Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விமானங்கள், கருப்புப் பெட்டி, வரலாறு, விமானப் போக்குவரத்து

பட மூலாதாரம்,WARREN FAMILY COLLECTION

படக்குறிப்பு, ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு விமான விபத்தில் ஹூபர்ட் வாரன் (இடது) இறந்தார்.

கட்டுரை தகவல்

  • எழுதியவர், ரெபேக்கா சீல்ஸ்

  • பதவி, பிபிசி நியூஸ்

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

1934ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை, மிஸ் ஹோபார்ட் என்ற பயணிகள் விமானம் கடலில் விழுந்தது.

அதில் பயணித்த 8 ஆண்கள், 3 பெண்கள் மற்றும் ஒரு ஆண் குழந்தை என அனைவரும் உயிரிழந்தனர். டாஸ்மேனியாவிற்கும் ஆஸ்திரேலியாவின் பிரதான நிலப்பகுதிக்கும் இடையில் அமைந்துள்ள பாஸ் நீரிணை பகுதியில் அந்த விமானம் விழுந்ததாக நம்பப்படுகிறது.

விமானத்தின் சிதைவுகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

அந்த விமானத்தில் இருந்தவர்களில் ஒருவர் 33 வயதான ஆங்கிலிகன் மிஷனரி ரெவரெண்ட் ஹூபர்ட் வாரன். அவர் சிட்னியின் என்ஃபீல்டில் உள்ள தனது புதிய திருச்சபைக்குச் சென்று கொண்டிருந்தார். அவரது மனைவி எல்லி மற்றும் 4 குழந்தைகள் அவருடன் பயணிக்கவில்லை.

தனது எட்டு வயது மகன் டேவிட்டிற்கு, ஹூபர்ட் கடைசியாக ஒரு பரிசு அளித்திருந்தார். அது ஒரு கிரிஸ்டல் வானொலிப் பெட்டி, அதை அந்தச் சிறுவன் மிகவும் பொக்கிஷமாகப் பாதுகாத்து வைத்திருந்தார்.

டாஸ்மேனியாவில் உள்ள லான்செஸ்டன் ஆண்கள் பள்ளியில் தங்கியிருந்த டேவிட் வாரன், வகுப்புகளுக்குப் பிறகு அந்த வானொலியை ஆய்வு செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். வானொலி மூலம் கிரிக்கெட் போட்டிகளைக் கேட்க நண்பர்களிடம் ஒரு பைசா என கட்டணம் வசூலித்தார். சில வருடங்களுக்குள் தான் சொந்தமாக தயாரித்த சிறு வானொலிகளை ஒவ்வொன்றும் ஐந்து ஷில்லிங் என்ற விலையில் விற்றார்.

டேவிட் ஒரு துடிப்பான இளைஞனாகவும் அற்புதமான பேச்சாளராகவும் இருந்தார். ஆழ்ந்த மதப்பற்று கொண்ட அவரது குடும்பத்தினர், அவர் ஒரு சுவிசேஷப் பிரசாரகர் ஆக வேண்டும் என்று கனவு கண்டனர்.

ஆனால் அது நடக்கவில்லை. தந்தை ரெவ் ஹூபர்ட் அளித்த அந்தப் பரிசு, டேவிட்டிற்கு அறிவியல் மீது பெரும் காதல் ஏற்பட வழிவகுத்தது.

வருங்காலத்தில் பல உயிர்களைக் காப்பாற்றுவதில் அந்தக் காதல் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தது.

ஏஆர்எல் ஆய்வகத்தில் ஆராய்ச்சியாளராகப் பணி

விமானங்கள், கருப்புப் பெட்டி, வரலாறு, விமானப் போக்குவரத்து

பட மூலாதாரம்,WARREN FAMILY COLLECTION

படக்குறிப்பு, டேவிட் பள்ளி மாணவனாக இருந்தபோது, மின்னணு சாதனங்களால் ஈர்க்கப்பட்டு, சொந்தமாக வானொலி பெட்டிகளை உருவாக்கக் கற்றுக்கொண்டார்.

டேவிட் வாரன் தனது இருபதுகளின் நடுப்பகுதியில், சிட்னி பல்கலைக்கழகத்தில் அறிவியல் பட்டப்படிப்பு, மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் கல்வியில் டிப்ளமோ மற்றும் லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் வேதியியலில் முனைவர் பட்டம் ஆகிய படிப்புகளை முடித்தார்.

அவரது நிபுணத்துவம் ராக்கெட் அறிவியல். எனவே அவர் ஆஸ்திரேலியாவின் பாதுகாப்புத் துறையின் ஒரு அங்கமான விமான ஆராய்ச்சி ஆய்வகங்களில் (ARL- ஏஆர்எல்) ஆராய்ச்சியாளராகப் பணியாற்றச் சென்றார். அத்துறை விமானங்களில் கவனம் செலுத்தியது.

ஏஆர்எல் துறை 1953ஆம் ஆண்டில், ஒரு முக்கியமான மர்மத்தைத் தீர்க்க முயற்சிக்கும் ஒரு நிபுணர் குழுவிடம் டேவிட்டை அனுப்பிவைத்தது.

உலகின் முதல் வணிக ஜெட் விமானமும் புதிய ஜெட் யுகத்தின் பெரும் நம்பிக்கையுமான, பிரிட்டிஷ் டி ஹாவிலேண்ட் காமெட் (de Havilland Comet) விமானம் ஏன் தொடர்ந்து விபத்துகளை சந்தித்தது? என்பதே அந்த மர்மம்.

அதற்கு காரணம் எரிபொருள் டேங்காக இருக்கலாம் என்று டேவிட் நினைத்தார். ஆனால் பல்வேறு சாத்தியமான காரணங்கள் இருந்தன.

இருப்பினும், மனித உடல்கள் மற்றும் விமான பாகங்கள் தவிர ஆதாரம் என வேறு எதுவும் இந்த விபத்துகளில் இருந்து கிடைக்கவில்லை.

"விமானியின் தவறுகளா, ஊழியர்களுக்கான பயிற்சி போதவில்லையா, விமானத்தின் வால் பகுதி உடைந்ததா என எனக்குத் தெரியாத பிற விஷயங்களைப் பற்றி அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்," என்று டாக்டர் டேவிட் வாரன் 50 ஆண்டுகளுக்கு முன் நடந்ததை நினைவு கூர்ந்தார்.

"ஒரு வாரத்திற்கு முன்பாக தான், இரண்டாம் உலகப் போருக்கு பிந்தைய முதல் வர்த்தக கண்காட்சி சிட்னியில் நடைபெற்றது. அதில் நான் பார்த்த ஒரு பொருளைப் பற்றி அந்த கூட்டத்தில் யோசித்துக் கொண்டிருந்தேன். அதுதான் - முதல் பாக்கெட் ரெக்கார்டர் (Pocket recorder) என்று கூறப்படும் மினிஃபோன். ஒரு ஜெர்மன் சாதனம். அதற்கு முன்பு அது போன்ற ஒரு சாதனம் இருந்ததில்லை."

விமானங்கள், கருப்புப் பெட்டி, வரலாறு, விமானப் போக்குவரத்து

பட மூலாதாரம்,DEFENCE SCIENCE AND TECHNOLOGY, AUSTRALIA

படக்குறிப்பு, 1958 ஆம் ஆண்டு ஏஆர்எல் அமைப்பில் டேவிட்

வணிகர்களுக்கான ஒரு 'டிக்டேஷன்' இயந்திரமாக மினிஃபோன் சந்தைப்படுத்தப்பட்டது. இந்த இயந்திரம் மூலம் ஒருவர் தனது பேச்சை அல்லது தகவலை எங்கிருந்து வேண்டுமானாலும் பதிவு செய்யலாம், பின்னர் அவர்களின் உதவியாளர்களால் அது தட்டச்சு செய்யப்படும்.

ஸ்விங் இசை ரசிகரான டேவிட், ஜாஸ் இசைக்கலைஞர் வூடி ஹெர்மனின் இசையைப் பதிவு செய்ய ஒரு மினிஃபோன் கிடைத்தால் போதுமென விரும்பினார்.

இருப்பினும், அவரது சக விஞ்ஞானிகளில் ஒருவர், கடைசியாக விபத்துக்குள்ளான காமெட் விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்று கூறிய போது, அவருக்கு ஒரு யோசனை எழுந்தது.

ஒரு ரெக்கார்டர் விமானத்தில் இருந்து, அது தீ விபத்தில் இருந்து தப்பித்திருக்க வாய்ப்புகள் இல்லை. ஆனால் வானத்தில் பறக்கும் ஒவ்வொரு விமானத்தின் காக்பிட்டிலும் ஒரு மினி ரெக்கார்டர் இருந்தால்?

அது சாத்தியம் என்றால், விபத்து குறித்து புலனாய்வு செய்பவர்கள் மீண்டும் ஒருபோதும் இவ்வளவு குழப்பமடைய மாட்டார்கள். ஏனென்றால் விபத்து நடந்த தருணம் வரை பதிவான அவர்களிடம் ஆடியோ இருக்கும். குறைந்தபட்சம், விமானிகள் என்ன சொன்னார்கள், என்ன கேட்டார்கள் என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கும்.

அந்த யோசனை அவரை மிகவும் கவர்ந்தது. ஏஆர்எல்-க்கு திரும்பியதும், அதைப் பற்றி தனது மேலதிகாரியிடம் சொல்ல விரைந்தார்.

ஆனால், மேலதிகாரி அவரது உற்சாகத்தைப் புரிந்து கொள்ளவில்லை. "இது வேதியியலோ அல்லது எரிபொருட்களோ சம்பந்தப்பட்டதல்ல. நீங்கள் ஒரு வேதியியலாளர். எனவே இந்தப் பிரச்னையை கருவிகள் குழு கையாளட்டும்" என்று தன்னிடம் கூறப்பட்டதாக டாக்டர் டேவிட் வாரன் சொல்கிறார்.

'இதை வெளியே பேசினால், வேலை பறிக்கப்படும்'

விமானங்கள், கருப்புப் பெட்டி, வரலாறு, விமானப் போக்குவரத்து

பட மூலாதாரம்,WARREN FAMILY COLLECTION

படக்குறிப்பு, டேவிட், அவரது மனைவி ரூத் மற்றும் அவர்களது நான்கு குழந்தைகள் (1958)

காக்பிட் ரெக்கார்டர் குறித்த தனது யோசனை சிறப்பானது தான் என்று டேவிட் அறிந்திருந்தார். ஆனால் அதிகாரப்பூர்வ ஆதரவு இல்லாமல், அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. அந்த யோசனையை மனதில் இருந்து அகற்றவும் முடியவில்லை.

அவரது மேலதிகாரி பதவி உயர்வு பெற்று சென்றபிறகு, டேவிட் மீண்டும் தனது யோசனையை முன்வைத்தார். அவரது புதிய மேலதிகாரியும், ஏஆர்எல்-இன் தலைமை கண்காணிப்பாளர் டாக்டர் லாரி கூம்ப்ஸும் இதில் ஆர்வம் காட்டினர். அவர்கள் அவரை அதில் தொடர்ந்து பணியாற்றுமாறு வற்புறுத்தினர் - ஆனால் ரகசியமாக.

இது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட முயற்சியோ அல்லது போரில் வெற்றிபெற உதவக்கூடிய ஒரு ஆயுதமோ இல்லை என்பதால், அதற்கென ஆய்வக நேரத்தையோ பணத்தையோ ஒதுக்க முடியாது.

"இந்த விஷயத்தைப் பற்றி நீங்கள் யாரிடமாவது பேசுவதைக் கண்டால், நான் உங்களைப் பணிநீக்கம் செய்ய வேண்டியிருக்கும்" என்று தலைமை கண்காணிப்பாளர் தன்னை எச்சரித்ததாக டாக்டர் டேவிட் வாரன் கூறினார்.

மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளைக் கொண்ட ஒரு இளைஞனுக்கு அது சற்று கவலைக்குரியதாகவே இருந்தது.

ஆனால் அவரது மேலதிகாரியின் ஆதரவுடன், புதிய டிக்டேஷன் ரெக்கார்டர்களில் ஒன்றை மறைமுகமாக வாங்கி, அதை 'ஆய்வகத்திற்குத் தேவையான ஒரு கருவி' என்ற பட்டியலில் சேர்த்தார் டேவிட்.

அதன் பிறகு உற்சாகமடைந்த டாக்டர் டேவிட் வாரன், "விமான விபத்துகள் பற்றிய விசாரணைக்கு உதவும் ஒரு சாதனம்" என்ற தலைப்பிட்ட ஒரு அறிக்கையில் தனது யோசனையை எழுதி, அதைத் துறை முழுவதும் அனுப்பினார்.

விமானிகள் சங்கம் அதற்கு கோபத்துடன் பதிலளித்தது, அந்த ரெக்கார்டரை ஒரு உளவு பார்க்கும் சாதனம் என்று முத்திரை குத்தியது. "இந்த உளவு சாதனம் பொருத்திக் கொண்டு ஆஸ்திரேலியாவில் இருந்து எந்த விமானமும் புறப்படாது" என்றும் வலியுறுத்தியது.

ஆஸ்திரேலிய சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் இந்த சாதனத்திற்கு 'உடனடி முக்கியத்துவம் இல்லை' என்று அறிவித்தனர். இத்தகைய யோசனை 'விளக்கங்களை விட அதிக அவதூறுகளுக்கே வழிவகுக்கும்' என்று விமானப்படை அஞ்சியது.

அனைத்து முயற்சிகளையும் நிறுத்தி விடலாமா என்ற எண்ணம் டாக்டர் வாரனுக்கு எழுந்தது.

டேவிட்டின் பிடிவாத குணம்

விமானங்கள், கருப்புப் பெட்டி, வரலாறு, விமானப் போக்குவரத்து

பட மூலாதாரம்,AFP/GETTYIMAGES

படக்குறிப்பு, கருப்புப் பெட்டி என்று அழைக்கப்பட்டாலும் உண்மையில் அது ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.

இருப்பினும், டாக்டர் டேவிட் வாரனின் மூத்த மகனான பீட்டரின் கூற்றுப்படி, "டேவிட் பிடிவாத குணம் கொண்டவர். அவரின் சுதந்திர மனப்பான்மை, அவரது வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயத்திலும் ஆதிக்கம் செலுத்தியது".

அந்த குணம் தான் டேவிட் வாரனை தொடர்ந்து முயற்சி செய்ய வைத்தது. தனது கேரேஜுக்கு சென்ற டேவிட், தனது 20 வருட பழைய வானொலி பாகங்களை ஒன்று சேர்த்தார். தன் மீதான விமர்சனங்கள், கேலிகள் மற்றும் சந்தேகத்தைப் போக்க ஒரே வழி, ஒரு வலிமையான முன்மாதிரி சாதனத்தை உருவாக்குவதுதான் என்று அவர் முடிவு செய்தார்.

அதுதான் உலகின் முதல் விமான ரெக்கார்டர் அல்லது கருப்புப் பெட்டி.

ஒரு சிறிய விமான ரெக்கார்டர் உருவாக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்ட பிறகு, 1958ஆம் ஆண்டில், ஒருநாள் ஏஆர்எல் ஆய்வகத்திற்கு எதிர்பாராத ஒரு விருந்தினர் வந்தார். தலைமை கண்காணிப்பாளர் டாக்டர் கூம்பஸ், பிரிட்டனைச் சேர்ந்த ஒரு நண்பருக்கு ஆய்வகத்தைச் சுற்றிக் காட்டிக் கொண்டிருந்தார்.

"டேவிட், நீ என்ன செய்கிறாய் என்பதை என் நண்பரிடம் சொல்" என கூம்பஸ் கூறினார்.

அதைத் தொடர்ந்து டாக்டர் டேவிட் வாரன் விளக்கினார்.

தான் உருவாக்கிய உலகின் முதல் முன்மாதிரி விமான ரெக்கார்டர் கொண்டு, நான்கு மணிநேர விமானிகளின் உரையாடல்கள் மற்றும் கருவிகளின் தரவுகளை சேமிக்க முடியும் என்றும், அதற்கு எஃகு கம்பியைப் பயன்படுத்துவதாகவும் டேவிட் கூறினார்.

இது பழைய பதிவுகளை தானாகவே அழித்துவிடும் என்பதால், இந்த ரெக்கார்டர் மீண்டும் மீண்டும் பயன்படுத்தக் கூடியதாக இருந்தது என்பதையும் அவர் விளக்கினார்.

அந்த நண்பருக்கோ பெரும் ஆச்சரியம்.

"கூம்ப்ஸ் இதுவோரு நல்ல யோசனை. இந்த பையனை அடுத்த கூரியரில் லண்டனுக்கு அனுப்பு. இதை லண்டனில் உள்ளவர்களுக்கு காண்பிப்போம்." என்றார் அவர்.

இங்கு அவர் குறிப்பிட்ட கூரியர் என்பது, பிரிட்டனுக்கு வழக்கமாக பறந்துகொண்டிருந்த 'ஹேஸ்டிங்ஸ் போக்குவரத்து விமானம்'. ஆனால் அதில் ஒரு டிக்கெட்டை பெற வேண்டும் என்றால், மிகவும் சக்தி வாய்ந்த ஒருவரை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட விமானத்தின் டிக்கெட்டுகளை தன் இஷ்டத்திற்கு வழங்கும் இந்த மனிதர் யார் என்று டாக்டர் வாரன் யோசித்தார்.

அதற்கு பதில், ராபர்ட் ஹார்டிங்ஹாம் (பின்னர் சர் ராபர்ட்), பிரிட்டிஷ் விமானப் பதிவு வாரியத்தின் செயலாளர் மற்றும் பிரிட்டனின் ராயல் ஏர் ஃபோர்ஸின் முன்னாள் ஏர் வைஸ்-மார்ஷல்.

பிரிட்டனுக்கு ரகசிய பயணம்

விமானங்கள், கருப்புப் பெட்டி, வரலாறு, விமானப் போக்குவரத்து

பட மூலாதாரம்,FAIRFAX MEDIA VIA GETTY IMAGES

படக்குறிப்பு, ஒரு மினிஃபோனுடன் டேவிட் வாரன் (2002)

டேவிட்டின் வார்த்தைகளில், "ராபர்ட் ஒரு ஹீரோ. அவர் கூம்ப்ஸின் நண்பர். அவர் ஒரு இடத்தைக் கொடுத்தால், நீங்கள் அதை ஏற்றுக்கொள்வீர்கள்."

சில வாரங்களுக்குப் பிறகு, டாக்டர் வாரன், பிரிட்டன் செல்லும் விமானத்தில் ஏறினார். ஆனால், அவர் உண்மையில் என்ன செய்யப்போகிறார் என்பதை ஆஸ்திரேலிய பாதுகாப்புத் துறையிடம் சொல்லக் கூடாது என்ற கடுமையான உத்தரவுகளுடன் அவர் பயணித்தார்.

நம்பமுடியாத ஒரு முரண்பாடாக, அந்த விமானம் மத்திய தரைக்கடல் பகுதியில் பயணத்தபோது அதன் ஒரு இயந்திரம் செயலிழந்தது.

டாக்டர் வாரன் நினைவு கூர்ந்தார்: "விமானத்தில் இருந்தவர்களிடம் 'அன்பர்களே, நாம் ஒரு இயந்திரத்தை இழந்துவிட்டோம் - யாராவது திரும்பிச் செல்ல விரும்புகிறீர்களா?' எனக் கேட்டேன். ஆனால் துனீசியாவில் சுமார் 45 டிகிரி வெப்பநிலை நிலவியது என்பதால், அந்த நரகத்திற்குத் நாங்கள் திரும்பிச் செல்ல விரும்பவில்லை."

தொடர்ந்து விமானத்தை இலக்கை நோக்கி இயக்கினால் தப்பித்துவிடலாம் என்று அவர்கள் நினைத்தார்கள்.

தடுமாறிக் கொண்டிருந்த அந்த விமானத்தில் தான் இறந்தாலும் பரவாயில்லை, ஆனால் தன்னை கேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்பதற்காக மீதமுள்ள விமானப் பயணத்தை ரெக்கார்டரில் பதிவு செய்தார் டேவிட்.

"ஆனால் துரதிர்ஷ்டவசமாக எங்களுக்கு எதுவும் நடக்கவில்லை. நாங்கள் பாதுகாப்பாக தரையிறங்கிவிட்டோம்." என்றார் டேவிட்.

பிரிட்டனில், 'ஏஆர்எல் விமான நினைவக அமைப்பு' என்ற பெயரில் ராயல் ஏரோநாட்டிக்கல் எஸ்டாப்ளிஷ்மென்ட் மற்றும் சில வணிக கருவிகள் தயாரிப்பாளர்களுக்கு தனது கண்டுபிடிப்பை முன்வைத்தார்.

பிரிட்டிஷ்காரர்கள் இதை விரும்பினர். பிபிசி இதை ஆய்வு செய்யும் வகையில் தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சிகளை நடத்தியது. பிரிட்டிஷ் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் சிவில் விமானங்களில் இந்த சாதனத்தை கட்டாயமாக்கும் பணியைத் தொடங்கியது.

மிடில்செக்ஸ் நிறுவனமான 'எஸ் டேவல் அண்ட் சன்ஸ்', உற்பத்தி உரிமைகள் குறித்து ஏஆர்எல் அமைப்பை அணுகி, உற்பத்தியைத் தொடங்கியது.

இந்தக் கருவி 'கருப்புப் பெட்டி' என்று அழைக்கப்பட்டாலும், விபத்துக்குப் பிறகு அவற்றைக் கண்டுபிடிப்பது எளிதாக இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக அவை ஆரஞ்சு நிறத்தில் உருவாக்கப்பட்டன. இன்றும் அவை அப்படியே இருக்கின்றன.

'கருப்புப் பெட்டி'

விமானங்கள், கருப்புப் பெட்டி, வரலாறு, விமானப் போக்குவரத்து

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, டேவிட் வாரனின் இறுதிச் சடங்கு

1958ஆம் ஆண்டு தனது தந்தை டேவிட் வாரன் பிபிசிக்கு அளித்த பேட்டியிலிருந்து 'கருப்புப் பெட்டி' என்ற இந்தப் பெயர் தோன்றியதாக பீட்டர் வாரன் நம்புகிறார்.

"ஒரு பத்திரிகையாளர் இதை 'கருப்புப் பெட்டி' என்று குறிப்பிட்டார். இது மின்னணு பொறியியலில் இருந்து வந்த ஒரு பொதுவான சொல், அந்தப் பெயர் அப்படியே ஒட்டிக்கொண்டது."

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் 1960 ஆம் ஆண்டு ஏற்பட்ட விவரிக்க முடியாத ஒரு விமான விபத்தில் 29 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, விமான காக்பிட் குரல் பதிவுகளை கட்டாயமாக்கிய முதல் நாடாக ஆஸ்திரேலியா ஆனது. நீதித்துறை விசாரணையின் அடிப்படையில் இந்தத் தீர்ப்பு வந்தது. அது சட்டமாக மாற மேலும் மூன்று ஆண்டுகள் ஆயின.

இன்று, கருப்புப் பெட்டிகள் நெருப்பு மற்றும் கடல் நீரால் பாதிக்கப்படாத வகையில், எஃகு கவசத்தால் மூடப்பட்டு உருவாக்கப்படுகின்றன. அவை ஒவ்வொரு வணிக விமானத்திலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.

விபத்தைச் சந்தித்த விமானங்களின் இறுதித் தருணங்களில் இருந்து கிடைத்த தரவுகள் மூலம் பல குறைபாடுகள் அம்பலப்படுத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து பாதுகாப்பை உறுதிப்படுத்தும் புதிய கண்டுபிடிப்புகள் வந்தன. இந்த கருப்புப் பேட்டி மூலம் எத்தனை பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டன என்பதைச் சொல்ல முடியாது.

'நான் மிகவும் அதிர்ஷ்டசாலி'

விமானங்கள், கருப்புப் பெட்டி, வரலாறு, விமானப் போக்குவரத்து

பட மூலாதாரம்,FAIRFAX MEDIA VIA GETTY IMAGES

டேவிட் வாரன் 1983இல் ஓய்வு பெறும் வரை ஏஆர்எல் அமைப்பில் பணியாற்றினார், அதன் முதன்மை ஆராய்ச்சி விஞ்ஞானியானார். அவர் ஜூலை 19, 2010 அன்று தனது 85 வயதில் இறந்தார்.

50 ஆண்டுகளுக்கும் மேலாக, கருப்புப் பெட்டி தொடர்பான அவரது முன்னோடிப் பணி கிட்டத்தட்ட அங்கீகரிக்கப்படாமல் போனது. இறுதியாக 1999ஆம் ஆண்டில், அவருக்கு 'ஆஸ்திரேலிய எரிசக்தி நிறுவன பதக்கம்' வழங்கப்பட்டது, பின்னர் 2002 ஆம் ஆண்டில் விமானத் துறைக்கு அவர் செய்த சேவைக்காக 'ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியா' (AO) அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

அவர் அங்கீகரிக்கப்படுவதற்கு ஏன் இவ்வளவு காலம் எடுத்தது என்று கேட்டபோது, அவரது மகள் ஜென்னி பின்வருமாறு குறிப்பிடுகிறார்: "மந்தநிலைதான் அவரது எதிரி. அவர் ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட விஞ்ஞானி, நுட்பமாக ஆய்வு செய்யும் மனதைக் கொண்டவர், விஷயங்கள் எப்படி வெளிப்படும் என்பதை அவரால் முன்னரே கற்பனை செய்ய முடிந்தது."

"அவர் 1958ஆம் ஆண்டிலேயே, 'இந்த சாதனம் இதைச் சாத்தியமாக்கும்' என்று சொல்லிக் கொண்டிருந்தார்."

ஆனால், "நல்ல கண்டுபிடிப்புகள் எல்லாம் பிரிட்டன், ஜெர்மனி அல்லது அமெரிக்கா ஆகிய நாடுகளில் தான் கண்டுபிடிக்கப்படும், வேறு இடங்களில் இருந்து வராது என்ற 1950களின் காலனித்துவ மனநிலை தான் அதற்கு காரணம்" என பீட்டர் வாரன் குற்றம் சாட்டுகிறார்.

ஏஆர்எல்-இன் பணியைச் சுற்றியுள்ள வரலாற்று ரகசியம், இப்போது பரவலாகப் புரிந்து கொள்ளப்படுகிறது, இது மற்றொரு சாத்தியமான காரணியாகும்.

2008ஆம் ஆண்டு, குவான்டஸ் நிறுவனம் ஒரு ஏர்பஸ் A380 விமானத்திற்கு டாக்டர் டேவிட் வாரன் பெயரைச் சூட்டியது.

ஆனால் 'கருப்புப் பெட்டி' தொடர்பான ராயல்டியாக ஒரு ரூபாய் கூட டாக்டர் டேவிட் வாரனுக்கு கிடைக்கவில்லை.

இது குறித்து எப்போதாவது டேவிட் வாரன் வருத்தப்பட்டது உண்டா என்ற கேள்விக்கு பதிலளித்த பீட்டர், "ஆம், நான் செய்த வேலைக்கான பலன்கள் அரசுக்கு கிடைத்தது. அதே நேரம், தோல்வியில் முடிந்த எனது பல முயற்சிகளுக்கு அவர்கள் என்னிடம் பணம் கேட்கவில்லை அல்லவா?" என டேவிட் வாரன் கூறியதாகச் சொல்கிறார்.

விமானத்தில் பயணிக்கும் போது உங்கள் தந்தையைப் பற்றி எப்போதாவது நினைத்து பார்ப்பது உண்டா என்ற கேள்விக்கு பதிலளித்த ஜென்னி மற்றும் பீட்டர், "ஒவ்வொரு முறையும்" என்றார்கள்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c201xd2573no

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.