Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: NANTHINI

06 AUG, 2025 | 07:44 PM

image

வரலாற்றில் இன்று : ஒரு நாளேடு உதயமான கதை! 

(மா.உஷாநந்தினி) 

வரலாற்றில் இன்று, அதிசிறப்பான ஒரு நாள். ஒரு தமிழ்ப் பத்திரிகைப் பரம்பரையின் முதல் தலைமுறை, முதல் முறையாகக் கண்டு, கைகளில் தாங்கி, முகர்ந்து, அறிவாலும் உணர்வுகளாலும் அனுபவித்துக் கொண்டாடிய, ஒரு நாளேட்டின் உதயம், இதே புதன்கிழமையில், இதே திகதியில், 95 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது.

“இலங்கைவாழ் தமிழ் மக்கள் பேராவலோடு எதிர்நோக்கியிருந்த சீரிய, தேசீய, செந்தமிழ்த் தேன்பிலிற்றும், தினசரி ‘வீரகேசரி’ என்ற இன்னுரைக் களஞ்சியம் வெளிவந்துவிட்டது!” என்ற பேரறிவிப்போடு, 1930ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ஆம் திகதி நிகழ்ந்த, அந்த அற்புதமான, அதி உன்னதமான தொடக்கத்தையும், இன்றைய தினம், 95ஆவது அகவையை நிறைவு செய்து, 96ஆவது அகவையில் தடம் பதித்திருக்கும் ‘வீரகேசரி’யையும், சிரேஷ்ட மற்றும் புதிய தலைமுறை ஊழியர்கள், வாசகர்கள் என அனைவரும் ஆத்மார்த்தமாக மகிழ்ந்து வரவேற்கின்றனர் என்பதை இக்கணம் உணர முடிகிறது.  

துணிவும் கம்பீரமும் அறிவொளியும் நடுநிலையும் பொருந்திய ‘வீரகேசரி’யானது மிக விரைவில், நூற்றாண்டு பயணச் சாதனையை அடையப்போகும் நன்னாளுக்காக நம்பிக்கையோடு காத்திருக்கும், இத்தமிழ் ஊடகத்தை அடையாளமாகக் கொண்டு இயங்கி வரும் ஸ்தாபனமான எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் (சிலோன்) (பிரைவேட்) லிமிட்டெட் நிறுவனத்தின்  ஊழியர்களின் உழைப்பும் நலன் விரும்பிகளின் ஆலோசனைகளும் ஆதரவும் வாசகப் பெருமக்கள் அளிக்கும் வரவேற்பும் அன்பும் அளவிட முடியாதது. 

v1.jpg

இப்பத்திரிகையின் மீது வாசகர்கள் சில விமர்சனங்கள், மாற்றுக் கருத்துக்களைக் கொண்டுள்ள போதிலும், “வாசிக்க ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை வீரகேசரியுடன் இருக்கிறேன்...” என்று சொல்பவர்களையும் பார்த்திருக்கிறேன்... “காலையில் முதல் வேலையாக, வீரகேசரியை வாங்கி முழுதாய் வாசித்துவிட்டுத்தான் மறுவேலை!” என்று உரிமை பாராட்டுபவர்களையும் சந்தித்திருக்கிறேன். 

பேருந்தின் ஜன்னலோரம் உட்கார்ந்து, ஒரு முதியவர், வீரகேசரியை விரித்து, பின்பு, தான் வாசிக்கவேண்டிய ஒரு சிறு பகுதியை மட்டுமே, காகிதமும் கசங்காமல், கைக்கும் நோகாமல் நேர்த்தியாக, இரண்டு மூன்று மடிப்பாக மடித்து, வாசிக்கின்ற அழகையும் பார்த்திருக்கிறேன். நாளேடுகளை ஓர் எளிய வாசகன் கையாளும் விதம் அத்தனை அழகு! 

ஒரு பத்திரிகையின் ஆணிவேரும் வாசகன்தான். அதன் இருப்பைத் தீர்மானிப்பவனும் வாசகன்தான். அந்த வகையில், வாசகர்களின் உற்சாகமும் ஒத்துழைப்பும் அவர்களது அறிவுத் தேடலுமே, ‘வீரகேசரி’ என்ற நாமம் தரித்த இந்தப் பாரம்பரிய ஊடகத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக விளங்குகிறது என்றால் அது மிகையல்ல. 

'தரமான வழியில் தெளிவான தகவல்’ என்ற மகுட வாசகத்துக்கு இணங்க, தரமான உள்ளடக்கங்களும், தெளிவான அறிக்கையிடலும் அறம் பிறழாத அணுகுமுறைகளும் விசாலமான கருத்துச் செறிவும் அறிவார்ந்த கருத்தாடல்களும் ஆச்சரியமூட்டும் கருத்துக்கணிப்புகளும் வீரகேசரிக்கு தனித்துப் பெருமை சேர்க்கின்றன.

உள்ளூர், உள்நாட்டு விவகாரங்களில் மட்டுமல்ல, சர்வதேசமெங்கும் தொலைநோக்குப் பார்வையை செலுத்தி, உலகில், எங்கோ ஒரு புள்ளியில் நிகழும் சிறு சம்பவமாயினும், உலகளாவிய பிரச்சினைகளாயினும் பாரதூரமான விவகாரங்களாயினும், அவற்றையும் பொதுவெளிக்குக் கொண்டு வருகிறது. 

பல்வேறு சமூகத்தினர் இணைந்து வாழும் இந்நாட்டில், அந்தந்த சமூகத்தவர்களின் வளமான வாழ்க்கைக்காகவும், பொருளாதார எழுச்சிக்காகவும் மக்களது வாழ்வியல் மேம்பாட்டுக்காகவும் சமூக அபிவிருத்தி நலன்களுக்காகவும் கொண்டுவரப்பட்ட சில  திட்டங்கள் கூட, ஒரு தமிழ்ப் பத்திரிகை என்ற வகையில், வீரகேசரி தலையிட்டு வெற்றிகரமாக செயற்படுத்த துணை புரிந்ததற்கு, கடந்த கால வரலாறுகள் சான்றுகளாகின்றன.

அத்தோடல்லாமல், வீதி அபிவிருத்தி என்ற பெயரில் இடம்பெறும் மோசடிகள், பின்தங்கிய கிராமங்களில் காணப்படும் பிரச்சினைகள், சரிவர பராமரிக்கப்படாத பாடசாலைகளின் நிலைமைகள், கல்வியில் பின்நிற்கும் மாணவர்களின் எதிர்காலம் குறித்த கரிசனை, பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள், பால்புதுமையினருக்கு எதிரான கடும்போக்குத்தனம், இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்படும் மக்களின் அவல நிலை, போதைப்பொருள் பாவனை உள்ளிட்ட சமுதாய சீர்கேட்டுத்தனங்களை சுட்டிக்காட்டியும், கண்டித்தும் கரிசனையோடு குரல் கொடுத்து வருகிறது. 

virakesari_1.jpg

பத்திரிகைத்தர்மம் காப்பதில் காலங்காலமாக வெவ்வேறு சந்தர்ப்பங்களில், இடையூறுகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் வீரகேசரி முகங்கொடுத்து வருகிறபோதிலும், நேர்மையான செய்தியிடலின் ஊடாக துணிவோடு நீதியை சுட்டிக்காட்டவோ, பொதுமக்களின் பிரச்சினைகளையும் அவலங்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டவோ, அவற்றுக்கான தீர்வுகளை நாடவோ வீரகேசரி பின்நிற்பதில்லை. 

உள்நாட்டு யுத்த சூழ்நிலைகள், இனக் கலவரங்கள், வன்செயல்கள், சமூக சீர்கேடுகள், கல்வி மற்றும் கலாசார முரண்பாடுகள், பாதாள உலகக் கும்பல்களின் அராஜகங்கள், அரசியல் குழப்பங்கள், சில அரசியல்வாதிகளின் இடையூறுகள், ஊடக அடக்குமுறைகளையும் தொடர்ந்து வீரகேசரி சந்தித்திருக்கிறது.  

அதைவிடவும் நாட்டில் அதிகப்படியாக தலைவிரித்தாடிய இனக் கலவரங்களால் தமிழர்கள் சந்தித்த இடப்பெயர்வுகள், போராட்டங்கள், பத்திரிகை நிறுவன ஊழியர் பற்றாக்குறை, உற்பத்திக்கான வசதி வளம் குன்றியமை, சுனாமி ஆழிப் பேரலை அனர்த்தம், கொரோனோ நோய்த்தொற்றுப் பரவல், பொருளாதார நெருக்கடி, அரசியல் குளறுபடிகள், போராட்ட நிலைமைகள், உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறைகள், அனைத்துக்கும் மேலாக, அச்சுப் பணியை கொண்டுசெல்வதில் பெருந்தடையாய் உருவெடுத்த காகிதப் பற்றாக்குறை, ஊழியர்களின் பணி இடைநிறுத்தம் முதலான பாரிய வீழ்ச்சிகளையும் மேடு பள்ளங்களையும் கையறு நிலையையும் இப்பத்திரிகை நிறுவனம் கடுமையாக எதிர்த்துப் போராடியிருக்கிறது. 

எனினும், எத்தனைத் தடைகள் வந்துபோனபோதிலும், ஊழியர்களது தளராத உழைப்பும், வாசகர்கள் இப்பத்திரிகையின் மீது கொண்ட நம்பிக்கையுமே வீரகேசரியை மீண்டும் மீண்டும் தூக்கி நிறுத்தியிருக்கிறது என்றே சொல்லவேண்டும். 

வீரகேசரி உருவான கதை

‘வீரகேசரி’யின் வெற்றிப் பயணத்தை இன்று நாம் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். ஆனால், இந்த நாளேடு ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து, இன்று வரை, இந்த ஒன்பது தசாப்தங்களுக்கும் மேலான பயணம், அத்தனை எளிதானதல்ல. தமிழ்ப் பேசும் மக்களுக்காக, ஒரு தமிழ் தேசிய நாளேடு தோன்றிய காலமும் பொற்காலமன்று, அது, 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பகாலம். 

இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முந்தைய அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த  தமிழ் மக்களைப் பற்றி நாம் சற்றே சிந்தித்தாக வேண்டும். அன்றைய தமிழ் மக்களின் மனநிலையும் வாழ்க்கை முறையும் பெரிதும் வேறு. அவர்கள் வெகுளித்தனமானவர்கள். வெளியுலகம் அறியாதவர்கள். நாட்டு நடப்போ உலக நிலைவரமோ தெரியாதவர்களாகத்தான் அவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். காரணம், நாட்டிலும் உலகிலும் நடக்கும் விடயங்களை அன்றைய தமிழ் மக்களுக்கு அறியத்தர, ஒரு தமிழ் ஊடகம் அப்போது நம் நாட்டில் இருக்கவில்லை. 

அந்த காலகட்டத்தில் ‘கொழும்பு ஜேர்னல்’ என்றொரு ஆங்கிலப் பத்திரிகையும், ‘லங்கா லோக்கய’ என்ற சிங்கள பத்திரிகையும் ‘உதய தாரகை’ என்றொரு தமிழ்ப் பத்திரிகையும் வெளிவந்துகொண்டிருந்தன. 

இவற்றில் ‘கொழும்பு ஜேர்னல்’, 1832இல் வெளியான முதல் ஆங்கிலப் பத்திரிகையாகவும், ‘லங்கா லோக்கய’, 1860இல் காலியில் வெளியான முதல் சிங்கள பத்திரிகையாகவும், ‘உதய தாரகை’, 1841இல் யாழ்ப்பாணத்தில் வெளியான முதல் தமிழ்ப் பத்திரிகையாகவும் அறிமுகமாயின. 

அப்போது ‘உதய தாரகை’ தமிழ்ப் பத்திரிகை வெளிவந்தபோதும், அது, யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டுமே விற்பனையாகி வந்தது. இதனால், யாழ்ப்பாண மாவட்ட தமிழ் மக்களைத் தவிர, வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ் மக்களால் அந்தப் பத்திரிகையைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை இருந்தது. 

PPR_Subramaniam_Chettiar.jpg

அவ்வாறான ஒரு சூழ்நிலையில், இலங்கைவாழ் இந்தியத் தமிழரான திரு. பெ.பெரி. சுப்பிரமணியம் செட்டியார் அவர்கள், நாடெங்கும் உள்ள அனைத்து தமிழ்ப் பேசும் மக்களும் வாசித்து, உலக நடப்புகளை அறிந்து, பயன் பெறும் வகையில், ஒரு தமிழ்ப் பத்திரிகையை தேசிய அளவில் உருவாக்க வேண்டும் எனக் கருதினார்.

அது மட்டுமன்றி, அக்காலகட்டத்தில், நாட்டில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளைக் கூட தமிழ் மக்களால் அறிந்துகொள்ள முடியவில்லை. 

1927ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து மகாத்மா காந்தி இலங்கைக்கு வருகை தந்தபோது, அவரது இலங்கை விஜயம் பற்றியோ அதன் நோக்கம் பற்றியோ, மக்களுக்காக காந்தி ஆற்றிய உரையோ கருத்துக்களோ எதுவுமே தமிழ் மக்களை போய்ச் சேரவில்லை. இதுபோன்ற முக்கியமான வரலாற்று நிகழ்வுகள், சம்பவங்கள், நாட்டு நிலவரம் குறித்து தமிழ் மக்களுக்கு அறியத்தருவதற்கென ஒரு தமிழ்ப் பத்திரிகை இல்லையே என்ற தவிப்பும் ஏக்கமும் சுப்பிரமணியம் செட்டியார் அவர்களுக்கு நிச்சயம் ஏற்பட்டிருக்கும். 

தவிர, மலையக மக்கள் மீதும் கரிசனை கொண்ட சுப்பிரமணியம் செட்டியார் அவர்கள், அந்த மக்களின் பிரச்சினைகளும் தேவைகளும் வெளியுலகுக்குத் தெரியவரவேண்டும் எனில், அதற்காகவேனும் ஒரு தமிழ்ப் பத்திரிகை கட்டாயம் தேவை என்று சிந்தித்தார். 

காலச் சூழ்நிலைகளையும் தேவைகளையும் கருத்திற்கொண்டு, தமிழ்ப் பேசும் மக்களின் குரலாக ‘வீரகேசரி’ என்கிற ஒரு தேசிய தமிழ்ப் பத்திரிகையை உருவாக்கினார்.

கேசரி என்றால் சிங்கம். சுப்பிரமணியம் செட்டியாரின் துணிவு மிகு பிரவேசமாக ‘வீரகேசரி’ வெளியாவதை எடுத்துக்காட்டும் விதமாக, பெயருக்குத் தகுந்தாற்போல் வாளேந்திய இரண்டு சிங்கங்களின் உருவங்கள் வீரகேசரி இலச்சினையில் வரையப்பட்டன. 

1930ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ஆம் திகதி புதன்கிழமை வீரகேசரியின் முதல் நாளிதழ் 8 பக்கங்களை உள்ளடக்கி வெளியானது. அந்த முதல் நாளேட்டின் விலை வெறும் 5 சதமே என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? 

அன்றைய வீரகேசரி காரியாலயம் கொழும்பு - மருதானையில் அமைந்திருந்தது. அதன் பின்னர், கொட்டாஞ்சேனைக்கு மாற்றப்பட்டு, சிறிது காலத்தின் பின், தற்போதைய அமைவிடமான கொழும்பு - கிராண்ட்பாஸ் பிரதேசத்துக்கு மாற்றப்பட்டு, இன்று வரை நிலைபெற்றிருக்கிறது. 

vi3.jpg

‘வீரகேசரி’ ஆசிரியர்களும் முகாமைத்துவப் பணிப்பாளர்களும்

வீரகேசரியின் ஸ்தாபகரும் அதன் ஆசிரியருமான திரு. பெ.பெரி.சுப்பிரமணியம் செட்டியாரைத் தொடர்ந்து, திரு. எச். நெல்லையா, திரு. வ.ராமசாமி, திரு. கே.பி.ஹரன், திரு. கே.வி.எஸ்.வாஸ், திரு. கே.சிவப்பிரகாசம், திரு. ஆ.சிவனேசச்செல்வன், திரு. எஸ்.நடராசா, திரு. ஆர்.பிரபாகன் ஆகியோர் ஆசிரியர்களாக பணிபுரிந்துள்ளனர். இவர்களின் வரிசையில், தற்போது திரு. எஸ்.ஸ்ரீகஜன் பிரதம ஆசிரியராகக் கடமையாற்றி வருகிறார். 

வீரகேசரி ஸ்தாபனமானது, எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் (சிலோன்) (பிரைவேட்) லிமிட்டெட் என மாற்றப்பட்ட பின்னர், இந்த ஸ்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர்களாக திரு.டி.பி.கேசவன் கடமையாற்றினார். அவரையடுத்து, திரு. ஹரோல்ட் பீரிஸ்,  திரு. ஆர்.ஏ.நடேசன், திரு. எஸ்.கிருஷ்ணமூர்த்தி, திரு. ஏ.வை.எஸ்.ஞானம், திரு. எம்.ஜி.வென்சஸ்லாஸ் ஆகியோர் பதவி வகித்தனர். அவர்களை அடுத்து, தற்போது, எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் (சிலோன்) (பிரைவேட்) லிமிட்டெட் ஸ்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளராக திரு. குமார் நடேசன் வழிநடத்தி வருகிறார். 

நாளேட்டுக்கு நிகரான சஞ்சிகைகள் 

வீரகேசரி இதழுக்கு நிகராக, ஆரம்ப காலங்களில் நாளேட்டுடன் இணைந்து வெளியான சஞ்சிகைகளும் விசேட பக்கங்களும் கூட பெரிதளவில் வாசகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றன. அந்த வகையில், 1960களில் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளை வெளிப்படுத்தும் ‘தோட்ட மஞ்சரி’, ‘குறிஞ்சி மலர்’ போன்றன பெரிதளவில் பேசப்பட்டன. 

அத்துடன் அதே ஆண்டில் வெளியான ‘மித்திரன்’ மாலை தினசரி, ‘ஜோதி’ குடும்ப வார சஞ்சிகை, பின் ‘மித்திரன் வாரமலர்’ ஆகியவை வாசகர்களை அதிகமாக ஈர்த்தன. 

அதன் பின், மெட்ரோ நியூஸ், விடிவெள்ளி, சுகவாழ்வு, கலைக்கேசரி, ஜோதிட கேசரி, ஜீனியஸ், தமிழ் டைம்ஸ், சூரியகாந்தி, நாணயம், சுட்டி கேசரி, ஜூனியர் கேசரி, மாலை எக்ஸ்பிரஸ், Weekend Express என மேலும் சில வெளியீடுகள் வரத் தொடங்கின. 

எனினும், 2020ஆம் ஆண்டு கொரோனோ நோய்த்தொற்றுப் பரவலின் தாக்கம் காரணமாக நாடு முடக்கப்பட்டமை, பின்னர் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி ஆகிய காரணங்களால் அனேகமான இணை வெளியீடுகள் நிறுத்தப்பட்டன. தற்போது ‘வீரகேசரி நாளிதழ்’, ‘வீரகேசரி வாரஇதழ்’ மற்றும் ‘விடிவெள்ளி’ ஆகிய பத்திரிகைகள் மட்டுமே வெளிவருவதோடு, இம்மூன்று பத்திரிகைகளுடன் சேர்ந்து மித்திரன் வாரமலரும் மின்னிதழாக (E-Paper) வெளியாகின்றமை குறிப்பிடத்தக்கது. 

சில முக்கிய வரலாற்றுப் பதிவுகள் 

வீரகேசரி உருவான நாள் முதல் இன்று வரை, உள்நாடு மற்றும் சர்வதேச அளவில் இடம்பெற்றுள்ள பல்வேறு முக்கிய வரலாற்று நிகழ்வுகளை பத்திரிகைகளில் செய்திகளாக, ஆசிரியர் தலையங்கங்களாக, கட்டுரைகளாக, ஆக்கங்களாக, பத்திகளாக பதிவு செய்துள்ளன. அவற்றில் சில நிகழ்வுகளை நோக்குவோமாயின்,

'சங்கநாதத்துடன் இலங்கை சுதந்தரோதயம்' (1948.2.4)

'இந்தியா பூரண சுதந்திர குடியரசாகிறது' (1950.1.26)

'நீச்சல் வீரர் நவரத்தினசாமி வல்வெட்டித்துறையில் இருந்து பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து தமிழகம் கோடிக்கரையை அடைந்து சாதனை' (1954) போன்றவற்றை குறிப்பிடலாம்.

இவற்றோடு, தனிச்சிங்கள சட்டம் (1956), பண்டா - செல்வா ஒப்பந்தம் (1957), இன வன்முறை சம்பவங்கள் (1958), ஸ்ரீ குழப்பம், முன்னாள் பிரதமர் பண்டாரநாயக்க படுகொலை - வழக்கு (1959), தமிழரசுக் கட்சியின் வடக்கு கிழக்கு சத்தியாக்கிரகம் (1961), சீன கம்யூனிஸ்ட் கட்சி யாழ். மே தின ஊர்வலம் மீது பொலிஸார் தாக்குதல், அமெரிக்க தூதுவர் மீது முட்டை வீச்சு (1965), ஜே.வி.பி. ஆயுதப் போராட்டம், யாழ். நூலக எரிப்பு (1981) முதலானவற்றை பதிவிட்டுள்ளன. 

மேலும், பரிசுத்த பாப்பரசர் சின்னப்பர் மறைவு, தந்தை செல்வா மறைவு, சீன மக்கள் குடியரசு தலைவர் மாவோ சே துங் மறைவு, கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமான விடயம், இந்திய அரசியல் தலைவர் காமராஜர் மறைவு, கிழக்கு பாகிஸ்தானை பங்களாதேஷ் என இந்தியா அங்கீகரித்தமை, மறைந்த இந்திய முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் இலங்கை விஜயம் போன்றனவும் அடங்குகின்றன.

பின்வந்த நாட்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இன ரீதியான போராட்டம் முடிவுற்றமை, அரசியல் கட்சிகளிடையே முறுகல் நிலை, குருந்தூர் மலை விவகாரம், கொரோனா பெருந்தொற்றுப் பரவல் -  நாடு முடக்கப்பட்டமை, அரசியல் கட்சிகளிடையே மோதல், பொருளாதார நெருக்கடி, அரகலய மக்கள் போராட்டம், பாப்பரசர் பிரான்ஸிஸின் மறைவு, 2024 ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக தெரிவாகி பதவியேற்றமை, ஜே.வி.பி. ஆட்சியில் புதிய அரசாங்கம், செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்.... போன்ற காத்திரமான செய்திகளாயினும், அவற்றை மிகைப்படுத்தல் இன்றி, நடுநிலையுடன் அறிக்கையிடுவதிலும் பிரசுரிப்பதிலும் வீரகேசரி அவதானமாக செயற்படுகிறது.  

virakesari2.jpg

இணைய, டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சி 

அன்று, எழுத்துக்கள் காகிதங்களில் அச்சேற்றப்பட்டு, அச்சு ஊடகமாக உருப்பெற்ற வீரகேசரி, இன்று, இணையமேறி, டிஜிட்டல் தொழில்நுட்ப வசதிகளின் ஊடாக, பல்வேறு நவீனங்களைத் தாங்கி, பரிணாமம் அடைந்து, உரு மாறி, இன்றைய காலச் சூழ்நிலைக்கு ஏற்ப, பொதுமக்களை எளிய முறையில் அணுகும்  இலத்திரனியல் ஊடகமாகவும் மிளிர்கிறது. 

அவ்வாறே செய்திகள், கட்டுரைகள், நேர்காணல்கள், விளம்பரங்கள், ஏனைய அறிவித்தல்களை தாங்கியவாறு வீரகேசரி நாளிதழ் மற்றும் வார இதழ் வெளிவருவதோடு, நாளேட்டின் உள்ளடக்கங்கள் இணையத்தில் கட்டமைக்கப்பட்டு, வீரகேசரி இணையத்தள செய்திச் சேவையும் தனித்துவமாக இயங்கி வருகிறது. 

2002ஆம் ஆண்டு இலங்கையில் முதல் தமிழ் செய்தி இணையத்தளமாக virakesari.lk  உருவாக்கப்பட்டது. 

இதழியலை இலத்திரனியலோடு இணைக்கும் அடுத்தகட்ட முயற்சியாக 2005இல் வீரகேசரி மின்னிதழாக (E-paper) பதிவாகத் தொடங்கியது. 

வீரகேசரி வெறுமனே பத்திரிகைகளாக மாத்திரம் கைகளில் தவழ்ந்த காலம் போய், இன்று எண்ணும சஞ்சிகைகளாகவும் இணையத்தில் உலா வருவதைக் காண்கிறபோது, நாளுக்கு நாள் வீரகேசரி அதன் இருப்பை புதுப்பித்துக்கொள்கிற விதம் ஆச்சரியம்தான்.  

அவ்வாறே, இணையத்தின் மூலம் பத்திரிகையை பல தளங்களிலும் உலகெங்கிலும் உள்ள தமிழ் பேசும் மக்களுக்கு எடுத்துச் சென்ற வீரகேசரி இணையத்தளமானது, 2010ஆம் ஆண்டில் “இலங்கையின் அபிமான தமிழ் இணையத்தளமாக” bestweb.lkஆல் தெரிவுசெய்யப்பட்டது. 

அத்துடன், நமது செய்திகள், நேர்காணல்கள், அரசியல் மற்றும் சமூகம் சார் கருத்துக்கணிப்புகள், பொருளாதார நிலவரம், குற்றச் சம்பவங்கள், வரலாற்று ஆவணப் பதிவுகள், விளையாட்டு, சினிமா சுவாரஸ்யங்கள், கலை, கலாசார நிகழ்வுகள், சமையல் குறிப்புகள், மருத்துவம், மங்கையருக்கான அம்சங்கள் போன்றவை ஒளிஃ ஒலி வடிவ இணைப்புப் பெற்று, காணொளிகளாக உருவாக்கப்பட்டு, வீரகேசரி என்ற ஒற்றைக் குடையின் கீழ் இணையவெளியில் பதிவிடப்பட்டு, அவை யூடியூப், முகநூல், எக்ஸ் தளம், வட்ஸ்அப் முதலிய சமூக ஊடகங்களிலும் பகிரப்பட்டு, வாசகர்களின் காட்சிக்கெளியனாகவும் தோன்றுவது, வீரகேசரியின் மற்றுமொரு வளர்ச்சி. 

‘வீரகேசரி’ பற்றி 

திரு. பெ.பெரி. சுப்பிரமணியம் செட்டியார் அவர்களின் நினைவுப் பதிவு 

 ‘வீரகேசரி’யின் முதலாவது நாளிதழில், அதன் ஆசிரியரான திரு. பெ.பெரி. சுப்பிரமணியம் செட்டியார் அவர்கள், தனது ஆசிரியத் தலையங்கத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:

“தன்னால் இயன்ற அளவு பொது ஜனங்களுக்குத் தொண்டு செய்ய வேண்டுமென்ற அவாவினால் தூண்டப்பட்டே வீரகேசரி தோன்றுகிறான். அசாதாரண காரியங்களைச் செய்து முடிக்கும் திறன் பெற்றவனென அவன் வீறு பேசுத் தயாராயில்லை. நியாய வரம்பை எட்டுணையும் மீறாமல், நடுநிலைமையிலிருந்து, உலகத்தின் முன்னேற்றத்திற்கான இயக்கங்களையும் பிரச்சினைகளையும் பரிவுடன் ஆராய்ந்து, பொதுஜன அபிப்பிராயத்தை நல்ல முறையில் உருவகப்படுத்த வேண்டியதையே வீரகேசரி தன்னுடைய முதற்கடனாகக் கொண்டுள்ளான். இராஜீய, சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளை வீரகேசரி அவ்வப்போது ஆராய்வதிலிருந்து இவ்வுண்மையை நண்பர்கள் அறிந்துகொள்ளட்டும். 

தாராள சிந்தனையும், பரந்த நோக்கும், சமரஸ உணர்ச்சியும் பெற்ற வீரகேசரி, சமயச் சண்டைகளில், சாதிச் சமர்களில், வீண்கிளர்ச்சிகளில், கலந்துகொள்ள மாட்டான். நியாயமே அவன் வீற்றிருக்கும் பீடம், அவனது அபிப்பிராயங்கள் நீதியையே அடிப்படையாகப் பெற்றிருக்கும். பொதுஜனங்களுடைய உரிமைகளைப் பாதுகாக்கும் விஷயத்தில் தளராத ஊக்கமும், சலியாத உழைப்பும் அசைக்க முடியாத உறுதியும் காட்டி நமது கேசரி திகழ்வான்........................................................

மிகப் பெரிய பொறுப்பைத் தாங்கிக்கொண்டு, உயர்ந்த நோக்கங்களுடன் வெளிவரும் வீரகேசரி, தமிழ் மக்களின் ஆதரவையும், அன்பையும் நாடுகிறான்.”

வீரகேசரி பத்திரிகையை ஆரம்பித்ததன் பின்னணியில் உள்ள தனது நோக்கத்தை இவ்வாறு அவர் வெளிப்படுத்தியிருந்தார். 

பத்து வருடங்களுக்குப் பின்... 

1940 ‘வீரகேசரி’யில் சுப்பிரமணியம் செட்டியார்...

அதன் பிறகு, பத்து ஆண்டுகள் கழித்து, வீரகேசரியின் பத்தாவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு, 1940ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ஆம் திகதி வெளியான வீரகேசரி நாளிதழின் 6ஆம் பக்கத்தில், சுப்பிரமணியம் செட்டியார் எழுதிய “வீரகேசரியின் வளர்ச்சி வரலாறு” என்கிற கட்டுரைத் தொடர்ச்சியைக் காணக் கிடைத்தது.

அதில் அவர், “பத்து வருடங்களுக்கு முன்னர் விளையாட்டாக நான் இந்த 'வீரகேசரி’யை ஆரம்பித்தேன். அது இன்று மிகப் பெரிய அமைப்பாகவும், மதிக்கமுடியாத மாணிக்கமாகவும், ஒப்புயர்வற்ற தொண்டனாகவும் ஓங்கி வளர்ந்துவிட்டது. மனித வாழ்க்கை நிலையில்லாதது. இன்னும் சில வருடங்களோ, பல வருடங்களோ நான் இந்த ‘வீரகேசரி’யை நடத்திக்கொண்டு போகமுடியும். அதற்குப் பின்னர் ‘வீரகேசரி’யின் நிலை என்ன? ‘வீரகேசரி’யின் தொண்டும், ‘வீரகேசரி’யும் இலங்கையில் சாசுவதமாக இருக்க வேண்டும்” என்று கேசரி மீதான தனது அபிலாசையினை வெளிப்படுத்தியிருந்தார். 

அன்று, அவர் எண்ணியது, விரும்பியது, எதிர்பார்த்தது இன்று பல மடங்கு நிறைவேறியிருக்கிறது. ஒவ்வோர் ஆண்டாக முன்னகர்ந்து, 96ஆவது அகவையை எட்டியுள்ள ‘வீரகேசரி’ விரைவில் நூறு ஆண்டுகளைத் தொட்டு, இலங்கையின் தமிழ் நாளேடுகளில் நூற்றாண்டு நாயகனாக சாதனை படைக்கும் நாளை நோக்கி நாமும் கம்பீரமாக, சந்தோஷமாக பயணிப்போம்....!

வீரகேசரியின் நெஞ்சார்ந்த நன்றிகள் அனைவருக்கும் உரித்தாகட்டும்!

https://www.virakesari.lk/article/221915

  • கருத்துக்கள உறவுகள்

வீரகேசரி ....... எவ்வளவோ இன்னல்களையும் கடந்து தாக்குப் பிடித்து இவ்வளவு வந்ததே பெரிய விடயம் . ...... இன்னும் பலநூறு வருடங்கள் காண வேண்டும் என வாழ்த்துக்கள் .......... ! 🙏

  • கருத்துக்கள உறவுகள்

வீரகேசரியின் இணைய செய்திகள் சலிப்பை தந்தாலும், தொடர்ந்து நிலைத்து நீடிக்க வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"தரமான செய்திக்கு இடமுண்டு; அச்சு ஊடகத்துக்கு மதிப்பு குறையாது" - வீரகேசரி நிறுவன முகாமைத்துவ பணிப்பாளர் குமார் நடேசன்

Published By: VISHNU

07 AUG, 2025 | 08:54 AM

image

பத்திரிகை மற்றும் ஊடக துறையில் புதிய வடிவங்கள் உருவாகலாம், ஆனால் தரமான உள்ளடக்கம் ஒருபோதும் மக்களுக்கு பிடித்த பாணியிலிருந்து விலகாது. சரியான நேரத்தில் மற்றும் நம்பகமான அறிக்கைகள் ஒரு தவிர்க்க முடியாத செய்தியாக  தொடரும் என்று வீரகேசரி பத்திரிகையை வெளியிடும் எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளரும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் தலைவருமான குமார் நடேசன் தெரிவித்தார். 

வீரகேசரி பத்திரிகை நேற்று தனது 95 ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடியது. இதனை முன்னிட்டு கிராண்ட்பாஸில் அமைந்துள்ள வீரகேசரி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே குமார் நடேசன் இவ்வாறு குறிப்பிட்டார். 

‘‘நாம் உருவாக்கும் ஒவ்வொரு படைப்பும் மிக உயர்ந்த தரம் வாய்ந்ததாகவும், நுண்ணறிவுள்ளதாகவும், கவனமாக வடிவமைக்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதிசெய்து, பத்திரிகைத் துறையில் சிறந்து விளங்க வேண்டும்’’ என்றும் குறிப்பிட்டார் குமார் நடேசன்.

1930 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட வீரகேசரி பத்திரிகை 95 வருட காலமாக பல சவால்களுக்கு மத்தியில் வெற்றிநடை போட்டு வருவதுடன் நூற்றாண்டை நோக்கி சாதனை பயணத்தை முன்னெடுக்கிறது. 

அச்சுப் பத்திரிகைகளை இன்னும் டிஜிட்டல் ஊடகங்களை விட அதிக நம்பகத்தன்மை கொண்டதாக மக்கள் கருதுகின்றனர். போலி  செய்திகள் அதிகம் பரவும் இன்றைய சூழலில், நம்பகமான ஆதாரமாக அச்சு ஊடகங்கள் பார்க்கப்படுகின்றன.

இந்நிலையில் இலங்கையின் கட்டமைப்பு மற்றும் அதன் இயங்குதன்மை தொடர்பில் தனது உரையில் சுட்டிக்காட்டிய குமார் நடேசன், நம்பகமான ஊடகங்களின் தேவை முக்கியமானதாகவுள்ளது என்று குறிப்பிட்டார்.

‘‘இலங்கை போன்ற ஒரு நாட்டில், அதன் சொந்த கடினமான தேசிய பிரச்சினைகளுடன் போராடி வரும் நிலையில், நம்பகமான ஊடகங்களின் தேவை முக்கியமானது மற்றும் அவசியமானதாக இருக்கிறது’’ என்று கூறினார் எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தின் தலைவர் குமார் நடேசன்.

மேலும் உலகளாவிய ரீதியில் அச்சுப் பத்திரிகை துறை வீழ்ச்சியடையவதாக தென்பட்டாலும் அச்சுப் பதிப்புக்கு எப்போதும் ஒரு இடம் இருக்கும் என்றும் உண்மை மற்றும் பக்கச்சார்பற்ற தன்மையை நோக்கி மக்கள் எப்போதும் நம்பிக்கையுடன் இருப்பார்கள் என்றும் குமார் நடேசன் எடுத்துக்கூறினார்.  

‘‘உண்மை மற்றும் பாரபட்சமற்ற தன்மைக்கான எங்கள் அர்ப்பணிப்புதான் நம்பிக்கையை உருவாக்கி நிலைநிறுத்துவதற்கான அடித்தளமாக உள்ளது. அச்சுக்கு எப்போதும் ஒரு இடம் இருக்கும் என்று நான் நம்புகிறேன்’’ என்று வீரகேசரி பத்திரிகை நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் குமார் நடேசன் எடுத்துரைத்தார்.

இந்த நிகழ்வில் குமார் நடேசன் மேலும் உரையாற்றுகையில்,

இன்று, ஆகஸ்ட் 6ஆம் திகதி உண்மையிலேயே ஒரு முக்கியமான நிகழ்வைக் கோடிட்டுக் காட்டுகிறது. வீரகேசரி பத்திரிகையின் 95ஆவது ஆண்டு நிறைவை நாம் கொண்டாடுகிறோம். தொண்ணூற்றைந்து ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1930 ஆம் ஆண்டு இதே நாளில், எமது வீரகேசரி செய்தித்தாளின் முதல் பதிப்பு அச்சகத்தில் வெளியிடப்பட்டது.

கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு சேவையைக் கொண்டாடும் வகையில், இன்று நாம் இங்கு கூடியிருக்கிறோம். நீடித்த தொலைநோக்கு, அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் உறுதியான வார்த்தையின் சக்திக்கு இது ஒரு சான்றாகும்.

வீரகேசரி வெற்றியின் உண்மையான அளவுகோல் அதன் இலாபத்தின் அளவைக் கொண்டு மட்டுமே வரையறுக்கப்பட்டதில்லை. அவ்வாறு ஒருபோதும் அந்த அளவுகோல் வரையறுக்கப்படாது.

மாறாக, எங்கள் வாசகர்களிடமிருந்து நாம் பெரும் அசைக்க முடியாத நம்பிக்கை, சமூகங்களுக்கிடையில் எங்கள் அணுகலின் அகலம் மற்றும் இலங்கையிலும் உலகளாவிய புலம்பெயர்ந்தோர் மட்டத்தில் தமிழ் பேசும் மக்களின் வாழ்க்கையில் நாம் ஏற்படுத்தும் ஆழமான தாக்கம் என்பவற்றில் எங்கள் பத்திரிகையின் மரபு உருவாகியுள்ளது.

எங்கள் பயணம் நீண்டது மற்றும் தனித்துவமானதாக இருக்கிறது. ஆனால் எங்கள் பார்வை உறுதியாக நிலைநிறுத்தப்பட வேண்டும். கடந்த 95 ஆண்டுகளை நாங்கள் கொண்டாடுவது மட்டுமல்ல; அடுத்த 5 ஆண்டுகளுக்கான அடித்தளத்தை நாம் அமைத்து வருகிறோம். நமது நூற்றாண்டு விழாவை நோக்கி பயணிக்கிறோம். உண்மையில், அதற்குப் பிந்தைய தலைமுறைகளுக்கு நாம் அதனை பெற்றுக் கொடுக்க வேண்டும்.

இது நமது பகிரப்பட்ட மரபாகும். இது உங்களுடையதும் என்னுடையதுமாகும். இது - வளர்ப்பதற்கும் விரிவுபடுத்துவதற்குமானதாகும்.

இந்த தொடர்ச்சியான பொருத்தமான தன்மையை நாம் எவ்வாறு உறுதி செய்வது? இலங்கையில் தமிழ் பேசும் மக்களுக்கு நம்பகமான நங்கூரமாக நமது உள்ளார்ந்த பலங்களை உருவாக்குவதன் மூலம் இதனை செய்யலாம்.

நாம் உருவாக்கும் ஒவ்வொரு படைப்பும் மிக உயர்ந்த தரம் வாய்ந்ததாகவும், நுண்ணறிவுள்ளதாகவும், கவனமாக வடிவமைக்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதிசெய்து, பத்திரிகைத் துறையில் சிறந்து விளங்க வேண்டும்.

மேலும், நமது செய்திகளையும் கண்ணோட்டங்களையும் உலகளாவிய தமிழ் புலம்பெயர்ந்தோருக்கு எடுத்துச் சென்று, அவர்களின் வேர்களுடனும், முக்கியமான பிரச்சினைகளுடனும் இணைக்கும் வகையில், எமது குரலை விரிவுபடுத்த வேண்டியது அவசியமாகும்.

இன்றும் கூட, வீரகேசரி ஒரு செய்திப் பத்திரிகையையும் தாண்டி ஒரு ஆழமான நோக்கத்தைக் கொண்டுள்ளது. எங்கள் பத்திரிகையாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் இந்த நிறுவனத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் நம்பகமான குரலாக உள்ளனர்.

சிறுபான்மை தமிழ் பேசும் மக்களை ஒன்றிணைக்கும், அவர்களுக்குத் தகவல் அளிக்கும், கல்வி கற்பிக்கும், இணைக்கும் உயர்தர வெளியீட்டை உருவாக்குவதே எங்கள் நோக்கமாகும்.

இன்றைய பிரச்சினைகள் மற்றும் விவகாரங்களை நீங்கள் தெளிவுபடுத்துகிறீர்கள். மேலும் சிக்கலான உலகத்தைப் பற்றிய புரிதலை எங்கள் வாசகர்களுக்கு வழங்குகிறீர்கள். விசேடமாக முக்கியமான உலகளாவிய முன்னேற்றங்கள் குறித்து அவர்களுக்குத் தெரியப்படுத்துகிறீர்கள்.

இலங்கை போன்ற ஒரு நாட்டில், அதன் சொந்த கடினமான தேசிய பிரச்சினைகளுடன் போராடி வரும் நிலையில், நம்பகமான ஊடகங்களின் தேவை முக்கியமானது மற்றும் அவசியமானதாக இருக்கிறது.

எமது நாட்டின் தேசியத் தலைவர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மக்களுக்கும் சமமான கருத்துகளையும் நல்ல ஆலோசனைகளையும் வழங்குவதில் எங்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.

உண்மை மற்றும் பாரபட்சமற்ற தன்மைக்கான எங்கள் அர்ப்பணிப்புதான் நம்பிக்கையை உருவாக்கி நிலைநிறுத்துவதற்கான அடித்தளமாக உள்ளது.

கவனயீர்ப்பு அதிகரித்து வரும் இந்த யுகத்தில், குறுகிய கானொளிகள் மற்றும் பரபரப்பான தலைப்புச் செய்திகள் மட்டுமே மேலோங்கி நிற்கின்றன என்று சிலர் கூறலாம். ஆனால், நான் அந்தக் கருத்துடன் உறுதியாக உடன்படவில்லை.

ஒரு விடயத்தின் உள்ளடக்கம், விதிவிலக்கான தரம், உண்மையான நுண்ணறிவு, அழகாக எழுதப்பட்டிருத்தல் மற்றும் ஆழமான பகுப்பாய்வு என்பன நம்பிக்கையான பார்வையாளர்களை ஈர்க்கவும் தக்கவைக்கவும் முடியும். இவை  மறுக்க முடியாத சக்தியைக் கொண்டுள்ளன.

புதிய வடிவங்கள் உருவாகலாம், ஆனால் தரமான உள்ளடக்கம் ஒருபோதும் மக்களுக்கு பிடித்த பாணியிலிருந்து விலகாது.

சரியான நேரத்தில் மற்றும் நம்பகமான அறிக்கைகள் ஒரு தவிர்க்க முடியாத செய்தியாக  தொடரும்.

இந்த வாக்குறுதிகளை தொடர்ந்து நிறைவேற்றுவதற்கு, தலையங்கம், தயாரிப்பு, தொழில்நுட்பம் மற்றும் வணிகம் என ஒவ்வொரு செயல்பாடுகளிலும் ஒரு வலுவான, ஒருங்கிணைந்த மற்றும் திறமையான குழு தேவைப்படுகிறது.

வலுவான மற்றும் சக்திவாய்ந்த ஊடக சக்தியாக மாறுவதற்கான எமது கூட்டு கனவை அடைய, நீங்கள் ஒவ்வொருவரும் தெளிவான குறிக்கோள் உணர்வு, அசைக்க முடியாத உறுதிப்பாடு மற்றும் பிரகாசிக்கும் ஆர்வம் ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும்.

அச்சுக்கு எப்போதும் ஒரு இடம் இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, வீரகேசரி இன்று இருப்பதை விட மிகவும் வித்தியாசமாகத் தோன்றலாம். ஒருவேளை வடிவம், பாணி, தொனி அல்லது அளவு கூட வித்தியாசமாக தோன்றலாம். ஆனால் இது ஒரு பலவீனம் அல்ல. மாறாக தழுவல் மற்றும் பரிணாமமாகும்.

இருப்பினும், எங்கள் முக்கிய நோக்கம் நிலையானதாக இருக்க வேண்டும். எதிர்கால தலைமுறை வாசகர்களுக்கு பொருத்தமானதாகவும் பயனுள்ளதாகவும் இருப்பது அவசியமாகும்.

இறுதியாக, வீரகேசரி குடும்பமாகிய நாம் மட்டுமே இந்த அவசியமான மாற்றங்களை ஏற்றுக்கொண்டு முன்னெடுக்க முடியும். ஏற்கனவே உள்ள வடிவங்கள் மற்றும் பணி செயல்முறைகளை நாம் மறுபரிசீலனை செய்ய முடியும் என்றார்.

இதேவேளை  அச்சு பத்திரிகை சவால்களை எதிர்கொள்கின்ற நிலையில் அது பரிணாம வளர்ச்சி அடையும்" என்று  ஆய்வுகள் கூறுகின்றன. அச்சுப் பத்திரிகை அதன் பாரம்பரிய வடிவத்தில் பல சவால்களை எதிர்கொண்டாலும், அது முழுமையாக முடிந்துவிடாது. மாறாக, புதிய யுகத்திற்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொண்டு, புதிய வடிவங்களில் தனது இருப்பை நிலைநிறுத்தும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.  சமூக ஊடகங்களில் விரைவான மற்றும் சுருக்கமான செய்திகள் மட்டுமே கிடைக்கின்றன. ஆனால், ஆழமான பகுப்பாய்வு, விரிவான கட்டுரைகள் மற்றும் புலனாய்வு செய்திகளை அச்சு ஊடகங்களே தொடர்ந்து வழங்குகின்றன.

https://www.virakesari.lk/article/222004

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.