Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"தனிக் குடித்தனம்"

இலங்கையின் யாழ்ப்பாணத்தின் மையப்பகுதியில், பரபரப்பான தெருக்கள் மற்றும் துடிப்பான கலாச்சாரத்திற்கு மத்தியில், அகநகை மற்றும் இளங்கவி என்ற புதுமணத் தம்பதிகள் வாழ்ந்தனர். புதிதாகத் திருமணமாகி, உற்சாகத்தில் மூழ்கிய அவர்கள், தங்கள் பெற்றோரின் வீடுகளின் ஆறுதலான அரவணைப்பிலிருந்து விலகி, தங்களுக்கென சொந்தக் கூடு அல்லது தனிக் குடித்தனம், "இனித்திட இனித்திடத்தான் நகைமுத்தன் எழில் அறம் நடத்துதற்கு தனியில்லம் கொண்டான்" என்று பாரதிதாசனார் கூறியது போல, கட்டுவதற்கான பயணத்தைத் தொடங்கினார்கள்.

ஆனால், அகநகையின் பெற்றோர் அதற்கு முதலில் சம்மதிக்கவில்லை, " நீ ஆரம்பத்தில் இருந்தே செல்லமாக, சுதந்திரமாக வாழ்ந்துவிட்டாய், காலையில் நேரத்துடன் கூட எழும்பமாட்டாய், அவசரமாக அரைகுறை குளிப்புடன், வாசனையை முகத்துக்கும் உடலுக்கும் அடித்து விட்டு ஸ்கூட்டரில் பல்கலைக்கழகம் போய்விடுவாய், ஒரு தேநீர் கூட ஒழுங்காகப் போடத் தெரியாது, இப்ப திருமணம் ஆகி ஒரு கிழமை தான், எப்படி தனிக்குடும்பம் போய் சமாளிப்பாய், கொஞ்சம் யோசி?" தாய் அழாக்குறையாக கேட்டாள். தந்தையும் தாய்க்கு ஒத்துப்பாடினார். ஆனால் அவளோ " இல்லை அம்மா, என்னால் முடியும், இப்ப சமையல் எல்லாம் பெரும் பிரச்சனை இல்லை, முன்னமே தயாரிக்கப்பட்ட [ரெடிமேட்] இட்டலி கலவை, தயார் செய்து பெட்டியில் அடைக்கப்பட்ட கறித்தூள், போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகள் இப்ப நகர்ப்புறத்தில் இலகுவாகப் பெறலாம். சமையல் புத்தகம் இருக்கிறது, அவர் கட்டாயம் சமையலுக்கு ஒத்துழைப்பர், அப்பா மாதிரி இல்லை?" என்று கூறிவிட்டு அப்பாவை ஒரு பார்வை பார்த்தாள், அப்பாவின் செல்லப்பிள்ளை!

"அழகே அழகே எதுவும் அழகே அன்பின் விழியில் எல்லாம் அழகே", தந்தை தன் மகளை கட்டிப் பிடித்தார். அவர் வாய் பாரதிதாசனின் பாடலை முணுமுணுத்தபடி, அவளின் விருப்பத்துக்கு ஆமா போட்டார்.

"உவந்தொருவன் வாழ்க்கை சரியாய் நடத்த

உதவுபவள் பெரும்பாலும் மனைவி ஆவாள்!

அவளாலே மணவாளன் ஒழுங்கு பெற்றான்

அவளாலே மணவாளன் சுத்தி பெற்றான்!"

மணம் கமழும் மல்லிகைக் கொடிகளாலும், வண்ணமயமான மெல்லிய காகிதப் பூவாலும் அலங்கரிக்கப்பட்ட அவர்களது அழகிய சிறிய வீட்டிற்குள் அவர்கள் காலடி எடுத்து வைத்தபோது, யதார்த்தம் அவர்களுக்குப் புலப்பட்டது. சமைப்பதில் இருந்து சுத்தம் செய்வது வரை, நிதியை நிர்வகிப்பது முதல் புது திருமண காதல் உறவை நல்ல புரிந்துணவுகளுடனும் நட்புடனும் வளர்ப்பது வரை, அவர்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திற்கும் அவர்கள் இப்போது பொறுப்பாக, தாமே இருப்பதை உணர்ந்தனர்.

ஆரம்ப நாட்களில் காதல் உணர்ச்சிகள் மற்றும் புதிய தம்பாத்திய வாழ்வின் சவால்களின் சூறாவளியில் இருவரும் தங்கள் புது அனுபவத்தைக் கண்டனர். அகநகை, தன் பெற்றோரிடம் இருந்த காலத்தில், ஒரே ஒரு செல்ல மகளாக இருந்தபடியால், சமையலறைக்குள் அதிகம் செல்லவில்லை. தன் தாயின் சமையல் திறன்களை தான் எப்படி உருவாக்கலாம் என்பதில் கவனம் செலுத்தினாள். பானைகள் முழங்க, மசாலாப் பொருட்கள் பறக்க, அவளும் இளங்கவியும் தங்களின் அரைகுறை சமையலை ருசித்தபோது இருவரும் மனம் நிறைந்த சிரிப்பைப் பகிர்ந்து கொண்டனர்.

அவர்களின் வீடு விரைவில் எரிந்த கறிவேப்பிலை மற்றும் அதிக வேகவைத்த அரிசியின் நறுமணத்தால் நிரம்பியது, ஆனால் அவர்கள் சுதந்திரமான பெரியவர்களாக, தம்பதிகளாக மாறுவதற்கான ஆரம்ப பயணத்தில் இந்த குளறூபடியான அனுபவங்களை பாடங்களாக ஏற்றுக் கொண்டனர். ஆளுக்கு ஆள் உதவி செய்து ஒன்றாக, அவர்கள் சமையல் கலையை மெல்ல மெல்ல கற்றுக் கொண்டனர், சுவைகளை பரிசோதித்தனர் மற்றும் மசாலாப் பொருட்களின் நுட்பமான சமநிலையில் தேர்ச்சி பெற்றனர்.

ஆனால் சிரிப்பு மற்றும் மகிழ்ச்சிக்கு இடையில், விரக்தி மற்றும் கருத்து வேறுபாடுகளின் தருணங்கள் வராமல் இல்லை. ஊடல் இல்லையேல் கூடலில் சுவை இருக்காது என்பது அவர்களின் வாழ்விலும் பொருத்தமாக இருந்தது.

"காதல் கொடுக்கும்; ஈர்ப்பு எடுத்துக்கொள்ளும்.

காதல் நிரந்தரம்; ஈர்ப்பு வரும் போகும்.

காதல் உளமார்ந்தது; ஈர்ப்பு உடல் சார்ந்தது"

இதை நன்கு புரிந்தவள் தான் அகநகை. அதனால் தான் என்னவோ அவளுக்கு முதலில், செல்லமான சண்டைகள், சமாதானம் பின் புணர்தல். பிரியாமல் நெடுங்காலம் நிலைத்துக் கண்ணனுடன் நின்ற ஆய்ச்சியர் [இடையர்குலப் பெண்கள்] விளையாடும் கூடல் விளையாட்டு ஞாபகம் வந்தது.

"ஊடல் கூட லுணர்தல் புணர்தலை

நீடு நின்ற நிறையுக ழாய்ச்சியர்

கூட லைக்குழற் கோதைமுன் கூறிய"

தன் சொந்த வழிகளுக்குப் பழக்கப்பட்ட பெற்றோரின், அண்ணன்மார்களின் செல்லத் திருமகள் அகநகை, வீட்டு வேலைகள் மற்றும் பழக்க வழக்கங்களில் சமரசம் செய்து கொள்வது அவளுக்கு பெரும் சவாலாக இருந்தது. இளங்கவியும் தனது பெற்றோரின் அறிவுரை மற்றும் வழிகாட்டுதலின் ஆறுதலுக்காக ஏங்கி, அவர்களின் புதிய வாழ்க்கையை சரிசெய்ய தன்னால் இயன்றவரை போராடினார்.

அகநகை: பதட்டமாகச் சிரித்தாள் "சரி, சமையல் குறிப்பு நமக்குத் தேவை... ம்ம்ம்... எவ்வளவு கறிவேப்பிலை?"

இளங்கவி : சிரித்துக்கொண்டே "ஆமாம், பார்த்து சொல்லேன்?

அகநகை: செய்முறைப் புத்தகத்தை புரட்டிப் புரட்டிப் பார்த்து, "இது ஒரு கைப்பிடி அளவு என்கிறது. ஆனால் அதிர்ஷ்டத்திற்காக இன்னும் கொஞ்சம் சேர்க்கப்போகிறேன்"

அகநகை தாராளமாக கறிவேப்பிலையை சலசலக்கும் எண்ணெயில் வீசும் போது இருவரும் ஒன்றாக கட்டிப்பிடித்துக் கொண்டு சிரித்தார்கள். அப்பொழுது அகநகை, புகை எழும்போது கண்கள் விரிந்து "அச்சச்சோ! அவை எரிகின்றன என்று நினைக்கிறேன்!" என்றாள்.

இளங்கவி: சிரித்துக் கொண்டே "அதுதான் ஸ்மோக்கி ஃப்ளேவர் [smoky flavor] சேர்க்க இப்ப எமக்கு ஒரே ஒருவழி, சரியா?"

மீண்டும் இருவரும் அரவணைத்துக் கொண்டு சிரித்தார்கள். அந்த சமையல் குளறூபடியிலும் அவர்களின் காதல் மட்டும் மாறாமல் இருந்தது. கிசுகிசுப்பான மன்னிப்புகள் மற்றும் மென்மையான வருடல்கள் மூலம், ஒருவருக் கொருவர் விசித்திரங்களையும் தனித்துவங்களையும் பாராட்ட கற்றுக் கொண்டனர். அன்றாட வாழ்க்கையின் குழப்பங்களுக் கிடையில் காதல் மலர்ந்த இடமாக அவர்களின் வீடு ஒரு சரணாலயமாக மாறியது. அப்பொழுது, அகநகையை பார்க்கும் பொழுது, இளங்கவிக்கு கி மு 200 ஆண்டை சேர்ந்த குறுந்தொகை 167 பாடல் நினைவுக்கு வந்தது.

“முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்

கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக்

குவளை யுண்கண் குய்ப்புகை கமழத்

தான் றுழந் தட்ட தீம்புளிப் பாகர்

இனிதெனக் கணவ னுண்டலின்

நுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதன் முகனே.”

கொஞ்சம் சாதத்தை பாத்திரத்தில் போட்டு, அதில் நன்கு முற்றிய கட்டியாகியிருந்த தயிரை உறியிலிருந்து இறக்கி எடுத்து விட்டு, புதிதாக திருமணம் செய்த தலைவி தன் காந்தள் மலர் போன்ற விரலால் பிசைகிறாள். பிசைஞ்சாச்சு. கைய கழுவனும். துடைக்கணும். அதுக்கெல்லாம் நேரம் இல்லை. அக்கம் பக்கம் பார்த்தாள். தன் சேலையில் துடைத்துக் கொள்கிறாள். படபடப்பு ... பழக்கம் வேறு இல்லை. தலைவன் வருவதற்குள் சமைக்க வேண்டுமே என்ற ஆவல் வேறு. விறகு வேறு ஈரமாய் இருக்கிறது. ஒரே புகை. புகை அடித்து அவள் உடல் எல்லாம் புகை வாடை அடிக்கிறது. தலைவனுக்கு புளிக் குழம்பு பிடிக்குமே என்று அதன் பின் புளிக் குழம்பும் செய்கிறாள். புளித் தண்ணியில், உப்பு, மிளகாய் தூள் எல்லாம் போட்டு விரலால் கலக்குகிறாள் என்கிறது அந்த பாடல்.

ஒரு முறை இருவருக்கும் இடையில் சிறு கருத்து வேறுபாடு ஏற்பட்டது

அகநகை: "கவி, இன்னைக்கு குப்பையை வெளியே எடுக்க ஞாபகம் இருக்கா? மறுபடியும் நிரம்பி வழிகிறது."

இளங்கவி: "ஆமாம் ஆமாம், பிறகு செய்வேன்."

அகநகை: விரக்தியுடன் "நீங்கள் எப்பொழுதும் அப்படிச் சொல்கிறீர்கள், பிறகு அது நிறைவேறாது. இப்போது உடனே செய்ய முடியுமா, தயவுசெய்து?"

இளங்கவி: "ஏன் என்னை எப்பவும் நச்சரிக்கிறே? நான் செய்வேன் என்று சொன்னேன், சரியா?"

அகநகை: "நான் நச்சரிக்கவில்லை கவி. நாம் நம் வீட்டை சுத்தமாகவும் நேர்த்தியாகவும் வைத்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், அவ்வளவு தான்."

இளங்கவி: "ஓகே, தெரியும், மன்னிக்கவும். உடனே எடுத்துவிடுகிறேன்."

அகநகையும் இளங்கவியும் திருமண வாழ்வின் ஏற்றத் தாழ்வுகளில், எல்லா பொதுவான குடும்பங்கள் போல் பயணிக்கும் போது, பெற்றோரிடமிருந்து வழிகாட்டுதலைப் பெறவும் மற்றும் ஒருவருக் கொருவர் திறம்பட தொடர்பு கொள்வதைக் கற்றுக் கொள்வும் பழகிக் கொண்டார்கள். அவர்களின் அன்பும் உறுதியும் பிரகாசிக்கத் தொடங்கி, ஒன்றாக ஒரு ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கிய பாதையை அவர்களுக்கு ஒளிரச் செய்தன.

"ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது

இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது

குங்குமச் சிலையே குடும்பத்து விளக்கே குலமகளே வருக!"

என்று இளங்கவி பாடிக்கொண்டு, அகநகையை வருக வருக என்று ஒருநாள் சாப்பாடுக்கு அழைத்தான்! ஆனால் அவளோ

"ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே

ஏன் படித்தோம் என்பதையும் மறந்து விடாதே

வம்பு செய்யும் குணமிருந்தால் விட்டிட வேணும்!"

என்று போட்டிக்கு ஒரு பாட்டு பாடி, பார்த்தாலே ஒரு பார்வை உடலுக்கும், கூடலுக்கும் அவர்களின் வாழ்வில் குறைவே இல்லை!

நாட்கள் வாரங்களாகவும், வாரங்கள் மாதங்களாகவும் மாறியபோது, அகநகையும் இளங்கவியும் தங்கள் இருவரும் உள்ளத்தால், புரிந்துணர்வால், விட்டுக் கொடுப்பால், காதலால் நெருங்கி வருவதைக் கண்டனர், அவர்கள் ஒன்றாகச் சமாளித்த சவால்கள் அவர்களது பிணைப்பை வலுவூட்டியது. அவர்கள் இனி தங்களை இரு நபர்களாகப் பார்க்கவில்லை, ஆனால் அன்பு மற்றும் தோழமையின் வாழ்நாள் பயணத்தில் பங்காளிகளாகப் பார்த்தார்கள்! தனிக்குடும்பம் தனித்துவமாக ஒளிவீசியது!!

"வண்மை உயர்வு மனிதர் நலமெல்லாம்

பெண்மையினால் உண்டென்று பேசவந்த பெண்ணழகே!

நாய்என்று பெண்ணை நவில்வார்க்கும் இப்புவிக்குத்

தாய்என்று காட்டத் தமிழர்க்கு வாய்த்தவளே!"

நன்றி

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

434403156_10224926471011800_452915405683

434381061_10224926470211780_351206280780


Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.