Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

12 AUG, 2025 | 10:40 AM

image

'சர்வதேச யானைகள் தினம்' இன்று செவ்வாய்க்கிழமை (12) கொண்டாடப்படுகிறது.

உலகளவில் யானைகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை ஊக்குவிப்பதற்காக 2012 ஆம் ஆண்டு சர்வதேச யானைகள் தினம் அறிவிக்கப்பட்டது.

ஆப்பிரிக்க மற்றும் ஆசிய காட்டு மற்றும் வளர்ப்பு யானைகளைப் பாதுகாப்பது, யானை வேட்டையாடுதல் மற்றும் கடத்தலைத் தடுப்பது, யானைகளின் வாழ்விடங்களைப் பாதுகாப்பது மற்றும் வளர்ப்பு யானைகள் சுதந்திரமாக வாழ முடியும் என்பதை உறுதி செய்வது இதன் நோக்கமாகும்.

நாட்டில் யானை - மனித மோதலைத் தடுப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் அடங்கிய அறிக்கை  அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய இணைப்பாளர், சுற்றாடல் நிபுணர் கலாநிதி ரவீந்திர காரியவசம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

https://www.virakesari.lk/article/222372   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'குட்டியை விடவும் நட்புக்கு முன்னுரிமை' - 55 ஆண்டுகளாக ஒன்றாகவே வலம் வரும் இரு பெண் யானைகளின் கதை

பாமா-காமாட்சி யானைகள், முதுமலை, தெப்பக்காடு யானைகள் முகாம், உலக யானைகள் தினம்

பட மூலாதாரம், MUDUMALAI TIGER RESERVE

படக்குறிப்பு, இணை பிரியா தோழிகளான பாமா-காமாட்சி

கட்டுரை தகவல்

  • நந்தினி வெள்ளைச்சாமி

  • பிபிசி தமிழ்

  • 12 ஆகஸ்ட் 2025

    புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

"எங்கு சென்றாலும் ஒன்றாகத்தான் செல்லும். அருகருகே நிற்க வைக்காமல் உணவு கொடுத்தால் பிடிக்காது. 55 ஆண்டுகளுக்கும் மேலாக இரண்டும் இணைபிரியா தோழிகளாக உள்ளன. ஒன்றுக்கொன்று துணையாகவும் வழிகாட்டியாகவும் திகழ்கின்றன."

முதுமலையில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக நெருங்கிய தோழிகளாக உள்ள காமாட்சி - பாமா யானைகளின் நட்பு குறித்து இவ்வாறு விவரித்தார், முதுமலை புலிகள் காப்பகத்தின் துணை இயக்குநரான சி வித்யா.

இரு யானைகளின் நட்பும் பலரையும் ஆச்சர்யப்படுத்துகிறது. சமீபத்தில் தமிழ்நாடு வனத்துறையின் கூடுதல் முதன்மை செயலாளர் இவ்விரு யானைகள் குறித்த காணொளியை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்ததையடுத்து, அந்த யானைகள் குறித்து அறிய வேண்டும் என்ற ஆர்வம் பலருக்கு அதிகரித்தது.

நட்பை வெளிப்படுத்தும் அவ்விரு யானைகளின் செயல்கள் பலவும் சுவாரஸ்யத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்துவதாக உள்ளன.

உலக யானைகள் தினமான இன்று (ஆக. 12) இந்த யானைகளின் நட்பு குறித்த சுவாரஸ்யமான தகவல்களை அறியலாம்.

1960களில் இருந்தே காமாட்சி, பாமா இரு யானைகளும் தெப்பக்காடு யானைகள் முகாமில் இருந்ததை புகழ்பெற்ற கால்நடை மருத்துவரான கிருஷ்ணமூர்த்தி பதிவு செய்திருப்பதாகக் குறிப்பிடுகிறார், வன உயிரின ஆர்வலரான 'ஓசை' காளிதாசன். இவர் 'ஓசை' எனும் பெயரில் சூழலியல் அமைப்பை நடத்திவருகிறார்.

1960களில் இருந்தே இரு யானைகளும் முகாமில் இருந்தாலும் அதன் வயது குறித்து மாறுபட்ட தகவல்களே கிடைக்கப் பெறுகின்றன. சுப்ரியா சாஹுவின் பதிவின்படி, பாமாவுக்கு 75 வயது, காமாட்சிக்கு 65 வயது.

'ஒன்றாகவே சாப்பிடும்'

பாமா-காமாட்சி யானைகள், முதுமலை, தெப்பக்காடு யானைகள் முகாம், உலக யானைகள் தினம்

பட மூலாதாரம், MUDUMALAI TIGER RESERVE

படக்குறிப்பு, 'ஒன்றை விட்டு ஒன்று தனித்து இருக்காது'

1960ம் ஆண்டு வாக்கில் காமாட்சியும் 1963ம் ஆண்டில் பாமாவும் ஆனைமலையிலிருந்து இந்த முகாமுக்கு அழைத்து வரப்பட்டதாகக் கூறுகிறார் 'ஓசை' காளிதாசன்.

ஆசியாவின் மிகவும் பழமையான யானை முகாம்களுள் ஒன்றான இந்த முகாமில், சுமார் 30 யானைகள் உள்ளன. அவற்றில் தனித்துவமான பாமா-காமாட்சியின் நட்பு குறித்து விளக்கினார், சி வித்யா.

"இந்த முகாமில் காலை, மாலை வேலைகளில் யானைகளுக்கு உணவு வழங்கப்படும். பாமா-காமாட்சி யானைகளை அருகருகே நிற்க வைத்தால்தான் இரண்டும் சாப்பிடவே வரும். ஒரு யானையை முகாமுக்கு அழைத்து வராவிட்டாலோ அல்லது கொஞ்சம் தள்ளி நிற்க வைத்தாலோ மற்றொரு யானை சாப்பிட வராது. தன் அருகே தோழி இல்லையென்றால், ஏதேனும் சத்தம் எழுப்புவது அல்லது தலையை மறுப்பது போல அசைப்பது என பல்வேறு சமிக்ஞைகளால் தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தும். மற்றபடி இரண்டும் மிகவும் கனிவான யானைகள். பல ஆண்டுகளுக்கு முன்பு உள்ள ஆவணங்களை எடுத்துப் பார்த்தாலும் இந்த யானைகளின் நட்பு இப்படித்தான் இருந்திருக்கிறது." என்கிறார் சி வித்யா.

இந்த முகாம்களில் மற்ற யானைகளை போல இந்த இரு யானைகளுக்கு சங்கிலி போடப்படுவதில்லை. எனவே, அவற்றால் தான் விரும்பிய நேரத்துக்கு மேய்ச்சலுக்கு சுதந்திரமாக, ஒன்றாக சுற்றித் திரிய முடியும்.

"காலை உணவுக்குப் பின் இரண்டும் மேய்ச்சலுக்கு சென்றுவிடும். பின் மீண்டும் இரவு நேரத்தில் காட்டுக்குள் ஒன்றாக திரியும். காமாட்சி யானையின் 3 குட்டிகள் இதே முகாமில் உள்ளன. ஆனால், அவற்றுடன் கூட காமாட்சி யானை அவ்வளவாக நேரம் செலவழிக்காது, பாமாவுடன்தான் இருக்கும்." என்கிறார் வனத்துறை அதிகாரியான வித்யா.

சுப்ரியா சாஹுவும் தன் பதிவில், "இரண்டு யானைகளும் ஒன்றாகவே சாப்பிடும், ஒன்றாகத்தான் இருக்கும். கரும்பு கொடுத்தால் கூட இணைந்து சாப்பிடவே இரண்டும் விருப்பப்படும்" என பதிவிட்டுள்ளார்.

சுப்ரியா சாஹு, பாமா-காமாட்சி யானைகள், முதுமலை, தெப்பக்காடு யானைகள் முகாம், உலக யானைகள் தினம்

பட மூலாதாரம், SUPRIYA SAHU IAS/X

படக்குறிப்பு, அன்பு, விசுவாசம், நீண்ட கால நட்பின் அடையாளமாக திகழ்வதாக தன் பதிவில் கூறியுள்ளார் சுப்ரியா சாஹு

தோழிகளானது எப்படி?

இந்த பெண் யானைகளிடையே இப்படியொரு பிணைப்பு எப்படி ஏற்பட்டது?

இயல்பாகவே பெண் யானைகளுக்குள் பெரும் பிணைப்பு ஏற்படும் என்கிறார், யானைகள் ஆய்வாளரான பி. ராமகிருஷ்ணன். ஊட்டி அரசு கலைக் கல்லூரியில், காட்டுயிர் உயிரியல் துறையில் உதவிப் பேராசிரியராக இருக்கும் பி.ராமகிருஷ்ணன், 20 ஆண்டுகளுக்கும் மேலாக யானைகளைப் பற்றி ஆய்வு செய்து வருகிறார். யானைகளின் வழித்தடங்கள் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார் ராமகிருஷ்ணன்.

"பெண் யானைகளிடையே எப்போதும் நெருக்கமும் பிணைப்பும் அதிகம். ஓர் ஆண் யானை தன் 14-15 வயதில் வயதுவந்த பின்பு, அதன் குடும்பத்தில் உள்ள வயது முதிர்ந்த பாட்டி யானை, அந்த ஆண் யானையை குடும்பத்தை விட்டு வெளியேற்றிவிடும். பெண் யானைகள் குடும்பத்துடனேயே இருக்கும். மனிதர்களிடத்தில் பெரும்பாலான சமூகங்களில் வயதுவந்த பின்பு, திருமண உறவின்போது பெண்கள் தான் வீட்டிலிருந்து வெளியேறுவார்கள். ஆனால், யானைகளிடத்தில் இது வித்தியாசமானது. அதனாலேயே பெண் யானைகள் கூட்டமாகவே இருக்கும்." எனக் கூறுகிறார் பி. ராமகிருஷ்ணன்.

ஆண் யானைகள் பெண் யானைகளுடன் ஒப்பிடுகையில் தனித்து இருக்கும் என்றும், வேறு கூட்டத்தில் உள்ள ஆண் யானையுடன் சண்டையிட்டுதான் இணையை அடையும் என்றும் கூறுகிறார் அவர்.

இதே கருத்தை வலியுறுத்தும் 'ஓசை' காளிதாசன், "யானைகள் தாய்வழிச் சமூகத்தைக் கடைபிடிப்பவை. குடும்பத்தை பெண் யானைகள் தான் வழிநடத்தும். எனவே தான் இயல்பாகவே பெண் யானைகளிடையே நட்புறவு ஏற்படுகிறது. பாமா-காமாட்சி யானை சில நாட்களில் மேய்ச்சலுக்கு செல்லும்போது இரு நாட்கள் கழித்துகூட முகாமுக்கு திரும்பி வரும். தும்பிக்கைகள் மூலம் தொட்டு அன்பை வெளிப்படுத்தும். ஆண் யானைகளிடையே பொதுவாக அவ்வளவு பிணைப்பு இருக்காது." என்றார்.

ஓசை காளிதாசன் , பாமா-காமாட்சி யானைகள், முதுமலை, தெப்பக்காடு யானைகள் முகாம், உலக யானைகள் தினம்

பட மூலாதாரம், OSAI KALIDASAN/FACEBOOK

படக்குறிப்பு, 'பெண் யானைகள் தான் வழிநடத்தும்' - ஓசை காளிதாசன்

முதுமலையில் தன்னுடைய ஆய்வு படிப்பின்போது (2000-2007) இதேபோன்று கௌரி - ரதி என இரண்டு யானைகள் இணைபிரியா தோழிகளாக இருந்ததை நினைவுகூர்கிறார் ராமகிருஷ்ணன்.

பெண் யானைகள் தோழிகளாக இருக்கும்போது, பெரும்பாலும் மனிதர்களின் நடத்தையை போன்றே யானைகளின் செயல்பாடுகளும் இருக்கும் என அவர் விளக்கினார்.

"மனிதர்களில் ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்தால், எப்படி வீட்டிலுள்ள மற்ற பெண்கள் குழந்தையை கவனித்துக்கொள்வார்களோ, அதேபோன்று பெண் யானைகள், குறிப்பாக வயதான யானை சேர்ந்து ஒரு குட்டி யானையை பராமரிக்கும். அந்த குட்டி யானையை புலி, சிறுத்தை போன்றவை தாக்காமல் பாதுகாக்கும். குட்டி யானைக்கு உணவளிப்பது மட்டுமே தாய் யானையின் வேலையாக இருக்கும். மற்றபடி, பல இடங்களுக்கு அழைத்துச் செல்வதெல்லாம் மற்ற பெண் யானைகள் தான்." என பெண் யானைகளுக்குள் இயல்பாகவே இருக்கும் பந்தம் குறித்து கூறினார் ராமகிருஷ்ணன்.

1960களில் ஓர் ஆண் காட்டு யானையை பிடிக்க, பெண் யானைகள் பயன்படுத்தப்படும் (decoy method) என்றும் அச்சமயத்தில் நிறைய பெண் யானைகள் முதுமலை யானைகள் முகாமுக்கு அழைத்து வரப்பட்டதாகவும் கூறுகிறார் ராமகிருஷ்ணன். அதன் ஒரு பகுதியாகவே பாமாவும் காமாட்சியும் இந்த முகாமுக்கு வந்திருக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.

பாமா-காமாட்சி யானைகள், முதுமலை, தெப்பக்காடு யானைகள் முகாம், உலக யானைகள் தினம்

பட மூலாதாரம், SUPRIYA SAHU IAS/X

படக்குறிப்பு, "பாமாவுக்கு கண் புரை இருப்பதால், காமாட்சி தான் அதை எல்லா இடங்களுக்கும் அழைத்துச் செல்லும்."

"பாமா-காமாட்சி என இரு யானைகளுக்குமே வயது முதிர்வால் ஏற்படும் நோய்கள் உள்ளன. பாமாவுக்கு 70 வயதை கடந்துவிட்டது. காமாட்சி அதைவிட இளையது. பாமாவுக்கு கண் புரை இருப்பதால், காமாட்சி தான் அதை எல்லா இடங்களுக்கும் அழைத்துச் செல்லும். அதனால் தான் இரண்டுக்கும் பிணைப்பு அதிகமாக இருக்கிறது. வயதாக ஆக மனிதர்களுக்கு எப்படி துணை தேவைப்படுகிறதோ, அதேபோன்றுதான் யானைகளுக்கும். இரண்டு யானைகளும் தனித்து எங்கும் செல்லாது," என காமாட்சி-பாமா யானைகள் குறித்து தான் கவனித்ததை சுவாரஸ்யமாக தெரிவித்தார் ராமகிருஷ்ணன்.

இரண்டு யானைகளுமே மெனோபாஸ் நிலையை அடைந்தவை என்பதால், கண் பார்வை உள்ளிட்ட பல்வேறு நோய்கள் இயல்பாகவே உள்ளன.

வாசனை மூலமே அடையாளம்

கண் பார்வை உள்ளிட்ட பிரச்னைகள் இருக்கும் நிலையில், பாமா யானை, காமாட்சியை எப்படி அடையாளம் காண்கிறது?

"யானைகளுக்கு அதன் வாசனைதான் தொடர்புக்கான அம்சம். இரவில் இரு யானைகளையும் மேய்ச்சலுக்கு அனுப்பும்போது, ஒன்றையொன்றின் வாசனை மூலமே பின் தொடர்ந்து செல்லும், அதன்மூலமே அடையாளம் கண்டுவிடும். மற்ற விலங்குகளின் ஆபத்து அல்லது தண்ணீர் இருக்கும் இடம் என எங்கெல்லாம் பாதுகாப்பின்மையை உணருகின்றனவோ, அங்கெல்லாம் இரு யானைகளும் இன்னும் நெருக்கத்துடனேயே சுற்றித் திரியும்." என கூறுகிறார் ராமகிருஷ்ணன்.

யானைகளில் கண்ணுக்கும் காதுக்கும் இடையே டெம்போரல் கிளாண்ட் (temporal gland) எனும் சுரப்பி இருக்கும். அதை நுகர்ந்தே இரு யானைகளும் பார்வைத் திறன் குறைந்திருந்தாலும் ஒன்றையொன்று அடையாளம் கண்டுவிடும் என்கிறார் ராமகிருஷ்ணன்.

முகாமில் உணவு கொடுத்த பின் ஒரு யானை முன்னே சென்றாலும் மற்றொன்றுக்காக காத்திருக்கும், அதை பார்ப்பதே மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என்றும் பகிர்ந்துகொண்டார் அவர்.

"தங்களின் தும்பிக்கைகளை இணைத்துக்கொண்டே தான் இரண்டும் இருக்கும்." என்கிறார் ராமகிருஷ்ணன்.

'வலி கூட புரியும்'

இந்த இரு யானைகளும் மகிழ்ச்சியை மட்டுமல்ல, தங்களின் வலியை கூட புரிந்துகொண்டு பயணிப்பதாக கூறுவது ஆச்சர்யத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

"இரண்டில் ஏதேனும் ஒரு யானைக்கு வலி இருந்தால் ஓரிடத்திலேயே நின்றுவிடும் அல்லது மெதுவாக நகரும். அச்சமயங்களில் மற்றொரு யானை அதை தொட்டுப் பார்க்கும். வலியில் இருக்கும் யானையின் ஹார்மோன் மாறுவதால், அதன் வாசனையை நுகர்ந்து மற்றொரு யானை வலியில் இருக்கிறது என்பதை உணரும். மனிதர்களால் கேட்க முடியாத ஒலி அலைகள் மூலமும் யானைகள் தொடர்புகொள்ளும். ஒரு யானை வலியில் இருந்தால், மன அழுத்த ஹார்மோன்கள் வெளிப்படும். அப்போது, அந்த யானையின் சிறுநீரை நுகரும்போது மற்றொரு யானையால் அதை உணர முடிகிறது. யானை ஒரு சமூக விலங்கு என்பதால், மனிதர்களுடன் ஒத்த பண்புகள் அவற்றிடம் அதிகம்." என தெரிவித்தார் ராமகிருஷ்ணன்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cdxyq2px14ko

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.