Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா, டொனால்ட் டிரம்ப், டிரம்புக்கு எதிராக போராட்டம்

பட மூலாதாரம், FREDERIC J. BROWN/AFP via Getty Images

படக்குறிப்பு, லாஸ் ஏஞ்சலிஸில் நடைபெற்ற போராட்டத்தில் டிரம்ப் உருவிலான பலூன்களை போராட்டக்காரர்கள் எடுத்து வந்தனர்.

19 அக்டோபர் 2025, 07:15 GMT

புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கொள்கைகளுக்கு எதிராக நியூயார்க், வாஷிங்டன் டிசி, சிகாகோ, மயாமி மற்றும் லாஸ் ஏஞ்சலிஸ் உட்பட பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

சனிக்கிழமை காலை நியூயார்க்கின் புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் நடைபெற்ற பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

தெருக்களிலும் மெட்ரோ ரயில் நிலையங்களின் வாசல்களிலும், "மன்னராட்சி அல்ல, ஜனநாயகம்," மற்றும் "அரசியலமைப்பு விருப்பத்தேர்வு அல்ல," என்கிற பதாகைகளை ஏந்திய போராட்டக்காரர்கள் நிரம்பி வழிந்தனர்.

போராட்டங்களுக்கு முன்பு அதில் ஈடுபடுவர்கள் தீவிர இடதுசாரி ஆன்டிஃபா இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என டிரம்பின் கூட்டாளிகள் குற்றம்சாட்டி வந்தனர். இந்தப் பேரணிகள் 'அமெரிக்க வெறுப்பு பேரணிகள்' எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

ஆனால் சனிக்கிழமை பேரணிகள் அமைதியாக நடைபெற்றதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

"நோ கிங்ஸ் (மன்னர்கள் இல்லை)" என்கிற பெயரில் நடைபெறும் இந்த நிகழ்வுகளில் அடிப்படை கொள்கை என்பது அஹிம்சை தான் என அதன் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போராட்டங்களில் கலந்து கொள்பவர்கள் சாத்தியமான மோதல்களை தவிர்க்குமாறும் கூறப்பட்டுள்ளது.

நியூயார்க் பேரணியில் கலந்து கொண்டவர்கள் மேளதாளங்களுக்கு மத்தியில் "இது தான் ஜனநாயகம் போல் இருக்கிறது" என முழக்கங்களை எழுப்பி வந்தனர்.

வானத்தில் ஹெலிகாப்டர்களும் டிரோன்களும் பறந்த நிலையில் காவல்துறையினர் சாலையோரமாக நின்றிருந்தனர்.

நகரின் ஐந்து பகுதிகளில் கிட்டத்தட்ட 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் அமைதியான முறையில் போராட ஒருங்கிணைந்திருந்ததாகவும் போராட்டம் தொடர்பாக எந்த கைதும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் நியூயார்க் காவல்துறை தெரிவித்துள்ளது.

டைம்ஸ் சதுக்கத்தில் பணியிலிருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் அங்கு 20,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக தெரிவிக்கிறார்.

அமெரிக்கா, டொனால்ட் டிரம்ப், டிரம்புக்கு எதிராக போராட்டம்

பட மூலாதாரம், Stephani Spindel/VIEWpress

படக்குறிப்பு, டைம்ஸ் சதுக்கத்தில் நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் "ஃபாசிசம் மற்றும் எதேச்சதிகாரத்தை நோக்கிய நகர்வைக்" கண்டு கோபமும் கவலையும் அடைந்ததால் நியூயார்க் போராட்டத்தில் கலந்து கொண்டதாக பகுதி நேர எழுத்தாளரும் ஆசிரியருமான பெத் ஜாஸ்லோஃப் தெரிவித்தார்.

"நியூயார்க் நகரைப் பற்றி நான் மிகவும் அக்கறைப்படுகிறேன். இங்கு பலருடன் இருப்பது எனக்கு நம்பிக்கை அளிக்கிறது." என்றும் தெரிவித்தார்.

அமெரிக்கா, டொனால்ட் டிரம்ப், டிரம்புக்கு எதிராக போராட்டம்

பட மூலாதாரம், Grace Eliza Goodwin/BBC

படக்குறிப்பு, நியூயார்கில் நடைபெற்ற போராட்டத்தில் எழுத்தாளர் பெத் ஜாஸ்லோஃப் கலந்து கொண்டிருந்தார்.

ஜனவரி மாதம் மீண்டும் அதிபராக பதவியேற்றதிலிருந்து அதிபருக்கான அதிகாரத்தை விரிவுபடுத்தியுள்ளார் டிரம்ப், மத்திய அரசாங்கத்தின் அங்கங்களை நிர்வாக உத்தரவுகளைப் பயன்படுத்தி கலைப்பது மற்றும் மாகாண ஆளுநர்களின் எதிர்ப்பையும் மீறி அமெரிக்க நகரங்களில் படைகளை குவிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.

தனது அரசியல் எதிரிகள் மீது நடவடிக்கை எடுக்க விசாரணை அமைப்புகளின் அதிகாரிகளுக்கும் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

தன்னை சர்வாதிகாரி அல்லது ஃபாசிஸ்ட் என அழைப்பதை நகைப்பிற்குரியது எனக் கூறும் டிரம்ப் நெருக்கடியில் இருக்கும் நாட்டை மீண்டும் கட்டமைக்க தனது நடவடிக்கைகள் அவசியமானது எனத் தெரிவிக்கிறார்.

ஆனால் டிரம்ப் அரசின் சில நடவடிக்கைகள் அரசியலமைப்பிற்கு விரோதமானவை என்றும் அமெரிக்க ஜனநாயகத்திற்கே ஆபத்தானவை என்றும் விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.

இத்தாலியில் பிறந்து வளர்ந்தவரும் நியூஜெர்சிவாசியுமான 68 வயதான மின்னணு பொறியாளர் மாசிமோ மாஸ்கோலி போராட்டத்தில் கலந்து கொண்டார். கடந்த நூற்றாண்டில் அவரின் சொந்த நாடு (இத்தாலி) சென்ற பாதையில் அமெரிக்காவும் செல்வதால் கவலையடைந்து போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.

"முசோலினியின் ராணுவத்தை உதறித்தள்ளி புரட்சி இயக்கத்தில் சேர்ந்த இத்தாலிய ஹீரோவின் உறவினர் நான். அவர் ஃபாசிஸ்டுகளால் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். 80 ஆண்டுகள் கழித்து அமெரிக்காவில் மீண்டும் ஃபாசிசத்தைக் காண்பேன் என நான் நினைத்திருக்கவில்லை." என மாஸ்கோலி தெரிவித்தார்.

அமெரிக்கா, டொனால்ட் டிரம்ப், டிரம்புக்கு எதிராக போராட்டம்

பட மூலாதாரம், Grace Eliza Goodwin/BBC

படக்குறிப்பு, நியூயார்க் போராட்டத்தில் கலந்து கொண்ட இத்தாலிய அமெரிக்கரான மாசிமோ மாஸ்கோலி அமெரிக்காவில் ஃபாசிசம் அதிகரித்து வருவதாக கவலை தெரிவித்தார்.

டிரம்பின் நடவடிக்கைகளில் குறிப்பாக புலம்பெயர்ந்தோரை கைது செய்வது மற்றும் லட்சக்கணக்கான அமெரிக்கர்களுக்கான சுகாதார காப்பீட்டை ரத்து செய்வது கவலையளிப்பதாக மாஸ்கோலி தெரிவிக்கிறார்.

"நாம் உச்சநீதிமன்றத்தை நம்பியிருக்க முடியாது, நாம் அரசாங்கத்தை நம்பியிருக்க முடியாது. நாம் நாடாளுமன்றத்தை நம்பியிருக்க முடியாது. அரசு, நிர்வாகம், நீதித்துறை என அனைத்தும் தற்போது அமெரிக்க மக்களுக்கு எதிராக உள்ளன. எனவே தான் நாங்கள் போராடுகிறோம்," என அவர் பிபிசியிடம் தெரிவித்தார். "

செனட் சிறுபான்மை பிரிவு தலைவரும் நியூயார்க் குடியரசு கட்சியைச் சேர்ந்தவருமான சுக் ஷூமரும் போராட்டத்தில் கலந்து கொண்டார்.

"அமெரிக்காவில் சர்வாதிகாரிகள் கிடையாது, டிரம்ப் நமது ஜனநாயகத்தை அழிக்க நாம் அனுமதிக்கமாட்டோம்," என ஷுமர் தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருந்தார். போராட்டத்தில் "சுகாதாரத் துறை நெருக்கடியை சரி செய்யுங்கள்" என்கிற பதாகையுடன் அவர் கலந்து கொண்ட புகைப்படங்களையும் பதிவிட்டிருந்தார்.

வெர்மாண்டைச் சேர்ந்த செனட் சபை உறுப்பினர் பெர்னி சாண்டர்ஸ் வாஷிங்டனில் தலைமை உரையாற்றினார்.

"நாங்கள் அமெரிக்காவை வெறுப்பதால் இங்கு வரவில்லை, அமெரிக்காவை நேசிப்பதால் தான் இங்கு வந்துள்ளோம்," என தனது உரையில் குறிப்பிட்டார்.

வாஷிங்டனில் நடைபெற்ற போராட்டத்தில் டிரம்பின் 'மேக் அமெரிக்கா கிரேட் அகெய்ன்' வாசகம் பொறிக்கப்பட்டிருந்த தொப்பி அணிந்த ஒருவரை பிபிசி கண்டது. ஒரு வேலையாக நகரத்துக்கு வந்த அவர், போராட்டத்தைக் காணலாம் என முடிவு செய்திருக்கிறார். தனது பெயரைக் கூற மறுத்த அவர் தனக்கு ஒன்றும் புரியவில்லையென்றும் மக்கள் மிகவும் அமைதியாக இருந்ததாகவும் குறிப்பிட்டார். சிறிது நேரத்தில் கூட்டத்தில் ஒரு பெண் அவருக்கு எதிராக அவதூறான கோஷத்தை எழுப்பினார்.

இந்தப் போராட்டங்கள் அமெரிக்காவில் மட்டும் நடைபெறவில்லை.

ஜெர்மனி, ஸ்பெயின், இத்தாலி போன்ற பல ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்க மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக பேரணிகள் நடைபெற்றன. லண்டனிலும் அமெரிக்க தூதரகத்துக்கு வெளியே நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் கூடினர்.

கனடாவின் டொராண்டோ நகரிலும் அமெரிக்க தூதரகம் அருகில் போராட்டங்கள் நடைபெற்றன. அப்போது "கனடாவிலிருந்து கையை எடுங்கள்" என்கிற பதாகையை போராட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.

அமெரிக்கா, டொனால்ட் டிரம்ப், டிரம்புக்கு எதிராக போராட்டம்

பட மூலாதாரம், Wiktor Szymanowicz/Future Publishing via Getty Images

படக்குறிப்பு, லண்டனில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியே நடைபெற்ற போராட்டம்

ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சியில் வெளியாகவுள்ள நேர்காணலில் டிரம்ப் போராட்டங்கள் மற்றும் பேரணிகள் பற்றி பேச இருக்கிறார்.

"மன்னரா! இவை அனைத்தும் நாடகமே. என்னை மன்னர் எனக் குறிப்பிடுகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியும் அல்லவா. நான் மன்னர் கிடையாது." என நேர்காணலின் முன்னோட்டத்தில் அவர் தெரிவித்திருந்தார்.

கன்சாஸ் செனட்டர் ரோஜர் மார்ஷல் பேரணிக்கு முன்பாக சிஎன்என் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், "படையினரை வெளியேற்ற வேண்டும். அது அமைதியாக நடக்கும் என நம்புகிறேன். ஆனால் எனக்கு சந்தேகம் உள்ளது." எனத் தெரிவித்தார்.

அமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களில் பொறுப்பில் உள்ள குடியரசு கட்சியின் ஆளுநர்கள் போராட்டங்களுக்கு முன்பாக தேசிய படைகளை தயார் நிலையில் வைத்திருந்தனர்.

வியாழக்கிழமை டெக்சாஸ் மாகாண ஆளுநர் கிரேக் அபாட், ஆஸ்டின் பகுதியில் ஆன்டிஃபா போன்ற போராட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளதால் தேசிய படைகள் தேவைப்படும் எனக் கூறி அவர்களை அழைத்துள்ளார்

இந்த நகர்வை, மாகாணத்தின் மூத்த ஜனநாயக கட்சி தலைவர் ஜீன் வூ உள்ளிட்ட பலரும் நிராகரித்துள்ளனர். "அமைதியான போராட்டங்களை ஒடுக்க ஆயுதமேந்திர ராணுவ வீரர்களை அனுப்புவது என்பதை மன்னர்களும் சர்வாதிகாரிகளுமே செய்வார்கள் - கிரேக் அபாட் தானும் சர்வாதிகாரிகளில் ஒருவர் என்பதை நிருபித்துள்ளார்." எனத் தெரிவித்தார்.

வெர்ஜீனியா மாகாணத்தின் குடியரசு கட்சியைச் சேர்ந்த ஆளுநரான கிளென் யங்கின்னும் தேசிய படைகளை நிறுத்த உத்தரவிட்டிருந்தார். ஆனால் போராட்டத்தின்போது படைகள் இல்லை என செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா, டொனால்ட் டிரம்ப், டிரம்புக்கு எதிராக போராட்டம்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, வாஷிங்டனில் நடைபெற்ற போராட்டம்

வாஷிங்டனில் டிரம்பின் கோரிக்கைக்கு இணங்க கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தேசிய படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஆனால் போராட்டம் நடந்த இடத்தில் அவர்கள் இல்லை, சில உள்ளூர் காவல்துறையினர் மட்டும் இருந்தனர்.

வாஷிங்டனில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட ஒருவர் "நான் தான் ஆன்டிஃபா" எனக் கூறும் பதாகையை வைத்திருந்தார்.

76 வயதான சுக் எப்ஸ் அது மிகவும் அர்த்தம் பொதிந்த பதம் என்றார். அதன் அர்த்தம், "அமைதி, சுகாதார காப்பீடு, வாழ்வதற்கான ஊதியம், வாழ்வாதாரம், புலம்பெயர்ந்தோர் மற்றும் பிற இனக் குழுக்களைச் சேர்ந்த மக்களை ஆதரிக்கிறேன்," என்பது தான் எனத் தெரிவித்தார்.

"டிரம்ப் அனைவரையும் தூண்டிவிடுகிறார், அல்லது தூண்டிவிட முயற்சிக்கிறார், ஆனால் அது நடக்கவில்லை," என அவர் தெரிவித்தார்.

டொனால்ட் டிரம்ப் விவகாரத்தில் அமெரிக்கர்களின் ஆதரவு பிளவுபட்டுள்ளது.

ராய்ட்டர்ஸ்/இப்சாஸ் சமீபத்தில் நடத்திய ஆய்வில் டிரம்பின் நடவடிக்கைகளை 40% பேர் மட்டுமே ஆதரவளிப்பதாகவும் 58% பேர் எதிர்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிரம்பிற்கு முதலாவது ஆட்சிக் காலத்தில் இருந்ததைவிட ஆதரவு அதிகமாக இருந்தாலும் இரண்டாவது முறையாக பதவியேற்றபோது இருந்ததைவிட (47% ஆதரவு) தற்போது குறைவாகவே உள்ளது.

ஆட்சி பொறுப்பிற்கு வந்த பிறகு அதிபர்களுக்கான ஆதரவு குறைவது இயல்பான ஒன்று தான். ராய்ட்டர்ஸ்/இப்சாஸின்படி 2021 ஜனவரியில் ஜோ பைடன் அதிபரானபோது 55% ஆதரவு இருந்தது. ஆனால் அதே ஆண்டு அக்டோபர் மாதம், இந்த ஆதரவு 46% ஆக சரிந்தது.

கூடுதல் செய்தி சேகரிப்பு அனா ஃபாகய்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c77zjyy2gkxo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டிரம்புக்கு எதிரான 'நோ கிங்ஸ்' போராட்டம் - அமெரிக்காவில் அடுத்து என்ன நடக்கும்?

டிரம்ப், அமெரிக்கா, நோ கிங்ஸ் போராட்டம், நோ கிங்ஸ், டிரம்பு எதிர்ப்பு போராட்டம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சனிக்கிழமை நியூயார்க் நகரில் நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

கட்டுரை தகவல்

  • ஆண்டனி ஜுர்ச்சர்

  • வட அமெரிக்க செய்தியாளர்

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

கடந்த வார இறுதி நாட்களில் அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் டிரம்பின் கொள்கைகள் மற்றும் அதிபரின் அதிகாரத்தை அதிகரிக்கும் அவரின் முயற்சிகளுக்கு எதிராக நடைபெற்ற "நோ கிங்ஸ்" போராட்டத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

அமெரிக்க இடதுசாரிகளுக்கு தேசிய அரசியலில் எந்த அதிகாரமும் இல்லாத நிலையில் இந்தப் போராட்டங்கள் ஜனநாயக கட்சியினர், தாராளவாதிகள் மற்றும் டிரம்ப் எதிர்ப்பு குடியரசு கட்சிக்காரர்கள் என அனைவரும் ஒருங்கிணைந்தனர்.

போராட்டத்தின் அடுத்த கட்டம் என்ன?

சனிக்கிழமை அன்று நடைபெற்ற போராட்டங்களில் சிகாகோ, நியூயார்க், வாஷிங்டன், லாஸ் ஏஞ்சலிஸ் போன்ற பெருநகரங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான சிறு நகரங்களில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை எதிர்பார்த்ததை விட அதிகமாகவே இருந்தது.

ஜூன் மாதம் நடைபெற்ற "நோ கிங்ஸ்" பேரணியில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கையை மிஞ்சியது.

குடியரசு கட்சியைச் சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தப் போராட்டங்கள் அமெரிக்காவிற்கு எதிரானது எனக் குறிப்பிட்டனர். அக்கட்சியைச் சேர்ந்த சில ஆளுநர்களும் தங்களின் மாகாணங்களில் வன்முறை ஏற்படலாம் எனக் கருதி காவல்துறை மற்றும் தேசிய பாதுகாப்பு படையை தயார் நிலையில் வைத்திருந்தனர்.

ஆனால் இந்த பெருந்திரளான பேரணி வன்முறையாக அல்லாமல் கொண்டாட்டமாக அமைந்தன. நியூயார்க் நகரில் போராட்டம் தொடர்பாக எந்த கைதும் மேற்கொள்ளப்படவில்லை, வாஷிங்டனில் குடும்பங்கள் மற்றும் குழந்தைகளும் கலந்து கொண்டனர்.

டிரம்ப், அமெரிக்கா, நோ கிங்ஸ் போராட்டம், நோ கிங்ஸ், டிரம்பு எதிர்ப்பு போராட்டம்

பட மூலாதாரம், LightRocket via Getty Images

படக்குறிப்பு, தலைநகர் வாஷிங்டன் உட்பட பல நகரங்களில் இந்தப் போராட்டங்கள் நடைபெற்றன.

"இந்த நாட்டின் வரலாற்றில் நடைபெற்ற எந்தப் போராட்டத்தையும் விட அதிக அளவிலான மக்கள் இதில் கலந்து கொண்டனர். நாம் சுதந்திரமானவர்கள், நம்மை யாரும் ஆள முடியாது, நமது அரசு விற்பனைக்கு கிடையாது என்பதை அமெரிக்க மக்கள் உரக்கச் சொல்கிறார்கள்." என்று வாஷிங்டன் பேரணியில் கலந்து கொண்ட கனக்டிகட் செனடர் கிறிஸ் மர்ஃபி தனது உரையில் தெரிவித்தார்.

நோ கிங்ஸ் போராட்டங்கள் தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளித்த வெள்ளை மாளிகையின் துணை பத்திரிகை செயலாளர் அபிகெய்ல் ஜேக்சன், "யார் கவலைப்படுகிறார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

டிரம்ப் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட காணொளி ஒன்றை ட்ரூத் சோசியல் பக்கத்தில் பகிர்ந்தார். டிரம்ப் கிரீடம் அணிந்து ஜெட் விமானத்தை ஒட்டியபடி போராட்டக்காரர்கள் மீது மனித கழிவுகளைக் கொட்டுவதைப் போல அந்த காணொளி அமைந்துள்ளது.

இந்தப் போராட்டங்களின் முக்கியத்துவத்தை குடியரசுக் கட்சியினர் குறைத்துப் பேசி வருகின்றனர். இதில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கையும் கருத்துக் கணிப்பில் சரிந்து வரும் டிரம்புக்கான ஆதரவும் ஜனநாயக கட்சி கடந்த தேர்தல் தோல்வியிலிருந்து மீண்டு வருவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.

ஜனநாயக கட்சியின் நிலை என்ன?

கருத்துக் கணிப்புகளில் மூன்றில் ஒருவர் மட்டுமே ஜனநாயக கட்சியை சாதகமாகப் பார்க்கின்றனர், கடந்த சில தசாப்தங்களில் இது மிகவும் குறைவே. மேலும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அவர்களின் கட்டுப்பாட்டில் இல்லாத நிலையில் எவ்வாறு டிரம்புக்கு வலுவான எதிர்ப்பை வழங்க முடியும் ஜனநாயக கட்சிக்காரர்களும் குழம்பிப் போய் உள்ளனர்.

தாராளவாதிகள் பல்வேறு காரணங்களுக்காக போராட்டத்தில் ஈடுபட்டனர். டிரம்பின் தீவிரமான குடியேற்ற கொள்கைகள், வரிக் கொள்கைகள், அரசாங்க நிதி ரத்து, வெளியுறவு கொள்கை, அமெரிக்க நகரங்களில் தேசிய பாதுகாப்பு படைகளை அனுப்புவது மற்றும் அதிபருக்கான அதிகாரங்களை விதிமுறைகளை மீறி பயன்படுத்துவது போன்றவைகளுக்காக எதிராக இந்தப் போராட்டங்கள் நடைபெற்றன.

டிரம்ப், அமெரிக்கா, நோ கிங்ஸ் போராட்டம், நோ கிங்ஸ், டிரம்பு எதிர்ப்பு போராட்டம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அதிபருக்கான அதிகாரங்களை விதிமுறைகளை மீறி பயன்படுத்துவதற்கு எதிராக இந்தப் போராட்டங்கள் நடைபெற்றன.

இதில் ஜனநாயக கட்சி தலைவர்களும் விமர்சிக்கப்பட்டனர்.

"நாங்கள் கட்டுப்பாட்டை கடைபிடித்து வருகிறோம், அதனால் வெளிப்படையாக பேசவில்லை. நாங்கள் அனைவரையும் தாக்கிப் பேச வேண்டும் என நினைப்பது உங்களுக்கு தெரியும், ஆனால் அது எல்லா நேரங்களிலும் வேலை செய்யாது." என போராட்டத்தில் கலந்து கொண்டவர் தெரிவித்தார்.

தற்போது நான்காவது வாரத்தை நெருங்கியுள்ள அரசு நிர்வாக முடக்கத்தை ஜனநாயக கட்சிக்காரர்கள் தீவிரமாக எதிர்கொண்டு வருகின்றனர். தற்போதைய மத்திய அரசின் செலவீனங்களுக்கு குறுகிய கால நீட்டிப்பு வழங்க அவர்கள் மறுத்து வருகின்றனர். .

ஏனெனில், இந்த ஆண்டின் இறுதியில் காலாவதியாக இருக்கும் வருமானம் குறைந்த அமெரிக்கர்களுக்கான மருத்துவ காப்பீடு சலுகைகளுக்கு தீர்வுகாண இருதரப்பு ஒப்பந்தம் இல்லாமல் காலநீட்டிப்பு வழங்க மறுத்து வருகின்றனர்.

ஜனநாயக கட்சியினர் சிறுபான்மையில் இருந்தாலும் சில செனட் நாடாளுமன்ற விதிகளின்படி அவர்களுக்கு இன்னும் சில அதிகாரங்கள் இருக்கின்றன. மக்கள் தற்போதைய நிலைக்கு பெரும்பாலும் டிரம்ப் மற்றும் குடியரசு கட்சியையே குற்றம்சாட்டி வருகின்றனர்.

யாருக்கு அழுத்தம்

ஆனால் இந்த உத்தியில் சில சவால்களும் உள்ளன. நிர்வாக முடக்கத்தால் ஜனநாயக கட்சியினருக்கு ஏற்படும் பிரச்னைகள் இனிவரும் வாரங்களில் அதிகரிக்கவே செய்யும்.

பல மத்திய அரசு பணியாளர்கள் சம்பளம் கிடைக்காமல் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர். வருமானம் குறைந்தவர்களுக்கான உணவு திட்டத்திற்கான நிதியுதவியும் நின்றுவிடும் நிலையில் உள்ளது. அமெரிக்க நீதித்துறையும் தங்களின் வேலைகளை குறைத்துக் கொண்டுள்ளது.

இந்த முடக்கத்தைப் பயன்படுத்தி டிரம்ப் நிர்வாகம் ஜனநாயக கட்சி ஆளும் மாகாணங்கள் மற்றும் நகரங்களைக் குறிவைத்து மத்திய அரசு பணியாளர்களை பணிநீக்கம் செய்வது மற்றும் செலவுகளைக் குறைப்பது போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஆனால் யதார்த்தம் என்னவென்றால் செனட்டில் உள்ள ஜனநாயக கட்சி தலைவர்கள் இந்த நெருக்கடியிலிருந்து வெளியே வருவதற்கான வழியைக் கண்டடைய வேண்டும். ஆனால் போராட்டக்காரர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய அம்சங்களை நிறைவேற்றுவது அவர்களுக்கும் கடினமாக இருக்கும்.

"நாங்கள் டிரம்புடன் ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டால் அடுத்த வாரமே அவர் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணியிலிருந்து நீக்குவதையும் பொருளாதார வளர்ச்சி திட்டங்களை ரத்து செய்வதையும் பொது சுகாதார நிதிகளை ரத்து செய்வார். அதைப் பார்க்க நாங்கள் விரும்பவில்லை." என வெர்ஜினியாவைச் சேர்ந்த ஜனநாயக கட்சியின் செனடரான டிம் கெய்ன் என்பிசி தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்தார்.

ஒரு ஒப்பந்தம் மேற்கொண்டால் அதை மாற்றவே கூடாது என்கிற ரீதியிலான ஒப்பந்தத்தைத் தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம் எனத் தெரிவித்தார்.

டிரம்ப், அமெரிக்கா, நோ கிங்ஸ் போராட்டம், நோ கிங்ஸ், டிரம்பு எதிர்ப்பு போராட்டம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்காவில் மத்திய அரசு நிர்வாக முடக்கம் நவம்பர் மாதத்தின் தொடக்கம் வரை நீடிக்க வாய்ப்பு இருக்கிறது.

அரசு நிர்வாக முடக்கம் நவம்பர் மாதத்தின் தொடக்கம் வரை நீடிக்க வாய்ப்பு இருக்கிறது. அப்போது சில மாகாணங்களில் தேர்தல் நடைபெற உள்ளது, கடந்த ஆண்டு அதிபர் தேர்தலுக்குப் பிறகு முதல் முறையாக அமெரிக்காவில் தேர்தல் நடைபெற உள்ளது.

மாகாணங்கள் சட்டசபை மற்றும் ஆளுநருக்கான தேர்தல்கள், "நோ கிங்ஸ்" போராட்டத்தில் வெளிப்பட்ட டிரம்ப் எதிர்ப்பு மனநிலை ஜனநாயக கட்சியினருக்கு தேர்தல் வெற்றியாக மாறுகிறதா என்பதற்கான முன்னோட்டத்தை வழங்கும்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வெர்ஜினியா மாகாண ஆளுநர் தேர்தலில் குடியரசு கட்சியைச் சேர்ந்தவர் வென்றார். இந்த மாகாணம் அதற்கு முந்தைய அதிபர் தேர்தலில் இடதுசாரி சார்பு கொண்டதாக இருந்தது.

இங்கு குடியரசு கட்சியின் வெற்றி அப்போதைய அதிபர் ஜோ பைடன் மீதான அதிருப்தியின் ஆரம்பக்கட்ட வெளிப்பாடாக இருந்தது. இம்முறை ஜனநாயக கட்சியின் வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அபிகெய்ல் ஸ்பான்பெர்கர், கருத்துக்கணிப்புகளில் குடியரசு கட்சி வேட்பாளரை விட முன்னணியில் இருக்கிறார்.

கடந்த அதிபர் தேர்தலில் நியூ ஜெர்சி மாகாணத்தில் 6% வித்தியாசத்திலே டிரம்ப் தோற்றார். ஆனால் இந்த வித்தியாசம் 2020-இல் பைடன் (16%) மற்றும் 2016-இல் ஹிலாரி க்ளிண்டன் (14%) போட்டியிட்ட போது இருந்த நிலையிலிருந்து கணிசமாக குறைந்துள்ளது. இங்கு நவம்பர் மாதம் நடைபெற உள்ள ஆளுநர் தேர்தலில் கடுமையான போட்டி நிலவுகிறது.

நியூ ஜெர்சியில் நடைபெற்ற நோ கிங்ஸ் பேரணியில் பேசிய ஜனநாயக கட்சியின் தேசிய குழு தலைவர் கென் மார்டின், போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வர இருக்கின்ற தேர்தலில் வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

"இந்தப் போராட்டங்களில் கலந்து கொள்வது ஒரு விஷயம், ஆனால் போட்டியிட்டு சில அதிகாரத்தை திரும்பப் பெறுவது இன்னொரு விஷயம்." எனத் தெரிவித்தார்.

டிரம்ப், அமெரிக்கா, நோ கிங்ஸ் போராட்டம், நோ கிங்ஸ், டிரம்பு எதிர்ப்பு போராட்டம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சிக்குள்ளுமே விரிசல்கள் இருப்பதற்கான சமிக்ஞைகள் தெரிகின்றன.

நவம்பரில் நடைபெற உள்ள தேர்தல்கள், இடதுசாரி வாக்காளர்கள் ஜனநாயக கட்சியின் வேட்பாளர்களை ஆதரிக்க டிரம்புக்கு எதிரான மனநிலை மட்டும் போதுமா என்பதற்கான பரிசோதனையாக இருக்கும்.

இவை அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள இடைக்கால தேர்தல்களுக்கான சிறிய முன்னோட்டம் மட்டுமே, அந்த தேர்தல் அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் எந்தக் கட்சி கட்டுப்படுத்தப்போகிறது என்பதை தீர்மானிக்கும். இடைக்கால தேர்தல்கள் டிரம்பின் ஆட்சிக் காலத்தின் செயல்பாடு மீதான மதிப்பீட்டையும் ஜனநாயக கட்சியினருக்கு வழங்கும்.

சனிக்கிழமை போராட்டங்களின் செய்தி என்பது டிரம்பிற்கு எதிராக ஒருங்கிணைவதாகவே இருந்தது. இந்தச் சூழலில் ஜனநாயக கட்சியினர் ஆட்சிக்கு வந்து என்ன செய்வார்கள் என்பது பற்றி அக்கறை குறைவாகவே இருக்கிறது.

எனினும் ஜனநாயக கட்சிக்குள்ளுமே விரிசல்கள் இருப்பதற்கான சமிக்ஞைகள் தெரிகின்றன.

முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸின் புத்தகத்தை விளம்பரப்படுத்தும் பயணங்களிலும், பைடன் நிர்வாகத்தின் கீழ் எடுக்கப்பட்ட மத்திய கிழக்கு கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பாலத்தீன ஆதரவு போராட்டக்காரர்களால் இடையூறு ஏற்படுகிறது.

திருநர் உரிமை உள்ளிட்ட சமூக கொள்கைகளை தவிர்த்துவிட்டு பொருளாதார பிரச்னைகளின் மீது கவனம் செலுத்துவதற்கான திட்டங்களுக்கும் இடதுசாரி தரப்பிலிருந்தே கண்டனங்கள் எழுகின்றன.

மெய்ன், மாசசூசெட்ஸ், கலிஃபோர்னியா மற்றும் மிச்சிகன் மாகாணங்களில் அடுத்த ஆண்டு தேர்தலுக்கான ஜனநாயக கட்சியின் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதிலே கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. பழம்பெரும் அரசியல்வாதிகளுக்கு எதிராக இளம் வேட்பாளர்களும் மத்திய கொள்கை கொண்டவர்களுக்கு எதிராக தாராளவாதிகளும் நிறுத்தப்படலாம்,

இந்தப் போட்டிகள் ஆற்ற முடியாத பழைய அரசியல் காயங்களை உடனடியாக ஏற்படுத்தலாம். அத்தகைய சூழலில் கட்சி எதிர்கொண்டிருக்கும் சவால்களை சமாளிக்க பேரணிகள் மட்டும் போதாது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/ce8g5z1rxr7o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.