Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்


Muthumai Tamil Short Story Written By Matha

Posted inStory

மாதா எழுதிய “முதுமை” சிறுகதை

Posted byb3859e7d7d51687ce989542ecb0cc7755ef15e61Bookday07/07/2025No CommentsPosted inStory

“முதுமை” சிறுகதை

– மாதா

அந்த முதியவருக்கு எண்பது வயதாகிறது. அவரது மனைவிக்கு எழுபது. அவர்கள் கிளையில் தொங்கிக்கொண்டிருக்கும் பழுத்த மாம்பழங்கள். ஒரு நாள் திடீரென்று பலத்த காற்று வீசும் போது ஒன்றன் பின் ஒன்றாக பூமியில் விழுந்து விடும். தனது மனைவியை விட தான் வயது மூத்தவர் என்பதால் தார்மீக அடிப்படையில் அவளுக்கு முன்பாகவே தான் காலமாகிவிட வேண்டுமென்று எண்ணினார்.

ஆனால் கடவுள் அந்த வயது முதிர்ந்தபெண்ணுக்கு அணுக்கமாகவே நடந்து வருகிறார். வயதான காலத்தில் வாழ்க்கையில் பெரிதாக ஒன்றும் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் விரும்பியதை எல்லாம் கடவுள் வழங்கியிருப்பதாகவே நம்பினார்கள். தேவைகள் குறைவாக இருப்பவரே பெரிய செல்வந்தர். நலக்குறைவில்லா வாழ்க்கை.

மூதாட்டிக்கு கடவுளிடம் ஒரே ஒரு பிரார்த்தனைதான். நூறு ஆண்டுகள் வரை கணவர் உயிரோடு வாழ வேண்டும். அவருக்கு முன்பு அவள் உயிர் பிரிய வேண்டும். நலமுடன் இருக்கும் போதே கடவுள் அவளை அழைத்துக் கொள்ள வேண்டும். அவரை விட்டால், அவள் யாரிடம் முறையிட முடியும்? தேவைப்படும் நாளில் உதவிக்கரம் கிடைக்காத சூழலில் மனிதன் கடவுளை எண்ணுகிறான், தன்னை மீட்டெடுப்பான் என்று நம்புகிறான்.

ஆனால் அளவான இறை நம்பிக்கையுள்ள முதியவர் ஆண்டவனிடம் இதுபோன்ற கோரிக்கை வைப்பதில்லை. பக்தர்களை கவனிப்பதை விட கடவுளுக்கு உலகில் ஏராளமான பிரச்சனைகளை தீர்க்க வேண்டிய கடமை இருக்கிறது. அவளுடைய வேண்டுகோளை கடவுள் எவ்வாறு நிறைவேற்ற முடியும்? இருப்பவர்களுக்கெல்லாம் நீண்ட ஆயுளைக் கொடுத்து தங்கி விட்டால், மற்றவர்களுக்கு பூமியில் இடமில்லாமல் போகுமே…

சராசரி அயுளுக்கு மேல் நீணட கால வாழ்க்கையை யாரும் விரும்புவதில்லை. வாழ்க்கையின் இறுதிப் பகுதி துயரத்தின் வலி மிகுந்ததாகவே இருக்கும். அவர்கள் வசிக்கும் வீடு அந்த மூத்த தம்பதிகளின் வயதை விட பழமையானது. மூன்று தலைமுறையை தாங்கி நிற்கிறது. பழமையான அந்த வீட்டில் பழமையான இரு மனிதர்கள் வசித்து வருகிறார்கள். நூற்றி ஐம்பது ஆண்டு வயதுடைய அந்த வீட்டை மராமத்து செய்யவோ, நவீனப்படுத்தவோ அவர்கள் வரும்பவில்லை. பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் வந்து தங்காத வீட்டை புதுப்பிக்கவில்லை. பிள்ளைகளின் வாழ்வை கரை சேர்த்துவிட்டு மீண்டும் வாழத்தொடங்கி இருக்கிறார்கள்.

மூத்த தம்பதிகள் நீண்டகாலம் வாழ்வதால் முதுமைக்கால பிரச்சனைகள் துன்புறுத்தும். அவர்களை பராமரிப்பதற்காக செலவு ஏற்படும். பிள்ளைகள் ஒதுக்கி வைத்ததால் அவர்கள் தங்களிடம் சேர்ந்து கொண்டார்கள் மூத்த தம்பதிகள். முதுமைப் பருவம் என்பது பிறப்பு, இறப்பு எல்லைகளுக்கு இடையிலான விளிம்பு நிலை பருவம். கடந்து சென்ற வாழ்க்கைப் பாதையின் அனைத்து அனுபவங்களையும் அசை போட்டு, அடுத்த தலைமுறைக்கு சுவடுகளை விட்டுச் செல்லுகிற உன்னத பருவம். அவர்கள் ஏற்கனவே நீணட காலம் வாழ்ந்து விட்டார்கள். அந்த ஊரிலேயே அவர்கள்தான் வயதானவர்கள். அவர்கள் வயதையொத்தவர்கள் எல்லாம் ஏற்கனவே இறந்து விட்டார்கள். அதனாலேயே அவர்கள் இந்த உலகத்தை விட்டு பிரிய மனதளவில் தயாராகி விட்டார்கள். மரணம் யாரிடமும் அனுமதி கேட்பது இல்லை. மரணத்தை விட்டு ஓட முடியுமா? ஒருவருக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து முடிக்க வேண்டும். நிறைவான வாழ்க்கையில் மரணம் இருக்காது.

கிழவரும், அவருடைய மனைவியும் மரணத்தைப் பற்றி சிந்திப்பதே இல்லை. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும் வாழ்க்கையை ரசித்து வாழ்கிறார்கள். அவர்கள் தங்கள் வேலைகளைத் தாங்களே செய்துகொள்கிறார்கள். தங்களின் தேவைக்கு யாருடைய உதவியையும் எதிர்பார்ப்பதில்லை. தினமும் ஒரு நேரம் மட்டுமே ரேஷன் அரிசியை சமைத்து இரண்டு வேளைக்கு சாப்பிடுகிறார்கள். பல நாட்களில் வயதான வயிறு ஒத்துழைக்க மறுக்கிறது. உண்ட உணவை செரிக்க முடியவில்லை. தினமும் குறைந்த அளவே உண்ணுகிறார்கள். உடலில் உயிரையும், ஆன்மாவையும் வைத்திருப்பதற்காக மட்டுமே சாப்பிடுகிறார்கள். சாப்பாட்டிற்காக அவர்கள் ஏங்கியதே இல்லை.

அக்கம், பக்கத்து குடித்தனக்காரர்கள் அவர்களை பொறாமையோடு பார்ப்பார்கள். இந்த வயதான காலத்திலும் எப்படி இவர்களால் மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது? வெளியூர்களில் வசிக்கும் அவர்களுடைய பிள்ளைகள் தங்களை வந்து பார்க்கவில்லையே, பராமரிக்கவில்லையே எனற கவலைகள் கிடையாது.
நீங்கள் எப்போது விரும்பினாலும் இந்த கிராமத்திற்கு வந்து நமது முன்னோர்கள் கட்டிய இந்த வீட்டில் தங்கிச்செல்லலாம் என்று பிள்ளைகளிடம் கூறியிருக்கிறார்கள். அவர்களுக்கு சிறு சிறு நலக்குறைவு ஏற்பட்டாலும் பிள்ளைகளுக்கு தந்தியோ, தகவலோ கொடுப்பதில்லை.

ஆனால் கிழவிக்கு முதுமைக்கால புலம்பல்கள் அவ்வப்போது வரும். பெண்கள் எதற்காக குழந்தைகளைப் பெற்றெடுக்கிறார்கள்? பெற்றோர்களை முதுமைக் காலத்தில் கவனித்து பராமரிப்பதற்குத்தானே…என் பிள்ளைகள் எனக்கு கடிதம் கூட எழுதுவதில்லை.

இப்படியான பேச்சு வரும்போதெல்லாம் கிழவர் சட்டென்று சொல்லிவிடுவார்;. எந்த மனிதனும் எவரையும் காப்பாற்ற முடியாது. கடவுள் மட்டுமே நமக்கு நல்லது செய்ய முடியும் என்பார். அவரவர்க்கு ஏராளமான சொந்த பிரச்சனைகள். நமது பிள்ளைகளுக்கும் அப்படித்தான். அவர்கள் நமக்கு கடிதங்கள் எழுதுவதாலேயே நம்முடைய பிரச்சனைகள் மறைந்துவிடுமா?

பிள்ளைகளைப் பற்றி தேவையில்லாமல் புலம்பிக்கொண்டிருப்பது தாய்மார்களுக்கு. வாடிக்கையாகிவிட்டது. அவர்களெல்லாம் நம்மைப் பார்க்க வந்து தங்கிவிட்டால், உன்னால் சமாளிக்க முடியாது. பத்துப் பனிரெண்டு தட்டுகளுக்கு உன்னால் சமைத்து பரிமாற முடியுமா? அவர்கள் எப்போது விரும்புகிறர்களோ அப்போது வந்து பார்க்கட்டும். சின்ன விஷயங்களுக்கெல்லாம் உணர்ச்சி வசப்பட்டு பேசக்கூடாது.

இதைக் கேட்டதும் பாட்டிக்கு பல்லில்லா வாயில் கனிவான புன்னகை பூக்கும். கண்டிப்பு கலந்த வார்த்தைகளை கணவன் உச்சரித்தாலும் அதில் ஒரு ஈர்ப்புத் தன்மை இருக்கும். சில நேரங்களில் தாய்மை உணர்வை வெளிப்படுத்துவதற்காக அவள் புலம்பினாலும், கணவன் அவளை அதட்டி கட்டுப்படுத்துவது வாடிக்கையாகிவிட்டது. கடந்த ஐம்பது ஆண்டுகளாக இந்த கட்டிடம் பழுதாகி, பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. ஆண்டுகள் உருண்டோடி, தம்பதிகள் முதுமையாகி தளர்ந்து விட்டார்கள்.

ஆனால் அவர்கள் வாழ்ந்து வரும் இந்த வீடு பழமையானாலும் கம்பீரமாக நிற்கிறது. பொலிவுடன் தொன்மையான மரபின் அடையாளமாகத் திகழ்கிறது. அனைவரின் கவனத்தையும் ஈர்த்து ஒரு பிரமாண்டத்தை அளிக்கிறது.

மனிதருக்கு வீடும், உலகமும் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறது. தனித்துவமாகவும் இருக்கிறது. சிலருக்கு வீட்டிற்கும், உலகிற்கும் பெரிய இடைவெளி உள்ளது. வீடு உங்களை எளிதாக அங்கீகரித்தாலும், உலகம் உங்களை எளிதில் அங்கீகரிக்காது. வீடும் அங்கீகரித்து, உலகமும் அங்கீகரித்து வாழும் வாழ்க்கைதான் சிறந்த வாழ்க்கை. உலகிலேயே வீடுதான் மனிதனுக்கு பாதுகாப்பானது. வீடு என்பது வெறும் சுவர்கள் அல்ல. அது வாழ்வின் அடையாளம். முதுமையை கழிப்பதற்கு பாதுகாப்பான இடம் வீட்டைத் தவிர வேறு எதுவும் இல்லை.

அவர்களது உடம்பு முதுமையாகி தளர்ந்து விட்டது. முதுமை அவர்களுக்கு சுமையாகிப் போனது. சிரமமும், வேதனையும் தாங்க முடியவில்லை. அவர்கள் தூசிக்குள்ளும், சிலந்தி வலைக்குள்ளும் அடைந்து கிடக்கிறார்கள். இருந்தும் தங்களைத் தாங்களே மென்மையாகப் பாதுகாத்துக்கொண்டு அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்கிறார்கள்.

அண்மைக் காலமாக முதியவர் உடம்பு கூன் விழுந்து பலவீனமாகி, முதுமைக்கால தொந்தரவுகள் அதிகமாகி வருகிறது. கட்டிலில் இருந்து இறங்கக் கூட யாரேனும் கைத்தாங்க வேண்டிய காலத்தில் புரிகிறது அவளுக்கு நானும், எனக்கு அவளும்தான் கடவுள் என்பது. முதலில் பிறந்த மனிதன் பழையது ஆகிறான். பின்னால் பிறந்தவன் புதியவனாகிறான். ஆனால் ஒவ்வொருவரும் பழமையாகி, பயனற்றதாகி விடுகிறார்கள். இந்த முறையும் லீவுக்கு வரமுடியாதுன்னு தபால் வந்திருக்கு. ஒரு தடவையாவது அவன் வந்து பார்க்கக் கூடாதா என்று கிழவி கேட்டதற்கு, கிழவர் அமைதியாய் பதிலளித்தார். ஒருவன் பழையவர்களை அழைத்துச் செல்ல
வருவான்.

யார் அவன்?

அவன் புதியவற்றை வளரவிட்டு, பழமையாக்குபவன்;. நம்மை அழைத்துச் செல்ல எப்போது வேண்டுமானாலும் வரட்டும். அவள் நெற்றியைத் தடவிக்கொண்டே கூறினார். லௌகீக வாழ்வுக்கு தேவைப்படும் உதவி எங்கிருந்து கிடைக்கிறதோ அந்தப் பருப்பொருள்தான் கடவுள்.

*************

எழுதியவர் : 

MATHA-PHOTO-221x300.jpg

✍🏻 மாதா @ மே-பா மா.தங்கராசு
சிஐடியு தேனி மாவட்ட கைத்தறி சங்க செயலாளர்
75- கிழக்குத் தெரு, சக்கம்பட்டி
ஆண்டிபட்டி- அஞ்சல் 625512
தேனி- மாவட்டம்


https://bookday.in/muthumai-tamil-short-story-written-by-matha/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.