Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கூடியம் குகைகள்

கூடியம் குகைகள் ( vikatan )

இதுநாள்வரை நாம் படித்துக்கொண்டிருந்த மானுட வரலாறு என்பது, ஆப்பிரிக்காவில் இருந்துதான் தொடங்குகிறது. 60 லட்சம் ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த ஒரு குரங்கு இனத்தின் தொடர்ச்சிதான் மனிதர்கள். படிப்படியாக பரிணாமம் அடைந்து, நிமிர்நிலை மனிதர்கள் உருவானார்கள். வாலற்று, நிமிர்ந்து நின்ற உலகின் முதல் மானுடன் ஆப்பிரிக்காவில் தோன்றியதாகவும், 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு அவன் பிற நிலப்பரப்புகளுக்குப் பரவினான் என்றுமே இதுவரை படித்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், இந்த வரலாற்றை மாற்றி எழுத வேண்டியிருக்கிறது.

நம் சென்னையிலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில், திருவள்ளூர் மாவட்டத்தில் ஊத்துக்கோட்டைக்கு மிக நெருக்கமாக உள்ள அல்லிக்குழி மலைத்தொடரில் 13 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவான 16 குகைகளைக் கண்டறிந்திருக்கிறார்கள் தொல்லியலாளர்கள்.

இந்தக் கற்குகைகளில் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஆதி மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அந்த மனிதர்கள் பயன்படுத்திய ஏராளமான கற்கருவிகள் மீட்கப்பட்டுள்ளன. பிரிட்டிஷ் நிலவியல் ஆராய்ச்சியாளர்களும், இந்திய தொல்லியல் துறையும் இதன் பழைமையை உறுதி செய்துள்ளனர். அமெரிக்காவில் இருந்து வெளிவரும் பல்வேறு அறிவியல், வரலாற்று ஆய்விதழ்கள் இதுகுறித்து கட்டுரைகள் வெளியிட்டுள்ளன. லெமூரியா, கீழடி என நாம் கொண்டாடிக்கொண்டிருக்கிற அத்தனை ஆதார வரலாறுகளுக்கும் முந்தைய, பரிணாமத்தின் தொடக்கநிலை மனிதர்கள் வாழ்ந்த அந்தக் குகைகள், தமிழ் நிலத்தின் தொன்மைக்குச் சான்றுசொல்லி அடர்ந்த வனப்பகுதிக்குள் மறைந்திருக்கின்றன.

கூடியம் குகைகள்

கூடியம் குகைகள்

உலகில் எழுத்துச்சான்றுகள் தோன்றுவதற்கு முந்தைய வரலாற்றை, 'தொல் பழங்காலம்' அல்லது 'பழங்கற்காலம்' என்பார்கள். எழுத்துச்சான்றுகள் தோன்றிய பிறகான காலம் வரலாற்றுக்காலம். கற்காலத்துக்கும் வரலாற்றுக்காலத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர்கள் அறிவில் பல்வேறு படிநிலைகளை எட்டினார்கள். உலோகங்களின் பயன்பாட்டை உணர்ந்து பயன்படுத்தினார்கள். மனிதர்கள், 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு 'Paleolithic Age' எனப்படும் கற்காலத்தின் தொடக்கத்தில்தான் தங்கள் அறிவைப்பயன்படுத்தத் தொடங்கினார்கள். கைகளில் கிடைத்த கற்களை எரிந்து விலங்குகளை வீழ்த்துவதில் இருந்த சிக்கலைக் கலைய, அவற்றைக் கூர்மையாகச் செதுக்கி, கோடரிகளாக மாற்றிப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். அதுதான் மானுட குல வரலாற்றில் நிகழ்ந்த மிகமுக்கிய பரிணாமம். அகழ்வாராய்ச்சிகளில் கிடைக்கும் கருவிகளைக் கொண்டே அப்பகுதியில் வாழ்ந்த மனித இனம் பற்றியும் காலம் பற்றியும் ஆராய்ச்சியாளர்கள் கணிக்கிறார்கள்.

ஆப்பிரிக்க நாடுகளில் ஆதிமனிதர்கள் வாழ்ந்ததாகக் கருதப்படும் இடங்களில் செய்யப்பட்ட அகழ்வுகளில் சுமார் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மனிதர்கள் பயன்படுத்திய கற்கருவிகள் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால், திருவள்ளூர் மாவட்டத்தின் கொசஸ்தலை ஆற்றைச் சுற்றியுள்ள நிலப்பகுதிகள், அல்லிக்குழி மலைப்பகுதிகளில் செய்யப்பட்ட அகழ்வுகள் மற்றும் ஆராய்ச்சிகளில் 2 லட்சம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட கற்கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதை ஆங்கிலேயர்களின் ஆராய்ச்சிகளும், இந்திய தொல்லியல் துறையின் ஆராய்ச்சியும் உறுதி செய்திருக்கிறது. ஆதிமனிதர்களின் வாழ்விடங்கள் அமைந்துள்ள அல்லிக்குழி மலையில், இன்னும் பல ஆயிரம் கற்கருவிகள் மறைந்து கிடக்கின்றன. சாதாரணமாக நாம் கொஞ்சம் கூர்ந்து நோக்கிக் கற்களைத் துளாவினாலே ஐந்தாறு கற்கருவிகளைக் கண்டெடுத்து விடமுடிகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் பூண்டியில் தொடங்கி ஆந்திராவில் முடிவடைகிறது அல்லிக்குழி மலைத்தொடர். பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான இதுதான் சென்னையின் தாகம் தீர்க்கும் பெரும் நீர்ப்பரப்பு. தொல்மனிதர்கள் வசித்த காலத்தில் இந்த மலைத்தொடரில் 20-க்கும் மேற்பட்ட நதிகள் ஓடியதாகவும் அதனாலேயே ஆதி மனிதர்கள் இந்த மலையை தங்கள் இருப்பிடமாகத் தேர்வு செய்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இப்போது அல்லிக்குழியாறு மட்டுமே இங்கே மிஞ்சியிருக்கிற நீர்நிலை.

கூடியம் குகைகள்

கூடியம் குகைகள்

திருவள்ளூரில் இருந்து ஊத்துக்கோட்டை செல்லும் பிரதான சாலையில், 18 கி.மீ தொலைவில் உள்ளது சித்தஞ்சேரி. இங்கிருந்து, பிளேஸ்பாளையம் செல்லும் இடதுபுறச் சாலையில் திரும்பி 12 கி.மீ பயணித்தால் மரங்களடர்ந்த 'கூடியம்' என்ற கிராமம் வரும். இதுதான் அல்லிக்குழி மலையின் வாசல். கூடியம் கிராமமே அமானுஷ்யமாக இருக்கிறது. பிரதான சாலையில் இருந்து ஊருக்குள் நுழைய கரடுமுரடான மண்சாலைதான். உள்ளே 20 வீடுகள் மட்டுமே உள்ளன. பெரும்பகுதியாக இங்கு இருளர் பழங்குடிகள் வசிக்கிறார்கள். இந்தக் கிராமத்திலிருக்கும் வீடுகளே மிகப்பழைமையானவையாக இருக்கின்றன. வட்ட வடிவத்தில் புல்கூரை வேயப்பட்டு மண்ணால் பூசப்பட்ட அந்த வீடுகளின் தன்மையே நம்மை தொன்ம வாழ்க்கைக்கு நெருக்கமாகக் கொண்டு செல்கின்றன.

கூடியம் கிராமம் வரைதான் வாகனங்கள் செல்லும். அதற்குமேல் நடந்துதான் போகவேண்டும். 6 கிலோ மீட்டர். இருபுறமும் செடிகளடர்ந்த ஒரு ஒற்றையடிப்பாதை. தொடக்கத்தில், சற்று அகலமாக இருக்கிறது. கீழே முனை நீட்டி நிற்கும் சரளைக்கற்கள். ஒரு கிலோ மீட்டரில் இந்தப் பாதை முடிவுக்கு வருகிறது. எரிமலை வெடித்துக் கொதித்தெழுந்து வந்து உறைந்து நிற்பதைப் போல ஆங்காங்கே பெரிய பெரிய கற்குவியல்கள்... பார்க்கவே பிரமிப்பாக இருக்கின்றன. இடையிடையே கூழாங்கற்கள் பொதிந்திருக்கின்றன.

கூடியம் குகைகள்

கூடியம் குகைகள்

பரபரப்புக்குத் தொடர்பில்லாத, உறைந்த நிலப்பரப்பில் நிற்பதுபோன்ற உணர்வு... அந்த இடமே அமானுஷ்யமாக இருக்கிறது. மனதை மெல்லிய அச்சம் கவ்வுகிறது. அந்த இடத்திலிருந்து தொடங்குகிறது, சாகசப் பயணம். செடிகளை விலக்கி, விலக்கி மனிதர்கள் நடந்த தடமறிந்து கால் வைக்க வேண்டும். ஓரடி விலகினாலும் முற்கள் கால்களைக் கோர்த்துக்கொள்கின்றன. 'பின்செல்...', 'பின்செல்...' என்று கால்களைத் தள்ளுகின்றன கூர்முனைகொண்ட சரளைக்கற்கள்.

எந்தக்கல் எந்த ஆதிமனிதனின் ஆயுதமாக இருந்ததோ...? பரவசமும் பயமும் இரண்டறக் கலந்த பயண அனுபவம் அது. அதற்குள் புதிது, புதிதாக, வண்ண வண்ணமாக பூச்சியினங்கள் நம்மைக் கடந்து செல்கின்றன. கடும் புதர்களுக்கு மத்தியில் முந்திரி, நெல்லி, இழுப்பை என்று நமக்கு அறிமுகமான மரங்களும் ஆங்காங்கே தென்படுகின்றன. மனித அரவமேயில்லை.

கூடியம் குகைகள்

கூடியம் குகைகள்

காட்டுப்பன்றிகள், முயல்கள், பாம்புகளின் தடங்கள் ஆங்காங்கே அச்சமூட்டுகின்றன. வளைவுகளும் நெளிவுகளும் கொண்ட, நுழைந்தும் தவழ்ந்தும் செல்லக்கூடிய ஒற்றைக்காலடிப் பாதையில் 4 கிலோ மீட்டர் நடந்தால் முதல் குகை கண்முன் விரிகிறது. உயர்ந்த மலையிலிருந்து ஒரு பகுதி, கிருஷ்ணருக்குக் காளிங்கன் விரித்த தலைபோல அகலக் குவிந்து நிற்கிறது. 200 பேர் வசதியாக அமரலாம்; உண்ணலாம்; உறங்கலாம். எங்கும் காணவியலாதப் பாறை அமைப்பு. சரளைக்கற்களை உள்ளே வைத்து மண் கொண்டு இறுக்கிப்பூசி இயற்கை நெய்த விசித்திர மலை. மேலே ஆங்காங்கே நீட்டிக்கொண்டிருக்கிற கற்கள் பெயர்ந்து தலையில் விழுந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது. ஆனால் 13 கோடி ஆண்டுகளாக அதன் நிலையிலேயே நிற்கின்றன கற்கள்.

கோடரி கொண்டு வெட்டினாலும் சிதையாத உறுதி. குகையின் முன்னால் சாம்பல் குவிந்திருக்கிறது. நம் மக்கள் சமைத்துச் சாப்பிட்ட தடம். 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு நம் மூதாதைகளுக்குக் குடிலாக இருந்த இந்தக் குகையின் மகத்துவம் அறியாமல் குகையெங்கும் தங்கள் பெயர்களை எழுதிவைத்து சிதைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள் இளைஞர்கள். குகையின் ஒரு பகுதியில் மத்திய தொல்லியல்துறை அகழ்வு செய்த தடம் தெரிகிறது. தன் நண்பர்களோடு குகையைக் காண வந்த, பாறை ஓவிய ஆராய்ச்சியாளர் காந்திராஜன், இந்தக் குகை குறித்து சிலாகித்துப் பேசினார்.

கூடியம் குகைகள்

கூடியம் குகைகள்

"மானுட வரலாற்றையே மாற்றி எழுதும் அளவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தொல்சின்னம் இது. உலகின் மிகத் தொன்மையான இடங்களில் ஒன்று. மானுட வரலாறு என்பது, அவர்கள் பயன்படுத்திய கருவிகளைக் கொண்டே வகைப்படுத்தப்படுகிறது. முதல் கற்காலம் என்பது, 5 லட்சம் ஆண்டுகள் முதல் 2.50 லட்சம் ஆண்டுகள்வரை. இந்தக் காலக்கட்டத்தில் வாழ்ந்த மனிதர்களை 'ஹோமினாய்ட்' (Hominid) என்று அழைப்பார்கள். இவர்கள், கற்களை ஆயுதமாகப் பயன்படுத்திய முதல் தலைமுறை மனிதர்கள். கென்யா, கிழக்கு ஆப்பிரிக்கப் பகுதிகளில் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்கருவிகள் கிடைத்துள்ளன. அதே காலக்கட்டத்தைச் சேர்ந்த கற்கருவிகள் இந்தக் குகைகளிலும், அருகில் கொற்றலை ஆற்றுப்படுகையில் உள்ள அதிரம்பாக்கம் கிராமத்திலும், பல்லாவரத்திலும் கிடைத்துள்ளன.

'கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து மனிதர்கள் உலகெங்கும் பரவினார்கள்' என்பதுதான் இதுவரை நம்மிடமிருக்கும் தியரி. ஆனால். இந்தக் குகையில் கிடைக்கும் தரவுகள், 'இங்கிருந்தே ஆப்பிரிக்கா போன்ற இடங்களுக்கு நகர்ந்திருக்க வேண்டும்' என்ற புது வரலாற்றை உருவாக்குகின்றன. அல்லது ஆப்பிரிக்காவில் மனிதர்கள் உருவான அதேக் காலக்கட்டத்தில் இங்கும் மனிதர்கள் உருவாகியிருக்க வேண்டும். தொல் பழங்காலத்தில் ஆப்பிரிக்காவும் இந்தியாவும் ஒரே கண்டமாக இருந்ததாக நிலவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். அதன்படிப் பார்த்தால் இந்தக்கருத்து இன்னும் வலுப்படும். தற்போது டி.என்.ஏ சோதனைகள் நடந்து வருகின்றன. அதன் முடிவுகள் இந்தக் கருத்துக்கு வலுச்சேர்க்கும்..." என்கிறார் அவர்.

கூடியம் குகைகளை முதன்முதலில் கண்டறிந்து உலகின் பார்வைக்குக் கொண்டுவந்தவர், ராபர்ட் ப்ரூஸ் பூட் (Sir.Robert Bruce Foote). 'தொல்லியலின் தந்தை' என்று இவரைக் கொண்டாடுகிறார்கள். பிரிட்டிஷ் இந்தியாவில் நிலவியலாளராகப் பணியாற்றிய ப்ரூஸ்க்கு, தென்னிந்தியாவில் நிலக்கரி, கனிம வளங்கள் உள்ள பகுதிகளைக் கணக்கெடுக்கும்பணி தரப்பட்டது. தொல்லியல் ஆய்வுகளில் மிகுந்த ஆர்வம் கொண்ட ப்ரூஸ், பல்லாவரம் பகுதியில் ஆய்வுசெய்தபோது, உலகின் ஆதி தொல்குடி பயன்படுத்திய கல் ஆயுதம் ஒன்றை கண்டுபிடித்தார். அதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் வட்டாரத்தில் ஆய்வுசெய்தபோது, இந்தக்குகையின் வடிவம் அவரை ஈர்த்தது. அல்லிக்குழி வனப்பகுதியில் தங்கி தீவிரமாக ஆய்வுசெய்து, 'தொல் மனிதன் வாழ்ந்த இடம் இதுதான்' என்பதையும் இந்தக்குகை, 'டைனோசர்கள் வாழ்ந்த ஜூராசிக் காலத்தைச் சேர்ந்தது' என்றும் பதிவு செய்தார். இது நடந்தது 1864-ல். ஆனால் பிரிட்டிஷ் இந்திய அரசு, தொடர்ச்சியாக இதுகுறித்து ஆய்வு செய்ய விரும்பவில்லை. வி.டி.கிருஷ்ணசாமி, பீட்டர்சன், எச்.டி.சங்காலியா போன்ற தொல்லியாளர்கள் தன்னார்வத்தில் சிறுசிறு ஆய்வுகளை மேற்கொண்டார்கள். அதன்பிறகு, 1962 முதல் 1964 வரை, மத்திய தொல்லியல்துறை சார்பில், ஆர். டி. பானர்ஜி இந்தக் குகையின் ஒரு பகுதியை அகழ்ந்து ஆய்வுசெய்தார். அதில், ஏராளமான கல் ஆயுதங்கள் கிடைத்தன.

கூடியம் குகைகள்

கூடியம் குகைகள்

அவற்றையெல்லாம் பகுப்பாய்வு செய்து, 'இது தொல்மனிதர்கள் பயன்படுத்திய குகைதான்' என்பதை உறுதி செய்தது மத்திய தொல்லியல் துறை. கற்கருவிகளின் பழைமையும் உறுதி செய்யப்பட்டது. இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட கற்கருவிகள் 'சென்னைக் கோடரிகள்' (மெட்ராஸ் ஆக்ஸ்) என்று வகைப்படுத்தபட்டன. மேலும் அருகில் உள்ள பூண்டி நீர்தேக்கம் அருகே ஒரு அருங்காட்சியகம் அமைத்து மாநில தொல்லியல்துறை அவற்றையெல்லாம் பாதுகாக்கிறது. இந்தியாவிலேயே பழங்கற்கால அகழ்வுப் பொருள்களைக் கொண்டிருக்கும் ஒரே அருங்காட்சியகம் இதுதான் என்கிறார்கள். ஆனால், குகையை கைவிட்டுவிட்டது மத்திய தொல்லியல் துறை. மாநில அரசும் இதில் ஆர்வம் காட்டவில்லை. வனத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் போய்விட்டது. வனத்துறை, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவித்து, எளிதில் செல்லவியலாதவாறு கட்டுப்பாடுகளை விதித்துவிட்டது. பத்தோடு பதினொன்றாகிப் போனது இந்த மலையும் குகையும். பாலித்தீன் குப்பைகளாலும், மதுப்பாட்டில்களாலும் நிறைந்திருக்கிறது குகை. குகைக்கு மேலே கரடுமுரடான பாறைகளின் வழி ஏறினால், நடுவில் அழகிய ஒரு சுனை. எக்காலமும் இதில் நீர் வற்றுவதேயில்லையாம்.

அடர்மஞ்சள் நிறத்தில் இருந்தாலும் அருந்த சுவையாக இருக்கிறது. அதைக்கடந்து மேலே ஏறினால், உலகின் ஒரு அரிய நிலக்காட்சி கண்முன் விரிகிறது. நான்கு புறமும் பச்சை... எதிரில் புதர்களால் மறைந்துபோன ஒரு பிரமாண்ட குகையின் தோற்றம். ஒரு சிறுகோடாக மனிதத்தடம் தெரிகிறது. மேலே விதவிதமான கற்கள். எல்லாம் கனிமங்கள். நான்கைந்து வண்ணங்கள் கொண்டவை, சுட்ட செங்கலைப் போல செக்கச் சிவப்பாக இருப்பவை, பளீரென்ற வெள்ளைக்கல் என திறந்தவெளிக் கண்காட்சியைப் போல இருக்கிறது. ஆங்காங்கே நுனி கூராகவும், அடி கனத்தும் காணப்படும் கோடரிக்கற்கள். லேசாக பட்டாலே கிழித்துவிடும் அளவுக்கு கூராக்கப்பட்ட சிறு சிறு கல் ஓடுகள்... என ஒரு கல்லாயுதத் தொழிற்சாலை போலவே இருக்கிறது. "உண்மைதான். இதை 'கல்லாயுதத் தொழிற்சாலை' என்றுதான் ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். சாதாரணமாக கீழே குனிந்தபடி நடந்தால் பத்து கோடரிகள், ஐந்து கிழிப்பான்களை கண்டுபிடிக்கலாம்.

கூடியம் குகைகள்

கூடியம் குகைகள்

இந்த மாதிரிப் பாறைகள் தமிழகத்தில் வேறெங்கும் இல்லை. இந்த மலைகளும், குகைகளும் எரிமலை வெடிப்பில் உருவாகியிருக்கலாம் என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் நிலவியலாளர்கள், பெருமழைக்காலத்தில் ஏற்பட்ட தொடர் வெள்ளப்பெருக்கின் விளைவாக பாறைகள் திரண்டுவந்து இறுகியே குகைகளும் கற்களும் மலையும் உருவானது என்று தீர்க்கமாக கண்டறிந்து பதிவு செய்திருக்கிறார்கள். வெறும் கல்லை விட்டெரிந்து விலங்குகளை வேட்டையாடப் போராடிய மனிதன், அறிவு விருத்தியடைந்து கல்லைச் செதுக்கி, கூராக்கி ஆயுதமாகப் பயன்படுத்தத் தொடங்கியது ஒரு முக்கியமான பரிணாம வளர்ச்சி. தங்களுக்குத் தேவையான ஆயுதங்களைச் செய்யும் கற்கள் இங்கே கிடைப்பதால்தான் இந்தப்பகுதியை தங்கள் வாழிடமாக தொல்மக்கள் தேர்வு செய்திருக்கிறார்கள். இதன் முக்கியத்துவம் நமக்குப் புரியவில்லை. அல்லிக்குழி மலையில் 16 குகைகள் இருப்பதாக பிரிட்டிஷ் குறிப்புகளில் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் இரண்டு குகைகளுக்குத்தான் நாம் செல்லமுடிகிறது. அந்தக் குகைகளையும் கண்டறிந்து, ஆய்வு செய்தால் இன்னும் பல ஆதாரங்கள் கிடைக்கும்..." என்கிறார் ரமேஷ் யந்த்ரா.

சென்னை ஓவியக்கல்லூரியில் படித்த ரமேஷ், கூடியம் குகைகள் பற்றி ஒரு ஆவணப்படம் எடுத்துள்ளார். அந்தப்படம் கேன்ஸ் திரைப்படவிழாவில், குரும்படப் பிரிவில் திரையிடப்பட்டது. அதன்பிறகே ஊடகங்கள் இந்தக் குகைகளை ஏறெடுத்துப் பார்த்தன. இன்றும் தீவிரமாக இந்தக்குகைகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார் ரமேஷ். முதல் குகையிலிருந்து, இரண்டாவது குகைக்குச் செல்லும் பாதை இன்னும் சவாலானது. மிகவும் குறுகலாகவும் முற்கள் அடர்ந்ததாகவும் இருக்கிறது. விதவிதமான பூரான்கள், பாம்புகள், சிலந்திகள், தேள்கள், செய்யான் போன்ற ஆபத்தான பூச்சிகள் ஊர்ந்து பீதி கிளப்புகின்றன. வழியில் பெரிய உருண்டைக்கல். மஞ்சள், குங்குமமிட்டு அதை வழிபடுகிறார்கள், கூடியம் மக்கள். கோழி அறுத்துப் பலியிட்டதற்கான சான்றுகள் தெரிகின்றன. அதைக்கடந்து, நடந்தால் பிரமாண்டமான இரண்டாவது குகை. 500 பேர் வசதியாகத் தங்கலாம். அகன்று விரிந்து, குடை மாதிரி நிற்கிறது. ஆங்காங்கே நீர் சுரந்து சொட்டுச்சொட்டாக வழிகிறது. ஒரு சூலாயுதம் நட்டு, அம்மன் சிலையை வைத்து வழிபடுகிறார்கள்.

கூடியம் குகைகள் - மணாச்சியம்மன்

கூடியம் குகைகள் - மணாச்சியம்மன்

மணாச்சியம்மன் என்கிறார்கள். அவ்வப்போது வந்து கிடா வெட்டி பூஜை போடுவார்களாம். ஆனால், மலையின் அமைப்பும், அந்த நிலக்காட்சியும் பிரமிப்பூட்டுகின்றன. நம் மூதாதைகள் நடந்து திரிந்த அந்தத் தடத்தின் நிற்க சிலிர்ப்பாக இருக்கிறது. சுற்றிலும் அடர்ந்த காடு. பாறைகளில் கண்படும் இடமெல்லாம் தேன்கூடுகள். தேனிக்களின் ரீங்காரமும், தேன்கூடுகளில் அலகு நுழைந்து உரிஞ்சத் துடிக்கும் தேன்கிளிகளின் குதியாட்டமும் அந்த சூழலை வாழ்வின் உன்னதமான தருணமாக்குகின்றன. இந்த மலையின் தொடர்ச்சியாக, உயர்ந்து நிற்கிற கூழாங்கல் மலைகள் அதிசயமாக இருக்கின்றன. அடுத்த குகைக்கு நடக்கும் முயற்சியை தேனிக்களும், விதவிதமான பூச்சியினங்களும், குத்தீட்டி போல நீட்டி நின்று கொக்கி போல குத்தியிழுக்கும் முட்களும் கைவிடச் செய்கின்றன. தேனீக்களின் சத்தமும், பறவைகளின் ஒலியையும் தவிர ஓர் இறுக்கமான மௌனம் அந்த வெளியைச் சூழ்ந்திருக்கிறது. அங்கு உலவும் அதிசுத்தக் காற்றில் ஆதிமனிதனின் அழியாத ஆன்மா உறைந்திருப்பதை உணரமுடிகிறது. 'ஜியாலஜிக்கல் சர்வே ஆப் இண்டியா' நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் குமரகுரு, பல்வேறு நிலவியல் ஆய்வுகளின் முடிவில் இந்தக் குகை 13 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டதுதான் என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார். மத்திய தொல்லியல் துறையில் மேற்கு மண்டல கண்காணிப்பாளராக இருந்த ஆர்.டி.பானர்ஜியும் அதையே கூறியிருக்கிறார்.

காலங்களைத் தின்று செரித்துவிட்டு சிறிதும் பங்கமின்றி உறுதியாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டு நிற்கிறது இந்தக்குகை. இந்தக் குகையிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் அத்திரம்பாக்கம் என்ற கிராமம் உள்ளது. கொசஸ்தலை ஆற்றுப்படுகையில் உள்ள இந்தக் கிராமத்தில் தொல்லியல் ஆய்வாளர் சாந்தி பப்பு ஒரு அகழ்வாய்வு மேற்கொண்டார். அங்கு 3000 கல்லாயுதங்கள் கிடைத்தன. அவற்றை அமெரிக்காவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி ஆய்வு செய்தபோது 16 லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது தெரியவந்தது. இதுபற்றி அமெரிக்காவில் இருந்து வெளிவரும் ஆராய்ச்சி இதழ்களில் எழுதினார். அதன்பிறகே உலகம் அறிவியல்பூர்வமாக இந்தக்குகையின் பழைமையை உணர்ந்தது. உலகெங்கும் வெளியிடப்பட்டுள்ள 30க்கும் மேற்பட்ட மானுட வரலாற்று ஆராய்ச்சி நூல்களில் இந்தக் குகைகள் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால், தமிழில் தொல்லியல் துறை வெளியிட்ட மிகச்சிறிய நூலைத்தவிர இதுபற்றிப் படிக்க எதுவுமே இல்லை.

கூடியம் குகைகள்

கூடியம் குகைகள்

"70 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான் இந்தியாவில் மனிதக்குடியேற்றம் நடந்தது என்று உலகப் புகழ்பெற்ற ஆய்வாளர் மைக்கேல் வுட் தெரிவித்திருந்தார். கூடியம் குகைகளும் அத்திரம்பாக்கத்தில் கிடைத்த கற்கருவிகளும் அந்த தியரியை மாற்றுகின்றன. கூடியம் குகைகளைப் போல தமிழகத்தில் ஏராளமான தொன்மையான இடங்கள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் ஆய்வு செய்தால் வரலாறு மாறும்" என்கிறார் தொல்லியலாளர் சாந்தி பப்பு.

"இவ்வளவு பழைமையான இடம் இருக்குன்னு இந்தப் பகுதியில இருக்கிற பலபேருக்குத் தெரியாது. அப்பப்போ வேண்டுதல் வச்சு கிடாவெட்டு நடத்துறதுக்காக குகைக்குப் போறதோட சரி. எப்பவாவது ஒன்னு ரெண்டு பேரு, 'குகை எங்கேயிருக்கு'னு கேட்டு வருவாங்க. இதுவே அமெரிக்காவுலயோ, இங்கிலாந்திலயோ இருந்திருந்தா இதை உலகத்தோட வரலாற்றுச் சின்னமா மாத்தி கண்காட்சியே வச்சிருப்பாங்க. நாம அதை குடிக்கிற இடமா மாத்தி வச்சிருக்கோம். பொழுதுபோக்காக வர்ற பசங்க, குகையில பெயின்ட்ல பேரு எழுதி வச்சுட்டுப் போயிடுறாங்க. நாங்க வாழ்ந்துக்கிட்டிருக்கிற இந்த மண்ணுல உலகத்தோட முதல் மனுஷன் நடந்து திரிஞ்சிருக்கான்னு நினைக்கிறபோதே நெகிழ்ச்சியாயிருக்கு. இதை அரசுகள் பாதுகாக்கணும்..." என்கிறார் இந்தப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் கமலக்கண்ணன்.

இரண்டாயிரமாண்டு இலக்கியங்களையும் ஆயிரமாண்டு கல்வெட்டுகளையுமே சான்றாகக் காட்டி நம் தொன்மையைப் பேசிக்கொண்டிருக்கிறோம். இதோ, நமக்கு அருகாமையில், தலைநகரலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு வரலாற்றுச்சான்று இருக்கிறது. அதைப் பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வதோடு வரலாற்றை மீட்டிருவாக்கம் செய்ய வேண்டிய பணியை எவரும் முன்னெடுக்கவில்லை. உலகின் முதல் ஆதிப்பெருங்கலை, ஆயுதத் தயாரிப்புதான். கூடியம் மலைப்பகுதி மிகப்பெரிய ஆயுதத் தொழிற்சாலையாக இருந்துள்ளது. குழந்தைகளுக்கு, பெண்களுக்கு, வலது கைப் பழக்கமுள்ளவர்களுக்கு, இடது கையாளர்களுக்கு என வகைவகையாக இங்கே கற்கருவிகள் செய்திருக்கிறார்கள். தகுதிவாய்ந்த கற்களைத் தேர்வுசெய்து சூடாக்கி தட்டிப் பெயர்த்து கைபிடி அகன்றும் முனைப்பகுதி கூர்மையாகவும் அவ்வளவு நுட்பமாக வடிவமைத்திருக்கிறார்கள். அந்த வடிவத்தில் ஏராளமான ஆயுதங்கள் இங்கே கிடக்கின்றன.

கூடியம் குகைகள்

கூடியம் குகைகள்

சில பெரிய கற்களில் ஒருவித குறியீடுகள் இருக்கின்றன. இவை காலம் கிறுக்கியதா, ஆதி மனிதன் கிறுக்கியதா என்று தெரியவில்லை. இன்னும் 10க்கும் மேற்பட்ட குகைகள் இருப்பதாக பதிவுகள் இருப்பதால் எல்லா இடங்களிலும் ஆய்வு செய்தால் ஆதி மனிதனின் எலும்புகள், கிறுக்கல்கள்கூட கிடைக்க வாய்ப்புண்டு. அப்படிக் கிடைக்கும்பட்சத்தில், 'கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றியது தமிழ்நிலமும் தமிழ்க்குடியும் என்பது வெறும் வார்த்தைகளில்லை... வரலாறு என்பது தெளிவாகும்...!


கூடியம் குகைகள் : ஒரு திக் திக் பயணம்! | Know the history and secrets of the Gudiyam Cave - Vikatan

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறவுகள்

புதிய தகவல்கள், பகிர்விற்கு நன்றி @பிழம்பு அண்ணை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.