Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சென்னையில் வைகோ, பழ.நெடுமாறன் உள்ளிட்ட 346 பேர் கைது

Featured Replies

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போராளிகளுக்கு தமிழக அரசின் அனுமதி மறுப்பை மீறி வீரவணக்கம் ஊர்வலம் நடத்த முயன்ற ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் உள்ளிட்ட 346 தமிழின உணர்வாளர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ச்செல்வனுக்கு அஞ்சலி ஊர்வலம் நடத்த முயன்ற வைகோ, நெடுமாறன் கைது

வீரகேசரி நாளேடு

புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போராளிகளுக்கு தமிழக அரசின் அனுமதி மறுப்பை மீறி அஞ்சலி ஊர்வலம் நடத்த முயன்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் ஆகியோர் உட்பட நூற்றுக்கணக்கானோர் நேற்றுமாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை மன்ரோ சிலை அருகே நேற்று திங்கட்கிழமை மாலை 4.30 மணியளவில் வைகோ மற்றும் பழ. நெடுமாறன் ஆகியோர் தலைமையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் ஒன்றுகூடினர். இவர்கள் புலிகளுக்கு ஆதரவான கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக செல்ல முயன்றபோது அதனை தடுத்த பொலிஸார், இவர்கள் அனைவரையும் கைதுசெய்தனர். ஆதரிப்போம், ஆதரிப்போம் விடுதலைப்புலிகளை ஆதரிப்போம், வீர வணக்கம், வீரவணக்கம் தமிழ்ச்செல்வனுக்கு வீரவணக்கம் என்ற கோஷங்களை ம.தி.மு.க. தொண்டனர்கள் எழுப்பினர்.

ஒலிபெருக்கி மூலம் வைகோ கோஷங்களை எழுப்பியபோது பொலிஸார் அவரிடமிருந்து ஒலிவாங்கியை பிடுங்கி எடுத்தனர். இதனையடுத்து ஆத்திரமடைந்த வைகோ ஒலிபெருக்கியை பிடுங்கிய உங்களால் என் தொண்டையை பிடுங்க முடியுமா? என்று பொலிஸாரைப் பார்த்து கூறியதுடன், ஒலிபெருக்கி இல்லாமலே கோஷமிட்டார்.

இதனையடுத்தே வைகோ, பழ. நெடுமாறன், மார்சிச பெரியாரிய பொது உடமைக் கட்சியின் செயலாளர் வே. ஆனைமுத்து, தமிழ்த் தேசிய பொது உடமைக் கட்சியின் செயலாளர் மணி அரசன் உட்பட நூற்றுக்கணக்கானோர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலைப் புலிகள் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வனின் மரணத்திற்கு கவிதை வடிவில் "இரங்கல் பா' வெளியிட்டார் முதல்வர் கருணாநிதி. இதனால் தமிழக அரசியலில் மீண்டும் ராஜீவ் கொலை விவகாரம் சூடுபிடித்துள்ளது.

வரும் பாராளுமன்றத் தேர்தலில் ராகுல்காந்தியை முழு வீச்சில் களம் இறக்கத் தயாராகி வருகிறார் சோனியா. இதை மனதில் வைத்தே சோனியா மூவ் பண்ணுவார்

என்கிறார்கள்.

"ஒரு முதல்வர், தடை செய்யப்பட்ட இயக்கத்தின் தலைவருக்கு இரங்கல் கவிதை இயற்றுவது அரசியல் சட்ட விரோதம்' என்று பரபரப்பு அறிக்கையைக் கொடுத்தார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. ஆனால் முதல்வர் கருணா நிதியோ, "என் உடம்பில் தமிழ் ரத்தம் ஓடுகிறது.

அதனால் இரங்கல் கவிதை கொடுத்தேன்' என்று பதிலடி கொடுத்தார். மீண்டும் அதையும் காட்டமாக விமர்சித்துள்ள ஜெயலலிதா, "என் உடம்பில் ஓடுவதும் தமிழ் ரத்தமே' என்ற ரீதியில் அறிக்கை கொடுத்து, "இந்த விஷயத்தின் தீவிரத்தை மத்திய அரசு உணராத காரணத்தால் இது பற்றி உச்சநீதிமன்றத்தை அ.தி.மு.க. அணுகுவதைத் தவிர வேறு வழியில்லை' என்று பிரகடனப்படுத்தியுள்ளார்.

ராஜீவ் கொலையை வைத்து தமிழக அரசியல், கடந்த 16 வருடங்களாகச் சுற்றிச் சுற்றி வருவது என்னவோ உண்மைதான்! மத்திய அரசியலிலும் சரி... மாநில அரசியலிலும் சரி... இது பல கட்டங்களில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது. அதே சமயம் தமிழகத் தலைவர்களோ ராஜீவ் கொலை விவகாரத்தை தங்களின் அரசியல் நோக்கங்களுக்காகவே கையாண்டு வந்திருக்கிறார்கள்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைப் பொறுத்தவரை, "விடுதலைப் புலிகளை ஆதரிப்பதற்காக பா.ம.க.வை தடை செய்ய வேண்டும்' என்றுகூட மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார்.

ஆனால், அடுத்து 1998ல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் அந்தக் கட்சியுடனேயே கூட்டணி வைத்துக் கொண்டார். அப்போது பத்திரிகை நிருபர்கள் கேட்டபோது, "பா.ம.க.வின் கடந்த காலங்களை நான் பார்த்துக் கொண்டிருக்க முடியாது' என்றே பதில் சொன்னார்.

அதே போல் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசினார் என்று கூறி, வைகோவை பொடா சட்டத்திலேயே அடைத்தார் ஜெ. ஆனால் அவரையும் 2006 சட்டமன்றத் தேர்தலில் தன்னுடன் கூட்டணி சேர்த்துக் கொண்டார். இப்போதும் அந்தக் கூட்டணி தொடர்கிறது. ஆனாலும் தி.மு.க. மீது மட்டும் ராஜீவ் விவகாரத்தை வைத்து அவர் பாய்வதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை!

15 சதவிகித வாக்குகளை தன்னகத்தே வைத்துள்ள காங்கிரஸ் கட்சி தி.மு.க.வுடன் நேசமாக இருக்கும் வரை, அ.தி.மு.க.வின் அரசியல் எதிர்காலத்திற்கு பெரும் சவால்கள் காத்திருக்கின்றன என்று நினைக்கிறார் ஜெ. காங்கிரஸ் தன்னுடன் கூட்டணிக்கு வராத பட்சத்தில் அவர் தே.மு.தி.க.வுடன் அணி சேர வேண்டும்.

அப்படியில்லையென்றால் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க வேண்டும். இரண்டில் எது நடந்தாலும் அது அ.தி.மு.க.வுக்கு தலைவலி என்று கருதுகிறார் ஜெ. விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க.வுடன் கூட்டணி வைத்து அக்கட்சியை வளர்ப்பது அ.தி.மு.க.வுக்கு ஆபத்து என்பதை அவர் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்.

அது மட்டுமின்றி, "நம்மவர்கள்தான் ஒருவருக்கு ஒருவர் பிடிக்காமல் விஜயகாந்துக்கு வாக்களித்துவிட்டார்கள். அவருக்கு என்று தனிப்பட்ட செல்வாக்கு இல்லை' என்று சென்ற சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தன் கட்சியின் முன்னணித் தலைவர்களிடம் சொல்லி வந்தது தவறாகிப் போய்விடும் என்றும் கருதுகிறார் ஜெ.

அதே நேரத்தில் அகில இந்தியக் கட்சி என்ற அளவில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க ரெடியாகவே இருக்கிறார்.

ஆனால் அதனால் மைனாரிட்டி வாக்குகளைப் பெரிய அளவில் இழக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படும் என்று எண்ணும் ஜெ., அதை ஈடுகட்டும் விதத்தில்கூட பா.ஜ.க. வாக்கு வங்கி தனக்கு தமிழகத்தில் உதவாது என்றே தீர்க்கமாக நம்புகிறார்.

இது போன்ற சூழ்நிலையில் காங்கிரஸýடன் கூட்டணி வைப்பது மட்டுமே இந்த தர்மசங்கடங்களை நீக்கி, தனக்கு சுமுகமான தேர்தல் பாதையை அமைத்துக் கொடுக்கும் என்ற சிந்தனை ஜெ.வுக்கு ஓடிக் கொண்டிருக்கிறது. இதை மனதில் வைத்துதான் தமிழ்ச்செல்வன் மரணத்திற்குக் கவிதை எழுதிய முதல்வர் கருணாநிதியைக் கண்டிக்கிறார்.

கலவரத்தில் கத்திக் குத்து பட்ட தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியைச் சந்திக்கிறார். இப்போது, "தமிழ்ச்செல்வன் மரணத்திற்கு முதலமைச்சர் இரங்கல் கவிதை எழுதியது தவறா? இல்லையா? -என்று கேட்டு உச்சநீதிமன்றத்திற்கும் போகப் போகிறேன்' என்று கூறியுள்ளார்.

அவர் இந்தக் கல்லை எறிவதில், கிடைத்தால் காங்கிரஸ் கூட்டணி! இல்லையென்றால் தி.மு.க- காங்கிரஸ் கூட்டணி இடையே கசப்புணர்வு! அதே நேரத்தில் காங்கிரஸýடன் கூட்டணி வைக்கலாம் என்று ஹேஷ்யங்களைச் சொல்லிக் கொண்டிருக்கும் விஜயகாந்துக்கும் மிரட்டல் -இப்படிப் பல ஐடியாக்களை மனதில் வைத்துக்கொண்டு "ராஜீவ் கொலை விவகாரத்தை' மீண்டும் கையிலெடுத்துள்ளார் ஜெ.

அதே சமயம் தி.மு.க. தலைவர் கருணாநிதியைப் பொறுத்தமட்டில், ராஜீவ் கொலை யுண்ட 12 வருடங்களுக்குப் பிறகுதான் காங்கிரஸýடன் கூட்டணி வைத்துள்ளார். அதுவும் காங்கிரஸýக்கு சோனியா தலைமையேற்ற பிறகு அந்தக் கூட்டணியை அமைத்திருக்கிறார்.

இன்று வரை சோனியாவுக்கு எந்தத் தர்மசங்கடமும் வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக கருத்துச் சொல்லி வருகிறார். அவருடைய வெளிநாட்டவர் பிரச்சினையைக் கூட்டணி வைப்பதற்கு முன்பே கூட ஒரு விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை. மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அமைந்தபோது காங்கிரஸ் கூட்டணியிலேயே நீடித்தார்.

அதனாலேயே காங்கிரஸýக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் இடையேயான "கோ-ஆர்டினேட்டிங் கமிட்டியில்' இடம்பெற மறுத்தார்.

சென்ற பாராளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தலிலேயே ராஜீவ் கொலை பற்றியும், அது தொடர்பாக தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கலாமா? -என்பது குறித்தும் ஒரு மாபெரும் பட்டிமன்றமே மக்கள் மன்றத்தில் நடந்து முடிந்துவிட்டது.

இது போன்ற சூழ்நிலையில் இலங்கை தமிழர் பிரச்சினையில் சோனியாவுக்கு எரிச்சல் கொடுக்கக் கூடாது என்பதற்காகவே அதை முழுக்க முழுக்க மத்திய அரசிடம் ஒப்படைத்துவிட்டு "வெயிட்' பண்ணுகிறார் முதல்வர்.

தி.மு.க. ஆட்சியில் இருந்த காலத்தில் இலங்கைத் தமிழர் நலன் பற்றிப் பேசாத முதல்வரின் சுதந்திர தின உரையே இல்லை என்றே சொல்லலாம். ஆனால் கடந்த சுதந்திர தினத்தின் போது இலங்கைத் தமிழர் நலன் பற்றியே பேசாமல், தொழில் வளர்ச்சி போன்றவற்றைப் பேசினார் முதல்வர் கருணாநிதி.

தமிழ்ச்செல்வன் மரணமடைந்த விவகாரத்தில்கூட அ.தி.மு.க. கூட்டணியில் இருக்கும் வைகோ கண்டன அறிக்கை வெளியிட்ட பிறகே முதல்வர் கருத்துச் சொன்னார். அவரைப் பொறுத்தவரை தற்போது தமிழ்ச்செல்வனுக்கான இரங்கல் கவிதை விஷயத்தை ஜெ. கையிலெடுப்பதால் காங்கிரஸ் உறவில் எந்த மாற்றமும் வந்துவிடாது என்றே கருதுகிறார்.

ஆக, இந்த இருவரின் மன நிலை இப்படியிருக்கும் போது, காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி என்ன கணக்குப் போடுகிறார்? அவரைப் பொறுத்தமட்டில் சென்ற பாராளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்கள் போல் இன்று நிலைமை இல்லை. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு அன்று தி.மு.க.வை தவிர வேறு வாய்ப்பு இல்லை.

ஆனால் இன்று அவர் முன்பு புதிய சக்தியாக தே.மு.தி.க., "நாங்களும் கூட்டணிக்கு ரெடி' என்ற நிலையில் அ.தி.மு.க., கையிலிருக்கும் தி.மு.க.- என்று மூன்று வாய்ப்புகள் அணிவகுத்து நிற்கின்றன.

இந்தச் சூழ்நிலையால் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. போன்ற தேசியக் கட்சிகளுக்கு, "தி.மு.க.வுக்கு எதிராக அ.தி.மு.க. தலைமையில் மட்டும் அணி அமைத்தால் போதும்' என்ற நிலைமை இப்போது மாறிவிட்டது. அதற்குக் காரணம் அ.தி.மு.க.வின் வாக்குகளைக் கணிசமாக அள்ளிச் சென்று விட்ட விஜயகாந்த். இந்த விவரங்கள் தமிழக காங்கிரஸ் தலைவர் ஒருவரால் சமீபத்தில் சோனியாவிடம் சொல்லப்பட்டதாம்.

இதை மனதில் வைத்திருக்கும் சோனியா காந்தி, இப்போதைக்கு தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்த விரும்பவில்லை என்றே காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர்கள் சொல்கிறார்கள். அதற்கு முக்கியக் காரணம் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தியை முழு வீச்சில் களம் இறக்கத் தயாராகி வருகிறார் சோனியா.

காங்கிரஸ் தனி மெஜாரிட்டி பெற்றால், அநேகமாக ராகுல் காந்தியையேகூட பிரதமராக்க சோனியா நினைக்கலாம் என்று டெல்லி அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். தன் எதிர்பார்ப்பை மனதில் வைத்தே சோனியா மூவ் பண்ணுவார் என்கிறார்கள்.

ஆகவே, தி.மு.க. எதிர்ப்பு வாக்குகள் இரு கூறாக "அ.தி.மு.க., தே.மு.தி.க' என்று பிரிந்து கிடக்கின்ற நிலையில், "ரிஸ்க்' குறைவான கூட்டணி தி.மு.க.வே என்று சோனியா எண்ணுகிறாராம்.

ஆனால் 2004 போல் 10 சீட்டுக்கு இனி காங்கிரஸ் படியாது. அதனால்தான் இப்போது காங்கிரஸ் தலைவர்கள் ஸ்லோ மோஷனில் தி.மு.க. எதிர்ப்புக் கருத்துக்களை சொல்லத் தொடங்கியுள்ளார்கள். "ரோடு சரியில்லை' "மணல் கொள்ளை தடுக்கப்பட வேண்டும்' என்று நிதியமைச்சர் சிதம்பரம் பேசியுள்ளார். "சட்டம்-ஒழுங்கு சரியில்லை' என்று மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சொல்லியுள்ளார்.

"ராஜீவ் கொலையாளிகளை மன்னிக்க மாட்டோம்' என்று இன்னொரு மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். "தமிழ்ச்செல்வன் பற்றி முதல்வர் கவிதை எழுதியது அவரது சொந்தக் கருத்து' என்று அகில இந்திய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் நழுவியுள்ளார்.

இதையெல்லாம் வைத்து கூட்டிக் கழித்து சோனியா போட்டு வைத்திருப்பது தற்போதைக்கு ஒரேயொரு கணக்குதான்! அது, தன் முன்னால் இருக்கின்ற அ.தி.மு.க., தே.மு.தி.க. போன்ற "ஆப்ஷன்களைப்' பயன்படுத்தி அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க.விடம் காங்கிரஸýக்கு ஒதுக்கப்படவுள்ள சீட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது!

இது ஒருபுறமிருக்க நாளுக்கு நாள் ராமதாஸ் மீது வளர்ந்து வரும் கோபம், சோனியாவுடன் அனுசரணையாக இருக்கும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத் குமார், காங்கிரஸýடன் கூட்டணிக்கு ரெடியாகிக் கொண்டிருக்கும் அ.தி.மு.க., தே.மு.தி.க. ஆகிய அனைத்துச் சூழ்நிலைகளையும் மனதில் வைத்து செயல்பட வேண்டிய கட்டத்தில் இருக்கிறார் முதல்வர் கருணாநிதி.

இதில் எதை மனதில் வைத்து முதல்வர் முடிவு எடுத்தாலும், அது காங்கிரஸின் கணக்கை உயர்த்தியே காட்டும் என்பதுதான் உண்மை நிலவரம்.

தினமலர் :lol:

இவற்றையெல்லாம் விட சோனியாவால் முன்பு ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்து பட்ட அவமானங்களை இன்னும் மறக்க முடியவில்லையென்பது தான் உண்மை. கலைஞரும் சோனியாவும் ஒருவரையொருவர் மதித்து புரிந்துணர்வுடன் நடந்து கொள்வது சோனியாவிற்கு கலைஞர் மேல் ஒரு மதிப்பை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் திமுகவுடனான கூட்டணியை இலகுவில் சோனியா விட விரும்பமாட்டார். தமிழகக்காங்கிரஸ் கட்சி க்குள் அவ்வப்போது ஏற்படும் சலசலப்புகள் சோனியாவின் முன் காணாமல் போய்விடும். எனவே திமுக - காங்கிரஸ் கூட்டணியில் பெரிதாக மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை. தொகுதிகள் உடன்பாட்டின்போது வேண்டுமானால் கலைஞரின் சம்மதத்துடன் எண்ணிக்கையில் சிறிது மாற்றமேற்பட வாய்ப்புண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

வைகோ, நெடுமாறனை விடுதலை செய்யக் கோரி மதிமுக ஆர்ப்பாட்டம்

செவ்வாய்க்கிழமை, நவம்பர் 13, 2007

சென்னை: சென்னையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் உள்ளிட்டோரை விடுதலை செய்யக் கோரி தமிழகம் முழுவதும் இன்று மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் சுப.தமிழ்ச்செல்வன் படுகொலைக்கு இரங்கல் தெரிவித்து நேற்று சென்னையில் வைகோ, நெடுமாறன் தலைமையில் பேரணி நடத்த திட்டமிடப்பட்டது.

ஆனால் இதற்குப் போலீஸார் தடை விதித்திருந்தனர். ஆனால் தடையை மீறி பேரணி நடத்த முயன்றபோது, வைகோ, நெடுமாறன் உள்ளிட்ட 350க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் 15 நாள் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மதிமுக பொருளாளர் மு.கண்ணப்பன் அறிவித்திருந்தார். அதன்படி மாவட்டத் தலைநகரங்களில் இன்று மதிமுகவினர் பெரும் திரளாக கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வைகோ, நெடுமாறனை விடுவிக்க திருமா. கோரிக்கை:

இதற்கிடையே, வைகோ, பழ.நெடுமாறன் ஆகியோரை நிபந்தனை ஏதுமின்றி தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஈழ மண்ணின் விடுதலைக்காகவும், அமைதிக்காகவும் போராடி வந்த சுப.தமிழ்ச்செல்வன் கடந்த 2ம் தேதி சிங்கள இனவெறிக் கும்பலால் குண்டு வீசி படுகொலை செய்யப்பட்ட சூழலில், அவருக்கும் அவரோடு களப்பலியானோருக்கும் அஞ்சலி செலுத்துகிற வகையில் தமிழகமெங்கிலும் கட்சி வேறுபாடுகளைக் கடந்து தமிழ் மக்கள் அமைதி வணக்கம் செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் பழ.நெடுமாறன் தலைமையில் அமைதி அணிவகுப்பு நடத்திட முடிவு செய்யப்பட்டு அனுமதி கோரியிருந்தனர். ஆனால் அரசு தரப்பில் அந்த பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதுடன், தடையை மீறி அப்பேரணியில் கலந்து கொள்வதற்காக மன்றோ சிலை அருகே திரண்ட தமிழ் உணர்வாளர்களை குறிப்பாக பழ.நெடுமாறன், வைகோ, தேசிய லீக்கின் மாநிலத் தலைவர் பசீர் அகமது உட்பட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 14 பெண்கள் உட்பட 360 பேர் புழல் மையச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

வாழ்விலே இல்லாவிட்டாலும் சாவிலே இருக்க வேண்டும் என்பது தமிழர் பண்பாடாகும். அந்த வகையில் ஈழ மண்ணில் வீரச்சாவடைந்த சுப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட தமிழ்ப்போராளிகளுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திட இயலாது எனும் நிலையில் தமிழகத்தில் அவர்களது திருவுருவப் படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்துவதும், இரங்கல் அணிவகுப்பு கூட்டங்களை நடத்துவதும் மனித நேயத்தின் அடிப்படையிலான செயல்களேயாகும்.

இத்தகையச் சூழலில் ஒருசில அரசியல் கட்சிகள், ஒருசில தலைவர்கள் மறைந்த தமிழ்ச்செல்வனுக்கு அஞ்சலி செலுத்துவதே கூடாது என்றும், அவ்வாறு அஞ்சலி செலுத்துவோரை கைது செய்ய வேண்டும் என்றும் அஞ்சலி செலுத்தும் அரசியல் கட்சிகளைத் தடை செய்ய வேண்டும் என்றும் கோரி வருகின்றனர்.

அதனடிப்படையில் கடந்த 11ம் தேதி வேலூரில் நடைபெறுவதாக இருந்த வேலூர் தமிழ்ச்சங்கத்தின் இரங்கல் கூட்டமும், சென்னையில் நடைபெறவிருந்த பேரணியும் தடை செய்யப்பட்டதுடன், மதுரையில் இன்றைய தினம் நடைபெறவிருந்த விடுதலைச் சிறுத்தைகளின் இரங்கல் கூட்டமும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் தமிழ் மக்களின் மனிதநேய உணர்வுகளை நசுக்குவதாக உள்ளது.

தானாடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பதைப் போல தமிழக முதல்வர் கருணாநிதிக்கு இயல்பாகவே அமைந்துள்ள தமிழ் இனமான உணர்வும், மனிதநேய உணர்வும் இரங்கல் கவிதையாக வெளிப்பட்டதை உலகம் அறியும்.

அத்தகைய மனித நேய உணர்வுள்ள முதல்வர் இரங்கல் ஊர்வலம் நடத்த முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ள பழ.நெடுமாறன், வைகோ, பசீர் உள்ளிட்ட அனைவரையும் நிபந்தனை ஏதுமின்றி அரசு உடனடியாக விடுதை செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

சுப.தமிழ்ச்செல்வன் மறைவால் ஆறாத்துயரத்தில் ஆழ்ந்து கிடக்கும் உலகத் தமிழர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் தமிழ்நாட்டு மக்களின் இத்தகைய இரங்கல் நிகழ்வுகள் அமைந்துள்ளன.

இந்நிலையில் அவர்களும் சிறைப்படுத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளதே என்று உலகத் தமிழர்கள் வேதனைப்பட நேரிடும். எனவே கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் உடனடியாக விடுதலை செய்து உலகமெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கு ஆறுதலை வழங்கிடவும், அமைதியான முறையில் நடைபெறும் இரங்கல் நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கிடவும் வேண்டும் என்று சமத்துவப் பெரியார் கருணாநிதியை தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம் என்று திருமாவளவன் கூறியிருக்கிறார்.

-தட்ஸ் தமிழ்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.