Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரமேஷ் பிரேதன் நினைவஞ்சலி

jeyamohanSeptember 28, 2025

546183358_32149654937966766_383069900038

ரமேச்ன் 2023 விஷ்ணுபுரம் விழாவில்

ரமேஷ் பிரேதன் சென்ற 25 செப்டெம்பர் அன்று இரவு ஒரு கவிதையை எழுதி தன் முகநூலில் வலையேற்றியிருந்தார். அது ஒரு காதல் கவிதை. அதன்பின் சில மணிநேரங்களில் மயக்கமுற்றிருக்கக் கூடும்.கடுமையான இதய அடைப்பு மற்றும் ரத்த அழுத்த உயர்வு. உடனடியாக 26 காலையில் மருத்தவமனையில் சேர்க்கப்பட்டார். 27 செப்டெம்பர் 2025 மாலை 520க்கு உயிர்பிரிந்தது.

அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது முதல் நம் நண்பர்கள் உடனிருந்தனர். ஒவ்வொரு மணிநேரத்திற்கும் செய்திகளை அளித்தனர். முதல் நாளிலேயே ரமேஷ் மீள்வது அரிதினும் அரிது என்று கூறிவிட்டனர். மூளையில் முழுமையான ரத்தக்கசிவு. உள்ளுறுப்புகள் செயலிழந்துகொண்டிருந்தன. இதயம் நின்று நின்று இயங்கியது. கருவிகளின் உதவியுடன் உயிர் நீடித்தது. கருவிகளை எப்போது நீக்கவேண்டும் என்ற முடிவை எடுப்பது மட்டுமே 26, 27 ஆம் தேதிகளில் எஞ்சிய கேள்வியாக இருந்தது.

சென்ற 2019 ல் ரமேஷ் என்னிடம் “எனக்கு விஷ்ணுபுரம் அவார்டு குடுய்யா” என்றார்.

“இப்ப என்ன அப்டி அவசரம்? வாலிப வயசுதானே?” என்றேன்.

“பணம் தேவை இருக்கு” என்றார்.

“பணம்தானே? அத அனுப்பிடறோம்…” என்றேன். அந்தப் பணத்தை அனுப்பினோம்.

அதன்பின் மீண்டும் 2021 ல் அழைத்தார். “இப்பயாச்சும் அவார்டு குடுய்யா. நான்லாம் கோவிட்ட தாண்டமாட்டேன்” என்றார்.

“உங்களுக்கெல்லாம் கல் மாதிரி ஆயுசு… அவார்டு முறையாத்தான் வரும்… சின்னப்பசங்களுக்கு குடுக்கிற அவார்டு இல்ல இது” என்றேன்.

அதன்பின் அவ்வப்போது தன் ஆயுள் முடிவதைப்பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார். ஆனால் கோவிட் அதன்பின் வந்த ஒரு நெருக்கடிக்காலம் ஆகியவற்றை கடந்துவிட்டார். அவருக்கு விருதை  வரிசையை முந்திக்கொண்டு அறிவிப்பதே அவருடைய உடல்நிலை, ஆயுள் பற்றி நானும் ஐயப்படுகிறேன் என்று ஆகிவிடுமோ என்னும் குழப்பம் இருந்துகொண்டே இருந்தது. ஆகவே அவருடைய நிரந்தர ஐயத்தை வேடிக்கையாகவே கடந்துகொண்டிருந்தேன்.

இந்த முறை அவருக்கு இயல்பாகவே வரிசையில் இடம் அமைந்தது. அதை ஆகஸ்டில் அவரிடம் சொன்னேன். “இப்பவே குடுத்திரு… டிசம்பரில் நான் இருக்கமாட்டேன்” என்றார்.

“நீங்க இருப்பீங்க….” என்றேன்.

மீண்டும் ஜூனில் அழைத்து “செப்டெம்பரில் தூரன் விழாவோட சேத்தே நடத்திரு… இருப்பேனான்னு தெரியலை” என்றார்.

ஆனால் உண்மையில் உடல்நிலை சற்று மேம்படத் தொடங்கியிருந்தது. ஃபோனில் அழைத்தால் உடல்நிலை மேம்படுவதைப்பற்றியே சொல்லிக்கொண்டிருந்தார். எனக்கும் நம்பிக்கை வலுப்பெற்றது, நலம்பெறுவது இயல்வதல்ல. ஆனால் இன்னும் சில ஆண்டுகள் வாழ்வார் என எண்ணினேன்.

ramesh-1024x683.jpg

விஷ்ணுபுரம் விருது அறிவிக்கப்பட்டபின் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தார். உண்மையில் அவர் உடல் மிகவும் நலிந்து எல்லையை அடைந்துகொண்டிருந்தது. நான் கண்ட அந்த ஊக்கம் என்பது விருது அளித்த மகிழ்ச்சியின் விளைவாக அவரே உருவாக்கிக்கொண்டதுதான். சென்ற பதினைந்தாண்டுகளில் அவரை அத்தனை உற்சாகமாக நான் பார்த்ததே இல்லை. வாழ்த்துவதற்காக அவர் எண், மின்னஞ்சல் இரண்டையும் கொடுத்திருந்தேன். தினம் இருபது முப்பதுபேர் கூப்பிட்டு வாழ்த்தினர்.தினம் மின்னஞ்சல்கள்.

“நோய் ஆஸ்பத்திரின்னு இல்லாம ஒரு ஃபோன் வர்ரதே இப்பதான்… ” என்று என்னிடம் சொன்னார். “இத்தனை பேர் படிச்சிருக்கானுக. இவங்கள்லாம் இதுவரை எங்க இருந்தாங்க?”

அழைத்த ஒவ்வொருவரையும் நினைவில் வைத்திருந்தார். குறிப்பாக 30 வயதுக்குக் குறைவான இளைஞர்கள், இளம்பெண்கள் அழைத்தால் மிகுந்த குதூகலம் அடைந்தார்.அடுத்த தலைமுறை வாசிக்க வருகிறது என்று சொல்லிக்கொண்டிருந்தார். ஜி.எஸ்.எஸ்.வி.நவீன் அழைத்தபோது ‘உங்க மனைவி கிருபா நேத்து கூப்பிட்டாங்க’ என்றாராம். இருவரையும் அவருக்கு முன்னர் தெரியாது.

“ஒருத்தன் சிறுபத்திரிகைச் சூழலுக்கு வெளியே இருந்து கூப்பிட்டாலே சந்தோஷமா இருக்கு. புதிய ஆளுங்க வர்ராங்க” என்று நண்பரிடம் சொன்னார்.

நான் அவரிடம் செப்டெம்பர் 22 ஆம் தேதி, திங்களன்று பேசினேன். “உடம்பு நல்லா இருக்கு. கொஞ்சமா சுவரைப்பிடிச்சு நானே டாய்லெட் போய்ட்டேன்” என்று சொன்னார்.

நீண்டகாலமாக அவரால் படுக்கைவிட்டு அசையமுடியாத நிலை இருந்தது. ஆகவே அது மிகப்பெரிய முன்னேற்றம். நான் உற்சாகம் அடைந்து நிறைய பேசினேன். பெரும்பாலும் கேலி கிண்டல். தமிழிலுள்ள ஏறத்தாழ எல்லா எழுத்தாளர்களையும் கேலி செய்துவிட்டோம். குறிப்பாக யுவன் சந்திரசேகரை.

545922547_32149654501300143_384388302331

ரமேஷ் எனக்கு குற்றாலத்தில் கலாப்ரியா நிகழ்த்திய பதிவுகள் அரங்கில் அறிமுகமானார். வழக்கம்போல மிகக்கடுமையான எதிர்க்கருத்துக்களுடன் மோதிக்கொண்டோம். ஆனால் விஷ்ணுபுரம் 1997ல் வெளியானபோது ரமேஷ் அதை இந்தியாவில் எழுதப்பட்ட முதன்மையான இலக்கியப்படைப்பு என மதிப்பிட்டார்- அதை எழுதியுமிருக்கிறார். நேரில் சந்தித்தபோது எங்கள் உறவு சட்டென்று அணுக்கமாக ஆகியது. என்னைத் தழுவிக்கொண்டு “நாங்க கொள்கையா பேசினதெல்லாமே உங்க கிட்டேருந்து எழுத்தா வந்திருச்சி” என்றார்.

அது எனக்கும் மகிழ்ச்சி அளித்தது. விஷ்ணுபுரம் போன்ற ஒரு படைப்பை புரிந்துகொள்ள அன்றுமின்றும் சாமானிய வாசகர்களால் இயல்வதில்லை. ஒரு படைப்பில் கருத்துக்கள், உணர்ச்சிகள், தரிசனங்களின் முரணியக்கமாக உருவாகி வருவது என்ன என்று அவர்களுக்கு பிடிகிடைப்பதில்லை. அதன் ஏதேனும் சிலபகுதிகள், சில வரிகளைக்கொண்டு அதை வகுத்துவிடுவதையே இங்கே உள்ள அரசியல்சார்ந்த வாசிப்பு கற்றுத்தருகிறது.

விஷ்ணுபுரம் பற்றி அன்று ஒரு பெரும் கூட்டம் அது இந்துத்துவ நாவல் என்று பிரச்சாரம் செய்து வந்தது. அதை ரமேஷ் ‘பௌத்தம் கடந்த பௌத்த நாவல்’ என்று வரையறை செய்தார். அறுதியாக அந்த பேருருவன் தொல்தந்தை மட்டுமே என்றும், அவனுடைய புரண்டுபடுத்தலில் அந்நாவல் முழுமையடைவதும் அவரை மிகவும் கவர்ந்திருந்தன. ‘எல்லாமே போய்ச்சேரும் பழங்குடிமனம்’ என்ற ஒன்றை வெளிப்படுத்திய நாவல் என்றார்.

அதன்பின் எங்களுக்குள் நட்பு உருவாகியது. ரமேஷ், பிரேம், மாலதி எங்கள் பத்மநாபபுரம் இல்லத்துக்கும், பின்னர் பார்வதிபுரம் இல்லத்திற்கும் வந்து தங்கினர்.நான் ஊட்டியிலும் பிற ஊர்களிலும் ஒருங்கிணைத்த கவிதை உரையாடல் அரங்குகளில் தொடர்ச்சியாகக் கலந்துகொண்டனர். ரமேஷின் வாழ்க்கையில் பின்னரும் நான் தொடர்புகொண்டிருந்தேன்.

நடுவே ஓர் இடைவெளி. அதற்கான காரணங்கள் நானோ ரமேஷோ அல்ல. அதை பிறிதொரு தருணத்தில் சொல்லவேண்டும். 2011 ல் வெள்ளையானை நாவல் நண்பர் அலெக்ஸின் எழுத்து பிரசுர வெளியீடாக வந்தபோது அவர் புதுச்சேரியில் ஒரு மதிப்புரைக்கூட்டம் ஏற்பாடு செய்தார். அந்நிகழ்ச்சி முடிவில் மீண்டும் ரமேஷைச் சந்தித்தேன். மெலிந்து ஒடுங்கி அழுக்கு வேட்டியும் சட்டையுமாக இருந்தார்.

“நல்லா இருக்கீங்களா?” என்று சம்பிரதாயமாகக் கேட்டேன்.

“நல்லா இல்லை” என்றார்.

நிகழ்ந்ததை அவர் சொன்னார். பிரேம், மாலதி இருவரும் அவரை கைவிட்டுவிட்டதாகவும், ஓராண்டுக்குமேல் ஒரு தோப்பில் காவலராக பணியாற்றியதாகவும், உடல்நிலை மோசமாக ஆனதனால் அவ்வேலையைச் செய்யமுடியாமல் அப்போது பாரதி நினைவில்லம் வராந்தாவில் வாழ்வதாகவும் சொன்னார். உறவினர்களிடம் செல்ல அவர் விரும்பவில்லை. உறவுகளை முன்னரே அவர் வெட்டிவிட்டிருந்தார். இரண்டு முனைவர்பட்ட ஆய்வாளர் நண்பர்கள் உணவு வாங்கி அளித்து உதவிவருவதாகவும் பெரும்பாலும் நினைவில்லம் வருபவர்களிடம் கையேந்தி வாழ்வதாகவும் சொன்னார். “பிச்சை எடுக்கிறேன் ஜெயமோகன்” என்றார்.

நான் உணர்ச்சிவசப்பட்டு அவர் கைகளைப் பற்றிக்கொண்டேன். “நான் சாப்பிடுற வரை நீங்களும் சாப்பிடுவீங்க. நான் கூரைக்குக் கீழே இருக்கிற வரைக்கும் நீங்க தெருவிலே இருக்க மாட்டீங்க” என்றேன்.

அன்றே அவரை ஒரு வாடகை அறையில் அலெக்ஸ் உதவியுடன் தங்கவைத்தேன். ஒரு வாரத்தில் மணி ரத்னம் அளித்த நிதி, என் சொந்த நிதி மற்றும் கே.வி.அரங்கசாமி அளித்த நிதியுடன் அவருடைய அக்காவின் வீட்டிலேயே ஒரு பகுதியை நிரந்தரக் குத்தகைக்கு எடுத்தோம். அப்பகுதியை செப்பனிட்டு குளிர்சாதன வசதி செய்து, கட்டில் போன்றவை வாங்கி அவரை குடியமர்த்தினோம்.

குளிர்சாதனப்பெட்டி, தொலைக்காட்சி என பிற பொருட்களை வாங்க பல்வேறு நண்பர்கள் உதவினர். அவர் ஓர் இல்லத்திற்குச் சென்றதுமே அமைதியடைந்தார். அதன்பின்னர் தான் கைவிடப்பட்டதைப் பற்றிய அகக்கொந்தளிப்பு உருவாகியது. முகநூலில் வசைகளை எழுதத்தொடங்கினார்.

நான் புதுச்சேரிக்குச் சென்று அவரிடம் பேசினேன். “நீங்கள் இந்தக்கசப்பிலிருந்து வெளியேறாத வரை உங்களால் எழுத முடியாது. உங்களுடைய அடிப்படைப்பிரச்சினைக்கு திரும்புங்கள்” என்றேன். அவர் அழுது கொந்தளிக்க நான் திரும்பத் திரும்ப “எழுதுங்கள். படைப்பு ஒன்றே மீளும் வழி. அது ஒன்றே உயிர்வாழ்வதன் பொருள்” என்றேன்.

சீற்றத்துடன் நான் சொன்ன ஒருவரி அவரை புண்படுத்தியது. “நான் நிதியளிப்பது ரமேஷ் என்ற எழுத்தாளனுக்கு. இந்த உடலுக்கு அல்ல” என்றேன்.

அவர்  என்னை வசைபாடினார். “உனக்கு வந்தா தெரியும்…” என்றார்

ஆனால் நான் வந்தபின் நீண்ட கடிதம் எழுதினார். “நீ சொல்றதுதான் சரி. உன்னோட கிப்ட் நீ யார்னு உனக்கு சின்னவயசிலேயே தெரியும்கிறதுதான்… எனக்கு இப்ப தெரியுது. நான் எழுத்தாளன், கலைஞன், அது மட்டும்தான். வேற ஒண்ணுமே இல்லை”

அதன்பின்னர்தான் அவர் தன் தீவிரமான படைப்புகளை எழுதினார். அவருடைய படைப்புகள் அவர் இணைந்து எழுதியவையாகவும் வெளிவந்துள்ளன. ஆனால் எந்த வாசகரும் அவற்றில் இருப்பது அவருடைய ஆளுமை மட்டுமே என அறியமுடியும். இந்த இரண்டாம் கட்ட ரமேஷ் அவருக்கே உரிய பயணங்களின் வழியாக தமிழ்மெய்யியல் களத்திற்குள் நுழைந்தவர். அதுவே அவருடைய கலைச்சாதனை.

ரமேஷிடம் தொடர்ச்சியாக தொடர்பிலும் உரையாடலிலும் இருந்தேன். கடலூர் சீனு, சிவாத்மா என புதுச்சேரி நண்பர்கள் தொடர்பில் இருந்தார்கள். ரமேஷ் இறுதியாக வெளியே வந்தது 2013ல் தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டபோதுதான். அப்போதும் உடல்நிலை மோசமாக இருந்தது. அவர் வர விரும்பியமையால் பயண ஏற்பாடு செய்திருந்தோம். அன்று தன் வாசகர்கள் பலரை சந்தித்து மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்தார். என்னிடம் விடைபெற்றபோது கண்களில் கண்ணீர் இருந்தது. “போதும், இத்தனைபேர் வாசிக்கிறாங்கன்னு தெரிஞ்சதே போதும்” என்றார்.

மீண்டும் புதுச்சேரிக்குச் சென்ற சிலநாட்களிலேயே பக்கவாதத் தாக்குதல். அதன்பின் வெளியே சென்றதெல்லாமே மருத்துவத்தின் பொருட்டுதான். ஆகவே இந்த ஆண்டு விஷ்ணுபுரம் விழாவுக்கு வந்தே தீர்வேன் என்று உறுதியாக இருந்தார். ஓர் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து அழைத்து வருவதாகச் சொன்னோம். மேடைக்கு ஒரு தனிப்பாதை அமைக்கவும் முடிவுசெய்திருந்தோம்.

ரமேஷின் நோய் என்பது அவருடைய மரபணுவில் உள்ளது. பிறப்பு முதல் மிகமிக உயர்ந்த ரத்த அழுத்தம் அவருக்கு இருந்தது. 25 ஆண்டுகளுக்கு முன்பு அவர் என் இல்லத்திற்கு பிரேம், மாலதியுடன் வரும்போதே அச்சிக்கல் கடுமையாக இருந்தது. அவரால் குனியமுடியாது, மயங்கி விழுந்துவிடுவார். முகத்திலுள்ள சிறு பருக்கள் வெடித்து ரத்தம் கசியும். அவருடைய ரத்த அழுத்த அளவு நம்பவே முடியாத அளவு மிகுதி. சாமானிய ரத்த அழுத்தத்தைவிட இரு மடங்கு.

அவர் உடல் அதற்கு பழகியிருந்தமையால்தான் அவர் வாழமுடிந்தது. 2010 ல் எங்கள் கவனிப்புக்கு வந்தபின் தொடர்ச்சியாக மருத்துவக் கவனிப்பிலேயே இருந்தார். பக்கவாதம், உள்ளுறுப்புகள் செயலிழப்பு எல்லாமே ரத்த அழுத்தத்தின் விளைவுதான். ஆனால் வாழ்வின்மீதான பற்று உடலை தாக்குப்பிடிக்கச் செய்தது.

பதிமூன்றாண்டுக்காலம் நோயுற்றிருந்தார். படுக்கையில் மலம் கழிப்பவராகவும் இருந்தார். ஆனால் இறுதிக்கணம் வரை கலைஞனாக வாழ்ந்தார். அது மட்டுமே தான் என உணர்ந்தவராக விடுதலை அடைந்தார். வீடுபேறு என்பது வாழ்விலேயே அடைவது என்பதே என் கொள்கை. அவர் அவ்வகையில் நிறைவாழ்க்கை. அஞ்சலி ரமேஷ். நான் ஒரு துளியும் குறைவைக்கவில்லை என ஒரு முறை சொன்னீர்கள். அந்நிறைவே போதுமானது இன்று.

https://www.jeyamohan.in/223291/

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சலித் தாக்குதல்

AVvXsEh2Ag3A2lPSEpvvGg9ad08mR7tpcYmrPmy0m5pB0ibBvHQw91hoQdJbk7O2dw3JDF-qxrFCTwTY4pT5XqV5Eez8qXZu3N5OLP9vEGIYOHhFW_3aIyjeLpLYttXFebLnCZvrnS8EKwXH0xFBchbGjxlTUQxUlw7oRH-OPJEXGNJjeV94O381r6iujqjTbpZb=w400-h260

தமிழில் சுரணை உள்ள எழுத்தாளர்களின் ஒரே வேண்டுகோள் தாம் இறந்து ஜெயமோகன் அஞ்சலிக் கட்டுரை எழுதும் நிலை வரக்கூடாது என்பதே. ரமேஷுக்கு அவர் எழுதிய அஞ்சலி அப்படியான மாபெரும் அவலம். அதில் ரமேஷின் படைப்பாற்றலைவிட உடல் நோய்மையைப் பற்றியே 99% எழுதியிருக்கிறார் - முழுக்க முழுக்க தன்னிடம் இரந்து பெற்ற ஒரு கலைஞனாகச் சித்தரிக்கிறார். தான் ஒருவருக்கு அளித்த தொண்டைக் கூட அவர் சொல்லலாம். அது அவரது தேர்வு. ஆனால் அந்த அஞ்சலிக் குறிப்பு முழுக்க ரமேஷ் ஜெயமோகனை விட ஒரு படி கீழாகவே வைக்கப்பட்டிருக்கிறார். ஒருவித படிநிலை முழுக்க உள்ளோடுகிறது. இது ஜெயமோகனுடைய மிகப்பெரிய ஆளுவை வழு - அவரால் பிறரை தனக்கு இணையாகக் காணவே முடிவதில்லை.

அவர் ரமேஷுக்கு உதவியபின்னர் அவரிடம் "நான் உன் உடலுக்காக நிதியளிக்கவில்லை, உனக்குள் இருக்கும் கலைஞனுக்கே நிதியளிக்கிறேன்" என்றிருக்கிறார். அது ரமேஷை சீற்றமடைய வைக்கிறது. அதில் எந்த ஆச்சிரியமும் இல்லை. நீங்கள் ஒருவரை அப்படி உடலென்றும் கலைஞனென்றும் பிரிக்க இயலாது. அது ஒருவரைக் கடுமையாக அவமதிக்கும் செயல். என்னிடம் யாராவது வந்து "நான் உன் உடலுக்காக, உன் குடலுக்காக, உன் மொட்டைத் தலைக்காக நிதியளிக்கவில்லை, உன் படைப்பாற்றலுக்காகவே தருகிறேன்" என்றால் நான் அவரைச் செருப்பைக் கழற்றி அடிப்பேன். ஏனென்றால் படைப்பாக்கம் நமது உடலின், மனத்தின், ஆளுமையின் நீட்சி. ஒரு கலைஞனாக நாம் பெருமை கொள்கிறோம், ஆனால் வாழும் உடலாகவும் சுயமாகவுமே நாம் நம்மை அடையாளப்படுத்துகிறோம். பின்னது பொருட்படுத்தத்தகாதது என்பது ஒருவரை வாழ்த்துவது அல்ல, தாழ்த்துவது ஆகும். அது ஏனோ ஜெயமோகனுக்கு விளங்குவதில்லை - அவரிடம் ஏதோ தன் உடல், சுயம் குறித்து தாழ்வுணர்ச்சி அடியாழத்தில் இருக்கிறது என நினைக்கிறேன், அதை அமுக்கி வைத்துவிட்டு பிறரிடம் அதைக் காண்கிறார், தன்னைத் தானல்லாமல் ஒரு படைப்பாற்றலாகக் காண்பதைப் போல பிறரையும் பார்க்கிறார் என நினைக்கிறேன்.

அவர் உணர்ச்சிவயப்பட்டு ரமேஷுக்கு உதவ முடிவெடுத்தது, அதில் திடமாக இருந்தது நல்ல விசயம். ஆனால் அவர் ரமேஷைக் குறித்து தனக்குள் கொண்டுள்ள சித்திரம் அசமத்துவத்தின் மீது உருவானது. அது தொடர்ந்து ரமேஷைக் காயப்படுத்திக் கொண்டே இருந்திருந்திருக்கும் என நினைக்கிறேன். தானம் அளிப்பதை விட சிறப்பானது சமமாக நடத்துவது. கொடுக்கும் போது நாம் தாழ வேண்டும், உயரக் கூடாது. தாழ்வதே மகத்தானது. ஒருவருக்கு கொடுக்கும்போது அது தனக்கு வாய்த்த அதிர்ஷ்டம் என் நினைக்க வேண்டும். ஜெயமோகனுக்கு அது ஒருநாளாவது தன் வாழ்வில் சாத்தியப்பட வேண்டும்.

ராஜமார்த்தாண்டனுக்கு அவர் எழுதிய அஞ்சலிக் கட்டுரையும் இப்படித்தான் இருந்தது. நோய்வாய்ப்பட்டவர்களை தன் "ஏழாம் உலகம்" நாவலில் வரும் குறைபட்ட உருப்படிகளாக அவர் கருதுவதும், அந்த உருப்படிகளை வைத்து வியாபாரம் செய்யும் பண்டாரமே தானெனெக் கருதுவதுமே அவரது பிரச்சினை. இதுவே பணமும் அரசியல் அல்லது சமூக அதிகாரமும் படைத்தவர்கள் இறந்தால் இவ்வாறு எழுத மாட்டார் - சட்டென கைகூப்பி வணங்கி எழுதுவார்.

இன்று நான் பார்க்கும் இளைஞர்களில் 90% பல்வேறு நோய்களைத் தாங்கியவர்களே - நடந்தால் மூச்சு வாங்குவோர், ஏகப்பட்ட ஒவ்வாமைகள் கொண்டவர்கள், கொஞ்சம் தூசு பட்டால் தாளாமல் இருமுகிறவர்கள், மூச்சிரைக்கிறவர்கள், சிறுசொல்லுக்கு பதற்றமாகி மயங்கிவிழுவோர். இவர்களையெல்லாம் ஜெயமோகன் பார்த்தால் என்ன சொல்வார் எனப் பயமாக இருக்கிறது. நோயென்பது இன்று இயல்பாகிவிட்டது. ஆரோக்கியம்தான் இன்று இயல்புமீறல். இவர்களிடம் போய் உங்கள் நோயைக் கடந்து வாருங்கள் என்று சொன்னால் கொலைவெறியாகிவிடுவார்கள். ஏனென்றால் தம் உடல் குறித்து அவர்களுக்கு எந்த தாழ்வுணர்ச்சியும் இல்லை. அதை ஒருவர் தம் மீது சுமத்துவதை ஏற்க மாட்டார்கள். ஜெயமோகனே தன்னிடம் வருகிறவர்களிடம் அதையே விதைத்து பெருஞ்ச் சொற்குவியலக்ளாக அறுவடை பண்ணுகிறார்.

இனிமேல் படைப்பாளிகள் இறப்பதாக முடிவெடுத்தால் ஏதாவது வேற்றுகிரகத்துக்குச் சென்று மறைந்துவிட வேண்டும். அங்கிருந்து இறந்தால் அது பூமிக்கு வர ஒளிக்காலத்தில் பல ஆண்டுகள் ஆகும் என்பதால் ஜெயமோகனின் அஞ்சலியில் இருந்து தப்பித்து விட முடியும். அல்லாவிட்டால் நாம் சாகும் நிலை வரும்போது தலைமறைவாகிவிட வேண்டும். மற்றபடி ஜெயமோகனின் கொரில்லா அஞ்சலித் தாக்குதலில் இருந்து தப்பிக்க எழுத்தாளர்களுக்கு வேறுவழியே இல்லை.

நான் ஜெயமோகனைப் படித்து எதிர்வினையாற்றக் கூடாது என்பதை ஒரு தீர்மானமாகவே கடைபிடித்து வந்தேன். ரமேஷுக்கு அவர் எழுதிய அஞ்சலியைப் படித்து என் கட்டுப்பாட்டை இழந்துவிட்டேன்.

Posted 14 hours ago by ஆர். அபிலாஷ்

https://thiruttusavi.blogspot.com/2025/10/blog-post.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.