Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முதுகு வலி வராமல் தடுக்கவும் வந்தால் சமாளிக்கவும் நீங்கள் அறிய வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்

முதுகெலும்பு

பட மூலாதாரம்,Getty Images and BBC

படக்குறிப்பு,பிபிசி வரைபடம் வெவ்வேறு நிலைகளில் உள்ள மூன்று பேரைக் காட்டுகிறது. ஒவ்வொருவரின் முதுகெலும்பும் சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ளது

30 டிசம்பர் 2025, 01:52 GMT

பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்வின் ஏதேனும் ஓர் சந்தர்ப்பத்தில் முதுகு வலியால் அவதிப்படுகிறார்கள். பொதுவாக, முதுகு வலி சில வாரங்களில் குறைந்துவிடும் - ஆனால் மீண்டும் மீண்டும் வலி ஏற்பட்டால், அது பாதிக்கப்பட்டவர்களை முடக்கி, அவர்களது அன்றாட வாழ்க்கையை மோசமானதாக மாற்றிவிடும்.

அதுமட்டுமல்ல, மனித முதுகெலும்பானது விலா எலும்புகள் மற்றும் இடுப்பு எலும்புகளுடன் மட்டுமல்லாமல், தசைநாண்கள், தசைநார்கள், குருத்தெலும்புகள், தசைகள் மற்றும் நரம்பு திசுக்களின் தொகுப்போடும் இணைக்கப்பட்டது. எனவே, இந்த பகுதிகளில் ஏதேனும் ஒன்றில் ஏற்படும் பிரச்னைகளும் முதுகு வலியை ஏற்படுத்தக்கூடும்.

முதுகு வலி ஏற்படுவது என்பது அனைத்து வயதினருக்கும் பொதுவானது. எனவே, முதுகு வலியைத் தடுக்கவும், முதுகு வலி இருந்தால், அதை சிறப்பாக கையாளவும் முக்கியமான ஐந்து உபாயங்களைத் தெரிந்துக் கொள்வோம்.

மேல் அல்லது கீழ்?

அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியின் Institute for Health Metrics and Evaluation ஆராய்ச்சியாளர்கள் தயாரித்த 'குளோபல் பர்டன் ஆஃப் டிசீஸ்' என்ற ஆய்வின் சமீபத்திய பதிப்பின்படி, நாள்பட்ட கீழ் முதுகு வலியுடன் வாழ்பவர்களின் எண்ணிக்கை 2050-ஆம் ஆண்டு வரையிலான 30 ஆண்டுகளில் மூன்றில் ஒரு பங்குக்கும் மேல் அதிகரிக்க உள்ளது.

அப்போதைய காலகட்டத்தில், உலக மக்கள்தொகையில் பத்தில் ஒருவர் முதுகு வலியால் பாதிக்கப்படுவார்கள்.

உலகளாவிய ஆரோக்கியத்தில் முதுகு வலியை விட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் நோய்கள் என்று குளோபல் பர்டன் ஆஃப் டிசீஸ் ஆய்வு கூறுவதையும் தெரிந்துகொள்வோம். பக்கவாதம், இதயம் மற்றும் நுரையீரல் நோய்கள், நீரிழிவு மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளைப் பாதிக்கும் நோய்கள் ஆகியவையே அவை.

முதுகுப் பகுதியின் கீழ் பகுதியே உடலின் அதிகளவிலான அசைவுகளுக்குத் துணைபுரிவதாலும், அதிக அழுத்தத்தை உள்வாங்கிக் கொள்வதாலும், அங்குதான் அடிக்கடி வலி ஏற்படுகிறது. இருப்பினும், உடலின் மேல் முதுகுப் பகுதி, குறிப்பாக கழுத்து மற்றும் தோள்பட்டை பகுதிகளும் கூட இத்தகைய வலியை உண்டாக்கலாம்.

முள்ளெலும்பு, மனித முதுகெலும்பு, முள்ளெலும்புகள்

படக்குறிப்பு,33 முள்ளெலும்புகளைக் கொண்ட மனித முதுகெலும்பானது பொதுவாக மண்டையோட்டின் அடிப்பகுதியில் இருந்து பிட்டத்தின் உச்சி வரை நீண்டுள்ளது, அதன் கீழ் உள்ள ஒன்பது முள்ளெலும்புகள் ஒன்றாக இணைந்திருக்கின்றன

சிகிச்சைக்கு முன் நோயறிதல்

சிகிச்சைக்கு முன் நோயறிதல் என்ற மருத்துவக் கொள்கை முதுகு வலிக்கு மிகவும் பொருத்தமானது. ஏனென்றால், முதுகு வலி ஏற்படுவதற்கான காரணங்கள் எதுவாக இருந்தாலும், முதுகு வலி ஏன் ஏற்பட்டது என்பதைக் கண்டறிய ஒரேயொரு குறிப்பிட்ட நோயறிதல் சோதனை என்று எதுவும் கிடையாது.

பித்தப்பை அல்லது சிறுநீரக நோய் அல்லது சில வகை புற்றுநோய்கள் என உயிருக்கு ஆபத்தான நிலைகளை மருத்துவர்கள் பொதுவாக முதலில் நிராகரிக்க முயற்சிப்பார்கள். வழக்கமாக, நோயறிதல் என்பது உடல் பரிசோதனை மற்றும் நோயாளியின் மருத்துவ வரலாற்றைச் சரிபார்ப்பதையும் உள்ளடக்கியது.

ரத்தப் பரிசோதனைகள் மூலம் புற்றுநோய் அல்லது குருத்தெலும்புகளை சேதப்படுத்தி மூட்டுவலியை உண்டாக்கும் வீக்கங்களைக் கண்டறிய முடியும். மேலதிக உறுதிப்படுத்தலுக்கு, மூட்டுகள், எலும்புகள், டிஸ்க்குகள், உறுப்புகள் அல்லது மென்மையான திசுக்களை ஆய்வு செய்ய எக்ஸ்-ரே, சிடி ஸ்கேன், அல்ட்ராசவுண்ட் அல்லது எம்ஆர்ஐ போன்ற இமேஜிங் சோதனைகள் தேவைப்படலாம்.

பெரும்பாலான முதுகுவலிகள் லேசான வலி மற்றும் உடல் இறுக்கமானது போன்ற உணர்வாகவே இருக்கும். ஆனால், தசை அல்லது தசைநார் கிழிந்துபோனால் திடீரென கடுமையான வலியை உண்டாக்கும். அதேபோல, பிட்டம் மற்றும் கால்களுக்கு பரவும் வலி, அந்தப் பகுதிகளில் ஊசி குத்துவது போன்ற உணர்வு அல்லது மரத்துப்போதல் போன்ற அறிகுறிகள் தோன்றுவது நரம்புப் பாதிப்பின் அறிகுறியாகவும் இருக்கலாம்.

தசைகளில் உள்ள மின் செயல்பாட்டை ஆய்வு செய்யும் 'எலக்ட்ரோடியாக்னோசிஸ்' முறை, தசை மற்றும் நரம்பு கோளாறுகளுக்கு இடையிலான வேறுபாட்டை கண்டறிய உதவும்.

கயிறு இழுக்கும் போட்டியில் ஈடுபட்டுள்ள பல்வேறு இனங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,பிற எலும்புகளை விட முதுகெலும்பு வேகமாக நீளமாகும்போது, அது குழந்தைகளுக்கு வலியை ஏற்படுத்தலாம்

இந்த நோயறிதல் அணுகுமுறையானது பெரியவர்களுக்கு மட்டுமல்ல குழந்தைகளுக்கும் பொருந்தும்.

இந்தியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் குழந்தை நல மருத்துவராகப் பணியாற்றியவரும், தற்போது ஜெர்மனியில் முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணராக பணிபுரிந்துவரும் மருத்துவர் அரினா டிசோசா, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வரும்போது தான் கூர்ந்து கவனிக்கும் விஷயங்கள் என்ன என்பதை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டார்:

"குழந்தைகள் குதித்து விளையாடிக்கொண்டிருப்பார்கள், அப்போது நான் சில விஷயங்களைக் கூர்ந்து அவதானிப்பேன்:

  • அந்தச் செயல்பாடுகளின் போது அவர்களுக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டதா?

  • மறைந்திருக்கும் தசைக்கூட்டு குறைபாடுகள் ஏதேனும் உள்ளனவா?

  • பெற்றோர்களுக்கும் முதுகு வலி வரும் வாய்ப்பு உள்ளதா?

  • அவர்கள் சமச்சீர் உணவை உண்கிறார்களா?

முழங்கால்களிலும் கால்களிலும் ஏற்படும் வலி அதிகரித்து வருவதைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம், ஆனால் சில சமயங்களில் இது முதுகிலும் ஏற்படலாம் - ஏனெனில் ஓர் குழந்தையின் முதுகெலும்பு முழுவதுமே, சில நேரங்களில் பிற எலும்புகளை விட மிகத் துரிதமாக நீளமாக வளரும்.

முதுகு வலி

பட மூலாதாரம்,Getty Images

ஆரோக்கியமான மனம், ஆரோக்கியமான உடல்

முதுகு வலி மீண்டும் வந்துவிடுமோ என்ற அச்சமே சில நோயாளிகளின் குணமடையும் செயல்முறைக்கு தடையாக இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.

"முதுகெலும்பு மற்றும் தசைப் பிரச்னைகள் ஏதும் இல்லாதபோதும், மீண்டும் வலி வந்துவிடுமோ என்ற கவலையே சிலர் தங்கள் முதுகைப் பயன்படுத்துவதில் அவநம்பிக்கையை ஏற்படுத்துகிறது" என இங்கிலாந்தின் Down2U Health and Wellbeing இயக்குனர் ஆடம் சியு, பிபிசியிடம் தெரிவித்தார்.

மேலும், "இந்த பயம் அவர்களைச் சுறுசுறுப்பற்றவர்களாகவும், மந்தமானவர்களாகவும் மாற்றுகிறது. சிலர் தங்களுக்குப் பிடித்தமான செயல்களைச் செய்வதைக் கூட நிறுத்திவிடுகிறார்கள்," என்று அவர் கூறுகிறார்.

ஆஸ்திரேலியாவின் மக்வாரி பல்கலைக்கழகத்தின் பிசியோதெரபி பேராசிரியர் மார்க் ஹான்காக் முதுகு வலி பற்றிக் கூறுகையில்: "சில நோயாளிகள் தங்கள் முதுகுப் பகுதிக்கு சேதம் ஏற்பட்டுவிடுமோ என்ற பயத்தால், சமூக வாழ்க்கையிலிருந்தே விலகிவிடுகிறார்கள். சமூக அழுத்தம், வலியைப் பற்றிய கவலை, எரிச்சலூட்டும் முதுகு வலி என அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துப் பார்க்கும்போது, திடீரென்று இதுவொரு மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுக்கிறது" என்று கூறுகிறார்.

எனவே, முதுகு வலி என்பது ஆக்கப்பூர்வமான மற்றும் முழுமையான அணுகுமுறையின் அவசியத்திற்கான தேவையை ஏற்படுத்தியுள்ளது.

"உலகெங்கிலும் உள்ள மருத்துவ வழிகாட்டுதல்களும் இப்போது உடல் ரீதியான, உளவியல் ரீதியான மற்றும் சமூகக் காரணிகளுக்குத் தீர்வு காண வேண்டியதன் அவசியத்தைப் பற்றி பேசுகின்றன," என்று பேராசிரியர் ஹான்காக் கூறுகிறார்.

"சி.எஃப்.டி (Cognitive Functional Therapy) எனப்படும் சிகிச்சை முறை, நோயாளிகள் சிகிச்சையாளர்களுடன் கலந்துரையாடி, வலிக்குக் காரணமான பல்வேறு விஷயங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள அனுமதிக்கிறது.

அதன்பின், அவர்களுக்குப் பிடித்தமான செயல்களைப் படிப்படியாக மீண்டும் செய்வதற்குத் தகுந்த மாற்று வழிகளுடன் கூடிய திட்டம் ஒன்று வகுக்கப்படுகிறது.

தேவைப்பட்டால், நோயாளிகளின் வாழ்க்கை முறையில் மாற்றங்களை ஏற்படுத்த சிகிச்சையாளர்கள் அவர்களுடன் இணைந்து செயல்படுவார்கள்."

முன்னேறிக் கொண்டே இரு

முகப்பு மூட்டு மாதிரி, முதுகெலும்புத் தட்டு, ஆடம் சியு

பட மூலாதாரம்,Adam Siu

படக்குறிப்பு,முகப்பு மூட்டு மாதிரியைப் பயன்படுத்தி, உட்காரும்போது அல்லது குனியும் போது முதுகெலும்புத் தட்டு எவ்வாறு செயல்படுகிறது என்பதை விளக்குகிறார் ஆடம் சியு

மீண்டும் வலி ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தால், ஓய்வு எடுப்பது குணமடைய உதவும் என சில நோயாளிகள் நம்புகிறார்கள். ஆனால், அது தவறு எனக் கூறும் பிரிட்டிஷ் முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் (BASS), முதுகு வலியைத் தவிர்ப்பதற்கு சுறுசுறுப்பாக இருப்பது முக்கியம் என்று கூறுகிறது. முதுகு வலிக்காக அதிக ஓய்வு எடுப்பது என்பது, வலி குணமாகும் காலத்தை மேலும் நீட்டிக்கும் என கடந்த பத்து ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து ஆராய்ச்சிகளும் கூறுகின்றன.

"முதுகெலும்புத் தொடர், வெர்டிப்ரே எனப்படும் தனிப்பட்ட எலும்புகளால் ஆனது, இது இயற்கையாகவே வெவ்வேறு பிரிவுகளில் வளைந்திருக்கும்" என ஆடம் சியு கூறுகிறார்.

"உடலின் எடை மற்றும் அசைவுகளுக்கு முதுகெலும்பு துணைபுரிய முதுகெலும்புத் தொடரின் வளைவுகள் உதவுகின்றன. முதுகெலும்பின் மேல் பகுதியில் உள்ள 24 எலும்புகள் நெகிழ்வுத்தன்மை கொண்டவை; இவை ஒவ்வொன்றும் ஃபேசெட் மூட்டுகளால் இணைக்கப்பட்டுள்ளன. இந்த ஒவ்வொன்றுக்கும் இடையில் இன்டர்வெர்டெபிரல் டிஸ்க் எனும் மெத்தை போன்ற அமைப்பு உள்ளது.

இந்த இயற்கையான அமைப்பு மற்றும் அந்த டிஸ்க்கின் அதிர்வுகளைத் தாங்கும் தன்மை பலவீனப்படாமல் இருக்க வேண்டுமெனில், அமர்வது, குனிவது அல்லது நீண்ட நேரம் நிற்பது என ஒரே நிலையில் இருப்பதைத் தவிர்ப்பது மிகவும் அவசியம்."

ஆனால் நவீன வாழ்க்கை முறையில், ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பது, ஆன்லைனில் படிப்பது, கேம் விளையாடுவது, வீடியோக்களைப் பார்ப்பது என உடலுழைப்பு குறைந்துவிட்டது.

அலுவலக ஊழியர்களில் சிலருக்கு மட்டுமே அவ்வப்போது ஓய்வு எடுப்பதற்கோ அல்லது நடப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்; ஆனால் பல வேலைகளில் இதற்கான வாய்ப்புகளும் இருக்காது.

"வாகன ஓட்டுநராக இருந்தால், போக்குவரத்து நெரிசலில் சிக்கியிருக்கும் போது அமர்ந்த நிலையிலேயே சில பயிற்சிகளை செய்ய முயற்சிக்கலாம்," என்று ஆடம் சியு கூறுகிறார்.

"கனமான பொருட்களைத் தூக்கும் கட்டுமானத் தொழிலாளர்கள், வேலை செய்வதற்கான வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். குறிப்பிட்ட உடற்பயிற்சிகளைத் தெரிந்துகொள்ள பிசியோதெரபிஸ்ட்டுகளை அணுக வேண்டும்."

கர்ப்பகால முதுகு வலி

கர்ப்பிணிப் பெண், கர்ப்பமுற்ற பெண்கள், உடல் தோரணை, உடல் எடைப் பரவல், மன அழுத்தம்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,கர்ப்பமுற்ற பெண்கள், உடல் தோரணை, உடல் எடைப் பரவல் மற்றும் மன அழுத்தம் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை அனுபவிக்கின்றனர்

கர்ப்ப காலமும் முதுகு வலியை உண்டாக்கக்கூடும் - அதுவும் கர்ப்பத்தின் ஆரம்ப கட்டங்களிலேயே இது ஏற்படலாம்.

கருத்தரித்த சில காலத்திலேயே பெண்ணின் உடலில் 'ரிலாக்ஸின்' என்ற ஹார்மோன் உற்பத்தி அதிகரிக்கிறது. இது பிரசவத்திற்குத் தயாராகும் வகையில் பெண்ணின் இடுப்புப் பகுதியில் உள்ள தசைநார்களைத் தளர்த்தி, கருப்பை வாயை மென்மையாக்குகிறது. ஆனால், அதே வேளையில் இது முதுகெலும்பில் உள்ள இணைப்புத் திசுக்களையும் மூட்டுகளையும் தளர்த்துவதால், முதுகின் கீழ் பகுதியில் அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது.

கரு வளரும்போது, கர்ப்பிணிகள் தங்களின் உடல் நிலை, உடல் எடை பரவல் மற்றும் மன அழுத்தத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை உணர்கிறார்கள்.

கர்ப்ப காலத்தில் முதுகு வலியைத் தணிக்க சில குறிப்புகள்:

  • உடலைத் திருப்பும் போது, முதுகெலும்பை முறுக்குவதைத் தவிர்க்க உங்கள் கால்களையும் சேர்த்துத் திருப்புங்கள்.

  • உங்கள் உடல் எடையைச் சீராகத் தாங்கக்கூடிய வசதியான காலணிகளை அணியுங்கள்.

  • மகப்பேறு கால சிறப்புத் தலையணைகள் மற்றும் நல்ல மெத்தையை பயன்படுத்துவது, போதுமான ஓய்வு பெற உதவும்.

வலி நிவாரண மாத்திரைகளை எப்போது எடுத்துக்கொள்ள வேண்டும்?

"முதுகு வலியின் ஆரம்ப கட்டத்தில், மருந்துக் கடைகளில் சாதாரணமாக கிடைக்கக்கூடிய வீக்கத்தைக் குறைக்கும் (anti-inflammatory) மருந்துகளை எடுத்துக்கொள்வது தவறில்லை; இது நீங்கள் தொடர்ந்து இயங்குவதற்கு உதவும்" என்று சியு கூறுகிறார்.

"ஆனால், வலி தொடர்ச்சியாக இருந்தால் அதற்கான காரணத்தைக் கண்டறிந்து சரிசெய்யாமல், சில வாரங்களுக்கு மேலாகவோ அல்லது நீண்ட காலமோ இந்த மருந்துகளை மட்டுமே எடுத்துக்கொண்டால், அது பிரச்னையை மூடி மறைப்பதாகவே அமையும். துரதிருஷ்டவசமாக, பல ஆண்டுகளாக மருந்துகளை மட்டுமே பயன்படுத்தும் நபர்களை பார்க்கிறேன்."

வலியை மரத்துப் போகச் செய்வது என்பது, அந்த வலிக்கான உண்மையான காரணத்தை மேலும் மோசமாக்கும் என்று சிலர் நம்புகிறார்கள். ஆனால், பிரிட்டிஷ் முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் (BASS) இதை மறுக்கிறது.

"இது முற்றிலும் உண்மையல்ல. நம் உடலில் மிகவும் வலிமையான பாதுகாப்பு அனிச்சைச் செயல்கள் உள்ளன. சாதாரண வலி நிவாரணிகளால் அவற்றை அகற்றிவிட முடியாது. அதாவது, வலி நிவாரணிகள் வலியை மட்டுமே குறைக்கும்; ஆபத்தான செயல்களில் இருந்து உங்களைத் தடுக்கும் உடலின் இயற்கையான பாதுகாப்பு உணர்வை அவை நீக்கிவிடாது.

இதற்கு உதாரணமாக, சாதாரண வலி நிவாரணிகளை எடுத்துக்கொண்டவர், கொதிக்கும் நீரில் கையை வைத்தால் என்னவாகும்? உடலின் அனிச்சை செயல்கள் வலியை ஏற்படுத்தும். அதேபோலத்தான், எளிய வலி நிவாரண நடவடிக்கைகளை எடுத்துக்கொண்ட பிறகு நடமாடுவதால் ஒருவரின் முதுகுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடாது.

இவ்வகையான மருந்துகளை எடுத்துக்கொள்வதில் உங்களுக்கு சந்தேகம் ஏதேனும் இருந்தால், ஒரு மருந்தாளரிடம் கலந்தாலோசிக்கவும்."

மூல உரை: பிபிசி நியூஸ் வேர்ல்ட் சர்வீஸ், குளோபல் ஜர்னலிசம் க்யூரேஷன்

கூடுதல் தகவல்கள்: பிபிசி நியூஸ் மராத்தியின் கணேஷ் போல்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c33m37mgy4po

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.