Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் தோண்டத் தோண்ட வெளிவரும் மனித புதைகுழிகள் - இறுதி போரில் காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த விசாரணையின் நிலை என்ன?

இலங்கை, போர், காணாமல் ஆக்கப்பட்டோர், மனிதப் புதைகுழிகள், விசாரணை, யாழ்ப்பாணம்

பட மூலாதாரம்,JDS/FOD/CHRD/ITJP

கட்டுரை தகவல்

  • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்

  • பதவி, பிபிசி தமிழுக்காக

  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்

இலங்கையின் யாழ்ப்பாணத்தில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து தற்போது ஐந்து மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளன.

இலங்கையில் மனிதப் புதைகுழி கண்டறியப்படுவது இது முதல் முறை அல்ல. ஏற்கெனவே 22 இடங்களில் மனிதப் புதைகுழிகள் அறியப்பட்டுள்ள நிலையில் அங்கு எந்த முன்னேற்றமும் இல்லையென்றும் விசாரணை ஏமாற்றம் அளிப்பதாகவும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இதில் சர்வதேச ஆதரவும் நேர்மையான சட்ட நெறிமுறையும் வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இலங்கையில் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு 16 ஆண்டுகளாகியுள்ள நிலையில், போரினால் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படுவோரின் மனித புதைக்குழிகள் இன்றும் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.

இலங்கையில் இதுவரை 20ற்கும் அதிகமான மனித புதைக்குழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள போதிலும், அதன் விசாரணைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில், யாழ்ப்பாணம் - அரியாலை - சிந்துப்பாத்தி பகுதியிலிருந்து மனித எச்சங்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

இறுதியாக நடத்தப்பட்ட அகழ்வு பணிகள் வரை ஐந்து மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி எஸ்.நிரஞ்ஜன் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

''யாழ்ப்பாணம் நீதவான் ஏ.ஆனந்தராஜாவின் முன்னிலையில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. ஏற்கனவே ஐந்து எச்சங்களுடன், மனித மண்டையோட்டு எச்சங்களும், கால், கை, எலும்பு துண்டுகளும் எடுக்கப்பட்டு பொதி செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் சட்ட மருத்துவ அதிகாரி பிரணவனிடம் கையளிக்கப்பட்டுள்ளன.'' என சட்டத்தரணி எஸ்.நிரஞ்ஜன் குறிப்பிடுகின்றார்.

இலங்கை, போர், காணாமல் ஆக்கப்பட்டோர், மனிதப் புதைகுழிகள், விசாரணை, யாழ்ப்பாணம்

படக்குறிப்பு,சட்டத்தரணி எஸ்.நிரஞ்ஜன்

மேலும், 18ற்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், குறித்த பகுதியை மனித புதைக்குழியாக அறிவிக்குமாறு கோரி, சட்டத்தரணி எஸ்.நிரஞ்ஜன் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் வழக்கொன்றை வலிந்து காணாமல் போனோர் குடும்பங்கள் சார்பில் தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு மீதான விசாரணைகள் இன்றைய தினம் இடம்பெற்ற நிலையில், இந்தப் பகுதி மனித புதைக்குழி காணப்படும் பகுதியாக நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டதாக சட்டத்தரணி எஸ்.நிரஞ்ஜன் பிபிசி தமிழுக்கு குறிப்பிட்டார்.

''யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று இந்த வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ஏற்கனவே காணாமல் போனோர் குடும்பங்கள் சார்பில் நீதிமன்றத்தில் நாங்கள் விண்ணப்பத்தை செய்திருந்தோம், இதை மனிதப் புதைக்குழியாக அறிவிக்குமாறு. கௌரவ நீதவான் இது சம்பந்தமாக பேராசிரியர் ராஜ் சோமதேவ, சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் ஆகியோரிடம் அறிக்கைகளை கோரியிருந்தார். போலீஸாரிடமும் சில விடயங்களை வினாவியிருந்தார். அதனடிப்படையில் அவர்களின் அறிக்கைகளை வைத்துக்கொண்டு, இது மனிதப் புதைக்குழி என்று இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான உரிய பாதுகாப்பை போலீஸார் வழங்க வேண்டும் என்று சொல்லியும், இந்த விடயத்தில் அக்கறை கொண்டவர்களை சுழற்சி முறையிலும் பாதுகாப்புக்காக நியமிக்குமாறு கேட்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமை முடிவடையும். அதன் பின்னர் நிதி வசதிகளைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் மீண்டும் அந்த அகழ்வு பணிகள் தொடர்ந்தும் நடத்தப்படும்.'' என அவர் கூறுகின்றார்.

சிந்துப்பாத்தி மனிதப் புதைக்குழி

இலங்கை, போர், காணாமல் ஆக்கப்பட்டோர், மனிதப் புதைகுழிகள், விசாரணை, யாழ்ப்பாணம்

படக்குறிப்பு,முல்லைத்தீவு புதைக்குழி

யாழ்ப்பாணம் - அரியாலை - சிந்துப்பாத்தி பகுதியிலுள்ள மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைக்குழியின் அகழ்வு பணிகள் ஐந்து நாட்களாக தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

நான்காம் நாள் அகழ்வு பணிகள் நிறைவடையும் தருவாயில், ஐந்து மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் கண்டறியப்பட்டிருந்தன. இந்த நிலையில், குறித்த பகுதியில் தொடர்ந்தும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் யாழ்ப்பாண சட்ட மருத்துவ அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் மே 15ஆம் தேதி அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகின.

யாழ்ப்பாணம், செம்மணியில் அமைந்துள்ள சிந்துப்பாத்தி இந்து மயானத்தில், ஜூன் 2ஆம் தேதி, மண்டை ஓடுகள் கண்டறியப்பட்டுள்ளதாக அகழ்வினை மேற்பார்வையிடும் சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்ஜன் குறிப்பிடுகின்றார்.

யாழ்ப்பாணம் - செம்மணியவில் உள்ள சிந்துப்பாத்தி இந்து மயானத்தில் உள்ள சந்தேகத்திற்குரிய மனித புதைகுழியில், நிலம் அளவீட்டின் பின்னர், மே 15ஆம் தேதி, யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ. ஆனந்தராஜாவின் மேற்பார்வையின் கீழ் அகழ்வுப் பணிகள் முதலில் ஆரம்பிக்கப்பட்டன.

மே 16ம் தேதி அன்று அகழ்வு முடிந்ததும், குழியிலிருந்து பல மனித எலும்புகள் மீட்கப்பட்டன, மேலும் மழைக்காலம் காரணமாக இடைநிறுத்தப்பட்ட அகழ்வு ஜூன் 2ம் தேதி மீண்டும் ஆரம்பமானது.

சிந்துப்பாத்தி மயானத்தில் கடந்த பெப்ரவரி மாதம் 13ம் தேதி கட்டுமானப் பணிகளின் போது ஒரு மனித எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது. எலும்புத் துண்டுகளை பரிசோதிப்பதற்காக யாழ்ப்பாண சட்ட மருத்துவ அதிகாரி செல்லையா பிரணவனுடன் வருகைத்தந்த நீதிபதி ஏ.ஆனந்தராஜா, அவை மனித எச்சங்களா என்பது குறித்து விசாரணை நடத்துவதற்காக சட்ட மருத்துவ அதிகாரியிடம் ஒப்படைக்க பெப்ரவரி 20ம் தேதி அன்று பொலிஸாருக்கு உத்தரவிட்டார். மேலும், மே 15 ஆம் தேதி அகழ்வுப் பணிகளை ஆரம்பிக்க அவர் உத்தரவிட்டிருந்தார்.

அதற்கமைய, மே 15 ஆம் தேதி, அகழ்வுக்கான முதற்கட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது, புதைகுழிக்குச் சென்ற காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் நிர்வாக பணிப்பாளர் சட்டத்தரணி ஜெனகநாதன் தற்பரன், காணாமல் போனவர்களுக்கும் மனித புதைகுழிக்கும் இடையே தொடர்பு இருக்கலாம் என்ற அனுமானத்தின் அடிப்படையில், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் அகழ்வுக்கு உதவும் எனத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், அகழ்வு பணிகள் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.

சிந்துப்பாத்தி மனித புதைக்குழிக்கு அருகில் போராட்டம்

இலங்கை, போர், காணாமல் ஆக்கப்பட்டோர், மனிதப் புதைகுழிகள், விசாரணை, யாழ்ப்பாணம்

படக்குறிப்பு,இலங்கை மனிதப் புதைகுழி

யாழ்ப்பாணம் - அரியாலை - சிந்துப்பாத்தி பகுதியில் கவனயீர்ப்பு போராட்டமொன்று நடத்தப்பட்டது. சிந்துப்பாத்தி மனித புதைக்குழி அகழ்வானது, சர்வதேச கண்காணிப்பு மற்றும் நியமங்களுக்கு அமைய மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டார் சங்கத்தினால் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், போராட்டத்தின் பின்னர் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தனர்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணாமல் போனவர்களின் உறவினர் சங்கமான நாங்கள், தற்போது யாழ்ப்பாணம் - செம்மணி சிந்துப்பாத்தியில் நடந்து கொண்டிருக்கும் மனித புதைக்குழி அகழ்வு குறித்த எங்கள் தீவிரமான கவலையை வெளிப்படுத்துகிறோம் மற்றும் எங்கள் நிலைப்பாட்டை பகிர்ந்துகொள்கிறோம்.

''முன்னதாக, இலங்கையில் பெரும்பாலும் வடக்கு மற்றும் கிழக்கு தமிழ்ப் பகுதிகளில் 22 க்கும் மேற்பட்ட மனித புதைக்குழிகள் கண்டறியப்பட்டுள்ளன. உதாரணமாக மன்னார் சதொச மனித புதைக்குழி, திருக்கேதீஸ்வரம் மனித புதைக்குழி மற்றும் கொக்குத்தோடுவாய் மனித புதைக்குழிகள் அவற்றில் உள்ளடங்குகின்றன.

பல மனித புதைக்குழிகள் இன்னும் முழுமையாக அகழப்படவில்லை. ஏற்கனவே அகழப்பட்ட இடங்களிலும், உண்மை அல்லது நீதியாவது வழங்கப்படவில்லை. விசாரணைகள் ஏமாற்றமளிப்பதாகவும் உள்ளன.'' என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

''இந்த தோல்விகள் காரணமாக, காணாமல் போனவர்களின் குடும்பத்தினராகிய நாங்கள், உள்ளூர் விசாரணைகளை நம்ப முடியாத நிலைக்கு வந்துவிட்டோம். எனவே, காணாமல் போனவர்களையும் மனித புதைக்குழி அகழ்வுகளையும் விசாரிக்க சர்வதேச ஆதரவும், நேர்மையான சட்ட நடைமுறைகளும் இருக்க வேண்டும் என்பதைக் கோருகிறோம்'' என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்களின் கோரிக்கைகள் என்ன?

இலங்கை, போர், காணாமல் ஆக்கப்பட்டோர், மனிதப் புதைகுழிகள், விசாரணை, யாழ்ப்பாணம்

படக்குறிப்பு,காணாமல் ஆக்கப்பட்டோரை கண்டுபிடித்துத் தரக்கோரி உறவினர்கள் போராட்டம் (கோப்புப்படம்)

''செம்மணி சிந்துப்பாத்தியில், இதுவரை 14க்கும் மேற்பட்ட மனித உடல்களின் எச்சங்கள் அகழப்பட்டுள்ளன, அதில் சில சிறிய குழந்தைகளின் உடல்களும் அடங்கும். இந்த தகவல்கள், பலர் கொடூரமாக கொல்லப்பட்டு ஒரே இடத்தில் புதைக்கப்பட்டிருப்பதைக் காட்டுகின்றன.'' என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது,

''சர்வதேச சட்டத்தின்படி, பலரது உடல் எச்சங்கள் அடங்கிய மற்றும் சட்டவிரோதக் கொலைகளுடன் தொடர்புடைய எந்த ஒரு பிணைத்தளமும் மனித புதைக்குழியாக கருதப்பட வேண்டும். எனவே, இந்த இடத்தை அதிகாரபூர்வமாக மனித புதைக்குழியாக அறிவித்து, அகழ்வுப் பணி செம்மணி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு விரிவுபடுத்த வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம்.'' என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த கோரிக்கையை தவிர மேலும் சில கோரிக்கைகளை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் முன்வைத்து அறிக்கையை வெளியிட்டுள்ளது.

1. செம்மணி சிந்துப்பாத்தியில் நடைபெறும் அகழ்வை அதிகாரப்பூர்வமாக மனித புதைக்குழி விசாரணையாக அறிவிக்க வேண்டும்.

2. அகழ்வு சர்வதேச நிபுணர்கள் மேற்பார்வையின் கீழ், சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப மேற்கொள்ளப்பட வேண்டும்.

3. எல்லா ஆதாரங்களும் பாதுகாக்கப்பட வேண்டும். அகழ்வு வெளிப்படையாகவும் நேர்மையாகவும் நடைபெற வேண்டும்.

4. பத்திரிகையாளர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் குடும்பத்தினருக்கு, அகழ்வைப் பார்வையிடவும், தகவல் வெளியிடவும் முழு அனுமதி வழங்கப்பட வேண்டும்.

5. விரைவில் இலங்கைக்கு வரவிருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணியை நேரில் பார்வையிட்டு, உண்மை மற்றும் நீதியை உறுதிசெய்வதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொடர்ந்து வெளிவரும் மனிதப் புதைக்குழிகள்

இலங்கை, போர், காணாமல் ஆக்கப்பட்டோர், மனிதப் புதைகுழிகள், விசாரணை, யாழ்ப்பாணம்

பட மூலாதாரம்,JDS/FOD/CHRD/ITJP

படக்குறிப்பு, இலங்கையில் சுமார் 20க்கு மேற்பட்ட மனித புதைக்குழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன

இலங்கையில் சுமார் 20க்கு மேற்பட்ட மனித புதைக்குழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கடந்த வருடம் அறிக்கையொன்றின் ஊடாக அறிவித்திருந்த நிலையில், அந்த அறிக்கை வெளியிடப்பட்டதன் பின்னர் மேலும் மூன்று மனிதப் புதைக்குழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைக்குழி, கொழும்பு துறைமுக மனிதப் புதைக்குழி மற்றும் யாழ்ப்பாணம் - சிந்துப்பாத்தி மனிதப் புதைக்குழி ஆகியன கடந்த ஒரு வருட காலத்திற்குள் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைக்குழியாக பதிவாகியுள்ளன.

  1. யாழ்ப்பாணம் - துரையப்பா விளையாட்டு அரங்கம்

  2. யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைக்குழி

  3. யாழ்ப்பாணம் - மிருசுவில் மனிதப் புதைக்குழி

  4. கிளிநொச்சி - மனிதப் புதைக்குழி

  5. கிளிநொச்சி - கணேசபுரம் மனிதப் புதைக்குழி

  6. முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு மனிதப் புதைக்குழி

  7. முல்லைத்தீவு - 2 முல்லைத்தீவு மனிதப் புதைக்குழிகள்

  8. மன்னார் - மன்னார் மனிதப் புதைக்குழி

  9. மன்னார் - திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைக்குழி

  10. குருநாகல் - நிகவரபிட்டிய மனிதப் புதைக்குழி

  11. கம்பஹா - மினுவங்கொட வல்பிட்ட அரச பண்ணை

  12. கம்பஹா - எஸ்செல்ல மனிதப் புதைக்குழி

  13. கம்பஹா - வவுல்கெல்ல நித்தம்புல மனிதப் புதைக்குழி

  14. கொழும்பு - கோகந்தர மனிதப் புதைக்குழி

  15. கொழும்பு - பொல்கொட எரி மனிதப் புதைக்குழி

  16. மாத்தறை - அக்குரஸ்ஸ வில்பிட்ட மனித புதைக்குழி

  17. இறக்குவானை - சூரியகந்தை மனிதப் புதைக்குழி

  18. மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி மனிதப் புதைக்குழி

  19. மாத்தளை - மாத்தளை மருத்துவமனை மனிதப் புதைக்குழி

  20. கண்டி - அங்கும்புர மனிதப் புதைக்குழி

  21. முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைக்குழி

  22. கொழும்பு துறைமுக மனிதப் புதைக்குழி

  23. அரியாலை - சிந்துப்பாத்தி மனிதப் புதைக்குழி

மன்னார் மனிதப் புதைக்குழியும் அமெரிக்காவில் விசாரணையும்

இலங்கை, போர், காணாமல் ஆக்கப்பட்டோர், மனிதப் புதைகுழிகள், விசாரணை, யாழ்ப்பாணம்

படக்குறிப்பு, பீட்டாவின் அறிக்கை

மன்னாரில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைக்குழியிலிருந்து எடுக்கப்பட்ட மனித எச்சங்களில் மாதிரிகள் ஆய்வுகளுக்காக அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள பீட்டா ஆய்வு கூடத்தில் பல வருடங்களுக்கு முன்னர் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.

எனினும், அந்த மனித எச்சங்கள் ஐரோப்பிய ஆதிக்க காலத்திற்குச் சொந்தமானவை என பீட்டாவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனித எச்சங்கள் கிறிஸ்த்துக்கு பின் 1477 - 1642ஆம் ஆண்டு காலப் பகுதிக்கு இடைப்பட்டவை என அந்த அறிக்கையின் ஊடாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், இந்த விசாரணைகள் தொடர்பிலும் தமிழர்கள் சந்தேகங்களை வெளியிட்டு வருகின்றனர். குறித்த மனித எச்சங்கள் கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட்டு மாற்றப்பட்டு அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் தமிழர்கள் தமது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

இவ்வாறு முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை கடந்த கால அரசாங்கங்கள் நிராகரித்திருந்தன. இவ்வாறான நிலையிலேயே, தொடர்ச்சியாக அவ்வப்போது இவ்வாறான மனிதப் புதைக்குழிகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.

''மன்னார் சதொச, திருகேதீஸ்வரம், முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் புதைக்குழி விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சுமார் 57 புதைக்குழிகள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள போதிலும், 23, 24 புதைக்குழிகள் அகழப்பட்டுள்ளன.'' எனவும் சட்டத்தரணி எஸ்.நிரஞ்ஜன் குறிப்பிடுகின்றார்.

அரசாங்கத்தின் பதில் என்ன?

இலங்கை, போர், காணாமல் ஆக்கப்பட்டோர், மனிதப் புதைகுழிகள், விசாரணை, யாழ்ப்பாணம், இலங்கை அரசு

பட மூலாதாரம்,HARSHANA NANAYAKARA

யாழ்ப்பாணம் - சிந்துப்பாத்தி மனிதப் புதைக்குழி விவகாரம் குறித்து தாம் கவனம் செலுத்தியுள்ளதாக நீதித்துறை அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

இந்த மனிதப் புதைக்குழி தொடர்பில் தாம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cpqe3wqp7gno

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலவரங்களினால் உருவாக்கப்பட்ட மனித புதைகுழிகளை ஆராய இந்த அரசாங்கம் அனுமதிக்கின்றது என்றால்.....

எம்மவரின் தலை ஒன்று உருளப்போகின்றது என்று அர்த்தம்.

அது மட்டுமில்லாமல் பூவுடன் சேர்ந்த நாரும் நாறும் என்பது போல்......இலங்கையில் இனப்படுகொலை நடக்கவில்லை என ஆர்ப்பரித்தவரும் மாட்டிக்கொள்ளப்போகின்றார் போலுள்ளது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.