Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வாஸ்கோடகாமா, இந்தியா, கேரளா, வரலாறு, கோழிக்கோடு, ஐரோப்பா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கேரளாவின் வரலாற்றுப் பக்கங்களில் வாஸ்கோடகாமா ஒரு 'வில்லனாகவே' பார்க்கப்படுகிறார்.

கட்டுரை தகவல்

  • சிராஜ்

  • பிபிசி தமிழ்

  • 29 ஜூன் 2025

    புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர்

"போர்த்துகீசியர்களின் ராஜ்ஜியத்துடன் கேழுவும் வளர்ந்தான். அவனது மனதில் ஒரு லட்சியம் வேரூன்றி இருந்தது. அது வாஸ்கோவின் ரத்தம்."

'உறுமி' எனும் பிரபல மலையாள திரைப்படத்தில், நாயகன் சிரக்கல் கேழுவின் அறிமுகக் காட்சிக்கு முன், அவர் குறித்து வரும் வசனம் இது.

அந்தத் திரைப்படத்தில், போர்த்துகீசிய மாலுமி வாஸ்கோடகாமாவை கொல்ல வேண்டும் என்பதே நாயகன் கேழுவின் வாழ்க்கை லட்சியமாக இருக்கும். அதற்காகவே அவர் பல சிரமங்களைச் சந்திப்பார், ஒரு புரட்சிப் படையைத் திரட்டுவார், போர்த்துகீசிய படைகளுக்கு எதிரான சண்டையில் தன் உயிர் நண்பனைப் பறிகொடுப்பார். இருப்பினும், தனது லட்சியத்தை நிறைவேற்ற முடியாமல் இறுதியில் உயிரிழப்பார்.

வாஸ்கோடகாமா என்ற போர்த்துகீசியரை கொல்லத் துடித்த 'சிரக்கல் கேழு' ஒரு புனைவுக் கதாபாத்திரம்தான். ஆனால் பிரித்விராஜ் ஏற்று நடித்த அந்தக் கதாபாத்திரமும், 'உறுமி' திரைப்படமும் கேரளாவில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

மேலும் சில மலையாள திரைப்படங்கள், நாட்டுப்புறப் பாடல்கள், கதைகள் என கேரளாவின் வரலாற்றுப் பக்கங்களில் இந்தியாவுக்கு கடல்வழி கண்ட வாஸ்கோடகாமா ஒரு 'வில்லனாகவே' பார்க்கப்படுகிறார்.

வாஸ்கோடகாமா, 1497ஆம் ஆண்டு, மார்ச் 25ஆம் போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் இருந்து அந்நாட்டு மன்னரின் ஆதரவுடன் இந்தியாவை நோக்கிப் புறப்பட்டார். பல மாதங்கள் நீடித்த கடல் பயணத்திற்குப் பிறகு, இந்தியாவை அடைந்த முதல் ஐரோப்பியர் எனும் பெருமையைப் பெற்ற வாஸ்கோடகாமா, ஐரோப்பிய வரலாற்றில் ஒரு 'ஹீரோவாக' கொண்டாடப்படுகிறார்.

நமது பாடப் புத்தகங்களில்கூட, வாஸ்கோடகாமாவின் வணிக நோக்கிலான இந்திய பயணங்கள் குறித்தும், அவரது வர்த்தக/மாலுமி முகம் குறித்துமே அதிகம் உள்ளது.

இந்தியாவை அடைய வேண்டுமென்ற ஐரோப்பாவின் கனவு

வாஸ்கோடகாமா, இந்தியா, கேரளா, வரலாறு, கோழிக்கோடு, ஐரோப்பா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, வாஸ்கோடகாமா- கோழிக்கோடு சமோரின் (ராஜா) சந்திப்பை சித்தரிக்கும் ஓவியம்

"இந்தியாவோடு நேரடி ஐரோப்பிய தொடர்பைத் தொடங்கும் அதிர்ஷ்டம் பெற்ற இந்த வாஸ்கோடகாமா, வலிமையான உடலமைப்பும், முரட்டுத்தனமான மனப்பான்மையும் கொண்டவர். கல்வியறிவு இல்லாதவர், கொடூரமானவர், வன்முறையாளர் என்றாலும், அவர் விசுவாசமானவர், அச்சமற்றவர். இந்திய பயணத்திற்கு தலைமை தாங்க, அவருக்கு உத்தரவிடப்பட்டது. இத்தகைய பணியை ஒரு மென்மையான தலைவரால் நிறைவேற்ற முடியாது."

இவ்வாறு வாஸ்கோடகாமா குறித்து தனது 'தி கிரேட் டிஸ்கவரீஸ்' எனும் நூலில் குறிப்பிடுகிறார் அமெரிக்க வரலாற்று ஆசிரியரான சார்லஸ் இ. நோவெல்.

ஜனவரி 1497இல், போர்ச்சுகல் மன்னர் முதலாம் டி. மானுவல், 'போர்த்துகீசியர்கள் இந்தியாவை அடைய வேண்டும் என்ற கனவை' நிறைவேற்றும் பொறுப்பை வாஸ்கோடகாமாவிடம் ஒப்படைத்தார். இந்தியாவை முதலில் அடைவது யார் என்ற போட்டி ஐரோப்பிய நாடுகளுக்குள் பல நூற்றாண்டுகளாகவே நடைபெற்று வந்தது. சிறிய நாடான போர்ச்சுகலும் தன்னால் முடிந்த அனைத்தையும் முயன்று வந்தது.

ஆனால், அதற்கு முன்பாகவே இந்தியாவை அடைந்த அரேபியர்களும், பாரசீகர்களும் இங்கு தங்களது வர்த்தக மையங்களை நிறுவியிருந்தனர். குறிப்பாக தென்னிந்திய பகுதியான மலபாரில் (கேரளா) இஸ்லாமிய வணிகர்களிடம் இருந்தே ஐரோப்பாவுக்கு மசாலா பொருட்கள் கிடைத்தன.

"போர்த்துகீசியர்களின் வருகைக்கு முன்பு, குஜராத், மலபார் மற்றும் செங்கடலில் உள்ள துறைமுகங்கள் உள்பட இந்திய பெருங்கடல் வர்த்தகத்தில் இஸ்லாமிய கடல் வணிகர்கள் ஆதிக்கம் செலுத்தினர்" என்று 'தி முகல் எம்பயர்' நூலில் ஜான் எஃப். ரிச்சர்ட்ஸ் குறிப்பிடுகிறார்.

"1492இல் கொலம்பஸ் அமெரிக்காவில் கால்பதித்தார். தான் மரணிக்கும் நாள் வரை, தான் கண்டுபிடித்தது ஆசியாவின் ஒரு பகுதியைத்தான் என்றும், அதற்கு அருகில்தான் இந்தியா உள்ளது என்றும் உறுதியாக நம்பினார். அதனால் அவர் கால் பதித்த பகுதியில் வாழ்ந்த மக்களை 'இந்தியர்கள்' என்று அழைத்தார்" என ஜார்ஜ் எம். டோலி தனது 'தி வாயேஜஸ் அண்ட் அட்வெஞ்சர்ஸ் ஆஃப் வாஸ்கோடகாமா' என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த அளவுக்கு, 'இந்தியாவை' அடைவதில் ஐரோப்பியர்கள் முனைப்பாக இருந்தனர். அதற்குக் காரணம், இந்தியா குறித்து ஐரோப்பாவில் பரவியிருந்த பிம்பம். தங்கம், வைரம், ரத்தினங்கள், மிளகு போன்ற விலை உயர்ந்த மசாலா பொருட்கள் மற்றும் பலதரப்பட்ட பொக்கிஷங்கள் நிறைந்த ஓர் இடமாக ஆசியாவும், குறிப்பாக இந்தியாவும் கருதப்பட்டது.

வாஸ்கோடகாமா, இந்தியா, கேரளா, வரலாறு, கோழிக்கோடு, ஐரோப்பா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கடந்த 1497இல், போர்ச்சுகல் மன்னர் முதலாம் டி. மானுவல், 'போர்த்துகீசியர்கள் இந்தியாவை அடைய வேண்டும் என்ற கனவை' நிறைவேற்றும் பொறுப்பை வாஸ்கோடகாமாவிடம் ஒப்படைத்தார்.

வில்லியம் லோகன் எழுதிய 'மலபார் மேனுவல்' நூலில், "1497இல் புறப்பட்ட வாஸ்கோடகாமாவின் கடற்படையில் சாவ் ரஃபேல், சாவ் கேப்ரியல், சாவ் மிகுவல் எனப்படும் மூன்று கப்பல்கள் இருந்தன. ஒவ்வொரு கப்பலிலும், அதிகாரிகள், மாலுமிகள் மற்றும் ஊழியர்கள் இருந்தனர்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல் முறையாக வாஸ்கோடகாமா இந்தியாவுக்கு வந்தபோது அவர் மிகச் சிறிய படையுடனே வந்தார். எத்தனை பேர் என்பது குறித்து வெவ்வேறு தகவல்கள் வரலாற்றுப் புத்தகங்களில் காணப்பட்டாலும், ஒன்று மட்டும் உறுதியாகிறது- அவரது கப்பலில் குற்றவாளிகளும் இருந்தார்கள்.

'எம் நோம் டி டியூஸ்: தி ஜர்னல் ஆஃப் தி ஃபர்ஸ்ட் வாயேஜ் ஆஃப் வாஸ்கோடகாமா டூ இந்தியா 1497–1499' என்ற நூல், வாஸ்கோவின் கடற்படையில் நாடு கடத்தப்பட்ட பத்து குற்றவாளிகளும் இருந்தனர் எனக் கூறுகிறது.

அவர்களது பாவங்கள் போர்ச்சுகல் மன்னரால் மன்னிக்கப்பட்டு, அவர்கள் இந்தப் பயணத்திற்கு உதவியாக இருக்கட்டும் என அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், இதற்கு மற்றொரு காரணத்தையும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

அதாவது, "ஆபத்தான கடற்பயணம் எனும்போது, போர்ச்சுகல் சிறைகளில் தண்டனை பெற்று வீணாக மடிவதைவிட, வாஸ்கோவுக்கு உதவியாக இருந்து கடற்பயணத்தில் உயிரிழப்பது சிறந்தது என மன்னர் கருதியிருக்கலாம்."

இந்தக் குற்றவாளிகளில் முக்கியமானவர், ஜோ அவோ நுனெஸ் எனும் ஒரு 'புதிய கிறிஸ்தவர்', அதாவது சமீபத்தில் மதம் மாறிய யூதர். அவர் அரபு மற்றும் ஹீப்ரு மொழிகளை ஓரளவு அறிந்திருந்தார்.

'தி ஜர்னல் ஆஃப் தி ஃபர்ஸ்ட் வாயேஜ் ஆஃப் வாஸ்கோடகாமா டூ இந்தியா' நூலின்படி, "ஜோ அவோ நுனெஸ்- புத்திக்கூர்மை உடைய மனிதர், அவரால் மூர்கள் (இஸ்லாமியர்களை குறிக்க ஐரோப்பியர்கள் பயன்படுத்திய சொல்) பேசிய மொழியைப் புரிந்து கொள்ள முடியும்."

இந்தியாவில் முதலில் கால் வைத்த ஐரோப்பியர் ஒரு குற்றவாளியா?

வாஸ்கோடகாமா, இந்தியா, கேரளா, வரலாறு, கோழிக்கோடு, ஐரோப்பா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, வாஸ்கோடகாமாவின் பயணங்களை விளக்கும் வரைபடம். புள்ளியிடப்பட்ட கோடு 1497இல் இந்தியாவுக்கான முதல் பயணத்தைக் குறிக்கிறது.

வாஸ்கோவின் படை மே 20, 1498, கேரளாவை அடைந்தபோது, கரையில் இருந்து சிறிது தூரத்தில், கடலில் கப்பல்கள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டன.

வாஸ்கோடகாமாவின் குழு, இந்தியாவில் முதன்முதலாக கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள காப்பாடு எனும் கிராமத்தைத்தான் அடைந்தது என வரலாற்றில் பதிவு செய்யப்பட்டு இருந்தாலும், உண்மையில் அவர் முதலில் சென்றது கொல்லம் மாவட்டத்திற்கு அருகே இருந்த பந்தலாயணி பகுதிக்குத்தான் என சமீபத்தில் மறைந்த இந்திய வரலாற்று ஆசிரியரும், கல்வியாளருமான எம்.ஜி.எஸ். நாராயணன் ஒருமுறை குறிப்பிட்டிருந்தார்.

மலபார் கரையில் இருந்து நான்கு சிறு படகுகள், வாஸ்கோவின் கப்பல்களை அடைந்து, அதில் இருந்தவர்கள் குறித்து விசாரித்தனர். குறிப்பாக, "வாஸ்கோ எந்த நாட்டைச் சேர்ந்தவர்?" என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

உண்மையில் முதலில் இந்தியாவில் கால் வைத்த ஒரு ஐரோப்பியர் வாஸ்கோ அல்ல, அது ஒரு 'குற்றவாளியாக' இருந்திருக்கவே வாய்ப்புகள் அதிகம். ஏனெனில், "கப்பல்களை நங்கூரமிட்டு நிறுத்திய பிறகு, அரபு மற்றும் ஹீப்ரு மொழி பேசக்கூடிய ஒருவரை, மலபார் படகுகளுடன் கரைக்கு வாஸ்கோ அனுப்பி வைத்தார்" என 'வாஸ்கோடகாமா அண்ட் தி ஸீ ரூட் டூ இந்தியா' எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்படிப் பார்த்தால், மலபார் கரையை அடைந்த முதல் ஐரோப்பியர் அரபு மற்றும் ஹீப்ரு மொழிகளை அறிந்த, 'புதிய கிறிஸ்தவரான' ஜோ அவோ நுனெஸாக இருக்கலாம். ஆனால், இதை உறுதி செய்யப் போதுமான ஆவணங்கள் இல்லை.

ஏமாற்றத்தில் முடிந்த முதல் இந்திய பயணம்

வாஸ்கோடகாமா, இந்தியா, கேரளா, வரலாறு, கோழிக்கோடு, ஐரோப்பா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, வாஸ்கோடகாமாவின் சாவ் கேப்ரியல் கப்பல் (சித்தரிப்பு ஓவியம்)

அவ்வாறு கேரளாவில் கால் பதித்த அந்த மொழிபெயர்ப்பாளர், உள்ளூரில் வசித்த இரு அரேபியர்களிடம் அழைத்துச் செல்லப்பட்டார். அவர்கள் வாஸ்கோவின் மொழிபெயர்ப்பாளரை எதிரியாகவே பார்த்தார்கள்.

"சாத்தான் உன்னைக் கொண்டு போகட்டும்" எனக் கத்தினார்கள். பிறகு, "ஏன் இங்கு வந்தீர்கள்?" எனக் கேட்ட போது, அதற்கு வாஸ்கோவின் ஆள், "நாங்கள் கிறிஸ்தவர்களையும் மசாலா பொருட்களையும் தேடி வந்தோம்" என்ற பதில் கூறியுள்ளார்.

இப்படித்தான், இந்தியாவுக்கு வந்த முதல் ஐரோப்பியருக்கும், ஏற்கெனவே இங்கு வணிகத்தில் கொடிகட்டிப் பறந்த அரேபியர்களுக்கும் இடையிலான உரையாடல் இருந்தது எனப் பல வரலாற்று நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் பிறகு வாஸ்கோடகாமா, சில நபர்களை மட்டும் அழைத்துக் கொண்டு, பிறரை கப்பல்களிலேயே எச்சரிக்கையாக இருக்க வலியுறுத்திவிட்டு, மலபார் கரையில் கால் பதித்தார். அவருக்கு மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஆனால், வாஸ்கோவின் முதல் இந்திய பயணம் அவர் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை என்றுதான் கூற வேண்டும். அவர் சமோரினுக்காக (கோழிக்கோட்டின் இந்து மன்னரைக் குறிக்க போர்த்துகீசியர்கள் பயன்படுத்திய சொல்) கொண்டு சென்ற பரிசுகள் நகைப்புக்கு உள்ளாக்கப்பட்டன.

மசாலா பொருட்கள் வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்திய அரபு முஸ்லிம்கள், போர்த்துகீசியர்களின் வருகையை எதிர்த்தனர்.

"மிளகு வர்த்தகத்தில் போர்த்துகீசியர்கள் ஏகபோக உரிமையை நாடியபோது, அது இஸ்லாமியர்களால் கையாளப்பட்டதால் சமோரின் அதை மறுத்தார். பின்னர் போர்த்துகீசியர்கள் கொச்சி ராஜ்ஜியத்தை அணுகி, வணிகம் செய்ய அங்கு கடை அமைத்தனர். பின்னர், விஜயநகர பேரரசுக்கு அருகில் இருந்ததால் அவர்கள் கோவாவுக்கு மாறினர்" என்று வரலாற்று ஆசிரியர் எம்.ஜி.எஸ். நாராயணன் 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.

கடந்த 1499ஆம் ஆண்டில், சிறு அளவிலான மசாலா பொருட்களுடன் ஐரோப்பா திரும்பிய வாஸ்கோடகாமாவுக்கு, போர்ச்சுகல் நாட்டில் மிகப்பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது.

"முதல் இந்திய பயணத்திற்குப் பிறகு வாஸ்கோடகாமாவின் கடற்படையால் கொண்டு வரப்பட்ட மசாலா பொருட்கள் மிகப்பெரிய லாபத்திற்கு விற்கப்பட்டன, இது பயணத்தின் செலவைவிடப் பல மடங்கு அதிக லாபம்" எனத் தனது 'ஆசியா அண்ட் வெஸ்டர்ன் டாமினன்ஸ்' எனும் நூலில் கே.எம். பணிக்கர் எழுதியுள்ளார்.

இந்தியாவின் வளத்தை போர்த்துகீசியர்கள் புரிந்துகொண்ட தருணம் அது.

வாஸ்கோவின் இரண்டாவது பயணம்

வாஸ்கோடகாமா, இந்தியா, கேரளா, வரலாறு, கோழிக்கோடு, ஐரோப்பா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, வாஸ்கோடகாமாவின் கப்பலில் கோழிக்கோடு வணிகர்கள் சிறை பிடிக்கப்படுவதைச் சித்தரிக்கும் ஓவியம்

இந்தியாவுக்கான வாஸ்கோடகாமாவின் முதல் பயணம் (1497–1499) ஐரோப்பா, இந்தியா இடையிலான கடல் வழிப்பாதையை அறிமுகப்படுத்தியது. ஆனால் கேரளாவின் கோழிக்கோடு அரசுடன் ஒரு வலுவான வணிக ஒப்பந்தத்தை உருவாக்கத் தவறிவிட்டது.

இந்திய பெருங்கடலில் மசாலா வர்த்தகத்தில் நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்திய அரபு இஸ்லாமிய வணிகர்களால் போர்த்துகீசியர்கள் அவமதிக்கப்பட்டனர் மற்றும் புறக்கணிக்கப்பட்டனர்.

"வாஸ்கோவின் பார்வையில், கோழிக்கோட்டில் உள்ள முஸ்லிம் வணிகர்கள் வெறும் பொருளாதாரப் போட்டியாளர்கள் மட்டுமல்ல, மத மற்றும் கலாசார எதிரிகளும்கூட. சமோரின் அரசவையில் அவர்களுக்கு இருந்த செல்வாக்கு, போர்த்துகீசிய லட்சியங்களுக்கு அச்சுறுத்தலாகக் காணப்பட்டது" என 'தி கரியர் அண்ட் லெஜெண்ட் ஆஃப் வாஸ்கோடகாமா' எனும் நூலில் வரலாற்று ஆசிரியர் சஞ்சய் சுப்பிரமணியம் குறிப்பிடுகிறார்.

இந்த அச்சுறுத்தலுக்கு பதிலளிக்கும் விதமாக, போர்த்துகீசிய அரசு இரண்டாவது இந்திய பயணத்தை ஏற்பாடு செய்தது. இந்த முறை நோக்கம் தெளிவாக இருந்தது. அது. "இந்தியாவில் போர்த்துகீசிய ஆதிக்கத்தை நிலைநாட்டுவது, முந்தைய பின்னடைவுகளுக்குப் பழிவாங்குவது மற்றும் மசாலா பொருட்கள் வர்த்தகத்தில் ஏகபோக உரிமையைப் பெறுவது."

இருபது போர்க் கப்பல்கள் மற்றும் சுமார் 1,500 பேர் கொண்ட ஒரு கடற்படையுடன் பிப்ரவரி 1502இல் வாஸ்கோடகாமா லிஸ்பனை விட்டுப் புறப்பட்டார். அந்தக் கடற்படை, பீரங்கிகள் போன்ற ஆயுதங்களைக் கொண்டிருந்தது, போருக்குத் தயாராகவும் இருந்தது.

வாஸ்கோடகாமா, இந்தியா, கேரளா, வரலாறு, கோழிக்கோடு, ஐரோப்பா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, 'மெக்கா கப்பல்களை' வாஸ்கோவின் கடற்படையினர் தாக்குவதைச் சித்தரிக்கும் ஓவியம்.

அதே ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி, கேரளாவின் கண்ணூர் கடற்பகுதியை வாஸ்கோவின் படை அடைந்தது. அதன் பிறகு நடந்தவற்றை வாஸ்கோவின் கடற்படையில் இருந்த ஒருவர், 'தி ஜர்னல் ஆஃப் தி ஃபர்ஸ்ட் வாயேஜ் ஆஃப் வாஸ்கோடகாமா டூ இந்தியா' எனும் நூலில் பின்வருமாறு விவரித்துள்ளார்.

"அங்கே நாங்கள் மெக்காவின் கப்பல்களைப் பார்த்தோம். அவை நம் நாட்டிற்கு (போர்ச்சுகல்) வரும் மசாலா பொருட்களை ஏற்றிச் செல்லும் கப்பல்கள். இனி போர்ச்சுகல் மன்னர் மட்டுமே நேரடியாக இந்தியாவில் இருந்து மசாலா பொருட்களைப் பெற வேண்டும் என்ற நோக்கில் நாங்கள் அந்தக் கப்பல்களைக் கொள்ளையடித்தோம்."

"அதன் பிறகு, 380 ஆண்கள், பல பெண்கள் மற்றும் குழந்தைகள் பயணித்த ஒரு மெக்கா கப்பலை நாங்கள் சிறைபிடித்தோம். அதிலிருந்து குறைந்தது 12,000 டுகட்கள் (டுகட்- தங்க நாணயம்) மற்றும் விலை உயர்ந்த பல்வேறு பொருட்களைக் கொள்ளையடித்தோம். அக்டோபர் முதல் நாளில் கப்பலையும் அதில் இருந்த அனைவரையும் எரித்தோம்."

இங்கு குறிப்பிடப்படும் 'மெக்கா கப்பல்' என்பது 'மெரி' (Meri) என்ற ஒரு பெரிய கப்பல். இது கோழிக்கோடு பகுதியில் வசித்த கோஜா காசிம் எனும் செல்வந்தரின் சகோதரருக்கு சொந்தமான கப்பல் என வரலாற்று ஆசிரியர் கே.எம். பணிக்கர் குறிப்பிடுகிறார்.

வாஸ்கோவின் படையிடம் சிக்கியபோது, 'ஹஜ் புனித யாத்திரைக்காக' பயணித்துக் கொண்டிருந்த பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதான யாத்ரீகர்கள் மெரி கப்பலில் நிரம்பியிருந்தனர். அத்துடன் வர்த்தகத்திற்கான மதிப்புமிக்க பொருட்களும் கப்பலில் இருந்தன.

"வாஸ்கோ கப்பலை எரிக்க உத்தரவிட்டார். பெண்கள் தங்கள் குழந்தைகளை புகையின் நடுவே தூக்கிப் பிடித்து, கருணைக்காக மன்றாடினர். போர்த்துகீசியர்கள் தங்கள் கப்பல்களில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தபோது, அனைவரும் வலியால் அழுதுகொண்டே இறந்தனர்."

"ஒருவர்கூட தப்பிக்கவில்லை. இறக்கும் தருவாயில் இருந்தவர்களின் அழுகை கடல் முழுவதும் எதிரொலித்தது. அப்போது வாஸ்கோ அசையாமல் நின்றிருந்தார்" என லெண்டாஸ் டி இந்தியா (Lendas da Índia) எனும் நூலில் காஸ்பர் கோஹியா குறிப்பிடுகிறார்.

வாஸ்கோடகாமா தலைமையிலான படை செய்த இந்தச் சம்பவம் சில போர்த்துகீசிய சம காலத்தவர்களைக்கூட அதிர்ச்சிக்குள்ளாக்கியது. வாஸ்கோடகாமா கேரள வரலாற்றில் ஒரு வில்லனாக நினைவுகூறப்படுவதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்றாகவும் இந்தச் சம்பவம் மாறியது.

'பிரித்தாளும் சூழ்ச்சி'

வாஸ்கோடகாமா, இந்தியா, கேரளா, வரலாறு, கோழிக்கோடு, ஐரோப்பா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, வாஸ்கோடகாமா- கண்ணூர் ராஜா சந்திப்பைச் சித்தரிக்கும் ஓவியம்

அப்போது கேரளா பல ராஜ்ஜியங்களாக பிரிந்து இருந்ததும், போர்த்துகீசியர்களின் ஆதிக்கம் ஓங்குவதற்கு ஒரு காரணமாக இருந்தது. உதாரணத்திற்கு, மெரி கப்பல் சம்பவத்திற்குப் பிறகு, வாஸ்கோவின் படையினர் கண்ணூர் ராஜாவால் வரவேற்கப்பட்டனர் என 'தி ஜர்னல் ஆஃப் தி ஃபர்ஸ்ட் வாயேஜ் ஆஃப் வாஸ்கோடகாமா டூ இந்தியா' குறிப்பிடுகிறது.

"அக்டோபர் 20ஆம் தேதி நாங்கள் கண்ணூர் நாட்டிற்குச் சென்றோம். அங்கு அனைத்து வகையான மசாலா பொருட்களையும் வாங்கினோம். ராஜா மிகவும் ஆடம்பரமாக வந்தார், அவருடன் இரண்டு யானைகளையும், பல விசித்திரமான விலங்குகளையும் கொண்டு வந்தார்."

அதைத் தொடர்ந்து, கோழிக்கோடு சென்ற வாஸ்கோவின் படையினர், அதன் ராஜா சமோரினிடம், நகரத்தில் இருந்து அனைத்து முஸ்லிம் வணிகர்களையும் வெளியேற்றி, போர்த்துகீசிய வர்த்தக ஏகபோகத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கோரினர்.

ஆனால் சுதந்திர வர்த்தகத்தை ஆதரித்த சமோரின் அந்தக் கோரிக்கையை மறுத்துவிட்டார். இதனால் கோழிக்கோடு நகரத்தை வாஸ்கோ தாக்கினார்.

"நாங்கள் எங்கள் படைகளை நகரத்திற்கு முன்பாகத் திரட்டி, அவர்களுடன் மூன்று நாட்கள் சண்டையிட்டோம். ஏராளமான மக்களைப் பிடித்து, அவர்களைக் கப்பல்களின் முற்றங்களில் தொங்கவிட்டோம். அவர்களை வீழ்த்தி, அவர்களின் கைகள், கால்கள் மற்றும் தலைகளை வெட்டினோம்." (தி ஜர்னல் ஆஃப் தி ஃபர்ஸ்ட் வாயேஜ் ஆஃப் வாஸ்கோடகாமா டூ இந்தியா)

இப்படிச் சிறிது சிறிதாக வன்முறை நடவடிக்கைகள் மூலமும், 'எதிரிக்கு எதிரி நண்பன்' என்ற முறையில் பிற கேரள ராஜாக்களுடன் இணைந்தும் தங்களது ஆதிக்கத்தை போர்த்துகீசியர்கள் கேரளாவில் வலுவாக்கினர்.

"இது பிராந்திய போட்டிகளைப் பயன்படுத்தி போர்ச்சுகலின் ஆதிக்கத்தை நிலைநாட்டும் ஒரு பிரித்தாளும் சூழ்ச்சி" என 'தி போர்ச்சுகீஸ் ஸீபார்ன் எம்பயர்' நூலில் குறிப்பிடுகிறார் சார்லஸ் ஆர். பாக்ஸர்.

வாஸ்கோடகாமா, இந்தியா, கேரளா, வரலாறு, கோழிக்கோடு, ஐரோப்பா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கடந்த 1524ஆம் ஆண்டு வாஸ்கோடகாமா, இந்தியாவின் போர்த்துகீசிய வைஸ்ராயாக நியமிக்கப்பட்டார்.

கேரளாவில் 1998ஆம் ஆண்டு, அப்போதைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு, வாஸ்கோடகாமா மலபார் பகுதிக்கு வந்து, 500 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, அது 'சர்வதேச சுற்றுலா நிகழ்வாக' கொண்டாடப்படும் என அறிவித்தது. இதற்கு கேரளாவில் பலத்த எதிர்ப்பு எழுந்தது.

'வாஸ்கோவின் பயணமும் செயல்களும் இந்தியாவில் ஐரோப்பிய காலனி ஆதிக்கத்தின் தொடக்கத்திற்கு வழிவகுத்தன. எனவே அதைக் கொண்டாடுவது சரியான செயல் அல்ல' என்று விமர்சிக்கப்பட்டது.

ஐரோப்பாவின் காலனி ஆதிக்க மனப்பான்மைக்கு வாஸ்கோடகாமா ஒரு கருவியாகச் செயல்பட்டார் எனக் கூறலாம். போர்த்துகீசிய முடியாட்சியின் ஆசியோடு இந்தியா வந்த முதல் ஐரோப்பியர் என்ற பெருமையைப் பெற்ற வாஸ்கோடகாமா, 1524ஆம் ஆண்டு மூன்றாவது முறை கேரளாவுக்கு வந்தபோது 'போர்ச்சுகீசிய ஆளுமைக்கு உட்பட்ட இந்தியாவின் வைஸ்ராய்' என்ற பதவியுடன் வந்தார்.

கொச்சியை வந்தடைந்த அவர், பின்னர் நோய்வாய்ப்பட்டு 1524 டிசம்பர் 24 அன்று இறந்தார். பிறகு 1539ஆம் ஆண்டில், அவரது உடல் எச்சங்கள் போர்ச்சுகலுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cx24083d4wlo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.