Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பழைய பூங்காவைப் பாதுகாப்பது - நிலாந்தன்

Old_Kachcheri_Old_Park_Jaffna-cccc-1024x

“நான் எழுதிய கட்டுரையை நானே மீண்டும் மேற்கோள் காட்ட வேண்டியிருக்கிறது அல்லது நினைவுபடுத்த வேண்டி இருக்கிறது” என்று மு.திருநாவுக்கரசு அடிக்கடி கூறுவார். தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் உள்ள மிக மூத்த, தொடர்ச்சியாக எழுதும் ஒரே அரசறிவியலாளர் அவர்தான்.

அவர் மட்டுமல்ல அவரைப் போன்று முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட பலரும் தமது சமூகத்திற்கான தமது பங்களிப்பை திரும்பத்திரும்ப தாங்களே நினைவூட்ட வேண்டியிருக்கிறது. அரசியல் கைதிகளுக்காக அரசியல் கைதிகள்தான் பெரும்பாலும் போராட வேண்டியிருக்கிறது. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக அவர்களுடைய உறவினர்கள்தான் பெரும்பாலும் போராட வேண்டியிருக்கிறது.

மு.திருநாவுக்கரசு மட்டுமல்ல கடந்த பல தசாப்தங்களாக எழுதிவரும் பலரும் தாங்கள் எழுதியதை நினைவூட்ட வேண்டிய துர்பாக்கியமான ஒரு நிலையில்தான் இருக்கிறார்கள் என்பதனை நிரூபிக்கும் விதத்தில் கடந்த வாரம் ஒரு சம்பவம் நடந்தது. யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் ஓர் உள்ளக விளையாட்டு அரங்கைக் கட்டுவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது. இது தொடர்பாக  சமூக வலைத்தளங்களில் எழுதிய அனேகர் பழைய பூங்காவின் பல்பரிமாண முக்கியத்துவம் தொடர்பாக இதுவரை வெளிவந்த கட்டுரைகள், உரைகள் தொடர்பாக அறிந்திருக்கவில்லை என்பதைத்தான் அவர்களுடைய கருத்துக்கள் காட்டின.

பழைய பூங்கா ஏற்கனவே சிதைக்கப்பட்டு விட்டது. அதைச் சிதைத்தவர் மஹிந்தவின் காலத்தில் ஆளுநராக இருந்த முன்னாள் படைத் தளபதியாகிய சந்திரசிறீ. இதுதொடர்பாக விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் யாழ்.இந்துக் கல்லூரி சபாபதி மண்டபத்தில் நடந்த ஒரு நிகழ்வில் நான் பேசியிருந்தேன். யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் பா.அகிலனின் “காலத்தின் விளிம்பு” என்ற நூல் வெளியீட்டு விழா அது. மரபுரிமைச் சொத்துக்களை பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலான கட்டுரைகளின் தொகுப்பு அது. அபிவிருத்தியின் பெயரால் மரபுரிமைச் சொத்துக்கள் அழிக்கப்படுவது தொடர்பாக அகிலன் ஏற்கனவே பல கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.

காலத்தின் விளிம்பு நூல் வெளியீட்டில் பழைய பூங்காவுக்குள்ள மரபுரிமை முக்கியத்துவம்,சுற்றுச்சூழல் முக்கியத்துவம்,அரசியல்,பண்பாடு முக்கியத்துவம் போன்றவற்றைத் தொகுத்து நான் பேசினேன்.அது ஒரு பண்பாட்டு இன அழிப்பு என்றும் சுட்டிக்காட்டினேன்.

அதன் பின்,சில மாதங்களுக்கு முன்,யாழ்.பல்கலைக்கழகத்தில்,நூலக கேட்போர் கூடத்தில் வெளியிட்டு வைக்கப்பட்ட கட்டடப்படக் கலைஞர் மயூரநாதனின் “யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு” என்ற நூல் வெளியீட்டு விழாவின் போதும் நான் அதைச் சுட்டிக்காட்டிப் பேசினேன். அதன் பின்,புதிய வட்டுவாகல் பாலம் தொடர்பாக,ஈழநாட்டில் எழுதிய கட்டுரையிலும் பழைய பூங்காவைப்பற்றிய குறிப்புக்கள் உண்டு.

நமது அரசியல்வாதிகள் எத்தனைபேர் இவற்றை வாசிக்கிறார்கள்? சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற விடயங்களை எழுதிக் கொண்டிருக்கும் எத்தனைபேர் அவற்றை வாசிக்கிறார்கள்? தமிழ்த் தேசியப் பரப்பில் அரசியல் விமர்சகர்கள் குறைவு. அதே சமயம் அதை வாசிப்பவர்களும் குறைவு. அரசியல் விமர்சனங்களை அந்த அரசியலை முன்னெடுக்கும் தரப்புகள் அல்லது அந்த அரசியலில் ஆர்வமுடைய தரப்புகள் வாசிக்கவில்லை என்றால் அரசியலில் அறிவும் செயலும் எப்படி இணைய முடியும்? அரசியல் செய்பவர்கள், அரசியலை விமர்சிப்பவர்களை ஒருவித ஒவ்வாமையோடு பார்க்கிறார்கள். அதனாலும் அவர்கள் எழுதுவதை வாசிக்காமல் விடுகிறார்கள்.

சரி.அதை வாசிக்க வேண்டாம். ஆங்கிலத்தில்,சிங்களத்தில் வருபவற்றையாவது வாசிக்கலாம்தானே? தமிழ்த் தேசிய அரசியலில் முன்னணியில் தெரியும்  எத்தனை பேர் தொடர்ச்சியாக வாசிப்பவர்கள்? அவர்களில் பலருடைய உரைகளைப் பார்த்தால் அவர்கள் எதையும் வாசிப்பதாகத் தெரியவில்லையே? குறைந்தபட்சம் அரசியல் ஆழம்மிக்க காணொளிகளைக்கூட பார்ப்பதாகத் தெரியவில்லையே ?

இவ்வாறு தமிழ்த் தேசியப் பரப்பில் அறிவும் செயலும் பிரிந்திருக்கும் ஒரு துப்பாக்கியமான,தோல்விகரமான ஓர் அரசறிவியல்சூழல் காரணமாகத்தான் தமிழ்மக்கள் தமது இறுதி இலக்குகளை வெல்லமுடியாத மக்களாகத் தொடர்ந்தும் காணப்படுகிறார்களா ?

இக்கேள்வியோடு இக்கட்டுரையின் மையப் பகுதிக்கு வரலாம். பழைய பூங்கா. 1800ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த ஜேம்ஸ் கோடினரின் குறிப்பின்படி,கேர்னல். பார்பெட் என்ற பிரிட்டிஷ் நிர்வாகியால் அமைக்கப்பட்ட, சுற்று மதியோடு கூடிய ஒரு தோட்டம் பற்றிக் கூறப்படுகிறது. இந்தத்  தோட்டத்தைத்தான் யாழ்ப்பாணத்தின் முதலாவது அரச அதிபராக இருந்த பி.ஏ.டைக்(1831 -1867 )விலைக்கு வாங்கி ஏற்கனவே காணப்பட்ட பூங்காவை விஸ்தரித்ததோடு,அரச அதிபருக்கான மாளிகையும் உட்பட சில கட்டடங்களைக்  கட்டியதாக கட்டடப்படக் கலைஞர் மயூரநாதனின் நூலில் கூறப்பட்டுள்ளது.

19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே அதாவது பிரிட்டிஷ்காரரின் ஆட்சிக் காலத்தின் பிற்பகுதியில், பழைய பூங்கா அதன் பராமரிப்பை இழந்து விட்டது என்பதை பிரிட்டிஷ் நிர்வாகிகளின் குறிப்புகளில் இருந்து அறியமுடிகிறது. அதிலிருந்து தொடங்கி அது யாழ்பாணத்தின் நகர்ப்புறக் காடாக வளரத் தொடங்கியது. ஆயுதப் போராட்ட காலகட்டத்தில் குறிப்பாக முதலாங் கட்ட ஈழப் போரின் தொடக்கத்தில் அது படையினரின் முகாமாக இருந்தது. யாழ்ப்பாணம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்தபின் அது அவர்களுடைய  காவல்துறைத் தலைமையகமாக,பயிற்சி மையமாக இருந்தது. படையினரும் சரி விடுதலைப் புலிகள் இயக்கமும் சரி அங்கிருந்த முதுமரங்களை ஒரு கவசமாக,ஒரு குடையாக, ஒரு விதத்தில் மறைப்பாகப்பயன்படுத்தினார்கள் என்றுதான் கூறவேண்டும்.

ஆனால் நாலாங் கட்ட ஈழப்போரின் பின்,சந்திரசிறீ ஆளுநராக இருந்த காலகட்டத்தில் பழைய பூங்கா சிதைக்கப்பட்டது. அரச திணைக்களங்களின் கட்டடங்கள் அங்கே கட்டியெழுப்பப்பட்டன. ஆளுநர்  சந்திரசிறீ முது மரங்களை மட்டும் வெட்டவில்லை, அந்த மரங்களில் வாழ்ந்த வெளவால்கள் எச்சமிடுவதாகக் கூறி அவற்றைச் சுட்டதாக ஐங்கரன்நேசன் கூறினார். சந்திரசிறி பழைய பூங்காவைச் சிதைக்கும்போது  தமிழ் மக்களின் விருப்பத்தைக் கேட்கவில்லை. அப்போது இருந்த தமிழ் மக்களின்  பிரதிநிதிகள்  அதுதொடர்பாக வலிமையான எதிர்ப்பைக் காட்டியிருக்கவில்லை. ராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட ஒரு மக்கள் கூட்டத்தின் வேரை அறுக்கும் பண்பாட்டுப் படுகொலை அது. சந்திரசிறீ பழைய பூங்காவின் ஆன்மாவை பெருமளவுக்கு சிதைத்து விட்டார். பின்னர் அதன் மூலையில் ஒரு சிறிய புதிய பூங்காவை உருவாக்கினார்.

20170103_044031535_iOS-1024x768.jpg

பழைய பூங்காவுக்குப் பல் பரிமாண முக்கியத்துவங்கள் உண்டு. முதலாவதாக அது ஒரு மரபுரிமைப் பிரதேசம். குடியேற்றவாத ஆட்சியாளர்களின் காலத்தில், அதாவது பிரிட்டிஷ் ஆட்சியின் இறுதிக்கட்டத்தில் யாழ்ப்பாணத்துக்கான நிர்வாகத் தலைமையகமாகவும் அதேசமயத்தில் ஒரு பூங்காவாகவும் அது பராமரிக்கப்பட்டுள்ளது. அதை உருவாக்கிய வடபகுதிக்கான முதலாவது அரச அதிபரான டைக் அதனை ஒரு பூங்காவாக மட்டும் கருதி உருவாக்கவில்லை என்பதனை அதுதொடர்பான குறிப்புகளில் இருந்து அறிய முடிகிறது. அதனை அவர் ஒரு பூங்கா என்பதற்கும் அப்பால் ஒரு பழத் தோட்டமாகவும் பராமரித்துள்ளார். அங்கிருந்த  பழங்களை யாரும் இலவசமாகச் சாப்பிடலாம் என்றும் அனுமதித்திருக்கிறார்.

பிரிட்டிஷ்காரர்களின் ஆட்சி காலம் என்பது தமிழ் மக்களின் நவீன வரலாற்றில் ஒரு காலகட்டம். பழைய பூங்கா பிரிட்டிஷ்காரர்களின் ஆட்சிக் காலத்தில் யாழ்ப்பாணத்தின் நிர்வாக மையமாகக் காணப்பட்டது. அங்குள்ள கட்டடங்கள், கட்டுமானங்கள் அனைத்தும் வரலாற்றின் ஒரு காலகட்ட  நினைவுகளை தாங்கி நிற்கும் மரபுரிமை சின்னங்கள் ஆகும். அந்த அடிப்படையில் பழைய பூங்கா ஒரு மரபுரிமைப் பிரதேசம். அதைப் பாதுகாப்பது என்பது தமிழ் மக்களின் வரலாற்றின் ஒரு பகுதியை பாதுகாப்பது. அபிவிருத்தியின் பெயரால் அந்த மரபுரிமைச் சொத்துக்களைச் சிதைப்பது என்பது தமிழ் மக்களுடைய வரலாற்றின் ஒரு பகுதியை இல்லாமல் செய்வதுதான். அது மரபுரிமைப் பிரதேசங்கள் தொடர்பான உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டங்களுக்கு எதிரானது.

இரண்டாவது பரிமாணம், அது ஒரு நகர்ப்புற காடு. உலகின் வளர்ச்சி அடைந்த நாடுகள் நகரங்களின் சுவாசப் பைகளாக நகர மத்தியில் சிறு காடுகளை உருவாக்கிவரும் ஒரு காலகட்டத்தில், ஏற்கனவே  யாழ்ப்பாணத்திலிருந்த, நூற்றாண்டு கால முதிய காடு ஒன்றின் தப்பி பிழைத்த சிறு பகுதியையாவது யார் பராமரிப்பது?

அந்த முதுமரங்களில் வசித்த லட்சக்கணக்கான வௌவால்களும் அந்தக் காட்டின் ஒரு பகுதிதான். மிக அரிதான முதுமரங்களை விதைத்தவை அந்த வௌவால்கள்தான்.  இது பழைய பூங்காவுக்குள்ள சூழலியல் முக்கியத்துவம். இதுதொடர்பாக ஐங்கரநேசன் ஏற்கனவே ஊடகச் சந்திப்பொன்றில் விரிவாகப் பேசியுள்ளார்.

மூன்றாவது தாவரவியல் பரிமாணம். அரிதாகிச் செல்லும் பாரம்பரிய முதுமரங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பது உலகில் ஏற்றுக் கொள்ளப்பட்ட மரபுரிமை நடைமுறைகளில் ஒன்று. பழைய பூங்காவில் வானளாவ வளர்ந்து நிற்கும் முது மரங்கள் பல யாழ்ப்பாணத்தில் இப்பொழுது உயிருடன் இருக்கும் எல்லாரையும் விட, அவர்களுடைய முப்பாட்டன் முப்பாட்டிகளை விட மூத்தவை. நகரங்களைக் கட்டமைக்கும் போதும் வீதிகளை விசாலிக்கும்போதும் முதுமரங்களைப் பாதுகாப்பது என்பது உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மரபுரிமை,தாவரவியல் ,சூழலில் நடைமுறைகளில் ஒன்று.

எனவே பழைய பூங்காவை அதன் முதுமரங்களோடும் வெளவால்களோடும் பாதுகாக்க வேண்டியது தமிழ் மக்களுடைய பொறுப்பு. போர்க் காலத்திலேயே பராமரிக்கப்பட்ட  ஒரு மரபுரிமை பிரதேசத்தை அபிவிருத்தியின் பெயரால் சிதைப்பதற்கு அனுமதிக்கலாமா? இப்பொழுது உயிரோடிருக்கும் எல்லா யாழ்ப்பாணதவர்களை விடவும் அவர்களுடைய  முப்பாட்டன் முப்பாட்டிகளை விடவும் வயதால் மூத்த அந்த மரங்களை வெட்ட அனுமதிக்கலாமா? தனது வேர் களைப் பாதுகாக்க முடியாத ஒரு மக்கள் கூட்டம் ஒரு தேசிய இனமாக நிமிர முடியுமா?

https://www.nillanthan.com/7955/#google_vignette

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.