Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: Digital Desk 3

30 Sep, 2025 | 01:23 PM

image

நீண்டகாலமாக நிலவும் தண்ணீர் மற்றும் மின்சாரத் தடைகள் காரணமாக இளைஞர்கள் தலைமையிலான போராட்டங்கள் பல நாட்களாகத் தொடர்வதால், மடகஸ்கார்  ஜனாதிபதி தனது அரசாங்கத்தைக் கலைப்பதாக அறிவித்துள்ளார்.

"அரசாங்க உறுப்பினர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளைச் செய்யவில்லை என்றால் நாங்கள் ஒப்புக்கொள்கிறோம், மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்," என திங்களன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தேசிய உரையில் மடகஸ்கார் ஜனாதிபதி ஆண்ட்ரி ராஜோலினா தெரிவித்துள்ளார்.

"நாங்கள் வாழ விரும்புகிறோம், உயிரிழக்க விரும்பவில்லை" என கோசமிட்டு “ஜென் Z” போராட்டங்கள் என்று அழைக்கப்படும் இந்த ஆர்ப்பாட்டத்தில், வியாழக்கிழமை முதல் மடகஸ்கார் முழுவதும் உள்ள நகரங்களில் ஆயிரக்கணக்கான இளம் ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதிகளில் இறங்கினர்.

அமைதியின்மையை அடக்க பாதுகாப்புப் படையினர் பயன்படுத்தியமையினால் போராட்டக்காரர்கள் 22 பேர் உயிரிழந்துள்ளதோடு, 100 பேர் காயமடைந்துள்ளனர்.  இது  தேவை அற்ற செயல் என ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணையாளர் கண்டித்துள்ளார்.

மடகஸ்காரின் வெளிவிவகார அமைச்சு ஐ.நா.வின் புள்ளிவிவரங்களை நிராகரித்துள்ளதோடு, "வதந்திகள் அல்லது தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது" என குற்றம் சாட்டியுள்ளது.

முதலில் தலைநகர் அன்டனனரிவோவில் போராட்டங்கள் ஆரம்பமாகின. ஆனால் பின்னர் மடகஸ்கார் நாடு முழுவதும் எட்டு நகரங்களுக்கு பரவியுள்ளன.

வன்முறை மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் பற்றிய செய்திகளைத் தொடர்ந்து அன்டனனரிவோவில் மாலை முதல் விடியற்காலை வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, 

கூட்டத்தைக் கலைக்க பொலிஸார் ரப்பர் தோட்டாக்கள் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

பாதுகாப்புப் படையினரின் வன்முறை அடக்குமுறையால் தான் "அதிர்ச்சியடைந்ததாக" ஐ.நா ஆணையாளர் வோல்கர் டர்க் தெரிவித்துள்ளார்.

கைதுகள், தடியடிகள் மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக துப்பாக்கிச் சூடுகள் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

"தேவையற்ற மற்றும் விகிதாசாரமற்ற சக்தியைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, தன்னிச்சையாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து போராட்டக்காரர்களையும் உடனடியாக விடுவிக்குமாறு பாதுகாப்புப் படையினரை நான் கேட்டுக்கொள்கிறேன்," என்று டர்க் திங்களன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஐ.நா.வின் கூற்றுப்படி, உயிரிழந்தவர்களில் "பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட போராட்டக்காரர்கள் மற்றும் பார்வையாளர்கள், ஆனால் போராட்டக்காரர்களுடன் தொடர்பில்லாத தனிநபர்கள் மற்றும் கும்பல்களால் அடுத்தடுத்த பரவலான வன்முறை மற்றும் கொள்ளையில் கொல்லப்பட்ட மற்றவர்களும் அடங்குவர்".

கடந்த வாரம், மடகஸ்கார் ஜனாதிபதி வேலையைச் சரியாகச் செய்யத் தவறியதற்காக மின்சக்தி அமைச்சரை பதவி நீக்கம் செய்ததாக அறிவித்தார், ஆனால் ஜனாதிபதியும் அவரது அரசாங்கத்தின் ஏனையவர்களும் பதவி விலக வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

இந்நிலையில் திங்கட்கிழமை மீண்டும் ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கினர்.

"மின்வெட்டு மற்றும் குடிநீர் வழங்கல் பிரச்சனைகளால் ஏற்பட்ட கோபம், கவலை மற்றும் சிரமங்களை நான் புரிந்து கொள்கிறேன்," என ரஜோலினா,  தேசிய ஊடகமான டெலெவிசியோனா மலாகாசி வாயிலாக தனது உரையில் தெரிவித்தார்.

அண்ட்ரி ராஜோலினா, "பிரதமர் மற்றும் அரசாங்கத்தின் பொறுப்புகளை நிறுத்திவிட்டேன்" எனவும், அடுத்த மூன்று நாட்களில் புதிய பிரதமருக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும், பின்னர் புதிய அரசாங்கம் அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

எனினும், புதிய அரசாங்கம் அமைக்கப்படும் வரை தற்போதைய அமைச்சர்கள் இடைக்கால அமைச்சர்களாகச் செயல்படுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இளைஞர்களுடன் கலந்துரையாட விருப்பம் இருப்பதாகவும் ரஜோலினா தெரிவித்துள்ளார்.

1960ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதிலிருந்து, மடகஸ்கார் பல எழுச்சிகளால் அதிர்ச்சி அடைந்துள்ளது. 2009ஆம் ஆண்டில் நடந்த பெரும் போராட்டங்கள், முன்னாள் ஜனாதிபதி மார்க் ரவலோமானனாவை பதவி விலகச் செய்தன. அப்பொழுது ரஜோலினா அதிகாரத்தில் வந்தார்.

2023இல் மூன்றாவது முறையாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் இந்தப் போராட்டங்களே ஜனாதிபதி எதிர்கொண்ட மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளன.

https://www.virakesari.lk/article/226477

  • கருத்துக்கள உறவுகள்

பங்களாதேஷ், நேபாளம், இப்போது மடகாஸ்கர்.

எல்லாற்றிலும் ஒற்றுமை தலைமுறை Z இன் ஆர்ப்பாட்டம், புரட்சி.

மறுவளமாக, இதை எல்லாவற்றிலும் அமெரிக்கா / மேற்கு படை தளம் அமைக்க முயற்சிக்கிறது.

மற்றது, இதை எல்லாம் சீனாவுடன் சிறந்த உறவை கொண்ட அரசாங்கங்கள்.

நேபாளத்தில் இருந்தே cia அப்போது (1960 களில்) தளம் கொண்டு இருந்தது, திபெத்துக்கு உதவி அளிக்க, திபெத்தில் இருந்து சீனாவை எதிர்ப்பவர்களை வரவழைத்து, அமெரிக்காவில் (Colorado இல்) கொரில்லா இராணுவ பயிற்சி கொடுத்து, மீண்டும் திபெத்துக்கு பயிற்சி கொடுத்தவர்களை திருப்பி திபெத்துக்கு அனுப்புவதற்கு.

இதை இந்தியாவும் அப்போது ஆமோதித்து அனுமதித்து இருந்தது.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மடகஸ்காரில் அரசியல் குழப்பம் : ஜனாதிபதி அண்ட்ரே ரஜோலினா நாட்டை விட்டு தப்பியோட்டம்!

Published By: Digital Desk 3

14 Oct, 2025 | 01:04 PM

image

கிழக்கு ஆபிரிக்காவில் அமைந்துள்ள நாடான மடகஸ்காரில், ஜனாதிபதி அண்ட்ரே ரஜோலினாவுக்கு எதிரான மக்கள் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், அவர் நாட்டை விட்டு தப்பியோடியுள்ளார்.

கடந்த செப்டம்பர் 25 ஆம் திகதி ஆரம்பித்த இந்தப் போராட்டம், ஜனாதிபதி ரஜோலினா தலைமையிலான அரசுக்கு எதிராகத் திரும்பியது. பொதுமக்கள் ஊழல், வறுமை, மின்வெட்டு, தண்ணீர் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின்போது, அந்நாட்டு இராணுவத்தின் முக்கியமான படைப்பிரிவான கெப்செட் (CAPSAT), ஜனாதிபதியின் உத்தரவுகளை ஏற்க மறுத்து, அரசுக்கு எதிராகத் திரும்பியது. இது அந்நாட்டு ஜனாதிபதிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.

போராட்டம் தீவிரமடைந்த நிலையில், ஜனாதிபதி ரஜோலினா பிரான்ஸ் நாட்டின் இராணுவ விமானத்தில் நாட்டை விட்டு வெளியேறி தப்பிச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி, தப்பியோடியதைத் தொடர்ந்து, இராணுவத்தின் கெப்செட் படைப்பிரிவு நாட்டின் பல்வேறு முக்கியப் பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மடகஸ்கார் முன்னர் பிரான்ஸின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்ற பின்னரும், பிரான்ஸ் தனது படைவீரர்களை அங்கு நிலைநிறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/227697

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜென் 'ஸி' போராட்டத்தால் மேலும் ஒரு நாட்டில் அரசு கவிழ்ப்பா? ராணுவம் புதிய அறிவிப்பு

மடகாஸ்கர், ஜென் ஸி போராட்டம்

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, மடகாஸ்கரில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது

கட்டுரை தகவல்

  • சாம்மி அவாமி

  • பிபிசி ஆப்பிரிக்கா,அன்டானனாரிவோ

  • டானாய் நெஸ்டா குபெம்பா

  • 15 அக்டோபர் 2025, 03:03 GMT

இந்தியப் பெருங்கடல் தீவான மடகாஸ்கரில், ஜென் ஸி இளைஞர்கள் முன்னின்று வாரக்கணக்காக நடத்திய போராட்டங்களுக்குப் பிறகு, ஒரு சிறப்பு ராணுவப் பிரிவு, அதிபர் ஆண்ட்ரி ராஜோலினாவிடமிருந்து (Andry Rajoelina) ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை அதிபர் மாளிகைக்கு வெளியே நின்றபடி, கேப்சாட் (CAPSAT - பணியாளர் நிர்வாகம் மற்றும் தொழில்நுட்ப மற்றும் நிர்வாக சேவைகள் பிரிவு) தலைவர் கர்னல் மைக்கேல் ரான்ட்ரியனிரினா (Col Michael Randrianirina), ராணுவம் ஒரு அரசை அமைக்கும் என்றும், இரண்டு ஆண்டுகளுக்குள் தேர்தல் நடத்தும் என்றும் கூறினார். தேர்தல் ஆணையம் போன்ற முக்கிய ஜனநாயக அமைப்புகளின் செயல்பாட்டையும் அவர் இடைநிறுத்தம் செய்துள்ளார்.

ஜென் ஸி (Gen Z) போராட்டக்காரர்கள் மாற்றத்தின் ஒரு பகுதியாக இருப்பார்கள் என்றும், "இயக்கம் தெருக்களில் உருவாக்கப்பட்டது, எனவே அவர்களின் கோரிக்கைகளுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும்" என்றும் அவர் மேலும் கூறினார்.

அதிபர் ராஜோலினா பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்டதாக தெரியவந்ததைத் தொடர்ந்து, தலைநகர் அன்டானனாரிவோவில் கொடிகளை அசைத்து ராணுவத்தினரும், போராட்டக்காரர்களுமாக ஆயிரக்கணக்கானோர் கொண்டாடி வருகின்றனர்.

கேப்சாட் என்பது மடகாஸ்கரின் மிகவும் சக்திவாய்ந்த ராணுவப் பிரிவாகும்.

இந்த பிரிவுதான் 2009 இல் ராஜோலினா ஆட்சிக்கு வந்தபோது அவருக்கு ஆதரவளித்தது. ஆனால், சனிக்கிழமை அந்த ராணுப் பிரிவு போராட்டக்காரர்களுடன் இணைந்தது.

மடகாஸ்கரின் அரசியலமைப்பு நீதிமன்றம், கர்னல் ரான்ட்ரியனிரினாவை நாட்டின் புதிய தலைவராக அறிவித்துள்ளது. இருப்பினும், அதிபர் அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், ராஜோலினா இன்னும் பொறுப்பில் இருப்பதாகவும், இது "ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி" என்றும் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மடகாஸ்கர், ஜென் ஸி போராட்டம்

பட மூலாதாரம், Real TV Madagascar / YouTube

படக்குறிப்பு, இரண்டு ஆண்டுகளுக்குள் தேர்தல் நடத்தப்படும் என ராணுவ தலைவர் கர்னல் மைக்கேல் ரான்ட்ரியனிரினா உறுதியளித்துள்ளார்

ராஜோலினா எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை, ஆனால் "ராணுவப் பணியாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளால்" தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதாகக் கூறப்படும் ஒரு கொலை முயற்சிக்குப் பிறகு, தான் ஒரு "பாதுகாப்பான இடத்தில்" தஞ்சம் புகுந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இத்தகைய எந்தவொரு செயலிலும் தாங்கள் ஈடுபடவில்லை என்று CAPSAT ராணுவப் பிரிவு மறுத்துள்ளது.

பிரெஞ்சு ராணுவ விமானம் மூலம் நாட்டிலிருந்து அதிபர் ராஜோலினா பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வந்துள்ளன.

மடகாஸ்கர் "இப்போது குழப்பம் நிலவும் ஒரு நாடு" என்று கர்னல் ரான்ட்ரியனிரினா பிபிசியிடம் கூறினார்.

"அதிபர் இல்லை - அவர் வெளிநாடு சென்றுவிட்டார் என்பதால் குழப்பம் நிலவுகிறது."

நாடு முழுவதும் நிலவும் நீண்டகால நீர் பற்றாக்குறை மற்றும் மின்வெட்டுகளை எதிர்த்து, இளைஞர்கள் தலைமையிலான இயக்கம் போராட்டங்களைத் தொடங்கிய இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்தக் குழப்பம் தொடங்கியது.

மடகாஸ்கர், ஜென் ஸி போராட்டம்

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, தண்ணீர் பற்றாக்குறை மற்றும் மின்வெட்டுகளை கண்டித்து ஜென் ஸியின் போராட்டம் தொடங்கியது

இந்த ஆர்ப்பாட்டங்கள் விரைவில் தீவிரமடைந்து, அதிக வேலையின்மை, ஊழல் மற்றும் விலைவாசி நெருக்கடி ஆகியவற்றால் ராஜோலினா அரசாங்கத்தின் மீதான பரவலான அதிருப்தியைப் பிரதிபலித்தது.

ஐ.நா.வின் கூற்றுப்படி, போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான மோதல்களில் குறைந்தபட்சம் 22 பேர் உயிரிழந்தனர் மற்றும் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இருப்பினும், மடகாஸ்கர் அரசாங்கம் இந்தத் தகவலை "வதந்திகள் மற்றும் தவறான தகவல்களின்" அடிப்படையில் இருப்பதாகக் கூறி நிராகரித்திருந்தது.

தொழில்முனைவோர் மற்றும் முன்னாள் டிஜே (DJ) ஆன அதிபர் ராஜோலினா, ஒரு காலத்தில் மடகாஸ்கருக்கு ஒரு புதிய தொடக்கமாகக் காணப்பட்டார்.

அவர் தனது 34 வயதில் அதிபரானார். ஆப்பிரிக்காவின் இளைய தலைவர் என்ற பெருமையைப் பெற்ற அவர், நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்தார். பின்னர் 2018 தேர்தலில் மீண்டும் ஆட்சிக்கு வந்தார்.

மடகாஸ்கர், ஜென் ஸி போராட்டம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அதிபர் ராஜோலினா திங்கட்கிழமை ஃபேஸ்புக் மூலம் உரையாற்றினார்

ஊழல் மற்றும் அடியாட்களின் ஆதிக்கம் தொடர்பான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து அவர் செல்வாக்கை இழந்தார், அவர் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்தார்.

அதிகாரம் அவரிடமிருந்து விலகிச் சென்ற போதிலும், அவர் தொடர்ந்து தனது செல்வாக்கை செலுத்த முயற்சித்து வருகிறார்.

அவரை அதிபர் பதவியிலிருந்து நீக்க எதிர்க்கட்சிகள் வாக்களிப்பதற்கு முன்பு தேசிய சபையைக் கலைக்க ராஜோலினா முயன்றார், ஆனால் அது பலனளிக்கவில்லை.

செவ்வாயன்று, தேசிய சபை உறுப்பினர்கள் ராஜோலினாவை 130-க்கு ஒன்று என்ற வாக்குகள் வித்தியாசத்தில் பதவி நீக்கம் செய்தனர். அவரது சொந்தக் கட்சியான இர்மாரை (Irmar) சேர்ந்த உறுப்பினர்கள் கூட அவருக்கு எதிராகப் பெருமளவில் வாக்களித்தனர்.

இந்த வாக்கெடுப்பு "செல்லாது" என்று ராஜோலினா நிராகரித்தார்.

மடகாஸ்கரின் அரசியல் விவகாரங்களில் ராணுவம் "தலையிடுவதற்கு" எதிராக ஆப்பிரிக்க ஒன்றியம் (AU) எச்சரித்துள்ளதுடன், "அரசியலமைப்புக்கு முரணான அரசாங்க மாற்றங்களுக்கான எந்தவொரு முயற்சியையும்" நிராகரித்துள்ளது.

பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோங், இந்தச் சூழ்நிலை "மிகவும் கவலையளிக்கிறது" என்று கூறியுள்ளார்.

இந்தத் தீவு நாடு சமீபத்திய ஆண்டுகளில் பல அரசியல் எழுச்சிகளைக் கடந்து வந்துள்ளது.

உலக வங்கியின் கூற்றுப்படி, மடகாஸ்கர் உலகின் மிக ஏழ்மையான நாடுகளில் ஒன்றாகும். அதன் 30 மில்லியன் மக்களில் 75% பேர் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்கின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cy0kljejn7wo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Madagascar-ஐ உலுக்கிய Gen Z Protest: போராட்டத்தால் கவிழ்ந்த ஆட்சி; ராணுவம் கையில் ஆட்சி

இந்தியப் பெருங்கடல் தீவான மடகாஸ்கரில் Gen Z தலைமுறையினர் நடத்திய போராட்டத்துக்கு பிறகு கேப்சாட் (CAPSAT) என்ற சிறப்பு ராணுவ பிரிவு ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த போராட்டம் வெடித்தது எதனால்? மடகாஸ்கரில் நடந்தது என்ன?

#Madagascar #GenZ #Protest

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.