Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பூமி, விண்வெளி, சுழற்சி, அறிவியல், நிலவு, நேரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

கட்டுரை தகவல்

  • முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன்

  • பிபிசி தமிழுக்காக

  • 12 ஜூலை 2025, 08:41 GMT

    புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர்

2025 ஜூலை 9-ஆம் தேதி, பூமி வழக்கத்தைவிட 1.38 மில்லி விநாடிகள் வேகமாக சுழன்றது. இதனால், 24 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் ஒரு முழு சுழற்சியை முடித்தது. இது வரலாற்றில் பதிவான மிகக் குறுகிய நாட்களில் ஒன்றாக அமைந்துள்ளது.

பன்னாட்டு பூமி சுழற்சி & குறிப்பு முறைமை சேவை (IERS) விஞ்ஞானிகள் மேலும் அடுத்தடுத்து குறுகிய நாட்களை எதிர்பார்க்கிறார்கள். ஜூலை 23 மற்றும் ஆகஸ்ட் 6, 2025- ஆகிய நாட்களில் ஒரு நாளின் நீளம் முறையே 1.388 மில்லி விநாடிகள் மற்றும் 1.4545 மில்லி விநாடிகள் குறைவாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

ஒரு மில்லி விநாடி என்பது ஒரு விநாடியின் ஆயிரத்தில் ஒரு பங்கு நேரம் ஆகும். இது கண் சிமிட்டும் நேரத்தைவிட (சுமார் 100 மில்லி விநாடிகள்) கணிசமாகக் குறைவு.

'ஒரு நாள்' என்றால் என்ன?

பூமி, விண்வெளி, சுழற்சி, அறிவியல், நிலவு, நேரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஒரு மில்லி விநாடி என்பது ஒரு விநாடியின் ஆயிரத்தில் ஒரு பங்கு நேரம் ஆகும்.

நாம் பொதுவாக ஒரு நாளை 24 மணி நேரம் - அதாவது பூமி தன்னைத்தானே சுழல எடுக்கும் காலம் எனக் கருதுகிறோம். ஆனால் இது முழுமையான உண்மை அல்ல. வெகு தொலைவில் உள்ள விண்மீனின் கிரகம் ஒன்று 360 டிகிரி சுழன்ற பின்னர் அதே வான் நிலைக்கு திரும்ப சுமார் 23 மணி 56 நிமிடங்கள் 4 வினாடிகள் ஆகும். இந்த கால அளவு 'நட்சத்திர நாள்' (Sidereal Day) என அழைக்கப்படுகிறது, இது நமது வழக்கமான 24 மணி நேரம் கொண்ட நாளை விட 4 நிமிடங்கள் குறைவாக உள்ளது.

சூரியனின் நிலையை அடிப்படையாகக் கொண்டு (ஒரு மதியம் முதல் அடுத்த மதியம் வரை) நாம் நாளின் நீளத்தை அளந்தால், இந்த 'சூரிய நாள்' (Solar Day) வருடம் முழுவதும் மாறிக்கொண்டே இருக்கும்.

பூமி சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றுவதால், சூரியனுக்கு அருகில் இருக்கும் ஜனவரி மாதத்தில் வேகமாகவும், சூரியனிடமிருந்து தொலைவில் இருக்கும் ஜூலை மாதத்தில் மெதுவாகவும் நகர்கிறது. மேலும் பூமியின் சாய்ந்த அச்சும் சூரிய நாளின் நீளத்தை பாதிக்கிறது.

இதன் விளைவாக, உண்மையான சூரிய நாள் டிசம்பர் இறுதியில் 24 மணி 30 வினாடிகள் வரை நீளமாகவும், செப்டம்பர் நடுப்பகுதியில் 23 மணி 59 நிமிடங்கள் 38 வினாடிகள் எனக் குறுகியும் இருக்கும்.

நடைமுறை நேரக் கணக்கீட்டிற்காக, இந்த எல்லா மாறுபாடுகளின் சராசரியான 'சராசரி சூரிய நாளை' (Mean Solar Day) பயன்படுத்துகிறோம். இதுவே 24 மணி நேரம் (அல்லது 86,400 வினாடிகள்) என நாம் வரையறை செய்கிறோம். இதுவே நமது நாள்தோறும் பயன்படுத்தும் நேர அமைப்பின் அடிப்படையாகும். இதன் தொடர்ச்சியாகக் கடிகாரம் சரியாக 86,400 வினாடிகளைக் கடக்கும்போது ஒரு நாள் முடிந்துவிட்டது எனக் கருதுகிறோம்.

இதன் பொருள், 9 ஜூலை 2025 அன்று உண்மையான நாளின் நீளம் 23 மணி 59 நிமிடங்கள் 59.9985793 வினாடிகள் அல்லது 86,399.9986154 வினாடிகள் மட்டுமே இருந்தது; கடிகார நாளின் நீளமான 86,400 வினாடிகள் (24 மணி நேரம்) அல்ல.

அறிவியல் பார்வையில் நாளின் நீட்சி

பூமி, விண்வெளி, சுழற்சி, அறிவியல், நிலவு, நேரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, நாளின் நீட்சி நேர்மறை மதிப்பைக் கொண்டிருக்கும் போது, பூமியின் சுழற்சி மெதுவாகிறது.

அன்றாட பேச்சுவார்த்தைகளில் "நாளின் நீட்சி" என்று குறிப்பிடும் போது, சூரியன் உதயமாகி அஸ்தமிக்கும் பகல் நேரம் அல்லது நமது கடிகாரங்களில் காணப்படும் 24 மணி நேரம் என புரிந்துக்கொள்கிறோம்.

ஆனால் பூமியின் சுழற்சியை ஆய்வு செய்யும் விஞ்ஞானிகளுக்கு இது நமது கிரகம் வழக்கத்தைவிட வேகமாக அல்லது மெதுவாக சுழல்வதை அளவிடும் ஒரு அலகு வரையறையாகும்.

பன்னாட்டு பூமி சுழற்சி மற்றும் குறிப்பு முறைமை சேவை (IERS) வெரி லாங் பேஸ்லைன் இன்டர்ஃபெரோமெட்ரி (VLBI) ரேடியோ தொலைநோக்கிகளை பயன்படுத்தி தொலைதூர ரேடியோ மூலங்களான குவாசர்களைக் கண்காணிக்கிறது.

இந்த ரேடியோ மூலங்கள் வானத்தில் அதே துல்லியமான நிலைக்குத் திரும்புவதற்கான நேரத்தை அவர்கள் மிகத் துல்லியமாக அளக்கின்றனர். இதிலிருந்து பூமியின் மெய்யான சுழற்சி வேகம் கணக்கிடப்படுகிறது. இந்த அளவீடு யுனிவர்சல் டைம் (UT1) எனப்படும்.

விஞ்ஞானிகள் இந்த உண்மையான அளவீட்டை (UT1) நாம் நேரக் கணக்கீட்டில் பயன்படுத்தும் கடிகார நாளின் நீட்சியான 86,400 வினாடி நீண்ட சராசரி நாளுடன் ஒப்பிடுகின்றனர். இவ்விரண்டுக்கும் இடையிலான வேறுபாடு, மில்லி வினாடிகளில் அளவிடப்படும் போது, அதைத்தான் விஞ்ஞானிகள் "நாளின் நீட்சி" (LOD) என்று அதிகாரப்பூர்வமாகக் குறிப்பிடுகின்றனர்.

நாளின் நீட்சி நேர்மறை மதிப்பைக் கொண்டிருக்கும் போது, பூமியின் சுழற்சி மெதுவாகிறது; ஒரு நாளின் நீட்சி கூடுகிறது என்பது பொருள். அதே போல எதிர்மறை மதிப்பு காணப்படும்போது, அது வேகமாக சுழல்கிறது, நாளின் நீட்சி குறைந்து விட்டது என்று பொருள்.

காலத்தைக் கணிக்கும் புதைபடிவங்கள்

இன்றைய வானியலாளர்கள் பூமியின் சுழற்சி மாறுபாடுகளைக் கண்டறிய தொலைதூர குவாசர்களைப் பயன்படுத்தினால், பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் சுழற்சியைப் கண்டுபிடிக்க புதைபடிவ மரங்களையும் பவளப்பாறைகளையும் தொல்லுயிரி வல்லுநர்கள் பயன்படுத்துகின்றனர்.

மரங்களின் அடிமரத்தில் ஆண்டுதோறும் வளரும் வருடாந்திர வளையம் போலவே, ருகோஸ் (rugose) மற்றும் ஸ்க்ளராக்டினியன் (scleractinian) போன்ற பவளங்கள் தங்கள் கால்சியம் கார்பனேட் கூடுகளில் தினசரி மற்றும் வருடாந்திர வளையங்களை உருவாக்குகின்றன. இவற்றில் தினசரி வளையங்கள் இரவு-பகல் சூரிய ஒளிச் சுழற்சியின் மாறுபாடுகளால் உருவாகின்றன.

அதேநேரம், தடித்த வருடாந்திர வளையங்கள் பருவமாற்றங்களைக் காட்டுகின்றன. இந்தத் தினசரி வளையங்களை எண் தொகை செய்து ஆராய்ச்சியாளர்கள் பூமி ஒரு வருடத்தில் எத்தனை சுழற்சிகளை முடித்தது என்பதைக் கணக்கிடுகின்றனர்.

உதாரணமாக, மத்திய டெவோனியன் காலத்திய (சுமார் 385 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்) பவளப் புதைபடிவங்கள் வருடத்திற்கு 400 தினசரி வளையங்களைக் கொண்டுள்ளன. இதன் பொருள் அக்காலத்தில் பூமி வருடத்திற்கு 400 முறை சுழன்றுள்ளது.

இதைவிட இளைய கார்பனிஃபெரஸ் காலத்திய (சுமார் 330 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்) பவளங்களில் வருடத்திற்கு 390 வளையங்கள் மட்டுமே காணப்படுகின்றன. அதாவது அன்று ஒரு வருடம் என்பது 390 நாட்கள். இது காலப்போக்கில் பூமியின் சுழற்சி வேகம் மெதுவாகியுள்ளது என்பதைக் காட்டுகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று பூமி சுமார் 365.25 நாட்களில் சூரியனை சுற்றி வருகிறது.

பூமியின் மாறும் சுழற்சியை வெளிப்படுத்தும் புராதன பதிவுகள்

பூமி, விண்வெளி, சுழற்சி, அறிவியல், நிலவு, நேரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பாபிலோனிய களிமண் பலகை ஒன்று கிமு 136-ஆம் ஆண்டு ஏப்ரல் 15-ஆம் தேதி பாபிலோனில் நிகழ்ந்த முழு சூரிய கிரகணத்தை விவரிக்கிறது.

வரலாற்றாசிரியர்களும் இந்த ஆராய்ச்சிப் பயணத்தில் இணைந்துள்ளனர். கிமு 8-ஆம் நூற்றாண்டுக்கு முன்பு நடந்த சூரிய, சந்திர கிரகணங்களின் வரலாற்று பதிவுகளை ஆய்வு செய்து அந்த கால பூமியின் சுழல் வேகத்தை கணக்கிட முனைந்துள்ளனர்.

எடுத்துக்காட்டாக, பாபிலோனிய களிமண் பலகை ஒன்று கிமு 136-ஆம் ஆண்டு ஏப்ரல் 15-ஆம் தேதி பாபிலோனில் நிகழ்ந்த முழு சூரிய கிரகணத்தை விவரிக்கிறது. நவீன கணினி மாதிரிகள் மூலம், ஆராய்ச்சியாளர்கள் இந்த கிரகணத்தின் சரியான பாதையை மீண்டும் உருவாக்க முடிந்தது. எந்த வேகத்தில் பூமி சுழன்றால் பதிவுகளில் விவரிக்கப்பட்டுள்ளபடி பாபிலோனிலிருந்து கிரகணம் புலப்பட்டிருக்கும் என கணினி மாதிரி கொண்டு ஆய்வு செய்தனர்.

இதன் வழியே அன்று பூமி தன்னைத்தானே சுழல எடுத்துக் கொண்ட நேரத்தை கணக்கிட முடிந்துள்ளது. இதுபோன்ற வரலாற்று ஆய்வுகளிலிருந்து இந்த வரலாற்றுக் காலப்பகுதியில் நாளின் நீட்சி (LOD) ஒரு நூற்றாண்டுக்கு சுமார் 1.74 முதல் 1.8 மில்லி வினாடிகள் வரை அதிகமாக இருந்துள்ளது என்பதாகும். அதாவது பூமி சுழலும் வேகம் குறைந்துள்ளது; நாளின் நீட்சி அதிகரித்துள்ளது.

நாளின் நீட்சி அதிகரித்து வருகிறது

மத்திய டெவோனியன் காலத்தில் (சுமார் 385 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு), ஒரு நாள் வெறும் 22 மணி நேரம் (78,891 வினாடிகள்) மட்டுமே நீண்டிருந்தது. டைனோசர்கள் வாழ்ந்த காலத்திற்குள் (50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு), இது 23 மணி நேரமாக நீளமடைந்தது.

சீன எழுத்தர்கள் விலங்கு எலும்புகளில் பொறித்த வானியல் குறிப்புகள் மற்றும் கிரகண பதிவுகளை ஆய்வு செய்த விஞ்நானிகள், கிமு 1200-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இன்றைய நாட்கள் 0.047 வினாடிகள் நீளமாகியுள்ளன எனக் கணக்கிட்டுள்ளனர்.

இன்னும் 200 மில்லியன் ஆண்டுகள் கழித்து, ஒரு நாள் 25 மணி நேரம் வரை நீளக்கூடும் என விஞ்ஞானிகள் கணிக்கின்றனர். பூமியின் சுழற்சி நிலவின் ஈர்ப்பு விசை (tidal forces) மற்றும் பிற காரணிகளால் படிப்படியாக மெதுவாகிக் கொண்டிருக்கிறது என்பதே இந்த ஆய்வுகள் வெளிப்படுத்தும் உண்மை.

பூமியின் மாறும் சுழற்சியும் நேரத்தைச் சரிகட்டும் முறைகளும்

பூமி, விண்வெளி, சுழற்சி, அறிவியல், நிலவு, நேரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, 1955இல் பிரிட்டனில் உருவாக்கப்பட்ட அணு கடிகாரம்

1960களில் உருவாக்கப்பட்ட நவீன அணு கடிகாரங்கள், நமது கிரகம் துல்லியமான நிலை வேகத்தில் சுழலவில்லை என்பதை வெளிப்படுத்தின. விஞ்ஞானிகள் தொலைதூர ரேடியோ சிக்னல்களைக் கண்காணிக்கும் போது, பூமியின் சுழற்சி வேகம் நாளுக்கு நாள் சிறிது மாறுபடுவதை கண்டறிந்தனர்.

பொதுவாக ஒரு நாளில், அதாவது 86,400 வினாடிகளில் ஒன்று அல்லது இரண்டு மில்லிவினாடிகள் வரை மட்டுமே மாறுபடுகின்றன என்றாலும், நமது கிரகம் சில நேரங்களில் எதிர்பாராத வகையில் வேகமாகவோ அல்லது மெதுவாகவோ சுழல்கிறது என்பதும் வெளிப்பட்டுள்ளது.

நாளின் நீட்சி (LOD) என அளக்கப்படும் இந்தச் சிறிய தினசரி மாறுபாடுகள் முக்கியமற்றதாகத் தோன்றலாம். ஆனால் சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல ஆண்டுக்கணக்காகக் கூட்டிப்பார்க்கும்போது, இந்த வேறுபாடு கணிசமாக கூடிக்கொண்டே போகின்றது.

சூரியனைச் சுற்றி பூமியின் 365.2422 நாள் சுற்றுப்பாதையுடன் நமது 365 நாள் காலண்டரை சீரமைக்க ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கும் ஒரு நாளை (லீப் டே) சேர்க்கிறோம். அதேபோல், இந்த சுழற்சி மாறுபாடுகளுக்கான திருத்தமும் தேவைப்படுகிறது. இங்குதான் 'லீப் செகண்ட்' (தாவல் வினாடி) பங்களிக்கிறது.

1972ல் அறிமுகப்படுத்தப்பட்ட லீப் செகண்ட்கள், நமது அதிநவீன அணு கடிகாரங்களை பூமியின் உண்மையான சுழற்சியுடன் ஒத்திசைக்க உதவுகின்றன. பூமியின் சுழற்சி மெதுவாகும் போது, நாள் நீட்சி கூடும்போது நாம் நேர்மறை லீப் செகண்ட் சேர்க்கிறோம். வேகமானால் (இது இதுவரை நடக்கவில்லை), எதிர்மறை லீப் செகண்ட் நீக்க வேண்டியிருக்கும்.

இதுவரை செய்யப்பட்ட 27 சரிசெய்தல்களும் நேர்மறை வகையைச் சேர்ந்தவையே. 2016ல் இடம்பெற்ற கடைசி சரிசெய்தல், சமீபத்திய சில தசாப்தங்களில் நமது கிரகம் சுழலும் வேகம் படிப்படியாக மெதுவாகி வருவதைக் காட்டுகிறது.

பூமியின் சுழற்சி ஏன் ஒழுங்கற்று தள்ளாடுகிறது?

பூமி, விண்வெளி, சுழற்சி, அறிவியல், நிலவு, நேரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பூமி சுழலும் வேகம் படிப்படியாக குறைந்து தேய்ந்து, நாளின் நீட்சி கூடுதலடைந்து கொண்டே வருகின்றது.

பல மில்லியன் ஆண்டுகளாக, நிலவின் ஈர்ப்பு விசை பூமியின் சுழற்சியை மெதுவாக்கி வருகிறது. இந்தத் தொடர்ச்சியான இழுபறி, பூமியின் சுழற்சி ஆற்றலை நிலவுக்கு மாற்றுகிறது.

இதன் விளைவாக, பூமி சுழல் வேகம் படிப்படியாக குறைந்து தேய்ந்து, நாளின் நீட்சி அதிகரித்துக் கொண்டே வருகின்றது. அதேநேரம், நிலவு வருடத்திற்கு சுமார் 3.8 செ.மீ தொலைவில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிகழ்வே கடந்த 30-40 ஆண்டுகளில் லீப் செகண்ட்களை (தாவல் வினாடிகள்) சேர்த்துக் கொண்டே வர வேண்டிய காரணமாக அமைந்துள்ளது.

ஆனால் பூமியின் தினசரி சுழற்சி மாறுபாடுகளுக்கு என்ன காரணம்?

விஞ்ஞானிகள் இரண்டு முக்கிய காரணிகளைச் சுட்டிக்காட்டுகின்றனர்: வானியல் மற்றும் புவியியல் காரணிகள். நிலவு பூமியை ஒரு எளிய வட்டத்தில் சுற்றுவதில்லை; அதன் பாதை சாய்ந்தும் தடுமாறியும் உள்ளது.

நிலவின் நீள்வட்ட சுற்றுப்பாதை காலப்போக்கில் மாறுகிறது. அதன் ஈர்ப்பு விளைவுகள், அது பூமியின் பூமத்திய ரேகையின் வடக்கில் அல்லது தெற்கில் இருக்கும்போது மாறுபடுகின்றன.

ஜூலை 9, 23 மற்றும் ஆகஸ்ட் 6, 2025 அன்று நிகழும் "லூனார் ஸ்டாண்ட்ஸ்டில்" போன்ற சிறப்பு நிகழ்வுகளின் போது, நிலவு பூமத்திய ரேகையிலிருந்து அதன் அதிகபட்ச தொலைவில் (ஒரு துருவத்தை நோக்கி) இருக்கும் போது, பூமியின் சுழற்சிக்கு ஒரு கூடுதல் "தள்ளுதலை" அளிக்கிறது. வியாழன் போன்ற தொலைதூர கிரகங்களும் சிறிய ஈர்ப்பு தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.

பூமி, விண்வெளி, சுழற்சி, அறிவியல், நிலவு, நேரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பூமியின் நிறை அமைப்பு மாறும்போது எல்லாம் பூமியின் சுழல்வேகம் மாறுபடும்.

பூமியும் ஒரு நிலையான மேடை அல்ல. 2004 சுமத்ரா பூகம்பம் போன்ற பெரும் பூகம்பங்கள், பூமியின் நிறை மறுபகிர்வு மூலம் அதன் சுழற்சியை மாற்றியமைக்கின்றன. அந்தப் பூகம்பம், பூமியின் நிறையை உள்நோக்கி மாற்றியதன் விளைவாக, நாட்களை 2.68 மைக்ரோவினாடிகள் குறைத்தது.

ஒரு சுழலும் அலுவலக நாற்காலியை கொள்வோம்: அதில் அமர்ந்து சுழலும்போது உங்கள் கைகளை உடலுக்கு அருகில் கொண்டு வரும்போது மேலும் வேகமாகச் சுழல்கிறீர்கள்; கைகளை விரிக்கும்போது மெதுவாகிறீர்கள். இதே போல பூமியின் நிறை அமைப்பு மாறும்போது பூமியின் சுழல் வேகமும் மாறுபடும்.

பூகம்பங்கள், காற்று அல்லது கடல் நீரோட்டங்கள் மூலம் பூமியின் நிறை மறுபகிர்வு ஏற்படும்போது, பூமியும் இதேபோல் செயல்படுகிறது. வளிமண்டலமும் அதன் பங்கை வகிக்கிறது. பருவக்காற்றுகள் மற்றும் எல் நினோ போன்ற காலநிலை முறைகள், மலைகள் மற்றும் கடல்களுக்கு எதிராக மோதி, பூமியின் சுழற்சியில் கண்ணுக்குத் தெரியாத வேகத்தடை அல்லது வேகமுடுக்கிகளாகச் செயல்படுகின்றன.

கடல் நீரோட்டங்கள் கூட, பெரும் நீர்ப்பகுதிகளை நகர்த்துவதன் மூலம் நமது கிரகத்தின் சுழற்சி விகிதத்தை மாற்றுகின்றன. இந்த அனைத்து சக்திகளும் சேர்ந்து, ஒவ்வொரு நாளையும் முந்தைய நாளிலிருந்து சற்று வித்தியாசமாக்குகின்றன.

நம் அன்றாட வாழ்வில் எவ்வாறு எதிரொலிக்கும்?

மனிதர்களுக்கு ஒரு மில்லிவிநாடி என்பது பொருட்டே அல்ல; கண் சிமிட்டக் கூட சுமார் 100 மில்லிவினாடிகள் தேவை.

ஜூலை 9 ஆம் தேதி, பூமியின் சுழற்சி வழக்கத்தைவிட 1.38 மில்லிவினாடிகள் குறைவாக இருந்தபோது, நமது நாள் 23 மணி 59 நிமிடங்கள் மற்றும் 59.9985793 வினாடிகள் நீளமாக இருந்தது. இது மிகச் சிறிய மாற்றமாகத் தோன்றலாம்; இதை ஏன் பொருட்படுத்த வேண்டும்?

நவீன உயர் தொழில்நுட்ப உலகில், இந்தச் சிறிய நேரப் பகுதிகள் பெரும் வித்தியாசத்தை ஏற்படுத்துகின்றன. வெறும் 1.38 மில்லிவிநாடிகளில், பூமத்திய ரேகையில் பூமி சுமார் 62.66 சென்டிமீட்டர் சுழல்கிறது. ஏவுகணை வழிகாட்டி அமைப்புகள் அல்லது விண்கலங்களின் இணைப்புக்கு, நானோ வினாடி அளவிலான துல்லியம் கூட மிக முக்கியமானது - இல்லையெனில் இலக்குகள் தவறவிடப்படும் மற்றும் பணிகள் தோல்வியடையும்.

நாம் தினசரி பயன்படுத்தும் தொழில்நுட்பங்களுக்கு இந்தத் துல்லியம் இன்னும் முக்கியமானது. ஜிபிஎஸ் செயற்கைக்கோள்களில் உள்ள அணு கடிகாரங்கள் நானோவினாடி (வினாடியின் பில்லியனில் ஒரு பகுதி) துல்லியத்தில் இருக்க வேண்டும், ஏனெனில் ஒரு மைக்ரோவினாடி பிழை கூட உங்கள் இருப்பிடத்தை 300 மீட்டர் வரை தவறாகக் காட்டலாம். ஒரு மில்லிவினாடி பிழை நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் வரை வழிநடத்தல் அமைப்புகளை தவறாக வழிநடத்தும்.

டிஜிட்டல் உலகில், மில்லிவினாடி துல்லிய கணிப்பு மிகமிக அவசியம். கணினி வலையமைப்புகள் செயல்திறனைக் கண்காணிக்கவும் சிக்கல்களைத் தீர்க்கவும் மில்லிவினாடி நேர முத்திரைகளைப் பயன்படுத்துகின்றன.

இணைய வங்கியியல் அமைப்புகள் மோசடியைத் தடுக்க ஒரு மைக்ரோவினாடி வரை பரிவர்த்தனைகளைப் பதிவு செய்கின்றன. ஆகவே, பூமியின் சுழற்சியில் மைக்ரோவிநாடிகள் அளவுக்கு ஏற்படும் சிறு மாறுபாடுகள் கூட நம் அன்றாட வாழ்க்கையில் எதிரொலிக்கக் கூடும். வானியலில் கூட, மில்லிவினாடி துடிப்புகளின் (pulsars) ஆய்வுக்குச் சரியான நேர அளவீடுகள் தேவைப்படுகின்றன.

நேரத்தின் அரசியல்

பூமி, விண்வெளி, சுழற்சி, அறிவியல், நிலவு, நேரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, 1999இல் நடந்த கார்கில் போர்

பல ஆண்டுகளாக, இந்தியா தன் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத் தேவைகளுக்காக (ஏவுகணை வழிகாட்டுதல் போன்றவை) அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் புவிசார் வழிகாட்டி அமைப்புகளை (ஜிபிஎஸ் போன்ற) முறைமைகளை நம்பியிருந்தது. கார்கில் போரின்போது ஒரு வல்லரசு நாடு துல்லிய சேவைகளைத் திடீரென மறுத்ததால், இந்தச் சார்பு ஆபத்தானது என்பது தெளிவானது.

இந்தக் கடினமான பாடம் இந்தியாவை தனது சொந்த செயற்கைக்கோள் வழிகாட்டி முறைமையான IRNSS (இந்தியப் பிராந்திய வழிகாட்டி செயற்கைக்கோள் முறைமை) என முன்னர் அழைக்கப்பட்ட நாவிக்-ஐ (NavIC - Navigation with Indian Constellation) உருவாக்கத் தூண்டியது.

ஆனால் தற்சார்பு வழிகாட்டி முறைமையை உருவாக்குவது தனிச் சவால்களைக் கொண்டிருந்தது. ஒவ்வொரு செயற்கைக்கோளிலும் மிகத் துல்லியமான அணு கடிகாரங்கள் தேவைப்பட்டன.

ஆரம்பத்தில், இஸ்ரோ மேற்கு நாடுகளிலிருந்து அணு கடிகாரங்களை இறக்குமதி செய்தது. ஆனால் பல செயற்கைக்கோள்களில் இவை தோல்வியடைந்தன. இது வேண்டுமென்றே செய்யப்பட்ட சதியெனச் சிலர் கூறுகின்றனர். இந்தத் தோல்வி இந்தியாவின் விண்வெளித் திட்டத்திற்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

தன்னிறைவு அடைய உறுதி பூண்ட இஸ்ரோ, அணு கடிகாரங்களை இந்தியாவிலேயே உருவாக்கும் சவாலை ஏற்றது. ஆமதாபாத்தில் உள்ள இஸ்ரோவின் ஸ்பேஸ் அப்ளிகேஷன்ஸ் சென்டர் தலைமையில் நாட்டின் ஆய்வு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றிய விஞ்ஞானிகள், சொந்தமாக ருபிடியம் அணு கடிகாரங்களை வெற்றிகரமாக உருவாக்கினர்.

முதல் "மேட் இன் இந்தியா" அணு கடிகாரம் 2023 மே மாதம் ஏவப்பட்ட 10வது நாவிக் செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டது. அதன் பின்னர், புதிய என்விஎஸ் தொடர் நாவிக் செயற்கைக்கோள்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த அணு கடிகாரங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளன.

விரைவில், இந்திய கணினிகள், மடிக்கணினிகள், ஸ்மார்ட் கடிகாரங்கள் மற்றும் தொலைபேசிகள், வெளிநாட்டு வழிகாட்டி மற்றும் நேர சேவைகளை நம்பாமல், இந்தச் சொந்த அணு கடிகாரங்களைப் பயன்படுத்தி தங்கள் நேரத்தை ஒத்திசைக்க்கும் அமைப்பு உருவாகும் காலம் வெகுதொலைவில் இல்லை.

பூமியின் சுழற்சி மர்மம்

பூமி, விண்வெளி, சுழற்சி, அறிவியல், நிலவு, நேரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கடந்த இரு தசாப்தங்களில் திடீர் என வழமைக்கு மாறாக பூமி வேகமெடுத்து சுழல்கிறது.

பல மில்லியன் ஆண்டுகளாக, பூமியின் சுழற்சி படிப்படியாக மெதுவாகிக் கொண்டிருந்தது, இதன் விளைவாக நமது நாட்கள் நீளமாயின. ஆனால் சமீபத்தில் ஒரு விசித்திரமான நிகழ்வு நடந்து வருகிறது. 2020 முதல், பன்னாட்டு பூமி சுழற்சி மற்றும் குறிப்பு முறைமை சேவை (IERS) விஞ்ஞானிகள் நமது கிரகம் வேகமெடுத்து சுழல்வதை கவனித்துள்ளனர்.

உண்மையில், 1960களில் அணு கடிகாரங்கள் நேரத்தை அளவிடத் தொடங்கியதிலிருந்து, 2020 ஆம் ஆண்டு வரலாற்றில் மிகக் குறுகிய 28 நாட்களைப் பதிவு செய்துள்ளது.

இந்த எதிர்பாராத வேகமயக்கம் மிகவும் குறிப்பிடத்தக்கது. கடந்த 27 முறைகளில் செய்ததுபோல் லீப் செகண்ட் சேர்ப்பதற்குப் பதிலாக, முதல் முறையாக ஒரு வினாடியை கழிக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

ஆனால், பூமி ஏன் திடீரென வேகப்படுகிறது? விஞ்ஞானிகள் நமது கிரகத்தின் உருகிய இரும்பு-நிக்கல் கோர் (மையம்) பகுதியில் நிறை மறுபகிர்வு ஏற்பட்டு, சுழற்சியைப் பாதிக்கிறது எனச் சந்தேகிக்கின்றனர். எனினும், நமது உலகம் ஏன் வேகமாகச் சுழல்கிறது என்பதை இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை.

கடந்த இரு தசாப்தங்களில் திடீர் என வழமைக்கு மாறாக பூமி ஏன் வேகமெடுத்து சுழல்கிறது என்பது இன்னமும் மர்மம் தான்.

(கட்டுரையாளர் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன் மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராக பணிபுரிகிறார்)

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cm208zp2dg7o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.