Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா நிர்ணயித்த வெற்றியிலக்கு

Mar 8, 2026 - 08:44 PM

உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இன்று (8) இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதி வருகின்றன.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

அஹமதாபாத் நரேந்திர மோடி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இந்தப் போட்டி இன்றிரவு 7 மணிக்கு ஆரம்பமானது.

அதன்படி முதலில் துடுப்பாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 255 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இந்திய அணி சார்பில் துடுப்பாட்டத்தில் சஞ்சு சம்சன் 89 ஓட்டங்களையும், இசன் கிஷன் 54 ஓட்டங்களையும், அபிஷேக் சர்மா 52 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தனர்.

உலக கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் ஒரு அணி பெற்றுக் கொண்ட அதிகூடிய ஓட்டம் இதுவாகும்.

இந்நிலையில் 256 என்ற வெற்றியிலக்கை நோக்கி நியூசிலாந்து அணி துடுப்பாடவுள்ளது.

இந்தியா நிர்ணயித்த வெற்றியிலக்கு

  • Replies 104
  • Views 3.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • கிருபன்
    கிருபன்

    பெப் 07 தானே ஆரம்பம். கிறிஸ்மஸுக்கு முன்னர் கேள்விக்கொத்து தயாரிக்கலாம். மழையால்☔️ எத்தனை போட்டிகள் தடைப்படும் என்றும் ஒரு கேள்வி போடலாம்.🤣 20 பேர் வரை கலந்துகொண்டால்தான் சுவாரஸ்யம்😁

  • கந்தப்பு
    கந்தப்பு

    கிருபன் சிறப்பாக கடந்த T20 போட்டியினை நடாத்தியதினால் அவரை மீண்டும் இம்முறையும் போட்டியை நடாத்தும் படி வேண்டிகொள்கிறேன்.

  • சிம்பாவே அணி இலங்கையணிக்கு சவாலாக உருவெடூத்துள்ளது, சிம்பாவே அணியும் இலங்கை அணி போல நிண்டகாலமாக விளையாடும் அணிதான், புதிதாக வரும் அணிகள் வெகு வேகமாக முன்னேறிவருகிறார்கள் சில அணிகள் பின் தங்கி விடுக

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டி20 உலகக் கோப்பை சாம்பியன் - ஒரே வெற்றியில் இந்தியா படைத்த 4 வரலாறு என்ன?

இந்தியா - நியூசிலாந்து - டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம்,Getty Images

கட்டுரை தகவல்

  • பிரதீப் கிருஷ்ணா

  • பிபிசி தமிழ்

  • 8 மார்ச் 2026

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

பிப்ரவரி 7-ம் தேதி 2026 டி20 உலகக் கோப்பை தொடங்கும்போது இதுதான் டி20 உலகக் கோப்பையின் வரலாறு.

  • தொடரை நடத்திய நாட்டின் அணி கோப்பையை வென்றது இல்லை

  • எந்த நடப்பு சாம்பியனும் கோப்பையை தக்க வைத்ததில்லை

  • நியூசிலாந்து அணியை இந்தியா வீழ்த்தியதில்லை

ஆனால், மார்ச் 8 இந்த வரலாறை மாற்றி, மூன்றாவது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்ற முதல் அணி என்ற புதிய வரலாறு படைத்திருக்கிறது இந்தியா.

ஆமதாபாத்தில் நடந்த இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி.

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 255 ரன்கள் குவித்தது இந்தியா.

அடுத்து விளையாடிய நியூசிலாந்து அணி 19 ஓவரில் 159 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

தொடர்ந்து மூன்று போட்டிகளில் அரைசதம் அடித்து இந்தியா கோப்பை வெல்ல முக்கியக் காரணமாக விளங்கிய சஞ்சு சாம்சன் தொடர் நாயகன் விருது வென்றார்.

டி20 உலகக் கோப்பை சாம்பியன் - ஒரே வெற்றியில் இந்தியா படைத்த 4 வரலாறு என்ன?

பட மூலாதாரம்,Getty Images

அபிஷேக் அதிரடியும் மிகப் பெரிய பவர்பிளேவும்

வழக்கமாக அதிரடியாக பேட்டிங்கைத் தொடங்கிக்கொண்டிருக்கும் சஞ்சு சாம்சன் இந்தப் போட்டியில் சற்று நிதானம் காட்டினார்.

மேட் ஹென்றி வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரின் முதல் 4 பந்துகளையுமே அவர் டாட் பால்களாகவே ஆடினார். ஹென்றியின் லென்த், ஸ்விங் ஆகியவற்றைக் கவனமாக கவனித்து ஆடினார் சாம்சன்.

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

இரண்டாவது ஓவரில் ஆஃப் ஸ்பின்னர் கிளென் ஃபிலிப்ஸ் பந்துவீச வர, இம்முறை அபிஷேக் மிகவும் கவனமாக எதிர்கொண்டார். அந்த ஓவரில் அவர் சந்தித்த 4 பந்துகளில் 3 ரன்கள்தான் எடுத்தார். இரண்டு ஓவர்கள் முடிவில் இந்தியா 12 ரன்கள் எடுத்திருந்தது.

ஆனால், சான்ட்னர் அதன்பிறகு எடுத்த முடிவு போட்டியின் போக்கையே மாற்றியது.

முதலிரு ஓவர்கள் வீசிய பௌலர்களின் ஸ்பெல்லைத் தொடராமல், அடுத்த இரு ஓவர்களும் புதிய பௌலர்களைப் பயன்படுத்தினார் அவர். மூன்றாவது ஓவரை வீசிய ஜேக்கப் டஃபி நன்கு வேகம் கொடுக்க, அதை எதிர்பார்த்துக் காத்திருந்த இந்திய பேட்டர்கள் அதிரடியைத் தொடங்கினார்கள்.

அந்த ஓவர்களில் 15 ரன்கள் வர, லாக்கி ஃபெர்குசன் வீசிய நான்காவது ஓவரில் 24 ரன்கள் எடுக்கப்பட்டது.

ஒரே வெற்றியில் இந்தியா படைத்த 4 வரலாறு என்ன?

பட மூலாதாரம்,Getty Images

அதன் விளைவாக நான்காவது ஓவரின் முடிவிலேயே இந்தியா 50 ரன்களைக் கடந்துவிட்டது. தொடர்ந்து சொதப்பிக்கொண்டிருந்த இந்தியாவின் தொடக்க ஜோடி முதல் முறையாக நான்கு ஓவர்களை கடந்தது.

அதே வேகத்தில் இந்திய ஓப்பனர்கள் இருவரும் தொடர்ந்து ஆடினார்கள்.

மேட் ஹென்றி வீசிய ஐந்தாவது ஓவரில் 21 ரன்கள், ஜேக்கப் டஃபி வீசிய ஆறாவது ஓவரில் 20 ரன்கள் என ரன்கள் வந்துகொண்டே இருந்தது. பவர்பிளே முடிவில் இந்திய அணி 92 ரன்கள் விளாசியிருந்தது.

இந்த உலகக் கோப்பையில் பவர்பிளேவில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுதான்.

அந்த பவர்பிளேவுக்குள்ளேயே அபிஷேக் ஷர்மாவும் தன்னுடைய அரைசதத்தை நிறைவு செய்திருந்தார். 18 பந்துகளில் அரைசதம் கடந்தார் அவர். இந்த உலகக் கோப்பையின் அதிவேக அரைசதம் இதுதான்.

இந்தியா - நியூசிலாந்து - டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம்,Getty Images

ஹாட்ரிக் அடித்த சஞ்சு சாம்சன்

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான சூப்பர் 8 போட்டி, இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி என தொடர்ந்து இரண்டு போட்டிகளில் அரைசதம் அடித்த சஞ்சு சாம்சன், இந்த இறுதிப் போட்டியிலும் அரைசதம் கடந்து ஹாட்ரிக் அடித்தார்.

அபிஷேக் ஷர்மா ஒருபக்கம் அதிவேக அரைசதம் எடுத்து சாதனை படைக்க, வழக்கம் போல் சத்தமே இல்லாமல் தன்னுடைய 'கிளாசிக்' ஷாட்களால் ரன் சேர்த்துக் கொண்டிருந்தார் சாம்சன்.

கடந்த இரு போட்டிகளிலும் செய்ததைப் போலவே கிடைக்கும் பந்துகளில் பவுண்டரியும், சிக்ஸரும் எடுத்துவிட்டு அதன்பிறகு ஸ்டிரைக்கை ரொடேட் செய்தார்.

பின்னர் திரும்ப ஸ்டிரைக்குக்கு வரும்போது மறுபடியும் அதையே செய்தார். அவரது இந்த அணுகுமுறையோடு, அபிஷேக்கின் அதிரடியும் சேர்ந்ததால், இந்தியாவுக்கு ரன்கள் குவிந்தன.

பந்துகளை சரியாகக் கணித்த சாம்சன், ஆட்டத்தின் போக்கையுமே புரிந்து விளையாடினார். நியூசிலாந்து அணியின் ஆபத்தான பௌலராகக் கருதப்பட்ட மிட்செல் சான்ட்னரை மட்டும் நிதானமாக எதிர்கொண்டார். அவருடைய ஓவரில் விக்கெட் விழாமல் ஆடிவிட்டு மற்றவர்களின் பந்துவீச்சைப் பதம் பார்த்தார்.

ஒருகட்டத்தில் தொடர்ச்சியாக சான்ட்னரின் 9 பந்துகளை (7-வது & 9-வது ஓவர்) சந்தித்த சாம்சன் 8 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதில் ஒரு பவுண்டரி மட்டுமே அடித்தார். அதிகமாக அவர் ரிஸ்க் எடுக்கவில்லை. பின்னர் சான்ட்னர் வீசிய 11-வது ஓவரில் 3 பந்துகள் சந்தித்து 2 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

ஆனால், அதற்கெல்லாம் ஈடுகட்டும் விதத்தில் 12-வது ஓவரில் ஃபெர்குசனை டார்கெட் செய்தார். அந்த ஓவரின் முதலிரு பந்துகளிலும் சிக்ஸர் அடித்துவிட்டு மூன்றாவது பந்தில் சிங்கிள் எடுத்தார்.

பின்னர் அந்த ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்டிரைக் எடுக்க வந்தவர், அதிலும் பவுண்டரி அடித்தார். அந்த ஓவரில் 4 பந்துகளில் 17 ரன்கள். ரச்சின் ரவீந்திரா வீசிய 14-வது ஓவரிலோ ஹாட்ரிக் சிக்ஸர்கள் விளாசினார்.

இப்படி பௌலர்களை சிறப்பாகக் கையாண்ட சாம்சன் 46 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அரையிறுதி மற்றும் இறுதி என இரு போட்டிகளிலும் அரைசதம் அடிக்கும் மூன்றாவது வீரர் சஞ்சு சாம்சன்.

இதற்கு முன் ஷாஹித் அஃப்ரிடி (2009) மற்றும் விராட் கோலி (2014) அதைச் செய்திருக்கிறார்கள்.

இந்தியா - நியூசிலாந்து - டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம்,Getty Images

துபே அதிரடி

சாம்சன், அபிஷேக் மட்டுமல்லாமல் மூன்றாவது வீரராக வந்த இஷான் கிஷனுமே அதிரடியாக விளையாடினார். முதல் பந்தில் இருந்தே அடித்து ஆடிய அவர், 23 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

இவர்களின் தொடர்ச்சியான அதிரடியால் 15 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழந்து 203 ரன்கள் எடுத்தது இந்தியா. 16-வது ஓவரில் நியூசிலாந்து அணிக்கு புத்துயிர் கொடுத்தார் ஜேம்ஸ் நீஷம். அவர் அந்த ஓவரில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

முதல் பந்தில் ஃபுல் டாஸாக வீசப்பட்ட பந்தில் சாம்சன் வெளியேற, ஐந்தாவது பந்தில் இன்னொரு ஃபுல் டாஸில் இஷான் வெளியேறினார். கடைசி பந்தில் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் தான் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி வெளியேறினார்.

அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால், 17-வது மற்றும் 18-வது ஓவரில் இந்தியாவின் ரன் விகிதம் குறைந்தது. திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா இருவரும் பெரிய ஷாட் அடிக்க முயற்சி செய்தும் அவர்களால் முடியவில்லை. 19-வது ஓவரில் ஹர்திக் அவுட் ஆக, அந்த ஓவர் முடிவில் இந்தியாவின் ஸ்கோர் 231/5 என்றானது. அதனால், 250 ரன்கள் வருவது கேள்விக்குறியானது.

ஆனால், கடைசி ஓவரில் அதிரடி காட்டிய ஷிவம் துபே, ஜேம்ஸ் நீஷம் வீசிய அந்த ஓவரில் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 24 ரன்கள் விளாசினார். அதனால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்தது.

டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஒர் அணியால் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுதான்.

இந்தியா - நியூசிலாந்து - டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம்,Getty Images

பந்துவீச்சில் அசத்திய அக்‌ஷர் & பும்ரா

இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் தன்னுடைய ஃபீல்டிங்கால் ஆட்டத்தில் பெரும் தாக்கம் ஏற்படுத்திய அக்‌ஷர் பட்டேல், இந்தப் போட்டியில் தன்னுடைய பந்துவீச்சில் அதே மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தினார்.

மூன்றாவது ஓவரில் பந்துவீசிய அக்‌ஷர் பட்டேல், அரையிறுதியில் அதிவேக சதமடித்திருந்த ஃபின் ஆலனின் விக்கெட்டைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் ஆலன் 9 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

இதன்மூலம் நியூசிலாந்தின் பெரிய பலமாகக் கருதப்பட்ட அவர்களின் தொடக்க ஜோடி 31 ரன்களுக்கே உடைக்கப்பட்டது. இது இந்தியா ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்துவதற்கான அஸ்திவாரமாக அமைந்தது.

அடுத்ததாக ஐந்தாவது ஓவரில் அதிரடி வீரர் கிளென் ஃபிலிப்ஸ் விக்கெட்டையும் வீழ்த்தினார் அக்‌ஷர். வழக்கமான அக்‌ஷர் பாணியில் உள்ளே வந்து ஸ்டம்பைத் தகர்ந்தது அந்தப் பந்து. பின்னர் 13-வது ஓவரில் டேரில் மிட்செல் விக்கெட்டையும் வீழ்த்தினார் அவர்.

இன்னொருபக்கம், நியூசிலாந்தின் பெரும்பாலான வீரர்களை பெவிலியனுக்கு அனுப்பினார் ஜஸ்ப்ரித் பும்ரா.

நியூசிலாந்து இன்னிங்ஸின் மூன்றாவது ஓவரை வீச வந்த அவர், முதல் பந்திலேயே ரச்சின் ரவீந்திரா விக்கெட்டை வீழ்த்தினார்.

அரையிறுதியில் தன் ஸ்பெல்லின் முதல் பந்தில் 'ஸ்லோயர் பால்' வீசி ஹேரி ப்ரூக் விக்கெட்டை வீழ்த்தியதைப் போலவே, இந்தப் போட்டியிலும் தன் ஸ்பெல்லின் முதல் பந்தை ஸ்லோயர் பாலாக வீசி ரச்சினை அவர் வெளியேற்றினார்.

பும்ராவும் அக்‌ஷரும் பவர்பிளேவில் நியூசிலாந்தின் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அங்கேயே நியூசிலாந்தை பின்தங்க வைத்தார்கள்.

தன்னுடைய கடைசி ஸ்பெல்லை வீச வந்த பும்ரா 'ஸ்லோயர் யார்க்கர்களாக' வீசி மூன்று நியூசிலாந்து வீரர்களின் ஸ்டம்புகளைப் பதம் பார்த்தார். மிட்செல் சான்ட்னர், ஜேம்ஸ் நீஷம், மேட் ஹென்றி என அனைவருமே பும்ராவின் ஸ்லோயர் யார்க்கர்களில் போல்டாகி வெளியேறினார்கள்.

4-0-15-4 என்று தன் ஸ்பெல்லை முடித்தார் பும்ரா. அதற்காக இந்தப் போட்டியின் ஆட்ட நாயகன் விருது வென்றார் அவர்.

அதுமட்டுமல்லாமல் இந்த உலகக் கோப்பையின் டாப் விக்கெட் டேக்கர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார் அவர்.

ஒரே வெற்றியில் இந்தியா படைத்த 4 வரலாறு என்ன?

பட மூலாதாரம்,Getty Images

இந்தியா உலக சாம்பியன்

பவர்பிளேவிலேயே பின்தங்கிய நியூசிலாந்து அணியால் அதன்பின் கம்பேக் கொடுக்க முடியவில்லை.

டிம் செய்ஃபர்ட் மட்டும் சற்று போராடி அரைசதம் அடித்தார். அவர் அவுட் ஆன பிறகு அந்த நம்பிக்கையும் குறைந்துவிட்டது. அதன்பிறகு டேரில் மிட்செல் மற்றும் மிட்செல் சான்ட்னர் (43 ரன்கள்) மட்டுமே நியூசிலாந்து அணிக்காக இரட்டை இலக்கத்தை எட்டினர்.

கடைசி கட்டத்தில் பும்ரா வரிசையாக விக்கெட்டுகள் வீழ்த்த 19-வது ஓவரின் முடிவில் நியூசிலாந்து ஆல் அவுட் ஆனது. அந்த அணியால் 159 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதனால் 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணி உலக சாம்பியன் ஆனது.

இந்தியாவின் பிரச்னைகளாகக் கருதப்பட்ட விஷயங்களெல்லாம் கடைசி கட்டத்தில் இந்தியாவின் வெற்றிக்குக் கைகொடுத்தன. இறுதிப் போட்டி வரை சோபிக்காத அபிஷேக் ஷர்மா, இந்தியா வெற்றி பெறுவதற்கு ஒரு நல்ல தொடக்கத்தைக் கொடுத்தார்.

ஃபீல்டிங் மிகப் பெரிய பிரச்னையாக சொல்லப்பட்டுவந்த நிலையில் அரையிறுதியில் அக்‌ஷர் பட்டேல், இறுதிப் போட்டியில் இஷான் கிஷன் போன்றவர்களின் ஃபீல்டிங் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பல சவால்கள் இருந்த நிலையிலும், முக்கியமான தருணங்களில் இந்திய வீரர்கள் எழுச்சி பெற்று அணியை சாம்பியன் ஆக்கியிருக்கிறார்கள்.

டி20 உலகக் கோப்பை சாம்பியன் - ஒரே வெற்றியில் இந்தியா படைத்த 4 வரலாறு என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா அணிக்கு வாழ்த்துக்க‌ள்...............................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'44 நாட்களுக்கு பிறகு மீண்டும்' - நியூசிலாந்து கேப்டனின் ஒரு முடிவு வரலாற்று தவறானதா?

மிட்செல் சான்ட்னர் - நியூசிலாந்து - டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,மிட்செல் சான்ட்னர்

கட்டுரை தகவல்

  • பிரதீப் கிருஷ்ணா

  • பிபிசி தமிழ்

  • 56 நிமிடங்களுக்கு முன்னர்

  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

நியூசிலாந்து - இன்னொரு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வியடைந்திருக்கிறது. 2026 டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் 96 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் தோல்வியை சந்தித்திருக்கிறது அந்த அணி.

பெரிய போட்டிகள் என்று வரும்போது பொதுவாகவே நெருக்கடி அதிகமாக இருக்கும். அதனால், மற்ற போட்டிகளில் வருவது போல் அதிகமாக ரன்கள் வராது என்பார்கள். இந்த இறுதிப் போட்டியில் ஆமதாபாத்தில் இந்திய அணி களமிறங்கியபோது 180-190 ரன்களை இந்தியா டார்கெட் செய்ய வேண்டும் என்ற பேச்சுதான் எழுந்தது.

ஆனால், இந்திய அணியோ 20 ஓவர்களில் 255 ரன்கள் குவித்தது.

டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம்,Getty Images

ஒருமுறை கூட 4 ஓவர்களைக் கடக்காத இந்திய தொடக்க ஜோடி, இறுதி போட்டியில் நான்கு ஓவர்களின் முடிவிலேயே 50 ரன்களைக் கடந்து கம்பீரமாக விளையாடிக்கொண்டிருந்தது.

மேலும், பவர்பிளேவில் மட்டும் 92 ரன்கள் விளாசி சாதனை படைத்தது. சொல்லப்போனால், அந்த பவர்பிளே முடிவிலேயே கோப்பையில் ஒரு கை வைத்துவிட்டது இந்தியா.

இப்படி பவர்பிளேவுக்குள்ளாக நியூசிலாந்து பெரும் பின்னடைவை சந்தித்ததற்கு அந்த அணி எடுத்து முடிவுகள் முக்கியக் காரணமாகக் கூறப்படுகின்றன. குறிப்பாக கேப்டன் மிட்செல் சான்ட்னர் இரண்டாவது ஓவருக்குப் பின் எடுத்த முடிவுகள் இந்தியாவுக்கு சாதகமாக அமைந்ததாகவும் பலர் விமர்சித்திருக்கிறார்கள்.

சொல்லப்போனால், ஜனவரி மாதம் நடந்த ஒரு டி20 போட்டியில் கூட நியூசிலாந்தின் தோல்விக்குப் பிறகு சான்ட்னரின் இதே முடிவுகள் விமர்சிக்கப்பட்டன. நாமும் கூட இதைப் பற்றி விரிவாக அப்போது விவாதித்திருந்தோம்.

இப்போது, 44 நாள்கள் கழித்து அதே தவறுகளை சான்ட்னர் மறுபடியும் நிகழ்த்தியிருக்கிறாரா? நியூசிலாந்து கேப்டன் தன் முடிவுகளின் மூலம் இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டாரா?

மிட்செல் சான்ட்னர் - நியூசிலாந்து - டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம்,Getty Images

மெக்கான்கீ எங்கே?

இந்த இறுதிப் போட்டிக்கு முன்பாக ஆஃப் ஸ்பின்னுக்கு எதிரான இந்தியாவின் தடுமாற்றம் பெரிதாக விவாதிக்கப்பட்டது.

இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ தரவுபடி சூப்பர் 8 சுற்றில் ஆடிய 8 அணிகளில் ஆஃப் ஸ்பின்னுக்கு எதிராக குறைந்த சராசரி (15.87) வைத்திருந்த அணி இந்தியாதான். 20-கும் கீழ் சராசரி கொண்டிருந்த ஒரே அணி இந்தியா தான்.

இந்த உலகக் கோப்பையில் அபிஷேக் ஷர்மா, இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா போன்ற பேட்டர்களின் சராசரி ஆஃப் ஸ்பின்னுக்கு எதிராக 13 அல்லது அதற்கும் குறைவு தான்.

அதனால் நியூசிலாந்து அணியின் கோல் மெக்கான்கீ இந்தியாவுக்கு பெரும் சவாலாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவரோடு கிளென் ஃபிலிப்ஸும் ஆஃப் ஸ்பின் வீசக்கூடியவர் என்பதால் இந்தியா பெரும் சிக்கலைச் சந்திக்கும் என்று கருதப்பட்டது. ஆனால், நியூசிலாந்து வேறு திட்டங்கள் வைத்திருந்தது.

டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த சான்ட்னர், பிளேயிங் லெவனில் மெக்கான்கீ நீக்கப்பட்டு ஜேக்கப் டஃபி சேர்க்கப்பட்டதாகக் கூறினார்.

இந்தியாவின் பெரும் சவாலாக இருப்பார் என்று கருதப்பட்ட வீரர் அணியிலேயே இல்லாதது பலருக்கும் ஆச்சர்யமாக இருந்தது.

ஆடுகளத்தின் தன்மையைக் கருத்தில் கொண்டு, அவர்கள் கூடுதல் வேகப்பந்துவீச்சாளர் வேண்டும் என்று நினைத்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இருந்தாலும் பல வல்லுநர்கள் அந்த முடிவு தங்களுக்கு ஆச்சர்யம் அளித்ததாகக் குறிப்பிட்டனர்.

மிட்செல் சான்ட்னர் - நியூசிலாந்து - டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அரையிறுதியில் பவர்பிளேவில் வீசிய ஒரு ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி நியூசிலாந்துக்கு நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தார் கோல் மெக்கான்கீ

சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் யோ மஹேஷ், "மெக்கான்கீ இல்லை!! அபிஷேக் ஷர்மாவிற்கு சாதகமான சூழல் அமைகிறதா?அல்லது நியூசிலாந்து அணியினரிடம் ஏதேனும் ரகசியத் திட்டம் உள்ளதா?" என்று டாஸுக்குப் பிறகு எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

பத்திரிகையாளர் பரத் சுந்தரேசன், "இந்த தொடரில் இந்திய இன்னிங்ஸின் ஆரம்பத்தில் ஆஃப்-ஸ்பின் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை கவனிக்கும்போது, நியூசிலாந்து கோல் மெக்கான்கீயை சேர்க்காதது சற்று ஆச்சரியமாக இருக்கிறது. ஒருவேளை இன்று இரவு கிளென் ஃபிலிப்ஸுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்படலாம்" என்று தன் எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

இப்படி, மெக்கான்கீ சேர்க்கப்படாதது குறித்து பலரும் தங்கள் ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் வெளிப்படுத்தியிருந்தார்கள்.

மாறிய ஸ்பெல், மாறிய ஆட்டம்

வழக்கம்போல், 'நியூ பால் ஸ்பெஷலிஸ்ட்' மேட் ஹென்றியோடு ஆட்டத்தைத் தொடங்கிய சான்ட்னர், இரண்டாவது ஓவரை கிளென் ஃபிலிப்ஸுக்குக் கொடுத்தார்.

இந்த இரண்டு ஓவர்களிலுமே இந்திய ஓப்பனர்கள் நிதானமாகத்தான் ஆடினார்கள். ஹென்றியின் வேகப்பந்துவீச்சை சாம்சன் கவனமாக எதிர்கொள்ள, கிளென் ஃபிலிப்ஸின் ஆஃப் ஸ்பின்னை கூடுதல் நிதானத்தோடு ஆடினார் அபிஷேக் ஷர்மா. 2 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 12 ரன்கள் எடுத்திருந்தது.

நன்றாகத் தொடங்கிய அந்த இரு பௌலர்களின் ஸ்பெல் தொடரும் என்று நினைத்திருந்த நிலையில் தான் சான்ட்னர் ஒரு முடிவை எடுத்தார்.

மூன்றாவது ஓவரை ஜேக்கப் டஃபியிடமும், நான்காவது ஓவரை லாகி ஃபெர்குசனிடமும் கொடுத்தார் அவர். அந்த ஓவர்களில் முறையே 15, 24 ரன்கள் எடுக்கப்பட்டன.

இறுதிப் போட்டிக்கு முன்பாக இந்தியா ஆடிய 8 ஆட்டங்களில், இந்தியாவின் தொடக்க ஜோடி அதிகபட்சமாக ஆடியத 3.4 ஓவர்கள் தான். அதேபோல் அந்த எட்டில் 4 முறை ஒரு ஆஃப் ஸ்பின்னர் தான் இந்தியாவின் தொடக்க ஜோடியை வெளியேற்றியிருந்தார். ஒரு போட்டியில் இடது கை ஸ்பின்னராலும், 3 போட்டிகளில் வேகப்பந்துவீச்சாளராலும் இந்தியாவின் தொடக்க ஜோடி வெளியேற்றப்பட்டிருந்தது.

அரையிறுதியில் ஒரு வலது கை பேட்டர், ஒரு இடது கை பேட்டர் என்ற காம்பினேஷன் இருந்தும்கூட இங்கிலாந்து ஆஃப் ஸ்பின்னர் ஜேக்ஸை வைத்தே இந்த ஜோடியைப் பிரித்தது. குறிப்பாக அபிஷேக் ஷர்மா, இந்த உலகக் கோப்பையில் (இறுதிப் போட்டிக்கு முன்பு வரை) ஆஃப் ஸ்பின்னை எதிர்கொண்ட 5 இன்னிங்ஸ்களில் 3 முறை அதற்கே தன் விக்கெட்டை இழந்திருந்தார். அப்படியிருந்தும், ஃபிலிப்ஸை மீண்டும் பயன்படுத்தாதது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது.

மிட்செல் சான்ட்னர் - நியூசிலாந்து - டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,இறுதிப் போட்டியில் கிளென் ஃபிலிப்ஸுக்கு இரண்டாவது ஓவர் கொடுக்காதது அனைவரையும் ஆச்சர்யத்துக்குள்ளாக்கியது

ஃபிலில்ப்ஸுக்குக் கொடுக்காமல் டஃபிக்கும், ஃபெர்குசனுக்கும் சான்ட்னர் ஓவர் கொடுக்க, அந்த இரு பௌலர்களும் மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்துக்கும் மேல் பந்துவீச, அது யோ மஹேஷ் சொன்னதுபோல் அபிஷேக் ஷர்மாவுக்கு சாதகமாக அமைந்துவிட்டது.

வேகமான பந்துகளை விரும்பி ஆடும் அபிஷேக் ஷர்மா, இந்த உலகக் கோப்பையில் நல்ல ஃபார்மிலேயே இல்லாத அபிஷேக் ஷர்மா, தன் வழக்கமான ஆட்டத்தை ஆட அந்த இரண்டு ஓவர்கள் வித்திட்டன.

இதன் விளைவாக முதல் முறையாக இந்தத் தொடரில் இந்திய அணியின் தொடக்க ஜோடி 4 ஓவர்களைக் கடந்து விளையாடியது. முதல் முறையாக அரைசதமும் அடித்தது.

நியூசிலாந்தின் முடிவுகள் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் யோ மஹேஷ், "பவர்பிளேவில் முதலிரு ஓவர்களில் மேட் ஹென்றி, கிளென் ஃபிலிப்ஸ் இருவரும் நன்றாகவே தொடங்கியிருந்தார்கள். ஆனால், அதன்பிறகு அவர்களின் ஸ்பெல்லை தொடரவில்லை. அந்த பவர்பிளேவிலேயே வெளியே வெளியே போடத் தொடங்கிவிட்டார்கள். அபிஷேக் ஷர்மா நன்கு செட்டில் ஆகிவிட்டார். மெக்கான்கீ ஆடவில்லை என்றதுமே அவர் சந்தோஷமடைந்திருப்பார். நியூசிலாந்தைப் பொறுத்தவரை அவர்கள் சிறந்த லெவனும் ஆடவில்லை. அவர்கள் திட்டங்களும் சரியாக இருக்கவில்லை." என்று கூறினார்.

அதேபோல், எக்ஸ் தளத்தில் பதிவிட்ட இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, "மிட்செல் சான்ட்னர் மிக விரைவாக பல விஷயங்களை முயற்சித்தது போல் தோன்றியது. முதல் இரண்டு ஓவர்கள் மிகவும் சிக்கனமாக இருந்தபோதிலும், முதல் நான்கு ஓவர்களிலேயே 4 பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தினார்... ஒரு நல்ல வாய்ப்பை அவர் தவறவிட்டுவிட்டார். ஆனால் நாங்கள் (இந்தியா) புகார் கூறப்போவதில்லை" என்று பதிவிட்டார்.

அதுமட்டுமல்ல, தொடர்ந்து இந்தியாவின் இடது கை பேட்டர்கள் அடுத்தடுத்து வந்தபோதிலும், ஃபிலிப்ஸ் அதன்பிறகு பந்துவீசவே வரவில்லை. சான்ட்னர் அவருக்கு மறுபடியும் ஒரு ஓவர் கூடக் கொடுக்கவில்லை. இந்த உலகக் கோப்பையில், ஆஃப் ஸ்பின்னை எதிர்கொண்ட 6 போட்டிகளில் 5 முறை அதற்கே தன் விக்கெட்டை பறிகொடுத்திருந்த இஷான் கிஷன் இந்த இறுதிப் போட்டியில் ஆஃப் ஸ்பின்னரின் ஒரு பந்தைக் கூட எதிர்கொள்ளவில்லை.

மிட்செல் சான்ட்னர் - நியூசிலாந்து - டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம்,Getty Images

பவர்பிளேவுக்குள்ளேயே முடிந்துவிட்ட ஆட்டம்

அந்த மூன்றாவது மட்டும் நான்காவது ஓவரில் மொத்தம் 39 ரன்கள் சென்றுவிட்டதாலும், இரண்டு பேட்டர்களுமே நன்றாக ஆடியதாலும், அடுத்த வந்த நியூசிலாந்து பௌலர்களுமே பெரும் நெருக்கடியை சந்திக்கவேண்டியதாக இருந்தது.

ஆட்டத்தின் ஐந்தாவது ஓவரைப் பந்துவீச வந்த மேட் ஹென்றி, 'ஸ்லோயர் பால்களாக' தொடர்ந்து வீசினார். அதுவும் வைட் லைனிலேயெ அவர் தொடர்ச்சியாக முயற்சிசெய்தார். அதன் விளைவாக அந்த ஓவரில் 4 வைட்களும் வீசினார். மேலும், அவர் அதையே தொடர்ச்சியாக செய்துகொண்டிருக்க, அபிஷேக் ஷர்மா அதை நன்கு கணித்து வெளியே வந்து சிக்ஸர் அடித்தார். நீண்ட நேரம் சென்ற அந்த ஓவரிலும் 21 ரன்கள் எடுக்கப்பட்டன.

அப்போது வர்ணனையில் இருந்த நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் சைமன் டூல், "இங்கு 'ஸ்லோயர் பால்கள்' அதிகம் விக்கெட் எடுக்கின்றன, அதனால் நாம் அதையே வீசுவோம் என்று முடிவு செய்துவிட்டு வந்து அதை மட்டுமே செய்கின்றனர்" என்று குறிப்பிட்டார்.

மேலும், அவருக்கு மூன்றாவது ஓவர் கொடுக்காமல், ஐந்தாவது ஓவரில் பந்துவீச வைத்த முடிவையும் அவர் விமர்சித்தார். "பந்து ஓரளவு புதிதாக இருக்கும்போது ஹென்றி அதைப் பயன்படுத்தி நன்றாக வீசுவார். அப்படியிருக்கும்போது மூன்றாவது ஓவரை அவருக்குக் கொடுத்திருக்கவேண்டும். அது பெரிய தவறு" என்று வர்ணனையின்போது தெரிவித்தார் சைமன் டூல்.

இந்த உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக ஒவ்வொரு போட்டியிலும் மேட் ஹென்றியை முதல் மற்றும் மூன்றாவது ஓவரில் தான் பயன்படுத்தியிருந்தார் சான்ட்னர். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான லீக் சுற்றுப் போட்டியில் மட்டும், ஹென்றி முதல் ஓவரில் 13 ரன்கள் கொடுத்துவிட, அவருக்கு மூன்றாவது ஓவர் கொடுக்காமல் நான்காவது ஓவர் கொடுத்து 'பௌலிங் எண்ட்' மாற்றினார்.

அதைத் தவிர்த்து ஹென்றி மூன்றாவது ஓவர் போடாத போட்டி இந்த ஃபைனல் தான். மேட் ஹென்றி மூன்றாவது ஓவரை வீசாத இரண்டு போட்டிகளுமே நியூசிலாந்து தோற்ற போட்டிகள்.

மிட்செல் சான்ட்னர் - நியூசிலாந்து - டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,மேட் ஹென்றிக்கு மூன்றாவது ஓவரைக் கொடுக்காமல் ஸ்பெல்லை மாற்றியது இந்தியாவை ஆட்டத்துக்குள் எடுத்து வந்தது

இப்படி மூன்றாவது மற்றும் நான்காவது ஓவர்கள் ஏற்படுத்திய நெருக்கடியில் ஹென்றி ரன் கொடுக்க, அதே நெருக்கடியோடு வந்து ஆறாவது ஓவரிலும் 20 ரன்கள் கொடுத்தார் ஜேக்கப் டஃபி.

இப்படியாக பவர்பிளேவில் விக்கெட்டே இழக்காமல் 92 ரன்கள் எடுத்தது. அது இந்தியாவை ஆதிக்க நிலையில் கொண்டு சென்று நிறுத்தியது.

போட்டிக்குப் பின்பு பிபிசி தமிழிடம் பேசிய வர்ணனையாளர் பகவதி பிரசாத், "நியூசிலாந்து அணி எப்போதுமே தெளிவான திட்டமிடலோடு களமிறங்கும் அணி. ஆனால், இந்த இறுதிப் போட்டியில் அப்படி இருக்கவில்லை. மிட்செல் சான்ட்னரின் கேப்டன்சியும் இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்திருக்கலாம். உதாரணமாக, ஏன் மெக்கான்கீ ஆடவில்லை என்ற கேள்விக்குறி எழுந்தது. ஏனெனில், இந்திய பேட்டர்களுக்கு எதிராக, குறிப்பாக அபிஷேக் ஷர்மாவுக்கு எதிராக ஆஃப் ஸ்பின்னர்கள் நன்றாக செயல்படும்போது அவரை ஆடவைத்திருக்கலாமோ என்று கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. மேலும், அவர் நல்ல பேட்டரும் கூட.''

''அதுமட்டுமல்லாமல், கிளென் ஃபிலிப்ஸ் நன்றாக செயல்பட்டிருக்கும்போது எதற்காக ஸ்பெல்லை மாற்றி வேகத்தைக் கொடுக்கவேண்டும்? இதுபோன்ற ஒரு சில இடங்களில் சான்ட்னரின் கேப்டன்சி இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்திருக்கலாம். ஏனெனில், கோப்பையே ஆறு ஓவர்களில் கைவிட்டுப் போனதுபோல் இருந்தது. ஒரு பௌலராக அவர் இந்தப் போட்டியில் மிகச் சிறப்பாக செயல்பட்டார். ஆனால், ஒரு கேப்டனாக அவரது சில முடிவுகள் தவறாக அமைந்துவிட்டன" என்று கூறினார்.

44 நாள்களுக்கு முன் நடந்த அதே தவறு

பவர்பிளேவில் நல்லதொரு தொடக்கத்துக்குப் பிறகு அந்த ஸ்பெல்லைத் தொடராமல் ஆட்டத்தை சான்ட்னர் கைநழுவவிடுவது இது முதல் முறையல்ல. 44 நாள்களுக்கு முன் - ஜனவரி 23.... இதே இந்தியா - நியூசிலாந்து டி20 போட்டியில் இதேபோன்றதொரு நிகழ்வு அரங்கேறியது.

209 ரன்களை சேஸ் செய்த இந்திய அணி முதல் 7 பந்துகளிலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. இரண்டு ஓவர்கள் முடிந்தபோது ஸ்கோர் போர்டு 8/2 எனக் காட்டியது. 12 பந்துகளில் 9 டாட் பால்கள். சூர்யகுமார் யாதவ் 4 பந்துகளில் 1 ரன் எடுத்திருந்தார். இஷான் கிஷன் 2 பந்துகளில் 1 ரன் எடுத்திருந்தார். முதல் ஓவரை வீசிய மேட் ஹென்றி, இரண்டாவது ஓவரை வீசிய ஜேக்கப் டஃபி இருவருமே தலா 1 விக்கெட் வீழ்த்தியிருந்தனர்.

மிட்செல் சான்ட்னர் - நியூசிலாந்து - டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,கடந்த ஆண்டு நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியிலும் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணி இந்தியாவிடம் தோல்வியடைந்திருந்தது

விக்கெட் எடுத்து நன்றாகத் தொடங்கியிருந்த பௌலர்கள் தங்கள் ஸ்பெல்லைத் தொடர்ந்திருந்தால் இந்தியாவுக்குக் கூடுதல் நெருக்கடி ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு அதிகமாக இருந்திருக்கும். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில், ஆட்டத்தின் மூன்றாவது ஓவரை வீச ஜேக் ஃபோக்ஸ் கையில் பந்தைக் கொடுத்தார் சான்ட்னர்.

ஃபோக்ஸ் நோ பாலோடு அந்த ஓவரைத் தொடங்க, இஷான் கிஷன் அதிரடி காட்ட, அந்த ஓவரில் 24 ரன்கள் எடுக்கப்பட்டது. அடுத்த 3 ஓவர்களில் முறையே 10, 12, 21 என ரன்கள் வர, 8/2 என்ற நிலையில் இருந்த இந்திய அணி, பவர்பிளே முடிவில் 75/2 என்ற நல்ல நிலைக்குச் சென்றது.

இப்போது அபிஷேக் ஷர்மா செய்ததைப் போல், அந்தப் போட்டியின் பவர்பிளேவுக்குள்ளாகவே இஷான் கிஷன் அரைசதம் அடித்திருந்தார். அதன்பிறகு இந்தியாவின் அதிரடியைக் கட்டுப்படுத்த முடியாமல் போக, 15.2 ஓவர்களிலேயே சேஸ் செய்து 200-க்கும் மேற்பட்ட வெற்றி இலக்கை அதிவேகமாக சேஸ் செய்த அணி என்ற சாதனையையும் இந்தியா படைத்தது. அந்தப் போட்டியின்போதும் சான்ட்னர் எடுத்த முடிவை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வெகுவாக விமர்சித்திருந்தார்கள்.

அன்று ராய்ப்பூரில் நடந்த தவறு, 44 நாள்களுக்குப் பின் ஆமதாபாத்தில் மீண்டும் நடக்க, நியூசிலாந்துக்கு ஒரு கோப்பை வெல்வதற்கான வாய்ப்பையும் பறித்துவிட்டது.

சான்ட்னர் கூறியது என்ன?

மிட்செல் சான்ட்னர் - நியூசிலாந்து - டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம்,Getty Images

இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த பிறகு பேசிய நியூசிலாந்து கேப்டன் சான்ட்னர், "இந்த ஆடுகளத்தில் தொடக்கத்தில் சீம், ஸ்விங் எதுவும் அவ்வளவாகக் கிடைக்கவில்லை. அதனால், பேட்டர்கள் அடிக்கக்கூடிய இடங்களுக்கு வெளியே பந்துவீச முயற்சி செய்தோம். அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் ஆகியோர் எவ்வளவு சிறப்பாக ஆடக்கூடியவர்கள் என்று நமக்குத் தெரியும்.

எப்படி பார்த்தாலும், அவர்கள் ஆடிய விதத்துக்கு பெர்ஃபெக்டான திட்டமே எதுவும் கிடையாது. அவர்கள் ஆடிய விதத்துக்கு, அவர்களை நிறுத்துவது எளிதானதல்ல. சில வைட்கள், சில லெக் சைட் பந்துகள் என கிட்டத்தட்ட எல்லாமே முயற்சி செய்துவிட்டோம். அதேசமயம் அவர்கள் பவர்பிளே ஆடிய விதத்தை நிச்சயம் பாராட்டியாகவேண்டும். அவர்கள் அப்படி ஆடியபிறகு அங்கிருந்து தொடர்ந்து அதிரடி காட்டி ஒரு பெரிய ஸ்கோரை அடிக்க அது உதவி செய்துவிட்டது" என்று கூறினார்.

https://www.bbc.com/tamil/articles/c5ykz6e9nnvo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் டி20 உலக்கோப்பை வெற்றி 2026 - சில எண்ணங்கள்

By ஆர். அபிலாஷ் March 10, 2026

AVvXsEirog6iurndMPfi3bieOzA_dEYBOodtqLJI

ஒருதலைப்பட்சமாக இப்போட்டி மாறியதற்கு ஆடுதளம் முக்கியமான காரணம். கடந்த 12 ஆண்டுகளாகவே அகமதாபாத் மைதானத்தின் ஆடுதளத்தில் டி20 இன்னிங்ஸின் ம்ட்டையாட்ட சராசரி 165-175தான். கறுப்பு மண்ணால் ஆன ஆடுதளம் சற்று மெத்தனமாக, பவுன்ஸ் குறைவாக இருக்கும். நியுசிலாந்து அதற்காகவே தயாராகி வந்தார்கள். அதனாலே அது ஒரு இறுதிப் போட்டிக்கு ஏற்றதாக இருக்காது என நினைத்தேன். இம்மாதிரி கோரிக்கைகள் ஆடுதளத் தயாரிப்பாளரிடமும் சென்றிருக்கும். ஆகையால் அவர் செம்மண்ணும், கறுப்பு மண்ணும் கலந்த ஒரு ஆடுதளத்தைத் தயாரித்தார். அதில் பந்துக்கு ஓரளவுக்கு வேகமும் பவுன்ஸும் இருந்தது. பந்து பழையதானதும் ரொம்பவே நின்று வந்தது. அதாவது ஆரம்பத்தில் செம்மண்ணும், கடைசிப் பகுதியில் கறுப்பு மண்ணும் தத்தம் வேலைகளைச் செய்தன.

இந்தியாவின் ஆரம்பத்திலேயே குண்டு மழை பொழியும் ஆட்டபாணி இதற்குத் தோதாக இருந்தது. கறுப்பு மண் தன் வேலையைச் செய்ய ஆரம்பித்தபோது நம் ஸ்கோர் 15வது ஓவரில் 203ஆக இருந்தது. இதுவே 120ஆக இருந்திருந்தால் நம்மால் 160-170தான் எடுக்க முடிந்திருக்கும். நியுசிலாந்து பெங்களூர் டிராபிக்கில் நகர்ந்து நகர்ந்து பைக் ஓட்டி சிக்னலை வெறித்துப் பார்த்து, பச்சை விளக்கு விழுந்ததும் பறக்க முயன்று ஒரளவு வேகத்தில் ஓட்டுவதைப் போல ஆடி வென்றிருக்கும். ஆனால் அப்படி நடக்கவில்லை. பெங்களூர் டிராப்பிக்கில் ஓடிப் பழகியவரை ரேஸ் டிராக்கில் இறக்கி விட்டதைப் போலாகிவிட்டது இப்போட்டி. நியுசிலாந்து குழம்பிப் போனது.

அவர்களுடைய உலகக்க்கோப்பைத் தொடர் சாதனைகளுக்கு (அதாவது பாவமான அணியை வைத்துக் கொண்டு அரை இறுதி, இறுதி நிலைகளை எட்டுவது) அவர்களுடைய உளவியல் தயார்நிலையால்தான் என்று சில கட்டுரைகளைப் படித்தேன். அவர்களுடைய உள்ளூர் கிரிக்கெட் படிநிலையிலேயே அமைதியாக, நிதானமாக ஆடுவது, பரஸ்பரம் நட்புடன் பழகுவது வலியுறுத்தப்பட்டு, போட்டியால் விளையும் அழுத்தம் தவிர்க்கப்படுகிறது எனப் பேசியிருந்தார்கள். ஆனால் இந்த முறை மட்டும் நியுசிலாந்து அணி சற்று தன் இயல்பில் இருந்து பிறழ்ந்து கடுமையான நெருக்கடியை தன் மீது சுமத்திக் கொண்டது. இந்திய ரசிகர்களின் இதயங்களை நொறுக்க வேண்டி வரும் என அவர்களுடைய அணித்தலைவர் சாண்ட்னர் சொன்னபோதே இது ஆரம்பித்தது. அவர் அதற்குப் பதிலாக "நாங்கள் பலவீனமான அணி, இந்தியாவே பலமான அணி. நாங்கள் நன்றாகப் போட்டியிடுவோம். வெற்றி பெற்றேயாக வேண்டிய அழுத்தம் எங்கள் மீது இல்லை" எனச் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் தமக்குப் பழக்கமில்லாத மனநிலையை வரித்துக் கொண்டார்கள்.

ஆட்டத்திலும் கூட ஆப் ஸ்பின்னர் ஒருவரைக் (மெக்கோஞ்சி) குறைத்து வேகவீச்சாளரை எடுத்தது, ஹென்ரிக்கும், பிலிப்ஸுக்கும் தொடர்ச்சியாக ஓவர் கொடுக்காதது எனத் தவறுகள் செய்தார்கள். மெக்கோஞ்சியும் பிலிப்ஸும் மூன்று ஓவர்கள் சேர்ந்தும், ஹென்ரி இரண்டு ஓவர்களும் வீசியிருந்தால் இந்திய அணியின் வேகம் குறைந்திருக்கும். நேராக நல்ல நீளத்தில் வீசி பவுண்டரிகளை, க்ஸர்களைக் கட்டுப்பாட்டி இருந்தாலே அவர்கள் ஆட்டத்தில் இருந்திருக்க முடியும். பந்து பழசானதும் ஆட்டத்துக்குள் வந்திருக்க முடியும்.

நியுசிலாந்தின் தடுமாற்றத்தை இந்திய நன்கு பயன்படுத்திக் கொண்டது.

இப்போட்டித் தொடரில் இந்தியா செய்த உருப்படியான விசயம் ஒரே டெம்பிளேட்டை கடந்த ஒராண்டாகப் பின்பற்றினார்கள், அதை அவர்கள் உலகக்கோப்பைத் தொடருக்காக முழுமையாக மாற்றவில்லை என்பது. சற்று சிரமமான ஆடுதளங்களில் கூட பவர் பிளேயில் முரட்டு அடி அடித்தார்கள். மத்திய ஓவர்களிலேயே நிதானமாக ரன்களைச் சேகரித்தார்கள். சாதகமான ஆடுதளங்களில் எல்லா ஓவரிலுமே அடித்தார்கள். அதாவது இந்தியாவுக்கு என்று ஒரு அடையாளம், சந்தைப்படுத்தத்தக்க USP, இருந்தது. இந்தியாவில் சில சிக்ஸர்கள் அடித்தாலே இது எதிரணிகளுக்கு நினைவு வந்து அச்சத்தை விளைவித்தது. இந்தியாவின் மட்டையாட்டம் நல்ல ஆட்டநிலையில் உள்ளபோது இந்த அடையாளமே பாதி போட்டியை வென்றளித்தது.

இது இம்முறை ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, மே.இ தீவுகள் போன்ற அணிகளுக்கு இருக்கவில்லை. நியுசிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகளின் பாணி என்னவென்று அவ்வணிகளுக்கே சரியாகத் தெரியவில்லை. நியுசிலாந்தும் இங்கிலாந்தும் ஒவ்வொரு போட்டியிலும் தேவையான அளவுக்கு தம் ஆட்டத்தைத் தகவமைத்து வென்றனர். தென்னாப்பிரிக்கா தன் மட்டையாட்டத் திறனைக் கொண்டு ஆதிக்கம் செய்தது, பந்து வீச்சிலும் சரியான வியூகத்துடன் வந்தது. இதை ஒரு தென்னாப்பிரிக்க பாணியென்றாலும் இதை எல்லா போட்டிகளிலும் ஒரே போலப் பயன்படுத்தினார்களா? இல்லை. நியுசிலாந்துக்கு எதிராக அரை இறுதியில் பந்து மட்டைக்கு வரவில்லை என்றதும் அவர்களுடைய மத்திய வரிசை நிதானமாகவும் அதிரடியாகவும் அடித்து அவர்களைக் காப்பாற்றி இருக்க வேண்டும். பிரெவிஸ், மில்ல்லர், யான்ஸன் ஆகியோர் இதை ஒரு டெம்பிளேட்டாகக் கொண்டு வந்து எதிரணியை அச்சுறுத்தியிருக்க வேண்டும். இதைத் தம் ஊடகங்களின் வழி அவர்கள் வலியுறுத்தி இருக்க வேண்டும். அதையே நம்பி ஒவ்வொரு போட்டியிலும் அவர்கள் முன்னெடுத்திருக்க வேண்டும். இந்த உலகக்கோப்பைத் தொடரின் சேதி இதுதான் என நினைக்கிறேன். கம்பீர்-சூர்யகுமாரின் முக்கியமான பங்களிப்பு இந்த ஆட்ட பாணியை முன்னிறுத்தி அதையே கடைசி வரை எல்லாரையும் (அதாவது எதிரணியையும் நம்மையும் சேர்த்து) நம்ப வைத்தது. இந்த டெம்பிளேட் சொதப்பியதும் அவர்கள் இஷான் கிஷனைக் கொண்டு வந்தார்கள். சாம்ஸனைக் கடைசி வரை ஆதரித்தார்கள். திலக்கை கடைசி ஐந்து ஓவர்கள் அடிக்க அனுப்பினார்கள். ஆனால் டெம்பிளேட் மட்டும் மாறவில்லை.

இந்த உலகக்கோப்பையில் சொந்த ஊர் ரசிகர்கள் முன்னர் நடந்தது இந்தியாவுக்கு ஒரு 'பின்னடைவுதான்'. இதுவரை எந்த அணியும் அந்த அழுத்தத்தைக் கடந்து உலகக்கோப்பையை வென்றதில்லை. இந்தியா இதைச் சாதித்தது மெச்சத்தக்கது. சூர்யகுமார் யாதவ் இந்த அழுத்தத்தை ஒரு மகிழ்ச்சியான வாய்ப்பாகப் பார்க்கும்படி தன் அணியினரிடம் கேட்டதாக ஊடகங்களிடம் சொல்லி இருக்கிறார். நான் கவனித்தபோது அணியிடம் ஒருவித நெர்வஸான ஆற்றல் இருந்தது. தம் மீதான அழுத்தத்தை மிகை உணர்வு வெளிப்பாடாக, ஆவேசமாக அவர்கள் வெளிப்படுத்தினார்கள். இதற்கு ஆடுதளமும் எதிரணியின் பந்து வீச்சும் உதவிட அவர்கள் அந்த விசையைப் பற்றிக் கொண்டு ஆதிக்கம் செய்தார்கள். ஜிம்மி நிஷமின் ஓவரில் மூன்று விக்கெட்டுகள் விழுந்தபோதுதான் அவர்கள் கொஞ்சமாவது நின்று யோசித்தார்கள். இது ஒரு விளையாட்டு, இது உலகக்கோப்பை இறுதிப்போட்டி என நினைவுகொண்டார்கள். ஆனால் நீஷமின் கடைசி ஓவரில் துபே இருபது ரன்களுக்கு மேல் அடித்ததில் அந்த பின்னடைவும் காணாமல் போனது. நியுசிலாந்து ஒருவேளை கடைசி ஓவரை வென்றிருந்தால் இந்தியாவின் ஸ்கோர் 230க்குள் இருந்திருந்தால் அது அவர்கள் இன்னும் நேர்மறையாக ஆட ஊக்கம் கொடுத்திருக்கும். இலக்கை நெருங்கிக் கூட ஒருவேளை வந்திருப்பார்கள். இந்தியாவைப் பொறுத்தவரையில் எந்தக் கட்டத்திலும் நேர்மறையாக மட்டுமே சிந்திக்க வேண்டும் எனும் தீர்மானம் உதவியது. இதற்கும் சூர்யகுமார் யாதவையும் கம்பீரையும் பாராட்ட வேண்டும்.

ஆனால் இந்தியா இந்த வெற்றியுடன் திருப்தி அடையாமல் மட்டையாட்ட ஆல்ரவுண்டர்களை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும். எல்லா ஆட்டங்களிலும் 3-4 ஓவர் சுழல் பந்து வீசுவதற்கு ஒரு மட்டையாளர் வேண்டும். துபெ ஒன்று தன் மிதவேகப் பந்து வீச்சை மேம்படுத்த வேண்டும் அல்லது அவரை முழுநேர மட்டையாளராகக் கருதி மற்றொருவரை ஆல்ரவுண்டராக அணிக்குள் கொண்டு வர வேண்டும். ஆறாவது, ஏழாவது பந்து வீச்சாளர்கள் அவசியம். அவர்களால் ரன்களைக் கட்டுப்படுத்தவோ விக்கெட் எடுக்கவோ முடிய வேண்டும். அதே போல மட்டையாடும் திறன்பெற்ற ஒரு வேகவீச்சாளரைக் கொண்டு வர வேண்டும். அதாவது ஹர்ஷித் ரானாவுக்கு மாற்றாக. இம்முறை ரானா காயமாகி வெளியேறியதும் சிராஜ் வந்தாலும் சிராஜை நம்மால் சுலபத்தில் ஆட வைக்க முடியவில்லை. அவரை ஒரு மட்டையாளரின் இடத்தில் ஆட வைத்தால் மட்டையாட்டம் பலவீனமாகும். ஆனால் ரானா இருந்திருந்தால் சில போட்டிகளில் சுலபமாக ஆறாவது வீச்சாளரை ஆட வைக்க முடியும். அதேபோல வாஷிங்டன்னின் மட்டையாட்டத்தையும் பந்து வீச்சையும் மேம்படுத்த வேண்டும். அவருக்கு அந்த அறிவுறுத்தல் தெளிவாக வழங்கப்பட வேண்டும். பவர் பிளேயில் மட்டுமல்ல மத்திய ஓவர்களிலும் கட்டுப்படுத்த அவர் கற்க வேண்டும். வந்ததும் சிக்ஸர் அடிக்கப் பழக வேண்டும். இது அக்ஸர் காயம்பட்டால் மாற்று வீரரைப் பெற உதவும் (குல்தீப்பை அங்கு கொண்டு வர முடியாது என்பதால்). இந்திய அணி தன் களத்தடுப்பையும் மேம்படுத்த வேண்டும்.

திலக்கும் துபேயும் ஆடுவதைப் பார்க்கையில் ரிங்குவுக்கு அணியில் இடமில்லை என்பது தெளிவு. ரிங்கு ஒரு ஆல்ரவுண்டராக அணிக்குள் வர முயல வேண்டும். அவருடைய போட்டி துபேயுடன் தான். துபேயின் போட்டி திலக்குடன்.

ஹர்த்திக் பாண்டியா காயமுற்றால் அவரிடத்தில் யார் ஆடுவார்கள்? இது மற்றொரு தலைவலி. நிதீஷ்குமாரிடம் போகாமல் உள்ளூர் அணிகளில் தேட வேண்டும். தேடி வாய்ப்பளித்தால் புதிய ஆல்ரவுண்டர்கள் தாமே வருவார்கள். ஹர்த்திக்குக்கு போதிய ஓய்வு கொடுத்ததாகவும் இருக்கும்.

இந்த வெற்றியுடன், இந்தக் கோப்பையுடன் இந்திய டி 20 அணி ஒரு சூப்பர் பவராக மாறுகிறது. அயலுறவில் இந்திய அவமானப்பட்டிருக்கும் நிலையில் இந்த வெற்றி ஒரு நல்ல கவனத் திருப்பமாக இருக்கும். கம்பீர் மீதான பல விமர்சனங்களை இது மறக்கடிக்கும். 35 வயதாகிவிட்ட, கடந்த ஓராண்டாகவே ஆட்டநிலையில் தலைகுப்புற விழுந்து வரும் சூர்யகுமார் யாதவின் ஆட்டவாழ்வின் ஆயுளை இரண்டாண்டுகள் கூட்டும். சஞ்சு சாம்ஸனின் மீள்வருகையை, நாயகத் திண்மையை காலம் நினைவில் வைத்திருக்கும். அடித்தாடுவதை, அதிக மட்டையாளர்களை முக்கியத்துவத்துப்படுத்தும் இந்தியாவின் டி20 ஆட்டக் கொள்கையை இக்கோப்பை நியாயப்படுத்தும். இந்த ஆட்டப் பாணியின் சிறப்பு என்னவென்றால் நீங்கள் ஒரு துவக்க மட்டையாளரையோ 3வது, 5வது எண்ணில் ஆடுபவரையோ ஒரு சுழலரையோ மாற்றினாலோ கூட அணி இப்படியே அதிரடியாக ஆடி வெற்றி பெறும். அதேநேரம் ஹர்த்திக்கும் பும்ராவும் இல்லாவிடில் ஐந்து வீச்சாளர்களை வைத்துச் சமாளிப்பது சிரமமாகும்.

வரும் ஆண்டுகளில் முதல் 10 ஓவர்களில் 150 என்பது சராசரி ஸ்கோராகும். 300 இலக்கையும் விரட்டிச் சென்று வெல்வார்கள். இன்னும் பல நாடுகள் சர்வதேச டி20 ஆடுவார்கள். அப்போது இரண்டு மூன்று நாடுகள் ஆதிக்கம் செய்வது சாத்தியப்படாது என நினைக்கிறேன். கிரிக்கெட் யுடியூபைப் போல ஆகும். இன்றைய வெற்றியாளர் நாளை இருக்க மாட்டார். அதனால் இப்போதுள்ள இக்காலம் நிலைக்காது என்றாலும் கொண்டாடத்தக்கது.

இந்திய அணிக்கு வாழ்த்துகள்!

https://www.writerabilash.in/2026/03/20-2026_10.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.