Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"வீட்டு வேலைக்காரி"

மன்னார், முல்லைத்தீவு, அனுராதபுரம், திருகோணமலை ஆகிய மாவட்டங்களை எல்லைகளாக கொண்டும், வவுனியாவின் எந்தப் பக்கமும் கடலின் வாடை இல்லது இருந்தாலும், ஆங்கங்கே குன்றுகளும், பரந்து விரிந்த எண்ணற்ற செழிப்பான குளங்களும், காடுகளும், இருப்புகளும், ஊர்களும், ஓடைகளும், கட்டுகளும், கரைகளும், கற்களும், குழிகளும், சூரிகளும், சோலைகளும், தாழிகளும், தோட்டங்களும், வயல்களும் பள்ளங்களும் மற்றும் பனையும் தென்னையும் குடை பிடித்து நிழலோடு வளம் தரும் நிலப்பரப்பையும் கொண்டும் உள்ள அந்த நகரத்தில் கலா என்ற பெண்மணி வாழ்த்து வந்தார். இப்பகுதியில் உள்ள பலரைப் போலவே அவரது வாழ்க்கையும் கஷ்டங்கள் மற்றும் நெகிழ்ச்சியின் இழைகளால், குறிப்பாக 2009 இன் பின் பின்னப்பட்டது. ஒரு காலத்தில் அமைதியான இடமாக இருந்த வவுனியா ஒரு கொந்தளிப்பான கடந்த காலத்தின் வடுக்களை இன்று சுமந்து இருக்கிறது. அங்கு குடும்பங்கள் மோதலால் பிளவுபட்டு, சோகத்தையும் நிச்சயமற்ற தன்மையையும் இன்று விட்டுச் சென்றுள்ளன.

கலாவுக்கு கஷ்டங்கள் புதிதல்ல. இலங்கை இராணுவம் தனது கணவரை விசாரணைக்கு என அழைத்துச் சென்ற போது இளம் வயதிலேயே விதவையான அவர், பொறுப்பின் பாரத்தை அன்றில் இருந்து தனியாக சுமந்து கொண்டு இருக்கிறார். இரண்டு சிறு குழந்தைகளை வளர்த்து படிக்கவைக்க வேண்டி இருப்பதால், வசதி படைத்தவர்களின் வீடுகளில் வீட்டுப் பணிப் பெண்ணாக வேலை தேடுவதைத் தவிர அவருக்கு வேறு வழி தெரியவில்லை.

அவரின் பிள்ளைகள் படிக்கும் ஆரம்ப பாடசாலை ஆசிரியை, தனக்குத் தெரிந்த ஒரு இடத்தில் வீட்டு வேலை இருக்கு, ஆனால் ' வேலையில சுத்தம் வேணும். நேர்மை வேணும். சரியான நேரத்துக்கு வந்து வேலை பாக்கணும்' என்பது அவர்களின் எதிர்பார்ப்பு என்று கூறினாள். “எவ்வளவு சம்பளம் தருவாங்க?” என்று கலா இழுத்தாள். இன்றைய நாட்டு நடப்பின் படி தருவாங்க என்று சொல்லிவிட்டு, " விரும்பினால் போய்ப்பார், நான் தந்தது என்று சொல்லு" என்று கூறிவிட்டு, வீட்டு விலாசத்தையும் கொடுத்தார்.

அன்று இரவு, மீண்டும் மீண்டும் விலாசத்தைப் பார்த்தாள். வெளியில் பெய்த மழை, உள்ளே படுக்கையில் குளிர்ந்தது. உடலும்; மனமும் போர்வையில் சுருண்டுக் கொள்ளும் சுகத்தைக் கோரின. என்றாலும் நாளை காலை நேரத்துடன் எழும்ப வேண்டும் என்பதால், கடிகாரத்தில் அலாரம் வைத்தாள். அதன் பின் படுத்துக் கொண்டு இமைகளை மூடினாள். நித்திரை வருவதற்கு பதில், காலை செய்ய வேண்டிய வேலைகளின் பட்டியலே நினைவில் நீண்டது. என்றாலும் ஒருவாறு கொஞ்ச நேரத்தின் பின், பாயில் அயர்ந்து தூங்கினாள்.

அன்று காலை, அவளின் உடலுக்குள் ஓர் உயிரியல் அலாரம் இருந்தது போல, தன்பாட்டில் கண்விழித்து அவள் எழுந்தபோது, அலாரம் இன்னும் அலரவில்லை! அலருவதற்கு இன்னும் சில நிமிடங்கள் எஞ்சியிருந்தன. ‘இன்றைக்கு நீ அலர வேண்டாம்’ என்பதுபோல், அலாரத்தினை நிற்பாட்டினாள்.

கலா வேலைக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்த போது பிள்ளைகளின் அறையில் இருந்து எதோ அரவம் கேட்டது. அவளின் குடிசை ஒரு அறை மட்டுமே, கலா அறைக்கு வெளிய, ஆனால் குடிசைக்குள் உள்ள சிறு விறாந்தையில் தான் படுப்பாள். அது தான் பிள்ளைகளின் படிப்பு அறையும் கூட. கலா பிள்ளைகளின் படுக்கையறைக்குள் எட்டிப் பார்த்தாள். அங்கே நித்திரையில் வரைந்த ஓவியத்தைப் போல் அலங்கோலமாய் இருவரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.

பக்கத்து வீட்டு நண்பியிடம் பிள்ளைகளைப் பார்க்கும்படி சொல்லி விட்டு, நேர்த்தியாக உடையணிந்து, சாதாரண சிவப்பு நிற புடவையில், தலை முடியில் எண்ணெய் தடவி பின்னப்பட்ட கூந்தலுடன், அவள் தனது வீட்டு வேலைக்கான பணியிடத்தை, சூரியன் அடிவானத்தில் எட்டிப் பார்ப்பதற்கு முன்பே, அங்கு அடைய குறுகிய மண் தெருக்களின் வழியாகச், சாலையோர மரங்களுடன் சஞ்சரித்துக் கொண்டு இருக்கும் காற்றிடமும், விவாசயிகளின் உழைப்பை உரைக்கும் சேற்றிடமும் இயற்கையின் எழிலை அனுபவித்தவண்ணம் சென்றாள். அவள் பணிபுரியும் அந்த மாளிகை அவளுடைய தாழ்மையான குடிசைக்கு முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது, அதன் பிரம்மாண்டம் அவளுடைய வாழ்க்கையின் எளிமையை மறைத்தது.

அவள் தன் நண்பிகளிடமும் மற்றும் செய்திகள் மூலம் கேள்விப்படத்தில், சில நிஜ வாழ்க்கை வீட்டுப் பணியாளர்கள் அவர்களின் பணக்கார முதலாளிகளால் மோசமாக நடத்தப்படுகிறார்கள் என்றும் ஆனால் பல கற்பனையான கதைகளில், இலக்கியங்களில், அதற்கு மாறாக வேலையாட்கள் அவர்களின் முதலாளிகளால் நன்றாக நடத்தப்படுகிறார்கள் என விபரிப்பதையும் அறிந்து இருந்தாள். அதனால்த் தான், அந்த மாளிகையைப் பார்த்ததும் மனதில் ஒரு தயக்கம் அவளுக்கு வந்தது. என்றாலும் எல்லோரும் அப்படி இல்லை என்று அதே மனம் அவளுக்கு ஆறுதலும் கொடுத்தது, அதிகமான கற்பனைக் கதைகளில் காணப்படுவது போல!

என்றாலும் நாட்கள் நகர, நகர, குடிசையில் அவள் அனுபவிக்கும் அன்பும் ஆறுதலும் இங்கு அவள் காண்பதே இல்லை என்பதை உணர்ந்தாள். அது ஒரு கற்பனை கதையாகவே, கனவாகவே இருந்துவிட்டது. உள்ளே, அவளுடைய கைகள் சளைக்காமல் எந்த நேரமும் எதோ ஒரு வேலை இருந்து கொண்டே இருக்கும். அவளின் வாழ்க்கை அங்கு ஒரு இயந்திரம் போலத்தான் எந்த நேரமும் சுழன்று கொண்டு இருந்தது.

அவள் பணியாற்றிய குடும்பம், அவள் அங்கு தினம் நேரத்துடன் போனாலும், அதைப் பெரிதாக பொருட்படுத்துவதில்லை. ஏன் அவளை குறைந்தது ஒரு புன்சிரிப்புடனாவது பாராட்டுவதில்லை. அவர்களின் வார்த்தைகள், செய்கைகள் பொதுவாக மனச்சோர்வு தரக் கூடியதாகவும் மற்றும் அது அலட்சியத்துடனும் இருந்தன. அவர்களைப் பொறுத்தவரை, அவர்களின் வசதியான வாழ்வுக்கு, எடுபிடி வேலைகளுக்கு கூலிக்கு ஒத்தாசை புரியும் எந்திரம் தான் அவள். அவர்கள் ஒவ்வொரு பணியிலும் பரிபூரணத்தைக் கோரினர், ஆனால் அவளுடைய சோர்வுற்ற கண்களுக்குப் பின்னால் உள்ள மனிதாபிமானத்தை அடையாளம் காணத் தவறிவிட்டனர். ஆனால், தினமும் வரவேண்டும், சுத்தமாய் இருக்கவேண்டும் என்பதை அழுத்தமாய் சொல்லிவிட்டு, லீவு வேண்டுமென்றால் முன்கூட்டி சொல்லிவிட்டுத்தான் எடுக்க வேண்டும் என்றும் கறாராகச் சொல்லிவைத்தாள் வீட்டுக்காரி அம்மா.

அனால், கலா மென்மையாகப் பேசுகிறாள், அவளது பதில்கள் நிதானமாக அளவுடன் வருகிறது. அவள் வவுனியாவில் உள்ள ஒரு கிராம பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை மட்டும் தான் படித்தவள். குடும்பச் சூழல் இடையில் நிறுத்தி விட்டது. கலாவின் தந்தை வயல் வேலைகள் செய்வதுடன் கொஞ்ச மாடுகளையும் வளர்த்தார், தாய் அவருக்கு துணையாக நின்றார். கலா மாடுகளை கவனிப்பதுடன் வீட்டு வேலைகளும் செய்தார். அப்பொழுது அவர்களுக்கும் பஞ்சம் என்று ஒன்று இருப்பதே தெரியாத காலம் அது. கலா பாடசாலையால் நின்று விட்டாலும், வாசிப்பதில் என்றும் நிற்கவில்லை. அருகில் உள்ள நூல்நிலையத்தில், ஓய்வு நேரங்களில், பல புத்தகங்கள் வாசிப்பாள் .

ஒருமுறை அம்பலசோமாசி என்ற புலவர் கம்பரைக் காண வந்தார். கம்பர் வீட்டு வாசலில் ஒரு பெண் வரட்டி தட்டிக் கொண்டிருந்தாள். அம்மா! கம்பர் இருக்கிறாரா? என்று கேட்டார். பல புலவர்கள் அவரிடம் தமிழின்பம் இப்ப நுகர்ந்து கொண்டு இருக்கின்றனர். அவரை யாரும் எப்போதும் பார்க்கலாம். கருணை மிக்கவர், என்று பதில்களை அடுக்கிக்கொண்டு போனாள்.

இருக்கிறாரா என்று கேட்டால் 'ஆம்' அல்லது 'இல்லை' என்று சொல்லியிருக்கலாம். வாயாடி போலும், எத்தனை பதில் சொல்கிறாள்' என்று அவர் அசைபோட்டார். பின் நீ இவ்வளவு பேசுகிறாயே! கம்பரிடம் தமிழ் படித்திருக்கிறாயா? என்று கேட்டார். அதற்கெல்லாம் நேரமேது புலவரே! அன்றாடப் பணிக்கே பொழுது சரியாக இருக்கிறது. சரி.. சரி... எனக்குத் தெரிந்த தமிழை உம்மிடம் பேசுகிறேன். ஒரு சின்ன விடுகதை, பதில் சொல்லுமேன் என்றாள்.

புலவர் ஆர்வமானார்.

'வட்டமாக இருக்கும், வன்னிக்கொடியில் தாவும், கொட்டுபவர் கையில் கூத்தாடும். எரித்தால் சிவசிவ என்பர். அது என்ன?' என்றாள். புலவர் விழிக்கவே, ஒருநாள் யோசித்து சொல்லுமேன், என்றவள் விடுவிடுவென போய்விட்டாள். கம்பர் வீட்டு வேலைக்காரியிடம் மாட்டினால் சும்மாவா?

ஆனால், இப்ப கலா இருப்பதையும் தொலைக்கும் நிலையில் தான் இங்கு வேலைக்காரியாக இருக்கிறாள். வீட்டை விட்டுப் புறம்படும் போது மனதில் இருக்கும் உற்சாகம், திரும்பி போகும் பொழுது இருக்காது? காலை கையில் வாளித் தண்ணீர் , விளக்குமாற்றுடன் வெளியில் வந்தால், வாசல் தெளித்து, பெருக்கி கோலமிட்டு உள்ளே சென்று சற்று ஓய்வு எடுக்கவே முடியாத சூழல் அங்கே. தட்டுமுட்டுச் சாமான்கள் துலக்கிக் பின் சமையல் என நீண்டு கொண்டே இருக்கும். யாரும் அவளை ஏறிட்டுக்கூட பார்க்க மாட்டார்கள்

காலை, மதிய சமையலை விட, அவள் வீட்டைக் கூட்டித் துடைத்தாள். பாத்திரங்களை கழுவி கவிழ்த்துப் ஈரம் காய வைத்தாள். காய்ந்த பாத்திரங்களை எடுத்து அடுக்கி வைத்தாள். உடுப்புக்களை துணி துவைக்கும் இயந்திரத்தில் போட்டு வெளியில் காயப் போட்டாள். காய்ந்த உடுப்புகளை மடித்து வைத்தாள். கதவு, சாளரம் , மூளைமுடக்குகள் என பார்த்து பார்த்து சுத்தம் செய்தாள். அவள் ஒரு இயந்திரமாக எல்லா வேலையும் நேரப்படி முடித்துவிட்டு, இரவு இருட்ட முன்பு எப்படியும் குடிசை திரும்பி விடுவாள். அதுவரை, பக்கத்துவீட்டு, அவளின் நண்பியுடன் தான் பிள்ளைகள்.

ஒரு நாள் மதியம், அவள் அறைக்குள் அலங்கரிக்கப்பட்ட ஒரு அலமாரியை கவனமாகத் துடைத்துக் கொண்டிருந்தபோது, வீட்டின் எஜமானர் உள்ளே நுழைந்தார். அவரின் பார்வை அவள் மீது ஒரு கணம் நிலைத்திருந்தது, அவரது உதடுகள் ஒரு மெல்லிய புன்னகையில். "கலா, நீ நன்றாக வேலை செய்கிறாய் ," என்று ஒருபுகழாரம் சூட்டினார், ஆனால் அவரின் பார்வையும், கலாவிடம் அவர் நெருங்கி வந்ததும், அவரின் வேறு ஒரு நோக்கத்தை வெளிப்படையாக காட்டியது. எனவே கலா தனது அசௌகரியத்தை மறைக்கும் முயற்சியில் அவள் கண்கள் கீழே பார்த்து, கொஞ்சம் விலகி நின்றாள். அவளுக்கு மனக்குழப்பம் இருந்தபோதிலும், தனது கடமைகளில் உறுதியாக இருந்தாள், தந்திரமாக அந்த சூழ்நிலையில் இருந்து சற்று ஒதுங்கி, சமையல் அறையில் எதோ வேலை இருப்பது போல விலகிச் சென்றாள். அந்தஸ்துள்ள ஒரு மனிதனுக்கு எதிராகப், வெறும் வீட்டுப் பணிப்பெண்ணாக அவள் எதிர்த்துப் பேசுவதால் ஏற்படும் விளைவுகள், என்ன என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும். அவர்கள் தங்கள் பிழைகளை மறைக்க எதை வேண்டும் என்றாலும் சொல்லுவார்கள். அவர்களின் பணப் பலமும் செல்வாக்கும் மற்றவர்களை அதை நம்பவும் செய்யும்.

அன்றைய நிகழ்வுக்குப் பிறகு வாரங்கள் கடந்து செல்ல, கலா தனது ஒப்பந்தம் முடிவடையும் வரை, நாட்களை எண்ணிக் கொண்டிருந்தாள், ஒவ்வொரு மாதத்தின் முடிவிலும் அவள் பெறும் சொற்ப ஊதியத்தில் மட்டுமே அவளுக்கு ஆறுதல் இருந்தது. வீட்டு எஜமானர் அவளுக்கு சம்பளம் ஒழுக்காக வழங்கிய போதிலும், அது அவளின் தேவைகளை பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை, ஆனால் சமாளிக்கக் கூடியதாக இருந்தது. அது தான் உடனடியாக வேலையை விட்டு போகவில்லை. என்றாலும் தன்னில் கவனமாக இருந்தாள்.

அவள் உடனடியாக விலகாததுக்கு இன்னும் ஒரு காரணமும் இருந்தது, வீட்டு எஜமானின் இளைய மகள், தனது குடும்பத்தில் உள்ள மற்றவர்களைப் போலல்லாமல், மேகங்கள் வழியாக சூரிய ஒளியின் கதிர்கள் துளைப்பதைப் போல, எப்பொழுதும் ஒரு கருணையுடன் கலாவை நடத்தினாள்.

ஒரு நாள் மாலை, கலா சமையலறையில் இரவு உணவைத் தயாரித்துக் கொண்டிருந்தபோது, இளைய மகள் அமைதியாக உள்ளே நுழைந்தாள், அவளுடைய கண்கள் பச்சாதாபத்தால் நிறைந்தன. "கலா, நலமா?" அவள் மெதுவாகக் கேட்டாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் இல்லை.

இளைய மகளின் எதிர்பாராத அந்த நட்பான வார்த்தையில், தன்னை பறிகொடுத்த அவள், பதில் சொல்ல வார்த்தைகளைக் கண்டுபிடிக்க முடியாமல் கொஞ்சம் தடுமாறினாள். என்றாலும் மென்மையான தலையசைப்புடன், அவள் மெல்லிய புன்னகையைத் பதிலாக கொடுத்தாள். அந்த இளைய மகளின் செயலை, கலா இன்னும் மறக்க வில்லை.

அவள் ஒருநாள் வீட்டுக்கு அவசரம் அவசரமாக திரும்பிக்கொண்டு இருக்கையில் , அவள் மனம் தன் குழந்தைகளை நோக்கி அலைந்தது. அவர்கள் மங்கலான மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பதுங்கியிருப்பதையும், கிழிந்த பாடப் புத்தகங்களைத் சரிப்பண்ணி சரிப்பண்ணி படிப்பதையும் , அவர்களின் கனவுகள் வறுமையின் பீதியால் மறைக்கப்பட்டதையும் அவள் கற்பனை செய்தாள். தனக்குக் கிடைக்காத வாய்ப்புகளை அவர்களுக்கு வழங்கவும், தனது குடும்பத்திற்கு நேர்ந்த கடுமையான கஷ்டத்தில் இருந்து அவர்களைக் காப்பாற்றவும் அவள் உள்ளம் ஏங்கியது. வீட்டுக்கு வரும் வேலைக்காரியை உணர்வுள்ள ஒரு ஜீவனாகப் அவர்கள் நினைப்பதே இல்லை. வீட்டைப் 'பெருக்கும் துடைப்பத்தைப் போல்' வேலைக்காரியை நினைக்கிறார்கள் என்பது தான் அவளுக்கு ஒரு வெறுப்பையும் கவலையையும் கொடுத்தது. தன் தோள்களில் கனமான சவால்கள் இருந்தபோதிலும், கலா தனது தளராத உறுதியில் ஆறுதல் என்றும் கண்டாள்.

கலாவைப் பொறுத்தவரை, ஒவ்வொரு சூரிய உதயமும் அதனுடன் ஒரு புதிய நோக்கத்தை கொண்டு வருவதாக நம்பினாள். தானும் அப்படியே புதிய நோக்குடன் அசைக்க முடியாத உறுதியுடன் ஒவ்வொரு நாளையும் கடக்க வேண்டும் என்று எண்ணினாள். அந்த அவளின் திடகாத்திரமான போக்கு, முன்னோக்கி செல்லும் பாதை நிச்சயமற்றதாக இருந்தாலும், தனக்கும் தனது குழந்தைகளுக்கும் பிரகாசமான நாட்கள் காத்திருக்கின்றன என்ற நம்பிக்கையில், அவள் மனது தானே ஒரு பாடலை இயற்ற, அவள் வாய் அதை இராகத்துடன் முணுமுணுக்க, மரக்கிளைகள் காற்று பட்டு வளைந்து வளைந்து ஆட, வண்டுகள் ரீங்காரம் இட்டு மலர்களை வட்டமிட, அவள் தலையை உயர்த்தி நடந்து வீடு சென்றாள்.

"மின்சாரம் இல்லாமல் இயங்கும் இயந்திரம் நானோ?

துன்பங்களை சுமந்து இன்பங்களை கொடுப்பவளோ?

காலங்களை கண்ணீரில் கழுவும் துர்ப்பாக்கியவாதியோ??

இங்கு புதுவிதம் அதிலும் பலவிதம் காண்கிறேனே!

காமத்துக்கும் சுரண்டலுக்கும் மனசு கொதிக்குதே!

ஊருக்கென்ன தெரியும் வீட்டுக்கள் நடப்பது

தெரிந்தும் என்ன ? பணம் வாயை மூடுமே!!"

நன்றி

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

440588699_10225111683682001_868112682991

440577471_10225111683041985_239780689067

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.