Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றியது விடுதலைப் புலிகளின் போராட்ட வரலாற்றில் மிகப் பெரிய வடு – முஸ்லிம்கள் எல்லோரும் அதை மறப்போம்.. ஆனால் மன்னிக்க முடியாது; ரவூப் ஹக்கீம் Photo of Madawala News Madawala News

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் அடிப்படை அபிலாஷைகளுக்கு முஸ்லிம்கள் முரணாக இல்லை   
யாழ் முஸ்லிம்கள் பற்றிய நூல் வெளியீட்டில் மு.கா. தலைவர் ஹக்கீம்    தெரிவிப்பு

“ஈழத் தமிழர்கள் தங்களுடைய தலைநகராக என்றும் போசித்துக் கொண்டாடுகிற யாழ் நகரில் முஸ்லிம்களும் வாழ்ந்தார்கள்” என்று ஒரு கடந்த கால நிகழ்வாக அதை சொல்லுகிற ஒரு துர்ப்பாக்கியம் நிகழ்ந்தது என்பது எங்கள் எல்லோருக்கும் மிகுந்த வருத்தத்தைத் தருகின்ற விடயம். இன்றும் வாழ்கிறார்கள் என்பதும் அன்றிருந்த ஒஸ்மானியா கல்லூரியின் இன்றைய நிலையை பார்த்தால் அதைவிடவும் கூட வருத்தப்படுகிற ஒரு நிலைமையில் நாங்கள் இருக்கிறோம்.” என்றார் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி.

கொழும்பு தமிழ் சங்கத்தில் அண்மையில் நடைபெற்ற,கலாபூஷணம் பரீட் இக்பால் எழுதிய “முத்திரை பதித்த யாழ் முஸ்லிம்கள் ” என்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய மு.கா தலைவர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது,

ஒஸ்மானியா கல்லூரி என்பது இலங்கை முஸ்லிம்களின் கல்வியின் கலங்கரைவிளக்கம் என்று சொல்லுகிற அளவிற்கு புகழ்பெற்ற ஒரு கலைக்கூடமாக இருந்த இடம்,இன்று குறுகிப்போய் இருக்கிற ஒரு நிலைமையை பார்க்கிறோம்.

ஒஸ்மானியா கல்லூரிக்கு அருகில் ஜின்னாஹ் மைதானம் என்று ஒன்று இருக்கிறது. ஜின்னாஹ் மைதானம் சாமான்யமான  இடமல்ல, முஹம்மது அலி ஜின்னாஹ் வந்துபோன இடம் என்று சொல்லப்படுகிறது. அதனால்தான் அந்த பெயர் அதற்கு சூட்டப்பட்டது என்றும் நாங்கள் அறிந்திருக்கிறோம்.

ஆனால் இந்த சூழலில் கடந்தகால விடயங்களைப் பற்றி பேசுவது மனதிற்கு ஒரு சுமையான விடயம். 1990ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 30 திகதி வடபுலத்திலிருந்து முஸ்லிம்களை விரட்டுவதாக எடுக்கப்பட்ட தீர்மானம் குறித்து இங்கு தலைமை வகிக்கிற சகோதரர் என்.எம் அமீன் , விடுதலைப் புலிகளின் தலைவரிடம், அவர் சமாதான பேச்சுவார்த்தைக்கு வந்த சூழலில் அன்றைய செய்தியாளர் மாநாட்டில் ஒரு பிரபலமான கேள்வியை யெழுப்பினார். அந்த கேள்வி எழுப்பப்பட்டபோது விடுதலைப் புலிகளின் தலைவர் அங்குமிங்குமாக பார்த்துவிட்டு, அவருடைய மதியுரைஞர் அண்டன் பாலசிங்கத்திடம்கூட எதையும் பேசவில்லை,எடுத்ததெடுப்பில் சொன்ன விடயம் “அது ஒரு துன்பியல் சம்பவம்,அதைப்பற்றி நாங்கள் இதற்குமேல் எதுவும் சொல்வதற்கில்லை” என்பது இன்று ஒரு வரலாற்று பதிவாக மாறிவிட்டது.

அன்றிலிருந்தது இன்றுவரை யாழ் முஸ்லிம்கள் எல்லோரும் அதை மறப்போம் ; ஆனால் மன்னிக்கமுடியாது என்ற நிலைப்பாட்டில்தான் இருக்கிறார்கள்.

இதை மாறிமாறி வருகிற தற்கால அரசியல் தலைமைகளும் ஆங்காங்கே  ஏதாவது சொல்லப்போனால் ஏட்டிக்குபோட்டியாக அவர்கள் மீதும் சீறிப்பாய்கிற ஒரு கூட்டம் இன்னும் இருக்கிறது என்பதுதான் கவலைகுரிய விடயம் .

இன்னுமொரு சுவாரஸ்யமான சம்பவத்தை நான் உங்களிடத்தில் சொல்லவேண்டும், வேறு எந்த பொதுமேடையிலும் இதை சொன்னதாக எனக்கு ஞாபகமில்லை, தனிப்பட்டமுறையில் பலரிடம் இதை நான் சொல்லியிருக்கிறேன்.

விடுதலைப் புலிகளின் தலைவரை நான் சமரசப் பேச்சுவார்த்தையில் முஸ்லிம்களின் சார்பில் அவரையும்,அவருடைய குழுவினரையும் சந்திப்பதற்கான ஏற்பாட்டை நோர்வே சமாதான ஏற்பாட்டாளர்கள் செய்த சமயத்தில் எங்களுக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது.

கிளிநொச்சியில் ஒரு சாமான்யமான வரவேற்பு அல்ல. ஒரு நாட்டுத் தலைவரை வரவேற்கிறமாதிரி எங்களுக்கு வீதியெங்கிலும் இரு புறத்திலும் புலிகளுடைய பெண் போராளிகள் அவர்களுடைய மரியாதை நிமித்தம் ,எல்லோரும் அடிக்கிற சலியூட் அல்ல  வலது கையை நெஞ்சுக்கு நேராக செங்குத்தாக வைத்து சலியூட் தெரிவித்தார்கள்.இப்படி  ஒவ்வொரு 50 அடி தூரத்திலும் ஒருவராக நின்று எங்களுக்கு பெரியதொரு மரியாதையளிக்கப்பட்டது.

கைலாகு கொடுத்து விடுதலைப் புலிகளின் தலைவரை நேருக்கு நேர் சந்தித்து பேச்சுவார்த்தை தொடங்கி கிட்டத்தட்ட நான்கு-ஐந்து மணித்தியாலங்கள் நாங்கள் கதைத்திருப்போம். யாரும் எதிர்பார்க்காத மிகப் பெரிய ஒரு விருந்துபசாரமும் நடந்தது. பேச்சுவார்த்தை நடுவில் இன்னுமொரு முக்கியமான விடயமும் நடந்தது. நண்பகல் 12.20 மட்டில் பேச்சுவார்த்தையின் இடை நடுவில் விடுதலைப் புலிகளின் தலைவர் சொன்னார் “இப்பொழுது நாங்கள் பேச்சுவார்த்தையை கொஞ்சம் இடைநிறுத்தி உங்களுடைய தொழுகைக்கான நேரம் வந்துவிட்டது, நீங்கள் தொழுவதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கிறோம், தொழுதுவிட்டு வாருங்கள்” என்று சொன்னார்.

நாங்களும் ஆச்சரியப்பட்டுப்போனோம். எங்களுக்கு தூரபயணம் என்ற காரணத்தினால் கஸ்ர்,ஜம்மு அதாவது சேர்த்தும்,சுருக்கியும் செய்துகொள்ளலாம் என்ற நோக்கத்தில் இருந்த எங்களுக்கு உரிய (வக்து )நேரத்தில் தொழுவதற்கு விடுதலைப் புலிகளின் தலைவர் எங்களிடம் சொல்லுகிறாரே என்று நாங்களும் கொஞ்சம் பிரமித்துப்போனோம்.

தொழுகை முடிந்த பிறகு எங்களுக்கு விமர்சையான ஒரு விருந்துபசாரம் நடந்தது.அதில் எல்லாவிதமான மாமிசங்களும் இருந்தன. எங்களுக்கு கொஞ்சம் தயக்கம் விடுதலைப் புலிகளின் தலைவர் சொன்னார்: “யோசிக்கவேண்டாம்  ,அது உங்களுடைய மார்க்கப்படி நாங்கள் அதை தயார் பண்ணியிருக்கிறோம் ” என்றாலும் கொஞ்சம் தயங்கினோம்,”கொஞ்சம் இருங்கள் அவரைகூப்பிடுங்கோ” என்றதும்,  நீண்ட தாடி,வெள்ளை சேர்ட்டோடு ஒருவர் வந்தார்,  கொஞ்சம் சந்தேகமாக இருந்ததால் நாங்கள் “அஸ்ஸலாமு அலைக்கும்” என்றதும் வலைக்கும் ஸலாம் சேர்’ என்றார். அத்துடன், “நான்தான் சேர், தலைவருடைய சமையல்வேலையெல்லாம் பார்க்கிறேன், இவ்வளவு காலமும் அவரோடுதான் இருக்கிறேன்”என்றார். பிரபாகரனும் “அவர்தான் எனக்கு சமைப்பவர், அவருடைய கைகளால்தான் உங்களுக்கும்  சாப்பாடு என்றார். எங்களுடைய வன்னி அமைச்சராக இருந்த நூர்தீன் மஷூரும் வந்திருந்தார்,அதாவுல்லாஹ் வந்திருந்தார்,மசூர் மௌலானா போன்றவர்கள் இருந்தார்கள்.  நாங்கள் ஐந்து,ஆறு பேர் போயிருந்தோம்.

இவற்றையெல்லாம் நான் சொல்கிறேன் . இன்னுமொரு விடயத்தையும் விடுதலைப் புலிகளின் தலைவர் எனக்கு சொன்னார், தான் இந்தியப் படையினரிடம் தப்பி ஓடி ஒழிந்து அலைந்து திரிந்து கொண்டிருக்கிறபோது சிலாபத்தில் ஒரு முஸ்லிம் குடும்பம் தன்னை பாதுகாப்பாக ஒழித்துவைத்திருந்ததாகவும்,அதைத் தான் வாழ்வில் ஒரு போதும் மறக்கப் போவதில்லை  என்றும் சொன்னார்.

இவற்றையெல்லாம் பார்கிறபோது ஏன் இந்த விதமாக விடுதலைப் புலிகள் நடந்து கொண்டார்கள் என்பதிலும் எங்களுக்கும் கொஞ்சம் சந்தேகம்தான். அதையெல்லாம் கேட்கிற நிலைமையில் இல்லை,நாங்கள் இந்த விடயங்கள் சம்பந்தமாக எங்களுடைய பேச்சுவார்த்தையில் மிக அழுத்தம் திருத்தமாக நாங்கள் சொன்ன விடயம், வடபுலத்து முஸ்லிம்கள் எல்லோரையும் மீளக்குடியமர்வதற்கு விடுதலைப் புலிகள் எல்லாவற்றையும் செய்யவேண்டும்,அது மாத்திரமல்ல அந்த நேரம் நடந்துகொண்டிருந்த இன்னுமொரு மிக கஷ்டமான ஒரு விடயத்தை நாங்கள் விடுதலைப் புலிகளின் தலைவருக்கு சொன்னோம்.

ஏனென்றால், விடுதலைப் புலிகள் வடக்கிலும்,கிழக்கிலும் முஸ்லிம் வியாபாரிகளிடம் வரி விதிக்கிற ஒரு நடைமுறை இருந்தது.ஏனென்றால்,  புலிகள் சமாதான பேச்சுவார்த்தை காலத்தில் எல்லா தமிழ் பிரதேசங்களும் அவர்களுடைய ஆதிக்கம் இயல்பாகவே வந்துவிட்டது என்றொரு நிலையில் ,எல்லா இடத்திலும் வரி வசூலிக்கிற மாதிரி முஸ்லிம்களிடத்திலும் வரி வசூலிக்கிற ஒரு நிலைவரம் இருந்தது ஒரு பெரிய சர்ச்சைக்குரிய விடயமாக இருந்தது. அதை நாங்கள் அவரிடத்தில் எடுத்துச் சொன்னோம் ,அதற்கு விடுதலைப் புலிகளின் தலைவர் சொன்னார்.”நாங்கள் இந்த போராட்டத்திற்கு வரி வசூலிக்கிற ஒரு நடைமுறை இருக்கிறது. வடக்கிலும்,கிழக்கிலும் இருக்கிற பிரதானமான நகரங்களில் நான்கு,ஐந்து தமிழ் கடை இருந்தால் இன்னுமொரு  முஸ்லிம் கடை இடையில் இன்னுமொரு முஸ்லிம் கடை அப்படி இருக்கும் போது தனிய தமிழ் கடைகளுக்கு போய் நாங்கள் வரி வசூலிப்பது எங்களுக்கு கொஞ்சம் சங்கடமான விடயம், எனவே அதை நீங்கள் கொஞ்சம் பொருந்திக்கொள்ளவேண்டும்” என்றார்.

அதற்கு நான் அவரிடத்தில் சொன்ன விடயம், “முஸ்லிம்களை பொறுத்தமட்டில், உங்களுடைய போராட்டம் முஸ்லிம்களுக்காகவும் சேர்த்து செய்யப்படுகிறது என்ற உணர்வு இல்லாத ஒரு சூழல் நிலவுகிறது, இந்த சூழலில் நீங்கள் அவ்வாறு வரி வசூலிப்பது வரியாக இல்லாமல் கப்பமாக பார்க்கப்படுகிற ஒரு நிலைவரம் இருக்கிறது ” என்பதையும் நான் கொஞ்சம் தயக்கத்தோடாவது சுட்டிக்காட்டவேண்டிய ஒரு நிலைவரம் இருந்தது. சொன்ன மாத்திரத்திலேயே “நீங்கள் சொன்னது சரிதான். நாளையிலிருந்து எந்த முஸ்லிம்களிடத்திலும் வரி வசூலிக்கப்படமாட்டாது” என்றார். அப்பொழுது பக்கத்திலிருந்த கிழக்கு தளபதிகள் கொஞ்சம் அதில் விருப்பக்குறைவுமாதிரி தென்பட்டாலும் கூட, தலைவர் சொல்லிவிட்டார் என்றவுடனே வேறு யாரும் மறுத்துப் பேசவில்லை. 

அதற்கு பிறகு தலைவருடைய கட்டளையை மீறி அவ்வாறு சில இடங்களில் நடந்தபோது, நான் அடிக்கடி தமிழ் செல்வனோடு தொலைபேசியில் உரையாடி முறையிடுகிற நிறைய நிகழ்வுகளும் நடந்தன .இவற்றையெல்லாம் நான் ஏன் நினைவுகூறுகிறேன் என்றால் இந்த பின்னணியில் நல்லதொரு உடன்பாடு முஸ்லிம்களுக்கும்,தமிழர்களுக்கும் இடையில் வரவேண்டும் என்பதில் நாங்கள் மிக கவனமாக பல விடயங்களை கையாண்டோம் என்பதற்காகத்தான்.துரதிர்ஷ்ட வசமாக அந்த நிலையெல்லாம் தலைகீழாக மாறி ,இன்று வரலாறு வேறு விதமாக விடயங்களைத் தீர்மானித்துவிட்டது. இவையெல்லாம் நான் எதையும் நியாயப்படுத்துவதற்காக சொல்லுகிற விடயமல்ல, குறிப்பாக முஸ்லிம்களுடைய,வடமாகாணத்தின் வெளியேற்றம் என்பது புலிகளுடைய போராட்ட வரலாற்றில் மிகப் பெரிய ஒரு வடு என்பதை புலிகளே உணர்ந்திருந்தார்கள் என்பது தெட்டத்தெளிவான விடயம் மாத்திரமல்ல ,அடிக்கடி நேர்மையான தமிழ் தலைமைகள்  அதைப்பற்றி பேசுகிறார்கள். நான் இங்கு பெயர் சொல்லி எதையும் சொல்லவரவில்லை.ஆனால் இதுதான் இன்றிருக்கிற நிலைவரம், அதைத்தான் நான் சொன்னேன். முஸ்லிம்கள் மத்தியில் இது மறக்கப்பட்டாலும் மன்னிக்கப்படமுடியாத ஒரு விவகாரம் என்ற உணர்வோடு முஸ்லிம்கள் இருந்துகொண்டிருக்கிறார்கள்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் என்னுடைய மறைந்த தலைவர் காலத்திலிருந்து இன்றுவரை தமிழர்களுடைய போராட்டங்களின் அடிப்படை அம்சங்களில் எங்கு முஸ்லிம்கள் குறித்த விவகாரங்களில் சில முரண்பாடுகள் வருகின்றனவோ நாங்கள் அதைப்பற்றி பேசுகிறபோதும் இவர்களுடைய அடிப்படை அபிலாஷைகளுக்கு முரணாக அது வந்துவிடக்கூடாது என்பதில் நாங்கள் மிகக் கவனமாகத்தான் இருந்து வந்திருக்கிறோம்.

எதிர்வரும்  24 ஆம் திகதி கனடாவில் இருக்கிற எல்லா ஈழத் தமிழ் அமைப்புகள் சார்பிலும் நான் தைப்பொங்கள் விழாவில் பிரதம அதிதியாகவும் அழைக்கப்பட்டிருக்கிறேன். ஆனால் எங்கு போனாலும் இந்த விவகாரங்களில் இருக்கிற சில துல்லியமான உண்மைகளை நாங்கள் மனம் விட்டுபேசாமல் இருப்பது என்பது நாங்கள் செய்கிற மிகப்பெரிய வரலாற்று தவறாகப்  போய்விடும் என்பதற்காகத்தான் இந்த ஒருசில விடயங்களை நான் இங்கு சொல்லிவைக்கிறேன்.  இவற்றை சொன்ன பிறகும்  விமர்சிப்பவர்கள் இரு புறத்திலும் இருப்பார்கள்,  இதுதான் இருக்கிற நடைமுறைச் சிக்கல், இனத்துவ அரசியலில் இப்படியான விவகாரங்களை ஜீரணித்துக்கொள்வது என்பது சில தரப்புகளுக்கு மிகவும் சங்கடமான, கஷ்டமான விவகாரமாகும்.

யாழ்ப்பாண முஸ்லிம்களின் மிகப்பெரும் ஆளுமைகளில் சிலரைப் பற்றிய விடயங்களை  கொண்டாடுகிற  விதமாக இந்த நூல் எழுப்பட்டிருக்கிறது.  அறிஞர் ஏ.எம்.ஏ அஸீஸ் அடிக்கடி என்னுடைய நினைவுக்கு வருபவர்.அவரது புதல்வர் நண்பர் அலி அஸீஸ்  ஒருமுறை என்னை ஏ.எம்.ஏ அஸீஸ் நினைவு பேருரையாற்றுவதற்கு அழைத்திருந்தார்.அந்த உரையை நான் கவனமாக தயார் செய்தபோது ,எனக்கு கைதந்த ஒரு நூல் அவருடைய மகன் வெளியிட்டுவைத்த “ஏ.எம்.ஏ அஸீஸ் செனட் உரைகள்” என்ற ஒரு தொகுப்பு.  இலங்கையின் செனட் சபையின் உறுப்பினராக10,12 ஆண்டுகள் இருந்தவர்.
  ஸாஹிராவின் அதிபராக, இலங்கையின் முதலாவது தெரிவு செய்யப்பட்ட நிருவாக சேவை அங்கத்தவராக என்றெல்லாம் இருந்தவர். அதுவும் நிருவாக சேவை அங்கத்தவர் என்ற பதவியை ஸாஹிரா கல்லூரி அதிபர் பதவியை எடுப்பதற்காக இராஜினாமா செய்தவர், அப்படியான ஒரு மிகப் பெரிய தியாகத்தை யாரும் செய்யமுடியாது.ஸாஸாஹிராவுடைய பொற்காலம் அஸீஸுடைய காலம் என்று அடிக்கடி நாங்கள் கேள்விப்படுகிறோம்; பேசுகிறோம். அவருடைய நினைவு பேருரைக்காக அவருடைய செனட் உரைகளுடைய தொகுப்பை  நான் இன்றும் கூட என்னுடைய கைநூல் போன்று வைத்துக்கொண்டிருக்கிறேன்.அவர் செனட் சபையில் கதைத்த பேச்சுக்களுடைய கனதி என்பது என்னைப்பொறுத்தவரையில் அவருக்கு முன்பும்,பின்பும் எவருடைய பேச்சுக்களுக்கும் எந்தத்தரத்திலும் குறைவில்லாததாக, தரமான ஆய்வின் அடிப்படையிலான உரைகளை அவர் நிகழ்த்தியிருந்தார் என்பதை வாசிப்பவர்கள் புரிந்துகொள்ளலாம்.

அவர் இலங்கை வை.எம்.எம்.ஏ இயக்கத்துடைய ஸ்தாபகர் .அவர் மடவளைக்கு வந்து அந்த காலத்தில் ,50 களில் என நினைக்கிறேன்.  அதன்   கிளையை அங்கு ஆரம்பித்தபோது என்னுடைய தகப்பனாரும்  அதனுடைய செயலாளராக இருந்திருக்கிறார் என்பது எனக்கு பெருமைக்குரிய விடயம்.

அதேபோன்று, நான் இன்னும் பெருமைப்படுகிற விடயம் அதாவது யாழ் மக்கள் பெருமைப்பட்டுக்கொள்கிற விடயம் அடுத்த நிருவாக சேவை உத்தியோகத்தர் மறைந்த மக்பூல் . மக்பூல் அவர்கள் நான் கல்வி கற்ற கலகெதர ஜப்பார் மத்திய வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையாற்றியவர் என்பதும் எனக்கு பெருமை தருகிற அடுத்தவிடயம். ஏன் இவர்களையெல்லாம் நாங்கள் கொண்டாடுகிறோம். இப்படி கொண்டாடப்படக்கூடிய அந்தஸ்தில் இருக்கிற மிகப் பெரிய ஆளுமைகளை உருவாக்கிய ஒரு மண்  இன்று வெறிச்சோடிப்போய் இருக்கிறது என்பது மிகவும் கவலைக்குரிய விடயம். 

இதற்கு எப்படி உயிரோட்டம் அளிப்பது?

அன்று யாழ் முஸ்லிம்கள் வியாபாரத்தில் உச்சநிலையில் இருந்தார்கள் என்பது மட்டுமல்ல ,சில துறைகளில் அவர்கள்தான் அங்கு யாழ்ப்பாணத்தில் தையல் கடை என்றால் எல்லாம் முஸ்லிம்கள்தான்.இரும்பு வியாபாரிகள் என்றால் முஸ்லிம்கள்தான். இப்படியாக  அவர்களுக்கென்றே  தனித்துவமான வியாபார நோக்கங்கள் இருந்தன. செயல்பாடுகளும் இருந்தன.

இவற்றையெல்லாம் பெருமையாகப் பேசுகிறபோது, நாங்கள் யாழ்ப்பாணம் போகிறபோது பொம்மைவெளிக்கு போனால் மூர் வீதிக்குபோனால் அங்கிருக்கிற கட்டிடங்கள்  மீண்டும் உயிரோட்டமாகத் தென்பட்டாலும் இடைக்கிடையில் பாலடைந்த இல்லங்களைப் பார்க்கிறபோது அவை ஒரு தனியான வரலாற்றைச் சொல்லிக் கொண்டிருக்கின்றன.
எங்களுக்கு அந்த வலியைச் சுமந்த உணர்வு மற்றும் அந்த கொடூரமான ஓக்டோபர் 1990 இன் நினைவுகள் இன்றும் வருகிறமாதிரிதான் நாங்க மூர் வீதிக்கு போனால்,பொம்மைவெளிக்கு போனால் எங்களுக்கு வருகிறது என்பது ஒரு விடயம். அனால் இவற்றையெல்லாம் அந்த விவகாரங்களைக்கூட இங்கு எவற்றையும் நண்பர் பரீட் இக்பால் சொல்லியிருக்கமாட்டார் ஆனால் சொல்லியாகவேண்டும்.ஏ,னென்றால் அதை தவிர்த்து நாங்கள் யாழ் முஸ்லிம்களின் வரலாற்றைப் பேசமுடியாது. அந்த மண் முஸ்லிம்கள் வாழ்ந்த மண் மீண்டும் உயிர்த்தெழவேண்டும் .அதற்கு    இன்றும் கூட பலவிதமான சிக்கல்கள் இருந்துகொண்டிருக்கின்றன. அவை நிருவாக ரீதியாக இருந்தாலும் சரி, அரசியல் ரீதியாக  இருந்தாலும் சரி சிக்கல்கள் இல்லாமலில்லை.

மீள்குடியேற்றம் என்று பேசுகிறபோது  யாழ் முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்திற்கு விசேடமான மீள்குடியேற்ற செயலணி ஒன்றை அமைக்கிற பொறுப்பும்,கடமையும் எங்கள் தரப்பிலிருந்து மாத்திரமல்ல ,தமிழர் தரப்பிலிருந்தும் வரவேண்டும்.

அவற்றையெல்லாம் தாண்டிப்போய்,  சந்ததிகள் பல கடந்து விட்ட நிலையில் யாழ் முஸ்லிம்கள் அங்குமிங்குமாக சில்லாங்கொட்டை சிதறின மாதிரி வாழுகின்ற ஒரு நிலைமையில் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள்  அடைவு  எதிலும் பெரிதாக குறைந்துபோய்விடவில்லை என்றார்.

https://madawalaenews.com/35691.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.