Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செம்மணிக்கு வந்த ஐநா - நிலாந்தன்

facebook_1750864473051_73436578627796932

2015க்குப் பின் நடந்த ஒரு முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் சம்பந்தர் முள்ளிவாய்க்காலுக்கு வருகை தந்திருந்தார். அங்கு அவரை நோக்கிக் கேள்விகள் கேட்கப்பட்டன. நிலைமை கொந்தளிப்பாக மாறியது. அப்பொழுது ஒரு பெண் உணர்ச்சிவசப்பட்டவராக சம்பந்தரை நோக்கி உரத்த குரலில் ஆவேசமாகக் கேள்விகளைக் கேட்டார். அவர் அப்பொழுது கறுப்பும் சிவப்புமான நிறச் சீலையை உடுத்திருந்தார்.

இது நடந்து சில ஆண்டுகளின் பின் யாழ்ப்பாணம் முத்தவெளியில் வான் படை கண்காட்சி ஒன்று இடம்பெற்றது. இதில் வான்படை உலங்கு வானூர்திகளில் மக்கள் பயணம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டார்கள். அங்கே சம்பந்தரை கேள்வி கேட்ட அதே பெண் தனது வளர்ந்த மகனோடு அந்த உலங்கு வானூர்தியில்  அமர்ந்திருந்து, படமெடுத்து அதை முகநூலில்  பகிர்ந்திருந்தார்.

தமிழ் மக்களின் தலையில் குண்டுகளைப் போட்ட அரச படையின் உலங்கு வானூர்தி ஒன்றில் பிள்ளையோடு அமர்ந்திருந்து அந்த படத்தை போடுகிறார். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் முள்ளிவாய்க்காலுக்கு அஞ்சலி செலுத்த வந்த சம்பந்தரை பார்த்து ஆவேசமாக கொதித்து எழுந்தார். இதில் எது சரி? சம்பந்தரை நோக்கிக் கொதித்தது சரியா? அல்லது உலங்கு வானூர்தியில் அமர்ந்திருந்து படம் எடுத்தது சரியா? அல்லது இரண்டுமே பிழையா?

அப்படித்தான் கடந்த புதன்கிழமை செம்மணிப் போராட்டக் களத்தில் இருந்து சில அரசியல்வாதிகள் அவமதிக்கப்பட்டவை உணர்ச்சிக் கொதிப்பினால் ஏற்பட்ட விளைவுகள்தான். தமிழரசுக் கட்சிக்குள் உள்ள சுமந்திரன் அணிக்கு எதிராக கட்சிக்கு உள்ளேயும் கட்சிக்கு வெளியேயும் கடுமையான அதிருப்தி உண்டு. இதுபோன்ற உணர்வுபூர்வமான சந்தர்ப்பங்களில் அது வெடித்துக் கிளம்பும்.

ஆனால் அந்த எதிர்ப்பை,கொதிப்பைக் காட்டியிருக்க வேண்டிய களம் செம்மணி அல்ல. குறிப்பாக தமிழரசுக் கட்சியை சேர்ந்தவர்கள் அதை காட்டியிருக்க வேண்டிய களம் மாட்டின் வீதியில் உள்ள கட்சியின் தலைமையகம் ஆகும். இது கடந்த ஆண்டிலேயே சம்பந்தப்பட்டவர்களுளுக்குச்  சுட்டிக்காட்டப்பட்டது. சுமந்திரன் தந்திரமான வழிகளில் கட்சிக்குள் தன் பிடியைப் பலப்படுத்தி வருகிறார் என்று கொந்தளிப்பவர்கள் மாட்டின் ரோட்டில் உள்ள கட்சி அலுவலகத்தை முற்றுகையிடலாம். அங்கே தங்களுடைய எதிர்ப்பை காட்டுவதற்கு அவர்களுக்கு முழு உரிமையும் உண்டு.

ஆனால் தன்னார்வமாக ஒரு செயற்பாட்டு இயக்கம் கட்சி கடந்து முன்னெடுத்த ஒரு  நடவடிக்கைக் களம் அதற்குரியதல்ல. அதைக் கட்சிகள் ஒழுங்கமைக்கவில்லை. எனவே அதைக் குழப்புவதற்கும் அவர்களுக்கு உரிமை இல்லை. அப்படிப்பட்ட இடங்களில் சிவஞானத்தை அல்லது சாணக்கியனை அல்லது சந்திரசேகரனை மறித்து வைத்து கேள்விகளை கேட்பது வேறு, அவர்களை  அவமதிப்பது என்பது வேறு.

இது இப்படியே போனால் இனி எதிர்காலத்தில் தமிழ் மக்கள் மத்தியில் எந்த ஒரு செயற்பாட்டு அமைப்பும்  கட்சி கடந்த அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது கடினமாகிவிடும். ஒரு செயற்பாட்டு அமைப்பு அல்லது மக்கள் அமைப்பு எதையாவது செய்யப் புறப்பட்டால் நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்து எத்தனை பேர் அதனை ஹைஜாக் பண்ண முயற்சிக்கிறார்கள்?

அணையா விளக்கு போராட்டக் களம் என்பது உள்ளூர் விடயம் ஒன்றுக்காக அனைத்துலக சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்தோடு திறக்கப்பட்டது. எனவே அதற்கு ஓர் அனைத்துலக பரிமாணம் உண்டு. கட்சி சாராத அதுபோன்ற நடவடிக்கைகள் தமிழ் தேசிய பரப்பில் மிகக் குறைவு. ஆனால் அவற்றுக்குத்தான் புனிதம் அதிகம். அங்கேதான் கட்சி கடந்த தேசத் திரட்சி ஏற்படும். மெய்யான  பொருளில் செயல்பூர்வமாக தமிழ் மக்களை ஒரு இனமாக, ஒரு தேசமாகத் திரட்டும் களங்கள் அவை. எனவே அந்த இடத்தில் உட்கட்சிப் பூசல்களுக்கும் கட்சிகளுக்கு இடையிலான முரண்பாடுகளுக்கும் இடமில்லை.

கட்சி அரசியலை முன்னெடுப்பவர்கள் அந்தக் களங்களை கட்சி அரசியல் நோக்கத்தோடுதான் அணுகுவார்கள்; கையாளுவார்கள். அதில் சந்தேகமில்லை. இது தேசிய மக்கள் சக்திக்கும் பொருந்தும். ஆனால் அனைத்துலக சமூகத்திடம் நீதி கேட்கும் ஒரு போராட்டக் களத்தில் எல்லாத் தரப்புக்களையும் ஒன்று திரட்டுவது அந்தப் போராட்டத்தின் நீதியைப் பலப்படுத்தும். கோழியைத் திருடினவனும் கோழியை வளர்த்தவனும் ஒன்றாகப் போராட முடியாது என்று ஒரு விளக்கம் கூறப்படலாம். இன அழிப்புக்கு மறைமுகமாக உடந்தையாக இருந்தவர்களும் இன அழிப்பை விசாரிப்பதற்கு அனைத்துலக பொறிமுறையை ஏற்றுக் கொள்ளாதவர்களும் இன அழிப்புக்கு எதிரான நீதியைக் கோரிப் போராடும் ஒரு களத்தில் வரக்கூடாது என்றில்லை. அவர்கள் அங்கே வருவது போராட்டத்தின் நியாயத்துக்கு வலுச்சேர்க்கும். அங்கே அவர்களை வரவழைத்ததே வெற்றிதான். அங்கே  வந்தால்தான் அரசியல் செய்யலாம் என்று ஒரு தவிர்க்க முடியாத நிர்ப்பந்தத்தைப் போராட்டம் ஏற்படுத்தியதே ஒரு வெற்றிதான்.

facebook_1750864701906_73436588226663647

மேலும் இன அழிப்பில் நேரடியாகவோ மறைமுகமாகவோ பங்களித்தவர்கள் அல்லது தங்களுக்குரிய தார்மீகப் பொறுப்பை நிறைவேற்றாதவர்கள் என்று பார்த்தால் ஈழத் தமிழர்கள் இந்த பூமியில் உள்ள பெரும்பாலான அரசுகளையும் பெரு நிறுவனங்களையும் குற்றம் சாட்ட வேண்டியிருக்கும். தமிழ் மக்களை இன அழிப்பு செய்தவர்கள் என்று பார்த்தால் பிரித்தானிய பேரரசிலிருந்து தொடங்கி  உலகில் உள்ள எல்லாப் பேரரசுகளின் கைகளிலும் தமிழ் மக்களின் ரத்தம் உண்டு. ஏன் ஐநாவின் கைகளிலும்தான்.

எந்த ஐநாவிடம் தமிழ்மக்கள் நீதியைக் கேட்கின்றார்களோ,எந்த மேற்கு நாடுகளிடம் தமிழ் மக்கள் நீதியை எதிர்பார்க்கின்றார்களோ, இந்த மேற்கத்திய ராஜதந்திரக் கட்டமைப்பானது இறுதிக்கட்டப் போரில் தமிழ்  மக்களை கைவிட்டது. ஒருவகையில் அக்கால கட்டத்தில் நடந்த இன அழிப்புக்கு அவர்களும் பொறுப்பு. ஐநாவும் உட்பட.

செம்மணியில் போராட்டம் நடந்து கொண்டிருந்த பொழுதே காசாவில் இன அழிப்பும் நடந்து கொண்டிருக்கிறது. 16 ஆண்டுகளின் பின் மீண்டும் மேற்கு ஆசியாவில் ஒரு முள்ளிவாய்க்கால். 16 ஆண்டுகளுக்கு முன் முள்ளிவாய்க்காலில் எது நடந்ததோ அதுதான் இப்பொழுது காசாவில் நடந்து கொண்டிருக்கிறது. சிறு சிறு வித்தியாசங்கள். 16 ஆண்டுகளுக்கு முன் முள்ளிவாய்க்காலில் நடந்தவற்றை கையாலாகாத சாட்சியாக ஐநா பார்த்துக் கொண்டிருந்தது. இன்றைக்கு காசாவிலும் அதே நிலைமைதான்.

எனவே தமிழ் மக்கள் நீதிமான்ககளிடம்தான் நீதியைக் கேட்க வேண்டும் என்று தீர்மானித்தால் இந்த குரூர உலகிலே யாரிடமும் நீதியை எதிர்பார்க்க முடியாது. ஏனென்றால் அரசியலில் யாருமே சுத்தமான நீதிவான்கள் கிடையாது. அண்மையில், மேற்கு ஆசியாவில் யுத்தம் வெடித்தபோது தமிழ் முகநூல் உலாவிகள் பெரும்பாலும் ஈரானின் பக்கம்தான் நின்றார்கள். அதை ஈரானின் பக்கம் என்று கூறுவதை விடவும் இஸ்ரேலுக்கு எதிராக என்று கூறுவதே தகும். அதாவது காசாவில் இன அழிப்பை செய்யும் இஸ்ரேலுக்கு எதிரான கூட்டுணர்வு அது. அந்த இடத்தில் தமிழ் மக்கள் பெரும்பாலும் இன அழிப்புக்கு எதிராகத் திரண்டு காணப்பட்டார்கள்.

ஆனால் இறுதிக் கட்டப் போரில் ஈரான் யாருடன் நின்றது? ராஜபக்சக்களோடு தான். இஸ்ரேல் யாரோடு நின்றது? ராஜபக்சக்களோடுதான். ஏன் அதிகம் போவான்? 2009க்கு பின் பலஸ்தீன் அதிகார சபையானது மஹிந்தவை ஒரு விருந்தாளியாக அழைத்து நாட்டின் அதி உயர் விருதை அவருக்கு வழங்கியது. அது மட்டுமல்ல அவருடைய பெயரால் ஒரு வீதியையும் திறந்து வைத்தது. இது நடந்தது 2014இல். தமிழ் மக்கள் யாரை இன அழிப்பு செய்தவர் என்று குற்றம் சாட்டினார்களோ அவரை அழைத்து பலஸ்தீனர்கள் கௌரவித்தார்கள். அங்கே பாலஸ்தீனர்கள் நீதியின்  அடிப்படையிலோ அறம் சார்ந்தோ முடிவெடுக்கவில்லை.

பலஸ்தீனியர்கள் மட்டுமல்ல ஈரானியர்கள்,இஸ்ரேலியர்கள் முதலாக இந்த பூமியில் உள்ள எல்லா அரசுடைய தரப்புக்களும் ராணுவ, பொருளாதார, அரசியல் நலன்களின் அடிப்படையில்தான் முடிவுகளை எடுக்கும். அறநெறிகளின் அடிப்படையிலோ நீதி நியாயங்களில் அடிப்படையிலோ அல்ல.

எனவே தமிழ் மக்கள் உலக சமூகத்திடம் நீதியை எதிர்பார்க்கும் பொழுது, நாம் நீதியாகப் போராடுகிறோம், நீதிக்காகப் போராடுகிறோம்,எனவே உலகம் எங்களுக்கு நீதியை வழங்கிவிடும் என்றெல்லாம் அப்பாவித்தனமாக நம்பத் தேவையில்லை. குறிப்பாக ஐநாவை பொருத்தவரை அது முதலாவதாக அரசுகளின் அரங்கம். இரண்டாவதாககத்தான் அரசற்ற தரப்புகளின் அரங்கம். அங்கே அரசுகளின் நீதி தான் உண்டு. அங்கு மட்டுமல்ல இந்த பூமியில் எங்கும் அரசுகளின் நீதிதான் உண்டு. தூய நீதி கிடையாது.

ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு வரப்போகிறார் என்ற தகவல் கிடைத்ததும் ஒரு தொகுதி தமிழ் சிவில் சமூகங்கள் இணைந்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி கூட்டாக ஒரு கடிதம் அனுப்பின. கடந்த 2021ஆம் ஆண்டிலிருந்து ஐ.நா மனித உரிமைகள் அலுவலகத்தில் இயங்கி வருகின்ற ஸ்ரீலங்காவைப் பொறுப்புக்கூற வைப்பதற்கான ஓர் அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள் இலங்கைக்குள் வருவதற்கு தொடர்ச்சியாக இலங்கை அரசாங்கங்கள் விசா வழங்கவில்லை. அந்த அலுவலகமானது சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்குரியது. இலங்கைக்குள் சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கு அந்த அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள் வருவதற்கு இன்றுவரை விசா வழங்கப்படவில்லை.

IMG-20250627-WA0001-1024x493.jpg

இதைச்  சுட்டிக்காட்டி இப்படிப்பட்ட ஒரு நாட்டுக்கு ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் வருவது என்பது அந்த நாடு செய்வதை அங்கீகரிப்பதாகக் கருதப்படும் என்ற பொருள்பட சிவில் சமூகங்கள் கருத்து தெரிவித்தன. அக்கடிதத்தைத் தொடர்ந்து ஐநா அலுவலர்களுக்கும் சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்கும் இடையே ஒரு மெய்நிகர் சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டது. புதிய இலங்கை அரசாங்கத்தை ஐநாவால் கையாளத்தக்க தூரத்துக்குள் வைத்திருப்பதென்றால் இந்த அரசாங்கத்தோடு “என்கேஜ்” பண்ண வேண்டும் என்று ஒரு விளக்கம் ஐநாவிடம் இருப்பதாக தெரிந்தது. எனவே, தமிழ் சிவில் சமூகங்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொள்ளாமல் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு வருமிடத்து, அவர் செம்மணிப் புதைகுழியைப் பார்வையிட வேண்டும் என்று சிவில் சமூகங்கள் கோரிக்கை விடுத்தன. ஐநா அதை ஏற்றுக்கொண்டது.

சிவில் சமூகங்களுக்கு ஐநா  கூறியது ஒரு புதிய விளக்கம் அல்ல. கடந்த 16 ஆண்டுகளில் மேற்கு நாடுகள் தமிழ் சிவில் சமூகங்களுக்கு அடிக்கடி கூறி வந்த ஒரு விளக்கம்தான். குறிப்பாக ராஜபக்சக்களை எதிர்நிலைக்கு தள்ளினால் அவர்கள் சீனாவை நோக்கிப் போய்விடுவார்கள்; எனவே அவர்களோடு “என்கேஜ்” பண்ணுகிறோம் என்று பெரும்பாலான நாடுகள் கூறின. ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கையோடு என்கேஜ் பண்ண வேண்டும் என்று முடிவெடுத்ததற்கு அவர்கள் வெளிப்படையாகக் கூறும் காரணங்களை விட ஆழமான ராஜதந்திர இலக்குகள் உண்டு. இப்போதுள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது ஜேவிபியை அடித்தளமாகக் கொண்டது. ஜேவிபி சீன சார்பு இடதுசாரி மரபில் வந்தது. தேசிய மக்கள் சக்தியின் முடிவெடுக்கும் அதிகாரமுடைய தலைவர்களில் ஒருவராகிய ரில்வின் சில்வா அண்மையில் சீனாவில் காணப்பட்டார். சீனாவின் செல்வாக்குப் பொறிக்குள் எளிதாக விழக்கூடிய ஒரு அரசாங்கத்தை தங்களால் கையாளப்படத்தக்க ஒரு எல்லைக்குள் வைத்திருக்க வேண்டும் என்று ஐநாவும் சிந்திக்கின்றது; அமெரிக்கா ஐரோப்பா உள்ளிட்ட மேற்கு நாடுகளும் இந்தியாவும் சிந்திக்கின்றன. எனவே இந்த அரசாங்கம் சீனாவை நோக்கிப் போவதை தடுக்கும் நோக்கத்தோடு இந்த அரசாங்கத்தோடு என்கேஜ் பண்ண வேண்டும் என்று மேற்கண்ட தரப்புக்கள் சிந்திக்கின்றன.

இந்த ராஜதந்திர இலக்கை முன்வைத்துத்தான் மனித உரிமைகள் ஆணையர் இலங்கைக்குள் வந்தார். இப்படிப்பட்டதோர் ராஜதந்திரச்  சூழலில், ஐநா தமிழ் மக்களுக்குத் தூய நீதியைப் பெற்றுத் தராது.ஆனால் அதற்காக தமிழ் மக்கள் போராடாமல் இருக்க முடியாது .

அரசற்ற தரப்பாகிய தமிழ் மக்கள் ஒரு இனமாக ஒரு தேசமாக திரண்டு போராடினால்தான்-அந்த திரட்சிதான்-அவர்களுடைய பேரத்தை கூட்டும். பேரபலம் அதிகரித்தால்தான் நாடுகளும் உலகப் பொது மன்றங்களும் தமிழ் மக்களை நோக்கி வரும். எனவே ஒரு இனமாக திரள்வதற்காக தமது பேர பலத்தை அதிகப்படுத்துவதற்காக தமிழ் மக்கள் போராட வேண்டும். ஐநா நிலைமாறு கால நீதியைத் தருமா? அல்லது பரிகார நீதியைத் தருமா? என்பதல்ல இங்கு கேள்வி. ஓர் உலகப் பொது மன்றம் என்ற அடிப்படையில் ஐநாவோடுதான் தமிழ் மக்கள் என்கேஜ் பண்ணவும் வேண்டும். நவீன ராஜதந்திரம் எனப்படுவது என்கேஜ் பண்ணுவதுதான்.எனவே தமிழ்மக்கள் உலக சமூகத்துடன் என்கேஜ் பண்ணுவது என்று சொன்னால் முதலில் தங்களை ஒரு தரப்பாக பலப்படுத்திக் கொள்ள வேண்டும். நீதிக்கான போராட்டத்தில் உலகத்தைத் தம்பக்கம் திரட்ட வேண்டுமென்றால் முதலில் தமிழ்மக்கள் தங்களைத் தாங்களே திரட்டிக்கொள்ள வேண்டும்.செம்மணியில் நடந்தது போன்ற போராட்டங்கள் தமிழ் மக்களை அவ்வாறு கட்சி கடந்து ஒரு தேசமாகத் திரட்டக் கூடியவை. போராட்ட நெருப்பை அணைய விடாமல் பாதுகாப்பவை.

https://www.nillanthan.com/7483/#google_vignette

  • கருத்துக்கள உறவுகள்

செம்மணியில் நடந்த போராட்டம், மக்கள் தமது தொலைந்துபோன, காணாமல் ஆக்கப்பட்ட, கொலை செய்யபட்ட உறவுகளுக்கு நீதி தேடி, அவர்கள் தம் அரசியல் தலைவர்களால் கவனிப்பாரற்று கேட்ப்பாரற்று கைவிடப்பட்டவர்கள் தாங்களாகவே தமது நீதியை தேடி போராட புறப்பட்டவர்கள். அவர்களின் கேள்விக்கு, போராட்டத்திற்கு அவர்களால் தெரிந்தெடுக்கப்பட்ட பெரும் கட்சி, தாய்க்கட்சி, ஏகோபித்த வரவேற்பை பெற்ற கட்சி என்று பீற்றிக்கொள்பவர்கள் என்ன செய்தார்கள்? அவர்கள் தேடிக்கொண்டிருப்பவர்களை, கொலை, காணாமல் போகச்செய்தவர்கள், புதைத்தவர்களோடு தம் பதவிக்காக தம்மை தேர்ந்தெடுத்த மக்களின் ஆணைக்கு எதிராக பேரம் பேசுபவர்கள், செம்மணி என்பது வாய்வழிக்கதை அப்படி அங்கே ஒன்றுமில்லை என்று சொல்லும் கட்சியை சார்ந்தவர்கள், அந்த மக்களின் துயரத்தை வைத்து தம் லாபம் தேட விட முடியுமா? அப்படி விட்டால்; அதனால் என்ன பயன்? அவர்கள் உணர வேண்டும், கடமை செய்யாமல் மக்களின் போராட்டத்திற்கு உரிமை கோர முடியாது என்பதை உணரவேண்டும், திருந்த வேண்டும். இல்லையேல் துரத்தியடிக்கப்படுவார்கள். ஐ. நாவில் இத்தனை ஆண்டுகளாய் நமது பிரச்சினை நடந்து கொண்டிருக்கிறது. நம்ம அரசியல்வாதிகள் தமது மக்களுக்காக, அவர்கள் துயரங்களை எடுத்துச்சொல்ல சென்றார்களா? அநீதியிழைத்தவனுக்கு கால அவகாசம் வேண்டிக்கொடுக்க விரைகின்றனர். இதெல்லாம் உலகத்திற்கு, ஐ. நாவிற்கு தெரியாது? அவர்கள் இந்த போராட்டத்திற்தான் இவர்கள் செயற்பாட்டை கண்டுணரப்போகிறார்களாக்கும். அந்த மக்கள் கொன்றொழிக்கப்படும்போது, பல நாட்டு தூதுவர்கள் வந்திருந்தார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்காக பேச அவர்கள் பிரதிநிதிகள் யாரும் நாட்டில் இல்லை. அவர்கள் எல்லோராலும் கைவிடப்பட்டு, உயிரற்ற உறவுகளின் உடலங்களை எடுத்து இறுதி மரியாதை செய்யக்கூட அவகாசமில்லாமல் ஓடிக்கொண்டிருந்தார்களே... அப்போது இவர்கள் ஏன் அவர்களுடன் இருக்கவில்லை? இப்போ மட்டும் எங்கிருந்து இந்த பொறுப்பு ஏன் வந்தது? எல்லாமே ஐநாவுக்கும் தெரியும் சர்வதேசத்திற்கும் தெரியும். இப்போ மக்களின் போராட்டத்தை நீர்த்துபோகச்செய்யவே அங்கே போய் பிரச்சனையை உருவாக்குகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, satan said:

அந்த மக்கள் கொன்றொழிக்கப்படும்போது, பல நாட்டு தூதுவர்கள் வந்திருந்தார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்காக பேச அவர்கள் பிரதிநிதிகள் யாரும் நாட்டில் இல்லை. அவர்கள் எல்லோராலும் கைவிடப்பட்டு, உயிரற்ற உறவுகளின் உடலங்களை எடுத்து இறுதி மரியாதை செய்யக்கூட அவகாசமில்லாமல் ஓடிக்கொண்டிருந்தார்களே... அப்போது இவர்கள் ஏன் அவர்களுடன் இருக்கவில்லை? இப்போ மட்டும் எங்கிருந்து இந்த பொறுப்பு ஏன் வந்தது? எல்லாமே ஐநாவுக்கும் தெரியும் சர்வதேசத்திற்கும் தெரியும். இப்போ மக்களின் போராட்டத்தை நீர்த்துபோகச்செய்யவே அங்கே போய் பிரச்சனையை உருவாக்குகிறார்கள்.

நீங்கள் 2013 இல் டேவிட் கமெரூன் போன போது நடந்தவற்றைப் பேசுகிறீர்களா அல்லது முள்ளிவாய்க்கால் காலத்தைப் பேசுகிறீர்களா?

2013 எனில், உண்மையில் நடந்தது, உங்களைப் போன்ற கொம்பு சீவும் புலத்தமிழர்களின் அமைப்புகள், டேவிட் கமெரூன் இலங்கையில் நடக்கும் பொதுநலவாய அமைப்பு அமைச்சர் மாநாட்டைப் பகிஷ்கரிக்க வேண்டுமென்று கோரினார்கள். கமெரூன், இதை மறுதலித்து, கொழும்பு போனார். மகிந்த அரசு அனுமதி வழங்க மறுத்த பின்னரும், பிரிட்டன் எம்பசியின் ஏற்பாட்டை மட்டும் வைத்துக் கொண்டு யாழ்ப்பாணம் சென்றார். கொழும்பில் எந்த சந்திப்பும் ஏற்பாடு செய்யப் பட்டிருக்கவில்லை. ஆனால், அந்த சந்தர்ப்பத்தில் முதலமைச்சராக இருந்த விக்கி ஐயாவைச் சந்தித்தார். இந்தச் சந்தர்ப்பத்தில் நீங்கள் குறிப்பிடும் தமிழ் தலைவர்கள் யாரும் ஒளித்துத் திரியவில்லை.

ஒரு பிரிட்டன் பிரதமரை சும்மா போய் வாசலில் நின்று சந்திக்கும் நிலைமைகள் அன்றும் இல்லை, இன்றும் இல்லை. ஊரில் ஒரு கிராமசேவகரைச் சந்தித்த அனுபவம் கூட இல்லாதவர் போல இருக்கிறது உங்கள் கதை😂!

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Justin said:

நீங்கள் 2013 இல் டேவிட் கமெரூன் போன போது நடந்தவற்றைப் பேசுகிறீர்களா அல்லது முள்ளிவாய்க்கால் காலத்தைப் பேசுகிறீர்களா?

2013 எனில், உண்மையில் நடந்தது, உங்களைப் போன்ற கொம்பு சீவும் புலத்தமிழர்களின் அமைப்புகள், டேவிட் கமெரூன் இலங்கையில் நடக்கும் பொதுநலவாய அமைப்பு அமைச்சர் மாநாட்டைப் பகிஷ்கரிக்க வேண்டுமென்று கோரினார்கள். கமெரூன், இதை மறுதலித்து, கொழும்பு போனார். மகிந்த அரசு அனுமதி வழங்க மறுத்த பின்னரும், பிரிட்டன் எம்பசியின் ஏற்பாட்டை மட்டும் வைத்துக் கொண்டு யாழ்ப்பாணம் சென்றார். கொழும்பில் எந்த சந்திப்பும் ஏற்பாடு செய்யப் பட்டிருக்கவில்லை. ஆனால், அந்த சந்தர்ப்பத்தில் முதலமைச்சராக இருந்த விக்கி ஐயாவைச் சந்தித்தார். இந்தச் சந்தர்ப்பத்தில் நீங்கள் குறிப்பிடும் தமிழ் தலைவர்கள் யாரும் ஒளித்துத் திரியவில்லை.

ஒரு பிரிட்டன் பிரதமரை சும்மா போய் வாசலில் நின்று சந்திக்கும் நிலைமைகள் அன்றும் இல்லை, இன்றும் இல்லை. ஊரில் ஒரு கிராமசேவகரைச் சந்தித்த அனுபவம் கூட இல்லாதவர் போல இருக்கிறது உங்கள் கதை😂!

ஆரம்ப பாடசாலை தமிழில் ஒரு 300 சொற்கள் கொண்ட கட்டுரையினை 15 சொற்களுக்கு சுருக்கமாக எழுதும்படி கோரப்படும் அதற்கு ஆசிரியர்கள் கூறும் ஒரு முறை பென்சிலால் ஒரே சொல் திரும்ப திரும்ப இடம்பெறும் சொற்களை கீறி (அடித்துவிட) விட்டு அதே போல இன்னு பல விடயங்கள் கூறுவார்கள் (எனக்கு நினைவில்லை நான் அவ்வாறு செய்வதில்லை). 15 சொற்களுக்கு சுருக்கமாக எழுதப்படும்.

கேள்வியில் எதிர்பார்க்கப்படுவது கட்டுரையின் சாராம்சம் மட்டுமே!

அந்த 7 நாள்கள் படத்தின் கதை என்னவென்றால் ஒரே வரியில் ஒருவரின் காதலி இன்னொருவரின் மனைவியாகலாம், ஒருவரின் மனைவி இன்னொருவரின் காதலி ஆகமுடியாது.

சாத்தான் கூற விளைவது கட்டுரை அனைவரும் ஒன்றாக நிற்கவேண்டும் என கூற மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் எதிரெதிராக நிற்கிறார்களே எனும் விசனம்.

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, vasee said:

சாத்தான் கூற விளைவது கட்டுரை அனைவரும் ஒன்றாக நிற்கவேண்டும் என கூற மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் எதிரெதிராக நிற்கிறார்களே எனும் விசனம்.

😂 எனக்குத் தான் தமிழ் விளங்கவில்லையா அல்லது சாத்தான் "சில அரசியல் வாதிகளைத் துரத்தியது சரி தான்" என்று சொல்லியிருக்கிறாரா?

  • கருத்துக்கள உறவுகள்

யாரும் யாரையும் வாசலில் போய் சந்திக்கவில்லை. டேவிட் கமரூன் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க யாழ்ப்பாணம் வந்தார். இலங்கை அரசு அவர் வருவதை தடை செய்ய எத்தனையோ காரணங்களை சொன்னது. இருந்தாலும் அவர் அவைகளை கடந்து வந்தார். மக்களை சந்திக்க விடாமல் போலீசார் தடைகளை ஏற்படுத்தினர். அங்கே செல்வராசா கஜேந்திரன், மதகுருக்கள், அனந்தி போன்றோர் மக்களுடன் கலந்து நின்றனர். அப்போ நம்ம தலைகள் யாழ் நூல்நிலையத்திலிருந்து பின்கதவு வழியாக வெளியேறிக்கொண்டிருந்தனர். அனந்தி பொலிஸாரின் தடைகளையும் தாண்டி ஓடிச்சென்று கார் யன்னல்வழியாக அறிக்கை ஒன்றை டேவிட் கமரோனிடம் கையளித்தார். இந்த சம்பவத்திற்கு பின் காணாமல் போன உறவுகளை சந்திக்க சென்றனர். கோபமடைந்த உறவுகள், அவர்களுடன் உரையாட மறுத்து, எங்கள் பிரச்சனைகளில் எங்களோடு நிற்கவில்லை இப்போ மாப்பிளை அழைக்க வந்தீர்களோ என விசனத்தை தெரிவிக்க, குனிந்த தலையுடன் சுமந்திரன் சம்பந்தர் வெளியேறினர்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, satan said:

யாரும் யாரையும் வாசலில் போய் சந்திக்கவில்லை. டேவிட் கமரூன் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க யாழ்ப்பாணம் வந்தார். இலங்கை அரசு அவர் வருவதை தடை செய்ய எத்தனையோ காரணங்களை சொன்னது. இருந்தாலும் அவர் அவைகளை கடந்து வந்தார். மக்களை சந்திக்க விடாமல் போலீசார் தடைகளை ஏற்படுத்தினர். அங்கே செல்வராசா கஜேந்திரன், மதகுருக்கள், அனந்தி போன்றோர் மக்களுடன் கலந்து நின்றனர். அப்போ நம்ம தலைகள் யாழ் நூல்நிலையத்திலிருந்து பின்கதவு வழியாக வெளியேறிக்கொண்டிருந்தனர். அனந்தி பொலிஸாரின் தடைகளையும் தாண்டி ஓடிச்சென்று கார் யன்னல்வழியாக அறிக்கை ஒன்றை டேவிட் கமரோனிடம் கையளித்தார். இந்த சம்பவத்திற்கு பின் காணாமல் போன உறவுகளை சந்திக்க சென்றனர். கோபமடைந்த உறவுகள், அவர்களுடன் உரையாட மறுத்து, எங்கள் பிரச்சனைகளில் எங்களோடு நிற்கவில்லை இப்போ மாப்பிளை அழைக்க வந்தீர்களோ என விசனத்தை தெரிவிக்க, குனிந்த தலையுடன் சுமந்திரன் சம்பந்தர் வெளியேறினர்.

அந்த நேரமே செயற்கை நுண்ணறிவு வைத்துப் படமெல்லாம் தயாரித்திருக்கிறார்கள் போல! நிஜம் போலவே இருக்குது

👇!

https://dbsjeyaraj.com/dbsj/?p=26627

https://www.colombotelegraph.com/index.php/pm-cameron-meets-cm-wigneswaran-in-jaffna/

"....The Prime Minister was received by Mr. Sampanthan, Mr. sumanthiran and Chief Minister Wigneswaran. He said “he was happy that after 1948, he was the first Head of Government to visit Jaffna”. The venue of the meeting was kept under wraps. Discussions took place in the 1st floor of Jaffna public library. The Prime Minister was accompanied by Edward Llewellyn, Chief of Staff to the PM.

On their way back from the meeting, Chief Minister noted that the PM’s car was mobbed by the dear ones of those who were missing. There were shouts and sobs and an open expression of grief. The PM’s desire to meet them was being served."

இனி உங்கள் முறை: உங்கள் அம்புலிமாமாக் கதைக்கான ஆதாரங்களை இணையுங்கள். யூ ரியூப் அலட்டல் பேர்வழிகள் தான் ஆதாரம் என்றால் இணைத்து மெனக்கெடாதீர்கள்😎!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.