Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பு ஜூலையை விடவும் பெரிய வெட்கக்கேடு!

July 23, 2025

கறுப்பு ஜூலையை விடவும் பெரிய வெட்கக்கேடு!

— வீரகத்தி தனபாலசிங்கம் —

   இலங்கையில் இனங்களுக்கு இடையிலான உறவுகளைப் பொறுத்தவரை, ஒரு எல்லைக்கோடாக அமைந்த 1983 ஜூலை இனவன்செயல்களுக்கு பிறகு  சரியாக 42 வருடங்கள்  உருண்டோடி விட்டன.

   ஒரு வாரத்துக்கு மேலாக தலை விரித்தாடிய வன்செயல்களின் கொடூரம், அதனால் நேர்ந்த உயிரிழப்புகள், சொத்து அழிவுகளுக்கு அப்பால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட வேதனை அதிர்ச்சியும் உளவியல் தாக்கமும் கணிப்பிடமுடியாதவை.

   1983 ஜூலை 22 வெள்ளிக்கிழமை இரவு யாழ்ப்பாணக் குடாநாட்டில் திருநெல்வேலியில் விடுதலை புலிகள் நடத்திய கெரில்லாத் தாக்குதலில் 13 இலங்கை இராணுவத்தினர் பலியான சம்பவம் அன்றைய ஜெயவர்தன  அரசாங்கத்திற்குள் ஆதிக்கம் செலுத்திய சிங்கள இனவாதச் சக்திகள் நாடு பூராவும்   தமிழ் மக்களுக்கு எதிராக  நடத்துவதற்கு  ஏற்கெனவே திட்டமிட்டு வைத்திருந்த  வன்செயல்களை கட்டவிழ்த்துவிடுவதற்கு  ‘வசதியாக’ அமைந்தது.

   இலங்கை அரசியலில் முன்னரைப் போன்று மீண்டும் எதுவுமே இருக்காது என்பதை நிறுவிய அனர்த்தங்கள் நிறைந்த அந்த மாதத்தை காலஞ்சென்ற பிரபல பத்திரிகையாளர் மேர்வின் டி சில்வா ‘கறுப்பு ஜூலை’ (BLACK JULY ) என்று வர்ணித்தார். அந்த ஜூலைக்கு பிறகு இலங்கையில் சகலதுமே கறுப்பாகத்தான் இருக்கிறது என்று எழுதிய சிங்களப் பத்திரிகையாளர்களும் இருந்தார்கள்.

  அரசாங்கத்தின் மனநிலை:

   கறுப்பு ஜூலை வன்செயல்களுக்கு ஒரு வாரம் முன்னதாக (11 ஜூலை 1983)  லண்டன் ரெலிகிராவ் பத்திரிகையின் செய்தியாளர் கிரஹாம் வார்ட்டுக்கு  அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன வழங்கிய பேட்டியொன்றில் தெரிவித்த கருத்துக்கள் தமிழர்கள் தொடர்பில் அரசாங்கம் எத்தகைய மனநிலையில் இருந்தது என்பதை தெளிவாக வெளிப்படுத்தியது.

  “இப்போது நான் யாழ்ப்பாண மக்களின் அபிப்பிராயத்தைப் பற்றி கவலைப்படவில்லை. அவர்களைப் பற்றி அல்லது அவர்களது உயிர்களைப் பற்றி அல்லது எம்மைப் பற்றி அவர்கள் கொண்டிருக்கும் அபிப்பிராயத்தைப் பற்றி இப்போது எங்களால் சிந்திக்க முடியாது. வடக்கு மீது எந்தளவுக்கு நெருக்குதல்களைப் பிரயோகிக்கின்றோமோ அந்தளவுக்கு சிங்கள மக்கள் மகிழ்ச்சியடைவார்கள்” என்று ஜெயவர்தன கூறினார். 

அந்த நேர்காணலுக்கு பெருமுக்கியத்துவம் கொடுத்து (17 ஜூலை 1983) அரசுக்கு சொந்தமான ‘சண்டே ஒப்சேர்வர்’ பத்திரிகை மறுபிரசுரம் செய்தது..

 ஜெயவர்தனவின்  அந்த கருத்துக்கள் கறுப்பு ஜூலை வன்செயல்கள் யாழ்ப்பாணத்தில் படைவீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தினால் சிங்களவர்கள் ஆவேசமடைந்ததால் மாத்திரம் மூண்டதல்ல, இனவாதச் சக்திகள்  நீண்ட நாட்களாக தீட்டி வந்த திட்டத்தின் விளைவானது என்பதை அம்பலப்படுத்தியது.

தமிழர்களை கொடுமைப்படுத்தினால் சிங்களவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியடைவார்கள் என்று கூறிவிடமுடியாது. ஆனால், சிங்களவர்களைப் பற்றி அவ்வாறு ஒரு கணிப்பீட்டை ஜெயவர்தன கொண்டிருந்தார் என்பதே உண்மை.

   உள்நாட்டுப்போரில் தமிழ் மக்கள் அனுபவித்த அவலங்களும் உயிரிழப்புகளும் சொத்து அழிவுகளும் கறுப்பு ஜூலையில் அவர்கள் அனுபவித்தவற்றை விடவும் விபரிக்க முடியாத அளவுக்கு அதிகமானவை என்றபோதிலும், அந்த ஜூலையே தமிழர்கள் மத்தியில் ஆயுதப் போராட்ட இயக்கங்கள் பெருகுவதற்கு வழிவகுத்து உள்நாட்டுப்போரை மூளவைத்தது. அதனால்  இலங்கையின் அரசியல் வரலாற்றில் கறுப்பு ஜூலைக்கு என்றென்றும் மறையாத —  பித்தியேகமான  எதிர்மறைக் குறியீடு ஒன்று  இருக்கிறது.

   கறுப்பு ஜூலை வன்செயல்களில் நாடுபூராவும் சொல்லொணா அவலங்களைச் சந்தித்து ஆயிரக்கணக்கில் அகதி முகாம்களில் தஞ்சம் புகுந்த தமிழ் மக்களுக்கு அனுதாபமாக ஒரு வார்த்தையையேனும் கூறுவதற்கு அரசாங்கத்தின் எந்தவொரு தலைவரும் முன்வரவில்லை.

  வன்செயல்களை நியாயப்படுத்திய ஜனாதிபதி: 

   வன்செயல்கள் மூண்டு நான்கு நாட்களுக்கு  பிறகு ஜூலை 28  வியாழக்கிழமை அரச  தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி ஜெயவர்தன அந்த வன்செயல்களை தமிழ் அரசியல்வாதிகளின் நாட்டுப் பிரிவினைக் கோரிக்கைக்கு எதிரான சிங்கள மக்களின் இயல்பான பிரதிபலிப்பு என்று கூறி நியாயப்படுத்தினாரே தவிர,  பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று கிஞ்சித்தேனும் நினைக்கவில்லை.

  வன்செயல்களை உடனடியாகக்  கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது மாத்திரமல்ல, படையினரும் பொலிசாரும் வன்முறைக் கும்பல்களுக்கு அனுசரணையாகவே செயற்பட்டனர். பல சம்பவங்களில் அவர்களே முன்னின்று  வன்செயலிலும் ஈடுபட்டனர். அரசாங்க அரசியல்வாதிகள், பல அமைச்சர்களும் கூட தங்கள் பகுதிகளில் முன்னணியில் நின்று  தமிழர்களுக்கு எதிராக வன்முறைகளை தூண்டி விட்டார்கள்.

   வன்முறைக் கும்பல்களைக் கலைக்க படையினர் ஏன் துப்பாக்கிப் பிரயோகம் செய்யவில்லை என்று ஜெயவர்தனவிடம் பி.பி.சி. பேட்டியொன்றில் கேட்கப்பட்டபோது “படையினர் மத்தியில் தமிழர்களுக்கு எதிரான உணர்வுகள் பெருமளவுக்கு இருந்தது என்று நான் நினைக்கிறேன். கலவரங்களில் ஈடுபட்ட சிங்களவரைச் சுடுவது சிங்கள சமூகத்துக்கு  விரோதமான செயலாக இருக்கும் என்று படையினர் உணர்ந்திருக்கக்கூடும். சில இடங்களில் கலகக்காரர்களை படையினர் உற்சாகப் படுத்தியதையும் கண்டோம்” என்று பதிலளித்தார்.

வன்முறைகளை கட்டுப்படுத்துவதற்கு உடனடியாக கடுமையான  உத்தரவுகளை  ஏன் பிறப்பிக்கவில்லை  என்று  ஜெயவர்தனவிடம் கேட்டபோது அவர், “மிகவும் கடுமையான வேகத்துடன் காற்று வீசும்போது அதை தடுத்துநிறுத்த முடியாது.  வளைந்துகொடுக்க மாத்திரமே எம்மால் முடியும். கடும் வேகக்காற்று எப்போதும் வீசப்போவதில்லை. அது தணிந்தவுடன் வளைந்து கொடுத்த மரங்கள் வழமை நிலைக்கு வரும்” என்று எந்த விதமான பதற்றமும் இல்லாமல் மிகவும் அமைதியாக பதிலளித்ததாக பல பிரதர்களுக்கும் ஜனாதிபதிகளுக்கும் செயலாளராகவும் ஆலோசகராகவும் பணியாற்றிய  அண்மையில் காலமான மிகவும் மூத்த நிருவாகசேவை அதிகாரி பிரட்மன் வீரக்கோன் “Rendering unto Caeser” என்ற தலைப்பிலான தனது சுயசரிதையில் கூறியிருந்தார்.

ஜெயவர்தனவின் அந்தப் பதில் தனக்கு அதிர்ச்சியைக் கொடுத்த போதிலும், நீண்டகால அனுபவம்கொண்ட விவேகமிக்க அரசியல் தலைவரிடமிருந்து வந்த பதில் என்று நினைத்துக் கொண்டதாக வீரக்கோன் குறிப்பிட்டிருந்தார்.

வெலிக்கடை தமிழ்க் கைதிகள் படுகொலை 

கொழும்பில் வன்செயல்கள் முழு அளவில் பரவத் தொடங்கிய முதல் நாளான 25 ஜூலை 1983 (திங்கட்கிழமை) வெலிக்டைச் சிறைச்சாலையில் முதலில் இருபதுக்கும் அதிகமான தமிழ்க் கைதிகள் சிங்கள கைதிகளினாலும் வெளியில் இருந்து கொண்டுவரப்பட்ட காடையர்களினாலும் படுகொலை செய்யப்பட்டனர். இரண்டாவது தடவையாக ஜூலை 27 அதே சிறைச்சாலையில் இடம்பெற்ற படுகொலைகளை அடுத்து மொத்தமாக 53  தமிழ்க் கைதிகள் பலியாகினர்.

வன்செயல்கள் தணிந்து முதற்தடவையாக 4 ஆகஸட் 1983 பாராளுமன்றம் கூடியபோது சிறைச்சாலைப் படுகொலைகளை தடுத்துநிறுத்த அரசாங்கம் தவறியது குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனத்தை வெளியிட்டன.  அதற்கு பதிலளித்த பிரதமர் பிரேமதாச “சிங்களக் கைதி ஒருவரும் கொல்லப்பட்டிருக்கிறார்” என்று பதிலளித்தார்.

   கறுப்பு ஜூலை வன்செயல்களுக்காக ஜெயவர்தனவோ அல்லது அன்று பிரதமராக இருந்து பிறகு ஜனாதிபதியாகவும் வந்த ரணசிங்க பிரேமதாசவோ அல்லது ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில் முக்கியமான பதவிகளில் இருந்த அரசியல்வாதிகளில் எவருமோ உயிருடன் இருந்தவரை தமிழ் மக்களிடம் வருத்தம் தெரிவித்ததில்லை.

  மன்னிப்புக் கோரிய சந்திரிகா 

   பின்னாளில் ஜனாதிபதி திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மாத்திரமே இலங்கை அரசின் சார்பில் பகிரங்கமாக மன்னிப்பு கோரினார்.

 கறுப்பு ஜூலையின் 21 வது வருட நினைவை முன்னிட்டு  கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், “அந்த வன்செயல்களுக்காக இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் கூட்டாக குற்றப்பொறுப்பை ஏற்றுக்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும். இலங்கை அரசு மற்றும்  இலங்கையின் சகல குடிமக்கள் சார்பிலும் மன்னிப்புக்கோரும் பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டார்.

  இந்தியத்தலையீடு

   இலங்கை இனப்பிரச்சினையில் இந்தியாவின் நேரடித் தலையீட்டுக்கு கறுப்பு ஜூலை வழிவகுத்தது. அன்றைய இந்திய  பிரதமர் திருமதி இந்திரா காந்தி நிலைவரங்களை அவதானிக்க தனது வெளியுறவு அமைச்சர் பி.வி. நரசிம்மராவை கொழும்புக்கு அனுப்பினார்.  

  நரசிம்மராவ் வந்திறங்கிய தினமான (29 ஜூலை 1983) கொழும்புக்கு விடுதலை புலிகள் வந்துவிட்டதாக புரளியைக் கிளப்பிய இனவாதச் சக்திகள் தமிழர்கள் மீது மீண்டும் படுமோசமான தாக்குதல்களை மேற்கொண்டன. அன்றைய தினமே பெருமளவு கொலைகள் இடம்பெற்றதாகக் கூறப்படுவதுண்டு. தமிழர்கள் சார்பில் இந்தியா தலையீடு செய்வதற்கு சிங்களவர்களின் எதிர்ப்பை வெளிக்காட்டவே அந்நாட்டு வெளியுறவு அமைச்சர்  கொழும்பில் இருந்தவேளை இனவாதச் சக்திகள் மீண்டும் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டன என்பதில் சந்தேகமில்லை. 

1984 அக்டோபர் 31 ஆம் திகதி பிரதமர் இந்திரா காந்தி அவரது மெய்க்காவலர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து இந்தியா பூராவும் சீக்கியர்களுக்கு எதிராக வன்முறைகள் மூண்டன. அந்த வன்முறைகளுடன் கறுப்பு ஜூலையை ஜனாதிபதி ஜெயவர்தன ஒப்பிட்டுக் கருத்து தெரிவித்தார்.

தாயாரின் கொலையை அடுத்து பிரதமராக  அன்றைய தினமே  பதவியேற்ற மகன் ராஜீவ் காந்தி சீக்கியர்களுக்கு எதிரான வன்முறைகளை கடுமையாக கண்டனம் செய்து “இந்த பைத்தியக் காரத்தனத்தை உடனடியாக நிறுத்துங்கள்”( Stop this madness ) என்று வன்முறைச் சக்திகளைக் கேட்டுக்கொண்டார். ஆனால், கறுப்பு ஜூலை வன்முறைச் சக்திகளை ஒருபோதுமே கண்டிக்காத, தமிழர்கள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு கேட்காத ஜெயவர்தன திருமதி காந்தியின் கொலைக்கு பின்னரான  தன்னியல்பான  வன்செயல்களையும் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளையும் ஒப்பிடுவதில் எந்த அசௌகரியத்தையும் எதிர்நோக்கவில்லை.

  கறுப்பு ஜூலைக்கு பிறகு ஐக்கிய தேசிய கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த  இலங்கை தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கத்தின் (மலையக தமிழர்களைப் பெரும்பான்மை உறுப்பினர்களாக கொண்டது) கூட்டம்  ஒன்றில் உரையாற்றிய அமைச்சர் காமினி திசாநாயக்க இந்தியா இலங்கை மீது படையெடுத்தால் 24  மணித்தியாலங்களுக்குள்  தமிழர்கள் கொல்லப்படுவார்கள் என்று ஆவேசமாகப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

   கறுப்பு ஜூலைக்கு  பின்னரான காலகட்டத்தில் அதிகாரத்தில் இருந்த சகல அரசாங்கங்களுமே இனப்பிரச்சினைக்கு அரசியல் இணக்கத்தீர்வைக் காண்பதற்கு முயற்சிப்பதாகக் கூறிக்கொண்டு மறுபுறத்தில் இராணுவத் தீர்விலேயே அக்கறை காட்டின. ஐரிஷ் குடியரசு அரசியல்வாதியும் சின் ஃபீன் இயக்கத்தின் முன்னாள் தலைவருமான ஜெரி அடம்ஸ் வட அயர்லாந்து நெருக்கடிக்கு தீர்வைக் காண்பதற்கு முன்னெடுக்கப்பட்ட சமாதான முயற்சிகள் தொடர்பில்  ஒரு தடவை கருத்து வெளியிட்டபோது “சமாதான முயற்சிகள் வேறு மார்க்கங்களிலான போர் நடவடிக்கைகளே” (Peace process are war by other means) என்று  மிகவும் பொருத்தமான முறையில்  குறிப்பிட்டிருந்தார். இலங்கையின் சமாதான முயற்சிகளும் அவ்வாறே அமைந்தன என்பதை அனுபவ வாயிலாக நாம் கண்டோம்.

 போர்ப்பிரமை 

   சிங்கள அரசியல் தலைவர்கள் அடிப்படையில் தமிழர் பிரச்சினை தொடர்பிலான தங்களது சிந்தனையில் ‘போர்’ பற்றிய ஒரு பிரமையைக் கொண்டிருந்தார்கள். இதற்கு இரு உதாரணங்களை நினைவுபடுத்துவது உகந்ததாக  இருக்கும்.

  1977 ஜூலை பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி மாபெரும் வெற்றிபெற்று ஜெயவர்தன பிரதமராக பதவியேற்ற சில வாரங்களில் தலைநகர் கொழும்பு உட்பட நாட்டின் பல பாகங்களிலும் தமிழர்களுக்கு எதிராக வன்செயல்கள் மூண்டன. அப்போது தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் காலஞ்சென்ற  அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள்  பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர்.

அந்த வன்செயல் நாட்களில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் ஜெயவர்தன அமிர்தலிங்கத்தை நோக்கி “சமாதானம் என்றால் சமாதானம். போர் என்றால் போர்” என்று கூறினார்.

  அதற்கு இரு தசாப்தங்களுக்கு முன்னர் 1956 ஜூன் 5 பிரதமர்  எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க அரசாங்கம் சிங்களத்தை மாத்திரம் அரசகரும மொழியாக்கும் சட்டத்தை கொண்டுவந்ததை எதிர்த்து தந்தை செல்வா தலைமையில் இலங்கை தமிழரசு கட்சி கொழும்பு காலிமுகத்திடலில் சத்தியாக்கிரகப் போராட்டத்தை நடத்தியது. அரசாங்கத்தின் தூண்டுதலுடன் காடையர்கள் பொலிசார் பார்த்துக்கொண்டு நிற்க  சத்தியாக்கிரகிகளை கொடூரமாக தாக்கினார்கள். 

  அந்த தாக்குதலில் காயமடைந்தவர்களில் ஒருவரான அமிர்தலிங்கம் தலையில் தனது காயத்துக்கு கட்டுப் போட்டுக்கொண்டு  பாராளுமன்றத்திற்குள் பிரவேசித்தபோது அவரை விளித்து “கௌரவ போர்க் காயங்களே” (Honourable Wounds of War)  என்று பண்டாரநாயக்க பேசினார்.

  தமிழர்கள் ஆயுதத்தை கையிலெடுப்பதற்கு  வெகு முன்னதாகவே தமிழர்களின் நியாயபூர்வமான உரிமைப் போராட்டத்தை சிங்களத் தலைவர்கள் ஒரு  போர் மனோபாவத்துடனேயே நோக்கினார்கள் என்பது இதன் மூலம்  தெளிவாகிறது. இறுதியில் அந்தப் போர் வருவதை எவராலும் தடுக்கக்கூடியதாக இருக்கவில்லை. அதற்கு பின்னரானவை அண்மைக்கால வரலாறு.

 இராணுவத்தீர்வு 

  இலங்கையின் சகல   ஜனாதிபதிகளும் உலக ஒப்பாசாரத்துக்காக அரசியல் தீர்வைப் பற்றி பேசினார்களே தவிர,  இராணுவத்தீர்வை காணும் முயற்சிகளுக்கு தங்களால் இயன்ற பங்களிப்பை செய்துவிட்டே  சென்றார்கள். இந்தியாவின் தலையீடோ அல்லது சர்வதேசத்தின் பங்களிப்போ இலங்கையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கு பதிலாக இராணுவத்தீர்வை நோக்கிய செயன் முறைகள் முனைப்படைந்து இறுதியில் முழுவீச்சில் போர் தீவிரப்படுத்தப்படுவத உறுதிசெய்ததையே  காணக்கூடியதாக இருந்தது.

 சர்வதேச அரசியல் நிகழ்வுப்போக்குகளில் ஏற்பட்ட மாறுதல்கள் வன்னியில் விடுதலை புலிகளை தோற்கடித்து உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான வாய்ப்பை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு கிடைக்கச் செய்தன. போரில் அரசாங்கப் படைகள் வெற்றி பெறுவதற்கு உறுதியான அரசியல் தலைமைத்துவத்தை வழங்கிய ஒரே ஜனாதிபதி தானே என்று உரிமைகோரிய ராஜபக்ச போர்வெற்றியை மையப்படுத்தி சிங்கள மக்கள் மத்தியில் பிரசாரங்களை முன்னெடுத்து உச்சபட்ச அரசியல் ஆதாயத்தை அறுவடை செய்தார்.

பேரினவாத அரசியலின் தோல்வி.

 இராணுவவாத அணுகுமுறையுடன் சிங்கள பௌத்த பெரும்பான்மை இனவாத அரசியல் கொள்கைகளை முன்னெடுத்த ராஜபக்சாக்கள் இறுதியில் தங்களது தவறான ஆட்சிமுறை, ஊழல் மோசடி, அதிகார துஷ்பிரயோகம் மற்றும் குடும்ப ஆதிக்க அரசியலுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த  மக்களினால் ஆட்சியதிகாரத்தில் இருந்து தூக்கியெறியப் பட்டார்கள். அவர்களின் வீழ்ச்சி உண்மையில் பெரும்பான்மை இனவாத அரசியலின் தோல்வியை பறைசாற்றியது. ஆனால், நாட்டுக்கு அழிவைத் தந்த அதே பாதையிலேயே — பேரினவாதத்தின் மூலமாக மீண்டும் ஆட்சியதிகாரத்துக்கு வரமுடியும் என்று இன்னமும் நம்பவதை  அவர்களின் குறிப்பாக ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் வாரிசு என்று கூறப்படும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் பேச்சுக்கள் மற்றும்  நடவடிக்கைகள் மூலம்  காணக்கூடியதாக இருக்கிறது. 

  நாட்டு மக்கள் எதிர் நோக்கும் பிரதான பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசை திருப்பவும் தவறான ஆட்சிமுறையை மூடிமறைக்கவும் இனிமேலும் பெரும்பான்மை இனவாத அணி திரட்டல்களுக்கு இடமளிக்கக்கூடாது என்பதே இலங்கை வரலாறு  காணாத படுமோசமான பெ்ருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் உணர்த்திய  முக்கிய படிப்பினையாகும்.

கடந்த வருடத்தைய தேசிய தேர்தல்களில் நாட்டு மக்களினால் நிராகரிக்கப்பட்ட அரசியல் சக்திகள் குறிப்பாக, சிங்கள தேசியவாத சக்திகள் இனவாதத்தைப் பயன்படுத்தி மீண்டும் தலையெடுப்பதற்கு சந்தர்ப்பங்களுக்காக காத்திருக்கின்றன. 

  மீண்டும் இனக்கலவரம் பற்றிய பேச்சுக்கள் 

தற்போது யாழ்ப்பாணம் செம்மணியில் புதைகுழிகளில் கண்டெடுக்கப்படும் மனித எலும்புக்கள் இலங்கையின் போர்க்கால மனித உரிமைகள் மற்றும் போர்க்குற்றங்கள் மீது உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் மீண்டும் பெருமளவில் கவனத்தை  ஈர்த்திருக்கும் தென்னிலங்கை சிங்கள தேசியவாத அரசியல்வாதிகள் அந்த புதைகுழிகள் தொடர்பில்   இனவாதப் பிரசாரங்களை முன்னெடுத்திருப்பதுடன் மீண்டும் இனக் கலவரங்கள்  மூளக்கூடிய ஆபத்து இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கிறார்கள். முன்னாள் அமைச்சர்களான சரத் வீரசேகர, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றவர்கள் இத்தகைய பிரசாரங்களின்  முன்னரங்கத்தில் நிற்கிறார்கள். 

இனவாதமும் மதத்தீவிரவாதமும் மீண்டும் தலையெடுக்க ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று ஓயாது சூளுரைக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் அரசாங்க தலைவர்களும்  இனக்கலவரங்கள் குறித்து பொறுப்பற்ற முறையில் எச்சரிக்கை செய்யும் இந்த இனவாதிகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையையும் எடுப்பதாக இல்லை. 

13 வது திருத்தத்துக்கு எதிர்ப்பு 

  இதே இனவாதிகள்  முன்னரும்  அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப் படுத்தினால் இலங்கை இதுவரை காணாத மிகப்பெரிய இனக்கலவரம் மூளும் என்றும் சிங்கள பௌத்த மக்களின் பொறுமைக்கு ஒரு எல்லை உண்டு என்றும்  பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் பேசினார்கள்.

   இத்தகைய பின்னணியிலே, மீண்டும் ஒரு கறுப்பு ஜூலை நிகழாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. கறுப்பு ஜூலையில் இருந்தும் அதற்கு பின்னரான நான்கு தசாப்தங்களுக்கும் அதிகமான கால  அரசியல் நெருக்கடிகளில்  இருந்தும் சிங்கள அரசியல் சமுதாயம் பெரும்பாலும்  எந்த படிப்பினையையும் பெறவில்லை. 

  தமிழ் மக்களின் இன்றைய நிலை 

   உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்த பிறகு கறுப்பு ஜூலையை நாம் நினைவுகூருவது இது பதினாறாவது  வருடமாகும். இந்த கட்டத்தில் இலங்கைத் தமிழர்களின் நிலை என்னவாக இருக்கிறது?  நான்கு தசாப்தங்களிலும் 15 இலட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் வெளிநாடுகளுக்கு குறிப்பாக மேற்கு ஐரோப்பாவுக்கும்  வட அமெரிக்காவுக்கும் புலம் பெயர்ந்து நவீன யூதர்கள் போன்று வாழ்கிறார்கள். மேற்கு நாடுகளில் உள்ள செல்வாக்குமிக்க ஆசிய புலம்பெயர் சமூகங்களில் குறிப்பிடத்தக்க ஒரு  பிரிவினராக இலங்கை தமிழர்கள் விளங்குகிறார்கள்.

    இலங்கையில் வந்து முதலீடுகளைச் செய்து தாய்நாட்டின் வளர்ச்சிக்கு உதவுமாறு அரசாங்கத்   தலைவர்கள் கோரிக்கை விடுக்கின்ற அளவுக்கு புலம்பெயர் இலங்கை தமிழர்களில் பலர் பொருளாதார ரீதியில் வலிமை கொண்டவர்களாக இருக்கிறார்கள். இலங்கையில் தமிழர்கள்  எதிர்நோக்கும் மனிதாபிமானப் பிரச்சினைகள்  மற்றும் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காணும் முயற்சிகள் தொடர்பில் சர்வதேச சமூகத்தின் குறி்ப்பாக மேற்குலக நாடுகளின் கவனத்தை இடையறாது ஈர்க்கும் அரசியல் செயற்பாடுகளிலும் அவர்கள் மத்தியில் உள்ள அமைப்புக்கள் ஈடுபட்டுவருகின்றன. ஆனால், அவற்றில் சில அமைப்புக்கள் இலங்கையில் சில  தமிழ் அரசியல் கட்சிகள் தற்போதைய உள்நாட்டு மற்றும் சர்வதேச நிலைவரங்களுக்கு பொருத்தமான முறையில் கொள்கைகளையும் அணுகுமுறைகளையும் கடைப்பிடிக்காமல் இருப்பதற்கு ஊக்கம் கொடுக்கின்ற ஒரு நிலைவரத்தையும் காணக்கூடியதாக இருக்கிறது. 

இந்த புலம்பெயர்ந்த சக்திகள் தமிழ்த் தேசியவாத அரசியல் களம் முன்னென்றும் இல்லாத வகையில் ஊழல் மயப்படத்தக்கதாக நிதியுதவிகளையும் அள்ளி வீசுகின்றன. நிலைவரத்துக்கு பொருத்தமான முறையில் நடைமுறைச் சாத்தியமான அணுகுமுறைகளில் அக்கறை காட்டும் தமிழ் அரசியல்வாதிகளை ஓரங்கட்டுவதற்கு ஊக்கம் கொடுக்கும் செயற்பாடுகளுக்கும் வெளியில் இருந்து பணம் வருகிறது. 

  வடக்கு,கிழக்கில் போரின் விளைவான அவலங்களில் இருந்து இன்னமும் முழுமையாக விடுபடமுடியாமல் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இடர்பாடுகளை அனுபவித்துக் கொண்டிருக்கின்றன. போரின் முடிவுக்கு பின்னரும் தமிழ்ப் பிரதேசங்களில்  இராணுவமயத்தை வலுப்படுத்துவதிலேயே அரசாங்கங்கள் அக்கறை காட்டுகின்றன.  தமிழ் மக்களின் பாரம்பரிய  பிரதேசங்களில்  குடிப்பரம்பலை மாற்றியமைக்கும் நோக்குடன் அரசாங்க அனுசரணையுடன் திட்டமிட்ட குடியேற்றங்கள் மதவாத சக்திகளின் துணையுடன் தீவிரப்படுத்தப்படுவதையும் காணக்கூடியதாக இருக்கிறது.

   தொல்பொருள் ஆராய்ச்சி,  வனப்பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்புத் தேவைகள் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் காணி அபகரிப்பு நடவடிக்கைகள் இன்று வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற பாரதூரமான உடனடிப் பிரச்சினையாக இருக்கிறது.

   கறுப்பு ஜூலைக்கு பிறகு இந்தியாவின் நேரடித் தலையீட்டை அடுத்து 1987 ஜூலை இந்திய — இலங்கை சமாதான உடன்படிக்கை மாகாணசபைகள் அமைக்கப்படுவதற்கு வழிவகுத்தது. அதற்காக கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புக்கான 13 வது திருத்தம் 38  வருடங்கள் கடந்தும் கூட முழுமையாக நடைமுறைப்  படுத்தப்படவில்லை. சமாதான உடன்படிக்கையின் ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பதை சகல அரசாங்கங்களுமே உறுதி செய்துகொண்டன .

  இந்தியாவினால் கூட அது விடயத்தில் இலங்கையை வழிக்கு கொண்டுவர முடியவில்லை. சமாதான உடன்படிக்கைக்கு பின்னரான காலப்பகுதியில் அரசியல் தீர்வை நோக்கிய பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.

 பிரேமதாசவின் ஆட்சிக்காலத்தின் 1991 மங்கள முனசிங்க தலைமையிலான பாராளுமன்ற தெரிவுக்குழு, திருமதி குமாரதுங்கவின் ஆட்சியில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2000 புதிய அரசியலமைப்புக்கான யோசனைகள், மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் 2006 பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையிலான சர்வகட்சி பிரதிநிதித்துவக் குழுவின் யோசனைகள் மற்றும் மைத்திரிபால — ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தில் புதிய அரசியலமைப்பை வரைவதற்கு முன்னெடு்க்கப்பட்ட செயன்முறை ஆகியவையே அவையாகும். 

   தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக இருந்த காலஞ்சென்ற  இரா.சம்பந்தன் அவர்கள்  அரசாங்கங்களுடனான பேச்சுவார்த்தைகளிலும் பாராளுமன்றத்தில் உரையாற்றிய பல சந்தர்ப்பங்களிலும் இந்த முயற்சிகளைப் பற்றி திரும்பத்திரும்ப விளக்கிக் கூறிவந்தார். இறுதியாக ஜனாதிபதி விக்கிரமசிங்கவுடன் நடத்திவந்த பேச்சுவார்த்தைகளிலும் கூட சம்பந்தன் அவற்றை வலியுறுத்தினார். ஆனால், எந்த ஆட்சியாளரும்  அவற்றில் அக்கறை காட்டக்கூடிய மனநிலையில் இருக்கவில்லை. 

   ரணில் விக்கிரமசிங்க 2022 ஜூலையில் ஜனாதிபதியாக பதவியேற்றதை தொடர்ந்து இலங்கையின் 75 வது சுதந்திர தினத்துக்கு முன்னதாக இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்போவதாகக் கூறிக்கொண்டு சில முயற்சிகளை எடுத்து சர்வகட்சி மகாநாடு என்ற பெயரில் ஒருசில தடவைகள் பேச்சுவார்த்தைகளையும் நடத்தினார். 13 வது திருத்தத்தை இரு வருடங்களில் முழுமையாக நடைமுறைப்ப டுத்துவதற்கு தனது அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கும் என்று யாழ்நகரில் ஒரு தைப்பொங்கல் விழாவில் வைத்து அவர்  அறிவித்தார். 

  பொலிஸ் இல்லாத பதின்மூன்று 

   ஆனால்,  தென்னிலங்கையில் கிளம்பிய எதிர்ப்பையடுத்து அவர்  பதின்மூன்றைப் பற்றி பேசுவதை தவிர்த்துக் கொண்டார். தமிழ்க் கட்சிகளின் தலைவர்களுடன்  பேச்சுவார்த்தை நடத்திய சந்தர்ப்பம் ஒன்றில்  பொலிஸ் அதிகாரங்களை தவிர்த்து 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து விக்கிரமசிங்க யோசனை முன்வைத்தார். அதை தமிழ்க்கட்சிகள் அடியோடு நிராகரித்ததை தொடர்ந்து 

 இனப்பிரச்சினை தீர்வு முயற்சிகளை மீண்டும் எவ்வாறு தொடங்குவது என்பது ஒரு சிக்கலாகவே இருக்கிறது. 

  கறுப்பு ஜூலைக்கும் உள்நாட்டுப் போருக்கும் வழிவகுத்த இனப்பிரச்சினைக்கு நிலையான அரசியல் தீர்வொன்றைக்  காண வேண்டிய அவசியம் இருப்பதாக தென்னிலங்கை அரசியல் சமுதாயம் உணருவதாக இல்லை. தீர்வு முயற்சிகளுக்கு எதிரான நிலைப்பாடு இன்று மூன்றரை தசாப்தங்களுக்கும் கூடுதலான காலமாக அரசியலமைப்பில் இருந்து வரும் ஒரு திருத்தத்தைக் கூட கைவிடவேண்டும் என்று போர்க்கொடி தூக்குகின்ற அளவுக்கு வலுவடைந்திருக்கிறது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் 

  கடந்த வருடம் மக்களின்  அமோக ஆதரவுடன்  அதிகாரத்துக்கு வந்த ஜனதா விமுக்தி பெரமுன ( ஜே.வி.பி. ) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும்  தேசிய இனப்பிரச்சினையை பொறுத்தவரை, மக்களால்  நிராகரிக்கப்பட்ட  பாரம்பரிய அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகளில் இருந்து வேறுபட்ட முறையில் சிந்தித்துச் செயற்படத் தயாராக இல்லை. தங்களது பழைய கொள்கைகளில் பலவற்றை சமகால உள்நாட்டு மற்றும் சர்வதேச நிலைவரங்களுக்கு இசைவாக மாற்றிவிட்டதாக கூறும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் இனப்பிரச்சினை விடயத்தில் மாத்திரம் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளத் தயாராயில்லை. 

தேசிய மக்கள் சக்தியின் தலைமைத்துவக் கட்சியான ஜே.வி.பி. இதுகாலவரையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு என்று முன்னெடுக்கப்பட்ட சகல முயற்சிகளையும் எதிர்த்த ஒரு கசப்பான வரலாற்றைக் கொண்டிருக்கிறது. இந்தியாவுக்கு எதிராக “இந்திய விஸ்தரிப்புவாதம்” என்பது ஜே.வி.பி.யின் அடிப்படைக் கொள்ளைகளில் ஒன்றாக விளங்கியது. ஆனால், இன்று அதிகாரத்துக்கு வந்த பிறகு அதன் தலைவர் திசாநாயக்கவின் அரசாங்கம் இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளைப் பேணுகிறது. ஆனால், இனப்பிரச்சினை விடயத்தில் மாத்திரம் இந்திய அரசாங்கம் முன்வைக்கின்ற கோரிக்கைக்கு இணங்குவதற்கு தயாராயில்லை. 

13 வது திருத்தம் தொடர்பாக சர்ச்சை மூண்ட ஒரு சந்தர்ப்பத்தில் எதிரணியில் இருந்த திசாநாயக்க, “மாகாணசபைகள் கூட தமிழ் மக்கள் போராட்டத்தின் மூலமாகப் பெற்றவையே.  தங்களது பிரச்சினைக்கு ஒரு தீர்வாக 13 வது திருத்தத்தை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்வதாக இருந்தால், எங்களுக்கு அதில் எந்த பிரச்சினையும் இல்லை” என்று கூறினார். ஆனால், அதிகாரத்துக்கு வந்த பிறகு அவர் 13 வது திருத்தத்தைப் பற்றி பேசுவதே இல்லை. தென்னிலங்கை தேசாயவாத சக்திகளிடமிருந்து தனிமைப்பட ஜனாதிபதி விரும்பவில்லை. 

புதிய அரசியலமைப்பு ஒன்று கொண்டு வரப்படும் வரை, மாகாணசபைகள் முறை தொடர்ந்து இருக்கும் என்று கூறும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்  எட்டு வருடங்களாக நடத்தப்படாமல் இருக்கும் மாகாணசபை தேர்தல்களை விரைவாக நடத்தக்கூடிய சாத்தியம் இருப்பதாக தெரிய வில்லை. அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தியின் வாக்குகளில் ஏற்பட்ட கணிசமான வீழ்ச்சியும் அதற்கு ஒரு காரணம். 2024  பாராளுமன்ற தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில்  தேசிய மக்கள் சக்திக்கு முன்னென்றும் இல்லாத வகையில்  பெருமளவில் வாக்களித்த தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை விளங்கிக்கொண்டு அவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் நேர்மறையான அணுகுமுறைகளை அரசாங்கம் கடைப்பிடிக்க முன்வருவதாக இல்லை.

சகல இனங்களையும் சமூகங்களையும் சமத்துவமான முறையில் நடத்துவது என்பது மேலோட்டமாக நோக்குகையில் உன்னதமான கோட்பாடாக தெரியும். ஆனால்,  வடக்கு, கிழக்கு மக்களுக்கு இருக்கக்கூடிய பிரத்தியேகமான பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் கண்டால் மாத்திரமே ‘சகலருக்கும் சமத்துவம்’ என்ற கோட்பாட்டை தமிழ் மக்களால் திரும்பிப் பார்க்க முடியும் என்பதை ஜனாதிபதி திசநாயக்க உட்பட அரசாங்க தலைவர்கள் உணர்ந்து கொள்வது அவசியம். 

முறைமை மாற்றத்தையும் புதிய அரசியல் கலாசாரத்தையும் கொண்டுவரப்போவதாக  மக்களுக்கு வாக்குறுதி அளித்து அதிகாரத்துக்கு வந்த தேசிய மக்கள் சக்தி இலங்கையின் பிரதான பிரச்சினையான தேசிய இனப்பிரச்சினையில் முன்னைய தவறான போக்குகளில் இருந்து விடுபட்டு, சிறுபான்மைச் சமூகங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளை மதிக்கும் ஆரோக்கியமான கொள்கையை கடைப்பிடிக்க முன்வராத பட்சத்தில் முறைமை மாற்றம்,  புதிய அரசியல் கலாசாரம் என்பதெல்லாம் வெற்றுச் சுலோகங்களாகவே இறுதியில் முடியும். 

கறுப்பு ஜூலைக்கு பிறகு 42 வருடங்கள் கடந்தபோன பின்னரும் கூட இனப்பிரச்சினைக்கான தீர்வு நழுவிக் கொண்டு போவது இலங்கை அரசியல் சமுதாயம் வெட்கப்பட வேண்டிய ஒரு நிலைவரமாகும். உண்மையில், கறுப்பு ஜூலையை விடவும் அது பெரிய வெட்கக்கேடு! 

https://arangamnews.com/?p=12182

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்விற்கு நன்றி @கிருபன் அண்ணை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.