Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம்"

"பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்

தேரினும் அஃதே துணை"

செயற்கைக் கால்களைப் பெற வரிசையில் நின்ற ஒரு இளம் தாய், கால் கருகிய தன் சேயை இடுப்பில் காவி வந்திருந்தாள். 'என்ரை பிள்ளைக்கும் ஒரு கால் தாங்கோ’ என்று கைகளை நீட்டிய படி அவள் அங்கு கெஞ்சினாள். அந்தச் சிறுவன் வளர வளர, தன் வாழ்க்கையில் எத்தனை பொய்க் கால்களுக்காக அலைய வேண்டும்?’ - 'கிளிநொச்சி - போர் தின்ற நகரம்’ என்னும் நூலில் தீபச்செல்வன் ஈழ மக்களைப் பற்றி எழுதிய வரிகள் இவை. ''யுத்தம் தின்றது போக எஞ்சியிருப்பவற்றை ராணுவத்திடம் இருந்து காப்பாற்றிக்கொள்வதே போருக்குப் பிந்தைய பெரும் போராக மக்கள் மீது கவிந்திருக்கிறது'' என்ற தீபச்செல்வனின் கவலைக்கு ஒரு அத்தாட்சியாகக், கிளிநொச்சியின் மையப்பகுதியில், போரினால் சிதைந்த கடந்த காலத்தின் எதிரொலிகளுக்கு மத்தியில், ஒரு இளம் உயர்நிலைப் பள்ளி மாணவன், 'நீதிவானவன்' தன் பெற்றோருடனும் இளைய சகோதர, சகோதரியுடனுன் வாழ்ந்து வந்தான்.

"நான் படித்த கிளிநொச்சி மத்தியக் கல்லூரிக்குள் போரில் காலை இழந்த அப்பண்ணா என்ற அண்ணா ஒருவரைத் தேடும் போது என்னைப் பாதித்த நிகழ்வுகள் தான், நூலின் முதல் பகுதியை எழுதத் தூண்டின. உண்மையில் கால்களை இழந்த அப்பண்ணாக்களின் நகரமாக கிளிநொச்சி மாறியிருந்தது! எல்லாவற்றையும் இழந்துவிட்டார்கள். பாரம்பரிய வாழ்விடங்களில் வாழ்ந்த மக்களை, வனாந்தரங்களில் வீசிச் சென்றிருக்கிறது போர். அதுமட்டும் அல்ல, அனைத்துப் பிரதேசங்களிலும் சில பல இந்து ஆலயங்களை அழித்துவிட்டு புத்தரைக் கொண்டு வந்து சேர்த்து விட்டது.''

மகாவம்சம் / முப்பத்து ஏழாவது அத்தியாயம் / மகாசேன மன்னன் என்ற பகுதியில், [40,41] மன்னர் மணிஹிரா - விகாரையும் கட்டினார், மேலும் மூன்று விகாரையும் நிறுவினார். பிராமண கடவுள்கள் அமைந்த ஆலயங்களை அழித்தார்:- கோகன்ன ஆலயம், எரகாவில்லை என்ற இடத்தில் இன்னும் ஒரு ஆலயம், மூன்றாவதாக, பிராமணர்களின் கிராமமான கலந்தனில் இருந்த ஆலயம் என்கிறது. இங்கு கொடுக்கப்பட்ட துணை - விளக்க உரையின் படி [According to the Tika] கோகன்ன அல்லது கோகர்ணம் - ஆலயம், கிழக்கு கடலோரம் அமைந்த ஒன்று என விளக்கம் கொடுக்கப்படுகிறது. இங்கு குறிக்கப்பட்ட கிழக்கு கரையோரம் அமைந்த சிவன் கோவில் கோணேஸ்வரமாக இருக்க வாய்ப்பு அதிகம் தென்படுகிறது. மற்ற இரண்டிற்கும் விளக்கம் தேவைப் படுகிறது அது மேலும் 'இலங்கை தீவு முழுவதும், புத்தரின் கோட்பாட்டை, நம்பாதவரர்களின் ஆலயங்களை அழித்த பின் அவர் நிறுவினார் என்கிறது. அதாவது சிவலிங்கம் மற்றும் அது போல் என மேலும் ஒரு துணை விளக்கம் கொடுக்கப்பட்டும் உள்ளது. எனவே சைவ ஆலயங்களை அளிப்பதும் புத்தரை நிறுவுவதும் ஒன்றும் புதுமை இல்லை. மகாசேன மன்னன் கிறிஸ்துவுக்குப் பின் மூன்றாம் நூற்றாண்டில் (275–301 AD) இதை தொடங்கி வைத்தான்.

அவர் கூறிய வார்த்தை முற்றிலும் சரி என்பது போல கிளிநொச்சி மத்தியக் கல்லூரி மாணவன், நீதிவானவனனின் தந்தை, போரின் போது ஊனமுற்றவர், மற்றும் அவரது தாயார், இன்று சொற்ப ஊதியம் பெறும், தொட்டாட்டு வேலை வீடுகளிலும் வயலிலும் செய்யும் கூலித் தொழிலாளி, பெயர் 'அகலெழில்'. அவள் தன் பெயருக்கு ஏற்ற அகன்ற எழில் கொண்டவள். அவர்களின் வீடு இன்று ஒரு குடிசையாக ஒரு ஒதுக்குப்புறத்தில் மாற்றப்பட்டு விட்டது.

"சிறுநுதல் பசந்து பெருந்தோள் சாஅய்

அகலெழில் அல்குல் அவ்வரி வாடப்

பகலுங் கங்குலு மயங்கிப் பையெனப்

பெயலுறு மலரிற் கண்பனி வார"

ஈழத்து பூதந் தேவனார் என்ற இலங்கையை சேர்ந்த சங்க கால புலவர் கூறியது போல அவள் பெரிய தோள் மெலிந்து, அகன்ற எழிலுடைய அல்குலின் அழகிய வரிகள் வாட, பகலும் இரவும் மயங்குதலுற்று, மழை பெய்தலை ஏற்ற மலரைப் போலக் கண்ணில் நீர்பெருகி வழிய, ஆனால், உறுதியுடனும் பொறுமையுடனும் அல்லும் பகலும் உழைத்து, குடும்பத்தை காப்பாற்றி வந்தாள். ஈழத்து பூதந் தேவனார் கிருஸ்துக்கு பின் 250 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவராவார். அதாவது சிங்கள மொழி ஐந்தாம் அல்லது ஆறாம் நூற்றாண்டில் தோன்ற முன்பு, தமிழ் மொழி, ஈழத்தில் இத்தனை இலக்கிய நயத்துடன் வாழ்ந்தத்துக்கும் இது ஒரு எடுத்துக்காட்டாகும்.

நீதிவானவன், மூத்த மகனாக குடும்ப பொறுப்பு சுமைகளையும் தாயுடன் சேர்ந்து சுமந்தான். அதனால், தன் தாய் நோய்வாய்ப்படும் போது அல்லது போகமுடியாத சூழ்நிலை வரும் பொழுது, தாய்க்குப் பதிலாக அவன் வேலைக்குப் போவதும் உண்டு. ஒரு முறை நீதிவானவன் ஒரு பண்ணை முதலியார் மாளிகைக்கு வேலைக்கு போன பொழுது, அவரின் மாளிகைக்கு வெளியே உள்ள பழைய மற்றும் பயன்படுத்தப்படாத பொருட்களை வைக்கும் கொட்டகை ஒன்றைத் துப்பரவு செய்யும் பொழுது, புறக்கணிக்கப்பட்ட பழைய பள்ளி புத்தகங்களின் குவியல் ஒன்றைக் கண்டான். அது தன் படிப்புக்கு உதவும் என்பதாலும், அவை கைவிடப்பட்ட நிலையில் அங்கு இருந்ததாலும், நேர்மையற்ற பாதையில் தான் நடக்கிறேன் என்று அறியாமல், ஒரு சில தனக்குத் தேவையான புத்தகங்களை மட்டும் எடுத்து, வீட்டுக்கு கொண்டு போனான். இந்த அவர்களால் மறக்கப்பட்ட, தூசு படிந்த புத்தகங்களின் பக்கங்களை அவன் ஒவ்வொன்றாக படித்த பொழுது, அவனுக்குள் ஒரு மாற்றம் வேரூன்றத் தொடங்கியது. ஒவ்வொரு பக்கத்தையும் அவன் கவனமாக வாசிக்க வாசிக்க, அவனது கல்வி செயல்திறனும் உயர்ந்தது.

ஆனால் ஒரு சில மாதங்களுக்குள் விதி அவனை சோதிக்கத் தொடங்கியது. அவனின் அந்த நடவடிக்கைகள் அம்பலமானது, அதன் விளைவுகள் கடுமையாக இருந்தன. பணக்கார நில உரிமையாளர், தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, நீதிவானவனனை சீர்திருத்த பள்ளியில் ஓர் சில மாதம் அடைக்கப்படுவதற்கும் அகலெழிலியின் குடும்பத்தை கிராமத்திலிருந்து வெளியேற்றுவதற்கும் வழிவகுத்தது.

நீதிவானவன் தனது கல்வியைத் திரும்பவும் தொடங்கிய பொழுது, புதிய கிராமத்தின் அமைதியான சூழல் அவனுக்கு ஆறுதல் கொடுத்தது. ஒரு நாள் அகலெழிலும் நீதிவானவனும் சேர்ந்து பட்டம் விட்டுக் கொண்டிருந்தார்கள்.

தாய் கேட்டாள், “கண்ணா!.. நூலோட வேலை என்னன்னு சொல்லு பார்க்கலாம்?”

மகன் கொஞ்சமும் தாமதிக்காமல் சொன்னான் “நூல்தானம்மா பட்டத்தை இழுத்துப் பிடிச்சிருக்கு”.

தாய் சொன்னாள், “இல்லை மகனே நூல்தான் அதைப் பறக்க வச்சிகிட்டு இருக்கு”

மகன் சிரித்தான். தாய் ஒரு கத்தரிக்கோலால் நூலை வெட்டினாள். முதலில் பட்டம் விடுபட்டு தாறுமாறாகப் பறந்தது. கொஞ்ச நேரத்தில், சற்று தூரம் தள்ளி கீழே போய் விழுந்தது.

“ஒழுக்கம் இப்படியானதுதான் மகனே !. அதிலிருந்து அறுத்துக் கொண்டால், பட்டத்துக்கு நடந்ததுதான் நடக்கும். சீக்கிரமே கீழே விழுந்து விடுவாய். ஒழுக்கம்தான் உன்னைக் கொடி கட்டிப் பறக்க வைத்துக் கொண்டிருப்பது. உன்னை அதிலிருந்து அறுத்துக் கொள்ளாதே” என்று சொல்லிவிட்டு, மகனை பார்த்தாள். மகனுக்குப் புரிந்துவிட்டது. உடனே தாயைக் கட்டிப் பிடித்தான்.

" அம்மா எனக்கு குறள் 132 நன்றாகத் தெரியும். பொருள் உட்பட, ஆனால் நான் அன்று நினைத்தது, அவை கவனிக்கப்படாமல் தூசு படிந்து வெளியே கொட்டகையில் இருந்ததால், மற்றும் நான் படிப்புக்கும் மட்டும் எடுத்ததால், அது தப்பு அல்லது ஒழுக்கத்தை மீறுகிறேன் அல்லது அறுக்கிறேன் என்று நினைக்கவில்லை, அது என் தவறுதான் அம்மா, மன்னித்து விடுங்கள்" என்றான்.

"மண்ணிய சென்ற ஒண்ணுத லரிவை

புனல்தரு பசுங்காய் தின்றதன் தப்பற்

கொன்பதிற் றொன்பது களிற்றொ டவணிறை

பொன்செய் பாவை கொடுப்பவுங் கொள்ளான்

பெண்கொலை புரிந்த நன்னன்"

நன்னன் என்பவன் கேரளாவின் ஒரு பகுதியாக அன்று இருந்த பூழி நாட்டையாண்ட ஒரு சிற்றரசன். நன்னனது தோட்டத்திலுள்ள மரத்திலிருந்து விழுந்த மாங்காய் ஒரு கால்வாயில் மிதந்து வந்தது. அது கால்வாயில் இருந்தது. எனவே தப்பில்லை என்று அதனை அங்கு நீராடச் சென்ற ஒரு பெண் எடுத்துத் தின்று விட்டாள். உடனே அப்பெண்ணுக்கு மரண தண்டனை விதித்தான் நன்னன். அப்படித்தான் மகனே உன்னையும், பெண்கொலை புரிந்த நன்னன் போன்ற அந்த பண்ணை முதலாளி செய்துவிட்டார். அவரை மறந்துவிடு. அதை பாடமாக எடுத்து, வாழ்வில் என்றும் வருந்தியேனும் ஒழுக்கத்தைப் போற்றிக் காக்க வேண்டும் என்று மகனுக்கு அறிவுரை வழங்கினாள்.

தாயின் அறிவுரையும், அதை ஆமோதிப்பது போல இதமான காற்றில் இலைகளின் சலசலப்பும் அவனுக்கு திருவள்ளுவரின் 132 இன் மேல் முழு நம்பிக்கையைக் கொடுத்து, அவனுக்கு நேர்மை மற்றும் நேர்மையின் சரியான பாதையை உருவாக்கி கொடுத்தது. அதனால், முறையற்ற ஆதாயங்களின் கவர்ச்சியில் அல்லது செயல்களில் சிக்கித் தவிக்க மறுத்து, புதுப்பிக்கப்பட்ட வீரியத்துடன் தனது படிப்பிற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்தான்.

என்றாலும் ஒழுக்கத்தில் சிறந்து விளங்கும் முயற்சியில், நீதிவானவன் பல சோதனைகளைச் சந்தித்தான். ஆனால் அவன் உறுதியாக நின்றான். அவன் பல்கலைக்கழகத்தில் சட்டத் துறையில் படிக்கும் பொழுது, அவனின் இதயம் தன்னை அறியாமலே சக மாணவி மகிழினியுடன் சிக்கிக்கொண்டது. அழகான பெண், கண்களுக்கு ஆனந்தமளிக்கிறாள். குணமான பெண் இதயத்திற்கு குதூகலமளிக்கிறாள். முதலாமவள் ஒரு ஆபரணம், இரண்டாமவள் ஒரு புதையல். ஆனால் இவள் ஆபரணமும் புதையலும். இரண்டும் அவளில் அடங்கி இருந்தன.

அவளது பிரகாசமான புன்னகை அவனது ஆன்மாவின் இருண்ட மூலைகளை ஒளிரச் செய்தது. நீதி மற்றும் நீதியின் மீதான இருவரின் பகிரப்பட்ட பேரார்வம், காலத்தின் எல்லைகளைத் தாண்டிய தீவிரத்துடன், காதல் தீயை கொழுந்துவிட்டு எரிக்க, ஒரு சுடரைப் பற்றவைத்தது. பசுமையான மலை வெளிகள் மற்றும் சலசலக்கும் மகாவலி ஆற்றின் பின்னணியில் அவர்களின் காதல் வெளிப்பட்டது. நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் அடியில், பேராதனை பூந்தோட்டத்திலும் குறுஞ்சிக் குமரன் ஆலயத்துக்கு ஏறும் குன்றின் பாதையிலும் இருவரும் கைகோர்த்து நடந்த நீண்ட நடைப் பயணங்கள் அவர்களின் காதலின் சரணாலயமாக மாறியது, அங்கு கனவுகள் பகிரப்பட்டன மற்றும் அபிலாஷைகள் அப்பட்டமாக வைக்கப்பட்டன. ஆயினும் கூட, அன்பின் மென்மையான தருணங்களுக்கு மத்தியில், நீதிவானவன் சரியான நடத்தை மற்றும் நடத்தைக்கான ஒழுக்கத்தின் உறுதிப்பாட்டில் உறுதியாக இருந்தான்.

ஒரு முறை, மகிழினி தனது அன்பின் அடையாளமாக, காதலர் தினத்தில் அவனுக்குப் பரிசளிக்க விரும்புவதை வெளிப்படுத்திய போது, நீதிவானவன் நெறிமுறைக் கொள்கைகளைக் கடைப்பிடிப்பதைக் காரணம் காட்டி மெதுவாக மறுத்துவிட்டான். காதலர் தினம் என்ற ஒரு ஒற்றை நாளில் பரிசுகள் இன்பத்தின் கவர்ச்சியால் கொடுக்க ஆசைப்பட்டாலும், உண்மையான காதல் அப்படி அல்ல, இப்படியான ஒற்றைத் தருணங்களை கடந்தது என்பதே அவனின் வாதம்.

அவர்களின் காதல் உறவு மலர்ந்தபோது, நீதிவானவனின் அசைக்க முடியாத நேர்மை மகிழினிக்கு வழிகாட்டும் வெளிச்சமாக மாறியது, அவன் தனக்கு நேர்ந்த சோதனைகளை, எதிர்கொண்ட அவனது உறுதிகளைக், கண்டு வியந்தாள். அவளும், நீதியின் நெறிமுறைகளைத் தழுவி, அவர்களின் அன்பின் தூய்மையில் ஆறுதல் கண்டாள்.

நீதிவானவனின் விடாமுயற்சியும் நேர்மையும் கவனிக்கப்படாமல் போகவில்லை. ஒவ்வொரு ஆண்டும், நல்லொழுக்கத்தின் முன்னோடி என்ற அவனது புகழ் வளர்ந்தது. நீதிக்கான அவனது அர்ப்பணிப்பு செல்வாக்கு உள்ளவர்களின் கண்களைக் கவர்ந்தது, மேலும் அவன் கல்வி மற்றும் நீதித்துறையின் தரவரிசையில் உயர்ந்தான்.

இன்று, நீதிவானவன் ஒரு புகழ்பெற்ற தலைமை நீதிபதியாக மட்டுமல்லாமல், வாழ்க்கையின் கொந்தளிப்பான நீரில் பயணிக்கும் எண்ணற்ற ஆன்மாக்களுக்கு உத்வேகத்தின் கலங்கரை விளக்கமாகவும் நிற்கிறான். விரிவுரை அரங்குகள் மற்றும் நீதிமன்ற அறைகளில், அவன் தனது பயணத்திலிருந்து கற்றுக் கொண்ட விலைமதிப்பற்ற பாடங்களை - நேர்மையின் முக்கியத்துவம், நெறிமுறை நடத்தையின் முக்கியத்துவம் மற்றும் திருவள்ளுவரின் போதனைகளில் பொதிந்துள்ள காலமற்ற ஞானம் ஆகியவற்றை மறக்காமல் கூறுவான், அதிலும், தனது சீர்திருத்த பள்ளியின் அனுபவமும் அங்கு தான் அடைக்கப் பட்டதுக்கான அந்த அவனின் கதையையும் சொல்ல மறக்கமாட்டான்.

நன்றி

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

435901062_10225190212725178_917320200091

436308363_10225190213245191_864739607226

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.