Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்த இலங்கை; சுப்பர் 8 சுற்றில் இங்கிலாந்திடம் படுதோல்வி

Published By: Vishnu

22 Feb, 2026 | 07:30 PM

image

(பல்லேகலையிலிருந்து நெவில் அன்தனி)

இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்ற ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண சுப்பர் 8 குழு 2 போட்டியில் மிக மோசமாக துடுப்பெடுத்தாடிய இலங்கை 51 ஓட்டங்களால் படுதோல்வி அடைந்தது.

இதன் மூலம் சர்வதேச ரி20 கிரிக்கெட் அரங்கில் இங்கிலாந்துக்கு எதிராக 12ஆவது நேரடி தோல்வியை இலங்கை தழுவியது. அது மட்டுமல்லாமல் கடந்த ஒரு மாதத்திற்குள் இங்கிலாந்திடம் இதே மைதானத்தில் இலங்கை அடைந்த 4ஆவது நேரடி தோல்வி இதுவாகும்.

இந்தத் தோல்வியை அடுத்து ரி20 உலகக் கிண்ண அரை இறுதிக்குச் செல்லும் இலங்கையின் வாய்ப்பு ஊசலாடத் தொடங்கியுள்ளது.

அதேவேளை இங்கிலாந்து 2 வெற்றி புள்ளிகளைப் பெற்று குழு 2 இல் முதலாம் இடத்தை அடைந்து தனது அரை இறுதி வாய்ப்பை அதிகரித்துக்கொண்டுள்ளது.

இங்கிலாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 147 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 16.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 95 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது.

இந்த வருட உலகக் கிண்ணத்தில் இலங்கை பெற்ற 95 ஓட்டங்களே மிகக் குறைந்த மொத்த எண்ணிக்கையாகும்.

பவர்ப்ளே ஓவர்களுக்குள் 5 விக்கெட்களை இழந்த இலங்கை அதன் பின்னர் மீளவே இல்லை.

மத்திய வரிசையில் அணித் தலைவர் தசுன் ஷானக்க மாத்திரமே திறமையாகத் துடுப்பெடுத்தாடி 30 ஓட்டங்களைப் பெற்றார்.

அவரை விட துனில் வெல்லாககே (10), கமிந்து மெண்டிஸ் (13) மஹீஷ் தீக்ஷன (10) ஆகிய மூவரே இரட்டை இலக்க எண்ணிக்கையைப் பெற்றனர்.

பந்துவீச்சில் வில் ஜெக்ஸ் 22 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஆதில் ராஷித் 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஜொவ்ரா ஆச்சர் 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் லியாம் டோசன் 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இங்கிலாந்து 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 146 ஓட்டங்களைப் பெற்றது.

ஆரம்ப வீரர் பில் சோல்ட் மாத்திரமே திறமையாகத் துடுப்பெடுத்தாடி 6 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 62 ஓட்டங்களைப் பெற்றார்.

அவரை விட வில் ஜெக்ஸ் (21), ஹெரி ப்றூக் (14), சாம் கரன் (11), ஜெமி ஓவர்ட்டன் (11 ஆ.இ) ஆகியோர் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

பந்துவீச்சில் துனித் வெல்லாலகே 26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மஹீஷ் தீக்ஷன 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் டில்ஷான் மதுஷன்க 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: வில் ஜெக்ஸ்

https://www.virakesari.lk/article/239338

  • Replies 88
  • Views 3.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • கிருபன்
    கிருபன்

    பெப் 07 தானே ஆரம்பம். கிறிஸ்மஸுக்கு முன்னர் கேள்விக்கொத்து தயாரிக்கலாம். மழையால்☔️ எத்தனை போட்டிகள் தடைப்படும் என்றும் ஒரு கேள்வி போடலாம்.🤣 20 பேர் வரை கலந்துகொண்டால்தான் சுவாரஸ்யம்😁

  • கந்தப்பு
    கந்தப்பு

    கிருபன் சிறப்பாக கடந்த T20 போட்டியினை நடாத்தியதினால் அவரை மீண்டும் இம்முறையும் போட்டியை நடாத்தும் படி வேண்டிகொள்கிறேன்.

  • சிம்பாவே அணி இலங்கையணிக்கு சவாலாக உருவெடூத்துள்ளது, சிம்பாவே அணியும் இலங்கை அணி போல நிண்டகாலமாக விளையாடும் அணிதான், புதிதாக வரும் அணிகள் வெகு வேகமாக முன்னேறிவருகிறார்கள் சில அணிகள் பின் தங்கி விடுக

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுப்பர் 8 சுற்றில் இந்தியாவை வெற்றிகொண்ட தென் ஆபிரிக்கா 2024 இறுதிப் போட்டி தோல்விக்கு உரிய பதிலடி கொடுத்தது

Published By: Vishnu

23 Feb, 2026 | 02:02 AM

image

(பல்லேகலையிலிருந்து நெவில் அன்தனி)

இந்தியாவிலும் இலங்கையிலும் கூட்டாக நடைபெற்றுவரும் ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ணத்தில் வரவேற்பு நாடுகள் தத்தமது ஆரம்ப சுப்பர் 8 சுற்றுப் போட்டிகளில் படுதோல்விகளைத் தழுவின.

இங்கிலாந்திடம் 51 ஓட்டங்களால் இலங்கை தோல்வி அடைந்த நான்கு மணிநேரம் கழித்து தென் அபிரிக்காவிடம் 76 ஓட்டங்களால் இந்தியா தோல்வி அடைந்தது.

2202_david_miller_sa_vs_ind.png

அஹமதாபாத் நரேந்த்ர மோடி விளையாடரங்கில் ஞாயிற்றுக்கிழமை (22) இரவு நடைபெற்ற குழு 1க்கான சுப்பர் 8 போட்டியில் தென் அபிரிக்காவிடம் இந்தியா தோல்வி அடைந்ததால் அரங்கில் குழுமியிருந்த ஒரு இலட்சம் இந்திய ரசிகர்கள் பலத்த ஏமாற்றம் அடைந்தனர்.

இந்தப் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் இரண்டு வருடங்களுக்கு முன்னர் ரி20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்திய அணியிடம் அடைந்த  தோல்விக்கு தென் ஆபிரிக்கா இம்முறை இந்தியாவுக்கு அதன் சொந்த மண்ணிலேயே பதிலடி கொடுத்துள்ளது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 187 ஓட்டங்களைக் குவித்தது.

தென் ஆபிரிக்கா முதல் நான்கு ஓவர்களுக்குள் 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை இழந்து பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டது.

ஆனால், டிவோல்ட் ப்ரெவிஸ். டேவிட் மில்லர் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 97 ஓட்டங்களைப் பகிர்ந்து தென் ஆபிரிக்காவுக்கு தெம்பூட்டினர்.

2202_dewald_brevis_r_sa_vs_ind.png

அவர்களில் முதலில் ஆட்டம் இழந்த டிவோல்ட் ப்ரெவிஸ் 29 பந்துகளில் 3 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 45 ஓட்டங்களைப் பெற்றார்.

மொத்த எண்ணிக்கை 152 ஓட்டங்களாக இருந்தபோது டேவிட் மில்லர் ஆட்டம் இழந்தார்.

அவர் 35 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 63 ஓட்டங்களைப் பெற்றார்.

ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் 24 பந்துகளில் ஒரு பவுண்டறி, 3 சிக்ஸ் உட்பட 44 ஓட்டங்களைக் குவித்து ஆட்டம் இழக்காதிருந்தார்.

2202_marco_janson_sa_vs_ind.png

பந்தவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 15 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அர்ஷ்தீப் சிங் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

188 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 18.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும இழந்து 111 ஓட்டங்களைப் பெற்று மோசமான தோல்வியைத் தழுவியது.

இந்தியாவின் விக்கெட்கள் அடிக்கடி வீழ்ந்த வண்ணம் இருந்தன.

அதிரடி வீரர்களான இஷான் கிஷான் (0), திலக் வர்மா (1), அபிஷேக் ஷர்மா (15) ஆகியோர் ஆட்டம் இழந்தது இந்தியாவுக்கு பெரிடியைக் கொடுத்தது.

தென் ஆபிரிக்க பந்துவிச்சாளர்கள் துல்லியமாக பந்துவீசி இந்தியாவை மீண்டுவர விடவில்லை.

மத்திய வரிசையில் ஷிவம் டுபே 42 ஓட்டங்களையும் ஹார்திக் பாண்டியா 18 ஓட்டங்களையும் சூரியகுமார் யாதவ் 18 ஓட்டங்களையும் பெற்றனர்.

2202_jasprit_bumrah_ind_vs_sa.png

பந்துவீச்சில் மார்க்கோ ஜென்சன் 22 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் கேஷவ் மஹராஜ் 24 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கோபின் பொஷ் 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஏய்டன் மார்க்ராம் 5 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: டேவிட் மில்லர்

https://www.virakesari.lk/article/239339

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"சோம்பேறித்தனம்" - இந்திய கிரிக்கெட் அணியின் தோல்வி பற்றி பாகிஸ்தானில் விவாதிக்கப்படுவது என்ன?

அபிஷேக் சர்மா

பட மூலாதாரம்,Reuters

படக்குறிப்பு,சூப்பர் 8 போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அபிஷேக் சர்மா வெறும் 15 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

4 மணி நேரங்களுக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

டி-20 உலகக் கோப்பையின் சூப்பர்-8 போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் இந்திய அணி படுதோல்வி அடைந்ததையடுத்து, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் நிபுணர்கள் இது குறித்துத் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

சமூக ஊடகப் பயனர்களும் இந்தப் போட்டியைப் பற்றி வெளிப்படையாக விவாதித்து வருகின்றனர். தென்னாப்பிரிக்காவின் சிறப்பான ஆட்டம், இந்திய அணியின் சராசரி செயல்பாடு மற்றும் அபிஷேக் ஷர்மாவின் மோசமான ஃபார்ம் குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன.

இந்தப் போட்டிக்கு முன்னதாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வெளியிட்ட விளம்பரம் ஒன்று இப்போது நீக்கப்பட்டது குறித்தும் விவாதிக்கப்படுகிறது.

போட்டிக்குப் பிறகு இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும் வர்ணனையாளருமான மைக்கேல் வாகன் தனது எக்ஸ் பக்கத்தில், "இந்தியாவை தென்னாப்பிரிக்கா மோசமாகத் தோற்கடித்தது. பேட்டிங், பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங் என மூன்று துறைகளிலும் தென்னாப்பிரிக்கா சிறப்பாகச் செயல்பட்டது" என்று பதிவிட்டுள்ளார்.

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கைஃப், தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சைச் சிறப்பானது என்று குறிப்பிட்டதோடு, இந்தியாவின் பந்துவீச்சு பலவீனமாக இருப்பதாகவும், அதில் பல குறைபாடுகள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

முன்னாள் பந்துவீச்சாளர் இர்பான் பதான் தனது எக்ஸ் பக்கத்தில், "இந்திய அணி ஏமாற்றமளிக்கும் வகையில் செயல்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் பேட்டிங்கில் நாம் போராடுவதை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த உலகக் கோப்பை முழுவதும் பேட்டிங் வரிசை தடுமாறி வருகிறது," என்று பதிவிட்டுள்ளார்.

ஆமதாபாத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. இதில் டேவிட் மில்லர் 35 பந்துகளில் அதிரடியாக விளையாடி 63 ரன்கள் எடுத்தார்.

அடுத்து விளையாடிய இந்திய அணி 18.5 ஓவர்களில் 111 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

பாகிஸ்தானில் என்ன விவாதிக்கப்படுகிறது?

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர்

பட மூலாதாரம்,CPL T20/CPL T20 via Getty Images

படக்குறிப்பு,பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர், அபிஷேக் சர்மாவின் ஆட்டத்தை கடுமையாக விமர்சித்தார்

இந்தத் தொடரின் இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு முன்னதாக, முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர், அபிஷேக் சர்மாவை ஒரு 'ஸ்லாகர்' என்று அழைத்திருந்தார்.

ஜியோ நியூஸ் நிகழ்ச்சியில் முகமது அமீர் கூறுகையில், "அபிஷேக் சர்மா ஒரு சரியான பேட்டர் அல்ல, அவர் ஒரு ஸ்லாகர்," என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும், இந்திய அணி இந்தத் தொடரின் அரையிறுதிக்கு கூட தகுதி பெறாது என்றும் அவர் கூறியிருந்தார்.

மேலும் கூறுகையில், "அவர் பந்தின் திசையை நோக்கி விளையாடுவதில்லை, மட்டையை வெறுமனே சுற்றுகிறார். தட்டையான ஆடுகளங்களில் அவர் சிறப்பாக ஆடுகிறார். ஆனால் தென்னாப்பிரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியாவின் பவுன்சி பிட்ச்களில் அவர் சோதிக்கப்படவில்லை. அங்கு அவர் சிறப்பாக விளையாடும்போதுதான், நான் அவரை ஒரு பேட்ஸ்மேனாகக் கருதுவேன்" என்றார்.

இருப்பினும், அதே நிகழ்ச்சியில் பங்கேற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அகமது ஷெஷாத், "நான் அபிஷேக்கை ஒரு சிறந்த பேட்ஸ்மேனாகக் கருதுகிறேன்" என்று கூறியிருந்தார்.

நேற்றைய போட்டிக்குப் பிறகு முகமது அமீர் மீண்டும் கூறுகையில், "இந்தியா சிறப்பாக விளையாடும்போது நாம் நல்ல விஷயங்களைச் சொல்கிறோம். ஆனால் அங்கிருந்து நமக்கு வசவுகள்தான் கிடைக்கின்றன. தென்னாப்பிரிக்கா சிறந்த அணியாகச் செயல்பட்டது," என்றார்.

இந்தத் தொடரில் அபிஷேக் சர்மா தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் டக் அவுட் ஆனார். நேற்றைய போட்டியில் அவர் அதிக ரன்கள் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் அவர் வெறும் 15 ரன்களில் ஆட்டமிழந்தார்.

போட்டிக்குப் பிறகு முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது யூசுப் எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டிருந்தார்.

அதில், "முகமது அமீர், முதலில் நீங்கள் களத்தில் இந்திய அணியின் அதிர்ஷ்டத்தை சிதைத்தீர்கள், இப்போது ஸ்டுடியோவில் இருந்துகொண்டு அவர்களின் அதிர்ஷ்டத்தை சிதைக்கிறீர்கள். அவர்களைச் சற்று மூச்சு விட விடுங்கள். தென்னாப்பிரிக்கா கடந்த டி20 உலகக் கோப்பையை எங்கு முடித்ததோ, அங்கிருந்தே மீண்டும் தொடங்கியுள்ளது. அது ஒரு சிறந்த அணி. டாப் ஆர்டர் தோல்வியடைந்தபோது, லோயர் ஆர்டர் அற்புதங்களைச் செய்தது மற்றும் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது" என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து சோயப் அக்தர் கூறுகையில், "எண்ணங்களை விட ஒழுக்கமே மேலானது என்பதை தென்னாப்பிரிக்கா நிரூபித்துள்ளது. இத்தகைய இலக்குகளை வெறும் சோம்பேறித்தனத்தால் எட்ட முடியாது. இன்னிங்ஸை கட்டமைக்க வேண்டும். மில்லர் மற்றும் ஸ்டப்ஸ் ஆகியோரிடமிருந்து இந்தியா பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்," என்றார்.

சூர்யகுமார் யாதவ் பேட்டி

சூர்யகுமார்

பட மூலாதாரம்,ICC/ICC via Getty Images

படக்குறிப்பு,நேற்றைய போட்டியில் அபிஷேக் மற்றும் திலக் வர்மா இருவருமே மோசமாக விளையாடியதை அடுத்து , சூர்யகுமார் யாதவின் இந்த கருத்தைச் சுட்டிக்காட்டி சமூக ஊடகப் பயனர்கள் அவர்களைக் கேலி செய்து வருவதுடன், 'தலைக்கனம் பிடித்தவர்கள்' என்றும் விமர்சித்து வருகின்றனர்.

போட்டிக்கு முன்பு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், பத்திரிகையாளர் ஒருவர் இந்தியக் கேப்டன் சூர்யகுமார் யாதவிடம், "இந்தியாவுக்கு சிறப்பான தொடக்கம் அமையவில்லை. எனவே சஞ்சு சாம்சன் அணிக்குள் வர வாய்ப்புள்ளதா?" என்று கேட்டார்.

இதற்கு சிரித்துக்கொண்டே பதிலளித்த சூர்யகுமார் யாதவ், "அப்படியென்றால் அபிஷேக் சர்மாவுக்குப் பதிலாக அவரை விளையாட வைக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள். திலக் வர்மாவுக்குப் பதிலாக அவரை விளையாட வைக்க வேண்டும் என்கிறீர்கள்" எனக் கூறிவிட்டு மீண்டும் சிரிக்கத் தொடங்கினார்.

நேற்றைய போட்டியில் அபிஷேக் மற்றும் திலக் வர்மா இருவருமே மோசமாக விளையாடியதை அடுத்து , சூர்யகுமார் யாதவின் இந்த கருத்தைச் சுட்டிக்காட்டி சமூக ஊடகப் பயனர்கள் அவர்களைக் கேலி செய்து வருவதுடன், 'தலைக்கனம் பிடித்தவர்கள்' என்றும் விமர்சித்து வருகின்றனர்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் விளம்பரம்

தென்னாப்பிரிக்க கேப்டன் ஐடன் மார்க்ராம் - இந்திய கேப்டன் சூர்யகுமார்

பட மூலாதாரம்,ICC/ICC via Getty Images

படக்குறிப்பு,வெற்றிக்குப் பிறகு தென்னாப்பிரிக்க கேப்டன் மார்க்ரம் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவை சந்திக்கிறார்.

ஒரு விளம்பரத்தின் காரணமாகவும் இந்த போட்டி சமூக ஊடகங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்தத் தொடரின் ஒளிபரப்பாளரான ஸ்டார் ஸ்போர்ட்ஸில் வெளியான அந்த விளம்பரத்தில், இந்திய மற்றும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிகளைச் சேர்ந்த போலி வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.

அந்த விளம்பரத்தில், இரு அணிகளின் வீரர்களும் ஒரு ஹோட்டலில் ஒரே மேஜையில் அமர்ந்திருப்பது போலக் காட்டப்படுகிறது.

அப்போது இந்திய வீரர் அங்கிருக்கும் ஒரே ஒரு கப்கேக்கை நோக்கிச் செல்கிறார், ஆனால் தென்னாப்பிரிக்க வீரர் ஓடிச் சென்று அந்த கப்கேக்கை எடுத்துக்கொண்டு இந்திய வீரரிடம் "சாரி" என்று கூறுகிறார்.

இதற்கு இந்திய வீரர், "உங்களுக்குத் தான் சாரி!" என்று பதிலளிக்கிறார்.

தென்னாப்பிரிக்க வீரர் "ஏன்?" என்று கேட்க, 2024 டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் நாங்கள் உங்களைத் தோற்கடித்தோம், அதனால் சாரி என்று இந்திய வீரர் அவருக்கு நினைவுபடுத்துகிறார்.

தொடர்ந்து அந்த இந்திய வீரர், "நாங்கள் கோப்பையை வென்றோம், வரவிருக்கும் சூப்பர்-8 போட்டியிலும் வெற்றி பெறுவோம், எனவே இந்த கப்கேக்கை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்" என்கிறார்.

இதைக் கேட்டதும் தென்னாப்பிரிக்க வீரருக்குத் தொண்டையில் கேக் சிக்கிக்கொள்கிறது, அப்போது இந்திய வீரர் "ஓ, ஹோ! சோக்கிங்!" என்று கூச்சலிடுகிறார். (பல முக்கியத் தொடர்களின் முக்கியமான போட்டிகளில் தோல்வியடைவதால், கிரிக்கெட் உலகில் தென்னாப்பிரிக்க அணி பெரும்பாலும் "சோக்கர்ஸ்" என்று அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.)

சூப்பர்-8 போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் இந்தியா தோல்வியடைந்த உடனேயே, இந்த விளம்பரம் ஸ்டார் ஸ்போர்ட்ஸில் வெளியிடப்படவில்லை.

ஆனால் இந்த விளம்பரம் சமூக ஊடகங்களில் வைரலாகியதுடன், இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கோபமும் வெளிப்பட்டது.

பல பயனர்கள் இந்த விளம்பரம் தென்னாப்பிரிக்காவை 'இழிவுபடுத்துவதாக' கூறினர்.

விளம்பரத்தில் தென்னாப்பிரிக்கா 'சோக்கர்' என்று விவரிக்கப்பட்டது, ஆனால் இந்தியாதான் 'சோக்கர்' என்று நிரூபணமாகிவிட்டது என்று சிலர் கூறினர். "தலைக்கனம் கொள்வது சரியல்ல என்பதை இந்தச் சம்பவம் நமது விளம்பரதாரர்களுக்குக் கற்பிக்கக்கூடும்," என்று ஒரு பயனர் பதிவிட்டுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c3rz9gnjj11o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரி20 உலகக் கிண்ண வரலாற்றில் இரண்டாவது அதிகூடிய மொத்த எண்ணிக்கையை குவித்த மேற்கிந்தியத் தீவுகளிடம் வாங்கிக்கட்டியது ஸிம்பாப்வே

Published By: Vishnu

23 Feb, 2026 | 11:33 PM

image

(நெவில் அன்தனி)

ஸிம்பாப்வேக்கு எதிராக மும்பை வான்கேட் விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (23) நடைபெற்ற ரி20 உலகக் கிண்ண சுப்பர் 8 குழு 1க்கான போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் 107 ஓட்டங்களால் இலகுவாக வெற்றிபெற்றது.

இந்த வெற்றியுடன் நிகர ஓட்ட வேக அடிப்படையில் மேற்கிந்தியத் தீவுகள் குழு 1இல் முதலாம் இடத்திற்கு முன்னேறியதுடன் அரை இறுதி வாய்ப்பையும் சற்று அதிகரித்துக்கொண்டது.

ஷிம்ரன் ஹெட்மயர், ரோவ்மன் பவல் ஆகிய இருவரும் குவித்த அபார அரைச் சதங்களும் குடாகேஷ் மோட்டி, அக்கீல் ஹொசெய்ன் ஆகியோரின் கடடுப்பாடான பந்துவீச்சுகளும் மேற்கிந்தியத் தீவுகளை இலகுவாக வெற்றிபெறச் செய்தன.

பி குழுவில் மிகத் திறயைமாக விளையாடி அவுஸ்திரேலியாவையும் இலங்கையையும் இலகுவாக வெற்றிகொண்டு சுப்பர் 8 சுற்றுக்குள் தோல்வி அடையாத அணியாக நுழைந்த ஸிம்பாப்வே இன்றைய போட்டியில் சகலதுறைகளிலும் மோசமாக விளையாடி மேற்கிந்தியத் தீவுகளிடம் வாங்கிக்கட்டி முதலாவது தோல்வியைத் தழுவியது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 254 ஓட்டங்களைக் குவித்தது.

இந்த வருட ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் அணி ஒன்றினால் பெறப்பட்ட அதிகூடிய மொத்த எண்ணிக்கை இதுவாகும்.

அத்துடன் 19 வருட ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் 2007இல் கென்யாவுக்கு எதிராக இலங்கை 6 விக்கெட்களை இழந்து குவித்த 260 ஓட்டங்களுக்கு அடுத்ததாக இரண்டாவது அதிகூடிய மொத்த எண்ணிக்கையாகவும் இது பதிவானது.

பவர் ப்ளே ஓவர்களுக்குள் மேற்கிந்தியத் தீவுகளின் முதல் இரண்டு விக்கெட்களை வீழ்த்தியதும் ஸிம்பாப்வே ஓரளவு மகிழ்ச்சியில் திளைத்தது. (54 - 2 விக்.)

அந்த மகிழ்ச்சி வெகு நேரம் நீடிக்கவில்லை.

ஷிம்ரன் ஹெட்மயர், ரோவ்மன் பவல் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 52 பந்துகளில் 122 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலமான நிலையில் இட்டனர்.

தனது இரண்டு பிடிகளை டஷிங்கா முசேக்கிவா தவறவிட்டதை நன்கு பயன்படுத்திக்கொண்ட ஷிம்ரன் ஹெட்மயர் 34 பந்துகளில் 7 பவுண்டறிகள். 7 சிக்ஸ்களுடன் 85 ஓட்டங்களை விளாசினார்.

ஷிம்ரன் ஹெட்மயர் 19 பந்துகளில் 50 ஓட்டங்களைப் பூர்த்திசெய்து தசுன் ஷானக்க, ஏய்டன் மார்க்ராம் ஆகியோர் இந்த வருட உலகக் கிண்ணத்தில் நிலைநாட்டிய அதிவேக அரைச் சத சாதனையை  சமப்படுத்தினார்.  

2302_rowman_powell__wi_vs_zim.png

ரோவ்மன் பவல் 35 பந்துகளில் 4 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 59 ஓட்டங்களை குவித்தனர்.

மத்திய வரிசையில் ஷேர்ஃபேன் ரதஃபர்ட் 13 பந்துகளில் 31 ஓட்டங்களையும் ரொமாரியோ ஷெப்பர்ட் 10 பந்துகளில் 21 ஓட்டங்களையும் ஜேசன் ஹோல்டர் 4 பந்துகளில் 13 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ப்ளெசிங் முஸராபனி 42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ரிச்சர்ட் எங்கரவா 47 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

255 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே 17.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 147 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

ஸிம்பாப்வே வீரர்கள் மிக மோசமாகத் துடுப்பெடுத்தாடி விக்கெட்களைத் தாரைவார்த்தனர்.

துடுப்பாட்டத்தில் மத்திய வரிசை வீரர் ப்றட் இவான்ஸ் மாத்திரமே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 21 பந்துகளில் 2 பவுண்டறிகள், 5 சிக்ஸ்களுடன் 43 ஓட்டங்களைப் பெற்றார்.

அவரை விட டியொன் மயர்ஸ் (28), அணித் தலைவர் சிக்கந்தர் ராஸா (27) ஆகிய இருவரே 15 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

2302_gudakesh_motie_wi_vs_zim.png

2302_akeal_hosein__wi_vs_zim.png

பந்துவீச்சில் குடாகேஷ் மோட்டி 28 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் அக்கீல் ஹொசெய்ன் 28 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மெத்யூ ஃபோர்ட் 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: ஷிம்ரன் ஹெட்மயர்

https://www.virakesari.lk/article/239409

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பை வெஸ்ட் இண்டீஸ் தகர்த்துவிட்டதா?

டி20 உலகக் கோப்பை, இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே

பட மூலாதாரம்,Indranil MUKHERJEE / AFP via Getty Images

படக்குறிப்பு,ஜிம்பாப்வே அணியின் விக்கெட் வீழ்த்தப்பட்டதைக் கொண்டாடும் ஷிம்ரான் ஹெட்மையர் மற்றும் அகேல் ஹொசைன்.

7 மணி நேரங்களுக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

மும்பை வான்கடே மைதானத்தில் திங்கட்கிழமை ( பிப்ரவரி 23 ) நடைபெற்ற ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த அணி வீரர்கள் விளாசிய அதிகப்படியான சிக்ஸர்களும், பவுண்டரிகளும் மைதானத்தில் இருந்த ரசிகர்களை மகிழ்வித்தன.

வெஸ்ட் இண்டீஸின் ஆட்டத்தை ரசித்தவர்களில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் இருந்தனர். ஆனால் வெஸ்ட் இண்டீஸ் விளாசிய ஒவ்வொரு பந்தும் டி20 உலகக்கோப்பையில் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு கடினமான பாதையை உருவாக்கும் என்பதை அவர்கள் எண்ணி இருக்க மாட்டார்கள்.

வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 254 ரன்களை எடுத்தது. இது டி20 ஆடவர் உலகக்கோப்பை வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச ரன்களாகும். 2007ஆம் ஆண்டு கென்யாவுக்கு எதிராக இலங்கை 6 விக்கெட்டுக்கு 260 ரன்கள் எடுத்திருப்பது டி20 கிரிக்கெட்டின் அதிகபட்ச ரன்களாக நீடிக்கிறது.

இந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் 107 ரன் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனால் இந்தியா அரையிறுதிக்கு முன்னேறுவது கடினமாகிவிட்டது.

சூப்பர் 8 சுற்றில் குரூப் 1 நிலவரம்

சூப்பர் 8 சுற்றில் குரூப் 1-இல் இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் உள்ளன.

நான்கு அணிகளும் தலா ஒரு போட்டியில் விளையாடியுள்ளன. இதில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்தியா மற்றும் ஜிம்பாப்வே தோல்வியடைந்துள்ளன.

வெஸ்ட் இண்டீஸ் அணி 5.35 என்ற நிகர ரன் ரேட்டுடன் (NRR) அந்தக் குழுவில் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் தென்னாப்பிரிக்க அணி உள்ளது, அதன் நிகர ரன் ரேட் 3.80 ஆகும்.

இந்தியா -3.80 என்ற நிகர ரன் விகிதத்துடன் மூன்றாவது இடத்திலும், ஜிம்பாப்வே -5.35 நிகர ரன் விகிதத்துடன் கடைசி இடத்திலும் உள்ளன.

இந்தியாவின் முன்னுள்ள சவால்

டி20 உலகக் கோப்பை, இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே

பட மூலாதாரம்,Nikhil Patil/Getty Images

படக்குறிப்பு,ஷிம்ரான் ஹெட்மயர் 34 பந்துகளில் 7 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகளுடன் 85 ரன்கள் எடுத்தார்.

சூப்பர் 8 சுற்றில் குரூப் ஒன்றில் இந்தியாவுக்கு தற்போதுள்ள ரன் ரேட் அதன் பாதையை மிகவும் கடினமாக்கியுள்ளது.

இந்தியா அடுத்தடுத்து விளையாடும் இரண்டு ஆட்டங்களில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய இரண்டு அணிகளையும் வெற்றி பெறுவது மட்டும் போதாது. மற்ற காரணிகளும் சாதகமாக இருந்தால் மட்டுமே இந்தியாவால் அரையிறுதிக்கு முன்னேற முடியும்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா, "ஆமதாபாத்தில் நடைபெறும் போட்டியில் தென்னாப்பிரிக்கா வெஸ்ட் இண்டீஸை தோற்கடித்தால் மட்டுமே இந்தியா அரையிறுதிக்கு வர முடியும். ஆனால் தென்னாப்பிரிக்கா தோற்றால், ஜிம்பாப்வே தென்னாப்பிரிக்காவை தோற்கடிக்க வேண்டிய நிலை ஏற்படும்" என்று கூறுகிறார்.

"ஏனென்றால், இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய மூன்று அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் வெற்றி பெறும் சூழ்நிலை ஏற்பட்டால் இந்தியாவுக்கு அதில் எந்த வாய்ப்பும் இல்லை, ஏனெனில் இந்தியா நிகர ரன் விகிதத்தில் மிகவும் பின்தங்கியுள்ளது" என்று அவர் கூறுகிறார்.

இந்த தொடரில் ஜிம்பாப்வே அணி சிறப்பாக செயல்பட்டாலும், தென்னாப்பிரிக்காவை வீழ்த்துவது அவர்களுக்கு கடினமானதாக இருக்கும் என்று கிரிக்கெட் நிபுணர்கள் நம்புகின்றனர்.

அதேநேரத்தில், வெஸ்ட் இண்டீஸின் தற்போதைய ஆட்டத்தை கருத்தில் கொண்டால், தென்னாப்பிரிக்கா அவர்களைத் தோற்கடிப்பது எளிதானதல்ல. இந்தத் தொடர் முழுவதும் வெஸ்ட் இண்டீஸ் அணி சிறப்பாக விளையாடி வருகிறது.

வெஸ்ட் இண்டீஸ் அணி ஸ்காட்லாந்தை 35 ரன் வித்தியாசத்திலும், இங்கிலாந்தை 30 ரன் வித்தியாசத்திலும், நேபாளத்தை 9 விக்கெட் வித்தியாசத்திலும், இத்தாலியை 42 ரன் வித்தியாசத்திலும், ஜிம்பாப்வேயை 107 ரன் வித்தியாசத்திலும் தோற்கடித்துள்ளனர்.

"வெஸ்ட் இண்டீஸ் அனைவருக்கும் மிகவும் வலுவான செய்தியை அனுப்புகிறது" என்று கிரிக்கெட் நிபுணர் ஹர்ஷா போக்லே தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

விளையாட்டுப்பிரிவு பத்திரிகையாளர் விக்ராந்த் குப்தா, "இந்தியா வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டிகளில் வெற்றி பெற வேண்டும். தென்னாப்பிரிக்கா வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தினால், இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெறும். ஆனால் மூன்று அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் வெல்லும் நிலை வந்தால், இந்தியா நிகர ரன் விகிதத்தில் மிகவும் பின்தங்கியிருக்கும், அதனால் தொடரில் இருந்து வெளியேற்றப்படும்" என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

எனவே, வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்காவை தோற்கடித்தால், இந்தியா வெளியேறும் ஆபத்து இன்னும் அதிகரிக்கும். இதன்மூலம், மீதமுள்ள இரண்டு சூப்பர்-8 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றாலும், மற்ற அணிகள் ஆடும் போட்டிகளின் முடிவை சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்.

தனது முதல் சூப்பர் 8 போட்டியில், இந்தியா தென்னாப்பிரிக்காவிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இதன் விளைவாக இந்தியாவின் நிகர ரன் ரேட் -3.80 ஆக உள்ளது. இந்த மிகப்பெரிய தோல்வி இந்திய அணியை ஒரு நெருக்கடியான நிலையில் தள்ளியுள்ளது. மீதமுள்ள இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றாலும் கூட அரையிறுதியில் இந்தியா இடம் பெறுவதை உறுதி செய்ய முடியாது. தனது குழுவில் இடம்பெற்றுள்ள மற்ற அணிகள் ஆடும் போட்டிகளின் முடிவைப் பொருத்தே இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு இறுதியாகும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c77e6zlnk5vo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹெரி ப்றூக் அபார சதம்; அரை இறுதியில் இங்கிலாந்து, பாகிஸ்தானின் வாய்ப்பு கேள்விக்குறி

25 Feb, 2026 | 09:48 AM

image

(நெவில் அன்தனி)

பாகிஸ்தானுக்கு எதிராக கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (24) நடைபெற்ற ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண சுப்பர் 8 குழு 2க்கான போட்டியில் 2 விக்கெட்களால் வெற்றியீட்டிய இங்கிலாந்து முதலாவது அணியாக அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது.

மிகவும் இக்கட்டான நிலையில் அணித் தலைவர் ஹெரி ப்றூக் 50 பந்துகளில் குவித்த அபார சதம் இங்கிலாந்துக்கு வெற்றியையும் அரை இறுதி வாய்ப்பையும் ஈட்டிக்கொடுத்தது.

ஏற்கனவே நியூஸிலாந்துடனான போட்டி கைவிடப்பட்ட நிலையில் இங்கிலாந்திடம் இன்று அடைந்த தோல்வியால் பாகிஸ்தானின் அரை இறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

165 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 19.1 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 166 ஓட்டங்களைப் பெற்று பரபரப்பான வெற்றியை ஈட்டியது.

இங்கிலாந்தின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.

ஷஹீன் ஷா அப்றிடி அபாரமாக பந்துவீசி முதல் 3 விக்கெட்களை வீழ்த்த இங்கிலாந்து 35 ஓட்டங்களைப் பெற்று பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டது.

தொடர்ந்து மொத்த எண்ணிக்கை 58 ஓட்டங்களாக இருந்தபோது நான்காவது விக்கெட் சரிந்தது.

இந் நிலையில் அணித் தலைவர் ஹெரி ப்றூக், சாம் கரன் (16) ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 45 ஓட்டங்களைப் பகிர்ந்து இங்கிலாந்துக்கு நம்பிக்கையை ஊட்டினர்.

அதனைத் தொடர்ந்து ஹெரி ப்றூக், வில் ஜெக்ஸ் (28) ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 52 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 155 ஓட்டங்களாக உயர்த்தினர்.

ஆனால் ஹெரி ப்றூக், வில் ஜெக்ஸ், ஜெமி ஓவர்ட்டன் ஆகிய மூவரும் 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்ததால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால், கடைசி ஓவரின் முதல் பந்தில் ஜொவ்ரா ஆச்சர் பவுண்டறி அடித்து இங்கிலாந்தின் வெற்றியை உறுதிசெய்தார்.

ஹெரி ப்றூக் 51 பந்துகளில் 10 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 100 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.

சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் ஹெரி ப்றூக் குவித்த முதலாவது சதம் இதுவாகும்.

பந்துவிச்சில் ஷஹீன் ஷா அப்றிடி 30 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் மொஹம்மத் நவாஸ் 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் உஸ்மான் தாரிக் 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்ற்றினர்.

முன்னதாக இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பாகிஸ்தான் சிரமத்திற்கு மத்தியில் 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 164 ஓட்டங்களைப் பெற்றது.

போட்டியின் நான்காவது ஓவரில் பாகிஸ்தான் 2ஆவது விக்கெட்டை இழந்தபோது அதன் மொத்த எண்ணிக்கை வெறும் 27 ஓட்டங்களாக இருந்தது.

எனினும் மிகத் திறமையாகவும் பொறுப்புணர்வுடனும் துடுப்பெடுத்தாடிய ஆரம்ப வீரர் சாஹிப்ஸதா பர்ஹான் 3ஆவது விக்கெட்ல் பாபர் அஸாமுடன் 46 ஓட்டங்களையும் பக்கார் ஸமானுடன் 49 ஓட்டங்களையும் பகிர்ந்து பாகிஸ்தானை நல்ல நிலையில் இட்டார்.

சாஹிப்ஸதா பர்ஹான் 7 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 63 ஒடடங்களையும் பாபர் அஸாம் 25 ஓட்டங்கiயும் பக்கார் ஸாமான் 25 ஓட்டங்களையும் பெற்றனர்.

கடைசி பந்தில ஆட்டம் இழந்த ஷதாப் கான் 23 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் லியாம் டோசன் 24 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெமி ஓவர்ட்டன் 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஜொவ்ரா ஆச்சர் 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: ஹெரி ப்றூக்

2402_sahibzada_farhan_pak_v_eng.png

2402_shaheen_shah_afridi.png

https://www.virakesari.lk/article/239502

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சகல துறைகளிலும் பிரகாசித்த நியூஸிலாந்து ரி20 உலகக் கிண்ணத்திலிருந்து இணை வரவேற்பு நாடான இலங்கையை  வெளியேற்றியது

Published By: Vishnu

25 Feb, 2026 | 11:22 PM

image

(ஆர். பிரேமதாச அரங்கிலிருந்து நெவில் அன்தனி)

கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் புதன்கிழமை (25) நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் 61 ஓட்டங்களால் படுதோல்வி அடைந்த இலங்கை, நடப்பு ரி20 உலகக் கிண்ணத்திலிருந்து 'நொக் அவுட்' ஆனது.

இப் போட்டியில் நியூஸிலாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 169 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 20 ஓவர்களில் 8 விக்கெட்களை 107 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

2502__rachin_ravindra_celebrating_a_wkt.

ரச்சின் ரவிந்த்ராவின் சகலதுறை ஆட்டம். மிச்செல சென்ட்னர், கோல் மெக்கொன்ச்சி ஆகியோரின் அதிரடிகள், மெட் ஹென்றியின் துல்லியமான பந்துவீச்சு என்பன நியூஸிலாந்தை இலகுவாக வெற்றி அடையச் செய்தன.

இணை வரவேற்பு நாடாக இதற்கு முன்னர் மூன்று உலகக் கிண்ணப் போட்டிகளை நடத்திய சந்தர்ப்பங்களில் இறுதிவரை முன்னேறிய இலங்கை, இம்முறை நொக் அவுட் சுற்றுக்கு செல்லாமலேயே வெளியேறியது.

முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதற்கு அமைய மெட் ஹென்றி வீசிய முதலாவது பந்தில் பெத்தும் நிஸ்ஸன்க ஆட்டம் இழந்தவுடன் இலங்கை துடுப்பாட்ட விரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர்.

பகுதிநேர பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சுகள் எதிர்கொள்வதில் இலங்கை வீரர்கள் தொடர்ந்து சிரமப்படுவதை இந்தப் போட்டியிலும் காணக்கூடியதாக இருந்தது.

நியூஸிலாந்தின் பகுதிநேர பந்துவீச்சாளரான ரச்சின் ரவீந்த்ரா 4 விக்கெட்களைக் கைப்பற்றி சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் தனது அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவுசெய்தார்.

இலங்கை துடுப்பாட்டத்தில் ஒருவர் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்ததுடன் மூவர் 5 ஓட்டங்களுக்குள் ஆட்டம் இழந்தனர்.

மூவர் மாத்திரமே 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

2502_kamindu_mendis.png

கமிந்து மெண்டிஸ் 31 ஓட்டங்களையும் துனித் வெல்லாலகே 29 ஓட்டங்களையும் பவன் ரத்நாயக்க 10 ஓட்டங்களையும் பெற்றனர்.

மேலும் இலங்கை இன்னிங்ஸில் 8 பவுண்டறிகள் மாத்திரமே அடங்கியிருந்ததுடன் 16ஆவது ஓவரில் துனித் வெல்லாகேயின் துடுப்பிலிருந்து ஒரே ஒரு சிக்ஸ் பெறப்பட்டது.

பந்துவீச்சில் ரச்சின் ரவிந்த்ரா 4 ஓவர்களில் 27 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் மெட் ஹென்றி ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 2 ஓவர்களில் 3 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட நியூஸிலாந்து 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 168 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கை பந்தவீச்சாளர்கள் 16 ஓவர்கள் வரை மிகத் திறமையாக பந்துவீசி நியூஸிலாந்து துடுப்பாட்ட வீரர்களை நெருக்கடிக்குள்ளாக்கினர்.

16ஆவது ஓவர் நிறைவில் நியூஸிலாந்து 6 விக்கெட்களை இழந்து 98 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது.

2502_mitchell_santner.png

அதுவரை கட்டுப்பாட்டுடன் பந்துவீசிய இலங்கை பந்துவீச்சாளர்களை மிச்செல் சென்ட்னரும் கோல் மெக்கொன்ச்சியும்  கடைசி நான்கு ஓவர்களில்   நையப்புடைத்து ஓட்டங்களை சரமாரியாக குவித்தனர்.

அவர்கள் இருவரும் 7ஆவது விக்கெட்டில் 47 பந்துகளில் 84 ஓட்டங்களைப் பகிர்ந்து வீழ்ச்சியிலிருந்து அணியை மீட்டு மிகவும் பலமான நிலையில் இட்டனர்.

2502_cole_mcconchie.png

அவர்களது அதிரடி ஆட்டத்தினால் கடைசி 4 ஓவர்களில் நியூஸிலாந்து 70 ஓட்டங்களைக் குவித்தது.

மிச்செல் சென்ட்னர் 26 பந்துகளில் 2 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 47 ஓட்டங்களையும் கோல் மெக்கொன்ச்சி 23 பந்துகளில் 3 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் ஆட்டம் இழக்காமல் 31 ஓட்டங்களையும் பெற்றனர்.

அவர்களைவிட ரச்சின் ரவிந்த்ரா 32 ஓட்டங்களையும் பின் அலன் 23 ஓட்டங்களையும் க்லென் பிலிப்ஸ் 18 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் மஹீஷ் தீக்ஷன 30 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் துஷ்மன்த சமீர 38 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: ரச்சின் ரவிந்த்ரா

https://www.virakesari.lk/article/239590

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

சகல துறைகளிலும் பிரகாசித்த நியூஸிலாந்து ரி20 உலகக் கிண்ணத்திலிருந்து இணை வரவேற்பு நாடான இலங்கையை  வெளியேற்றியது

இலங்கை அணி தோல்வி அடைந்ததை...

தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டு இருந்த ரசிகர்,

ஆத்திரத்தில் தனது தொலைக்காட்சியை அடித்து நொருக்கினார். animiertes-computer-smilies-bild-0096.gi

காணொளி: 👉 https://www.facebook.com/reel/1209459494707192 👈

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

இலங்கை அணி தோல்வி அடைந்ததை...

தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டு இருந்த ரசிகர்,

ஆத்திரத்தில் தனது தொலைக்காட்சியை அடித்து நொருக்கினார். animiertes-computer-smilies-bild-0096.gi

காணொளி: 👉 https://www.facebook.com/reel/1209459494707192 👈

இலங்கை அணி வீரர்கள் தங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு ஜனாதிபதியைக் கேட்டிருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஈழப்பிரியன் said:

இலங்கை அணி வீரர்கள் தங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு ஜனாதிபதியைக் கேட்டிருக்கிறார்கள்.

பாதுகாப்பு வேண்டும்தான். ரசிகர்கள்.. பயங்கர ஆத்திரத்தில் உள்ளார்கள்.

இவர்கள் அம்பிட்டால்... கொலையும் செய்து விடுவார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெஸ்ட் இண்டீஸை எளிதாக வீழ்த்திய தென்னாப்பிரிக்கா - இனி இந்தியாவுக்கு என்ன வாய்ப்பு?

தென்னாப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் - டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம்,Getty Images

26 பிப்ரவரி 2026, 14:38 GMT

புதுப்பிக்கப்பட்டது 52 நிமிடங்களுக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 சுற்றுப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியது. இதன் மூலம் அரையிறுதி வாய்ப்பை நெருங்கியிருக்கிறது அந்த அணி.

இந்த உலகக் கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் சந்திக்கும் முதல் தோல்வி இது.

தென்னாப்பிரிக்க அணி தாங்கள் விளையாடிய 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறது. இந்தத் தொடரில் தோல்வியே சந்திக்காத ஒரே அணி தென்னாப்பிரிக்காதான்.

தென்னாப்பிரிக்காவின் இந்த வெற்றி, வெஸ்ட் இண்டீஸ் அணியின் மீதான நெருக்கடியை அதிகரித்திருக்கிறது.

சிறப்பாக செயல்பட்ட தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர்கள்

ஆமதாபாத்தில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது தென்னாப்பிரிக்கா.

வெஸ்ட் இண்டீஸ் அணி அதிரடியாக போட்டியைத் தொடங்கினாலும், மூன்றாவது ஓவரில் அந்த அணியின் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார் தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் ககிஸோ ரபாடா. அடுத்த ஓவரில் லுங்கி எங்கிடி தன் பங்கிற்கு 2 விக்கெட்டுகள் வீழ்த்த, 4 ஓவர்கள் முடிவில் 43/4 என வெஸ்ட் இண்டீஸ் கடும் நெருக்கடிக்கு உள்ளானது.

அதன்பிறகும் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் பெரிய ஷாட்கள் ஆட நினைத்து தொடர்ச்சியாக தங்கள் விக்கெட்டுகளை இழந்துகொண்டே இருந்தனர். 10.2 ஓவர்களில் அந்த அணி 83/7 என்ற கட்டத்தை அடைந்தது.

எட்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜேசன் ஹோல்டன், ரொமாரியோ ஷெபர்ட் இருவரும் விக்கெட் வீழ்ச்சியைத் தடுத்து ஓரளவு அதிரடியும் காட்டினார்கள். அதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 176 ரன்கள் எடுத்தது.

ரொமாரியோ ஷெபர்ட், 37 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹோல்டர் 49 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி எட்டாவது விக்கெட்டுக்கு 89 ரன்கள் சேர்த்தது.

தென்னாப்பிரிக்க அணி தரப்பில் எங்கிடி 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். ரபாடா, கார்பின் பாஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

தென்னாப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் - டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம்,Getty Images

தென்னாப்பிரிக்க பேட்டர்களின் ஆதிக்கம்

தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர்களைப் போல் அந்த அணியின் பேட்டர்களுமே இந்தப் போட்டியில் ஆதிக்கம் செலுத்தினார்கள்.

கேப்டன் எய்டன் மார்க்ரம் ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக ஆடினார். குவின்டன் டி காக் அவருக்கு பக்க பலமாக ஆட, பவர்பிளேவில் அந்த அணி விக்கெட்டே இழக்காமல் 69 ரன்கள் எடுத்தது.

47 ரன் எடுத்த டி காக், ராஸ்டன் சேஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றிய ஒரே விக்கெட் அதுதான். அடுத்து வந்த ரயன் ரிக்கில்டனும் அந்த அதிரடியைத் தொடர்ந்தார். அவர் 45 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

27 பந்துகளில் அரைசதம் கடந்த மார்க்ரம், ஆட்டமிழக்காமல் 82 ரன்கள் எடுத்து அந்த அணியின் வெற்றியை உறுதி செய்தார். அவர் இந்த இன்னிங்ஸுக்காக ஆட்ட நாயகன் விருதும் வென்றார்.

தென்னாப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் - டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம்,Getty Images

அரையிறுதிக்குள் நுழைய யாருக்கு வாய்ப்பு?

இந்த வெற்றியின் மூலம் தென்னாப்பிரிக்க அணி அரையிறுதிக்குள் நுழைய நல்ல வாய்ப்பு இருக்கிறது. இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஜிம்பாப்வே தோல்வி அடைந்தால், அது தென்னப்பிரிக்கா அரையிறுதிக்குள் நுழைவதை உறுதி செய்யும்.

அதேசமயம் இந்திய அணி ஜிம்பாப்வேவை வீழ்த்துவதன் மூலம், இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் போட்டி ஒரு நாக் அவுட் ஆட்டமாக மாறிவிடும். அந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதி வாய்ப்பைப் பெறும்.

இந்தியா ரன்ரேட் பற்றியெல்லாம் கவலைப்படவேண்டியதாக இருக்காது. வெற்றி பெற்றாலே அரையிறுதிக்குள் சென்றுவிடலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c3v7z4n7xqdo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஸிம்பாப்வேயை வீழ்த்தி தனது அரை இறுதி வாய்ப்பை இந்தியா அதிகரித்துக்கொண்டது

Published By: Vishnu

26 Feb, 2026 | 11:10 PM

image

(நெவில் அன்தனி)

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற ஸிம்பாப்வே அணிக்கு எதிரான ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண சுப்பர் 8 குழு 1 போட்டியில் 72 ஓட்டங்களால் அமோக வெற்றியீட்டிய நடப்பு சம்பியன் இந்தியா, அரை இறுதிக்கு செல்வதற்கான தனது வாய்ப்பை அதிகரித்துக்கொண்டுள்ளது.

இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதை அடுத்து குழு 1இல் இலிருந்து தென் ஆபிரிக்கா முதலாவது அணியாக அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது.

குழு 2இல் இருந்து இங்கிலாந்து ஏற்கனவே அரை இறுதிக்கு தகுதி பெற்றிருந்தது.

இந்தப் போட்டி முடிவை அடுத்து மேற்கிந்தியத் தீவுகளும் இந்தியாவும் தலா ஒரு வெற்றியுடன் அணிகள் நிலையில் தென் ஆபிரிக்காவுக்கு அடுத்ததாக முறையே இரண்டாம், மூன்றாம் இடங்களில் இருக்கின்றன.

இந்த இரண்டு அணிகளுக்கு இடையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள போட்டியில் வெற்றிபெறும் அணி அரை இறுதியில் விளையாட தகுதிபெறும்.

இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 256 ஓட்டங்களைப் பெற்று சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் தனது அதிகூடிய மொத்த எண்ணிக்கையைப் பதிவுசெய்தது.

ரி20 உலகக் கிண்ண வரலாற்றில் 2007இல் கென்யாவுக்கு எதிராக இலங்கை குவித்த சாதனைமிகு 260 ஓட்டங்ளுக்கு அடுத்தபடியாக இந்தியாவின் மொத்த எண்ணிக்கை இரண்டாம் இடத்தில் இருக்கிறது.

இன்றைய போட்டியில் கணிசமான மொத்த எண்ணிக்கையைப் பெற்று மிகப் பெரிய ஓட்ட வித்தியாசத்தில் வெற்றிபெற்றால் மாத்திரமே அரை இறுதிக்கு செல்வதற்கான தனது வாயில் திறக்கப்படும் என்பதை அறிந்திருந்த இந்தியா, ஆரம்பத்திலிருந்தே அதிரடியாக ஓட்டங்களைக் குவித்த வண்ணம் இருந்தது.

இந்திய வீரர்கள் அனைவருமே 160.00 க்கு குறையாத ஸ்ட்ரைக் ரேட்டைப் பதிவுசெய்திருந்தனர்.

ஆரம்ப விக்கெட்டில் சஞ்சு செம்சனுடன் 22 பந்துகளில் 48 ஓட்டங்களைப் பகிர்ந்த அபிஷேக் ஷர்மா, இரண்டாவது விக்கெட்டில் இஷான் கிஷானுடன் 42 பந்துகளில் மேலும் 72 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

2602_abishek_sharma.png

சஞ்சு செம்சன் 15 பந்துகளில் 25 ஓட்டங்களையம் இஷான் கிஷான் 24 பந்துகளில் 38 ஓட்டங்களையும் அபிஷேக் ஷர்மா 30 பந்துகளில் 55 ஓட்டங்களையும் அணித் தலைவர் சூரியகுமார் யாதவ் 13 பந்துகளில் 33 ஓட்டங்களையும் பெற்றனர். (172 - 4 விக்.)

இதனைத் தொடர்ந்து ஹார்திக் பாண்டியா 23 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 50 ஓட்டங்களையும் திலக் வர்மா 16 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 44 ஓட்டங்களையும் பெற்றதுடன் பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் 84 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை மிகவும் பலமான நிலையில் இட்டனர்.

மிகவும் கடினமான 257 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 184 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

ப்றயன் பெனெட், தடிவனாஷே மாருமணி ஆகிய இருவரும் ஆரம்ப விக்கெட்டில் 44 ஓட்டங்களைப் பகிர்ந்து ஓரளவு சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

2602__brian_bennett.png

மாருமணி 20 ஓட்டங்களைப் பெற்றார். அடுத்து களம் நுழைந்த டியொன் மயர்ஸ் 6 ஓட்டங்களுடன் வெளியேறினார். (72 - 2 விக்.)

ப்றயன் பெனெட், அணித் தலைவர் சிக்கந்தர் ராஸா ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 72 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது சிக்கந்தர் ராஸா 31 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

ரெயான் பேர்ல் (0), டஷிங்கா முனியொங்கா (11), முசேக்கிவா (7) ஆகியோர் சீரான இடைவெளியில் ஆட்டம் இழந்தனர்.

ப்றயன் பெனெட் 20 ஓவர்களும் தாக்குப் பிடித்து 97 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

2602__arshdeep_singh.png

பந்துவீச்சில் அர்ஷ்திப் சிங் 24 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

https://www.virakesari.lk/article/239676

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெற்றியுடனும் ஏமாற்றத்துடனும் பாகிஸ்தான் நாடு திரும்புகிறது, கடைசிவரை போராடி தோற்றது இலங்கை; அரை இறுதியில் நியூஸிலாந்து

Published By: Vishnu

28 Feb, 2026 | 11:42 PM

image

(பல்லேகலை அரங்கலிருந்து நெவில் அன்தனி)

கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று சனிக்கிழமை இரவு பரபரப்பைவும் விறுவிறுப்பையும் ஏற்படுத்திய ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண சுப்பர் 8 குழு 2க்கான கடைசி போட்டியில் இலங்கையை 5 ஓட்டங்களால் பாகிஸ்தான் வெற்றிகொண்டது.

ஆனால், பாகிஸ்தான் அரை இறுதி வாய்ப்பை தவறவிட்டு ஏமாற்றத்துடன் நாடு திரும்புகிறது.

2802_sl_vs_pak_match_over.png

பாகிஸ்தான் அரை இறுதிக்கு தகுதிபெறுவதற்கு 64 ஓட்டங்களால் வெற்றி பெறவேண்டியிருந்தது.

ஆனால், பவன் ரத்நாயக்க, தசுன் ஷானக்க ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி இலங்கையின் மொத்த எண்ணிகையை 148 ஓட்டங்களாக உயர்த்தியபோது பாகிஸ்தானின் அரை இறுதி கனவு கலைந்துபோனது.

இதனை அடுத்து குழு 2 இலிருந்து இரண்டாவது அணியாக நியூஸிலாந்து அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது. இக் குழுவிலிருந்து ஏற்கனவே இங்கிலாந்து முதலாவது அணியாக அரை இறுதியில் விளையாட தகுதி பெற்றிருந்தது.

குழு 1இல் தென் ஆபிரிக்கா ஏற்கனவே அரை இறுதிக்கு தெரிவாகியுள்ள நிலையில் இந்தியாவுக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 01) நடைபெறவுள்ள சுப்பர் 8இல் வெற்றிபெறும் அணி அரை இறுதியில் விளையாட கடைசி அணியாக தகுதிபெறும்.

பாகிஸ்தானினால் நிர்ணயிக்கப்பட்ட 213 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 207 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

2802_dasun_shanaka_action.png

போட்டியின் கடைசிக் கட்டத்தில் அணித் தலைவர் தசுன் ஷானக்க அதிரடியாக துடுப்பெடுத்தாடி வெற்றியை அண்மிக்கச் செய்தார்.

கடைசி ஓவரில் இலங்கையின் வெற்றிக்கு 28 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

ஷஹீன் ஷா அப்றிடி வீசிய கடைசி ஓவரின் முதல் 4 பந்து களை 4, 6, 6, 6ஆக விசுக்கிய தசுன் ஷானக்க 22 ஓட்டங்களைக் குவித்தார். 5ஆவது பந்து டொட் போலானது. கடைசிப் பந்து வைட் போன்று தென்பட்டபோதிலும் மத்தியஸ்தர் அசையவில்லை.

இலங்கையின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.

பெத்தும் நிஸ்ஸன்க (3) இரண்டாவது ஓவரில் ஆட்டம் இழந்ததுடன் மொத்த எண்ணிக்கை 33 ஓட்டங்களாக இருந்தபோது கமில் மிஷார (26) களம் விட்டு வெளியேறினார்.

2802_pavan_rathnayake.png

சரித் அசலன்கவும் பவன் ரத்நாயக்கவும் 3ஆவது விக்கெட்டில் 42 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு தெம்பூட்டினர்.

ஆனால் அதன் பின்னர் சரித் அசலன்க (25), கமிந்து மெண்டிஸ் (3), ஜனித் லியனகே (5) ஆகிய மூவரும் சீரான இடைவெளியில் ஆட்டம் இழந்தனர்.

இந் நிலையில் பவன் ரத்நாயக்க, அணித் தலைவர் தசுன் ஷானக்க ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 61 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு உற்சாகமூட்டினர்.

பவன் ரத்நாயக்க திறமையாகத் துடுப்பெடுத்தாடி 37 பந்துகளில் 4 பவண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட 58 ஓட்டங்களைப் பெற்றார்.

அதன் பின்னர் தனித்து போராடிய தசுன் ஷானக்க அபாரமாகத் துடுப்பெடுத்தாடி 31 பந்துகளில் 2 பவுண்டறிகள், 8 சிக்ஸ்கள் அடங்கலாக 76 ஓட்டங்ககளுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

தசுன் ஷானக்க பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் துனித் வெல்லாலகேவுடன் 42 ஓட்டங்களைப் பகிர்ந்தார். இதில் துனித் வெல்லாலகே ஆட்டம் இழக்காமல் 2 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் அப்ரார் அஹ்மத் 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பாகிஸ்தான் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 212 ஓட்டங்களைக் குவித்தது.

ரி20 உலகக் கிண்ண வரலாற்றில் இலங்கைக்கு எதிராக அணி ஒன்றினால் பெறப்பட்ட அதிகூடிய மொத்த எண்ணிக்கை இதுவாகும்.

பங்களாதேஷின் சட்டாக்ரோமில் 2014இல் இங்கிலாந்து பெற்ற 4 விக்கெட் இழப்புக்கு 190 ஓட்டங்களே இலங்கைக்கு எதிராக ரி20 உலகக் கிண்ணத்தில் பெறப்பட்ட முந்தைய  அதிகூடிய மொத்த எண்ணிக்கையாக இருந்தது

ஆரம்ப வீரர் சாஹிப்ஸதா பர்ஹான் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி சதம் குவித்து பாகிஸ்தானுக்கு கணிசமான ஓட்டங்களைக் குவிக்க உதவினார்.

ஆரம்ப வீரர்களான சாஹிப்ஸதா பர்ஹான், பக்கார் ஸமான் ஆகிய இருவரும் இலங்கையின் சகல பந்துவீச்சாளர்களையும் விளாசி அடித்து ஓட்டங்களை மிக இலகுவாக குவித்தனர்.

2802_sahibzada_farhan_action.png

அவர்கள் இருவரும் 95 பந்துகளில் சாதனைமிகு 176 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

இந்த வருட உலகக் கிண்ணத்தில் இது சகல விக்கெட்களுக்குமான அதிசிறந்த இணைப்பாட்டமாகும்.

இதற்கு முன்னர் சென்னையில் கடந்த 10ஆம் திகதி நடைபெற்ற ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு எதிரான குழுநிலை போட்டியில் நியூஸிலாந்தின் டிம் சீஃபேர்ட், ஃபின் அலன் ஆகியோர் பிரிக்கப்படாத ஆரம்ப விக்கெட்டில் பகிர்ந்த 175 ஓட்டங்களே முந்தைய அதிசிறந்த இணைப்பாட்டமாக இருந்தது.

பக்கார் ஸமான் 42 பந்துகளில் 9 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 84 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்ததைத் தொடர்ந்து பாகிஸ்தானின் விக்கெட்கள் அடுத்தடுத்து வீழ்ந்தன.

விக்கெட் இழப்பின்றி 176 ஓட்டங்களைப் பெற்ற பலமான நிலையில் இருந்த பாகிஸ்தான் 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 8 விக்கெட்களை இழந்தது.

இதனிடையே திறமையாகத் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த சாஹிப்ஸதா பர்ஹான் கடைசி ஓவரின் முதல் பந்தில் ஆட்டம் இழந்தார்.

60 ஓட்டங்களை எதிர்கொண்ட சாஹிப்ஸதா பர்ஹான் 9 பவுண்டறிகள், 5 சிக்ஸ்களுடன் சரியாக 100 ஓட்டங்களைக் குவித்தார்.

இந்த வருட உலகக் கிண்ணத்தில் அவர் பெற்ற இரண்டாவது சதம் இதுவாகும்.

நமிபியாவுக்கு எதிராக எஸ்எஸ்சி மைதானத்தில் கடந்த 18ஆம் திகதி நடைபெற்ற போட்டியில் சாஹிப்ஸதா பர்ஹான் ஆட்டம் இழக்காமல் 100 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் டில்ஷான் மதுஷன்க 33 ஓட்டங்களுக்க 3 விக்கெட்களையும் தசுன் ஷானக்க 42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: சாஹிப்ஸதா பர்ஹான்.

https://www.virakesari.lk/article/239838

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ராஸாவின் அதிரடிக்கு மத்தியில் தோல்வி அடையாத அணியாக அரை இறுதிக்குள் நுழைந்தது தென் ஆபிரிக்கா

Published By: Vishnu

01 Mar, 2026 | 08:15 PM

image

(நெவில் அன்தனி)

டெல்லி, அருண் ஜய்ட்லி விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (01) நடைபெற்ற ஸிம்பாப்வேக்கு எதிரான ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண சுப்பர் 8 குழு 1 போட்டியில் தென் ஆபிரிக்கா 5 விக்கெட்களால் வெற்றியீட்டியது.

இந்தப் போட்டியில் ஸிம்பாப்வே அணித் தலைவர் சிக்கந்தர் ராஸா சகலதுறைகளிலும் பிரகாசித்தபோதிலும் அவரது அணியினால் வெற்றிபெற முடியாமல் போனது.

இதனை அடுத்து இந்த வருட ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் தோல்வி அடையாத ஒரே ஒரு அணியாக தென் ஆபிரிக்கா அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது.

இக் குழுவில் முதலிடத்தில் உள்ள தென் ஆபிரிக்கா, பி குழுவில் இரண்டாம் இடத்தைப் பெற்ற நியூஸிலாந்தை கொல்கத்தா ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கில் புதன்கிழமை நடைபெறவுள்ள முதலாவது அரை இறுதிப் போட்டியில் எதிர்த்தாடவுள்ளது.

இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த ஸிம்பாப்வே 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 153 ஓட்டங்களைப் பெற்றது.

அணித் தலைவர் சிக்கந்தர் ராஸா மாத்திரம் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 43 பந்துகளில் 8 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் உட்பட 73 ஓட்டங்களைப் பெற்றார்.

அவரை விட க்ளைவ் மதண்டே 26 ஓட்டங்களைப் பெற்றார்.

வேறு எவரும் 20 ஓட்டங்களை எட்டவில்லை.

பந்துவீச்சில் க்வேனா மஃபாக்கா 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கொர்பின் பொஷ் 40 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 17.5 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 154 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

தென் அபிரிக்காவின் முதல் இரண்டு விக்கெட்கள் முதல் 3 ஓவர்களுக்குள் வீழ்த்தப்பட்டதால் அவ்வணி நெருக்கடியை எதிர்கொண்டது.

ஆனால், அடுத்த நால்வரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி தென் ஆபிரிக்காவை வெற்றிபெறச் செய்தனர்.

ரெயான் ரிக்ல்டன் 31 ஓட்டங்களையும் டிவோல்ட் ப்ரெவிஸ் 42 ஓட்டங்களையும் டேவிட் மில்லர் 22 ஓட்டங்களையும் ட்ரைஸ்டன் ஆட்டம் இழக்காமல் 21 ஓட்டங்களையும் ஜோர்ஜ் லிண்டே ஆட்டம் இழக்காமல் 30 ஓட்டங்களையும் பெற்றனர்.

சிக்கந்தர் ராஸா 29 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை கைப்பற்றினார்.

இந்தப் போட்டியில் சகலதுறைகளிலும் பிரகாசித்த சிக்கந்தர் ராஸா ஆட்டநாயகனானார்.

ராஸாவின் அதிரடிக்கு மத்தியில் தோல்வி அடையாத அணியாக அரை இறுதிக்குள் நுழைந்தது தென் ஆபிரிக்கா

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.