Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Ribeiro என்னுடைய நண்பன். போர்த்துக்கல் நாட்டைச் சேர்ந்தவன். ஒரு சிறிய பயண நிறுவனத்தை நடத்தி வந்தான்.  தொண்ணூறுகளில் நான் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்த போதெல்லாம் என்னுடைய விமானச் சீட்டுகளை அவன்தான் ஒழுங்குபடுத்தித் தந்தவன்.

முதல் முறை எனக்கான விமானச்சீட்டை ஏற்பாடு செய்யும் போது, என் நீண்ட பெயரைப் பதிவதில் சிரமப்பட்டுக் கொண்டிருந்தான். அவனுக்கு எதற்குச் சிரமம்? என்று நினைத்து, என் பாஸ்போர்ட்டை அவனிடம் நீட்டினேன். அதை  வாங்கிப் பார்த்தவுடன் அவன் சொன்னான், “நீ பிறந்த இடம் Point-Pedro அல்லவா? அந்தப்  பகுதியில் 'பேட்ரோ' என்னும் போர்த்துக்கல் ஆளுநர் ஒருவர் இருந்துள்ளார்” என்றான்.

நான் சற்றே ஆச்சரியத்துடன், “என் ஊரைப் பற்றிய விபரம் உனக்கெப்படித் தெரியும்?” என்று கேட்டேன். அதற்கு அவன், “'பேட்ரோ' என்பது போர்த்துக்கீஸிஸ், ஆங்கிலத்தில் ‘பீற்றர்’, டொச்சில் ‘பேற்றர்’” என்றான். என்னுடைய சொந்த ஊரின் பெயரில் போதுமான வரலாறு இருப்பதை நான் அதுவரை அறியாதிருந்ததை உணர்ந்தேன். அந்த நிமிஷத்தில் என்னுள் ஒரு விருப்பம் பிறந்தது, ஒரு தடவை  போர்த்துக்கலுக்குப் போக வேண்டும் என்று.

பல நாடுகளுக்குப் பயணித்திருந்தும், போர்த்துக்கல் மட்டும் எப்போதும் சாத்தியப்படவில்லை. ஆனால் கடந்த வருடம், இந்த வருடக் கோடைகாலத்தில் போர்த்துக்கலுக்குப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று உறுதியாக முடிவெடுத்தேன். அந்த முடிவே இந்தப் பயணத்திற்கு வழிவகுத்தது.

பயண நகரமாக போர்ட்டோ (Porto)வைத் தேர்ந்தெடுத்தேன்.

பறப்பதற்கு நேரம் 2 மணி 45 நிமிடங்கள் மட்டுமே. போர்ட்டோவிற்கு வந்ததும், உயரமாக வளர்ந்த மரங்களும், பழமையான கட்டிடங்களும்தான் முதலில் கண்களில் பட்டன. எங்கள் ஊரிலுள்ள பூவரச மரங்களின் உயரத்துக்கு இங்கு சிதம்பரத்தை மரங்கள் வளர்ந்து, பூத்து அழகாக நின்றன. சில இடங்களில் பனைமரங்களும் திமிராக நிமிர்ந்து நின்றன. வீதிகளில் நடக்கும்போது, அந்த நகர அமைப்பு எனக்கு கொழும்பு நகரத்தை நினைவூட்டியது.

போர்ட்டோவில் இருந்த நாட்களில், இறைச்சி உணவுகளைத் தவிர்த்து, மீன்களை மட்டுமே சாப்பிடுவது எனத்  தீர்மானித்தேன். அதில் என்னை மிகவும் கவர்ந்தது Corvina என்ற மீன். இவ்வளவு காலமும் நான் சாப்பிட்ட மீன்களில்  இல்லாத ஒரு  தனிச் சுவை அந்த மீனில் இருந்தது. ஏன் இந்த மீன் யேர்மனியில் கிடைக்கவில்லை என அறிய இணையத்தில் தேடியபோது, “Meerrabe” அல்லது “Koenigs-Corvina” என்ற பெயர்கள் வந்தன. ஆனால் சந்தைகளில் கிடைக்கவில்லை. தமிழில் அதன் பெயரைக் கண்டு பிடிக்க முடியவில்லை. இனிமேல் மீண்டும் இந்த மீனைச் சாப்பிட விரும்பினால், போர்த்துக்கலுக்குத்தான் போக வேண்டும் போலிருக்கிறது. Corvina மீனை “போர்த்துக்கல் மீன்” என்றொரு பெயரிலும் அழைப்பார்கள் என்று தெரிந்தது.

IMG_4377

பழமையான கட்டிடங்கள், கல்வி நிறுவனங்களால் நிரம்பிய தெருக்கள்... என்றிருந்த இந் நகரத்தின் மத்தியில்  Livraria Lello என்ற ஒரு பிரபலமான சிறிய புத்தகக் கடை இருந்தது. 1906ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தக்  கடை, இன்று “உலகின் அழகான புத்தகக் கடைகளில் ஒன்றாகக்  கருதப்படுகிறது.

இந்தக்  கடைக்குள் செல்வதற்கு  முன்பதிவு செய்ய வேண்டும். கடையின் வெளியே நீண்ட வரிசை. ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கு ஒருமுறை, ஒவ்வொரு வரிசையாக உள்ளே அனுமதிக்கின்றனர். வரிசையில் நின்றபோது, காலநிலை பாதுகாப்பிற்காக சிவப்புக் குடைகள் கொடுக்கப்பட்டன. எனக்கு முன்னால் ஒரு யேர்மனியக் குடும்பம்,  இரண்டு பிள்ளைகளுடன் வரிசையில் நின்றனர். அவர்கள் பேசுபவை காதில் விழுந்தன.  “முன்பு கடைக்குள் செல்ல இரண்டு யூரோக்கள் மட்டும் கொடுக்க வேண்டியிருந்தது. பின்னர் ஐந்து யூரோக்கள் ஆகி, கொரோனாவுக்குப் பிறகு பத்து யூரோக்கள் ஆகிவிட்டது. ஆனால் உள்ளே புத்தகம் வாங்கினால் அந்தப்  பத்து யூரோக்கள் கழிக்கப்படும். இல்லையெனில், அவர்களுக்குப்  பத்து யூரோக்கள், எங்களுக்குத் திரும்ப வெறும் கைகள்தான்!”

IMG_4380

புத்தகக் கடைக்குள் சென்றபோது, என்னை மிகவும் கவர்ந்தது, நடுப்பகுதியில் இடது, வலது என இரண்டாகப் பிரிந்து வளைந்து செல்லும் சிவப்பு மரப் படிக்கட்டுகள். மேல்தளத்திலுள்ள வண்ணக் கண்ணாடிகள், அவற்றில் வரும் இயற்கை ஒளி, கடையை ஒரு கலை அரங்கமாக மாற்றிக் கொண்டிருந்தது. இந்தக் கடையை, ஹரி போட்டர் புத்தகத் தொடர் எழுத்தாளர் J.K. Rowling, போர்ட்டோவில் தங்கி இருந்த போது பார்வையிட்டதாகக்  கூறுகிறார்கள். இந்தக் கடையின் சூழலும் படிக்கட்டுகளும் தான்  ஹரி போட்டர்  கதையில் இடம் பிடித்திருக்கும் ஹோக்வோர்ட்ஸ் பள்ளியின் வடிவமைப்புக்கு உந்துதலாக இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த ஒரு காரணம்தான், ஹரி  போட்டர்  ரசிகர்களையும், உலகளாவிய பயணிகளையும் இங்கே இழுத்து வருகிறது. என் முன்னால் நின்ற யேர்மனியப்  பிள்ளைகளும் ஹரி  போட்டர்  ரசிகர்களாகவே  எனக்குத் தெரிந்தார்கள்.

IMG_4388

கடைக்குள் பல மொழிகளில் நூல்கள் இருந்தன. தமிழ் புத்தகங்கள் ஏதாவது இருக்குமா என்று தேடினேன்.  நீண்ட புத்தக அலுமாரியின் ஒரு பகுதியில்  “Asian Literature” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.  அதில் சீன, ஜப்பான், கொரிய எழுத்தாளர்களின் நூல்கள் மட்டுமே இருந்தன. தமிழ் நூல்கள் எதுவுமே இருக்கவில்லை. “திருக்குறளை என்றாலும் வைத்திருக்கலாமே” என்ற ஏமாற்றம் மனதில் தோன்றியது.

IMG_4387

Livraria Lello–வில் நான் எதையும் வாங்கவில்லை. ஆனால் வாசிப்பு என்பது எல்லா மொழிகளிலும் ஒரு கலை என்பது தெளிவானது.

உலகின் அழகான புத்தகக் கடைகளில் ஒன்றான இந்தக் கடை, உண்மையிலேயே ஒரு வாசகப் பூங்காதான்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையிலேயே மிக அழகாக இருக்கிறது. பகிர்வுக்கு நன்றி @Kavi arunasalam அண்ணை.

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்விற்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அருமையான பகிர்வு ......... !

எனது குடும்பம் இங்கு வந்த புதிதில் பிள்ளைகள் சிறுவர்கள் . ......மகள் (8) மகன் (4) அவர்களை பாடசாலையில் சேர்த்திருந்தோம் .....ஒருநாள் அவர்களின் ஆசிரியை சொன்னார் இவர்களுக்கு சிறுவர்களுக்கான கார்டடூன் கதைகள் உள்ள புத்தகங்கள் வாங்கிக் கொடுங்கள் என்று சொல்லி தன்னிடமிருந்த ஓரிரு புத்தகங்களையும் தந்திருந்தார் . ...... நானும் ஜம்பமாய் நகரில் இருந்த ஒரு பெரிய புத்தகக் கடையில் அவர்களையும் அழைத்துக் கொண்டு போய் சில புத்தகங்களை வாங்கினேன், அவர்களும் எமது பெயர் விலாசங்களையும் எழுதிக்கொண்டு அனுப்பி வைத்தனர் . ..... பிறகு பார்த்தால் அக்கடையில் இருந்து மாதாமாதம் புத்தகங்கள் வீட்டுக்கு வரத்தொடங்கின . ..... 25 பிராங் , 50 பிராங் என்று குடுக்க வேண்டி இருந்தது . .....அதை நிறுத்துவதற்கு நான் பட்ட பாடு இருக்கே .....பின்பு எமது சோசியல் பெண்மணியுடன் சென்று சொல்லி அதை நிறுத்தி வைத்தேன் . .....! 😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 2/9/2025 at 09:29, suvy said:

பிறகு பார்த்தால் அக்கடையில் இருந்து மாதாமாதம் புத்தகங்கள் வீட்டுக்கு வரத்தொடங்கின . ..... 25 பிராங் , 50 பிராங் என்று குடுக்க வேண்டி இருந்தது . .....அதை நிறுத்துவதற்கு நான் பட்ட பாடு இருக்கே .....

“புத்தகங்களை மாதாமாதம் அனுப்பி வைக்கவா? “என்று பக்குவமாகக் கேட்டிருப்பார்கள். நீங்களும் தலையாட்டியிருப்பீர்கள். “இதில் ஒரு கையெழுத்து வையுங்கள்” என்று மரியாதையாகக் கேட்டிருப்பார்கள். நீங்களும் பெருமையாக கையெழுத்துப் போட்டிருப்பீர்கள். ஆரம்பகாலங்கள் விழி பிதுங்க வைத்த மொழிப்பிரச்சினை, சில சமயங்களில் பணத்துக்கும் உள்ள வைத்திருக்கும்.😆

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Kavi arunasalam said:

“புத்தகங்களை மாதாமாதம் அனுப்பி வைக்கவா? “என்று பக்குவமாகக் கேட்டிருப்பார்கள். நீங்களும் தலையாட்டியிருப்பீர்கள். “இதில் ஒரு கையெழுத்து வையுங்கள்” என்று மரியாதையாகக் கேட்டிருப்பார்கள். நீங்களும் பெருமையாக கையெழுத்துப் போட்டிருப்பீர்கள். ஆரம்பகாலங்கள் விழி பிதுங்க வைத்த மொழிப்பிரச்சினை, சில சமயங்களில் பணத்துக்கும் உள்ள வைத்திருக்கும்.😆

இப்ப எனக்கு உங்கள் மேல்தான் சந்தேகமாய் இருக்கு ....... பக்கத்தில் நின்று பார்த்ததுபோல் சொல்கிறீர்கள் . ...... முன் அனுபவமோ .........! 😂

  • கருத்துக்கள உறவுகள்
On 29/8/2025 at 11:53, Kavi arunasalam said:

நான் சற்றே ஆச்சரியத்துடன், “என் ஊரைப் பற்றிய விபரம் உனக்கெப்படித் தெரியும்?” என்று கேட்டேன். அதற்கு அவன், “'பேட்ரோ' என்பது போர்த்துக்கீஸிஸ், ஆங்கிலத்தில் ‘பீற்றர்’, டொச்சில் ‘பேற்றர்’” என்றான். என்னுடைய சொந்த ஊரின் பெயரில் போதுமான வரலாறு இருப்பதை நான் அதுவரை அறியாதிருந்ததை உணர்ந்தேன். அந்த நிமிஷத்தில் என்னுள் ஒரு விருப்பம் பிறந்தது, ஒரு தடவை  போர்த்துக்கலுக்குப் போக வேண்டும் என்று.

அட நம்ம ஊரைப் பற்றியும் அவருக்கு தெரிந்திருக்குமோ?

என்ன தேடினால் ஆறுமுகநாவலர் சேனாதிராச முதலியார் இப்படிப்பட்ட பெயருகள் தான் வரும்.

On 29/8/2025 at 11:53, Kavi arunasalam said:

Livraria Lello–வில் நான் எதையும் வாங்கவில்லை. ஆனால் வாசிப்பு என்பது எல்லா மொழிகளிலும் ஒரு கலை என்பது தெளிவானது.

10 யூரோ போச்சா?

6 hours ago, Kavi arunasalam said:

பிறகு பார்த்தால் அக்கடையில் இருந்து மாதாமாதம் புத்தகங்கள் வீட்டுக்கு வரத்தொடங்கின . ..... 25 பிராங் , 50 பிராங் என்று குடுக்க வேண்டி இருந்தது . .....அதை நிறுத்துவதற்கு நான் பட்ட பாடு இருக்கே .....

“புத்தகங்களை மாதாமாதம் அனுப்பி வைக்கவா? “என்று பக்குவமாகக் கேட்டிருப்பார்கள். நீங்களும் தலையாட்டியிருப்பீர்கள். “இதில் ஒரு கையெழுத்து வையுங்கள்” என்று மரியாதையாகக் கேட்டிருப்பார்கள். நீங்களும் பெருமையாக கையெழுத்துப் போட்டிருப்பீர்கள். ஆரம்பகாலங்கள் விழி பிதுங்க வைத்த மொழிப்பிரச்சினை, சில சமயங்களில் பணத்துக்கும் உள்ள வைத்திருக்கும்

இதற்கெல்லாம் முதல் பிரச்சனை

முன்னணியில் அழகான பெண்களை விட்டிருப்பார்கள்.

அப்புறம் என்ன உருவி எடுத்து விடுவார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ஈழப்பிரியன் said:

10 யூரோ போச்சா?

துணையோடு போனதால் 20 யூரோ போச்சு. ஆனால் எழுதுவதற்கு ஒன்று கிடைத்தது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.