம், மத்திய அரசுக்கும் மாநில அரசுக்குமான உறவுகளின் அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து மத்திய - மாநில உறவில் அதிகாரப் பங்கீடு தொடர்பான சிக்கல்களுக்கான காரணத்தைக் கண்டுபிடிப்பதாகும்.

ராஜமன்னார் கமிட்டியின் பரிந்துரைகள் என்ன?

ராஜமன்னார் குழுவின் பரிந்துரைகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ராஜமன்னார் குழு அமைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கழித்து தனது அறிக்கையை 1971ஆம் ஆண்டு மே 27ஆம் தேதி தமிழ்நாடு அரசிடம் சமர்பித்தது. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்ட பரிந்துரைகளை ஏற்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் 1974ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ராஜமன்னார் குழுவின் அறிக்கையில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகள் வழங்கப்பட்டிருந்தன.

  • ஆளுநரின் விருப்பப்படி மாநில அமைச்சகம் செயல்பட வேண்டும் என அரசமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதை மாற்ற வேண்டும்

  • இந்திய ஆட்சிப் பணி(IAS), இந்திய காவல் பணி(IPS) உள்ளிட்ட அனைந்திந்திய பணிகள் ரத்து செய்யப்பட வேண்டும்.

  • மத்திய மற்றும் பொதுப்பட்டியலில் உள்ள குறிப்பிட்ட சில அதிகாரங்களை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்

  • குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டு வர பயன்படுத்தப்படும் சட்டப் பிரிவுகள் 356, 357 மற்றும் 365 ஆகியவற்றை நீக்க வேண்டும்

  • நிதிக்குழு நிரந்தரமாக்கப்பட வேண்டும்

  • திட்டக்குழு அகற்றப்பட்டு அதற்குப் பதிலாக சட்டப்பூர்வமாக ஒரு குழு அமைக்கப்பட வேண்டும்

  • மாநிலங்களுக்கு இடையிலான குழுக்கள் உடனடியாக அமைக்கப்பட வேண்டும்.

குறிப்பிடப்பட்டுள்ள இந்தப் பரிந்துரைகளில் மாநிலங்களுக்கு இடையிலான குழு 1990ஆம் ஆண்டு மே 28ஆம் தேதி வி.பி.சிங் இந்திய பிரதமராக இருந்தபோது அமைக்கப்பட்டது.

'பாஜக மாநிலங்களுக்கு அதிகாரத்தை கொடுக்காது'

ராஜமன்னார் குழுவின் பரிந்துரைகள்

பட மூலாதாரம்,TN GOVERNMENT

படக்குறிப்பு,சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி பி.வி.ராஜமன்னார்

ராஜமன்னார் குழு பரிந்துரைகளின் சமகால அரசியல் சூழலுக்குப் பொருந்துகிறதா என்பது குறித்து மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வத்திடம் பிபிசி தமிழ் பேசியது.

அவர் கூறுகையில், “2014இல் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு மாநிலங்களுக்கான அதிகாரப் பங்கீடு தொடர்பான பிரச்னைகள் அதிகமாக எழுகின்றன. பாஜகவுக்கு அதிகாரப் பங்கீட்டில் நம்பிக்கை இல்லை என்பதை பாஜகவின் முதலமைச்சர் வேட்பாளர்களைப் பார்த்தாலே நமக்குப் புரியவரும்.

ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய மாவட்டங்களில் இதற்கு முன்பு முதலமைச்சர்களாக இருந்தவர்களுக்கு முதல்வர் பதவி இம்முறை வழங்கப்படவில்லை. பாஜகவிற்குள் மாநில தலைவர்கள் வளர்ந்து விடக்கூடாது என்பதே இதன் உள்நோக்கம். எனவே பாஜகவிற்கு தங்களது கட்சிக்கு உள்ளேயே அதிகாரம் பரவலாக்கப்படுவதில் விருப்பம் இல்லை,” என அவர் தெரிவித்தார்.

மேலும் ராஜமன்னார் குழுவின் அடிப்படை கருத்தே அதிகாரப் பங்கீடுதான் என்றும் தமிழ்நாட்டில் மட்டுமல்ல 1970களில் மேற்கு வங்கத்திலும் பஞ்சாபிலும்கூட அதிகாரப் பங்கீட்டிற்கான குரல் எழுந்துள்ளது என்றும் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

ராஜமன்னார் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைக்கு ஒவ்வாதவையாக உள்ளது எனக் கூறப்படுகிறதே என்ற கேள்விக்குப் பதிலளித்து அவர் பேசுகையில், “நடைமுறைக்கு ஒவ்வாததாக இருந்தது என்றால் எதுவெல்லாம் நடைமுறைபடுத்தும் வகையில் இருந்ததோ அதுவெல்லாம் அமல்படுத்தப்பட்டதா?

ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற பணிகளை நீக்க வேண்டும் என பரிந்துரைகளில் கூறப்பட்டிருப்பதற்கு காரணம் அந்தக் குழு அமைக்கப்பட்டது தாராளமயமாக்கலுக்கு முந்தைய காலத்தில். அதையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். இது தவிர்த்து, ஆளுநர் மாநில அதிகாரத்தில் தலையிடக்கூடாது என்பது நியாயமான நடைமுறைபடுத்தக் கூடிய விஷயம்தான் அதை ஏன் செய்யவில்லை?” எனக் கேள்வி எழுப்பினார்.

மாநிலங்களோடு மத்திய அரசு அதிகாரத்தைப் பகிர்வதில்லை என்ற குற்றச்சாட்டு பாஜகவிற்கு மட்டுமின்றி காங்கிரஸிற்கும் பொருந்துமா என்ற கேள்விக்குப் பதிலளித்த பன்னீர்செல்வம், “காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளிடையே இருக்கக்கூடிய மத்திய அதிகாரத்திற்கும் பாஜகவிடம் இருக்கக்கூடிய மத்திய அதிகாரத்திற்கும் ஒரு வித்தியாசம் உள்ளது.

காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருக்கும்போது மாநில அரசால் தங்களுக்கான உரிமையைப் போராடி பெற்றுவிடக்கூடிய சூழல் இருக்கும். காங்கிரஸ் இருக்கும்போதுதான் தேசியத் தலைவர்களாக மாநிலத் தலைவர்களாக இருந்த காமராஜரும் கர்நாடகாவை சேர்ந்த நிஜலிங்கப்பாவும் உருவானார்கள்.

கம்யூனிஸ்ட் கட்சியில்கூட மத்தியக் குழு ஒரு நிலைப்பாடு எடுத்தால் மேற்கு வங்கத்தில் ஜோதி பாசு மற்றொரு நிலைப்பாடு எடுப்பார். ஆனால், பாஜகவில் தற்போது வசுந்தரா ராஜேவுக்கோ, சிவ்ராஜ் சிங் சவுகானுக்கோ அல்லது நிதின் கட்கரிக்கோ அந்த அதிகாரம் கிடையாது,” எனத் தெரிவித்தார்.

ராஜமன்னார் குழுவின் பரிந்துரைகள்

பட மூலாதாரம்,X/ASPANNEERSELVAN

படக்குறிப்பு,மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன்

'மாநிலங்களால் இந்தியா உருவானது என்ற கருத்தே தவறானது'

இதுகுறித்து தமிழ்நாடு பாஜகவின் துணைத்தலைவர் நாரயணன் திருப்பதியிடம் பிபிசி தமிழ் பேசியது. அவர் கூறுகையில், “இன்றைக்கு இருக்கக்கூடிய அரசியல் சூழலில் ராஜமன்னார் குழுவின் பரிந்துரைகள் தேவையற்றது மற்றும் அமல்படுத்த முடியாதது. ஏனென்றால், அரசமைப்பு சட்டத்தின்படிதான் தற்போது மத்திய - மாநில உறவுகள் உள்ளன. திமுகவினர் பேசுவதைப் பார்த்தால் அரசமைப்பு சட்டத்தையே மாற்றச் சொல்லுவார்கள் போல,” என்று தெரிவித்தார்.

மேலும், “இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சி, பொருளாதார தாராளமயமாக்கல் ஆகியவற்றைப் பார்க்கும்போது ராஜமன்னார் குழுவின் பரிந்துரைகள் தேவையற்றது. இந்தியா தன்னுடைய நிர்வாக வசதிக்காகத்தான் இந்தியாவை மாநிலங்களாகப் பிரித்துள்ளது. மாநிலங்களால் இந்தியா உருவானது என்ற கருத்தே தவறானது. மாநிலங்களை இந்தியா உருவாக்கியது என்பதே சரியான பார்வை,” என அவர் தெரிவித்தார்.

அதிகாரப் பங்கீட்டை பாஜக தனது கட்சிக்குள்ளேயே செயல்படுத்த தயாராக இல்லை என்ற விமர்சனத்திற்குப் பதிலளித்த நாரயணன் திருப்பதி, “பாஜகவில் ஒரு முதலமைச்சரை சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி, ஆலோசித்து ஜனநாயக முறைப்படிதான் தேர்ந்தெடுக்கிறார்கள். அதை கேள்விக்கு உள்ளாக்குவது ஜனநாயகத்தையே கேள்விக்கு உள்ளாக்குவதைப் போன்றது,” எனத் தெரிவித்தார்.

'காங்கிரஸ் ஆட்சியிலும் மாநிலங்களுக்கு அதிகாரம் தரப்படவில்லை'

ராஜமன்னார் குழுவின் பரிந்துரைகள்

பட மூலாதாரம்,X/NARAYANANTIRUPATHI

படக்குறிப்பு,தமிழ்நாடு பாஜகவின் துணைத்தலைவர் நாரயணன் திருப்பதி

இதுகுறித்து திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் பிபிசி தமிழ் பேசியபோது அவர் கூறுகையில், “தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பெரும்பான்மை பெற்ற மாநில அரசால் சுயாட்சி செய்ய முடியாத சூழல் உள்ளது. ஆளுநர் மாநிலத்தின் ஆட்சியில் தலையிடுகிறார். கல்வி உள்ளிட்ட முக்கியமான அதிகாரங்களை மத்திய அரசு எடுத்துக்கொண்டது. ஒரு பேரூராட்சித் தலைவருக்கு இருக்கும் அதிகாரம்கூட இப்போது பாஜக ஆளாத மாநிலங்களில் இருக்கும் முதலமைச்சர்களுக்கு இல்லாத சூழல் உள்ளது,” எனத் தெரிவித்தார்.

மேலும், “எங்கிருந்தோ வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசின் ஆட்சியில் தலையிடுகிறார். இந்தப் பிரச்னையை தமிழ்நாடு மட்டுமல்ல, கேரளா, பஞ்சாப், மேற்குவங்கம் போன்ற மற்ற பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களும் எழுப்பியுள்ளன,” என்றும் கூறினார் அவர்.

ராஜமன்னார் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த முடியாததாக இருப்பதாக பாஜக கூறுகிறதே என்ற கேள்விக்கு, “அது தவறானது. மத்தியில் பாஜக அல்லது காங்கிரஸ் என எந்தக் கட்சி இருந்தாலும் அனைத்து அதிகாரங்களும் தங்களிடமே இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். அந்த மனப்பான்மை மாற வேண்டும்.

தற்போது இந்தியா முழுக்க தேசிய கட்சிகளைவிட மாநில கட்சிகள்தான் வளர்ந்து வருகின்றன. எனவே ராஜமன்னார் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தினால் மட்டும்தான் இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவம் காப்பாற்றப்படும்,” என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/c842w03dl51o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.