Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கதை - 186 / 'நல்லூர்த் திருவிழாவில், மாயையின் மயக்கம்' / பகுதி: 01

ஆகஸ்ட் 2025 யாழ்ப்பாணம் தங்கத்தால் போர்த்தது போல் இருந்தது. நல்லூர் கந்தசுவாமி கோயில் திருவிழா தொடங்கியது, தெருக்கள் உயிர்ப்புடன் மலர்ந்தன. விடியற்காலை முதல் மாலை வரை, சங்குகள், மணி ஓசைகள் மற்றும் மேளங்களின் சத்தங்கள் காற்றில் எதிரொலித்தன. ஒவ்வொரு காற்றிலும் மல்லிகை மாலைகள் மற்றும் கற்பூர புகையின் நறுமணம் வீசியது. இலங்கைத் தீவு முழுவதிலுமிருந்தும் மற்றும் புலம்பெயர்ந்தோரிடமிருந்தும் பக்தர்கள் அற்புதமாக அலங்கரிக்கப்பட்ட, 'அலங்கார முருகனை' வணங்க ஒன்று கூடினர்.

அவர்களிடையே, இரண்டாம் தலைமுறையாக வெளிநாட்டில் வாழும், யாழ்ப்பாணத்தை அடியாகக் கொண்ட, அருண் என்ற இளைஞன் நடந்து வந்தான். அவன் எளிமையான உடையில் - சாதாரண வெள்ளைப் பருத்தி சட்டை மற்றும் வெள்ளை வேஷ்டி உடன் ஒரு உள்ளூர் வாலிபனாக பார்வைக்கு தோன்றினாலும், அவரது முகம் இன்னும் வெளிநாட்டு நிலங்களின் புத்துணர்ச்சியை பறைசாற்றிக் கொண்டுதான் இருந்தது. அது அவனால் மறைக்க முடியவில்லை. மற்றும் அவனது இதயம், தன் தாய் தந்தை பிறந்த மண்ணின் வாசனையைத் தேடி அலைந்து கொண்டு இருந்தது.

முதலில், அவன் தமிழ் கடவுள் முருகனின் முன் உண்மையாக, பக்தியாக, பண்பாடாக வழிபடத் தான் அங்கு வந்தான். என்றாலும் பட்டு, நகைகள் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பிரகாசமான, 'அலங்கார கந்தனின்' மீது கண்கள் பதிந்த பொழுது அவன் தடுமாறினான்.

அந்த தடுமாற்றத்தில் தான், கூட்டத்தில், தன் தோழிகளுடன் நின்றிருந்த ஒரு இளம் பெண், அலங்கரிக்கப்பட்ட தெய்வத்தைக்கூட ஒப்பிட்டுப் பார்க்கும் அளவிற்கு அழகைக் கொண்டிருப்பதைக் கண்டு ஆச்சரியப் பட்டான். கோயில் விளக்குகளின் கீழ் அவளுடைய சேலை மின்னியது, அவளுடைய கண்ணாடி வளையல்கள் ஒவ்வொரு அசைவிலும் ஒலித்தன, ஒளிர்ந்தன. அவளுடைய கரும் கூந்தலில் மல்லிகைப் பூக்கள் காற்றோடு நடனமாடின. மேளம் மற்றும் கோயில் மணிகளின் சத்தங்களுக்கு மேலே அவளுடைய சிரிப்பு மின்னியது. அருணுக்கு, அவள் வெறும் பெண் அல்ல - அவள் "அலங்காரக் காந்தை" யாகத் தோன்றினாள்!

அன்று மாலை முதல், அருணின் உள்ளம் அவளை அமைதியாகத் தேடி அலையத் தொடங்கியது. அவன் இப்ப அலங்கார கந்தனுக்காக அல்ல, மாறாக அலங்கார காந்தைக்காகத் நல்லூர் வரத் தொடங்கினான்.

முன்னழகும் பின்னழகும் கண்ணிலே நிற்குதே

முடியழகும் இடையழகும் மனதைக் கலக்குதே

உன்னழகு ஈடில்லா தனியழகு அல்லவா

மன்னவனின் சன்னிதியில் என்னையே மறந்தேனே!

சிங்கார புன்முறுவல் சிரிப்பை உதிர்த்தவளே

சிவப்புநிற பட்டாடை தக்கபடி உடுத்தவளே

பூமாலை சூடிய அலங்காரக் காந்தையே

கண்திறந்து பார்க்காயோ கருணை காட்டாயோ !!

திருவிழாவின் பத்தாம் நாள் இன்று. நல்லூரைச் சுற்றி பல பல குளிர்பானங்கள், வளையல்கள், சேலைகள் மற்றும் இனிப்புகளால் கடைகள் நிரம்பி இருந்தது. முருகன் வள்ளி தெய்வானையுடன் பொன் மஞ்சத்தில் வரும் ஆகஸ்ட் ஏழாம் நாள். இந்த 7 ஆம் எண் மதத்தில் - இஸ்லாத்தில் 7 வானங்கள், கிறிஸ்தவத்தில் 7 படைப்பின் நாட்கள், இந்து மதத்தில் 7 சக்கரங்கள் எனவும், இயற்கையில் - வாரத்தில் 7 நாட்கள், வானவில்லில் 7 வண்ணங்கள், 7 இசைக் குறிப்புகள் எனவும் மற்றும் வரலாற்றில் - உலகின் 7 அதிசயங்கள் எனவும் தோன்றுவதால், பல மேற்கத்திய மற்றும் கிழக்கு கலாச்சாரங்களில் 7 என்ற எண் ஒரு அதிர்ஷ்ட எண்ணாகக் கருதப்படுகிறது. அருண் அதைப் பெரிதாகப் பொருட்படுத்துபவன் அல்ல. என்றாலும், இன்று எனோ அது அவனுக்கு ஒரு உற்சாகம் கொடுத்தது. அந்த உற்சகம் கொடுத்த தைரியத்தில், அவன் அவளை அணுகி, "எக்ஸ்க்யூஸ் மீ [Excuse me]" என்றான்.

பச்சை நிற சுடிதாரில் பச்சைகிளி போல் போஸ் [Pose] கொடுத்துக் கொண்டு, வெள்ளைக் கொடி ஒன்று படர்ந்து, நுனியில் பூக்கள் மலர்ந்தது போல, கொண்டையில் மல்லிகை மாலை சூடிக்கொண்டு, தன் தோழிகளுடன் நின்ற அவள் கண்களில் ஒரு கவர்ச்சி தீபம் எரிந்து கொண்டு இருந்தது.

அவள் சற்று தலை நிமிர்ந்து, மென்மையான வார்த்தைகளில் ”சொல்லுங்க… ‘ப்ளீஸ் [Please]’ .. என்ன வேணும்?” என்றாள். அந்த ‘ப்ளீஸ்’ அப்படி ஒரு மென்மை. சினிமா காதல் காட்சியாக… காடு முழுக்க ஆள் உயரக் கம்பி மத்தாப்புகளை நட்டுவைத்து ஒரே நேரத்தில் பற்ற வைத்தது போல் அவன் மனதுக்குள் அத்தனை பிரகாசம்.”ஐ’யம் [I am] அருண் ” என்றான்.

அவள் கண்களால் ஒரு வித வலை வீசியபடி நான் ”ஆரணி” என்றாள் தயங்கியபடி. பெண்களின் பெயரை அந்தப் பெண்களே உச்சரிக்கக் கேட்கும் போது அது இன்னும் அழகாகிவிடுகிறது! அது மட்டும் அல்ல, ஆலய வளவில், மாகாளி ; பார்வதி போன்ற இறைவிகளின் பெயரைக் கொண்ட அவளில், மேலும் ஒரு தனி விருப்பமும் நம்பிக்கையும் அவனுக்குத் தானாக மலர்ந்தது ”நாம் ரியோ [Rio] வுக்கு போகிறோம், நீங்களும் இணையலாம். ஆறுதலாக அங்கு ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்வோம், நீங்கள் பிரீ [free] என்றால்? எங்களுடன் வரலாம்" என்றாள், எந்த தயக்கமும் இன்றி, இதமான வரவேற்பு புன்னகையுடன்.

நன்றி

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

பகுதி: 02 தொடரும்

கதை - 186 / 'நல்லூர்த் திருவிழாவில், மாயையின் மயக்கம்' / பகுதி: 01

https://www.facebook.com/groups/978753388866632/posts/31263916889923550/?

Edited by kandiah Thillaivinayagalingam

  • கருத்துக்கள உறவுகள்

திருவிழாக்கள் எங்கு நடந்தாலும் தேர் தீர்த்தம் முடியமுதல் பல ஜோடிகள் ஒன்று சேர்ந்துவிடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, kandiah Thillaivinayagalingam said:

ஐ’யம் [I am] அருண் ” என்றான்.

2 hours ago, kandiah Thillaivinayagalingam said:

ஐ’யம் [I am] கந்தையா-தில்லை-வினாயக-லிங்கம்

என்று இந்த நீண்ட பெயரை மூச்சு வாங்கச் சொல்லி, எப்படித்தான் தன் பத்தினியை வசியப்படுத்தினாரோ! நினைக்கவே மலைப்பாக இருக்கிறது!!.🫢

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதை - 186 / 'நல்லூர்த் திருவிழாவில், மாயையின் மயக்கம்' / பகுதி: 02

ரியோ வுக்கு வந்ததும், தன் இருக்கையை அருணுக்கு மிக அருகில் இழுத்து, பட்டும் படாததுமாக நெருங்கி அமர்ந்து கொண்டு, உங்களைப் பற்றி சொல்லுங்களே என்றாள். ஆரணியின் அகவை 21 அல்லது 22 இருக்கலாம். என்றாலும் பேசுவது பழகுவதைப் பார்த்தால் ஒரு 'டீன் ஏஸ்' [teen age] பெண் மாதிரியே இருந்தது. சங்க காலத்து தமிழில் 'டீன் ஏஸ்' பெண்ணை 'மடந்தை' என்று சொல்வார்கள். ஆனால் மடந்தை என்ற சொல் ஆரணியின் அழகை பூரணமாக கொண்டு வரவில்லை அவளைப் பார்க்கும் போதெல்லாம் 'முறியுறு நிறமல்கு முகிழ்முலை மலைமகள்' என்ற திருஞானசம்பந்தநாயனார் பாடல் எவருக்கும் ஞாபகம் வரலாம்? அப்படித்தான் ஓரளவு மாந்தளிர் போல் நிறத்தினையும் அரும்பு போல் முலையினையுடைய பார்வதி போலும் அவள் தன் இளமையையும், வனப்பையும் வெளிக்காடிக் கொண்டு இருந்தாள்.

அருண் தன் லண்டன் வாழ்வை சுருக்கமாக, குறிப்பாக அவளுக்கு, மற்றவர்களுக்கு பொதுவாக விளக்கிக் கொண்டிருந்தான். முன் இரவு நேரம், விளக்கின் ஒளி அவள் முகத்தில் பட்டு பட்டு விழுந்து கொண்டிருந்தது. உறைந்த மழைபோல கேசங்கள் அவள் கன்னத்தில் வழிந்து கிடந்தன. ஆரணி, வைத்த கண் வாங்காமல் அருணையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் வாயிலிருந்து விழும் வார்த்தைகளை கையேந்தி பிடித்துக் கொண்டிருப்பது போல் இருந்தது. அவள் கண்களின் இமைகள் ஏதேதோ பேசின.

அவள் திடீரென, "எமக்கு பசிக்குதே, ஐஸ்கிரீமுடன் நாம் எதாவது சாப்பிடுவோமா” என்றாள் ஒருவித சிணுங்கல்களுடன். ”அவ்வளவுதானே… பிரச்சனையில்லை, என்னென்ன வேண்டும் என்று பொதுவாக எல்லோரிடமும், ஆனால் குறிப்பாக அவள் முகத்தை பார்த்தபடி கேட்டான். அவள் கண்கள் மின்னின. அந்த ஒற்றைப் புன்னகை அவனை ஆழமாக இழுத்தது.

தன்னை சுற்றிய சூழல் மறந்து, அவனின் இரண்டு விழிகளும் ஒன்றையே தேடுது. இத்தனை இளம் பெண்களுக்குள் அவள் மட்டும் எப்படி தனியாகிறாள்? எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை. அவனுக்கு அதன் பதில் அப்பொழுது புரியவில்லை, என்றாலும் .. அவள் பார்வை ... அதற்காகவே தவமிருக்கிறது அவனது விழிகள்!

நேர்வடிவான தாடையை கைகளில் ஏந்தி முழங்கையில் முட்டுக் கொடுத்து அவனையே பார்த்தபடி இருந்தாள், ஆரணி. மறவர்கள் தங்களுக்குள் ஏதேதோ பேசத் தொடங்கி விட்டார்கள். அவளின் சீரான பல் வரிசை பளிச்சென்றது. அந்தக் கணத்தில் ஏதோ ஒன்று அவனைப் பற்றி இழுத்தது. பல வருடங்கள் தூங்கிய சிக்காடா (Cicada) பூச்சி [சிள் வண்டு அல்லது சுவர்க்கோழி], பெண் சிக்காடாவை ஈர்ப்பதற்காக வெளியே வந்து சத்தம் போடுவது போல அவன் மனதும் சத்தம் போட தொடங்கி விட்டது.

ரியோவை விட்டு வெளியே வரும் பொழுது, அவளது கைகள் அவனது கைகளுடன் இணைந்தன. கொஞ்சம் தூரத்தில் பொன் மஞ்சளில் அலங்காரக் கந்தன், வடக்கு வீதி நோக்கி தேவிகளுடன் ஊர்வலம் போய்க் கொண்டு இருந்தார். அவளது தோழிகள், எதோ சாட்டு சொல்லிவிட்டு, வடக்கு வீதிக்கு சென்று விட்டார்கள். அவன் அங்கு இருந்த ஒரு நகைக் கடையில் தனது முதல் பரிசாக தங்கச் சங்கிலி வாங்கி, தானே அவள் கழுத்தில் போட்டு ரசித்தான்!

அப்பொழுது, ஒரு நீண்ட பயணத்தின் ஆரம்பத்தில் நிற்பது போல குறுகுறுப்பாக அவன் மனம் துள்ளியது. விமான ஓடுதரை விளக்குகள் போல எண்ணங்கள் வந்து அவனைத் தாக்கின. அவன் உதடுகளில் இன்னும் கொடுக்கப்படாத முத்தங்கள் பல இருந்தன. அவன் விரல் நுனிகளில் இன்னும் தொட்டுப் பார்க்க வேண்டிய சமாச்சாரங்கள் நிறைய இருப்பது போல பட்டது. அவன் வயிற்றுக்குள்ளே இவ்வளவு காலமும் அடக்கி வைத்திருந்த ஆசைகள் இப்போது வெளியே வரத் துடித்தன. எல்லாத்தையும் அவிச்சு, வடித்துப் பார்த்தால் மிஞ்சியது ஒன்றுதான். ஆரணியை, அவளின் குறும்பு சேட்டையை, அவளின் அழகை, அவளின் கொஞ்சல் பேச்சை அவனால் மறக்க முடியவில்லை. அவன் வாழ்ந்த வாழ்க்கையின் உண்மையான காரணம் அவளிடத்தில் தான் இருப்பது போல அவனுக்குப் பட்டது.

இரவில் ஒன்றே ஒன்று .. மனதில் சென்றதேன்

தேடி .. உனைத் தேடி .. நான் அலைந்ததேன்

பறக்கும் பறவை நானோ .. விரியும் மலர்கள் நீயோ

தேனே ... கரும்பே ..நீ யென் தேவி .. தேவி!

உன் கண்கள் அலைய என் மனம் அலைய

நான்...என் இதயத்தின் அருகே எரிகிறேன்

என் இதயத்தை நீ எடுக்க அழகுக்கு பலியாக

அழகான பெண்ணே காதலில் விழுகிறேன்!

அவன் வாய் அவனை அறியாமல் பாடிக்கொண்டு இருந்தது! அவன் மீது படர்ந்த முதல் பெண் தீண்டல் [ஸ்பரிசம்] அவளுடையதே. இணைந்த கைகள் மெல்ல மெல்ல அவள் இடையை வருடின. அவளும் அவனை அணைத்தபடி நடந்தாள். அந்த நெருக்கத்தில் அவளின் மூச்சு காற்றோடு அவன் உறவாடினான். அவளது உள்ளங்கை வேர்வையை முதல் முதல் உணர்ந்தான். அவள் சுவாசம் புரிந்தது, அவள் வாசம் தெரிந்தது. அவள் விழிகளின் வார்த்தைகள் உணர்ந்தான். என்றாலும், தோழிகள் திரும்பி வர, இருவரும் நாளை சந்திப்போமென பிரிந்தனர்.

அன்றில் இருந்து ஒவ்வொரு நாளும் அருண் நல்லூர் ஒழுங்காக வந்தான். ஆனால் என்றுமே மிக எளிய சாதாரண பருத்தி வேட்டியும் பருத்தி வெள்ளை மேல் சட்டையுடன் மட்டுமே. என்றாலும் அவனின் நடை உடை பாவனை மற்றும் பேச்சு அவனை யார் என்று காட்டிக் கொடுத்துக் கொண்டே இருந்தது. ஒவ்வொரு நாளும் அவளுடன் அவன் பொழுது போனது. அவன் அவளுக்கு ஒவ்வொரு நாளும் எதோ ஒரு பரிசு, அவள் கேட்பதெல்லாம் வாங்கிக் கொடுத்து அவளை அலங்காரப்படுத்தி அழகுபார்த்து அதில் ஒரு மகிழ்ச்சி அடைந்தான். அவளும் அவனுடன் நெருங்கி நெருங்கி பழகிக் கொண்டே இருந்தாள். முதலில் கொஞ்சம் திருவிழா, பின் கொஞ்சம் ரியோ, லிங்கம் என தோழிகளுடன் அவள் அவனை சந்தித்தாலும், அதன் பின் அவள் அவனுடன் மட்டும் தனியாக போய்விடுவாள். இருவரும் புது தம்பதிகள் போலவே நெருக்கமாக இருந்தார்கள்.

அவள் தினமும் வெவ்வேறு கண்ணைக் கவரும் உடையில் அவனுக்கு இன்பம் ஊட்டிக் கொண்டே இருந்தாள். அவனும் விலையுயர்ந்த உடைகள், மாலைகள், வளையல்கள் என அலங்காரங்கள் - அனைத்தும் திருவிழாக் கடைகளிலிருந்து வாங்க்கிக் கொடுத்துக் கொன்டே இருந்தான். அவள் எல்லாவற்றையும் ஏற்று, மேலும் மேலும் தன் நெருக்கத்தையும் கூட்டினாள். அவன் அவள் என்னுடையவளே என்ற மகிழ்வில், அவளுடைய அணைப்பில், சிரிப்பில், அழகில், கொஞ்சல் பேச்சில் தன்னையே இழந்து கொண்டு இருந்தான்.

நன்றி

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

பகுதி: 03 தொடரும்

கதை - 186 / 'நல்லூர்த் திருவிழாவில், மாயையின் மயக்கம்' / பகுதி: 02

https://www.facebook.com/groups/978753388866632/posts/31301211756194063/?

Edited by kandiah Thillaivinayagalingam

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதை - 186 / 'நல்லூர்த் திருவிழாவில், மாயையின் மயக்கம்' / பகுதி: 03

ஆகஸ்ட் 15 கார்த்திகைத் உற்சவம், ஆகஸ்ட் 17 கைலாச வாகனம் என அடுத்து அடுத்து வந்த பெரு விழாக்களில் சனநெருக்கம் கூடியதால், அவர்கள் ஒரு ஒதுக்குப்புறமாக தங்கள் தனிமையை தேடிக்கொண்டனர். கைலாச வாகன ஊர்வலத்தின் போது, அருண், இரவு உணவுக்கு, தான் தங்கியிருந்த யாழ்ப்பாணத்தில் உள்ள ஆடம்பர 5 நட்சத்திர ஹோட்டலுக்கு அழைத்தான். அவள் எந்தவித தயக்கமும் இன்று புன்னகையுடன் ஏற்றுக் கொண்டாள். எனவே அவர்கள், கொஞ்சம் நல்லூரில் இருந்து தள்ளி அந்த ஹோட்டலுக்கு போனார்கள். அப்ப நேரம் மாலை ஆறு அரை தான். எனவே அங்கே உள்ள நீச்சல் தடாகத்தில் ஒன்று, ஒன்றரை மணிநேரம் பொழுது போக்க முடிவு செய்தான். அவளும் சம்மதிக்க, அங்கேயே மிகவும் கவர்ச்சியான அழகான ஒரு துண்டு பெண்கள் நீச்சல் உடை [one piece ladies swimming dress] வாங்க விரும்பினான். ஆனால் அவள் இரண்டு துண்டு பெண்கள் நீச்சல் உடை [two piece ladies swimming dress] தனக்கு விருப்பம் என்றும் அது தனக்கு வசதியானது என்றும் கூற, அதையே வாங்கினான். அவள் அவன் கரங்களை தன் கரங்களுடன் கோர்த்து, நெருக்கமாக நின்று உங்கள் அறையில் போய் உடை மாற்றுவோமா என்றாள். ஆனால் அது, தனிப்பட்ட அறையில், இப்போதைக்கு வேண்டாம், இங்கு ஆண்கள் பெண்கள் தனித்தனியாக உடை மாற்றும் இடம், நீச்சல் தடாகத்துடன் இருக்கிறது, அங்கே நாம் மாற்றலாம் என்றான். அவள் ஒன்றும் பேசவில்லை, அமைதியாக ஒத்துக் கொண்டாள்.

என்றாலும் அவள் வாய் 'கண்ணுக்கு இமை ஆடை. விண்ணுக்கு மேகம் ஆடை. மண்ணுக்குக் கடல் ஆடை. இதயத்திற்கு எண்ணங்களே ஆடை. ஆன்மாவுக்கு உடல் ஆடை. காதலிக்கு காதலன் ஆடை. அதற்கு ஏன் தனித்தனி அறை? சமணர்களில் ஒரு பிரிவினர் நிர்வாணமாக இருப்பார்கள். கேட்டால் ‘நாங்கள் நிர்வாணத்தையே உடுத்தியிருக்கிறோம் என்பார்கள். உங்களுக்கு உங்களில் முதல் நம்பிக்கை வேண்டும்' ஏதேதோ முணுமுணுத்துக்கொண்டு இருந்தது. அவன் உள்ளம், அதைக் கேட்டு, அவன் மேல் உள்ள, அவளின் நம்பிக்கையை பாராட்டினாலும், அவன் எனோ தன் முடிவை மாற்றவில்லை.

தன் கரங்களை வின்னெங்கும் விரித்து அணைத்தபடி ஆதவன் ஒருபுறம் மறைய.... மறுபுறம் வான் கடலில் மும்முரமாக நீச்சல் பழக வேகமாக வந்துகொண்டிருந்தது நிலவு.... அங்கொன்றும் இங்கொன்றுமாக பரவிக் கிடந்த நட்சத்திரங்கள் பூமிக் காதலனை காதலோடு பார்க்க.....வெளிச்சம் விலகியும் விலகாத ஓர் அழகான பொன் அந்தி மாலைப் பொழுது.... அந்த இனிய மாலையில் படபடக்கும் மின்மினிகளாய் விளக்குகள் கண்சிமிட்ட.... எங்கு திரும்பினாலும் வானுயர்ந்த கட்டிடங்களை தனக்குள் அடக்கிக் கொண்டு இருந்த அந்த ஹோட்டலின் நீச்சல் தடகத்துக்கு, அழகான கண்ணைக் கவரும் பகட்டான இறுக்கமான இரண்டு துண்டு நீச்சலுடையில் இளமையின் பூரிப்புடனும், சதைப் பிடிப்புடனும் விளங்கும் தனது பெரும் பகுதியை வெளிக் காட்டிய வண்ணம், ஒய்யாரமாக அன்ன நடையில் ஆரணி வந்தாள். அருண் ஏற்கனவே உடை மாற்றி அங்கே நீச்சல் உடையில் [swim suit] இருப்பதைக் கண்ட ஆரணி, அலைகளுக்குள் எழுந்த சந்திர ஒளியைப் பார்த்தது போல் திகைத்து, நீரின் பளிங்குச் சாயலில் ஒளிர்ந்த அவனது உடல்வாகு [உடற்கட்டு], அவளது இதயத்தில் இனிய அலைகளை எழுப்பி, அவளுக்குள் சொல்லமுடியாத ஈர்ப்பைத் தூண்டின.

அதேநேரம், ஆரணியின் அசைவுகள் ஒவ்வொன்றையும் மனதில் பதித்துக் கொண்டு, விளக்குகள் அலை அலையாக பாய்ந்து, நீச்சல் தடாக தண்ணீரில், அது நட்சத்திரங்களைப் போல பிரதிபலிப்பதை ரசித்துக் கொண்டு இருந்த அவன், தன் கால்களை நீரில் நனைத்தபடி, ' உன்னைப் பார்த்துக்கிட்டே இருக்கனும்' என்றான்.

நாம் அழகிகள் என்று நினைக்கும் பெண்களில் பலர், உண்மையில் பல பொருத்தமான ஆடைகளால், தமது அவலட்சணத்தை மறைப்பதில் சாமர்த்தியம் வாய்ந்தவர்கள் என்பதே உண்மை. அவர்களின் உண்மை அழகு எவ்வளவு என்பதை அவர்களை ஒரு நீச்சலுடையில் பார்க்கும் பொழுது தான் தெரியும்! ஆரணியோ அப்படிப்பட்ட அழகி அல்ல. உடைகள் உண்மையில் அவள் அழகை வெளிக் காட்டுவதற்குத் தடையாக இருந்தனவே அல்லாமல், துணை புரியவில்லை. அவற்றைக் குறைக்கக் குறைக்க வளவளப்பான அவளது இயற்கை மேனி வெளியே தெரிய, அவள் அழகும் அதிகரித்தது. ஆரணி தன் வண்ணமயமான நீச்சலுடையில் ஒரு தங்கப் பதுமை போல் பிரகாசித்தாள். அவளது சிற்றிடை ஒடுங்கித் தோன்ற, அவளது எலுமிச்சம் பழ நிறக் கால்களும், வசீகரமான பொற்றோள்களும் பரிசுத்தமாக விளங்கிய கழுத்தும் வெறுமையாகத் தோன்றிக் காண்பவர் கண்களைப் பறித்தன. அதில் அருண் விதிவிலக்கல்ல.

அவள் அந்த உடலுடன் ஒட்டிய இரண்டு துண்டு உடையில், பெண்மையின் அழகை முழுமையாக அள்ளி வீசிக் கொண்டு, அவன் அருகில் வந்து, அவன் மேல் சாய்ந்தபடி, விளையாட்டுத்தனமாக தன் கைகளால் நீரை அள்ளி அவன் முகத்தில் தெளித்தபடி, 'நாம் ஸ்விம் [swim] பண்ணலாமா' என்று கேட்டாள். யூனிவர்சிட்டியில் [university] இருந்த காலத்தில் ஸ்விம் [swim] பண்ணியது, இன்று தான் அதன்பின் நீந்தப் போகிறேன் என்றான் அருண், பின், அவள் கைகளை பிடித்தபடி. அவள் ஷாவெரில் [shower] ஏற்கனவே உடலை நனைத்துக் கொண்டு வந்ததால், அவளின் நனைந்த தோற்றத்தை பார்த்த அருண், 'உன் ஸ்ட்ரக்சர் [structure] செம்மையாக இருக்கு .. நல்லா மெயின்டெய்ன் [maintain] பண்ணுறாய்' என்றான்.

'உங்களை பார்த்தாலே தெரியுது உங்கள் நீச்சலை .. ஆனா பிராக்டிஸ் [practice] பண்ண மீண்டும் எல்லாம் சரிவரும்' என்றவள், அவன் எதிர்பாராத அந்தக் கணத்தில் அவனை நீரில் தள்ளி விட்டு விட்டு. தானும் குதித்தாள். அப்பொழுது மாலைச் சூரியன் நீச்சல் தடாகத்தில் சிவந்த பொற்கதிர்களைப் பரப்பியிருந்தது. நீருக்குள் அவள் இறங்கிய அந்த நொடியில், பவளமெனத் திகழ்ந்த அவளது சருமம், நீரின் பளிங்குச் சாயலில் மேலும் ஒளிர்ந்தது. அவள் நீந்தத் தொடங்கியவுடன், நீர் அலைகள் அவளது உருவத்தை அணைத்துப் போற்றுவது போல தோன்றியது. ஒவ்வொரு அசைவும் ஒரு இசை, ஒவ்வொரு சிரிப்பும் ஒரு கவிதை.

அருகில் நீருக்குள் இருந்த அருணின் கண்கள் தன்னிச்சையாக அவளின் மீது ஈர்க்கப்பட்டன. அவன் நீந்துவதையே கொஞ்சம் மறந்துவிட்டான். “அவள் ஒரு சாதாரணப் பெண் அல்ல… அழகு, நாணம், இளமை—எல்லாமும் ஒரே வடிவில் கலந்தவள்,” என்று அவன் உள்ளம் தனக்குள் பேசிக் கொண்டது.

அவள் நீரிலிருந்து மேலெழும்பும் போது, துளிகள் கன்னத்தில் முத்துக்களாய் ஒளிர, அவன் இதயம் அந்த நொடியிலேயே அவளிடம் சிறையானது. அவள் சிரித்தாள்; அந்த சிரிப்பில் ஒரு மலர்ந்த ரோஜாவின் மணமும், ஒரு புதிதாக எழும் காதலின் திகைப்பும் இருந்தது. அருகில் பார்த்துக் கொண்டிருந்த அவனின் மனம் தன்னிச்சையாக அவள் மேல், மேலும் ஈர்க்கப்பட்டது. சிறிது தைரியமாய்ப் பின் பேசத் தொடங்கினான்:

“உன்னைப் பார்த்தால் நீருக்கே பொறாமை வருகிறதே… உன்னைச் சுற்றி சுற்றி ஆடி ஆடி விளையாடுகிறது.” என்றான். அவள் சிரித்தாள். தண்ணீரின் துளிகள் அவளது கன்னத்தில் முத்துக்களாய் ஒளிர்ந்தன. அவள் சிறிது நாணத்துடன் தண்ணீருக்குள் தன் கைகளை, முகத்தை புதைத்தாள். “நீ நீரிலிருந்து மேலெழும் ஒவ்வொரு தருணமும், என் மனதில் ஒரு அழகு சிற்பம் உருவாகிறது." என்றான். “சிற்பமா? நான் ஒரு சாதாரணப் பெண் தான்…” என்ற சொன்ன அவள், யாரும் அங்கு இல்லாத அந்த வேளையில், திடீரென அவனைக் கட்டி அனைத்து முத்தம் கொடுத்து, மெல்லச் சிரித்தாள். அவளது அந்த சிரிப்போடு சேர்ந்து, அவனது உள்ளங்களிலும் புதிதாய் மலர்ந்த அவனின் காதல், மேலும் மேலும் வேரூன்றிக் கொண்டது.

நீச்சல் தடாகத்தை விட்டு வெளியே வந்த ஆரணி, கண்ணாடி முன் பக்கவாட்டில் நின்றவாறு தன் முன் அழகையும் பின் அழகையும் ஒரு முறை பார்த்தாள். பின் துவாலை [towel] ஒன்றால் தன்னை போர்த்திக் கொண்டு, உடை மாற்ற புறப்பட்டாள்.

மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப,

மணிப் பூ ஆடை-அது போர்த்து,

கருங் கயல்-கண் விழித்து, ஒல்கி,

நடந்தாய்; வாழி, ஆரணி !

வண்டுகள் இரு மருங்கும் ஒலிக்க, பூ ஆடையைப் போர்த்திக் கொண்டு கயல் மீன் கண்களை விழித்துக் கொண்டு நடந்தாய், வாழ்க ஆரணி என்று அவன் மனம் மகிழ்ந்து கொண்டு இருந்தது. அருண் அங்கிருந்த சாய்வு நாற்காலியில், இன்னும் ஈரத்துடனே, திடகாத்திரமான மேனியுடன், துவாலை ஒன்றாலும் போர்க்காமல், சாய்ந்து இருந்தபடி, ' நான் உன்னை ரொம்ப அடக்கமான பொண்ணுன்னு நினைத்தேன்' என்று கிண்டலாகக் கூறினான். 'க்கும்' என பொய்க் கோபத்துடன் முகத்தைக் சுளித்துக் கொண்டாள் ஆரணி.

என்றாலும் அவனின் மூங்கில் போன்ற தோள்கள், பரந்த மார்பு, நீண்ட கைகள், முறுக்கேறிய வல்லமை கொன்ட தசைகள். நேர் கொண்ட கூரிய விழிகள். அரிதாக புன்னகைக்கும் இறுகிய உதடுகள், உறுதியைக் காட்டும் உடலமைப்பு கொண்ட கம்பீரமான தோற்றம் அவளை சற்று வியக்க வைத்தது. அவனை கீழிருந்து மேல்வரை திரும்பவும் பார்த்த ஆரணி, மார்புக்கு குறுக்கே கைகளை கட்டியபடி, ' ரொம்ப சூட இருக்கிங்க போல' என்று சிரித்தபடி, அவனின் தோளை மெல்ல தட்டி விட்டு போனாள். சந்தோசத்தில் அவன் கண்களை விரித்து 'ஓகே ஓகே' என்று கூறியபடி அவளின் பின் தானும் உடை மாற்ற தொடர்ந்தான்.

நன்றி

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

பகுதி: 04 தொடரும்

கதை - 186 / 'நல்லூர்த் திருவிழாவில், மாயையின் மயக்கம்' / பகுதி: 03

https://www.facebook.com/groups/978753388866632/posts/31368158149499423/?


  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதை - 186 / 'நல்லூர்த் திருவிழாவில், மாயையின் மயக்கம்' / பகுதி: 04

ஆகஸ்ட் 18 தங்க ரத்தத்தில் வேல்விமானம் திருவிழா. அவன் அவளுக்காக பின் வீதியில் காத்து நின்றான். இதைக் கவனித்த ஆரணியின் தோழி ஒருவள், "அருண், நீங்க கோவிலுக்குள் செல்வதை நிறுத்தி விட்டீர்கள்" என்று கிண்டல் செய்தாள். அருண் சிரித்தபடி தோள்களைக் குலுக்கினான். "இப்போது எனக்கு என் சொந்த இறைவி இருக்கிறாள்." என்றான்.

உண்மையிலேயே, அவளை ஒரு தெய்வீகப் பெண் போல அவன் வணங்கினான். ஒவ்வொரு மாலையும், அவள் கை அவன் கையைத் தொட்டபோது, அவளுடைய சிரிப்பு அவனுக்காக ஒலித்தபோது, அவன் ஒரு வெற்றியாளரைப் போல உணர்ந்தான். ஆனாலும் ஒவ்வொரு பரிசும் அவனுடைய பணப்பையை வடிகட்டியது, ஒவ்வொரு புன்னகையும் அவன் கொடுத்தவற்றுடன் பிணைந்ததாகத் தோன்றியது. ஆனால் அவள் கச்சிதமாக நடந்து கொண்டதால், அவன் அதை உணரவில்லை. ஆனாலும், அவனை பொறுத்தவரையில், அன்பு மதிப்புக்குரியது. பரிசுகள் சிறிய தியாகங்கள் மட்டுமே.

அன்று ஆரணி எனோ இன்னும் வரவில்லை. அவளின் இன்னும் ஒரு தோழி, அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, " அருண் நீங்க கொஞ்சம் கவனமாக ஆரணியுடன் பழகுங்கள், இதைவிட நான் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை" என்ற சொல்லவும் ஆரணி வரவும் சரியாக இருந்தது. அவன் முதல் முதலாக கொஞ்சம் யோசிக்கத் தொடங்கினான்.

அவன் அன்று ஒன்றும் வாங்கவும் இல்லை, சாப்பிட போகவும் இல்லை. ஆரணி சிணுங்கினாள். அவள் கண்கள் அருகிலுள்ள நகைக் கடையை நோக்கிச் சென்றன. ஆனால் அவன் கண்டும் காணாதவனாக இருந்து விட்டான். தங்க ரத்தத்தில் அலங்கார வேலன் வரும் காட்சியை அவன் பார்த்து ரசித்துக் கொண்டு இருந்தான். அவளுக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது. அவனின் கையை பிடித்து, விரல்களால் அழுத்தியபடி, " என்ன நடந்தது அருண் உனக்கு?, நான் பக்கத்தில் இருப்பது தெரியவில்லையா?" என்று கொஞ்சம் கெஞ்சலாக கேட்டாள், பின் "வாங்க, எங்கேயாவது சாப்பிட்டுக் கொண்டு தனியாக கதைப்போம்" என்றாள். ஆனால், அவன் பேசாமல் அமைதியாக நின்றான்.

அப்பொழுது தெருக்கள் பக்தர்களால் நிரம்பி வழிந்தன, "வேல்! வேல்!" என்று கோஷமிட்டன. அவன், அவள் கைகளை பிடித்து, நீ என்னவள், நான் கொண்டு வந்த என் பணப்பை குறைந்து கொண்டு போகிறது. இனி நான் கட்டுப்பாடுடன், தேவைக்கு அளவாகத் தான் செலவழிக்க முடியும். அதுதான் என்று இழுத்தான். பின் ரியோவில் போய் இருவரும் ஐஸ்கிரீமும் மரக்கறி ரோலும் சாப்பிட்டனர். ஆனால் முதல் முதலாக எந்த பரிசும் வாங்கிக் கொடுக்கவில்லை. அவளின் தோழி சொன்னதின் அர்த்தத்தை ஆரணியிடம் தேடிக் கொண்டு இருந்தான், ஆனால் அவளுக்கு அதைக் காட்டாமல் !

ஆகஸ்ட் 20, சப்பரம் திருவிழா. அவன் வேண்டும் என்றே, அன்று பணப்பை கொண்டுவரவில்லை. அவன் அவளை சோதிக்க விரும்பினான். ஆரணி தன்னை இன்னும் கூடுதலாக அலங்காரப் படுத்திக் கொண்டு வந்தாள். அவளின் அந்த கவர்ச்சி அழகு, அவள் மேல் ஆசையைக் கூடினாலும், அவன் எளிமையாக, ஒரு பக்தன் போல், ஆனால் அவளின் கையை பிடித்தபடி ஆலயத்துக்குள் புகுந்தான். என்றாலும் அவனின் உடலும் உள்ளமும் அவளை ரசித்துக் கொண்டே இருந்தன.

'காமரம் முரலும் பாடல், கள், எனக்

கனிந்த இன் சொல்;

தே மலர் நிறைந்த கூந்தல்; "தேவர்க்கும்

அணங்கு ஆம்" என்னத்

தாமரை இருந்த தையல், சேடி

ஆம் தரமும் அல்லள்;

யாம் உரை வழங்கும் என்பது

ஏழைமைப்பாலது அன்றோ?'

மதுவைப் போல் மயக்கமூட்டும் இனிய பேச்சும், இனிய மலர்கள் சூடப் பெற்ற அவளின் கூந்தலும்; தேவமாதரும் போற்றும் அழகுமிக்கவளாம் என்று சொல்லும்படி; தாமரை மலரில் வசிக்கும் திருமகளும் அவளின் தோழியாதற்குக் கூடத் தகுதி அற்றவள் என்று கூறும் அளவுக்கு ஆரணி அழகை அள்ளி அள்ளி அருணுக்கு வீசிக் கொண்டு இருந்தாள். ஆனால் அவன் முன் போல் அதை வெளியில் அவளுக்கு காட்டிக் கொள்ள வில்லை. பரிசு மட்டும் அல்ல சாப்பிடக்கூட கூப்பிடவில்லை. ஆக கோவில் தீர்த்தமும் சாதகமும் மட்டுமே அவனும் பருகி, அவளுக்கும் தன் கையால் ஊட்டினான். அதில் ஆசை, காமம் இருக்கவில்லை. அன்பும் பாசமும் இருந்தன. ஆனால் ஆரணிக்கு அது எரிச்சலாகவே இருந்தது. அவள் புன்னகை தடுமாறியது.

அவள் கொஞ்சம் கடும் கோபத்துடன், " பெண்ணை, காதலியை ரசிக்கத் தெரியாத, அவளை திருப்தி படுத்தாத, அவளுக்கு, இந்த விழாக் காலத்தில் ஒன்றுமே கொடுக்காத நட்பு , அது என்ன நட்பு?" என்று கேட்டாள். அவன் அமைதியாக இருந்தான். அவனுக்கு 'நான் இவ்வளவு நாளும் கொடுத்தேனே, ரசித்தேனே, இன்று ஒரு நாள் பொறுக்க முடியாதா? அப்படி எனறால் இது உண்மையான அன்பா ? பாசமா?' என்று கேட்கத் தோன்றியது, ஆனால் கேட்கவில்லை , அதற்கு இனி தேவையும் இல்லை.

அவள், அவனின் கையை உதறி விட்டு, அங்கிருந்து அகன்று விட்டாள். அவன் ஒன்றுமே சொல்லவில்லை. தன் யாழ் அனுபவத்தை நினைத்து தனக்குள் கவலைப் பட்டுக் கொண்டு இருந்தான். ஆலயமணி அப்போது ஒலித்தது. பக்தர்களின் அரோகரா கோஷம் காதை பிளந்தது. என்றாலும் அவள் திரும்பி வருவாள் என்ற நம்பிக்கையுடன் அங்கு கொஞ்ச நேரம் நின்றான். ஆனால் அவள் வரவில்லை.

பார்க்கப் போனால், மனித வாழ்க்கை எவ்வளவு அதிசயமானது? சில சமயம் மிகச் சிறிய சம்பவம் கூட நமது வாழ்க்கையை எவ்வளவு பெரிய அளவில் பாதித்து விடுகிறது? அருணின் வாழ்க்கையிலே, நல்லூர் ஆலயத்துக்குள் காத்திருந்த அந்த இருபது முப்பது நிமிஷங்களில் ஒரு பெரிய நாடகமே நடந்து முடிந்து விட்டது! சில சமயம் ஓடும் ரெயிலில் தற்செயலாக ஏற்படும் ஒரு சந்திப்பு, திருவிழாக் கூட்டத்தில் ஏற்படும் ஒரு பரிச்சயம், வதீியில் இரண்டு விநாடியில் நடந்து முடிந்து விடும் ஒரு சம்பவம், சில பேரினது வாழ்க்கையின் போக்கையே புதிய திசையில் திருப்பி விட்டு விடுகிறது. உலகப் பெரியார் என்று போற்றப்படும் காந்தி அடிகளின் வாழ்க்கையில், அவர் தென்னாபிரிக்காவில் ஒரு ரெயில் பெட்டிக்குள் புகும் போது ஒரு வெள்ளை வெறியனால் தடை செய்யப்பட்டதால் ஏற்பட்ட சில நிமிஷ நேர நிகழ்ச்சி அவருக்கு ஏகாதிபத்தியத்தின் தன்மையை நன்குணர்த்தி, அவர் வாழ்க்கையை முற்றிலும் மாற்றிய தோடு, ஒரு தேசத்தின், ஏன் ஒரு கண்டத்தின், அரசியல் போக்கையே முற்றாக மாற்றிவிட வில்லையா? ஆள்பவனுக்கும் ஆளப்படுபவனுக்கும் இருக்கும் தாரதம்மியத்தை அந்த ரெயில் பெட்டியில் அவர் அன்று அனுபவ ரீதியில் கண்டதுதான், அவரை ஆசியாவின் சார்பிலே சுதந்திர முழக்கம் செய்யும்படி ஊக்கியது! சில நிமிஷ நேரங்களில் நடந்து முடிந்துவிட்ட ஒரு சிறிய சம்பவம் -- ஆனால் அதன் பலனோ மிகப் பெரியது.

இன்று அருணின் அனுபவமும் அப்படியே!

நன்றி

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

பகுதி: 05 தொடரும்

கதை - 186 / 'நல்லூர்த் திருவிழாவில், மாயையின் மயக்கம்' / பகுதி: 04

https://www.facebook.com/groups/978753388866632/posts/31411651205150117/?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதை - 186 / 'நல்லூர்த் திருவிழாவில், மாயையின் மயக்கம்' / பகுதி: 05

ஆலயத்தில் 'கள்வர்கள் கவனம் உங்கள் நகைகளையும், பணத்தையும் கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள்' என்ற எச்சரிக்கும் பலகை கண்ணில் தெரிந்தது. அவன் தனக்குள் சிரித்துக் கொண்டான். அலங்கார கந்தனை பார்த்தான். நீ இந்த அலங்கார கோலம் எனறால், பெண்களை எப்படி குறை சொல்லுவேன்? அவர்களுக்கும் ஆசை அடிமனதில் இருக்கும் தானே?? கள்ளனையும், ஏமாற்றி பறிப்பவளையும் ... ' ... அவன் அதற்கு மேல் சிந்திக்கவில்லை. சனநெருக்கம் அவனை வெளியே தள்ளிவிட்டது. என்றாலும் அவன் வாய், தன் வேதனையை முணுமுணுத்துக்கொண்டு இருந்தது

ஐயோ ஸ்வாமினி [Swamini] நீ எனக்கு வேணாம்

பொய் பொய்யா சொல்லி ஏமாத்தினது போதும்

மனச்சாட்சியை நீ விலைபேசினாய்

அட நீசொல்லு நீ மனுசியா ?

உனைப்போன்ற பெண்ணை நான் நம்பி வந்தேன்

உயிர்கொன்று நீ ஓடினாயே

எனைப்போன்ற ஆணை ஏமாற்றிவிட்டு

தினம் நூறு பொய்கூறுறாயேன்?

தேன்போலே பேசி துரோகங்கள் செய்தாய்

அதை யாருக்கும் நீ செய்யாதே

நான் போன பின்னர் எனைப்பற்றி இழிவாய்

யாரோடும் பேசிக் கொல்லாதே!

ஐயோ ஸ்வாமினி [Swamini] நீ எனக்கு வேணாம்

பொய் பொய்யா சொல்லி ஏமாத்தினது போதும்!

ஆகஸ்ட் 21, தேர்த்திருவிழா இன்று. நல்லூர் திருவிழாவின் கடைசி பெரிய நாள் இது - தெருக்கள் பக்தர்களால் நிரம்பி வழிந்தன. நாட்டின் பல பாகங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டனர். அதேவேளை ஆயிரக்கணக்கான அடியவர்கள் அங்க பிரதட்சணம் செய்தும் , நூறுக்கணக்கானவர்கள் காவடிகள் எடுத்தும், கற்பூர சட்டிகள் ஏந்தியும் முருக பெருமானை வழிபட்டனர். அருண், காலையில் வெக்கை என்பதால், வேட்டி சால்வையுடன் மட்டுமே வந்தான். ஆனால் இன்று தேவையான பணம் கொண்டு வந்தான். அவன் கண்களுக்கு இன்னும் வெட்கம் இல்லை. ஆரணி அங்கு நிற்கிறாளா எனத் தேடிக் கொண்டு இருந்தது. ஆசை யாரைத்தான் விடுகுது?

இன்று அவனிடம் தாராளமாக பணம் இருப்பினும், ஒரு எளிய சாலையோர விற்பனையாளரிடமிருந்து வாங்கிய ஒற்றை சிவப்பு ரோஜாவை ஏந்தி, அங்கு காத்து நின்றான். அவன் கண்கள் அன்பால் நிறைந்திருந்தன.

ஆரணி தூர வருவது அவனுக்கு தெரிந்தது, ஆனால் அவள் தனியவரவில்லை. ஒரு இளம் தம்பதியாக, அவன் வாங்கிக் கொடுத்த சேலையுடனும் அலங்காரத்துடனும் வந்து கொண்டு இருந்தாள். அவளுக்கு அருகில் ஒரு தோழியையும் காணவில்லை. அவனுக்கு அவன் கண்ணையே நம்ப முடியவில்லை. அவன் நெஞ்சம் நடுங்கியது, அவன் இதயம் வெறுமையாகியது. அவள், அவனை கண்டும் காணாமலும், ஒரு கேலியான புன்னகையுடன் கூட்டத்திற்குள் நழுவினாள். அருணின் கையிலிருந்து ரோஜா தூசி நிறைந்த தெருவில் விழுந்தது. அவன் மனம் வாழ்வதா சாவதா என்று காதல் மேல் கோபம் கொண்டு ஏதேதோ புலம்பத் தொடங்கியது. அவன் இப்ப தத்துவவாதி (Philosopher) ஆகிவிட்டான்

தீ குச்சிகளை தேடிக்கொண்டிருக்காதீர்கள்

அவளிடம் கேளுங்கள் சிரிப்பில் இருந்து நெருப்பை

உண்டாக்குவது எப்படி என்று?

என் கல்லறைக்கு வரும் போதாவது

அவளை பார்த்து யாராவது கேளுங்கள்

அந்த புன்னகைக்கு என்ன அர்த்தம் என்று?

அருண் உயர்ந்த கோபுரத்தின் கீழ் தனியாக நின்றான். தேர் மணிகள் முழங்கின, சங்குகள் ஊதப்பட்டன, தெய்வம் தனது முழு மகிமையிலும் பிரகாசித்தது - ஆனால் அருணின் கண்கள் ஏமாற்றத்தால் நனைந்தன. அவன் திரும்பி பார்த்தான் ஆரணி ஒரு மூலையில், வெள்ளை மணலில் அந்த நபருடன் அருகில் இருந்து கடலை கொரித்துக் கொண்டு இருந்தாள். இடைக் கிடை அவர்கள் இருவரும் உரையாடுவது தெரிந்தது. என்றாலும் அவனுடன் அவள் முன்பு எப்படி அன்னியோன்னியமாக, நெருக்கமாக கொஞ்சி பேசினாலோ, அப்படி அது இருக்கவில்லை.

அந்த நேரத்தில், அந்த வழியாகச் சென்ற ஒரு வயதான ஒருவர், சற்று நின்று, அவனது நெற்றியில் மெதுவாக புனித திருநீறு பூசினார்.

"மகனே," மெதுவாகச் சொன்னார், "உண்மையான கடவுள் ஒரு பூவைக் கூட அன்புடன் ஏற்றுக் கொள்கிறார். ஆனால் ஆபரணங்களையும் தங்கத்தையும் கேட்பவர்களுக்கு அன்பு தெரியாது - அவர்களுக்கு ஆசை மட்டுமே தெரியும்."

அருண், அவரின் வார்த்தைக்கு முன் தலை குனிந்தான். அந்த வார்த்தைகள் ஆழமாகத் தாக்கின. பளபளப்பை தங்கம் என்றும், கவனத்தை பாசம் என்றும், பக்திக்கான ஆசை என்றும் தான் தவறாகப் புரிந்து கொண்டதை உணர்ந்தான். வாங்கி பெறப்படும் அன்பு நிலையானதல்ல. அது ஒரு நாள் விற்கப்படும். பரிசுகள், பொருட்கள், ஆடம்பரங்கள் மூலம் கட்டப்பட்ட அன்பு, அந்தப் பரிசுகள் இல்லாமல் போனவுடன் மங்கிவிடும்.

ஆனால் உண்மையான அன்பு வேறுபட்டது. அது ஆபரணங்களையும் செல்வங்களையும் எண்ணாது. பொருள்களை அளவிடாது. அது உள்ளம் உள்ளத்தோடு பிணையும் உணர்வு. கைகள் காலியாக இருந்தாலும், அன்பின் தூய்மை என்றும் அழியாது நிலைத்து நிற்கும்.

அருண், அன்று இரவு யாழை விட்டு புறப்பட்டான். ஆனால் அந்தப் பிரிவிலும் கூட, அவன் இதயம் மேலும் ஞானம் பெற்றது. ஏனெனில் அவன் உணர்ந்தான்—பொய்யான அன்பு, அழகு மலர்கள் போலவே விரைவில் வாடிவிடும். அது இறுதியில் பணப்பையையும் இதயத்தையும் காலி செய்து விடும். ஆனால் உண்மையான காதல், சாம்பலுக்குள் மறைந்திருந்தாலும், ஒருநாள் மறுபடியும் முளைத்து மலரக் கூடிய சக்தி கொண்டது. அது அழியாதது!

நன்றி

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

முற்றிற்று

கதை - 186 / 'நல்லூர்த் திருவிழாவில், மாயையின் மயக்கம்' / பகுதி: 05

https://www.facebook.com/groups/978753388866632/posts/31456074064041164/?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் நன்றிகள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.