Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடும் காற்றுடனான வானிலை

படக்குறிப்பு,கடும் காற்றுடனான வானிலை காரணமாக மின்சார கம்பங்கள் மீது மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன

30 மே 2025, 08:59 GMT

புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

இலங்கையில் கடும் காற்றுடனான வானிலை காரணமாக தலைநகர் கொழும்பு உள்பட பல பகுதிகளில் கடும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால் வீடுகள் சேதமடைந்தன. மோசமான வானிலை நீடிப்பதால் பல்வேறு இடங்களில் மின்சாரம் தடைபட்டுள்ளது. ரயில் சேவையும் பல இடங்களில் தடைபட்டுள்ளது.

கொழும்பு நகரில் வீடுகள் சேதம்

இலங்கையில் கடந்த ஓரிரு தினங்களாகவே பல்வேறு பகுதிகளில் கடும் மழையுடன் கூடிய காற்று வீசி வருகின்றது. இந்த நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை முதல் வீசிய கடும் காற்று காரணமாக கடும் சேதம் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

கொழும்பு நகர் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் நேற்றிரவு கடும் காற்றுடனான வானிலை நிலவியிருந்தது. கொழும்பு - கொள்ளுபிட்டி பகுதி முதல் வெள்ளவத்தை பகுதி வரையான கரையோர பகுதிகள் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் வீசிய கடும் காற்றுடனான வானிலை கரணமாக மரங்கள் முறிந்து வீழந்திருந்ததுடன், பல கட்டிடங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

அத்துடன், கொழும்பு கிரான்பாஸ் பகுதியில் வீசிய கடும் காற்றுடனான வானிலை காரணமாக பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளது. இந்த மரம் முறிந்து வீழ்ந்ததில் 6 வீடுகள் சேதமடைந்துள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். மரம் முறிந்து வீழ்ந்தமையினால் எவருக்கும் எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை.

கொழும்பு - தெமட்டகொடை பகுதியிலுள்ள வீடொன்றின் மீது மதில் சுவரொன்று சரிந்து வீழ்ந்துள்ளது. நேற்றிரவு பெய்த கடும் மழையுடன் கூடிய கடும் காற்று காரணமாகவே இந்த மதில் சுவர் இடிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்தில் மூவர் காயமடைந்துள்ளதுடன், காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடும் காற்று

படக்குறிப்பு,கடும் காற்றுடனான வானிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் கடும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன

கண்டியில் தாய் - மகள் காயம்

கண்டி பகுதியிலுள்ள வீடொன்றின் மீது தொலைத்தொடர்பு கோபுரமொன்று சரிந்து வீழ்ந்ததில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். குறித்த வீட்டில் வசித்து வந்த தாய் மற்றும் மகள் ஆகியோரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.

அவிசாவளை - தெரணியகலை பகுதியில் மரமொன்று வீடொன்றின் மீது முறிந்து வீழ்ந்ததில் மூவர் காயமடைந்துள்ளனர். இந்த அனர்த்தத்தில் காயமடைந்த மூவரும் தெரணியகலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களில் கவலைக்கிடமான நிலையிலிருந்த சிறுமியொருவர், மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

புத்தளம் - ஆனைமடு பகுதியில் போலீஸ் நிலையத்தின் மீது மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளதை அடுத்து, போலீஸ் நிலையத்தின் கட்டடத்திற்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. சுமார் 50 வருடம் பழைமையான மரமொன்றே இவ்வாறு முறிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வானிலை காரணமாக பல பகுதிகளில் மின்சார தடை

படக்குறிப்பு,வானிலை காரணமாக பல பகுதிகளில் மின்சார தடை

ரயில் சேவைகளில் பாதிப்பு

நாட்டின் பல்வேறு பகுதிகளில் வீசி வரும் கடும் காற்றுடனான வானிலை காரணமாக, ரயில் மார்க்கங்களில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவிக்கின்றது. இதனால், பல ரயில் மார்க்கங்களின் ஊடாக ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, புத்தளம் ரயில் மார்க்கத்தின் ஊடாக போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவிக்கின்றது.

வதுரவ மற்றும் கீனவல ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில் மார்க்கத்தில் மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளதை அடுத்து, அந்த ரயில் மார்க்கத்தின் ஊடாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மரம் முறிந்து வீழந்தமையினால், குறுந்தூர மற்றும் நெடுந்தூர ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

மின்சாரம் தடை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் வீசிய வரும் கடும் காற்றுடனான வானிலை

படக்குறிப்பு,நாட்டின் பல்வேறு பகுதிகளில் வீசிய வரும் கடும் காற்றுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்தும் வீசி வரும் கடும் காற்றுடனான வானிலை காரணமாக பல பகுதிகளில் மின்சார தடை ஏற்பட்டுள்ளது.

கடும் காற்றுடனான வானிலை காரணமாக மின்சார கம்பங்கள் மீது மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதை அடுத்தே இவ்வாறு மின்சாரம் தடைபட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவிக்கின்றது.

தடைபட்டுள்ள மின்சாரத்தை வழமைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மின்சார சபை குறிப்பிடுகின்றது.

இன்றைய வானிலை

கொழும்பு நகர் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் நேற்றிரவு கடும் காற்றுடனான வானிலை நிலவியிருந்தது

படக்குறிப்பு,கொழும்பு நகர் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் நேற்றிரவு கடும் காற்றுடனான வானிலை நிலவியிருந்தது

மேல், சபரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களில் இன்றைய தினம் இடைக்கிடை கடும் மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

மேல், சபரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் இன்றைய தினம் 100 மில்லிமீட்டருக்கு அதிக மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாக திணைக்களம் குறிப்பிடுகின்றது.

வடமத்திய மாகாணம், மன்னார் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இன்றைய தினம் இடைக்கிடை மழையுடனான வானிலை நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் வேகமானது, 50 முதல் 60 கிலோமீட்டர் வரை அதிகரித்து வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள வானிலை மாற்றத்தை அடுத்து, பொதுமக்களை அவதானித்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c8jgw401yxwo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீரற்ற காலநிலை - 1,757 பேர் பாதிப்பு; 365 வீடுகள் சேதம்; நாடெங்கும் 29,000 மின்தடைகள் பதிவு; மீனவர்களுக்கும் எச்சரிக்கை

30 MAY, 2025 | 05:38 PM

image

(எம்.மனோசித்ரா)

தென்மேற்கு பருவ பெயர்ச்சியால் நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 9 மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். புத்தளம், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, அம்பாந்தோட்டை, காலி, களுத்துறை, கொழும்பு, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் 485 குடும்பங்களைச் சேர்ந்த 1,757 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு 3 வீடுகள் முழுமையாகவும், 365 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதேவேளை கடந்த 27ஆம் திகதி புத்தளம் ஆராச்சிகட்டுவ பிரதேசத்தில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வியாழக்கிழமை (29) இரவு தெமட்டகொடை பிரதேசத்தில் தொழிற்சாலையொன்றின் மதில் சுவர் இடிந்து விழுந்ததில் பெண்கள் இருவர் உள்ளிட்ட மூவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காலநிலை

தென்மேற்கு பருவப் பெயர்ச்சி காரணமாக மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமையின் (2) பின்னரே காலநிலையில் மாற்றம் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 50 - 60 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதன் போது கடலோரப் பகுதிகளில் மணிக்கு 30 - 40 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடும் காற்று

கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் கடும் காற்றுடனான மழையால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதோடு, மின் கம்பங்களும் விழுந்துள்ளன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, பெரும்பாலான பிரதேசங்களில் மின்தடையும் ஏற்பட்டுள்ளது. அதற்கமைய கொழும்பில் பொரளை - லெஸ்லிவனகல மாவத்தை, கிரான்பாஸ், பம்பலப்பிட்டி, தெமட்டகொடை, மருதானை, ஜாவத்தை மற்றும் வெள்ளவத்தை உள்ளிட்ட பிரதேசங்களில் இவ்வாறு மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.

போக்குவரத்து பாதிப்பு

கொழும்பு - குருணாகல் பிரதான வீதியில் மினுவாங்கொட - அம்பஹா சந்தியில் மரமொன்று முறிந்து விழுந்ததால் அவ்வீதியூடான போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டன. ஜாஎல - மாதவிட்ட வீதி, குருணாகல் - படகமுவ வீதி, கினிகத்தேனை - நோட்டன் பிரிட்ஜ் பிரதான வீதி, அநுராதபுரம் - கல்நேவ உள்ளிட்ட வீதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தமையால் சில மணித்தியாலங்கள் அவ்வீதிகள் ஊடான போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டன.

மின் தடை

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாடு முழுவதும் மொத்தம் 29,015 மின் தடைகள் பதிவாகியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாக மின்சாரசபை தெரிவித்துள்ளது. மீட்பு செயல்முறையை விரைவுபடுத்த பழுதுபார்க்கும் குழுக்கள் பல பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏதேனுமொரு பிரதேசத்தில் மின் தடை ஏற்பட்டால் 1987 என்ற இலக்கத்துக்கு அழைத்து தகவல் வழங்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகையிரத சேவைகளில் தாமதம்

தண்டவாளங்களில் மரங்கள் முறிந்து விழுந்தமை, மண்மேடு சரிந்து விழுந்தமை என்பவற்றால் நேற்றைய தினம் பல புகையிரத சேவைகள் தாமதமடைந்தன. அதற்கமைய பிரதான புகையிர பாதை, களனிவெளி புகையிரத பாதை, புத்தளம் புகையிரத பாதை உள்ளிட்டவற்றின் ஊடான புகையிரத சேவைகள் இவ்வாறு தாமதமடைந்திருந்தன.

நடுக்கடலில் சிக்கிய மீனவர்கள்

பலப்பிட்டி கடற்பகுதியில் மூன்று மீனவர்கள் மீன்பிடிப்படகுடன் கடல் கொந்தளிப்பில் சிக்கிக் கொண்டனர். குறித்த மீனவர்கள் விமானப்படையினரால் உலங்கு வானூர்தியினால் மீட்கப்பட்டனர். இரத்மலானனையிலுள்ள விமானப்படை தளத்திலிருந்து பெல் 412 உலங்கு வானூர்தி மீட்புப் பணிகளில் ஈடுபட்டு, நடுக்கடலில் சிக்கியிருந்த மூன்று மீனவர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

சிலாபம் தொடக்கம் புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையும், காலியிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்கரைக்கு அப்பாற்பட்ட கடற்பகுதிகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 60 - 70 கிலோ மீற்றராகக் காணப்படும். எனவே குறித்த கடற்பகுதிகளில் மறு அறிவித்தல் வரை மீன்பிடி நடவடிக்கைகளுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/216117

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

69 மணித்தியாலங்களில் 72,012 மின்தடை :  தொடர் பணியில் எமது குழுவினர் : ஊழியர்கள் அல்ல அவர்கள் தேசிய வீரர்கள் - இலங்கை மின்சார சபை 

Published By: VISHNU

01 JUN, 2025 | 09:18 PM

image

கடந்த 69 மணித்தியாலங்களில் 72,012 மின்தடை குறித்த முறைப்பாடுகள் இலங்கை மின்சார சபைக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் தமிக்க விமலரத்த தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை (1) மாலை 5 மணி வரை கிடைக்கப்பெற்ற மின்தடை தொடர்பான முறைப்பாடுகளில் 41, 684 முறைப்பாடுகளுக்கான மின் விநியோகம் சீர் செய்யப்பட்டுள்ளதாக ஊடகப் பேச்சார் தம்மிக்க விமலரத்தன மேலும் குறிப்பிட்டார்.

இலங்கை மின்சார சபையின் மேலதிக பணியாளர்கள் 24 மணித்தியாலமும் கடமையில் ஈடுபட்டுள்ளதுடன் மின்வெட்டு தொடர்பான ஏனைய முறைப்பாடுகளை சீர்செய்வதில் மழை, காற்றையும் பொருட்படுத்தாது களத்தில் உள்ளதாக ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இது குறித்து ஊடகப் பேச்சாளர் தம்மிக்க விமலரத்த ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

கடும் மழை மற்றும் பலத்த காற்றுக்கு மத்தியிலும் இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள் கடும் பிரயத்தனங்களுக்கு மத்தியில் அமைதியாகவும் உறுதியுடனும் துணிச்சலுடன் பல நெருக்கடிகளுக்கு மத்தியில் பணியாற்றி வருகின்றனர்.

நாட்டின் பல பாகங்களிலும் மின்தடை, இதுவரை 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்தடை முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற நிலையிலும் எமது அணியினர் எவ்வித ஆரவாரமும் இன்றி நாட்டுக்காக தங்களை அர்ப்பணித்துள்ளனர். மின் தடை குறித்த முறைப்பாட்டு எண்ணிக்கை எமது நாட்டைப் பொறுத்தவரை அரிதானதாகும்.

ஆயினும் பெரும் குழப்பத்திற்கு மத்தியிலும் இலங்கை மின்சார சபையின் அணியினர் சரியான தருணத்தில் எவ்வித ஆரவாரமும் இல்லாது மன உறுதியுடன் களத்தில் உள்ளனர்.

மலையகத்திலும், உறைபனிக்கு மத்தியிலும் விடியற்காலையில் மூடுபனியிலும் கடமையில் ஈடுபட்டுவருகின்றனர்.  தொலைதூர கிராமங்களில், மின்சார பணியாளர்கள் தற்காலிக பாலங்களைக் கடந்தும் வெள்ள நீரில் முழங்கால் ஆழம் வரை நடந்தும் தோள்களில் கனமான மின் கம்பி சுருள்கள் மற்றும் ஏணிகளை சுமந்து சென்றும் கடமையாற்றுகின்றனர்.

சோர்வடைந்த கண்கள், நனைந்த சீருடைகள் மற்றும் மரத்துப்போன விரல்களுடன் அவர்கள் தொடர்ந்து களத்தில் பணியாற்றுகின்றனர். 

சில ஊழியர்கள் 16 மணி நேர கடமைநேரத்தில் இடைவேளை இல்லாமல் வேலை செய்தனர். சிலர் உணவைத் தவிர்த்தனர். ஏனையவர்கள் தூக்கமில்லாது இரவுகளைக் கழித்தனர்.

குறைந்த ஊழியர்கள் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட வளங்களை மட்டுமே கொண்டு அவர்கள் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் அர்ப்பணிப்புடன் கடமையில் ஈடுபட்டனர்.

இந்த மீளமைப்பு வெறும் தொழில்நுட்பப் பணி அல்ல. இவர்கள் ஊழியர்கள் அல்ல. அவர்கள் தேசிய வீரர்கள்.

எங்களுக்காக புயலைத் துணிச்சலுடன் எதிர்கொண்ட ஒவ்வொரு இலங்கை மின்சார சபை ஊழியர்களையும் நாங்கள் நன்றி உணர்வுடன் பார்க்கிறோம். நாங்கள் உங்களுக்கு நன்றி கூறுகிறோம். மேலும் நாங்கள் உங்களை வணங்குகிறோம். அதே போல் உங்கள் தைரியம் நம் அனைவரையும் ஒருவருக்கொருவர் தன்னலமற்ற முறையில் சேவை செய்ய ஊக்குவிக்கட்டும் என அந்த அநிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

WhatsApp_Image_2025-06-01_at_21.05.12_fa

WhatsApp_Image_2025-06-01_at_21.05.11_c4

WhatsApp_Image_2025-06-01_at_21.05.09_ba

WhatsApp_Image_2025-06-01_at_21.04.26_01

WhatsApp_Image_2025-06-01_at_21.04.25_98

WhatsApp_Image_2025-06-01_at_21.04.21_7c

WhatsApp_Image_2025-06-01_at_21.04.23_3c

WhatsApp_Image_2025-06-01_at_21.04.17_46

WhatsApp_Image_2025-06-01_at_21.04.20_ee

WhatsApp_Image_2025-06-01_at_21.04.10_cc

WhatsApp_Image_2025-06-01_at_21.04.15_3b

WhatsApp_Image_2025-06-01_at_21.04.15_14

WhatsApp_Image_2025-06-01_at_21.04.08_1b

WhatsApp_Image_2025-06-01_at_21.04.02_49

WhatsApp_Image_2025-06-01_at_21.04.07_f9

WhatsApp_Image_2025-06-01_at_21.03.54_db

WhatsApp_Image_2025-06-01_at_21.03.59_3a

WhatsApp_Image_2025-06-01_at_21.03.04_4d

WhatsApp_Image_2025-06-01_at_21.03.52_9d

https://www.virakesari.lk/article/216290

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.