Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்தின் கதையும் நிலையும்

May 11, 2025

கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்தின் கதையும் நிலையும்

— கருணாகரன் —

கிளிநொச்சி நகரப் பேருந்து நிலையத்தின் அவலம் (சோதனைக் காலம்) இன்னும் முடியவில்லை. விக்கிரமாதித்தன் – வேதாளம் கதையைப்போல, தீர்வு காணவே முடியாத தொடர்கதையாக உள்ளது. காலத்துக்குக் காலம் அதிகாரத்தில் இருக்கும் தரப்பினர் அவரவர் நலனை முதன்மைப்படுத்தி, தம்பாட்டுக்கு எழுந்தமானமாக எடுத்த – எடுக்கின்ற – எடுத்து வருகின்ற தீர்மானங்களால்தான் இந்த அவலம் தொடருது. யாராவது ஒருவர் அல்லது ஒரு தரப்பினர் சரியான தீர்மானத்தை எடுத்திருந்தால் இந்த அவலமும் வீண் செலவீனமும் ஏற்பட்டிருக்காது. மக்களும் சிரமப்பட வேண்டிய நிலை வந்திருக்காது. பேருந்து நிலையமும் உருப்படியாக ஒரு இடத்தில் சரியாக அமைந்திருக்கும்.

கிளிநொச்சிப் பேருந்து நிலையம் இதுவரையில் (75 ஆண்டுகளுக்குள்) ஆறு இடங்களுக்கு இடம் மாறியுள்ளது. யுத்தமும் நகரத்தின் வளர்ச்சியும் இதற்கொரு காரணம் என்று யாரும் சொல்லக் கூடும். அதில் பாதியளவு உண்மையுண்டு. ஆனால், யுத்த முடிவுக்குப் பிறகாவது அது உருப்படியாக – சரியான ஒரு இடத்தில், சரியான முறையில்  அமைந்திருக்க வேண்டுமல்லவா?

யுத்தம் முடிந்த பிறகான 15 ஆண்டுகளில் மூன்று இடங்களுக்கு இடம் மாறியுள்ளது பேருந்து நிலையம். இறுதியாக நகரின் மத்தியிலுள்ள டிப்போச் சந்தியில் – A 9 வீதியோரமாக அமைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக பயணிகள் தங்கி, இளைப்பாறிச் செல்வதற்காக ஒரு கட்டிடம் அமைக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், அந்தக் கட்டிடத்தில் தூர இடங்களுக்கான பயணிகள் நிற்க முடியாது. அவர்கள் மழையிலும் வெயிலிலும் நனைய வேண்டியதுதான். அப்படி மழையில் நனைந்து வெயிலிற் காய்ந்து கொண்டுதான் (மனதிற்குள் திட்டிக்கொண்டுதான்) ஒவ்வொரு பயணியும் பிரயாணிக்கிறார்கள்.

தொலைதூர பேருந்துகளின் நிறுத்தத்தைக் கவனத்திற்கொண்டு பேருந்து நிலையம் அமைக்கப்படாததே இந்தக் குறைபாட்டுக்குக் காரணமாகும். தொலைதூரப் பயணிகளுக்கான நிறுத்தத்தை நிர்மாணிக்கக் கூடிய இடமும் இருந்தது. எதிர்காலத்திலாவது  அந்த இடத்தில் அதற்கான நிறுத்தத்தை (கட்டிடத்தை) நிர்மாணிக்கலாம் என்றால் அந்த இடத்தை அரசியல் செல்வாக்கோடு ஆக்கிரமித்துக் கடைத் தொகுதியை அமைத்து விட்டனர் ஒரு தொகுதியினர். இதற்கு அனுசரணை அளித்தது முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவாந்தா.

‘பேருந்து வளாகத்துக்குள் எதற்காகக் கடைத்தொகுதி? வணிக வளாகமா, பேருந்து நிலையமா? பேருந்து நிலையத்துக்கு எதிரே மிகப் பெரிய வணிகச் சந்தையும் கடைகளும் இருக்கும்போது எதற்காக பயணிகள் இடத்தில் கடைகள்? நகர அபிவிருத்திச் சபையின் Master Plan ஐ மீறி  பேருந்து நிலையத்தைப் பாழ்படுத்த வேண்டாம். பிரதேச சபையின் அனுமதியில்லாமல் எப்படிக் கடைத்தொகுதியை அமைக்க முடியும்? பேருந்து நிலையத்துக்கான காணியைச் சட்ட விரோதமாக – முறைகேடாக தனியாருக்கு வழங்குவது தவறு…‘ எனப் பல காரணங்களைச் சுட்டிக்காட்டி – கேள்விகளை எழுப்பி, தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தது கிளிநொச்சி – மக்கள் சிந்தனைக்களம்.  

கிளிநொச்சி மாவட்டப் பிரஜைகள் குழுவும் இது தொடர்பாக மாவட்டச் செயலர், பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், பிரேதேச சபையினர், ஆளுநர் எனப் பல தரப்பிடமும்  உரிய ஆதாரங்களோடு பேசியது. மாவட்டத்தின் வளர்ச்சியைக் கருதிச் சிந்திக்கும் தரப்பினர், ஊடகவியலாளர்கள் உட்படப் பலரும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.

ஆனாலும் அதெல்லாம் அரசியல் அதிகாரத்தின் முன்னே செல்லுபடியாகவில்லை. விளைவு, முதலில் தடுமாறிய ஆக்கிரமிப்பாளர்கள், இரவு பகலாக தாங்கள் கைப்பற்றிய அல்லது அவர்களுக்கு அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் வழங்கப்பட்ட நிலத்தில் கடைகளைக் கட்டி முடித்தார்கள்.

அந்தக் கடைத்தொகுதிக்கு அடிக்கல் நாட்டி, அவற்றைத் திறந்து வைத்தார் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. அப்பொழுது இதைக்குறித்து ஊடகத்தரப்பினர் கேள்வி எழுப்பியபோது, “இந்தக் கடைகள் வாழ்வாதாரத்துக்காக வழங்கப்பட்டன. (முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரனும் இப்படித்தான் வாழ்வாதாரத்துக்காக மதுச்சாலைக்கான அனுமதியைப் பெற்றுக் கொடுத்த்தாகச் சொல்லியிருந்தார். எமது மக்களுக்கு வாய்த்த தலைவர்களைப் பார்த்தீர்களா? எப்படி இருக்கிறார்கள் என்று) ஆனால், இவற்றை நாம் நிரந்தரமாக வழங்கவில்லை. தற்காலிகமாகவே வழங்கியிருக்கிறோம்…” என்றார்.

“அப்படியென்றால் நிரந்தரமாகக் கடைக்கட்டிடங்களை அமைத்திருக்கிறார்களே! இது எதிர்காலத்தில் இந்தப் பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்யும்போது இடைஞ்சலாக – நெருக்கடியைக் கொடுக்குமே…” என்று கேட்டபோது –

“அதுதான் நாங்கள் இதை (கடைகளை) நிரந்தரமாகக் கொடுக்கவில்லையே. தற்காலிகமாகவே வழங்கியிருக்கிறோம்…” என்று முடித்துக் கொண்டார் அமைச்சர்.

ஆனால், பிரச்சினை அதோடு முடியவில்லை. அந்தக் கடைத்தொகுதிகள் அமைக்கப்பட்டு ஒரு ஆண்டு கூட முடியவில்லை. இப்பொழுது பேருந்து நிலைய விவகாரம் தொடர்பாக தற்போதய வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டமொன்று 08.06.2025 அன்று கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின் நடந்துள்ளது. அதற்கு முன்பு ஆளுநர் தலைமையிலான அணியினர் மத்திய பேருந்து நிலையத்தைப் பார்த்துள்ளனர்.

இதில் மாவட்டச் செயலர் சு. முரளிதரன், வட மாகாண வீதிப்போக்குவரத்து அதிகாரசபையின் பொது முகாமையாளர், கரைச்சிப் பிரதேச சபையின் செயலாளர், தனியார் போக்குவரத்துக் கழகத்தினர், இலங்கைப் போக்குவரத்துச் சபையினர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

பேருந்து நிலையத்தில் சட்டவிரோதச் செயற்பாடுகள் நடக்கின்றன. அங்கே பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவுமே இல்லை. முக்கியமாக இன்னும் பேருந்து நிலையம் – அதனுடைய காணி – யாருடைய பொறுப்பிற்கும் கையளிக்கப்படவில்லை. இவற்றையெல்லாம் ஒழுங்குபடுத்த வேண்டுமாக இருந்தால், அதை முறைப்படி உள்ளுராட்சி மன்றிடமே கொடுக்க வேண்டும். கரைச்சிப் பிரதேச சபை அதைப் பொறுப்பெடுக்க வேண்டும் என்று மாவட்டச் செயலர் குறிப்பிட்டார்.

பிரதேச சபை பொறுப்பெடுத்தாலும் அதனால் பேருந்து நிலையத்தைப் பாதுகாத்துப் பராமரிப்பதற்கு உரிய நிதி இல்லை என்று செயலாளர் தெரிவித்தார். மட்டுமல்ல, ஏற்கனவே அங்கே அமைக்கப்பட்டுள்ள கடைத்தொகுதியும் அதற்கான கட்டிடங்களும் சபையின் அனுமதியைப் பெறாமலே அமைக்கப்பட்டுள்ளன. முறையற்ற முறையில் அமைக்கப்பட்டு நடாத்தப்படும் கடைகளில் தாம் இன்னும் வரி அறவீட்டைச் செய்யவில்லை. (அப்படியான கடைத்தொகுதியைத்தான் முன்னார் அமைச்சர் அடிக்கல் நாட்டித் திறந்து வைத்தார்) பேருந்து நிலையக் காணியை பிரதேச சபை பொறுப்பெடுத்தால், அங்கே உரிய முறையில் கடைத்தொகுதியை அமைத்து, அவற்றை வழங்கி, அதன் மூலம் திரட்டப்படும் வருவாயைக் கொண்டு  ஏனைய விடயங்களைப் பார்க்கலாம் என்றார்.

தங்களுடைய அனுமதியையும் கடைத்தொகுதியை அமைத்தவர்கள் பெறவில்லை என்று வட மாகாண வீதிப்போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் மகேஸ்வரன் தெரிவித்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஆளுநர், எந்தத் திட்டங்களையும் நீண்டகால நோக்கில் மேற்கொள்ள வேண்டும். யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு ஏற்பட்டுள்ள நிலைமை இங்கும் (கிளிநொச்சியிலும்) ஏற்படக் கூடாது. கிளிநொச்சி நகரம் வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. அதனைக் கருத்திற் கொண்டே எந்தத் திட்டங்களும் மேற்கொள்ளப்பட வேண்டும். தற்போது ஆக்கிரமிப்பாளர்களை அகற்றி, பேருந்து நிலையத்துக்கு ஒதுக்கப்பட்ட நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும். ஏனைய இடங்களில் உள்ள நடைமுறையைப் பின்பற்றி, பேருந்து நிலையத்தை பிரதேச சபையிடம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். ஆக்கிரமிக்கப்பட்ட கடைகள் அகற்றப்பட்டு, பேருந்து நிலையத்தின் எல்லையோரத்தில் பிரதேசபையினால் கடைகள் அமைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும். இவை தொடர்பாக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எட்டப்படும் என்றார்.

மாவட்டச் செயலர் முரளிதரன், ஆளுநர் வேதநாயகன் ஆகியோரின் இந்த முயற்சியும் தீர்மானங்களும் பாராட்டுக்குரியவை. மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் நடைமுறைக்கு வர வேண்டும். அந்த நம்பிக்கை மக்களுக்கு உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஆனால், எதிர்காலக் கிளிநொச்சி மாவட்டத்தின் வளர்ச்சியைக் கருத்திற் கொண்டு மத்திய பேருந்து நிலையத்துக்கான காணியை முடிந்தளவுக்கு வணிக வளாகம் ஆக்காமல் தவிர்ப்பது நல்லது.

பிரதான வீதியில் 24 மணி நேரப்போக்குவரத்தைக் கொண்ட மத்திய பேருந்து நிலையம் என்ற அடிப்படையில், எப்போதும் பயணிகளுக்கு வசதியளிக்கக் கூடிய அவசியமான கடைகள், சிற்றுண்டிச் சாலை, மலசல கூடம் (கழிப்பறை) கட்டணக்குளியலறை போன்றவற்றை அமைப்பதே பொருத்தமானது. நெடுந்தொலைவுப் பேருந்துகளுக்கான தரிப்பிடமும் அதற்குரிய பயணிகளுக்கான தங்குமிடமும் உருவாக்கப்பட வேண்டும். இவைதான் முதற் கவனத்திற் கொள்ளப்பட வேண்டியவை.

பேருந்து நிலையத்தைப் பராமரிக்கக் கூடிய  வருவாயை பேருந்து நிலையத்துக்குள்ளேயே பிரதேச சபை தேடுவது பொருத்தமானதல்ல. சில திட்டங்கள் வேறான முறையில் மேற்கொள்ளப்படுவது அவசியமாகும். நீதிமன்றத்தினால் பறிமுதல் செய்யப்பட்ட மணல் போன்றவற்றினால் கிடைக்கின்ற வருமானத்தை பிரதேச சபை இதற்குப் பயன்படுத்தலாம். இது சேவை மையமாகும். குறிப்பாகப் பிரதேச சபை அல்லது நகரசபையினால் நிர்வகிக்கப்படும் நூலகம், பூங்கா போன்றவற்றுக்குச் செய்யும் செலவீனத்தைப்போலவே இதையும் கொள்ள வேண்டும். அதற்குள் கிடைக்கின்ற வருவாயைப் பெற்றுக் கொள்ளலாம். இதை விடுத்து, மறுபடியும் பேருந்து நிலையத்தை வணிக வளாகமாக்கினால் தற்போதைய யாழ்ப்பாண பேருந்து நிலையத்தைப்போலவே கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையமும் இருக்கும்.

மன்னார், வவுனியா, கண்டி, மட்டக்களப்பு, திருகோணமலை, மதவாச்சி, அநுராதபுரம் போன்ற இடங்களில் உள்ள மத்திய பேருந்து நிலையங்களை முன்னுதாரணமாக்க் கொள்ள வேண்டும். பேருந்து நிலையங்களில் வணிக வளாகம் அமைவது சுகாதாரக் கேடு, சட்டவிரோதச் செயற்பாடு, இட நெருக்கடி, சன நெருக்கடி, இரைச்சல் போன்ற பல தீய விளைவுகளையும் அசௌகரியத்தையுமே உண்டாக்கும்.

பொதுப்போக்கு வரத்து என்பது தனியாக வாகனங்களை வைத்துக் கொள்ள முடியாத எளிய மக்களுடையது. அவர்களே எண்ணற்றவர்கள், ஆயிரக்கணக்கானோராகும். அவர்களுடைய நலனையும் உரிமையையும் பாதுகாப்பதே நிர்வாகத் தரப்பு, அதிகாரத் தரப்பு, அரசியலாளர்களுடையது.

ஆகவே, ஏற்கனவே விட்ட தவறுகளை மீளவும் யாரும் விடக் கூடாது. கடந்த காலத் தவறுகளைத் தடுத்திருக்க வேண்டிய தரப்புகள், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், மாவட்டச் செயலகம், பிரதேச செயலகம், பிரதேச சபை, முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, போக்குவரத்து அதிகார சபை போன்றவையாகும். சட்டவிரோக் கடைகளை அமைக்கும்போதே வழக்குத் தாக்கல் செய்திருக்க முடியும். தடை உத்தரவை வழங்கியிருக்கலாம். இடைநிறுத்தியிருக்க முடியும்.

அதையெல்லாம் செய்யத் தவறியதன் விளைவுகளே இப்போது அறுவடை செய்ய வேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளன. ஏற்கனவே கிளிநொச்சி – கரடிப்போக்குச் சந்தியில் பிரதேச சபையினால் வழங்கப்பட்ட கடைகள் தவறானவை என்று கூறி நீதிமன்ற உத்தரவிற்கமைய உடைக்கப்பட்டுள்ளன.

பூநகரி – வாடியடியில் ஒரு தொகுதி உடைத்துக் கற்குவியலாக்கப்பட்டுள்ளது. மைத்திரி – ரணில் ஆட்சிக்காலத்தில் சிவஞானம் சிறிதரனுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் நிர்மாணிக்கப்பட்ட கட்டிடத்தொகுதி அது என்று சொல்லப்படுகிறது. இத்தகைய தவறுகள் தொடரக் கூடாது.

ஆளுநர் கூறியிருப்பதைப்போல, நீண்ட கால நோக்கோடு (அரசியல் அழுத்தங்களின்றி) சரியான வழிகாட்டலில் திட்டங்களுக்கான தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும். ஒருங்கிணைப்புக்குழுவில் இது  தொடர்பாகச் சரியான தீர்மானம் எடுக்கப்படுவது அவசியமாகும். இனியாவது கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்துக்கு நல்லதொரு விடிவு கிட்டட்டும்.  

https://arangamnews.com/?p=12026

  • கருத்துக்கள உறவுகள்

அந்த சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கடைகளில் இலையான் கலைக்கிறார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.