Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு முகப்பட வேண்டிய சூழல்

August 16, 2025

 — கருணாகரன் —

முல்லைத்தீவு – முத்தையன்கட்டில் இராணுவத்தினரோடு ஏற்பட்ட பிரச்சினையில் கபில்ராஜ் என்ற இளைஞர் மரணமடைந்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடையடைப்புப் போராட்டத்துக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இந்தப் போராட்டத்துக்கு தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆதரவைத் தெரிவித்துள்ளது. பொது அமைப்புகளும் தமது ஆதரவை வழங்குவதாகத் தெரிகிறது. இதற்கான முழுமையான ஆதரவை எல்லோரும் வழங்க வேண்டும் என்று தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே. சிவஞானம் கோரியுள்ளார்.

சிவஞானத்தின் கோரிக்கை, வடக்குக் கிழக்குப் பகுதிகளில் மக்கள் வாழிடங்களில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரை விலக்க வேண்டும் என்பதேயாகும். அதற்கு அவர் இந்தக் கொலைச் சம்பவத்தோடு ஒரு மக்கள் எழுச்சியைக் கோருகிறார். இதே கருத்துப்படத்தான் தமிழரசுக்  கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும் கருத்துத் தெரிவித்திருக்கிறார். 

இந்தப் போராட்டம் தொடர்பாக பொது அமைப்புகளுடன் பேசிய தமிழரசுக் கட்சியின் செயலாளர் சுமந்திரன், “இராணுவம் அல்லது படையினர், மக்கள் வாழிடங்களில் நிலைகொண்டிருப்பதால்தான் இந்த மாதிரியான சம்பவங்களும் பிறழ்வு நடவடிக்கைகளும் உருவாகுவதற்கான சூழல் ஏற்படுகிறது. அத்துடன், அரசியல் தீர்வைப் பற்றி ஆட்சியாளர்கள் சிந்திக்காமல் இருப்பதற்கும் அதைத் தவிர்ப்பதற்கும்  படைகளின் நிலை கொள்ளல் (படை ஆதிக்கம்) பிரதானமான காரணமாக உள்ளது. மக்களுடன் படைகளை நெருக்கமடைய வைப்பதன் மூலம் இராணுவப் பிரசன்னத்தை அல்லது படைகள் நிலைகொள்வதை நியாயப்படுத்துவதற்கு அரசு முயற்சிக்கிறது. நீண்ட காலமாக மக்கள் வாழிடங்களில் படையினர் இருக்கும்போது மக்களுக்கும் படையினருக்குமிடையில் பல வழிகளிலும் உறவு ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகரிக்கும். சந்தை, கடை, அலுவலங்கள், வழி, தெரு எனச் சகல இடங்களிலும் படையினர் புழங்கும்போது மக்களுக்கும் படையினருக்குமிடையில் உறவு ஏற்படும். இது படையினரின் பிரசன்னத்தை (இராணுவ மேலாதிக்கத்தை) பற்றிய தெளிவின்மையை மக்களிடத்திலே ஏற்படுத்தும்“ என்ற அடிப்படையில் இந்த விடயத்தைப் பார்க்க வேண்டும் என்ற சாரப்படக் கூறியுள்ளார். 

ஆக, இந்தக் கடையடைப்புப் போராட்டம், இராணுவத்தை அல்லது படைகளை விலக்குவதையே பிரதானமாகக் கொண்டுள்ளது. அது ஒரு முக்கியமான விடயமே. 

யுத்தம் முடிந்து 16 ஆண்டுகள் கடந்த பிறகும் அரசியற் தீர்வைப் பற்றி நேர்மையாகச் சிங்களத் தரப்புகள் பேசவில்லை. சிந்திக்கவில்லை. அதற்காக முயற்சிக்கவே இல்லை. பதிலாக படை மேலாதிக்கத்தின் மூலமாக வடக்குக் கிழக்கு வாழ் தமிழ் முஸ்லிம் மக்களைக் கையாளலாம் என்று அரசு சிந்திக்கிறது. உண்மையும் அதுதான். படைமேலாதிக்கத்தில் ஆட்சியாளர்களுக்கு உள்ள நம்பிக்கையே அரசியற் தீர்வைப் பற்றிய அக்கறையின்மையாகும். 

2009 க்கு முன்னர் இராணுவத்தினரைக் குறித்து மக்களிடம் இருந்த உணர்வு வேறு. இப்பொழுது உள்ள உணர்வு வேறு. அப்பொழுது படையினரைக் குறித்த அச்சமே அனைவரிடத்திலும் இருந்தது. படைகளுக்கும் அப்படித்தான். அவர்கள் எல்லோரையும் சந்தேகித்தனர். ஆக இரண்டு தரப்புக்குமிடையில் இடைவெளி இருந்தது. 

இந்த இடைவெளியை இல்லாதொழிக்கவே அரசாங்கம் முயற்சித்து வருகிறது. இதற்காக அது படையினரைப் பொது அரங்கில் இறக்கியுள்ளது. உணவுக் கடைகள், சலூன்கள், தையற்கடை  போன்றவற்றைப் படையினர் நடத்துகிறார்கள். மட்டுமல்ல, மக்களுடைய காணிகளை அபகரித்து, அங்கே மரக்கறி உற்பத்தி செய்து சந்தைகளில் விற்பனை செய்கின்றனர். தென்னைப் பயிர்ச்செய்கை, நகர அழகு படுத்தல், சிரதானங்கள், இரத்ததானம் செய்தல் என சனங்களோடு ஐக்கியமாகும் உபாயங்களைச் செய்து கொண்டிருக்கின்றனர். சில இடங்களில் வறிய மக்களுக்கு வீடுகளைக் கட்டிக் கொடுக்கிறோம் என்ற பேரில் சில வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. விளையாட்டுக் கழகங்கள் சிலவற்றுக்கு சில உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இப்படி எந்தெந்த வகையில் சனங்களுக்குள் ஊடுருவ முடியுமோ அதையெல்லாம் செய்து கொண்டுள்ளனர். இதையெல்லாம் படைத்தரப்பு தன்னிச்சையாகச் செய்யவில்லை. இதற்குப் பின்னால் அரசியல் நிகழ்ச்சி நிரல் உண்டு. அதைக் குறித்தே நாம் தொடர்ந்து பேசி வந்திருக்கிறோம். இப்போது – இந்தச் சந்தர்ப்பத்திலும் பேச வேண்டியுள்ளது. 

மக்களுடன் படைகள் பல வகையிலும் உறவாடும்போது ஒரு நெருக்கமான உணர்வு மக்களுக்கு ஏற்படும். அவர்கள் பிறகு படையினரை ஒரு மேலாதிக்கச் சக்தியாகப் பார்க்க மாட்டார்கள் என்று அரசாங்கம் எண்ணுகிறது. இதில் அரசாங்கம் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளது. ஏனென்றால் கிராமங்களில் உள்ள சாதாரண மக்கள் மட்டுமல்ல, படித்தவர்கள், அரசியல் செயற்பாட்டில் உள்ளவர்கள், இலக்கியத் துறையில் இயங்குகின்றவர்கள், வணிகர்கள் எனப் பலரும் படைத்தரப்போடு தனிப்பட்ட ரீதியிலும் பழகும் அளவுக்கும் உறவை வளர்த்துக் கொள்ளும் அளவுக்கும் நிலைமை வளர்ச்சி அடைந்துள்ளது. சில இடங்களில் கொண்டாட்டங்களில் படையினர் கலந்து கொள்ளும் அளவுக்கு இது உயர்ந்துள்ளது. மட்டுமல்ல, குடிவிருந்து கூட நடக்கிறது. 

இதையெல்லாம் சரியென்று விமல் வீரவன்ஸ கூடச் சொல்ல முடியாது. ஏனென்றால், படைகளின் வேலையே வேறு. தேசிய பந்தோபஸ்தில் (தேசிய பாதுகாப்பில்) இவை பற்றி எந்த வாக்கியமும் இல்லை. அல்லது யுத்த காலத்தில் படைகள் இந்த மாதிரிப் பணியாற்றியிருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் பல ஆயிரம் பேர் உயிர் தப்பியிருப்பார்கள். அதில் பல ஆயிரம் படையினரும் இருந்திருப்பார்கள். 

யுத்தத்திற்குப் பிறகு, படையினர் செய்திருக்க வேண்டியது மீள்நிலைப்படுத்துதலை. அப்படியென்றால், அவர்கள் பழைய நிலைகளுக்குத் திரும்புவதைச் செய்திருக்க வேண்டும். கூடவே உடைந்த – அழிக்கப்பட்ட ஊர்களையும் கட்டிடங்களையும் மீள்நிலைப்படுத்தியிருக்கலாம். அதைக் கூடத் தனியாகச் செய்திருக்க்க் கூடாது. குறித்த பிரதேசங்களின் மக்கள் பிரதிநிதிகள், மக்கள் அமைப்புகள், அரசாங்கத் திணைக்களங்களின் திட்டம், தீர்மானம் போன்றவற்றை நிறைவேற்றும் ஒரு தரப்பாக இருந்து அந்தப் பணிகளைச் செய்திருக்கலாம். அப்படி நடக்கவே இல்லை. இப்பொழுது நடப்பதோ எதிர்மாறான சங்கதிகள். 

அரசாங்கம் செய்திருக்க வேண்டியது மீளமைப்பை. இயல்பு வாழ்க்கையில் மக்கள் முழுமையாக ஈடுபடக் கூடிய சூழலை உருவாக்கியிருக்க வேண்டும். அரசியல் தீர்வை எட்டியிருக்க வேண்டும். அரசியல் தீர்வு எட்டப்பட்டிருந்தால் படைகள் ஊர்களில் இருக்க வேண்டிய தேவையே இருந்திருக்காது. ஆக அடிப்படையிலேயே தவறு நடந்து கொண்டிருக்கிறது. 

இத்தகைய பின்னணியில் – காரணங்களின் அடிப்படையில்தான்  இந்தப் பிரச்சினையையும் இந்தப் போராட்டத்தையும் நாம் பார்க்க வேண்டியுள்ளது. 

தமிழரசுக் கட்சி ஹர்த்தாலை அறிவித்தவுடன் அதற்கு சில இடங்களில் மாற்று நிலைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களிலும் இணையத் தளங்களிலும் இதைக் குறித்த  விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஏன் தமிழரசுக் கட்சிக்குள்ளேயே சில கறுப்பாடுகள் எதிர் நிலையில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. குறிப்பாக முத்தையன்கட்டில் கொலையான கபில்ராஜின் மரணம் தொடர்பாகப் பல விதமான கதைகள் (கருத்துகள்) உண்டு. அதை விட அது ஒரு தனிப்பட்ட விவகாரம். படையினரில் சிலருக்கும் கபில்ராஜ் மற்றும் நண்பர்களுக்கும் இடையில் நடந்த கொடுக்கல் வாங்கல், மதுப் பரிமாற்றம், முகாமைக் காலி செய்யும்போது மிஞ்சும் பொருட்களை எடுத்தல் அல்லது கையகப்படுத்தல் போன்றவற்றினால் ஏற்பட்ட விளைவு என்று சொல்லப்படுகிறது. 

இவை அனைத்தும் உண்மையாக இருக்கலாம். ஆனாலும் இதனால் நடந்திருப்பது ஒரு மரணம். இப்படியெல்லாம் படைத்தரப்போடு உறவு வைத்துக் கொள்ளும் அளவுக்குத்தான் நிலைமை உள்ளது என்பதை இந்தக் கட்டுரை வாதிட்டதை இந்தக் கொலை அல்லது மரணம் நிரூபிக்கிறது; ஒப்புக்கொள்கிறது; உண்மை என ஏற்றுக்கொள்கிறது. 

இந்த இடத்தில் ஒரு கேள்வியை எழுப்ப வேண்டும். 2009 க்கு முன்பு இந்த மாதிரி படைத்தரப்புக்கு மதுவை வாங்கிக் கொடுப்பதற்கு யாராவது முன்வருவார்களா? அல்லது, படையினர்தான் சந்தேகமில்லாமல் அதை வாங்கிப் பருகுவார்களா? 

அப்பொழுது படைமுகாம்களில் யாராவது திருடவோ பொருட்களை எடுக்கவோ செல்வார்களா? செல்ல முடியுமா? அதற்குப்படையினர் அனுமதிப்பார்களா? 

ஆகவே இதைக் குறித்தெல்லாம் நாம் ஆழமாகச் சிந்திக்க வேண்டும். சமூகத்தைப் பிளவு படுத்தும் உத்தியில் அரசு திட்டமிட்டுச் செயற்படுகிறது. அதன் ஓரம்சமே இதுவும். 

இனி தமிழரசுக் கட்சியின் ஹர்த்தாலுக்கு வருவோம். ஹர்த்தால், ஊர்வலம், பாராளுமன்றத்தில் முழக்கம், தேர்தல் மேடைகளில் ஆவேசம், அரசியல் பத்திகளில் கண்டனம் போன்றவற்றினால் அரசியல் தீர்வோ, மக்களுடைய பிரச்சினைகளுக்கான தீர்வுகளோ கிடைக்கும் என்பது பொய்யென நிரூபிக்கப்பட்டாயிற்று. வடக்குக் கிழக்கை மையப்படுத்தி நடத்தப்படும் போராட்டங்களால் எந்தப் பயனுமில்லை. இதற்கு உதாரணம் அறகலய. அது கொழும்பில் நடத்தப்பட்டது. அரசாங்கத்தை முடக்கும் விதமாக நடத்தப்பட்டது. பல்வேறு தரப்புகளையும் பல தரப்புச் சக்திகளையும் ஒருங்கிணைத்து அல்லது அவற்றின் ஆதரவோடு நடத்தப்பட்டது. அதுதான் அந்தப் பெரிய வெற்றியை ஈட்டுவதற்குக் காரணமாகியது.

வடக்கு கிழக்குக்கு மட்டுமான பிரச்சினைக்கு எப்படிக் கொழும்பில் ஆதரவைத்திரட்ட முடியும்? என்ற கேள்வியை யாரும் எழுப்பலாம். வடக்குக் கிழக்குப் பிரச்சினை என்பது வடக்குக் கிழக்குக்கு மட்டுமான பிரச்சினை இல்லை. அது முழு நாட்டுக்குமான பிரச்சினை என்பதை கடந்த கால வரலாற்று அனுபவம் சொல்கிறது. ஆகவே, அதைக்குறித்த புரிதல் உள்ள சக்திகளோடு இணைந்து எல்லோருக்கும்  சொல்ல வேண்டும். நடத்தப்படும் போராட்டத்தை அரசு உணரக் கூடிய பொறிமுறை – இடம் போன்றவற்றைப் பற்றிச் சிந்திப்பது அவசியம். அதைக்குறித்து நாம் பேச வேண்டும். உரையாட வேண்டும். 

அதற்கு முன் சரியோ, தவறோ, தன்னுடைய பாரம்பரிய முறைமையின்படி தமிழரசுக் கட்சி இந்தப் போராட்டத்தை அறிவித்து விட்டது. அதைப் பலவீனப்படுத்தாமல் முழுமையாக்குவதற்கு ஒத்துழைக்க வேண்டும். அந்த அடிப்படையில்தான் மனோ கணேசன் போன்றவர்களும் பேசியிருக்கிறார்கள். எதிர்காலப் போராட்டங்களைப் பற்றி புதிதாகச் சிந்திப்போம். அதற்கான உரையாடல்களை விரிந்த தளத்தில் செய்வோம். ஏனென்றால், குழுக்களாகச் செயற்படும் காலம் முடிவுக்கு வருகிறது. அதனால் எந்தப் பயனுமில்லை என்பதை அனுபவங்கள் சொல்கின்றன. பல தரப்பும் இணைந்து ஒருமுகப்பட்டுச் சிந்திப்பதும் செயற்படுவதுமே இன்று வேண்டப்படுவது. அதைச் செய்யும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. இங்கே இப்பொழுது நடந்து கொண்டிருப்பது கட்சிகளுக்கிடையிலான முதன்மைப்போட்டியே தவிர, மக்களுக்கான அரசியல் விளைவுகளல்ல. என்பதால்தான் ஒரு கட்சி எடுக்கும் முயற்சியை மறு  தரப்புகள் விமர்சிப்பதும் நிராகரிப்பதும் நடக்கிறது. இந்தப் பண்பு – பழக்கம் மாற வேண்டும். சரி பிழைகளுக்கு அப்பால் ஒரு தரப்பின் அறிவிப்பை மறுதரப்பு மறுதலிக்காமல் இருக்கலாம். இப்படித்தான் தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்திலும் தவறுகள் இழைக்கப்பட்டன. 

https://arangamnews.com/?p=12257

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கிருபன் said:

வடக்கு கிழக்குக்கு மட்டுமான பிரச்சினைக்கு எப்படிக் கொழும்பில் ஆதரவைத்திரட்ட முடியும்? என்ற கேள்வியை யாரும் எழுப்பலாம். வடக்குக் கிழக்குப் பிரச்சினை என்பது வடக்குக் கிழக்குக்கு மட்டுமான பிரச்சினை இல்லை. அது முழு நாட்டுக்குமான பிரச்சினை என்பதை கடந்த கால வரலாற்று அனுபவம் சொல்கிறது. ஆகவே, அதைக்குறித்த புரிதல் உள்ள சக்திகளோடு இணைந்து எல்லோருக்கும்  சொல்ல வேண்டும். நடத்தப்படும் போராட்டத்தை அரசு உணரக் கூடிய பொறிமுறை – இடம் போன்றவற்றைப் பற்றிச் சிந்திப்பது அவசியம். அதைக்குறித்து நாம் பேச வேண்டும். உரையாட வேண்டும். 

11 hours ago, கிருபன் said:

எதிர்காலப் போராட்டங்களைப் பற்றி புதிதாகச் சிந்திப்போம். அதற்கான உரையாடல்களை விரிந்த தளத்தில் செய்வோம். ஏனென்றால், குழுக்களாகச் செயற்படும் காலம் முடிவுக்கு வருகிறது. அதனால் எந்தப் பயனுமில்லை என்பதை அனுபவங்கள் சொல்கின்றன. பல தரப்பும் இணைந்து ஒருமுகப்பட்டுச் சிந்திப்பதும் செயற்படுவதுமே இன்று வேண்டப்படுவது. அதைச் செய்யும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. இங்கே இப்பொழுது நடந்து கொண்டிருப்பது கட்சிகளுக்கிடையிலான முதன்மைப்போட்டியே தவிர, மக்களுக்கான அரசியல் விளைவுகளல்ல. என்பதால்தான் ஒரு கட்சி எடுக்கும் முயற்சியை மறு  தரப்புகள் விமர்சிப்பதும் நிராகரிப்பதும் நடக்கிறது. இந்தப் பண்பு – பழக்கம் மாற வேண்டும். சரி பிழைகளுக்கு அப்பால் ஒரு தரப்பின் அறிவிப்பை மறுதரப்பு மறுதலிக்காமல் இருக்கலாம். இப்படித்தான் தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்திலும் தவறுகள் இழைக்கப்பட்டன. 

பகிர்விற்கு நன்றி @கிருபன் அண்ணை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.