Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்மார்ட்போனுக்கு கவர் அவசியமா?

பட மூலாதாரம்,ISA ZAPATA

கட்டுரை தகவல்

  • எழுதியவர், தாமஸ் ஜெர்மைன்

  • பதவி, பிபிசி செய்தியாளர்

  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

ஸ்மார்ட்ஃபோன்கள் முன்பை விட உறுதியாக வடிவமைக்கப்படுவதால், ஒரு சிலர் தொலைபேசிகளின் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படும் கவர்கள் (போனின் பின்பக்கத்தை பாதுகாக்க பயன்படுவது) கோழைகளுக்கானது என்கின்றனர்.

இவ்வாறு கூறுபவர்களுடன் இணைந்து, போனை கவர் இல்லாமல் பயன்படுத்த முடிவு செய்து, நிபுணர்களின் ஆலோசனையை பெற்றேன் .

போன் உடைவதற்கு வாய்ப்புள்ளது என மனதளவிலும் என்னைத் தயார் செய்துகொண்டேன்.

சில மாதங்களுக்கு முன்பு, நான் புதிய ஐபோன் வாங்க ஆப்பிள் நிறுவனத்தின் கடைக்குச் சென்றேன். பல்வேறு போன் மாடல்கள் மற்றும் புது வரவுகளை பார்த்த பிறகு, ஒரு விற்பனையாளர் அதன் விலை 1,199 அமெரிக்க டாலர் (919 யூரோ) என்று கூறினார்.

அதன் விலை நான் செலுத்தும் ஒரு மாத வாடகைத் தொகைக்கு கிட்டத்தட்ட சமமாக இருப்பதாக நான் கூறிய போது, "ஆச்சர்யமாக உள்ளது அல்லவா?" என்று சிரித்தபடியே கூறிய அந்த விற்பனையாளர், "இப்போது சில போன் கவர்களைப் பார்ப்போம்" என்றார்.

இது தான் போன் வாங்குவதன் அடுத்த கட்டம்.

ஆனால் மொபைல் ஃபோன்களின் விலை விண்ணை எட்டும்போது, அதனை வாங்கும் சில வாடிக்கையாளர்கள் வேறு வழியைக் கடைபிடிக்கின்றனர். அவர்கள் தங்கள் போனை, கடினமான பகுதிகள் மற்றும் தூசிகளுக்கு இடையே எந்த பாதுகாப்பும் இல்லாமல் அல்லது போனின் திரையை எந்த பாதுகாப்பும் இன்றி உபயோகிக்கிறார்கள். நான் அறிந்த சிலர் இவ்வாறு தான் செய்கிறார்கள். அவர்களின் போன்கள் பளபளப்பாக உள்ளன, டைட்டானியம் பிரேம்களும் கவனமாக வடிவமைக்கப்பட்ட திரையுடன் இருக்கின்றன.

அவர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன், கவலையற்று உள்ளனர்.

இதைக் குறித்து நான் தான் அதிகம் யோசித்துக்கொண்டே இருக்கிறேனா ? போனை கவர் இல்லாமல் பயன்படுத்துவதற்கு எனது பயம் தான் தடையாக உள்ளதா ?

" இது எப்படி இருக்கின்றது என்று பாருங்கள்" என்று ஒரு நண்பர் இரண்டு வாரங்களுக்குப் பிறகு என்னிடம் கூறினார்.

தனது போனை கவர் இல்லாமல் பயன்படுத்தும் அவர், பெருமையுடன் தனது ஐபோனை என்னிடம் கொடுத்தார்.

அது கவர் இல்லாமல் மிகவும் அழகாக இருந்தது, அதை பிடித்துக்கொள்ளவும் எளிதாக இருந்தது. "இப்போது போன்களை வலிமையாக உருவாக்குகிறார்கள். நான் அடிக்கடி அதை கீழே போடுவேன், அது நன்றாகத் தான் உள்ளது" என்றார் அந்த நண்பர்.

ஸ்மார்ட்போனுக்கு கவர் அவசியமா?

பட மூலாதாரம்,ISA ZAPATA

படக்குறிப்பு,புதிய ஃபோன்கள் 2 மீட்டர் உயரத்திலிருந்து விழுந்தால் கூட தப்பித்துவிடும்

போன் திரையில் உள்ள கண்ணாடியை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள், போன்களுக்கு கவர் உபயோகிப்பதை எதிர்ப்பவர்கள் மற்றும் போன்களின் வலிமையை பரிசோதிக்க அதனை சேதப்படுத்துபவர்களுடன் நான் மேற்கொண்ட உரையாடல்களின்படி, அவர் சொல்வது சரிதான் என எனக்குத் தோன்றுகிறது.

நவீன ஸ்மார்ட்போன்கள் அதன் பழைய மாடல்களை விட மிகவும் வலுவானவை என நிபுணர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.

ஆனாலும், எனக்குத் தெரிந்த பெரும்பாலான மக்கள் இன்னும் போனின் பாதுகாப்புக்காக கவர்களைப் பயன்படுத்துகிறார்கள். அப்படியானால் இங்கு போனை சரியாக பயன்படுத்துவது யார் தான் ?

நான் இதை கண்டுபிடிக்க முடிவு செய்தேன்.

வீட்டிற்கு வந்ததும், எனது போனின் கவரைக் கழற்றி வைத்துவிட்டு, கவர் இல்லாமல் போனைப் பயன்படுத்த முடிவு செய்தேன்.

அதைப் பற்றிய ஒரு யோசனையை எனது பத்திரிக்கை ஆசிரியரிடம் பரிந்துரைத்தேன். அவர் இந்த யோசனையை விரும்பினார், ஆனால் நான் அதனை சோதனை செய்யும்போது, போனுக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டால், அதனை சரி செய்வதற்கு பிபிசி பணம் செலுத்தாது என்று கூறிவிட்டார்.

கண்ணாடியில் விரிசல்

சிலர் தங்களின் போன்களை கவர் இல்லாமல் பயன்படுத்துவதை , தங்களது அந்தஸ்தின் அடையாளச் சின்னமாக கருதுகிறார்கள் என நிறைய விவாதங்கள் நடைபெற்றுள்ளன.

உதாரணமாக, நான் தொழில்நுட்ப நிர்வாகிகள் மற்றும் தொழில்முனைவோர்களை நேர்காணல் செய்யும்போது, அவர்கள் தங்களின் போன்களை கவருடன் பயன்படுத்துவத்தை மிக அரிதாகவே பார்க்க முடிகிறது.

"எனது போன் உடைந்துவிட்டால் 'அதை என்னால் மாற்ற முடியும்' என நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால் என்னைப் பொருத்தவரை, இது வெளித்தோற்றத்தைப் பற்றியது அல்ல. நான் எனது நிறுவனத்தைத் தொடங்குவதற்கு முன்பே, எனது போனுக்கு கவர் பயன்படுத்தாதவனாகவே நான் இருந்தேன்" என்று டிஜேக்களுக்கான (இசைப் பதிவுகளை வாசிக்கும் கலைஞர்கள்) நேரடி ஆடியோ தளமான பிளாஸ்ட் ரேடியோவின் தலைமை நிர்வாகி யூசெப் அலி கூறுகிறார்.

இதுகுறித்து பேசிய அவர், " 1,000 டாலர் [766 யூரோ] மதிப்புள்ள ஆடம்பர போனை, அதன் அழகிய வடிவமைப்புக்கு ஆசைப்பட்டு வாங்கிவிட்டு, அதற்குப் பதிலாக 30 டாலர்[23 யூரோ ] மதிப்புள்ள பிளாஸ்டிக் கவரைப் பயன்படுத்துவது எனக்கு முட்டாள்தனமாகத் தோன்றுகிறது. இது துணியைப் பாதுகாக்க வேண்டி, அதன் மேல் பிளாஸ்டிக்கை விரிப்பது போன்று உள்ளது. என்னிடம் விலையுயர்ந்த கால்சட்டை உள்ளது என்றால், அதனைப் பாதுகாக்க கூடுதல் ஜோடி கால்சட்டை அணிய வேண்டுமா? இது எங்கே சென்று முடியும்" என்று கேள்வி எழுப்பினார்.

ஸ்மார்ட்போனுக்கு கவர் அவசியமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

போனுக்கு கவர் இல்லாமல் பயன்படுத்தத் தொடங்கிய முதல் வாரம் எனக்குச் சற்று பயமாக இருந்தது என்பதை நான் மறுக்க மாட்டேன்.

இது ஒரு ஆபத்தான விளையாட்டு.

டிரெண்டுகள் வரும் போகும்.

ஆனால் எனது தொலைபேசி தரையில் விழுந்து உடைந்துவிடும் என்ற கற்பனையில் பயப்படுவதை விட, நான் இதுகுறித்த உண்மைகளை அறிய விரும்புகின்றேன்.

நீங்கள் இதை ஒரு போனில் படித்துக் கொண்டிருந்தால், நீங்கள் வாசிக்கும் திரை 'கொரில்லா கிளாஸ்' என்ற தொழில்நுட்பத்தால் செய்யப்பட்டிருக்க வாய்ப்புள்ளது.

இது கார்னிங் என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. காப்புரிமை பெற்ற இது, திரை உடைவதை தடுக்கும் தன்மை கொண்ட ஒரு தொழில்நுட்பமாக செயல்படுகின்றது.

ஆப்பிள், கூகுள், ஹவாய், சாம்சங் உள்ளிட்ட அனைத்து முக்கியமான தொலைபேசி நிறுவனங்களும் , தங்களது பெரும்பாலான செல்போன் திரைகளில் கொரில்லா கிளாஸ் அல்லது கார்னிங் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட வேறு ஏதாவது ஒன்றை பயன்படுத்துகின்றன.

பழைய மாடல்கள் மற்றும் குறைந்த விலையில் விற்கப்படும் பிராண்டுகள் இதற்கு விதிவிலக்காக இருக்கலாம். ஆனால் பெரும்பாலும் இந்த சந்தையை கார்னிங் நிறுவனமே கைப்பற்றி வைத்துள்ளது.

கொரில்லா கிளாஸை தயாரிக்கும் செயல்முறையானது, முதலில் 400°C வெப்பத்தில் உள்ள உருகிய உப்பு நீரில் கண்ணாடியை மூழ்கடிப்பதன் மூலம் தொடங்குகிறது.

"இந்த உப்புக் குளியல், கண்ணாடியில் இருக்கும் லித்தியம் போன்ற சிறிய அயனிகளை வெளியே இழுத்து, அதற்குப் பதிலாக பொட்டாசியம் போன்ற பெரிய அயனிகளை சேர்க்கிறது," என்கிறார் கார்னிங் நிறுவனத்தில் தொழில்நுட்பத் தலைவர் லோரி ஹாமில்டன்.

"இதனால் கண்ணாடியின் மேற்பரப்பில் 'அழுத்தத்தால் உருவாக்கப்பட்ட ஒரு வகை அடுக்கு' உருவாகிறது. இதனால், சின்னச் சிதைவுகள் அல்லது கீறல்கள் கண்ணாடிக்குள் ஊடுருவ முடியாமல் தடுக்கப்படுகிறது."

சுருக்கமாகச் சொன்னால், இது கண்ணாடியை ஒன்றாக இணைக்கிறது. அதனால் கண்ணாடி வலுவாகவும், எளிதில் உடையாததாகவும் மாறுகிறது.

கார்னிங்கின் ஆராய்ச்சியில், என்ன தவறு நடக்கிறது என்று அறியவும், அதை எவ்வாறு தடுப்பது என்பதைக் குறித்து ஆய்வு செய்வதற்காகவும், அதனை பல்வேறு முறைகளைப் பயன்படுத்தி சோதனைக்கு உட்படுத்துவது வழக்கம்.

கண்ணாடியில் ஏற்படும் பாதிப்புகளைச் சோதிக்கும் சிறப்பு இயந்திரங்கள், நாம் பயன்படுத்தும் வாகனங்களின் சாவி ஆகியவற்றுடன் தொலைபேசியை ஒரு டம்ளரில் வைக்கிறார்கள்.

அதுமட்டுமின்றி, எதிர்பாராத விதமான சேதங்கள் எப்படி ஏற்படுகின்றது என்பதை புரிந்துகொள்வதற்காக, வாடிக்கையாளர்களிடம் இருந்து உடைந்த போன்களையும் கார்னிங் நிறுவனம் சேகரிக்கிறது.

ஸ்மார்ட்போனுக்கு கவர் அவசியமா?

பட மூலாதாரம்,ISA ZAPATA

படக்குறிப்பு,போனுக்கு கவர் வேண்டுமா என்பதை ஆப்பிள் நிறுவனம் கூறாது, ஆனால் அதை மகிழ்ச்சியுடன் உங்களிடம் விற்கும்

"பின்னர் 'ஃபிராக்சர் அனாலிசிஸ்' (fracture analysis) எனப்படும், சிஎஸ்ஐ வகையிலான (துப்பறியும் தொழில்நுட்பத்தைப் போன்ற) ஒரு பரிசோதனையை நாங்கள் மேற்கொள்கிறோம். அதில், முதலில் கண்ணாடி எப்படி உடைந்தது என்ற மூல காரணத்தை கண்டுபிடிக்க, மிகச் சிறிய துண்டுகளைக் கவனமாக ஆய்வு செய்கிறோம்," என்கிறார் ஹாமில்டன்.

உங்கள் மொபைல் போன் உடைந்தால், பெரும்பாலான நேரங்களில் திரையே முதலில் பாதிக்கப்படும். ஆனால் ஹாமில்டன் கூற்றுப்படி, கடந்த சில ஆண்டுகளில் இந்த நிலை பெரிதும் மேம்பட்டுள்ளது. இன்று உள்ள ஸ்மார்ட்போன்களின் திரை மிகவும் வலுவானது.

2016ல், கார்னிங் வெளியிட்ட அறிக்கையின்படி, கொரில்லா கிளாஸ் 5 ஆய்வகத்தில் 0.8 மீட்டர் (2.6 அடி) உயரத்திலிருந்து விழுந்தாலும் உடையவில்லை. 2020-இல் வந்த கொரில்லா கிளாஸ் விக்டஸ், 2 மீட்டர் (6.6 அடி) உயரத்திற்கு மேல் இருந்து விழுந்தும் நன்றாக இருந்தது. சமீபத்தில் அறிமுகமான கொரில்லா ஆர்மர் 2, சாம்சங் அல்ட்ரா S25 மாடலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 2.2 மீட்டர் (7.2 அடி) உயரத்திலிருந்து கீழே விழுந்த போதும், பாதுகாப்பாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

தொலைபேசி உற்பத்தியில் பயன்படுத்தப்படும் பொருட்கள், அதன் உருவாக்கம், மற்றும் வடிவமைப்பில் ஏற்பட்டுள்ள மேம்பாடுகளை சான்றுகளும் உறுதிப்படுத்துகின்றன.

2024ஆம் ஆண்டு, மொபைல் பாதுகாப்பு திட்டங்களை விற்கும் காப்பீட்டு நிறுவனமான ஆல்ஸ்டேட் வெளியிட்ட தகவலின்படி, 2020ஆம் ஆண்டில் இருந்த 87 மில்லியனுடன் ஒப்பிடும்போது, கடந்த ஆண்டு 78 மில்லியன் அமெரிக்கர்களின் ஃபோன்கள் சேதமடைந்துள்ளது.

"உடைக்க முடியாதது" என்ற வார்த்தையை நாங்கள் பயன்படுத்துவதில்லை என்று ஹாமில்டன் கூறுகிறார்.

"எப்போதும் சில தோல்விகள் இருக்கத்தான் செய்யும். சில நேரங்களில் ஆழமான ஒரு குறைபாடோ அல்லது சரியான கோணத்தில் வளைந்ததாலோ கண்ணாடி உடையும்."

ஆனால், ஒரு தொலைபேசிக்கு கவரைத் தவிர்ப்பது நியாயமான முடிவாக இருக்கலாம் எனக் கூறும் ஹாமில்டன், இது தனிப்பட்ட விருப்பம் மட்டுமே. "இறுதியில், ஒரு ஃபோன் என்பது ஒரு முதலீடு தான்," என்கிறார். "நான் ஸ்கிரீன் கவர் பயன்படுத்த மாட்டேன், ஆனால் உண்மையாக வேறு ஒரு கவர் மட்டும் உபயோகிக்கிறேன்." இது பாதுகாப்புக்காக அல்ல. அது பணம் வைக்கும் கவர்.

"எனக்கு கார்டு, பணம் வைக்க இடம் தேவை என்பதால் தான் அதனைப் பயன்படுத்துகிறேன்" என்கிறார் ஹாமில்டன் .

"அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தியது."

"கொரில்லா கிளாஸ் ஐபோனுக்காக கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் சமீபத்திய மாடல்கள் 'நானோ-செராமிக் படிகங்களால்' செய்யப்பட்ட 'செராமிக் ஷீல்ட்' என்ற கார்னிங் கிளாஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன. ஐபோன் 16-க்கான செராமிக் ஷீல்டின் சமீபத்திய மாடல், வேறு எந்த ஸ்மார்ட்போனின் கண்ணாடியிலும் கிடைக்கும் கண்ணாடியைவிட '2 மடங்கு கடினமானது' என்று ஆப்பிள் கூறுகிறது.

"அந்த படிகங்களும் அயனிகளும் என்னை மொபைல் கவருக்கு பணம் செலவிடாமல் காப்பாற்றுவதாக நீங்கள் நினைக்கலாம், ஆனால் உற்பத்தியாளர்கள் கலவையான செய்திகளை தெரிவிக்கிறார்கள்.

பீங்கான்களின் அதிசயக் கூறுகளால் உருவாக்கப்பட்ட போனை, ஆப்பிள் நிறுவனம் உங்களிடம் விற்கும். ஆனால் ஆப்பிள் லோகோவுடன் முத்திரையிடப்பட்ட ஒரு கவரை உங்களுக்கு விற்பனை செய்வதிலும் அந்நிறுவனம் மகிழ்ச்சி அடைகிறது. எனது ஐபோன் விற்பனையாளர் 49 டாலர் (38 யூரோவுக்கு) ஒரு அழகான நீல நிற கவரைப் பாருங்கள் என்று பரிந்துரைத்தார். அப்படியென்றால், ஐபோனுக்கு கவர் தேவையா? ஆப்பிள் நிறுவனம் அப்படி கூறவில்லையே என்று கேட்டதற்கு, ஒரு விற்பனையாளர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

மறுபுறம் போன்களுக்கான கவர்களை உற்பத்தி செய்யும் ஸ்பைஜென், இதுகுறித்து பேசுவதில் மகிழ்ச்சியடைந்தது. ஸ்பைஜென் செய்தித் தொடர்பாளர் ஜஸ்டின் மா கூறுகையில், "ஃபோன்கள் முன்னெப்போதையும் விட வலிமையாக உள்ளன என்பது உண்மைதான். ஆனால், இந்த முன்னேற்றங்கள் இருந்த போதிலும், அவை எப்போதும் விபத்துகளில் சிக்க நேரிடுகிறது," என்கிறார்.

ஸ்மார்ட்போனுக்கு கவர் அவசியமா?

பட மூலாதாரம்,APPLE

ஆனால் ஜஸ்டின் கட்டாயமாக போனுக்கு ஒரு கவர் தேவை என்று கூற மாட்டார்.

"எல்லா போனுக்கும் ஒரு கவர் தேவை எனக் கூறுவோம் என்று நீங்கள் எதிர்பார்க்கலாம். ஆனால் உண்மையில், அது ஒவ்வொருவரின் தேவைக்கும் விருப்பங்களுக்கும் ஏற்ப மாறுபடும்," என்கிறார் அவர்.

சிலர் கவர் இல்லாமல் போனின் பயன்பாட்டை அனுபவிக்க நினைக்கிறார்கள். சிலர் அதிகபட்ச பாதுகாப்பை விரும்புகிறார்கள். மற்றவர்கள் அழகுக்காகவே கவர் பயன்படுத்த நினைக்கிறார்கள்.

ஒவ்வொருவரின் காரணம் எதுவாக இருந்தாலும், அதிகமான மக்கள் போனுக்கு கவர் பயன்படுத்துகிறார்கள்.

ஜஸ்டின் கூற்றின் படி, ஸ்பைஜென் தயாரிக்கும் கவர்கள் மட்டும் 100 மில்லியன் சாதனங்களில் பயன்படுத்தப்படுகின்றன.

'Towards Packaging' என்ற ஆலோசனை நிறுவனம் வெளியிட்ட தகவல்படி, 2024ஆம் ஆண்டில் உலகளாவிய ஃபோன் கேஸ் சந்தை கிட்டத்தட்ட 25 பில்லியன் டாலர்கள் (19 பில்லியன் யூரோ) மதிப்பைத் தொட்டுள்ளது.

சமையலறையில் நின்று ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்துக்கொண்டே, தூங்கச் செல்வதற்கு முன் சற்று நேரம் தொலைபேசியை உபயோகிக்கலாம் என நான் நினைத்தேன்.

போனை பாக்கெட்டிலிருந்து இழுத்தபோது, எனது விரல்கள் நழுவின. பளபளப்பான எனது ஐபோன் காற்றில் சுழன்று, குளிர்சாதனப் பெட்டியின் அருகே மோதி, எனது காலடியில் விழுந்தது. நான் அதனை எடுத்துப் பார்த்தபோது எனது ஃபோன் நன்றாகவே இருந்தது .

அதற்கு வலிமையான கண்ணாடியோ, ஒரு வேளை அதிர்ஷ்டமோ அல்லது எனது மென்மையான லினோலியம் தரையோ காரணமாக இருக்கலாம்.

ஐபோன் கவர்களைப் பயன்படுத்தாத வடக்கு கரோலினாவைச் சேர்ந்த தம்பதியரில் ஒருவரான ஜோன்னா வாலண்டேவைப் பொருத்தவரை, ஒருவர் கவர் இல்லாமல் தொலைபேசியை உபயோகிப்பது, அறிவியல் மற்றும் அந்தஸ்தைப் பற்றியதல்ல.

"நான் கடைசியாக ஃபோன் வாங்கும்போது, என் மகள் அதற்காக இளஞ்சிவப்பு நிறத்தைத் தேர்ந்தெடுத்தாள். அவள் அதைக் கண்டு ஆனந்தப்பட்டதால், அதற்கு மேல் ஒரு கவர் போட நான் விரும்பவில்லை," என்கிறார் அவர்.

அதன் பிறகு போனுக்கு கவர் வாங்குவது குறித்து வாலண்டே சிந்திக்கவில்லை. பின்னர், கவர் இல்லாமல் இருப்பது தன் ஃபோனுடன் உள்ள உறவை மாற்றிவிட்டதென அவர் உணர்ந்தார்.

"எனது விரல்களின் மூலம் நான் ஃபோனை பிடிப்பதால், அதைப் பற்றிய விழிப்புணர்வு எனக்குள் அதிகரிக்கிறது," எனக் கூறும் அவர்,

"இது தொலைபேசி பற்றிய எனது கவனத்தை அதிகப்படுத்தியுள்ளது. முன்பு போல் கண்மூடித்தனமாக அதில் மூழ்குவதில்லை. நான் இதைச் சொல்வதை என்னாலே நம்ப முடியவில்லை, ஆனாலும் உண்மையில் நான் இப்போது ஃபோனை குறைவாக பயன்படுத்துவதாக உணர்கிறேன்"என்கிறார்.

வாலண்டே சொல்வதைக் கேட்க நன்றாக இருக்கலாம், ஆனால் அதையே என்னால் கூற முடியாது. நான் முன்பு இருந்ததைப் போலவே இணையத்தை எப்போதும் பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கிறேன்.

ஒரு துளி

நான் வேலைக்குச் சேர்ந்த புதிதில், Consumer Reports என்ற இதழில் நான் பணிபுரிந்தேன். அங்கே ஒரு முழுமையான ஆய்வகம் இருக்கிறது, இதில் பொறியாளர் குழுக்கள் கிட்டத்தட்ட 90 ஆண்டுகளாகப் பொருட்களை மதிப்பீடு செய்யவும் விமர்சிக்கவும் அறிவியல் சோதனைகளை வடிவமைத்துள்ளனர். என் அலுவலகத்துக்கு அருகே, பல ஆண்டுகளாக ஃபோன்களை மதிப்பீடு செய்து வரும் ஒரு குழு இருந்தது. தொலைபேசிகளின் வலிமையைச் சோதிக்க Consumer Reports அவற்றை உடைக்கும் முறைகளைப் பயன்படுத்துகிறது. இதுகுறித்த உண்மையைக் கண்டுபிடிக்க ஒருவரால் முடியும் என்றால், அது நான் இதற்கு முன்பு பணிபுரிந்த நிறுவனத்தின் சக ஊழியரான ரிச் பிஸ்கோதான்.

"நாங்கள் இதை 'டிராப் டெஸ்ட்' (கீழே நழுவ விட்டு சோதனை செய்வது) என்று அழைக்கிறோம்," என்கிறார் நுகர்வோர் அறிக்கைகளின் மின்னணு சோதனைத் துறைத் தலைவர் ரிச் பிஸ்கோ.

"போன்கள் மூன்று அடி நீளமுள்ள, இருபுறங்களிலும் கான்கிரீட் பலகைகள் உள்ள உலோகப்பெட்டிக்குள் வைக்கப்படுகின்றன. பின்னர் அந்த பெட்டி 50 முறை சுழலும், ஒவ்வொரு முறையும் தொலைபேசி கான்கிரீட்டில் மோதி விழும்."

சோதனை முடிந்ததும், ஒரு பொறியாளர் அவற்றை பரிசோதிக்கிறார். "அது சேதமின்றி தப்பித்தால், அந்த ஃபோனை மீண்டும் பெட்டிக்குள் வைத்து, இன்னும் 50 முறை சோதனை நடத்துகிறோம்," என்று கூறுகிறார் பிஸ்கோ.

ஸ்மார்ட்போனுக்கு கவர் அவசியமா?

பட மூலாதாரம்,ISA ZAPATA

படக்குறிப்பு,கவர் இல்லாமல் போன் உபயோகிப்பது சமூக அந்தஸ்தாக பார்க்கப்படுகிறது

"டிராப் முறை சோதனைகள் முதலில் தொடங்கிய காலத்தில், மூன்றில் ஒரு பகுதி போன்கள் தோல்வியடையும்" என்கிறார் பிஸ்கோ.

"ஆனாலும், பல ஆண்டுகளாக டிராப் சோதனையில் தோல்விடையும் போன்களைக் காண முடிவதில்லை. கண்ணாடியின் தரம் மிகவும் மேம்பட்டிருக்கிறது. அவை மிகவும் சிறப்பாக செயல்படுவதாகத் தோன்றுகிறது" என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

"அதாவது, திரையில் கீறல் ஏற்படாது என்று நான் கூறவில்லை. போனை நேரடியாக கீழே போட்டாலும், அல்லது அது ஒரு சிறிய கல்லில் விழுந்தாலும், அதற்கு விடையளிக்க வேண்டிய நேரம் வரும். ஆனால், நீங்கள் தெருவில் நடந்து செல்லும்போது உங்கள் பாக்கெட்டிலிருந்து உங்கள் தொலைபேசி விழும்போது, அது உடைவதற்கான வாய்ப்பு குறைவு" என்று ஃபிஸ்கோ கூறுகிறார்.

"உண்மையில், இப்போது நீங்கள் ஒரு போன் கவர் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. ஆனால் உண்மையான கேள்வி என்னவென்றால், நீங்கள் கவர் இல்லாமல் போன்களை பயன்படுத்தும் அபாயத்தை எதிர்கொள்ள தயாரா என்பது தான்?

ஒவ்வோர் ஆண்டும் பல்வேறு ஃபோன்கள் டிராப் டெஸ்டில் தேர்ச்சி பெறுவதைக் காட்டும் முடிவுகளை ஃபிஸ்கோ வெளியிட்டாலும், அவர் இன்னும் தனது சொந்த ஃபோனை ஒரு கவரில் பாதுகாத்து வைத்திருக்கிறார்.

"நிச்சயமாக நான் போனுக்கு கவர் பயன்படுத்துவேன். நான் பணத்தை இழக்க விரும்பவில்லை" என்கிறார் அவர்.

ஒரு மாதம் முழுவதும் போனுக்கு கவரில்லாமல் இருந்த 26வது நாளில், நான் அவசரமாக வெளியே புறப்பட்டேன். எனது கட்டடத்தின் படிக்கட்டுகளின் உச்சியில் நின்று, வேலைக்குச் செல்லும் வழியைச் சரிபார்க்க என் ஃபோனை எடுத்தேன். அடுத்த நிமிடம் நிழல் போல மங்கியது. ஒருவேளை நான் கவனக்குறைவாக இருந்திருக்கலாம் . என் கையில் இருந்த போன் திடீரென்று என் முன்னால் உருண்டு போனது. முதலாவது, இரண்டாவது, என மூன்றாவது படிகளில் உருளத் தொடங்கி, இறுதியில் கடைசி படிக்கட்டில் விழுந்தது. நான் அச்சத்துடனே நின்று கொண்டிருந்தேன்.

நான் அதை எடுப்பதற்காக கீழே விரைந்து சென்றேன். ஆச்சரியமாக, என் ஐபோனின் அலுமினியம் விளிம்பின் மூலையில் ஒரு சிறிய கீறல் ஏற்பட்டிருந்தது. ஆனால் அதிசயமாக, அதன் ஐபோனின் திரை பாதிக்கப்படாமல் இருந்தது.

எனது பரிசோதனையின் மீதமுள்ள நாட்களில், நான் அதை ஆபத்துக்கு உள்ளாக்காமல் பாதுகாப்பாக நடந்துகொண்டேன் .

மெட்ரோ ரயிலில் பயணிக்கும்போது, எனது போனை இறுக்கமாகப் பிடித்துகொண்டேன், அதை வெளியே எடுக்கும்போதும், உள்ளே வைக்கும் போதும் எச்சரிக்கையோடு செயல்பட்டேன், மொத்தத்தில் அதை சற்றே குறைவாகவே பயன்படுத்தினேன்.

மறுபுறம், என் நண்பருக்கு அந்தளவுக்கு அதிர்ஷ்டம் இல்லை. அடுத்த முறை நாங்கள் பூங்காவில் சந்தித்தபோது, அவருடைய தொலைபேசி எப்படி இருக்கிறது என்று கேட்டேன். "மோசம்" என்றார்.

"நான் கீழே தவற விட்டேன். போனின் முன்பக்கமும், கேமரா லென்ஸும் உடைந்துவிட்டன." என்றார்.

அதனை முதன்முதலில் முரண் என்று கூறியது அவர்தான். அவர் பழைய ஐபோன் ஒன்றைத் தான் பயன்படுத்துகிறார்.

ஒருவேளை புதிய செராமிக் திரை இருந்திருந்தால், அது அவரை காப்பாற்றியிருக்கலாம் அல்லது காப்பாற்றாமலும் போயிருக்கலாம்.

உற்பத்தியாளர்கள் உங்கள் போனின் திரைக்கு எத்தனை முறை உப்பு குளியல் முறையால் பாதுகாப்பு அளித்தாலும், கண்ணாடி என்பது உடையக்கூடியது தான்.

ஆனால் எனது கைகளை விட உறுதியான கைகள் (வசதி வாய்ப்புள்ளவராக) இருந்தால், சில அபாயங்களை ஏற்கத் தயாராக இருந்தால், ஒரு ஃபோன் கவர் என்பது உண்மையில் தேவையற்ற ஒன்று தான் என இப்போது எனக்கு உறுதியாய் தோன்றுகிறது.

போனை சோதிக்க நான் எடுத்துக்கொண்ட ஒரு மாத காலம் முடியும்போது, எனது நரம்புகள் தளர்வடைந்துவிட்டன. நான் ஒரு இறுக்கமான நுண்கயிற்றில் நடந்து கொண்டிருந்தேன்.

ஒவ்வொரு முறை போன் கீழே விழும்போதும் , அது தப்பியிருந்தாலும், அது கைகளில் இருந்து தவறி விழும் ஒவ்வொரு முறையும், அது எனக்கு ஒரு எச்சரிக்கையாகவே இருந்தது.

இறுதியில், நான் போனுக்கு கவர் பயன்படுத்தத் தொடங்கிவிட்டேன்.

ஆனால் ஒவ்வொரு முறையும் போன் கீழே தவறும்போது ஏற்படும் சாகசமான அனுபவத்தை உணர்வதற்காகவும், எனது போன் அதன் திரையில் காற்றை உணர்வதற்காகவும், அதனை அவ்வப்போது நழுவ விடுகிறேன்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c77n6g7p3j4o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.