Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விந்தணு கருமுட்டையை இனங்கண்டு நீந்திச் செல்வது எப்படி? ஆண் மலட்டுத் தன்மைக்கு தீர்வு தேடும் விஞ்ஞானிகள்

விந்தணு

படக்குறிப்பு, ஒரு ஆணின் ஒற்றை இதயத் துடிப்பில் சுமார் 1,000 விந்தணுக்கள் உற்பத்தியாகும்

கட்டுரை தகவல்

  • எழுதியவர், கேத்தரின் லாதம்

  • பதவி,

  • 9 மணி நேரங்களுக்கு முன்னர்

விந்தணுக்கள் எப்படி நீந்துகின்றன? அவை எப்படி பயணிக்கின்றன? அவை எவ்வாறு உருவாகின்றன? இரண்டாம் உலகப் போரில் ரகசிய குறியீடுகளை படித்தவருக்கும் விந்தணுவுக்கும் இடையிலான தொடர்பு என்ன? விந்தின் விந்தையான மர்மங்களைப் பற்றிய சில உண்மைகளை தெரிந்துக் கொள்வோம்.

ஒரு ஆணின் ஒற்றை இதயத் துடிப்பில் சுமார் 1,000 விந்தணுக்கள் உற்பத்தியாகும் என்பது ஆச்சரியமான உண்மை. அதேபோல், உடலுறவின் போது, 50 மில்லியனுக்கும் அதிகமான விந்துக்கள் வீரியத்துடன் சூறாவளியாய் நீந்திச் சென்று கருமுட்டையை கருத்தரிக்கச் செய்ய முயற்சிக்கின்றன. விந்துக்களிடையிலான பந்தயத்தில் வென்று கருமுட்டையை அடையும் பயணத்தில், கோடிக்கணக்கிலான விந்தணுக்களில் வெகுசிலவே இலக்கை வெற்றிகரமாக சென்றடைகின்றன.

இதுவரையில் தான் விந்து பற்றி பலருக்கும் தெரியும். ஆனால், விந்துக்களின் வீரியமான நீச்சல் பயணமானது அறிவியலுக்கும் மர்மமாகவே உள்ளது.

"விந்தணு எப்படி நீந்துகிறது? அது கருமுட்டையைக் கண்டுபிடிப்பது எவ்வாறு? அது எப்படி கருமுட்டையுடன் இணைந்து கருவாகிறது எனத் தெரியுமா? " என்று இங்கிலாந்தின் டண்டீ பல்கலைக்கழகத்தில் நீரிழிவு நாளமில்லா சுரப்பியியல் மற்றும் இனப்பெருக்க உயிரியலின் "கிளினிகல் ரீடர்" சாரா மார்டின்ஸ் டா சில்வா கேட்கிறார். விந்தணு கண்டறியப்பட்டு கிட்டத்தட்ட 350 ஆண்டுகள் ஆன பிறகும், விந்தணு தொடர்பான பல கேள்விகளுக்கு விடை காண முடியவில்லை.

புதிதாக உருவாக்கப்பட்ட முறைகளைப் பயன்படுத்தி, விஞ்ஞானிகள் விந்தணுக்களின் இடப்பெயர்வு குறித்து கண்காணித்து வருகின்றனர். இதில் விந்தணுக்களின் தோற்றம் முதல், அது ஆணிடம் இருந்து கடந்து, பெண் உடலில் கருமுட்டையுடன் இணைந்து கருத்தரித்தல் வரை அனைத்தும் அவதானிக்கப்படுகின்றன. இந்த ஆய்வுகளின் முடிவுகள் விந்தணுக்கள் எவ்வாறு நீந்துகின்றன என்பதில் தொடங்கி, அவை பெண் உடலை அடையும் போது ஏற்படும் வியக்கத்தக்க பெரிய மாற்றங்கள் வரை பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுத்து வருகின்றன.

விந்தணு, கருமுட்டை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, விந்தணு எப்படி நீந்துகிறது? அது கருமுட்டையைக் கண்டுபிடிப்பது எவ்வாறு?

"உடலுக்குள் வேறு எந்த உயிரணுவும் இவ்வளவு தனித்துவமான முறையில் அதன் அமைப்பை, வடிவத்தை மாற்றுவதில்லை" - ஆடம் வாட்கின்ஸ்

"விந்தணுக்கள் பூமியில் உள்ள மற்ற அனைத்து செல்களிலிருந்தும் 'மிக மிக வேறுபட்டவை'" என்கிறார் மார்டின்ஸ் டா சில்வா. "அவை ஆற்றலை ஒரே மாதிரியாகக் கையாளுவதில்லை. மற்ற எல்லா செல்களிலும் இருக்கும் அதே வகையான செல்லுலார் வளர்சிதை மாற்றம் மற்றும் வழிமுறைகள் விந்துக்களில் இல்லை."

விந்தணுக்களின் மிகப்பெரிய அளவிலான செயல்பாடுகள் காரணமாக, அவற்றுக்கு பிற செல்களை விட அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. விந்து வெளியேறும் போதும், பெண்ணின் யோனி வழியாக கருமுட்டையை நோக்கி பயணிக்கும் போதும், கருத்தரித்தல் வரை, சுற்றுச்சூழல் குறிப்புகள் மற்றும் மாறுபட்ட ஆற்றல் தேவைகளுக்கு இணக்கமாக இருக்க, விந்து நெகிழ்வானதாக இருக்க வேண்டும்.

மனித உடலுக்கு வெளியே உயிர் வாழக்கூடிய ஒரே செல்கள் விந்தணுக்கள் மட்டுமே என்று மார்டின்ஸ் டா சில்வா கூறுகிறார். "அதனால்தான், அவை அசாதாரணமான சிறப்பு வாய்ந்தவை" என்று கூறப்படுகிறது. இருப்பினும், அவற்றின் மிகச் சிறிய அளவின் காரணமாக அவற்றை அவதானிப்பது மிகவும் கடினம் என்றும் அவர் கூறுகிறார். "இனப்பெருக்கம் பற்றி நமக்கு நிறைய தெரியும் என்றாலும், தெரியாத விசயங்கள் அதைவிட மிகவும் அதிகமாக உள்ளது."

விந்தணு

பட மூலாதாரம்,ALAMY

படக்குறிப்பு, மனித உடலில் மிகச்சிறிய செல்லாக இருந்தாலும், அசாதாரணமாக சிறப்பு வாய்ந்தது விந்தணு

கிட்டத்தட்ட 350 ஆண்டுகால ஆராய்ச்சியில் இதுவரை விடையறியா வினா: விந்தணு என்றால் என்ன?

"விந்தணு அதிசயமான விதத்தில் சிறப்பாகத் தொகுக்கப்பட்டுள்ளது," என இங்கிலாந்தின் நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் இனப்பெருக்கம் மற்றும் வளர்ச்சி உடலியல் இணைப் பேராசிரியர் ஆடம் வாட்கின்ஸ் வியக்கிறார். "விந்தணுவை ஒரு வாலில் உள்ள டிஎன்ஏ பை என்றே நாங்கள் பொதுவாக நினைத்தோம். ஆனால், இது மிகவும் சிக்கலான செல் என்றும், அதில் பல்வேறு வகையிலான மரபணு தகவல்களும் உள்ளதை உணரத் தொடங்கியுள்ளோம்."

விந்தணு ஆராய்ச்சிகளின் தொடக்கப் புள்ளி

விந்தணு பற்றிய அறிவியல் ஆராய்ச்சிகள் 1677 ஆம் ஆண்டில் தொடங்கியது, டச்சு நுண்ணுயிரியலாளர் அன்டோனி வான் லீவென்ஹோக் வீட்டில் தயாரிக்கப்பட்ட 500 நுண்ணோக்கிகளில் ஒன்றில் விந்துக்களைப் பார்த்து, அவற்றை "விந்து விலங்குகள் " என்று அவர் அழைத்தார். 1683 ஆம் ஆண்டில், முன்பு நம்பப்பட்டது போல, முட்டையில்தான் அந்த மினியேச்சர் மற்றும் முழு மனிதனும் அடங்கியிருக்கவில்லை, ஆனால் மனிதன் "ஆண் விதையில் உள்ள ஒரு விலங்குக் கூட்டிலிருந்து" வருவதாக அவர் கருதினார். 1685 வாக்கில், ஒவ்வொரு விந்தணுவும், அதன் சொந்த "உயிருள்ள ஆன்மா" கொண்ட ஒரு முழு மினியேச்சர் நபரைக் கொண்டுள்ளது என்று அவர் முடிவு செய்தார்.

அதற்கு கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்குப் பிறகு, 1869 ஆம் ஆண்டில், சுவிஸ் மருத்துவரும் உயிரியலாளருமான ஜோஹன்னஸ் பிரீட்ரிக் மிஷர், விந்து தொடர்பான மற்றுமொரு முக்கிய விசயத்தைக் கண்டறிந்தார். நோயாளிகளின் கட்டுக்களை பிரித்து மருத்துவமனைகளின் குப்பையில் வீசப்படும் சீழ் நிறைந்த கழிவுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட மனித ரத்த வெள்ளை அணுக்களை ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, அவர் கண்டறிந்த விசயத்துக்கு "நியூக்ளின்" என்று பெயரிட்டார். "நியூக்ளின்" என்ற சொல் பின்னர் "நியூக்ளிக் அமிலம்" என்று மாற்றப்பட்டு இறுதியில் "டியாக்ஸிரிபோநியூக்ளிக் அமிலம்" என்றும் சுருக்கமாக "டிஎன்ஏ" என்றும் அழைக்கப்பட்டது.

டிஎன்ஏ பற்றிய தனது ஆய்வுகளை மேலும் விரிவுபடுத்த விரும்பிய ஜோஹன்னஸ் பிரீட்ரிக் மிஷர், ஆய்வின் ஆதாரமாக விந்தணுவைத் தேர்ந்தெடுத்தார். குறிப்பாக சால்மன் மீன்களின் விந்தணுக்கள், அவற்றின் பெரிய கருக்கள் காரணமாக "அணுக்கருப் பொருளின் சிறந்த மற்றும் சுவராஸ்யமான மூலமாக" இருந்தன. சால்மன் மீனின் விந்தணுக்கள் சிதைவதைத் தவிர்ப்பதற்காக, அவர் உறைபனி தட்பவெப்பநிலையில், ஆய்வக ஜன்னல்களைத் திறந்து வைத்திருந்து பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. 1874 ஆம் ஆண்டில், அவர் விந்தணுவின் ஒரு அடிப்படை கூறுகளை அடையாளம் கண்டார், அதற்கு "புரோட்டமைன்" என்று அவர் பெயரிட்டார். முதன்முதலாக விந்தணுக்களை உருவாக்கும் புரதங்கள் தொடர்பான உண்மை வெளியானது என்றே சொல்லலாம். இருப்பினும், அதற்கு பிறகு 150 ஆண்டுகள் கழித்தே, விந்தணுக்களின் முழு புரத உள்ளடக்கத்தையும் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.

அதற்குப் பிறகு, விந்தணுவைப் பற்றிய நமது புரிதல் வேகமாக முன்னேறி வருகிறது என்ற போதிலும், இன்னும் பல விசயங்கள் மர்மமாகவே உள்ளன என்று வாட்கின்ஸ் கருதுகிறார். விஞ்ஞானிகள் கருவின் ஆரம்பகால வளர்ச்சியை நன்கு புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளதால், விந்துவானது, தந்தையின் குரோமோசோம்களை மட்டுமல்ல, எபிஜெனெடிக் தகவல்களையும் கடத்துகிறது என்பது புரிந்திருப்பதாக அவர் கூறுகிறார்.

எபிஜெனெடிக் என்பது, டிஎன்ஏ வரிசையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாமல், மரபணு வெளிப்பாட்டை மாற்றியமைக்கின்றன. இது மரபணுக்கள் எவ்வாறு, எப்போது பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை நிர்ணயிக்கும் கூடுதல் தகவல் அடுக்கு ஆகும். "இது கரு எவ்வாறு உருவாகிறது என்பதையும், அந்த விந்தணுக்கள் உருவாக்கும் சந்ததிகளின் வாழ்நாள் பாதையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்" என்று வாட்கின்ஸ் கூறுகிறார்.

விந்தணு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, விந்தணுவைப் பற்றிய நமது புரிதல் வேகமாக முன்னேறி வருகிறது

"பெண் பரிணாமம்தான் இந்த அமைப்பை இயக்குகிறது என்பது தெரியவந்துள்ளது; ஆண்கள் அதைத் தொடர முயற்சிக்கிறார்கள்" - ஸ்காட் பிட்னிக்

ஆண் பருவமடையும்போது அவரின் உடலில் உருவாகத் தொடங்கும் விந்தணு செல்கள் விரைப்பைகளுக்குள் இருக்கும் செமினிஃபெரஸ் குழாய்கள் எனப்படும் நாளங்களில் உருவாகின்றன.

"விந்தணுக்கள் உருவாகும் விரைப்பைக்குள், அது வேறு எதையும் போலவே தோற்றமளிக்கும் ஒரு வட்டமான செல்லாகவே தொடங்குகிறது," என்று வாட்கின்ஸ் கூறுகிறார். "பின்னர் அது வியத்தகு மாற்றத்துக்கு உட்படுகிறது, அது வால் கொண்டதாக உருமாறுகிறது. உடலில் உள்ள வேறு எந்த உயிரணுவும் அதன் அமைப்பையோ தனது வடிவத்தையோ இவ்வளவு தனித்துவமான முறையில் மாற்றுவதில்லை."

ஆண் உடலுக்குள் உருவாகும் விந்தணு முதிர்ச்சி அடைய ஒன்பது வாரங்கள் ஆகும். வெளியேறாத விந்தணுக்கள் உடலிலேயே மடிந்து, உடலாலே மீண்டும் உறிஞ்சப்படுகின்றன. வெளியேறிய அதிர்ஷ்டசாலி விந்தணுக்கள் தங்கள் சாகசப் பயணத்தைத் தொடங்குகின்றன.

விந்தணு வெளியேறிய பிறகு, நுண்ணிய வடிவிலான இந்த செல்கள் ஒவ்வொன்றும் கருமுட்டையை சென்றடையும் பயணத்தில் தனது வால் போன்ற பிற்சேர்க்கைகளைப் பயன்படுத்தி முன்னோக்கி பாய்கின்றன. இந்த பயணத்தில் ஒரு விந்தணு, தோராயமாக 50 மில்லியன் போட்டியாளர்களுடன் போட்டியிட்டு முன்னேறிச் செல்கிறது. தலைப்பிரட்டையைப் போல் இருக்கும் விந்தணுக்கள் நீந்தும் வீடியோக்கள் பலவற்றை நீங்கள் பார்த்திருக்கலாம். விந்து உண்மையில் எப்படி நீந்துகிறது என்பதை முழுமையாக புரிந்துகொண்டோமா என்ற கேள்விக்கு, இல்லை, விஞ்ஞானிகள் விந்தணுக்களின் இயக்கம் குறித்து புரிந்து கொள்வதற்கான ஆரம்பகட்டத்தில்தான் தற்போதுவரை இருக்கிறார்கள் என்றே சொல்லலாம்.

முன்னதாக, விந்தணுவின் வால் - அல்லது ஃபிளாஜெல்லம், தலைப்பிரட்டையைப் போல பக்கவாட்டில் நகர்கிறது என்று கருதப்பட்டது. ஆனால், கணிதவியலாளரும், இரண்டாம் உலகப்போரில் ரகசியக் குறியீடுகளை படிப்பதில் வெற்றிகரமாக செயல்பட்டவருமான ஆலன் டூரிங் கண்டுபிடித்த வடிவ உருவாக்கத்திற்கான டெம்ப்ளேட்டை விந்தணு வால்கள் ஒத்திருக்கின்றன என்பதை 2023 ஆம் ஆண்டில், இங்கிலாந்தின் பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர் .

1952 ஆம் ஆண்டில், வேதியியல் எதிர்வினைகள் வடிவங்களை உருவாக்க முடியும் என்பதை டூரிங் உணர்ந்தார். கைரேகைகள், இறகுகள், இலைகள் மற்றும் மணலில் உள்ள சிற்றலைகள் உள்ளிட்ட இயற்கையின் மிகவும் சுவாரஸ்யமான உயிரியல் வடிவ அமைப்புகளை விளக்க, நகரும் மற்றும் ஒன்றுக்கொன்று வினைபுரியும் இரண்டு உயிரியல் ரசாயனங்கள் பயன்படுத்தப்படலாம் என்று அவர் முன்மொழிந்தார். இது, "எதிர்வினை-பரவல்" கோட்பாடு என்று அழைக்கப்படுகிறது.

முப்பரிமாண நுண்ணோக்கியைப் பயன்படுத்திய பிரிஸ்டல் ஆராய்ச்சியாளர்கள் ஒரு விந்தணுவின் வால் பகுதியான ஃபிளாஜெல்லம், விந்தணு முன்னோக்கி செல்வதற்காக வால் வழியாக பயணிக்கும் அலைகளை உருவாக்குகிறது என்பதைக் கண்டறிந்தனர். ஆணின் கருத்தரிக்கச் செய்யும் தன்மையைப் புரிந்துகொள்ள விந்தணு நகர்வு விஞ்ஞானிகளுக்கு உதவும் என்பதைப் புரிந்துகொள்வதற்கு இது மிகவும் உதவியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆணிடம் இருந்து வெளிப்படும் விந்தணுக்கள், பெண்ணின் கருப்பை வாய் வழியாக, கருவறைக்குள் சென்று, ஃபெலோபியன் குழாய்கள் வழியாக, கருமுட்டையை அடைகின்றன என்பது நமக்குத் தெரியும். ஆனால் விந்தணு, கருமுட்டையை எவ்வாறு சென்றடைகிறது என்பதை விஞ்ஞானிகளால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியவில்லை என்பது அறிவியலில் நாம் கண்டறியாத மற்றொரு இடைவெளியாக இருக்கிறது.

நுண்ணுயிரியலாளர், அன்டோனி வான் லீவென்ஹோக், விந்தணு, மனிதன்

பட மூலாதாரம்,ALAMY

படக்குறிப்பு, 17 ஆம் நூற்றாண்டு டச்சு நுண்ணுயிரியலாளர் அன்டோனி வான் லீவென்ஹோக், விந்தணுக்களுக்குள் ஒரு சிறிய ஆனால் முழுமையான மனிதன் இருப்பதாக நம்பினார்

ஆரோக்கியமான மற்றும் சரியான பாதையில் செல்லும் விந்தணுக்கள் அரிதானவை. பெண் உடல் என்ற பிரமையில் தவறான இடத்தை பல விந்தணுக்கள் சென்றடைவதும், இலக்குக் கோட்டுக்கு அருகில் கூட செல்லாத விந்தணுக்களுமே எண்ணிக்கையில் அதிகமானவை. ஃபெலோபியன் குழாய்களுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்கும் விந்தணுக்களை, பெண்ணின் கருமுட்டையில் இருந்து வெளிப்படும் வேதியியல் சமிக்ஞைகள் வழிநடத்தக்கூடும் என்றும் விஞ்ஞானிகள் நினைக்கிறார்கள். விந்தணுக்கள் முட்டையை அடையச் செல்லும் வழியில் "சுவைக்க" சுவை ஏற்பிகளைப் பயன்படுத்தலாம் என்பது சமீபத்திய கோட்பாடு.

விந்தணு கருமுட்டையைக் கண்டுபிடித்துவிட்டால், சவால் முடிவடைந்துவிடுகிறதா? இல்லை. கரு முட்டையானது, கொரோனா ரேடியாட்டா எனப்படும் செல்களின் வரிசை; சோனா பெல்லுசிடா எனும் புரதத்தால் ஆன ஜெல்லி போன்ற மெத்தை; முட்டை பிளாஸ்மா சவ்வு என மூன்று இழை கவசங்களால் சூழப்பட்டுள்ளது. விந்தணுக்கள், கருமுட்டையின் அனைத்து அடுக்குகளிலும் போராடி உள்நுழைய வேண்டும். அவற்றின் அக்ரோசோமில் உள்ள ரசாயனங்களைப் பயன்படுத்தி, கருமுட்டையின் செல் பூச்சை செரிமானம் செய்யும் நொதிகளைக் கொண்ட விந்தணு செல்லின் தலையில் உள்ள தொப்பி போன்ற அமைப்பைப் பயன்படுத்த வேண்டும். இருப்பினும், இந்த நொதிகள் எப்படி வெளியாகின்றன என்பதற்கான காரணம் இன்றுவரை ஒரு மர்மமாகவே உள்ளது.

விந்தணுக்களின் "தலைப்பகுதியில்" உள்ள ஒரு கூர்முனையைப் பயன்படுத்தி அவை கருமுட்டைக்குள் நுழைய முயற்சிக்கின்றன, தங்கள் வால்களை அடித்துக்கொண்டு வலுக்கட்டாயமாக தங்களை முன்னோக்கி நகர்த்துகின்றன. இறுதியாக, கருமுட்டை சவ்வுடன் தொடர்பு கொண்டால் மட்டுமே, அது கருமுட்டையை கருத்தரிக்கச் செய்ய முடியும்.

மனித செல்கள், இரண்டு முழுமையான குரோமோசோம்களைக் கொண்டுள்ள டிப்ளாய்டு வகையைச் சேர்ந்தவையாகும். ஒவ்வொரு பெற்றோரிடமிருந்தும் ஒன்று என இரு குரோமோசோம்களைப் அவை பெற்றுள்ளன. ஒன்றுக்கு மேற்பட்ட விந்தணுக்கள் கருமுட்டையுடன் இணைந்தால், பாலிஸ்பெர்மி எனப்படும் ஒரு நிலை ஏற்படும். தவறான எண்ணிக்கையிலான குரோமோசோம்களைக் கொண்ட நான்டிப்ளாய்டு வகை செல்கள், வளரும் கருவுக்கு ஆபத்தான நிலையை உருவாக்குபவை.

இது நிகழாமல் தடுக்க, ஒரு விந்து செல் அதனுடன் தொடர்பு கொண்டவுடன், கருமுட்டை துரிதமாக இரண்டு வழிமுறைகளைப் பயன்படுத்துகிறது. முதலாவதாக, அதன் பிளாஸ்மா சவ்வு விரைவாக டிப்போலரைஸ் செய்கிறது, அதாவது மேலும் விந்து கடக்க முடியாத ஒரு தடையை உருவாக்குகிறது. இருப்பினும், இந்தத் தடை சிறிது நேரம் மட்டுமே நீடிக்கும், பின்னர் இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும். இங்குதான் கருமுட்டையின் 'புறணி எதிர்வினை' வருகிறது. கால்சியம் திடீரென வெளியிடப்பட்டு, சோனா பெல்லுசிடா எனப்படும் கருமுட்டையின் "புற செல் பூச்சு" கடினமாகி, விந்தணு ஊடுருவ முடியாமல் தடையை உருவாக்குகிறது.

பழ ஈ இனங்களில் சில தங்களுடைய உடலின் நீளத்தை விட 20 மடங்கு பெரிய விந்தணுக்களை உற்பத்தி செய்கின்றன. அது, ஒரு மனிதன் 130 அடி மலைப்பாம்பு நீளமுள்ள விந்தணுவை உற்பத்தி செய்வது போல இருக்கும்

எனவே, கருமுட்டையை நோக்கி பயணத்தைத் துவங்கும் கோடிக்கணக்கான விந்தணுக்களில், ஒன்று மட்டுமே தனது அதிகபட்ச வேலையைச் செய்கிறது. விந்தணுவின் பிரமாண்டமான பயணம் கருமுட்டையுடன் இணைவதுடன் முடிவடைகிறது. இன்றும், ஆராய்ச்சியாளர்கள் விந்தணு-கருமுட்டை அங்கீகாரம், பிணைப்பு மற்றும் இணைவுக்கு காரணமான செல் மேற்பரப்பு புரதங்களின் அடையாளம் மற்றும் பங்கைக் கண்டறிய முயற்சித்து வருகின்றனர்.

அண்மை ஆண்டுகளில், பல புரதங்கள் இந்த செயல்முறைக்கு முக்கியமானவை என்று, எலிகள் மற்றும் மீன்களில் செய்யப்பட்ட ஆய்வுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளன, ஆனால் இதில் உள்ள பல மூலக்கூறுகளை அடையாளம் காணமுடியவில்லை. எனவே, இப்போதைக்கு, விந்தணுவும் கருமுட்டையும் எவ்வாறு ஒன்றையொன்று அடையாளம் காண்கின்றன, அவை எவ்வாறு இணைகின்றன என்பவை இன்னும் தீர்க்கப்படாத மர்மங்களாகவே தொடர்கின்றன.

நியூயார்க் சைராகுஸ் பல்கலைக்கழகத்தின் உயிரியல் பேராசிரியர் ஸ்காட் பிட்னிக் கூறுகையில், ஆராய்ச்சியாளர்கள் விந்தணுக்களைப் பற்றி புரிந்துக் கொள்ள பிற உயிரினங்களை ஆய்வு செய்வது உதவியாக இருக்கும் என குறிப்பிடுகிறார். மனித விந்தணுக்கள் நுண்ணியவை, எனவே நாம் அவற்றை வெற்றுக் கண்களால் பார்க்க முடியாது.

பழ ஈ இனங்களில் சில தங்களுடைய உடலின் நீளத்தை விட 20 மடங்கு பெரிய விந்தணுக்களை உற்பத்தி செய்கின்றன. அது, ஒரு மனிதன் 130 அடி மலைப்பாம்பு நீளமுள்ள விந்தணுவை உற்பத்தி செய்வது போல இருக்கும்.

பழ ஈ விந்தணுக்களின் தலைகளை பிட்னிக் வடிவமைக்கிறார். பெண் ஈயின் இனப்பெருக்க பாதைகள் வழியாக அவற்றை செலுத்தி அவை பயணிப்பதை ஆராயும் இந்த ஆய்வு, மூலக்கூறு மட்டத்தில் கருத்தரித்தல் பற்றிய புதிய விவரங்களை வெளிப்படுத்துகிறது .

"சில உயிரினங்கள் பெரிய விந்தணுக்களை உருவாக்குவது ஏன் தெரியுமா?" என்று பிட்னிக் கேட்கிறார். "அந்த இனங்களின் பெண்கள் தங்களுக்கு சாதகமாக இனப்பெருக்க பாதைகளை உருவாக்குகின்றன. அதற்கு உகந்ததாக ஆணினம் பெரிய விந்தணுக்களை உருவாக்குகிறது" என்பதே பதிலாக இருக்கும். ஆனால், "உண்மையில் இது முழுமையான பதில் இல்லை" என்று கூறும் அவர், அந்த பதிலே கேள்வியை திசைதிருப்புகிறது என்றும் சொல்கிறார். அந்தக் கேள்வி: பெண்ணினம் ஏன் இந்த வழியில் பரிணமித்தது? அது எங்களுக்கு இன்னும் அது புரியவில்லை.

விந்தணுக்கள் மிகச் சிறியவை

பட மூலாதாரம்,ALAMY

படக்குறிப்பு, விந்தணுக்கள் மிகச் சிறியவை, அவற்றை அவதானிப்பது கடினமாக இருக்கும். மாதிரிகளை நுண்ணோக்கியின் கீழ் எளிதாகப் பார்க்க, வண்ணம் தீட்டலாம்

உலகளவில் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும், விந்தணு எண்ணிக்கை குறையும் போக்கு துரிதமாக அதிகரித்து வருவதாகவும் ஆராய்ச்சி தெரிவிக்கிறது

ஆனால், ஆண் உடலில் விந்தணுக்கள் இருப்பது என்பது கதையின் பாதி தான் என்பதை இதுவே நமக்கு உணர்த்துகிறது என பிட்னிக் கூறுகிறார். "அறிவியலில் வரலாற்று ரீதியாக மிகப்பெரிய பாலின சார்பு உள்ளது. ஆண்கள், ஆண்களின் குணாதிசயங்களில் கவனம் செலுத்துவது மிகவும் அருவருப்பானது. ஆனால் இந்த அமைப்பை இயக்குவது பெண் பரிணாமம் என்பது தெரியவந்துள்ளது, ஆண்கள் அதைத் தொடர முயற்சிக்கின்றனர்."

பூமியின் மிகவும் மாறுபட்ட மற்றும் வேகமாக வளர்ந்து வரும் உயிரணு வகை என்ன என்றால், அது விந்தணுக்கள் தான் என்று பிட்னிக் கூறுகிறார். விந்தணுக்கள் ஏன் இவ்வளவு வியத்தகு பரிணாம வளர்ச்சியை அடைந்தன என்பது ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக உயிரியலாளர்களால் விடை கண்டுபிடிக்க முடியாமல் திகைக்க வைத்துள்ள ஒரு மர்மமாகும்.

"பெண் இனப்பெருக்க பாதை என்பது நம்பமுடியாத அளவுக்கு வேகமாக வளர்ந்து வருகிறது என்று மாறிவிடும்," என்று பிட்னிக் கூறுகிறார், "விந்தணு, பெண்ணின் உள்ளே என்ன செய்கிறது என்பது பற்றி நமக்கு அதிகம் தெரியாது. அதுதான் மறைக்கப்பட்ட மாபெரும் உலகம். பெண்ணின் இனப்பெருக்க பாதை என்பது பாலியல் தேர்வு, கோட்பாடு மற்றும் இனவிருத்தி [புதிய இனங்கள் உருவாகும் செயல்முறை] ஆகியவற்றுக்கான ஆராயப்படாத மிகப்பெரிய எல்லையாகும்" என நான் நினைக்கிறேன்."

பழ ஈயின் நீண்ட வால் கொண்ட விந்தணு என்பது, மானின் கொம்புகள் அல்லது மயில்தோகை போன்ற ஒரு அலங்காரமாகக் கருதப்படலாம் என்று பிட்னிக் கூறுகிறார்.

ஆபரணங்கள் என்பவை "பரிணாம வளர்ச்சியில் ஒரு வகையான ஆயுதம்" என்று பிட்னிக் விளக்குகிறார். வேட்டையாடுபவர்களிடமிருந்து பாதுகாப்பது என்பதைத் தவிர, கொம்புகள் போன்ற ஆபரணங்கள் பெரும்பாலும் இரண்டு பரிணாமங்களைக் கொண்டவை. "இதுபோன்ற ஆயுதங்களில் பெரும்பாலானவை பாலினம் தொடர்பானவை. பொதுவாக ஆணுக்கும் ஆணுக்குமான போட்டி பற்றியவை. பழ ஈயின் நீண்ட விந்து ஃபிளாஜெல்லம் என்பது உண்மையில் ஒரு ஆபரணத்தின் வரையறைக்கான அளவுகோல்களை பூர்த்தி செய்கிறது. பெண்ணின் யோனி பாதையானது, சில விந்தணு பினோடைப்களுக்கு ஆதரவாக கருத்தரிப்புக்கு உகந்த பண்புகளைக் கொண்டுள்ளது என்று நினைக்கிறோம்."

விந்தணு

பட மூலாதாரம்,SCIENCE PHOTO LIBRARY

படக்குறிப்பு, பெண்ணின் யோனி பாதையானது, சில விந்தணு பினோடைப்களுக்கு ஆதரவாக கருத்தரிப்புக்கு உகந்த பண்புகளைக் கொண்டுள்ளது

இனச்சேர்க்கைக்கு முந்தைய பாலியல் தேர்வைப் பற்றி நமக்கு நிறைய தெரியும் என்று பிட்னிக் கூறுகிறார். "புல்வெளியில் நடனமாடும் மானாக இருந்தாலும் சரி, மழைக்காடுகளில் காட்சியளிக்கும் பறவையாக இருந்தாலும் சரி, அதன் இயக்கம், அதன் நிறம், அதன் வாசனை போன்றவை துணையை பாலியல்ரீதியாக ஈர்க்கும்" இந்த புலன் உள்ளீட்டைச் செயலாக்குவது, ஜோடி இணைகிறதா, இல்லையா என்பதை முடிவெடுக்க வழிவகுக்கிறது என்று பிட்னிக் விளக்குகிறார்.

இனச்சேர்க்கைக்கு முந்தையவற்றை பற்றி நமக்கு தெரிந்த அளவு, இனச்சேர்க்கைக்குப் பிறகு பெண்ணின் உள்ளே நடக்கும் பாலியல் தேர்வு விந்தணுவின் பரிணாம வளர்ச்சியை எவ்வாறு இயக்குகிறது என்பது பெரும்பாலும் மர்மமாகவே உள்ளது என்று பிட்னிக் கூறுகிறார். "ஆபரணங்கள் மற்றும் விருப்பங்களின் மரபியல் பற்றி மிகக் குறைவாகவே புரிந்துகொண்டுள்ளோம்," என்று அவர் கூறுகிறார்.

விந்தணுவைப் பற்றி முழுமையாகப் புரிந்துகொள்ள, விந்தணுவின் முழு வாழ்க்கைச் சுழற்சி மட்டுமல்ல, பெண்ணின் உடலும் விந்தணுவின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கிறது என்பதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும் என்று பிட்னிக் விளக்குகிறார். "விந்தணுக்கள் விரைப்பையிலேயே முதிர்ச்சியடையாவிட்டால், அவை வளர்ச்சியடையவில்லை என்றே பொருள்." விந்தணுவுக்கும் பெண் இனப்பெருக்க பாதைக்கும் இடையில் சிக்கலான மற்றும் முக்கியமான தொடர்புகள் இருப்பதாக அவர் கருதுகிறார். "விலங்குகளின் விந்தணுக்களில் விந்தணு வெளியேறிய பிறகு ஏற்படும் மாற்றங்களை அவதானிப்பதில் தற்போது நிறைய நேரம் செலவிடுகிறோம்."

கருத்தரித்தல் நிறைவடைய ஒரு விந்தணு மேற்கொள்ளும் பல்வேறு மாறுபட்ட செயல்முறைகளை விஞ்ஞானிகள் கண்டறிந்து வரும் நிலையில், பிற ஆராய்ச்சிகள் மனித விந்தணுக்களின் தற்போதைய நிலை குறித்து உண்மையான கவலையை ஏற்படுத்துகின்றன. ஆண்கள் தங்கள் வாழ்நாளில், ஒரு டிரில்லியன் விந்தணுக்களை உற்பத்தி செய்கின்றனர், எனவே விந்தணுக்கள் சிக்கலில் இருப்பதாக கற்பனை செய்து பார்ப்பதுகூட கடினமாக இருக்கலாம். ஆனால், விந்தணுக்களின் எண்ணிக்கை அதாவது, ஒரு விந்து மாதிரியில் உள்ள விந்தணுக்களின் எண்ணிக்கை என்பது உலகளவில் குறைந்து வருவதாகவும், விந்தணு எண்ணிக்கை குறையும் போக்கு துரிதமாக அதிகரித்து வருவதாகவும் ஆராய்ச்சி தெரிவிக்கிறது

உலக சுகாதார அமைப்பு (WHO) 2023இல் வெளியிட்ட அறிக்கையின்படி , உலகளவில் 6 பெரியவர்களில் ஒருவருக்கு மலட்டுத்தன்மை இருக்கிறது. அதில் ஆண் மலட்டுத்தன்மை சரிபாதியாக இருக்கிறது. (சமீபத்திய ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை நிதி அறிக்கை அடிக்கோடிட்டு காட்டியபடி, குழந்தை வளர்ப்புக்கான செலவு போன்ற பிற காரணங்களுக்காகவும் உலகெங்கிலும் உள்ள பலர், தாங்கள் விரும்பும் அளவுக்கு குழந்தைகளைப் பெறுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது).

மாசுபாடு, புகைபிடித்தல், மது அருந்துதல், மோசமான உணவுமுறை, உடற்பயிற்சியின்மை, மன அழுத்தம் ஆகியவை ஆண்களிடையே மலட்டுத்தன்மையை அதிகரிப்பதாக கருதப்படுகிறது. இருப்பினும், கருவுறச் செய்வது தொடர்பான பிரச்னைகள் கொண்ட பெரும்பாலான ஆண்களுக்கு அதற்கான காரணம் என்ன என்பது தெரிவதில்லை.

"நகரும் விந்தணுக்கள் அனைத்திலும், தவறாக நடக்கக்கூடிய பல விசயங்கள் உள்ளன," என்று இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் தாய் மற்றும் கரு ஆரோக்கியத்தில் முனைவர் பட்ட ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் ஹன்னா மோர்கன் கூறுகிறார். "இது ஒரு பொறிமுறையாக இருக்கலாம்: அது சீராக நீந்த முடியாததால் கருமுட்டையை அடைய முடியாமல் போகலாம் அல்லது விந்தணுவின் தலைக்குள் அல்லது பிற பகுதிகளுக்குள் சிக்கல் இருக்கலாம். பல வழிகளில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருந்தாலும், விந்தணுக்களில் சிறிய பல விசயங்கள் தவறாக இருக்கக்கூடும்."

ஆணின் மலட்டுத்தன்மையைக் கண்டறிய ஒரு வழி, விந்தணுவின் உள்ளே ஆராய்ந்து பார்ப்பது என்று மோர்கன் கூறுகிறார். "டிஎன்ஏ எப்படி இருக்கிறது? அது எப்படி தொகுக்கப்பட்டுள்ளது? அது எவ்வளவு பிரிந்துள்ளது? விந்தணுவைப் பிரித்துப் பார்க்கக்கூடிய பல்வேறு விஷயங்கள் உள்ளன. ஆனால் எந்த அளவீடு நல்லது அல்லது கெட்டது? உண்மையில் நமக்கு எதுவுமே தெரியாது."

விந்தணுக்களின் மர்மத்தையும் அவை எவ்வாறு செயல்படுகின்றன என்பது போன்ற மர்ம முடிச்சுக்களை அவிழ்ப்பதன் மூலம், ஆண் மலட்டுத்தன்மையைப் பற்றியும் நாம் புரிந்துகொள்ளத் தொடங்கலாம் என்று மோர்கன் கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cy9098y8p32o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.