Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியப் பேரவை: பத்தாண்டு காலத் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வது? - நிலாந்தன்

504710956_4118247221774593_4808453404441

புதிய உள்ளூராட்சி  சபைகளை உருவாக்கும் விடயத்தில் தமிழ்க் கட்சிகளுக்கு இடையே நிகழும் போட்டா போட்டிகளும் உள்ளூராட்சி  சபைகளை ஒரு கட்சி கைப்பற்றிய பின் கட்சிகளின் விசுவாசிகள் சமூக வலைத்தளங்களில் மோதிக் கொள்ளும் காட்சிகளும் ஒரு விடயத்தைத் தெளிவாகக் காட்டுகின்றன. நடப்பது கட்சிகளுக்கு இடையிலான போட்டிதான். அதாவது தேர்தல்மைய அரசியல் தான். இதில் தேசத்தைத் திரட்டும் அரசியல் அல்லது தேசத்தைக்  கட்டியெழுப்பும் அரசியல் எங்கே இருக்கிறது?

தமிழ்த் தேசிய மக்கள்  முன்னணியின் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவை  ஒப்பீட்டளவில்  அதைச் செய்யலாம். அதற்கு  மூன்று காரணங்களைக் கூறலாம். முதலாவது காரணம், அது ஒப்பீட்டளவில் இறந்த காலத்தில் இருந்து கற்றுக் கொண்ட பாடங்களின் விளைவு என்று தோன்றுவது. இரண்டாவதாக,அது ஒப்பீட்டளவில் தமிழ்த் தேசிய அரசியலில் இப்போதைக்கு ஏதோ ஒரு வகையான பண்புருமாற்றத்தைப் பிரதிபலிக்கின்றது. மூன்றாவதாக அது ஒப்பீட்டளவில் உள்ளவற்றில் பெரிய கூட்டாகக் காணப்படுகின்றது.

பைபிளில் ஒரு வசனம் உண்டு,“பூமியிலே சூரியனுக்கு கீழே நூதனமானது எதுவுமே இல்லை”. இப்பொழுது உருவாக்கப்பட்டுவரும் புதிய பிரதேச சபைகளுக்கும் அது பொருந்தும். தமிழ்த்  தேசியப்  பேரவைக்கும் அது பொருந்தும். தமிழ்த் தேசியப் பேரவைக்குள் இருக்கும் கட்சிகளுக்குள் டெலோ மற்றும் சந்திரகுமாரின் கட்சிகளைத்தவிர ஏனைய கட்சிகள் தமிழ் மக்கள் பேரவைக்குள் இருந்தவைதான். அதாவது கிட்டத்தட்ட ஆறு ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மக்கள் பேரவைக்குள் ஒன்றாக இருந்தவை. அப்பொழுது தயாரித்த யாப்பு முன்மொழிவைத்தான் இப்பொழுது இறுதித் தீர்வுக்கான முன்மொழிவாக அவர்கள் வைக்கிறார்கள். அப்பொழுது இரண்டாவது எழுக தமிழில் சிறீதரனும் தனது ஆதரவாளர்களுடன் கலந்து கொண்டார்.

தமிழ்மக்கள் பேரவைக்குள் காணப்பட்ட சிவில் சமூகப் பிரதிநிதிகள், விக்னேஸ்வரனின் கட்சி ஆகிய இரண்டும் இப்போதுள்ள கூட்டுக்குள் இல்லை. புதிதாக சந்திரகுமாரும் டெலோவும்.

அப்படித்தான் கடந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது தமிழ்ப் பொது வேட்பாளரை முன் நிறுத்திய தரப்புகளில் பெரும்பாலானவை இப்பொழுது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோடு இணைந்து புதிய கூட்டுக்குள் காணப்படுகின்றன. அதாவது கிட்டத்தட்ட பத்து மாதங்களுக்கு முன்பு தமிழ்ப் பொது வேட்பாளருக்காக ஒன்றுதிரண்ட அதே தரப்புகள் இப்பொழுது சமத்துவக் கட்சி, சைக்கிள் கூட்டு என்பவற்றோடு இணைந்து ஒரு புதிய கூட்டாக மேலெழுந்திருக்கின்றன.

பத்து மாதங்களுக்கு முன்பு கஜேந்திரக்குமார் பொது வேட்பாளரை எதிர்த்தவர். அந்த விடயத்தில் அவரும் சுமந்திரனும் ஒரே கோட்டில் நின்றார்கள். இருவேறு நிலைப்பாடுகளோடு அவர்கள் பொது வேட்பாளரை எதிர்த்தார்கள். தேர்தலுக்குப் பின் கஜேந்திரக்குமார் பொது வேட்பாளருக்குக் கிடைத்த வாக்குகளைத் தேசியப் பண்புமிக்கவை என்று சொன்னார். இப்பொழுது அதே கட்சிகளோடு கூட்டு. ஆனால் மூன்று வித்தியாசங்கள். தமிழ்த் தேசியப் பொதுக்கூட்டமைப்பு இல்லை. விக்னேஸ்வரனின் கட்சி இல்லை. சந்திரகுமாரின் கட்சி உள்ளே வந்திருக்கிறது. அப்பொழுது சிறீதரன் பொது வேட்ப்பாளரோடு துணிந்து நின்றார்.

எனவே இப்பொழுது தொகுத்துப் பார்த்தால் என்ன தோன்றுகிறது? தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது தமிழ் மக்கள் பேரவையைப் பாதுகாக்க வேண்டும் என்ற முடிவெடுத்து கிட்டத்தட்ட ஏழு அல்லது எட்டு ஆண்டுகளுக்கு முன் பொறுமையாகவும் தீர்க்கதரிசனமாகவும் செயற்பட்டு இருந்திருந்தால்  இன்றைக்கு தமிழ்த் தேசிய அரசியலின் நிலைமை எங்கேயோ போயிருக்கும். அப்படித்தான் ஆகக்குறைந்தது கடந்த ஆண்டு பொது வேட்பாளரின் விடையத்திலாவது முன்னணி தீர்க்கதரிசனமாக முடிவெடுத்து இருந்திருந்தால் இன்றைக்கு முன்னணிதான் சிலசமயம் தமிழ்த் தேசிய அரசியலின் தலைமைச் சக்தியாக மேல் எழுந்திருந்திருக்கும். ஆனால் கடந்த சுமார் 10ஆண்டுகளில் அவர்கள் தீர்க்கதரிசனமற்ற முடிவுகளை எடுத்தார்கள். பகைவர்களைச் சம்பாதித்தார்கள். குறிப்பாக தமிழ்மக்கள் பேரவை, தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு ஆகிய நூதனமான கட்டமைப்புகளை பலப்படுத்தத் தவறினார்கள்.

தமிழ் மக்கள் பேரவை, தமிழ்த் தேசியப் பொதுக கட்டமைப்பு ஆகியவை இந்தப் பிராந்தியத்திலேயே நூதனமான அரசியல் தோற்றப்பாடுகள். கட்சிகளும் மக்கள் அமைப்புகளும் இணைந்து உருவாக்கிய ஒரு கலவை. அப்படி ஒரு கலவைதான் இப்பொழுது நாட்டை ஆளும் தேசிய மக்கள் சக்தியும். தமிழ்மக்கள் பேரவை படிப்படியாக பலமிழந்து போன ஒரு காலகட்டத்தில், 2019இல் தெற்கில் தேசிய மக்கள் சக்தி உருவாகியது. இன்றைக்கு அது ஆளுங்கட்சியாக எழுச்சி பெற்றுவிட்டது. அதற்கு முன் தோன்றிய தமிழ் மக்கள் பேரவையும் இப்பொழுது இல்லை. அதற்குப்பின் தோன்றிய தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பும் இப்பொழுது இல்லை. 10ஆண்டுகளில் தமிழ்மக்கள் இரண்டு தடவைகள்  மேலெழ முயன்றார்கள்  என்று பொருள்.

எனவே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கடந்த ஒரு தசாப்த காலத்தில் விட்ட தவறுகளில் இருந்து கற்றுக்கொண்டவற்றின் அடிப்படையில் புதிய கூட்டைப் பாதுகாக்குமாக இருந்தால் தமிழ்த் தேசிய அரசியலில் அடுத்த கட்டத்திற்கு தலைமை தாங்கும் சக்தியாக அவர்கள் தங்களை வளர்த்துக் கொள்ள முடியும்.

கடந்த ஆண்டின் தொடக்கத்தில் தனது சொந்தக் கட்சிக்காரர்களாலே நிராகரிக்கப்பட்டவரும், அதே ஆண்டின் இறுதியில் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டவருமாகிய சுமந்திரன் இப்பொழுது தமிழ் மக்கள் மத்தியில் உள்ள பெரிய கட்சி ஒன்றின் தீர்மானிக்கும் சக்திபோலச் செயற்படுகிறார். கட்சிக்குக் கிடைத்த வெற்றிக்கூடாக அவர் தன்னை ஸ்தாபித்துக் கொள்ளப் பார்க்கிறார். தமிழ் மக்கள் மத்தியில் வடக்கு கிழக்கு  தழுவிய ஒரே கட்சியாக அது காணப்படுகின்றது. அதனால்தான் அது ஏனைய கட்சிகளை விடவும் பலமாக மேலெழ முடிந்தது.

ஆனால் முன்னணி யாழ்ப்பாணத்துக்கு வெளியில் போதிய அளவுக்கு வேலை செய்யவில்லை என்பதுதான் உண்மை. கடந்த 15 ஆண்டுகளிலும் அவர்கள் ஒரு கட்சியாகவும் தங்களை வளர்த்துக்கொள்ளத் தவறிவிட்டார்கள்; தங்கள் கொள்கைகளை மக்கள் மயப்படுத்தி தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டவும் தவறிவிட்டார்கள். அதன் விளைவாக தமிழரசுக் கட்சியின் முதன்மையைக் கேள்விக்கு உள்ளாக்க அவர்களால் முடியவில்லை. கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ்மக்கள் வழங்கிய ஆணை என்பது மிகத்தெளிவானது. ஒன்றுபட்டால் மட்டும்தான் என்பிபியை எதிர்கொள்ளலாம் என்பதே அந்த ஆணை. வவுனியா உள்ளூராட்சி சபையில்  அதுதான் நிலைமை. ஒன்றுபடவில்லையென்றால் என்பிபி அடுத்த மாகாண சபைக்குள் மேலும் பலமாக கால்களை ஊன்றப் பார்க்கும்.

ஆனால் கடந்த சில வாரங்களாக புதிய உள்ளூராட்சி சபைகளை உருவாக்கும் விடயத்திலும், சபைகளைக் கைப்பற்றிய பின்னரும் தமிழ்த்சிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளுக்கு இடையே நடக்கும் உரையாடல்கள், வாதப் பிரதிவாதங்கள், மோதல்கள், குறிப்பாக அவர்களுடைய விசுவாசிகள் சமூக வலைத்தளங்களில் முன்னெடுக்கும் வெறுப்புப் பிரச்சாரங்கள் போன்றவற்றைத் தொகுத்துப்பார்த்தால் தெரிவது என்னவென்றால், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ்மக்கள் வழங்கிய ஆணையை மேற்படி கட்சிகள் சரியாகக் கிரகித்துக் கொள்ளவில்லை என்பதுதான். இந்த ஆணை புதியது அல்ல. கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் ஏறக்குறைய தமிழ் மக்கள் வழங்கிய ஆணை அத்தகையதுதான். தேசமாகத் திரளவில்லை என்றால் என்பிபியின் வழிகளை இலகுவாக்குவீர்கள் என்பதே.

எனவே பொது எதிரிக்கு எதிராகத் தேசமாகத் திரள்வது எப்படி என்பதுதான் இங்குள்ள சவால். சுமந்திரன் அதற்குத் தயாரில்லை என்பதற்காக, சிவிகே அந்த விடயத்தில் தளம்புகிறார் என்பதற்காக, தமிழரசுக் கட்சிக்குள் உள்ள எல்லாரையுமே அவ்வாறு தேசத் திரட்சிக்கு எதிரானவர்கள் என்று முத்திரை குத்த முடியாது; குத்தவுங்கூடாது. ஏனென்றால் தமிழரசுக் கட்சிக்குள் இப்பொழுது தெளிவாக இரண்டு அணிகள் உண்டு. அதில் சிறீதரன் அணியானது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிடம் பரிவோடு காணப்படுகிறது. எழுக தமிழ்கள்,பொது வேட்பாளர் ஆகிய இரண்டு தீர்மானகரமான தருணங்களிலும் சிறீதரன் மிகத்தெளிவான நிலைப்பாட்டை எடுத்தார். சந்திரக்குமாரை புதிய கூட்டுக்குள் உள்ளீர்த்ததன்மூலம் சிறீதரனுக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையிலான உறவில் சில நெருடல்கள் ஏற்படலாம். ஆனாலும் சுமந்திரனுக்கு எதிரான அணிச் சேர்க்கை என்று பார்க்கும் பொழுது சிறீதரன் அணி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குக் கிட்டவாகத்தான் நிற்கும்.

அதற்காக அரசியலை சுமந்திரனுக்கு எதிராக குவிமையப்படுத்தத் தேவையில்லை. மாறாக,தேசத்தைத் திரட்டுவது என்ற அடிப்படையில் கிராமங்களில் இருந்து தமிழ்த் தேசியப் பேரவையை எப்படிக் கட்டியெழுப்புவது என்று சிந்திக்கலாம். ஏறக்குறைய  ஏழு எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மக்கள் பேரவைக்குள் இருந்த பொழுது இதே கட்சிகள்தான் எழுக தமிழ்களைச் செய்தன. மக்கள் எழுச்சிகள்தான் அரசியலில் புதிய ரத்தச் சுற்றோட்டங்களை ஏற்படுத்தும்.அவ்வாறான மக்கள்  எழுச்சிகளுக்குரிய உணர்ச்சிகரமான தொடக்கப் புள்ளிகள் ஏற்கனவே உண்டு. உதாரணமாக தையிட்டி.அடுத்தது, கிழக்கில் மேய்ச்சல் தரை.மன்னாரில் கனியவள மண் அகழ்வு.இவை தவிர அண்மைக் காலமாக கிண்டப்பட்டு வரும் செம்மணிப் புதைகுழி.

498185341_2981946991974411_2871508700503

செம்மணிப் புதைக்குழு ஓர் உணர்ச்சிகரமான விடயம்.அது தமிழ் மக்களை வீதிக்குக் கொண்டுவரும்.அங்கே இதுவரையிலுமான 19 எலும்புக்கூடுகள்  அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. அது ஒரு சுடலை.அரியாலை மக்களுக்கான சித்துப்பாத்தி மயானம்.அங்கே யாரையும் புதைப்பதில்லை.அங்கு கண்டெடுக்கப்பட்ட  எலும்புக் கூடுகள் ஆடைகளோடு இல்லை.பொதுவாக பூத உடல்களை நிர்வாணமாக எரிப்பதும் இல்லை;புதைப்பதும் இல்லை.அந்தப் பகுதியில் சுமார் 600க்கும் குறையாதவர்கள் கொன்று புதைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கத் தேவையான  தகவல்களை சம்பந்தப்பட்ட படைத்தரப்பினரே  நீதிமன்றங்களில் வாக்குமூலங்களாக வழங்கியிருக்கிறார்கள்.

இப்பொழுது அப்புதை குழி  கிண்டப்படுகிறது. அங்கே புதைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றவர்களின் உறவினர்கள் அப்புதை குழிக்குள் தங்களுடைய உறவுகளின் ஏதாவது ஒரு தடையம்  அல்லது மிச்சம் இருக்குமா என்ற தவிப்போடு அங்கே வந்திருக்க வேண்டும். உக்காத ஒரு சேலைத் துண்டு அல்லது ஒரு செருப்பு அல்லது பிளாஸ்டிக் காப்பு போன்ற ஏதாவது ஒரு தடயம் அங்கே கிடைக்குமா என்ற பதட்டங் கலந்த தவிப்போடு  அப்பகுதிக்கு இதுவரை எத்தனை பேர் வந்திருக்கிறார்கள்?

இந்த இடத்தில் தென்னிலங்கையில் 2012இல் மாத்தளைப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்ட பொழுது,அப்பொழுது உயிரோடு இருந்த மனித உரிமைச்  செயற்பாட்டாளர் ஆகிய சுனிலா அபயசேகர தெரிவித்த ஒரு கருத்தை இங்கு சுட்டிக்காட்டலாம்.மாத்தளை  ஆஸ்பத்திரி வளாகத்தில் 150க்கும் குறையாத எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.அதுதொடர்பாக சுனிலா,”சண்டே டைம்ஸ்” பத்திரிக்கைக்கு வழங்கிய நேர்காணலில் ஒரு விடயத்தைச் சுட்டிக் காட்டியிருந்தார்.“இதுவே லத்தீன் அமெரிக்க நாடாக இருந்தால் அங்கே இப்படி ஒரு புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டால்,காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அந்த இடத்தை நோக்கிக் குவிந்திருப்பார்கள்.ஆனால் இலங்கையிலோ நிலைமை அவ்வாறில்லை. யாரும் அந்த இடத்திற்கு வரவில்லை” என்ற பொருள்பட சுனிலா கவலையோடு கருத்துத் தெரிவித்திருந்தார். மாத்தளையில் மட்டுமல்ல செம்மணியிலும் நிலைமை அதுதானா?

இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாதத் தொடக்கத்தில் ஐநா மனித உரிமைகள் ஆணையர் செம்மணிப் புதை குழியைப் பார்வையிட வருகிறார்.செம்மணிப் புதைகுழி போல ஏற்கனவே மன்னார் புதைக்குழி,கொக்குத்தொடுவாய் புதைக்குழி என்று பல புதைக்குழிகள் உண்டு.எனவே  புதைக்குழிகள் தொடர்பான சுதந்திரமான விசாரணையைக் கேட்டு தமிழ் மக்களை வீதியில் இறக்கலாம்.கடந்த ஐந்தாம் திகதி யாழ்ப் பல்கலைக்கழக மாணவர்கள் அதுதொடர்பான ஒரு கவன ஈர்ப்பு போராட்டத்தை செம்மணியில் ஒழுங்குபடுத்தியிருந்தார்கள்.

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான  போட்டா போட்டிகளை ஒரு பக்கம் வைத்துவிட்டு  புதைக்குழிகளின் மீது கட்சிகள் கவனத்தைத் திருப்புமா?குறிப்பாக தமிழ்த் தேசிய பேரவைக்குள் உள்ள கட்சிகளுக்கு  ஏற்கனவே “எழுக தமிழ்” செய்த அனுபவம் உண்டு.மக்களை எழுச்சிபெறச் செய்வதென்றால் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் எதையாவது காட்டவேண்டும்.அல்லது உணர்ச்சிக் கொதிப்பான ஏதாவது ஒன்று நடக்கவேண்டும்.தமிழ்த் தேசிய அரசியலில் எதிரும் புதிருமாக இருந்த தரப்புகள் ஒன்றாகத் திரளும்பொழுது அது மக்கள் மனதில் புதிய நம்பிக்கைகளை உருவாக்கும். கடந்த பௌர்ணமி நாளன்று தையிட்டியில் வழமையைவிடக் கூடுதலானவர்கள் திரண்டார்கள்.அது ஐக்கியத்தின் பலம்.

அதுபோலவே செம்மணிப் புதைகுழிக்கு நீதி கேட்டு மக்களை வீதிக்கு கொண்டு வரலாம்.தனது கட்சிக்காரருக்கு எதிராகவும் ஏனைய கட்சிகளுக்கு எதிராகவும் வழக்குப்போடும்  அரசியல்வாதிகள் இந்தவிடயத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழக்குப்போடலாம். அவர்கள் அதைச் செய்வார்களோ இல்லையோ தமிழ்த் தேசிய பேரவையைப் பொறுத்தவரை அது ஒரு தேர்தல் மையக் கூட்டு அல்ல மக்கள்மைய அரசியலுக்கான ஒரு தொடக்கமே என்பதனை நிரூபிப்பதற்கான பொருத்தமான களம் அது.

https://www.nillanthan.com/7457/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.