Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0

அடுப்பங்கரையில் வைக்கப்பட்டிருக்கும், அதன் கழுத்தில் கயிறு கட்டப்பட்ட சாராய போத்தலில் சொர்ர்ர்ரென்ற சத்தத்துடன் கருப்பு தேநீர் ஊற்றப்படுகிறது. வாசலில் நிழல் அசைய அவள் தனது கையில் உள்ள தேநீர் சாயத்தை வேறு ஒரு ஜொக்கில் ஊற்றிகிறாள். சாரய போத்தலில் ஊற்றப்பட்ட சாயம் போத்தல் வாயில் வழியாக புகையை வெளியே பரப்பபுகிறது. சூடு ஆறி விட கூடாது என்பதால் அதை ஒரு சாரய மூடியில் இறுக்கமாக மூடுகிறாள் அவள். 

“தேயிலை துாளையா தராங்கங்க.. ஒரு மண்ணுக்கும் புரோஜம் படாது..தேயிலையே கெதினு கெடக்கும் நமக்கு எங்க நல்ல சாயம் கிடைக்கிறது..” 

அம்மாவின் சத்தம் கேட்டு அன்பரசு எழந்து வருகிறான். தேத்தண்ணிய ஆற்றியபடி அவனிடம் தருகிறாள். கூதல் காய அடுப்பில் மிலாறு தனலில் முன் கிடந்த பலாக்கட்டையில் அவன் உட்காந்து, பிளேன்டீயை உறிஞ்சி குடிக்கிறான். அதன் சுவை அவனுக்கு ஏதோ செய்ய அம்மாவிடம் திரும்பி. “அம்மாவோ.. தேத்தண்ணி கசப்பா இருக்ககும்மா.பால் டீ தாங்க..” 

”அட போடா தம்பி.. பால் டீக்கு நான் எங்க போவேன்.. அப்பா ஸ்டோருலாதான் வேலை செய்யிது. … என்னத்துக்கு பிரயோஜம்.. ஒரு நாளாவது நல்ல தேத்தண்ணி குடிச்சிருப்பமா.” 

பச்ச தண்ணியில் முகப் கழுவிய குளிர் நடுக்கத்தில். கட்டியிருந்த சாரத்தில் முகத்தை துவட்டிக் கொண்டு அவள் கையில் இருந்த தேத்தண்ணிய வாங்கி குடித்தவன். முகம் கோணம் மாறியவனாக வாசலில் சென்று துப்பிவிட்டு. கெட்ட வார்த்தையில் தேத்தண்ணிய திட்டினான்.. 

“ராஜி..ஓய் ராஜி. அட என்னாப்பா செய்ற.. டைம் போச்சி..ஓடியா..போகலாம். “ 

செல்வராஜை அழைத்தப்படி பெருமாள் வாசலில் நிற்கிறான். 

”ஏய் தேத்தண்ணி கொஞ்சம் ஊத்துப்புள்ள.” 

செல்வராஜ் பெருமாளை ஏக்கமாக பார்த்தவன். 

“ஆத்தா அய்யாவுக்கு அந்த தண்ணிய ஊத்து..” என்று நக்கலாக சொல்கிறான். அவள் சிரிப்பை அடக்க முடியாது மீதமாக இருந்த சாயத்தை பிளாஸ்டிக் ஜொக்கில் ஊற்றி பெருமாளிடம் தந்தவள்.. 

“மச்சான்.. குடிச்சிப்புட்டு ராங்கி பேச கூடாது-‘ 

பெருமாள் முகம் மாறும் என்ற எண்ணத்தில் அவர்கள் பார்க்க, ”த்து?” என்று துப்பிவிட்டு அவன் அவர்களை முறைக்க. அவள் உடனே, 

“இந்த மொறப்பு எல்லாம் ஒண்ணும் ஆகது மச்சான்…ஏமச்சான்…  உனக்கு ஒரு பிடி தேயிலை துாளை கொண்டு வந்து தர துப்பில்ல. ஸ்டோரு பெக்டறியிலதான் வேலை ஆனால் சொணைய குடிச்சி குடிச்சி சொறனையே இல்லாம போயிருச்சி.” 

நாம நட்டு நாம நம்ம பிள்ளளைகளை போல காத்து பார்த்து நட்ட தேயிலை நமக்கு சொந்தமில்லலை- அட்டை கடியில வேகாத வெயிலில மழையில நாம காலத்திற்கும் கஸ்டம் பட்டாலும் கடசியில நமக்கு அந்த கழிச்சி கட்டின சொணையதான் குடிக்கனும்.. தலைவரு மாறுக இதெல்லாம் கேட்க மாட்டாங்க… போ மச்சான் சாகுறதுக்குள்ள ஒரு நாளாவது நல்ல தேயிலை துாள்ள தேதண்ணி குடிச்சிடனும்.” 

செல்வராஜிம் பெருமாளும் அவள் உண்மையாகவே பேசுகிறாள் என்ற ஆதங்கத்தை உணர்ந்தவர்களாக அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அந்த பார்வையில் ஏதோவொன்று இருந்தது. 

இந்த தேயிலை ஆலையின் சத்தம் அவனுக்கு பழகி போயிருந்தது. ஆனாலும் இன்று அந்த ஆலையின் சத்தங்களை விட அவன் உள் மனதில் மனைவியின் ஆதங்கமான வார்த்தையின் சத்தம் அவனை சதா நேரமும் சங்கடமாக மாற்றியது. நினைவு தெரிந்த நாளில் இருந்து அவன் இந்த தேயிலை ஆலையின் தொழிலாளியாக இருக்கிறான். இதுவரை ஒரு நாள் கூட ஒரு பிடி தேயிலை அவன் அங்கே இருந்து திருடினது இல்லை, அவனுக்குள் ஏதோவொரு அறம் அவனை அப்படி செய்ய தூண்டியது இல்லை. அவன் அதைப்பற்றி யோசிப்பது கூட இல்லை. 

“மச்சான் என்ன யோசிக்கிற. நாம அந்த பெக்டறியில ஒரு பிடி தேயிலை துாளை எடுக்கிறது திருட்டு இல்ல மச்சான்.. கீலோ கிலோ அய்யா மாறுக திடுடுறாங்க… ஆனால் நாம கொஞ்சோண்டு எடுக்கறது குத்தம் இல்ல. அது நமக்கு உள்ள உரிமை மச்சான்..” 

பெருமாள் சாக்கு மலையயை கடந்து வரும் போது சொன்னது இப்போது நினைவுக்கு வந்தது. எப்படியோ அவன் மனது ஒரு தீர்மானத்திற்கு வந்தது. ஆனாலும் அவனுக்குள் உள்ள ஒருவன் வேண்டாம், இதேல்லாம் நல்லது இல்லை. நேர்மையா இருந்திட்டு போயிருனும் தம்பி. தனது தகப்பன் பேசும் நீதி கதைகளை நினைத்து கொண்டான் அவன். 

அதிகாலையின் குளிரான வேளையில் அவர்கள் இருவரும் நெருக்கமாக படுத்திருக்கிறார்கள். அருகில் சிறுவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்.. அவள் சிணுங்கும் குரலில்.. 

“மச்சான்….” 

“ம்..” 

”லேபர் டஷ்ட்டுனா என்னா மச்சான்..?” 

சொணதான் டஷ்ட்டு தேயிலை.. கழிவுதான் அது..” 

”நாம குடிக்கும் டீ. கழிவுதான்..” 

”நமக்கெல்லாம் தொறமாறு குடிக்கிற தேயிலை கிடைக்காதா.. நாம என்ன நாக்கு செத்த ஜென்மங்களா.. எப்ப மச்சான் நாமளும் அது மாதிரியான தேத்தண்ணியை குடிப்போம்..” 

என அவனது காதுகளில் முணுமுணுக்கிறான்.. வெறித்த பார்வையோடு மோட்டுவளையை பார்த்து அவன் படுத்திருக்கிறான். 

இருண்ட திரையில் கதவு திறக்கும் ஒலி கேட்கிறது. மெல்லிய காலை பொழுது கதவின் ஊடாக வீட்டுக்குள் வெளிச்சம் பாய்ச்சுகிறது. மெல்ல முன்பு நகர்ந்து வாசலின் ஊடாக அப்படியே தேயிலை தோட்டம் நிரம்பி ததும்பும் மலைவெளியில் பரவுகிறது. மஞ்சு மூட்டங்கள் தூரத்து சிகரங்களில் தழுவ, அப்படியே அந்த அதிகாலை நேரத்து மலைப் பிராந்தியத்தை மெல்ல வலம் வருகிறது. தொலைவில் வெள்ளை வண்ணம் பூசப்பட்ட அந்த தேயிலை தயாரிப்பு ஆலை அமைந்திருப்பது தெரிகிறது. அப்படியே வெண்பனியின் ஊடாக குளிர் கொட்டி கிடக்கின்றது, வெண்மை பரவுகிறது 

வாசல் சுதவை திறந்து கொண்டு செல்வராஜ் வெளியில் வருகிறான். தூக்க கலக்கத்தில் வெளியே வரும் அவனது மனதில் ஏதோவொரு விரக்தி தெரிகிறது. வீட்டுக்கு முன்புறம் வைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டியில் இருந்த நீரை எடுத்து வாயை கொப்பளித்து, முகத்தை கழுவி ஆசுவாசமடைகிறான்.. அப்படியே தோளில் போட்டிருந்த புதிய துண்டால் முகத்தை துடைத்தபடியே அண்ணாந்து வானத்தை பார்க்கிறான். அருகில் மரங்களின் ஊடாக பாயும் வெளிச்சம் அவனது முகத்தில் ஒளி கோடுகள் தீட்டுகிறது. அவன் அண்ணாந்து பார்க்கையில் வானத்தில் மேகங்கள் அலைகின்றன.காலை நேர வெளிச்ச ரேகைகள் அப்படியே மஞ்சள் நிறத்தில் ஒளிர்கின்றன. லயத்தின் ரேடியோ சத்தம் பேச்சி சத்தம், காலை நேர பரப்பரப்பு தெரிகிறது. 

இன்றைய பொழுதாவது நல்லபடியா விடியனும் என மனதுக்குள் முணுமுணுத்தபடியே வாசலை நோக்கி திரும்பி நடக்கிறான். 

இதற்கிடையில் வீட்டுக்குள்ளிருந்து அன்பரசு படியிலிருந்து இறங்கி வலப்புறமாக ஓடுகிறான். வீட்டின் அழுக்கு படிந்த மங்கிய நிறம் கொண்ட சன்னலில் இருந்து அடுப்பின் புகை ஒரு பாம்பை போல வளைந்து நெளிந்து மெல்ல வெளியே பரவுகிறது. ஏக்க பெருமூச்சை விட்டபடியே அப்படியே அக்காடவென வாசலில் வந்து அமர்கிறான். 

அவன் லேசாக வலது புறம் திரும்ப, அங்கே சிறுவன் விட்டிலோ அல்லது வண்ணத்துப்பூச்சியோ எதுவோ பிடித்து விளையாடிக் கொண்டிருக்கிறான். 

அவன் மறுபடியும் மகன் ஏதோ விளையாடுகிறான் என்று நினைக்க திரும்புகையில் அவள் வந்து பிளாஸ்டிக் ஜொக்கில் கருப்பு தேனீரை கொண்டு வந்து வைக்கிறாள். 

“டேய் அன்பரசு இங்க வா.” 

என சிறுவனை அழைத்தபடியே மீண்டும் உள்ளே சென்று மறைந்து விடுகிறாள். அவன் அந்த தேநீரை வெறித்து பார்க்கிறான். அவன் நினைவு மெல்ல தேநீரை நோக்கி குவிகிறது. 

காலையில் அவனது காதுகளில் கிசுகிசுத்த எப்ப மச்சான் நல்ல தேத்தண்ணிய நாம குடிக்க போறோம்– என்ற அவளது குரல் எதிரொலிக்கிறது. 

அவன் தேநீரை எடுத்து பருகியதும், அதை மீண்டும் மனதுக்குள்ள சொல்லியபடியே அடுத்த வாய் பருகுகிறான். சிறுவனும் திடுதிடுவென வீட்டுக்குள் ஓடுகிறான். படியில் குடித்து முடித்த காலி ஜொக்கை வைக்கிறான்…அப்படியே அந்த மஞ்சல் நிற ஜொக்கை பார்த்தப்படி உட்காந்திருக்கிறான். 

அரையின் இருட்டிலிருந்து டப்பென்ற ஓசையுடன் பெட்டி மூடிகிறது… சிறுவன் கையில் எதையோ எடுத்துக் கொண்டு வெளியில் ஓடுகிறான். அவனது கையில் மறைத்து வைத்திருக்கும் டொபி காகிதத்தால் தனது ஒரு கண்ணை மறைத்துக் கொண்டு அப்படியே சுற்றி சுற்றி பார்க்கிறான்…சிவப்பு வண்ணத்தில் அந்த தேயிலை தோட்டமும், மலை பிராந்தியமும், வீடும், கட்டிடங்களும் சுழன்று சுழன்று வருகின்றன 

அன்பரசு கையில் உள்ள டொபி தாள்கள் அடர் பிரவுண் நிற திரையாக மாற்றி மாற்றி மெல்ல பின்னோக்கி நகர்கிறது. சாராய போத்தலில் ஊற்றப்பட்ட கருப்பு தேநீர் அடுப்பங்கரையில் வைக்கப்பட்டிருக்கிறது. சாராய போத்தல் இப்போது அன்பரசு பார்வையில் நீல வண்ணமாக தெரிகிறது. அன்பரசை அந்த தோற்ற மாற்றம் ஒரு பரவச நிலைக்கு கொண்டு செல்கின்றது, 

செல்வராஜ் சட்டையை சரி செய்த படி மாட்டுகிறான். அவள் கண்ணாடியை பார்த்து தனது முகத்தை சரி செய்து கொள்கிறாள்…தலைக்கு போடும் முக்காட்டு துணியை எடுத்துக் கொள்கிறாள். அவனும் சாரத்தை மடித்து கலுசன் தெரியும் வகையில் கட்டிக் கொள்கிறான். இருவரும் ஒன்றும் பேசிக் கொள்ளவில்லை வெயில் மெல்ல ஏறிக் கொண்டிருக்கிறது. அந்த கருப்பு தேநீர் ஊற்றப்பட்ட சாராய போத்தலை எடுத்துக் கொண்டு இருவரும் வெளியில் கிளம்புகின்றனர். 

இருவரும் வெளியில் வந்து கதவை பூட்டப் போகும் நேரத்தில் சிறுவன் இருவரையும் இடித்துக் கொண்டு உளளே ஓடிப் போகிறான். பெட்டியை திறந்து சில பொருட்களை எடுத்து தனது கால்சட்டை மற்றும் சட்டை பைகளுக்குள் திணித்துக் கொள்கிறான். 

அன்பரசு மற்றொரு டொபி காகிதத்தால் பார்த்தபடியே நடந்து செல்கிறான. முற்றிலும் மாறுபட்ட வண்ணத்தில் அந்த மலை பிராந்தியம் ஒளிர்கிறது. செடிகள், மரங்கள் அனைத்தும் முற்றிலும் வேறு வண்ணத்தில் காட்சி அளிக்கின்றன. அங்குள்ள அனைத்துமே மாறுபட்ட வண்ணத்தில் தெரிகின்றன. அது மெல்ல மெல்ல ஊஞ்சாலாடியபடியே அந்த காட்சி செல்கிறது. அன்பரசின் பார்வையில் அது ஒரு சினிமா திரை போவே உள்ளது.  

அன்பரசு கடந்த இரண்டு நாட்களாகவே பாடசாலை போவில்லை. இன்று வெள்ளிக்கிழமை அவன் வீட்டில் இருக்கட்டும் என்று அம்மாவும் சரி என்று சொல்லி விட்டாள். ஐந்தாம் வகுப்பு படிக்கும் அவன் எப்போதும் தேயிலை மலையில் அப்பா வேலை செய்யும் டீ பெக்டறி பக்கம்தான் விளையாடுவான். இன்று அவன் தனியாகதான் விளையாட வேண்டும். கூட்டாளிகள் எல்லாம் ஸ்கூல் போய்விட்டர்கள். 

செல்வராஜிக்கு இருப்பது ஒரே மகன் இவன் மட்டுமே. அன்பரசு தான் வழமையாக விளையாடும் சைக்கிள் ரிம்மை விறகு காம்ராவில் இருந்து எடுத்துக் கொண்டான். அவர்கள் மூவரும் ஒற்றையடி பாதையில் நடந்து தார்ரோட்டில் நடக்க தொடங்கினார்கள். அன்பரசின் சைக்கிள் ரிம் சத்தம் மலைப்பகுதியில் ஒலிக்க தொடங்கியது. அவன் உற்சாகமாக சைக்கிளை செலுத்தினான். அந்த சத்தம் அவனுக்குள் கிளர்ச்சியை தந்தது. 

வெயில் நன்றாக ஏறிவிட்ட பொழுதில் தேயிலை தோட்டத்தின் மலைச் சரிவுகளில் மேடும் பள்ளமுமாக வளைந்து நெளிந்து செல்லும் பாதைகளில் இரண்டு பேரும் நடக்கிறார்கள். அவர்களை அன்பரசு பின் தொடர்கிறான் சைக்கிள் ரிம்முடன்.. அம்மாவின் கையை பிடித்துக் கொண்டு இழுக்க மாட்டாத குறையாக வெறுக் வெறுக் கென அந்த பிராந்தியத்தை வெற்று கால்களால் கடந்து கொண்டிருக்கின்றனர்., பாதை பிரியும் ஓரிடத்தில் நிற்கிறது. இருவரும் ஒன்றும் சொல்லிக் கொள்ளாமல் இடமும் வலமுமாக பிரிந்து நடக்கிறார்கள். தேயிலை தயாரிப்பு ஆலையை நோக்கி அவன் நடக்கிறான். அவனுடன் அன்பரசும் கூடவே செல்கிறான். கொழுந்து பறிக்கும் மலைச் சரிவை நோக்கி அவள் நடக்கிறாள். 

செல்வராஜ் பெக்டறி வாசலில் காலலுக்கு நிற்கும் சிவாவிடம் அன்பரசை பார்க்க சொல்லி விட்டு உள்ளே செல்கிறான். அன்பரசு தேயிலை கழிவுகள் கொட்டப்படும் சொணை உள்ள பகுதியில் வண்டியை ஓட்டி விளையாடுகிறான்.அங்கே தேயிலை ஆலையில் கழிவுகளாக ஒதுக்கப்பட்ட தேயிலை சொண மலை போல கொட்டப்பபட்டு கிடக்கிறது. அதன் நறுமனம் சுகமாக இருக்கின்றது. அதன் ஈரகசிவு தரையில் வழிந்து போனதன் அடையாளங்கள் அங்கே தெரிகின்றது. பயங்கர சத்தத்துடன் தேயிலை தயாரிப்பு கூடம் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆட்கள் பரபரவென வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள். லாரியில் வந்து கொழுந்துகள் கொட்டப்படுகின்றன. தரம் பிரிக்கப்படுகின்றன…உலர வைக்கப்படுகின்றன. வகை பிரிக்கப்படுகிறது. தனித்தனியாக அரவைக்கு கொண்டு செல்லப்படுகிறது. 

இவற்றின் ஊடாக அவன் வேலை செய்து கொண்டே பக்கவாட்டில் அடிக்கடி திரும்பி திரும்பி பார்த்துக் கொள்கிறான். மிகவும் உயரிய ரக தேயிலை தயாரிக்கும் அந்த எந்திரம் ஒடிக் கொண்டிருக்கிறது. அதிலிருந்து வரும் இசை லயமிக்க ஒலியும், வாசனையும் அப்படியே அவனை மெய் மறக்கச் செய்கின்றன.. அதையே வெறித்து பார்க்கிறான். 

திடீரென அலறல் சத்தம் கேட்கிறது.. சத்தம் கேட்ட திசையை நோக்கி தொழிலாளர்கள் அனைவரும் ஓடுகின்றனர். கூட்டத்தை விலக்கிக் கொண்டு அவனும் ஓடுகிறான். அங்கே கையில் ரத்தம் சொட்ட சொட்ட சக தொழிலாளி வலியால் துடித்தபடி நிற்கிறான். ஆனால் கொழுந்து ஏற்றும் லொறி அவசர நேரத்தில் இல்லாத போது. அவன் வாசலில் தேயிலை பெட்டிகளை கொழும்புக்கு ஏற்றும் சிங்கள டைவர்கள் பரபரப்பாக நிற்க. 

செல்வராஜ் முறைப்பாக டிமேக்கரை பார்த்துவிட்டு காயம் பட்டவளை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதற்காக அங்கும் இங்கும் பரபரப்பாக ஓடுகிறான் — ஆனால் வேறு வாகனம் ஏதும் கிடைக்காத காரணத்தால் அங்கு ஓரமாக நிற்கும் சிவாவின் ஆட்டோவை எடுத்துக்கொண்டு அவன் காயப்பட்டவனுடன் செல்கிறான்.. 

வளைந்து நெளிந்து செல்லும் மலைச்சாலையில் வேர்க்க விறுவிறுக்க செல்வராஜ் ஆட்டோவை செலுத்துகிறான். 

விரல்கள் துண்டிக்கப்பட்ட ரத்த கறை படிந்த கையின் மீது மருந்து தடவி வெள்ளை நிற பாண்டேஜ் கட்டப்படுகிறது. 

அங்கு ஆஸ்பத்திரியில் டாக்டர் இவர்களை இரக்கத்துடன் பார்த்தபடி சிகிச்சை அளிக்கிறார். இவ்வளவு லேட்டாவாவே வருவீங்க. என கண்டிக்கும் குரலில் இனிமையாக கேட்கிறார். இருவரும் உறைந்த மவுனத்துடன் நிற்கின்றனர். 

தரையில் ரத்தம் சிந்திய இடத்தை சிப்பந்தி ஒருவன் துடைக்கிறான் 

தொலைவில் மலையில் தூரத்து சரிவுகளில் அவள் உள்பட பலர் கொழுந்துகளை பறித்து தங்களது முதுகுப்புறம் தொங்கவிட்டுள்ள கூடையில் போட்டப்படி இருக்கின்றனர். தங்களுக்குள் பேசியபடியும், பாடியபடியும் வேலையில் ஈடுபட்டிருப்பது தெரிகிறது. 

அவள் கொழுந்து பறிக்கும் வேலையில் ஈடுபட்டிருக்கிறாள். அவளும் சக பெண்களும் கொழுந்து பறிக்கும் வேலையில் ஈடுபட்டிருக்கின்றனர். அப்போது யாரோ ஒருவர் பார்த்து வேலை பாருங்கள், பயங்கரமா அட்டைப் பூச்சி இருக்கு என்று எச்சரிக்கின்றனர். ஆமா அக்கா என்று இவள் பதில் அளிக்கும் போதே யாரோ அலறும் சத்தம் கேட்கிறது. அனைவரும் போய் பார்க்கிறார்கள்.. அவளை மறைவாகக் கொண்டு சென்று அட்டையை எடுத்து போடுகிறார்கள். கொழுந்து இலைகளின் மீது ரத்தம் படிகிறது. அதை ஏதோ ஒரு கை பறித்து கூடைக்குள் போடுகிறது. 

அவன் உள்பட சக பணியாளர்கள் வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார்கள். தற்போதும் அவன் அந்த உயரிய தேயிலை எந்திரத்தை வெறித்து பார்க்கிறான். லாரிகளில் கொழுந்து இலைகளை கொண்டு வந்து கொட்டுகிறார்கள். ஒரு தேயிலையில் உறைந்த ரத்தம் இருக்கிறது.-கொட்டிய தேயிலைகளை அள்ளி தேயிலை அரைக்க மூடைகளில் கொண்டு செல்கிறார்கள். எந்திரத்தின் அருகே அவன் வேலை செய்து கொண்டிருக்கும் போது ரத்த கறை படிந்த அந்த தேயிலை அவளை கடந்து எந்திரத்துக்குள் செல்கிறது. அதை அவன் கவனிக்க வில்லை. 

சுற்று முற்றும் பார்த்தபடியே மெல்ல உயரிய தேயிலை ரக எந்திரத்தை நோக்கி மீண்டும் அவன் நடக்கிறான். யாரும் அங்கு இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு இரு கைகளாலும் தேயிலையை அள்ளிக் கொண்டு சட்டையின் கை மடிப்புகளில் மறைக்க முயற்சிக்கிறான். 

அப்போது யாரோ வரும் சத்தம் கேட்கவே கையை உதறிக் கொண்டு அங்கிருந்து சற்று நகர்ந்து வேறு திசையில் திரும்ப முயலும் போது எதிரில் டிமேக்கர் அய்யா வந்து நிற்கிறான். அய்யாவை கண்டதும் இவனுக்கு வேர்த்து கொட்டுகிறது. அவனை கண்டதும் அய்யாவின் முகம் கடுகடுப்பாக மாறுகிறது. 

பயங்கரமாக கெட்ட சொற்களால் அவனை ஏசுகிறான். அங்கே மற்றவர்கள் கூடி விடுகின்றனர். இன்னொரு தரம் இப்படி செஞ்ச போலிஸில் பிடித்து கொடுத்து விடுவேன் என மிரட்டுகிறாள். அனைவரும் அவளை கூடி கேலியும் இரக்கமுமாக பார்க்கின்றனர். அவன் அப்படியே அவமானத்தால் கூனி குறுகி நிற்கிறான். 

அவள் வேகமாக மலைப் பாதைகளில் நடந்து வருகிறாள், அப்படியே வெறித்து பார்த்தவளாக நடந்து வந்தவள் ஒரு மரத்தடியில் வந்து அமர்ந்து வெறித்து பார்க்கிறாள். பின்னர் குலுங்கி குலுங்கி அழுகிறாள். இயற்கை அப்படியே அசைவற்று அவளை நோக்குகிறது. பின்னர் சற்றெக்கெல்லாம் ஆசுவாசமடைந்து வீட்டை நோக்கி நடக்கத் தொடங்குகிறாள். 

மதுபானக்கடையிலிருந்து வெளியில் தள்ளாடியபடியே வெளியில் வருகிறான் அவன். “டேய்..எங்களுக்கெல்லாம் நல்ல டீ குடிக்க வக்கில்லையாடா.. நாங்களும் மனுசங்கதானடா.” என்றபடியே… ஏதேதோ புலம்புகிறான்…அப்படியே சாலையின் ஓரத்தில் போதையில் சரிந்து விழுகிறான், அப்போது உயரிய தேயிலை ரகங்களை ஏற்றிக் கொண்டு நகரங்களுக்கு விரையும் லாரிகள் அவனை கடந்து செல்கின்றன.. 

மூன்று பேரும் படுக்கையில் படுத்து கிடக்கின்றனர். அவள் இடது புறமும், இவன் வலது புறமும் நடுவில் மோட்டு வளையை பார்த்தபடி சிறுவனும் படுத்து 

கிடக்கின்றனர். சிறுவன் தனக்கு தானே ஏதோ பேசிய படியும், கதை சொல்லிய படியும் தூங்க முயற்சிக்கிறான். காட்சியில் இருள் பரவுகிறது. இருட்டில் கதவு தடதடவென தட்டப்படும் ஓசை கேட்கிறது.” மச்சான்.. வெளியில் வாய்யா…ஒரு செமத்தியான விருந்து… யோவ் மச்சான்…”இவன் தூக்க கலக்கத்தில் எழுந்து சென்று கதவை திறக்கிறான். அப்படியே வெளிச்ச வெள்ளம் வீட்டுக்குள் பாய்கிறது. வெளியிலிருந்து தேவதூதன் போல தோன்றச் செய்யும் வகையில் அந்த வெளிச்ச வெள்ளத்தின் ஊடாக அவனது சக பணியாளன் வருகிறான்.. இவனை கையை பிடித்துக் கொண்டு இழுத்து செல்லாத குறையாக அழைத்து செல்ல முயல்கிறான். சட்டையை அணிந்ததும், அணியாததுமாக அவனுடன் கிளம்பி செல்கிறான். 

அந்த மலை பிராந்தியமே மிகவும் அற்புதமாக ஜொலிக்கிறது. நாம் இத்தனை நாளாக பார்க்கும் மலை தானா இது என்பது போல அதிசயமாக அதை பார்க்கிறான்…வந்தவன் அங்கிருந்து அவனை அங்குள்ள துரையின் மாளிகைக்கு அழைத்து செல்கிறான். மேலாளர் மாளிகை அப்படியே பங்களா போல ஜொலிக்கிறது. உயர் ரக பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. மிகவும் நளினமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அங்கு விருந்து தயார் செய்யப்பட்டுள்ளது. சீருடை அணிந்த நட்சத்திர பணியாளர்கள் 

அனைவருக்கும் மிகவும் பணிவாக விருந்து பரிமாறுகின்றனர். அந்த உயரிய ரசு தேநீருக்காக இவன் ஆவலுடன் காத்திருக்கிறான். அவளை நோக்கி தேவதைகள் போல வரும் அவர்கள் மிகுந்த வேலைப்பாடு கொண்ட கண்ணாடி கோப்பையில் தேநீரை ஊற்றுகின்றனர். திராட்சை ரசத்தை நினைவு கூறும் விதமாக அதனை வியந்து பார்த்தபடியே எடுத்து பருகுகிறான். 

வீடு திரும்பும் வழியில் பறவைகள் ஆனந்த ஒலி எழுப்புகின்றன. மலர்கள் பூத்து குலுங்குகின்றன. மலை முகடுகளை மேகங்கள் முத்தமிடுகின்றன. ஓடை இசையோடு சலசலத்து ஓடுகிறது. இவனது கையில் மேலாளர் கொடுத்த பையில் மனைவி மற்றும் குழந்தைகளுக்கான துணிகள், பரிசு பொருள்கள் கனக்கின்றன. அவளது நடையில் உற்சாக துள்ளல் மிளிர்கிறது. 

அணில் தாவி ஓடி மரத்தின் மீது ஏறி இவனை பார்க்கிறது. வெட்டுக்கிளிகள் கிறீச்சிடுகின்றன. 

அவன், அவள், சிறுவன் 3 பேரும் சிறிய டூர் செல்கின்றனர். வெளிப்புறத்தில் ஜமுக்காளம் விரிக்கப்பட்டு, உயரிய உணவுகளை சாப்பிடுகின்றனர். அருகில் விலையுயர்ந்த பொம்மைகளை, சிறு வண்டிகளை வைத்துக் கொண்டு சிறுவன் விளையாடிக் கொண்டிருக்கிறான். 

வீட்டில் அடுப்பு எரிந்து கொண்டிருக்கிறது. நெருப்பின் சிவந்த ஒளியில் அவளது முகம் ரத்தினமாய் ஜொலிக்கிறது. ஒரு வகை வசீகரம் அவளது முகத்தில் தெரிகிறது. மெல்ல அவனது கை வந்து அவளது தோளை அழுத்துகிறது. அவள் விரகத்தில் புன்முறுவலித்தபடியே நிமிர்ந்து அவனை பார்க்கிறாள். தொலைவில் புத்தாடை அணிந்த சிறுவன் மகிழ்ச்சியாக உறங்கிக் கொண்டிருக்கிறான்.. 

அவனது வீடு அப்படியே மிகவும் கலை ரசனையுடன் வண்ணப்பூச்சில் ஜொலிக்கிறது. ஜன்னல்களில், சுவரில் அழகிய ஓவியங்கள் 

தீட்டப்பட்டுள்ளன. வீட்டின் முற்றம் மிகவும் சுத்தமானதாக உள்ளது. தண்ணீர் தொட்டி வெள்ளை வண்ணம் பூசப்பட்டு புதிதாக மிளிர்கிறது. வீட்டின் மீது ஓட்டு கூரையின் மீது அமர்ந்து அதை சரி செய்து கொண்டிருக்கிறான். அவ்வப்போது திரும்பி அவளை காதலுடன் பார்த்தபடியே பணியில் ஈடுபட்டிருக்கிறான்… அவ்வாறு ஒரு முறை திரும்பி பார்த்து விட்டு கையை ஓட்டின் மீது வைக்கப் போக, தடுமாறி மேலிருந்து தடால்புடாலென் கீழே விழுகிறான். சடசடவென சத்தம் கேட்கிறது. வியர்த்து விறுவிறுத்து தூக்கத்திலிருந்து எழுந்து அமர்கிறான். அவனை சுற்றிலும் இருட்டு சூழ்ந்திருக்கிறது. திக் பிரமை பிடித்தவன் போல அமர்ந்திருக்கிறான். கதவு தட்டப்படும் ஒலி கேட்கிறது. அவன் கண்டது எல்லாம் கனவு என்று ஏற்றுக்கொள்ள வெகு நேரம் அவனுக்கு தேவைப்படுகிறது. 

வியர்த்து விறுவிறுத்து தூக்கத்திலிருந்து எழுந்து அமர்கிறான். அவனை சுற்றிலும் இருட்டு சூழ்ந்திருக்கிறது. திக் பிரமை பிடித்தவன் போல அமர்ந்திருக்கிறான். கதவு தட்டப்படும் ஒலி கேட்கிறது. எழுந்து சென்று கதவை திறக்கிறான். உன்னை தொரை பங்களாவில் பைப் ரிப்பேர் பார்க்க வரச் சொன்னார் என்கிறான் வந்தவன். முன்பு அவனை விருந்து அழைத்துச் செல்ல வந்த அவனே தற்போதும் வந்திருக்கிறான். இவன் திரும்பி பார்க்கிறான். சற்றே விழித்த நிலையில் அவளும், அரைகுறை உறக்கத்தில் சிறுவனும் படுக்கையில் புரண்டு கொண்டு இருக்கிறார்கள். 

சட்டையை அணிந்தபடியே அவனுடன் சேர்ந்து அந்த வளைந்து நெளிந்து செல்லும் மலைப்பாதையில் நடந்து செல்கிறார்கள். 

மேலாளரின் வீட்டின் பின்புறம் மழை நீர் குழாயை சரி செய்யும் பணியில் ஈடுபட்டபடியே அந்த வீட்டை நோட்டமிடுகிறான். அந்த வீட்டம்மாள் உயரிய தேநீரை அவரது கணவரான மேலாளருக்கு ஊற்றி கொடுக்கிறாள். அவர் முன் புற அறையில் உள்ள மேஜையின் மீது வைத்து விட்டு கணக்கு வழக்குகளை பார்த்தபடியே தேநீரை உறிஞ்சி குடிக்கிறார். அந்த ஒலி அவனை தொந்தரவு செய்கிறது. குழாயை டம்டம்மென்று போட்டு அடிக்கிறான். ணங்ணங் என்ற அந்த ஒலி அந்த பிராந்தியம் முழுவதும் சுழல்கிறது. சத்தம் தாங்காமல் முகத்தை சுளித்துக் கொண்டே மேலாளர் தேநீரை பருகுகிறார். இடையில் எழுந்து வந்து இவனை முறைத்து பார்த்து விட்டு செல்கிறார், 

அப்போது எங்கிருந்தோ வந்த டிமேக்கர் அய்யா, மேலாளர் காதில் ஏதோ கிசுகிசுக்கிறார். இதை கேட்டதும் பதறி அடித்துக் கொண்டு மேலாளர் அங்கிருந்து ஓடுகிறார். சத்தம் கேட்டு எட்டி பார்த்த இவன் வாசலுக்கு வந்து முன் அறையை பார்க்கிறான். அங்கே மேஜையில் மேலாளர் பாதி குடித்த தேநீர் கண்ணாடி குவளையில் தளும்பிக் கொண்டிருக்கிறது. 

இவனது மனம் ஊசலாட்டத்தில் ஆடுகிறது. மெல்ல அந்த கண்ணாடி குவளையை நோக்கி செல்கிறான். அந்த பாதி நிரம்பிய தேநீர் குவளையை நோக்கி குவிகிறது. மெல்ல அருகில் சென்று அதை எடுத்து குடித்து விடலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் அதை பார்த்தபடியே திக் பிரமை பிடித்தவன் போல நிற்கிறான். அப்போது அந்த அம்மாளின் குரல் கேட்கிறது. சட்டென சுயநினைவு வந்தவனாக தனது கையில் இருக்கும் எச்சில் கோப்பையை அருவருப்புடன் பார்க்கிறான். ஒரு கணம் முகம் அப்படியே சுருங்கி கருத்துவிடுகிறது. கோப்பையை டக்கென மேஜையில் வைத்து 

விட்டு, அந்த மாளிகையை பார்க்கிறான். மாளிகை பேய் மாளிகை போல இருண்டு தெரிகிறது. அவமானத்தால் குன்றி வெளியே வருகிறான். வானம் கருத்து அந்த மாளிகையின் மேற்புறத்தில் வானத்தில் மேகங்கள் திரள்கின்றன. அப்படியே திடும்மென இடியும் மின்னலும் வெட்டி சரிகின்றன. 

சற்றைக்கெல்லாம் மழை வெடித்து கிளம்புகிறது. அப்படியே இறுகிய அவமானமுற்ற மனதுடன் மழையில் நனைந்தபடியே மலைப்பாதைகளில் விறுவிறுவென நடந்தபடியே வீட்டை நோக்கி நடக்கிறான். மழை விடாமல் பெய்கிறது. 

இவன் வீட்டை நெருங்கும் வேளையில், பக்கத்து வீட்டிலிருந்து தேயிலை இரவல் வாங்கிக் கொண்டு மழையில் மெலிதாக நனைந்தபடியே அவள் வீட்டுக்கு வருகிறாள். இவன் அப்படியே இறுக்கமான முகத்துடன் வாசலில் அமர்ந்து மழையை பார்த்துக் கொண்டிருக்கிறான். அவள் இவனை விநோதமாக பார்த்தபடியே வீட்டுக்குள் செல்கிறாள். அடுப்பில் தேநீர் தயாராகும் ஒலி கேட்கிறது. 

தலையை துவட்டுவதற்காக லுங்கியை கொண்டு வந்து கொடுத்து விட்டு போகிறாள் 

அவனருகில் கிடக்கும் லுங்கியுடன் தலையை துவட்டாமலேயே அவன் வெறித்து பார்த்தபடியே இன்னும் இருக்கிறான். அவள் வழக்கம் போல தேனீரை தயாரித்து கொண்டு வந்து வாசல் படியில் வைக்கிறாள். இவனை ஒருமாதிரி பார்த்து விட்டு மீண்டும் போய் விடுகிறாள். கருப்பு தேநீரை வெறித்து பார்த்தபடியே அதை எடுத்து ஒரு மிடறு பருக முயற்சிக்கிறான். முகம் மாற்றம் அடைந்து தூவென.. துப்புகிறான்.. குவளையை ஆத்திரத்தோடு தூர வீசி எறிகிறான். அவனது உறைந்த முகத்தில் கோபம் இயலாமை தெரிகிறது. 

மறுநாளும் மேலாளரின் வீட்டில் குழாயை சரி செய்யும் பணியில் 

ஈடுபட்டுள்ளான். என்ன செல்வராஜ்.. வேல எல்லாம் முழுசா முடிஞ்சிருச்சா என்று கேட்டபடியே மேலாளர் வீட்டுக்குள் சென்று தனது மனைவியிடம் ஏதோ கிசுகிசுக்கிறார். 

சிறிது நேரத்தில், யேய் செல்வம் இங்க வா.. இந்த தேத்தண்ணிய குடிச்சுட்டு வேலய பாருல, இது சாதாரண டீ இல்லல..ஹைகிளாசு..வாழ்க்கை ஒருவாட்டியாவது நீறு குடிச்சிருப்பயாடே குடிச்சுப் பாரு”அப்படியே சொர்க்கத்துக்கு போய்ருவ– அவனது கண்களில் ஆர்வமும், தாகமும் ஒருசேர மின்னுகிறது. 

வெள்ளை நிற தகர குவளையில் ஊற்றப்பட்ட அந்த கருப்பு தேநீரை பருகுகிறான்— அவனது கண்கள் அப்படியே சந்தோஷத்தில் மலர்கிறது. முகம் பிரகாசமாக ஜொலிக்கிறது. 

வீட்டுக்குள் கால் நீட்டி அமர்ந்திருக்கிறான். அவள் அடுப்பில் ஏதோ வேலையாக இருக்கிறாள்–நிஜமாத்தான்டி சொல்ரேன்..நம்ம புள்ளதாண்ட ஆணை, என்றபடியே அந்த ஆளு என்ன வீட்டுக்குள்ள கூப்பிட்டு அந்த நல்ல டீய கொடுத்தாருடி 

அவள் எழுந்து வந்து அவனது அருகில் அமர்ந்து கொள்கிறாள் 

என்னய்யா எப்டிய்யா இருந்துச்சு அந்த தேத்தண்ணீ நம்மத விட ரொம்ப ருசியா இருந்துச்சுய்யா.. சொல்லுய்யா.. என சிணுங்கினாள்.. அது டீ இல்லடி ” அமுதம்.. அதோட பார்த்த நம்ம வீட்டு டீ கழனி தண்ணிய வீட மோசம்.. என்ன செய்ரது கால கிரகம் இல்லாட்டி நாம வாங்கி வந்த வரம்— இதெல்லாம் எப்போ மாறும்னு தெரியல என கவலை தோய்ந்த முகத்துடன் சொல்கிறாள்.. அவளும் அவனது வாடிய முகத்தை கண்டு கவலை கொள்கிறாள்.நம்ம மகனுக்கு அது கிடைக்கும்மாய்யா.. என தனது ஆசையை மறைத்துக் கொண்டு குழந்தையின் பேரை சொல்லி தனது கோரிக்கையை வைக்கிறாள். அவன் ஆயாசத்துடன் பெருமூச்சு விடுகிறான். அப்படியே வெளிவாசலை பார்க்கிறான். 

காலை நேரம். மூன்று பேரும் கிளம்பி செல்கின்றனர். வழக்கம் போல செல்லும் பாதையில் வளைந்து நெளிந்து நடந்து செல்கின்றனர். இன்றைக்கு உச்சிக்கு வேலைக்கு செல்வதால், அவனுடன் சிறுவனை அழைத்துச் செல்லும்படி சொல்கிறாள். தந்தையும் மகனும் இப்போது இடது புறமாகவும், அவள் வலதுபுறமாகவும் பிரிந்து நடக்கின்றனர். 

தேயிலை தயாரிக்கும் ஆலை. வளாகத்தில் ஒரு இடத்தை காண்பித்து அங்கேயே விளையாடும்படி சிறுவனிடம் சொல்கிறான். சிறுவனும் புது இடம் என்ற மகிழ்ச்சியில் உற்சாகமாக தலையாட்டுகிறான். பரபரவென வேலைகள் நடந்தேறுகின்றன. சிறுவன் தனது லென்சால் அங்குள்ளவற்றவை உருப்பெருக்கி பார்த்து விளையாடிக் கொண்டிருக்கிறான். இம்முறை எப்படியும் உயரிய ரக தேயிலையை திருடி, தனது குழந்தைக்கும், மனைவிக்கும் தந்து விட வேண்டும் என்ற எண்ணம் அவனுள் விபரீதமாக தோன்றுகிறது. 

உயர் ரக தேயிலை தயாரிக்கும் எந்திரத்தை பார்த்தபடியும், அவ்வப்போது ஜன்னலின் வழியே சிறுவன் மற்றும் மனைவியை பார்த்தபடியும் வேலையில் ஈடுபடுகிறான். மதிய வேளை. ஆள் அரவமற்ற பொழுது, எல்லாம் அமைதியில் ஆழ்ந்திருக்கிறது. மின் வெட்டாக இருக்கலாம். சுற்றும் முற்றும் பார்க்கிறான். யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்ட அவன் மெல்ல அடுத்த பகுதிக்கு சென்று, கைகளில் உயரிய ரக தேயிலையை அள்ளி சட்டையின் மடிப்புகளில் மறைத்துக் கொள்கிறான்.  

அங்கே இரு ரகசிய விழிகள் அவனை வேவு பார்க்கின்றன. சற்று நேரத்தில் பணியாளர்கள் அங்கு வரவும், டிமேக்கர் கிளார்க் காவலாளி அனைவரும் அங்கு வருகின்றனர். வேகவேகமாக வந்த அய்யா அனைவரின் முன்பாகவும் அவளை கன்னத்தில் அறைகிறான். அவனது சட்டையை கொத்தாக பிடித்து தரதரவௌ முற்றத்தை நோக்கி இழுத்து வருகிறான். சிறுவன் பயந்தபடியே ஓடி தடுப்பின் பின்னால் மறைந்து கொண்டு நடப்பதை பார்க்கிறான். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இப்படியா சூழல் மாறுகின்றது. தொலைபேசியில் எண்கள் சுழல்கின்றன. ஜீப்பின் ஒலி கேட்கிறது. சரசரவென இரண்டு மூன்று மூட்டைகள் அவனுக்கு அருகில் வந்து அவன் மீதாக வீசி யெறியப்படுகின்றன. தரையில் மண்டியிட்டு அவன் கையெடுத்து கும்பிட்டு இறைஞ்சுகிறான். போலீஸார் வந்து விசாரிக்கின்றனர். யார் அதை கண்ணால் பார்த்த சாட்சி என கேட்கின்றனர். அவனை அய்யா வீட்டுக்கு அவனை அய்யா வீட்டுக்கு அழைத்து சென்றவன் முன்னால் வருகிறான். அனைவரின் முன்பாகவும், செல்வராஜின் கை மடிப்பு விரிக்கப்படுகிறது அதிலிருந்து உயரிய ரக தேயிலை தூள் அப்படியே கொட்டி காற்றில் பரவுகிறது. 

கூட்டத்திலிருந்து விலகி அடர்ந்த நிற சட்டை அணிந்த பெருமாள் வெளியேறி வேகமாக ஓடிச் செல்கிறான். போலீஸார் செல்வராஜையும், அவனது அருகே வீசப்பட்ட தேயிலை மூடைகளையும் ஜீப்பில் ஏற்றுகின்றனர். அவனை சுமந்து கொண்டு ஜீப் கிளம்புகிறது. 

ஜீப் கிளம்பியதும் அதை துரத்திக் கொண்டு ஓட முயலும் சிறுவனை அங்கிருப்பவர்கள் தடுக்கின்றனர். மலைப்பாதையின் ஊடாக ஜீப் சிவப்பு விளக்குடன் பயணிக்கிறது. தொலைவில் பச்சை கம்பளம் விரித்தது போன்ற தேயிலை செடிகளின் ஊடாக அவள் சாலையை நோக்கி வேகமாக தொலைவில் ஓடி வருகிறாள். பச்சை மலை பிராந்தியத்தின் நடுவில் அந்த தேயிலை தயாரிப்பு ஆலை வெள்ளை நிறத்தில் இருக்கிறது. அதன் வளாகத்தில் புள்ளிகளாய் சிலர் திரண்டு நிற்பதும், அந்த சிறுவன் அழுதபடியே கையை நீட்டி அழுவதும், அன்பரசு கால் சட்டை பையில் உள்ள டொபி பேப்பர்கள் பல வண்ணத்தில் அங்கே சிதறி காற்றில் பற்க்கின்றது.அவள் விடாமல் ஓடிக் கொண்டிருப்பதும், மலைச்சாலையில் வளைந்து வளைந்து நெளிந்து செல்லும் ஜீப்பும் என காட்சி அப்படியே மங்கி மறைகிறது 

– 22.07.2023 

மலையகம் 200 – விம்பம் லண்டன் அமைப்பு நடத்திய  சிறுகதை போட்டியில் இரண்டாம் இடம் பரிசு 30 ஆயிரம் பணபரிசு பெற்ற கதை.  

மாரி மகேந்திரன் 

மாரி மகேந்திரன் சினிமா கவிதை மற்றும் சிறுககைகள் புத்தகம் தமிழில் வந்துள்ளது. பிரசன்ன விதானகே திரைப்படத்தில் பனி ஆற்றி உள்ளார். தமிழகத்தில் தமிழ் சினமாவில் உதவி இயக்குனராகவும் பனி ஆற்றியுள்ளார். இவர் தற்போது வசிப்பது பொகவந்தலா என்ற நகரத்தில். காட்சி மொழி என்ற உலக சினிமா இதழ் ஆசிரியர்.

https://www.sirukathaigal.com/%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a3/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.