Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"மௌனம் சம்மதமா?"

இலங்கை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பகலவன் என்ற இளைஞன், கொழும்பின் மையப் பகுதியில், வணிக நிறுவனம் ஒன்றில் உயர் பதவியில், மிகவும் சுறுசுறுப்பாக பணிபுரிந்தான். அவனது நாட்கள் கூட்டங்கள், அறிமுகப்படுத்துகை [விளக்கக் காட்சிகள் / presentations] மற்றும் நகர வாழ்க்கையின் சலசலப்பு ஆகியவற்றால் நிரம்பி வழிந்தன. அப்படியான மும்முரமான ஒரு வேலையான நாளின் போதுதான், சமீபத்தில் அந்த நிறுவனத்தில் இணைந்து இருந்த பயிற்சி ஊழியரான மட்டக்களப்பைச் சேர்ந்த ஆழினி என்ற இளம் பெண் சிறிது நேரத்தில் தனது அலுவல்கள் பற்றிய விபரங்களை அறிந்துக் கொள்ள அவனை சந்திப்பாள் என்ற அறிவிப்பு அவனுக்கு வந்தது.

அவன் அந்த மின்னஞ்சல் [ஈ-மெயிலில்] குறிப்பிடப்பட்டிருந்த பெண்ணின் பெயரை மனதில் பெரிதாக கவனிக்காமல் மேலோட்டமாக முதலில் மெயிலை படித்திருந்தான். என்றாலும் ஒரு ஆவலால் மீண்டும் வரப்போகும் பெண்ணின் பெயரையும் மற்றும் விபரங்களையும் பார்ப்பதற்காக மின்னஞ்சலை மறுமுறை படிக்க தொடங்கினான். அதே கணத்தில், அவளும் "மன்னிக்கவும் ஐயா" என்று, அவனை சந்திக்க உள்ளே வந்தாள். அவளின் மெல்லிசை போன்ற இனிய குரல் கேட்டு திரும்பியவன், ஒரு கணம் அதிர்ச்சியில் அப்படியே உறைந்தான்.

"நான் ஆழினி, உங்கள் குழுவில் பயிற்சியாளராக இன்று பதவியேற்றேன்" என்று கூறி தன்னை அறிமுகப் படுத்தினாள். பகலவன் மௌனமாக அவளை பார்த்தபடியே இருந்தான். பின் தன்னை சமாளித்துக்கொண்டு "ஆமாம், எனக்குத் தெரியும் ஆழினி, அன்புடன் நாம் எல்லோரும் வரவேற்கிறோம், ஆனால் நீ உன் முழு நேரத்தையும் அறிவையும் எம் வணிக நிறுவனத்தைப் பற்றி முதலில் தெரிந்து கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும்" என்ற அறிவுரையுடன் அனறைய முதல் சந்திப்பு நிறைவு பெற்றது. என்றாலும் அவளின் வருகை அவன் கவனத்தை ஈர்த்தது. அவள் அதன் பிறகு தன்னை அங்கு இருந்த மற்ற ஊழியர்களுக்கு அறிமுகப்படுத்திய போது அவளது பேச்சு திறனையும் வேலையில் அவளது நம்பிக்கையையும் அவனால் கவனிக்காமல் இருக்க முடியவில்லை. அந்த நிமிடத்திலிருந்து, பகலவன் தன்னால் முடிந்த போதெல்லாம் ஆழினியின் பார்வையைத் தன்பக்கம் திருடத் தொடங்கினான். காதல் ஒன்றை மனது உச்சரித்த மாத்திரத்தில், இதயத்தின் உள்ளுக்குள் உயிர் பூக்கச் செய்யும் என்ற பலர் சொல்லி கேட்டதை அன்றே, அவளை பார்த்தபின் அவன் உணர்ந்தான்! ஏதேதோ எல்லாம் அவன் வாய் மௌனமாக முணுமுணுத்தது.

நாட்கள் வாரங்களாக மாற, பகலவன் மற்றும் ஆழினியின் தொழில் சம்பந்தமாக தொடர்புகள் சாதாரண உரையாடல்களாக, முதலாளி மற்றும் ஊழியர் நிலையில் உருவெடுத்தன. என்றாலும் அவர்கள் இருவரும் தங்களுக்குள் எதோ ஒரு ஈர்ப்பு மற்றும் பொதுவான ஆர்வங்கள் இருப்பதை உணர்ந்தனர். அதை கண்டும் காணாததுமாக சிலவேளை நகைச்சுவைகளைப் பரிமாறிக் கொண்டனர், அவர்களின் நடத்தைகள் படிப்படியாக வலுவான நட்பை இருவருக்கும் இடையில் உருவாக்கியது. ஆழினியின் நெருக்கம் மற்றும் அவளின் புத்திசாலித்தனம் ஆகியவற்றால் பகலவன் தன்னை அறியாமலே அவள் மேல் ஈர்க்கப்பட்டான், அவளிடம் ஏதோ ஒரு சிறப்பு, கவர்ச்சி இருக்கிறது என்ற உணர்வை அவனால் அசைக்க முடியவில்லை.

"தேவதையை நான் பார்த்தேன்

சொர்க்கம் அவளில் கண்டேன்

இடையோடு இசைந்தாடும்

குழலோடு விளையாடி அவள்

இதழோரம் தேன்குடிக்க துடித்தேன்!"

"விழியோடு வளைந்தாடும் புருவத்திலும்

மார்போடு கோலமிடும் மாலையிலும்

காதோடு கவி பாடும் தோட்டிலும்

மணிக்கட்டில் முத்தமிடும் வளையலிலும்

என் இதயத்தை தொலைத்தேன்!"

மீண்டும் ஒரு நாள் அலுவலக உணவு விடுதி ஒன்றில் இருவரும் சந்தித்தனர். பகலவன், ஆழினி இருவரும் எதிரெதிரே அமர்ந்து, அலுவலகத்தின் சலசலப்புக்கு மத்தியில் மதிய உணவு இடைவேளையை சாப்பாட்டிலும் கதைப்பதிலும் பொழுது போக்கினார்கள்.

பகலவன்: "அப்படியானால், ஆழினி, இன்று இரவு உணவிற்கு அந்த புதிய இத்தாலிய பீட்சா & பாஸ்தா [Pizza & Pasta] உணவகத்துக்கு போவது பற்றி நீ என்ன நினைக்கிறாய்? நகரத்தில் சிறந்த பாஸ்தா அவர்களிடம் இருப்பதாக நான் கேள்விப்பட்டேன்."

ஆழினி, ஒரு புன்னகையை மிளிரச் செய்தாள்: "அங்கு மக்கள் தொகை கூட, ஆரவாரமாக இருக்கும், பகலவன், ஆனால் நம் வழக்கமான அந்த சின்ன உணவகத்துக்கே போனால் என்ன? அங்கே எமக்கு சுதந்திரமான சூழ்நிலை உண்டு. மற்றவர்களின் பார்வையும் இடைஞ்சலும் இருக்காது, அது தான் எனக்கு மிகவும் பிடிக்கும், உங்களுடன் தனிமையில் ரசித்து பேச, சாப்பிட"

பகலவன், சற்று ஏமாற்றத்துடன்: "நிச்சயமாக, ஆழினி. உன் விருப்பமே என் விருப்பம்."

அவர்கள் உரையாடலைத் தொடரும் போது, ஆழினி தன்னிடம் நெருங்கி சாய்ந்த நுட்பமான விதத்தை பகலவன் கவனித்தான். அவள் கண்கள் குறும்புகளால் மின்னின. என்றாலும் அவளிடம் ஒரு காதலின், நட்பின் நம்பிக்கையின் அடையாளத்தைக் அவனால் உணர முடியவில்லை, ஆனாலும் அவளுடைய கவர்ச்சிகரமான, காதல் உணர்வுகளைத் தூண்டும் செயல்களை தவறாகப் புரிந்துகொள்வதில் அவன் எச்சரிக்கையாகவே இருந்தான்.

அவர்களது அலுவலக எல்லைக்கு வெளியே, பகலவனும் ஆழினியும் தங்கள் நம்பிக்கைகள், கனவுகள் மற்றும் அச்சங்களைப் பகிர்ந்து கொள்ளும் போது, கொழும்பின் பரபரப்பான வீதிகளில் அல்லது கடற்கரையில் ஒன்றாக உலாவி, அடிவானத்திற்குக் கீழே சூரியன் மறைவதைப் பார்த்து ரசித்தார்கள். அந்த மங்கலான இருட்டு அவர்களின் நெருக்கத்துக்கும் வழிவகுத்தன. ஆழினியுடன் செலவழித்த ஒவ்வொரு நொடியும் பகலவனுக்கு ஒரு பொக்கிஷமாக இருந்து, ஒவ்வொரு நாளும் அவள் மீது அவன் ஆழ்ந்த காதலில் மேலும் மேலும் விழுந்தான். ஆனால், அவள் சாதுரியமாக எந்த சந்தர்ப்பத்திலும் கவனமாக, மனம் விட்டு தன் காதலை தெரிய படுத்தா விட்டாலும், நெருக்கமாக பழகுவதில் என்றும் பின்வாங்கவில்லை?

ஒரு நாள், அந்தி சாயும் நேரத்தில் பகலவனும் ஆழினியும் கொழும்பு கடற்கரையில் அருகருகே கைகோர்த்து, அவன் மார்பில் அவள் சாய்ந்து, சூரியன் அடிவானத்தில் அஸ்தமிப்பதைப் பார்த்துக் கொண்டு நடந்தார்கள். அப்பொழுது மெல்லிய குளிர் காற்று அவர்களின் தலைமுடியை தொட்டு அசைத்து சென்றது. இருவரும் ஒரு பாறையில் அமர்ந்தார்கள், அவள் அவன் மடியில் தலை சாய்ந்து படுத்தபடி,

ஆழினி, தனது மென்மையான கைகளால் அவனை வருடியபடியும் சிந்தனையுடனும்: "அழகா இல்லையா பகலவன்? வானம் வண்ணங்களின் கோலமாக மாறி, அமைதியான உணர்வை எமக்குள் தருகிறதே!"

பகலவன் அவள் வார்த்தைகளில் மெய்மறந்தான், அவளின் கன்னத்தை தட்டிக் கொடுத்தபடி : "ஆமாம், அது உண்மைதான். ஆனால் அதைவிட அழகானது எது தெரியுமா? இங்கே என் மடியில் பூத்துக்குலுங்கும் அழகாக நீ இருப்பது, இந்த தருணத்தை இன்னும் மாயாஜால மாக்குகிறது அன்பே!"

ஆழினி, பகலவன் மீது அவளது பார்வையை திருப்பி, அவனின் முடியை வருடியபடி : "உனக்கு எப்பொழுதும் இனிமையான விஷயங்களைச் சொல்லத் தெரியும். சில சமயங்களில், என் மனதைப் நீ படிக்க முடியுமா என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது." என்றாள்.

பகலவனின் இதயம் துடித்தது, அவன் அவளை அணைத்து தூக்கி ஆழினியின் காதில் ரகசியமாக : "ஒருவேளை என்னால் முடியும், ஆழினி. ஒருவேளை என்னால் முடியும்." என்றான்.

ஆனால், அவன் அப்படி முடியும் முடியும் என்று சொன்னாலும், அவர்களது எதிர்காலத்தைப் பற்றி விவாதிக்க ஆழினியின் தயக்கம், அவளது உணர்வுகளின் உண்மையான தன்மையைப் புரிந்துகொள்ள முடியாமல் அமைதியற்றவனாக பகலவன் காணப்பட்டான்!

அவர்களுக்கு இடையே மறுக்க முடியாத, மறைக்க முடியாத வெளிப்படையான தொடர்பு இருந்த போதிலும், ஆழினியிடம் எதோ ஒரு மர்மம் மறைக்கப்பட்டு. அங்கு அவளிடம் நிலைத்திருந்த நிச்சயமற்ற தன்மையை பகலவனால் பல நேரங்களில் உணர முடிந்தது. அவர்களது உறவைப் பற்றி அவன் பேசும் போதெல்லாம், ஆழினி ஒரு மென்மையான புன்னகையுடன் அல்லது ஒரு ரகசியக் கருத்துடன் உரையாடலைத் தவிர்த்துக் கொண்டே வந்தாள். அவளது மௌனம் அவனைத் திகைக்க வைத்தது, அவள் அவனது உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டாளா அல்லது வெறுமனே கற்பனை செய்து கொண்டிருக்கிறாளா என்று அவனை வியக்க வைத்தது.

உணர்ச்சிகளின் சூறாவளியில் சிக்கிய பகலவன், "மௌனம் சம்மதமா?" என்று தெரியாமல் அவதிப்பட்டான். ஆழினி அவர்களின் எதிர்காலத்தைப் பற்றி விவாதிக்கத் தயங்குவது, அவள் அவனுக்கு எதோ சொல்ல முற்படுகிறாளா அல்லது அவளது சொந்த தயக்கத்தின், வெட்கத்தின் அடையாளமா என்று அவனால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.

அவர்களது உறவில் நிச்சயமற்ற நிலை, நிலவிய போதிலும், அவர்கள் ஒன்றாகப் பகிர்ந்துகொண்ட தருணங்களில் பகலவன் ஆறுதல் அடைந்தான். தங்களுக்குப் பிடித்தமான உணவகத்தில் உணவைப் பகிர்ந்து கொண்டாலோ அல்லது சுகமான மௌனத்தில் ஒருவரையொருவர் சகஜமாக அனுபவிப்பதாலோ, ஆழினியுடன் செலவழித்த ஒவ்வொரு நொடியையும் அவன் உண்மையில் நேசித்தான்.

ஒரு நாள் பகலவனும் ஆழினியும் மேலதிகமாக வேலை செய்ய வேண்டிய நிலை வந்தது. அவர்களைத் தவிர அலுவலகம் முழுவதும் வெறிச்சோடிக் கிடந்தது.

ஆழினி, மௌனத்தைக் கலைத்தாள்: "பகலவன், நமக்கு எதிர்காலம் என்னவாகும் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? நாம் நண்பர்களாக மட்டுமே இருக்க வேண்டியிருக்கிறோமா அல்லது அங்கே நமக்காக இன்னும் ஏதாவது காத்திருக்கிறதா?" என்றாள்.

பகலவன், அவளின் இந்த திடீர் பேச்சால் திகைத்தான், மகிழ்ந்தான்: "நான் அதைப் பற்றி யோசித்தேன், ஆழினி. ஆனால் ஒவ்வொரு முறையும் நான் நம் எதிர்காலத்தை கதைக்க முயற்சிக்கும் போது, உன் மௌனம், அதை ஒரு கணப்பொழுது கனவைப் போல உணர்ந்தேன், ஆனால் நான் உண்மையில் உன்னைக் காதலிக்கிறேன், மனைவியாக நீயே என்று நினைக்கிறன்! "

ஆழினி, அவள் பெயருக்கு ஏற்ற, இனிய கடல் பரப்பின் தலைவி தான்! அவள், அவனிடம் எங்கும் கடல் போல் பரந்து இருந்தாலும், அவளின் மனதின் ஆழத்தை, கடலின் ஆழம் போல், அறிய முடியாத மர்மமாகவே இருந்தாள். : "சில கனவுகள் அப்படியே இருந்து விடும்! பகலவன், எனவே நாளை என்ன வரக்கூடும் என்பதைப் பற்றி கவலைப்படாமல், இப்போது இருக்கும் எங்கள் தருணங்களை, நாங்கள் ஒன்றாக அனுபவித்து ரசிப்பது நல்லதே!" என்றாள்.

பகலவன், அவன் எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் பகல்செய்வோன், தன் செயல்களை, சொற்ககளை வெளிச்சத்தில் காட்டுபவன் அவளின் இந்த நிச்சயமற்ற வார்த்தையால் அவன் இதயம் கனக்க : "ஆனால் நாளை வரவே இல்லை என்றால் என்ன செய்வது, ஆழினி? என்றான்.

அவள் அதற்கு மறுமொழி சொல்லவில்லை. மௌனமாக இருந்துவிட்டாள். ஆழினி அவர்களின் எதிர்காலத்தைப் பற்றி விவாதிக்கத் தயங்குவது அவளது உள்ளக் கொந்தளிப்பின் பிரதிபலிப்பா என்று பகலவன் ஆச்சரியப் பட்டான். அவள் தன் குடும்பத்தில் இருந்து தூரத்தில் அல்லது விலகி இருப்பதால், அதை ஒரு சாக்காகப் பயன்படுத்தி, தன்னுடன் அவள் மாயமான, நிரந்தரமற்ற காதல் நட்பு உறவில் பொழுது போக்காக ஈடுபட முயல்கிறாளா அல்லது இன்னும் ஏதாவது அவளைத் தடுத்து நிறுத்துகிறதா, அல்லது அவள் இன்னும் எதிர்கொள்ளத் தயாராக இல்லையா ? அவன் மன அலை ஓயவில்லை!

என்றாலும் பரபரப்பான கொழும்பில் காதல் மற்றும் நட்பின் சிக்கல்களை, ஒரு நாள், ஆழினி தனது மௌனத்தைக் கலைத்து, தான் ஏங்கிய பதிலைத் தருவாள் என்று பகலவன் நம்பிக்கையுடன் இருந்தான்.

அவளின் "மௌனம் சம்மதமா?" என்று அவனைக் கேட்டால், அவனின் பதில் ஆமா மட்டுமே, அந்த நம்பிக்கையில் தான் அவன் இன்னும் அவளுடன் நெருங்கி பழகுகிறான், ஆனால் அவள் ? நாம் அறியோம் பராபரமே!

நன்றி

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

434479725_10224952356418919_102646444865

434591494_10224952355778903_820735231010


Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.