Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"மீட்டாத வீணை.."

வரலாறும், கலாச்சாரமும், இயற்கை அழகும் நிறைந்த யாழ்ப்பாண மாவட்டமானது எழில் கொஞ்சும் கடற்கரையினையும் ஏப்ரல் - செப்டம்பர் வரையிலான காலப்பகுதிகளில் அதிக வெப்பநிலையினையும் டிசம்பர் - பெப்ரவரி வரை குளிரான காலநிலையினையும் கொண்டு இருப்பதுடன் தரைத் தோற்றத்தினை அவதானிக்கு மிடத்து கரையோர சமவெளியினை கொண்டும், அழகியத் தீவுகளினையும், பல்லுருவத்தன்மை கொண்ட கடற் கரைகளினையும், பாரிய மணல் மேடுகளினையும், நாற்புறமும் பனை சூழவும் காணப்படுகின்றது.

அங்கு தான் கவிதா என்ற ஒரு இளம் பட்டதாரி ஆசிரியை, பெற்றோருடனும் சகோதர, சகோதரிகளுடனும் வாழ்ந்து வந்தார். அழகு மற்றும் நாகரிகம் என்ற வார்த்தைகளுக்கு அவளே உதாரணம். அவள் படிக்கும் காலத்திலும் சரி, இன்று ஆசிரியையாக பணிபுரியும் காலத்திலும் சரி, அவளின் கண் பார்வைக்காக, காதலுக்காக ஏங்காத ஆண்கள் மிகமிகக் குறைவே என்று சொல்லலாம்.

மேகங்கள் சில சுருண்டு சுழித்தது போல கூந்தலுடனும், காது வரை நீண்டு ஆடவர் மனதை கொள்ளை கொள்ளும் கெண்டை விழியுடனும், அழகான அரும்பை போல செவ் இதழுடனும், அழகிய வில்லை போல் வளைந்து மூன்றாம் பிறை திங்களை போல ஒளி விடும் நெற்றியுடனும், குழழின் இசையையும், யாழின் இசையையும், அமிர்தத்தையும் கலந்த இனிய சொற்களை இயல்பாக கூறும் திறனுடனும், தலையில் சூடும் ஒரு பூவைக் கூடச் சுமையாக உணரும் நூலை விட இளைத்த இடையுடனும் அவள் கண்களுக்கு விருந்தாக இருந்தாள். என்றாலும் அவளிடம் தற்பெருமையோ தலைக்கனமோ இல்லை. எல்லோரையும் மதித்து நாகரிகமாக பழகுவாள். ஆனால் எனோ எந்த ஆணிடமும் சிக்காமல், 'மீட்டாத வீணை' யாக, அவளுடைய உணர்வுகள், வீணையின் தந்திகள் போல, இன்னும் கேட்கப்படாத, மீட்டபடாத அழகான மெல்லிசைகள் நிறைந்து, அதை வாசிக்க பொருத்தமான ஒருவனுக்காக, தனக்குப் பிடித்த சரியான ஒரு வாழ்க்கை துணைக்காக, அதையும் பெற்றோர்கள் முதலில் விசாரித்து தேடட்டும், அதன் பின் இறுதி முடிவைத் தானே எடுப்பேன் என்று, பெற்றோரிடம் அந்த பாரத்தைக் கொடுத்துவிட்டு, தானும் தன்பாடுமாக இருந்துவிட்டாள்.

"மீட்டாத வீணை இது வீசி வரும் தென்றல்..

வாடாத முல்லை இது பாடி வரும் தேணீ..

தெவிட்டாத இனிமை இது திகட்டாத புதுமை..

பளிங்கான பதுமை இது பழகாத இளமை.."

தங்கள் குடும்பத்துக்கு ஏற்ற கவிதாவுக்கு பொருத்தமான மற்றும் அவளுக்கு பிடித்த வரன், பல இழுபறிகளுக்கு பின் ஒருவாறு கண்டு பிடித்தார்கள். அவன் பெயர் எழிலன். லண்டனில் மேற்படிப்பு முடித்து, அங்கேயே ஒரு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் அதே நேரம் அங்கே ஒரு விஞ்ஞானியாக ஆராச்சியிலும் ஈடுபட்டுக் கொண்டு இருந்தான். அடுத்த சில மாதத்தின் பின் விடுதலையில் அவன் யாழ்ப்பாணம் வருவதால், அதற்கு முதல், அவனின் பெற்றோர்கள் கவிதாவை பெண் பார்க்க மற்றும் அவளின் விருப்பத்தையும் நேரடியாக அறிய அவளின் வீட்டிற்கு ஒரு ஞாயிற்றுக் கிழமை சென்றார்கள்.

ஆனால் கவிதா, பெற்றோரின் தேடுதல் நல்ல வரனாக, நல்ல படித்த, பண்பாடுள்ள குடும்பத்தில் இருக்கிறது என்றாலும், தானும் பார்த்த பின்பு தான் முடிவு சொல்லுவேன் என்று கொஞ்சம் பிடிவாதமாக முதலில் இருந்துவிட்டாள். என்றாலும் அவளின் பெற்றோர்கள் அவனின் சில படங்களை, விடீயோக்களை, அவனின் தாயின் தொலைபேசியில் இருந்து எடுத்துக் காட்டி சம்மதத்தை பெற்று, திருமணத்துக்கான திகதியையும் குறித்தனர். எழிலன், தங்கள் வருங்கால மருமகன், கட்டாயம் தங்கள் மகள், கவிதாவின் அழகை மற்றும் குணங்களைப் பாராட்டி அவளுக்கு மகிழ்ச்சியைத் தருவார் என்று நம்பினார்கள்.

எழிலன் விரிவுரையும் ஆராச்சியும் செய்வதால், அதில் அவன் கூடுதலாக தன் கவனத்தை முழுக்க முழுக்க கொண்டு இருப்பதால், இரண்டு கிழமை விடுதலையில் தான் அவன் யாழ்ப்பாணம் வந்தான். அது இரு பக்க பெற்றோருக்கும் ஏமாற்றமாக இருந்தாலும், திருமணத்தின் பின், உடனடியாகவே தன்னுடன் கவிதாவையும் கூட்டிச் செல்லும் ஏற்பாடுகளை முன்னமே செய்து கொண்டு வந்தது அவர்களுக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது.

எழிலன் யாழ்ப்பாணம் வந்து மூன்றாம் நாள் திருமணம் ஆகஸ்ட் தொடக்கத்தில் நிச்சயிக்கப்பட்டது. எனவே ஆக ஒரு நாள் தான் இருவரும் - கவிதாவும் எழிலனும் - சந்தித்து கதைக்க வாய்ப்பு கிடைத்தது. என்றாலும் இருவரும் மகிழ்வாக கூடுதலாக தங்கள் தங்கள் இன்றைய அபிலாசைகளையும் மற்றும் வருங்கால கனவுகளையும் பகிர்வதிலும் அலசுவதிலும் நேரம் சரியாகப் போய்விட்டது.

கவிதா தானும் அங்கு ஒரு பொருத்தமான ஒரு வேலை செய்ய விரும்பினாள், ஆனால் அதற்கு தன்னுடைய இப்போதைய இலங்கை படிப்பு அதிகமாக போதாது என்பதால், தான் ஒரு மேல் படிப்பு தன் துறையில் படிப்பது நல்லது என்ற தன் எண்ணத்தையும் மற்றும் தாம்பத்திய வாழ்வை மகிழ்வாக முழுமையாகவும் ஒன்றாக ஒற்றுமையாக அனுபவிக்க வேண்டும் என்ற அவாவையும் வெளிப்படுத்தினாள்.

இன்று நாட்டில் சில, பல வீணைகள் முழுமையாக மீட்டபடாமலே புழுதியில் வீழ்கின்றன. மகிழ்வாக தொடங்கும் திருமண வாழ்வு, பாதியிலேயே பிரிவுக்கோ, விவாகரத்துக்கோ போய்விடுகின்றன, அப்படி இல்லாமல் தான் மதிக்கும், வணங்கும் கலைவாணியின் கைகளும் பட்டு [ துணை கொண்டு], அது நிரந்தரமாக அன்பு, காதல், விட்டுக் கொடுப்பு, ஒருவரை ஒருவர் மதித்தல், புரிந்துணர்வு .... என்று வீணையின் சரங்கள் தொடர்ந்து இசைத்திடாதா! அந்த இசைகள், இன்பங்கள் இதயத்தை என்றும் நிரப்பவேண்டும் என்பதே அவளின் சுருக்கமான அவா ! .

எழிலன் பெரிதாக சமயம், தெய்வங்களில் நம்பிக்கை இல்லா விட்டாலும், அதை அவன் புரிந்துகொண்டான். அவனுக்கும் அவளின் அழகிய உடல் மற்றும் உள்ளம் என்ற வீணையின் சரங்களுடன் விளையாடி மீட்க ஆசை இல்லாமல் இல்லை. என்றாலும், அவளின் முதல் ஆசை முக்கியம். அது நிறைவேறும் மட்டும் கொஞ்சம் பொறுத்திருக்க வேண்டும் என்ற தன் அறிவுரையையும், தன் பல்கலைக்கழகத்திலேயே அதற்கான ஏற்பாடு தான் உடனடியாக செய்வதாகவும் இந்த செப்டம்பரில் இருந்து அங்கு தொடரலாம் என்று உறுதியும் கொடுத்தான். அதே நேரம், தன் ஆராச்சியையும் முழுக்கவனம் செலுத்தி, அதற்குள் முடித்துவிடுவேன் என்ற தன் ஆதங்கத்தையும் அவளுக்கு ஒரு முதல் முத்தத்துடன் கூறினான். அவளும் தன் முதல் அணைப்பையும் முத்தத்தையும் மகிழ்வாக அவனுக்கு கொடுத்தாள்! என்றாலும் அவள் இதயம் தனக்குள்

"வான் பார்த்து ஏங்கும் சிறு புல்லின் தாகம்

கானல்கள் நிறைவேற்றுமோ?

ஊட்டாத தாயின் கணக்கின்ற பால் போல்

என் காதல் கிடக்கின்றதே?

தொடுவானம் இன்று நெடுவானம் ஆகி

தொடும்நேரம் தொலைவாகுதே?

மீட்டாத வீணை தருகின்ற ராகம்

கேட்காது என் எழிலனே?"

என முணுமுணுத்தபடி இருந்தது. அவள் நினைத்தது என்னவோ, நடக்கப் போவது என்னவோ? தான் மேலும் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், தாம்பத்திய வாழ்வும், பிந்திப் போடாமல் அதனுடன் ஒன்றாக பயணிக்க வேண்டும் என்பதே அவளின் ஆசை! ஆனால் தன் ஏமாற்றத்தை - தான் இன்னும் சில ஆண்டு 'மீட்டாத வீணை' யாக இன்னும் இருக்கப் போவதை - அவள் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. முக்கியமாக அவனுக்கும் இருபக்க பெற்றோர்களுக்கும்.

காலையில் நடந்த திருமண நிகழ்வும், அதைத் தொடர்ந்து அன்று மாலையே ஆரம்பித்த திருமண வரவேற்பு ஆர்பாட்டமும் குதுகழிப்பும் அடங்கி விருந்தினர்கள் மண்டபத்தை விட்டு வெளியேற, முன் யாமம் ஆகிவிட்டது. நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் அவர்களுள் இருந்த சோர்வு மற்றும் நிம்மதியின் காரணமாக, ஹோட்டலில் அவர்அவர்களுக்கு என ஒதுக்கிய அறைகளில் நித்திரைக்கு போய்விட்டார்கள்.

அந்த பெரிய ஹோட்டலில் ஒன்றிரண்டு அறைகளில் மட்டுமே இன்னும் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தது. அதில் ஒரு பெரிய அறையில் கவிதா, எழிலன் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் மட்டும் இன்னும் கதைத்துக்கொண்டு இருந்தனர். கவிதா, தன் கலைந்த அலங்காரத்தை ஆளுயர கண்ணாடியின் முன் சரிபடுத்திக்கொண்டு இருந்தாள்.

இளநீல நிற புடவையுடன் நீண்ட கூந்தல் பின்னலிட்டு தலைநிறைய மல்லிகை இன்னும் சூடியபடி இருந்தது. தன் கயல்விழிகளுக்கு மேலும் அழகு சேர்க்கும் விதமாக கண்மையை தீட்டி வானவில் புருவங்களுக்கு இடையில் கோபுர வடிவ பொட்டும் வைத்து இருந்தாள். அதன் கீழ் சிறிதளவு குங்குமம் இப்ப தாய் தன் கையால் வாழ்த்தி வைத்தாள். கைகள் முழுவதும் அழகு வளையல்களும் கழுத்தில் சங்கிலியும் சிறிய ஜிமிக்கி வைத்த காதணியும் அணிந்து அழகு பதுமையென கவிதா அங்கு இருந்தாள்.

படபடக்கும் விழிகளுடனும் துடிதுடிக்கும் இதயத்துடனும் குளிரூட்டப்பட்ட அறையிலும் எனோ வேர்த்து ஈரமான உள்ளங்கைகளுடனும் புதுப்பெண்ணிற்கு உரிய சில அடக்கத்துடனும் அளவளாவிக் கொண்டு இருந்தாள். பக்கத்தில் எழிலன் எல்லாவற்றையும் கவனித்தபடி, சிரித்து ஆனால் கொஞ்சமாக அவளுடன் சேர்ந்து மற்றவர்களுடன் கதைத்துக் கொண்டும் இருந்தான்.

நேரம் சாமம் ஒரு மணி ஆகிவிட்டது. அவளது தாயும் அத்தையும், இனி கதைத்தது காணும் எல்லோரும் படுக்க போவோம் என்று, புதுமானத் தம்பதிகளை அவர்களுக்கு என ஒதுக்கிய அறைக்கு அனுப்பிவைத்தனர்.

அவ்வறை முழுவதும் பூக்களாலும், வாசனை திரவியத்தின் நறுமணத்தாலும் நிறைந்து இருந்தது. அப்ப தான் அவளுக்கு ஞாபகம் வந்தது, இது முதல் இரவு என்று. முதன்முதலில் இருவரும் மிக நெருக்கமாக தனி அறையில் சந்திப்பதால், அவர்களுக்குள் ஒரு ஆர்வத்தின் தீப்பொறி இருந்தது. அவள் எழிலனை ஆசையாக பார்த்தாள். அவன் எந்த ஒரு சலனமும் இல்லாமல், சர்வசாதாரணமாக, தன் மடிக்கணினியை எடுத்து, கவிதாவின் உயர் படிப்பிற்கான விண்ணப்ப படிவத்தை நிரப்புவதில் தீவிர கவனம் செலுத்தியதால் அவர்களது உறவு அன்று மெதுவாகப் போய்விட்டது. ஒருவேளை தன்னை கட்டுப்படுத்துவதற்காக அவன் அப்படி செய்திருக்கலாம்? என்றாலும் கொஞ்ச நேரத்தால் இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்தபடி உறங்கிவிட்டார்கள்.

அடுத்தநாள் காலை, கவிதா எழிலனை தன்னுடன் ஹோட்டலில் இருக்கும் பூங்காவில், காலை உணவுக்கு முன் நடக்க அழைத்தாள். அமைதியான பாதையில் அவர்கள் நடந்து செல்லும்போது, அவனுடன் தனது இதயத்தின் ஒரு பகுதியை வெளிப்படையாக பகிர்ந்து கொள்ள முடிவு செய்தாள். அங்கு மலர்கள் வண்ணம் வண்ணமாக அழகாக பூத்து பூத்து குலுங்கி இருப்பதையும், அதைச் சுற்றி வண்டுகள் ரீங்காரம் செய்தபடி மொய்ப்பதையும் காட்டி, இப்படியான இயற்கைக்காட்சிகளைப் ரசிப்பதில்லையா என்று கொஞ்சலாக கேட்டாள். அவன் மௌனமாக அவளைப்பார்த்து, அவளின் கன்னத்தை மெதுவாக தடவி, கூந்தலை வருடினான். அவள் இதுதான் தருணம் என்று, "வாழ்க்கை இந்த சின்ன சின்ன சந்தோஷங்களால் நிரம்பியது. நாம் ஒன்றாக அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்." எந்த வெட்கமோ இன்றி, அவனை கண் வெட்டாமல் பார்த்தபடி கூறினாள்.

அவளின் வார்த்தைகள் எழிலனிடம் எதிரொலித்தது. அவன் அவளை அணைத்தபடி, முதலில் நீ படிப்பை தொடங்கு, நாம் மெதுவாக வாழ்க்கை என்ற வீணையை வாசிக்க தொடங்குவோம்.

அவள் நெருங்க நெருங்க, எழிலன் கவிதாவை புதிய வெளிச்சத்தில் பார்க்க ஆரம்பித்தான். வாழ்க்கையின் மீதான அவளது ஆழ்ந்த அன்பையும், எளிமையான விஷயங்களில் அழகைக் காணும் அவளது திறனையும் அவன் பாராட்டினான். "வாழ்க்கை வழங்கும் அனைத்தையும் நான் பார்க்க விரும்புகிறேன், உன்னுடன் என் பக்கத்தில்," அவன், அவள் காதில் சொன்னான்! அவனுடைய வார்த்தையில் கவிதாவின் உள்ளம் மகிழ்ச்சியில் திளைத்தது.

அவள் மகிழ்வாக எல்லோருக்கும் போய்வருகிறேன் என்று கூறி, விமானத்தில் எழிலனுடன் ஏறினாள், ஆனால் இன்னும் சரியாக, முறையாக 'மீட்டாத வீணை' யாகவே ! ஆனால் அது விரைவில் நடைபெறும் என்ற நம்பிக்கையுடனும் உறுதியுடனும்!

நன்றி

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

441469256_10225272673826654_119163433549

447034830_10225272676026709_513884520711

447051172_10225272679226789_222502537080


Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.