Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறு கதை - 198 / "காதலர் தினம் [VALENTINE DAY]" [மூன்று பகுதிகள்]

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறு கதை - 198 / "காதலர் தினம் [VALENTINE DAY]" / பகுதி 1

அன்று இலண்டன் பல்கலைக்கழக வளாகத்தில், கடுமையான குளிர் காற்று, மனிதர்களின் முகங்களை சிவப்பாக்கியிருந்தது. குளிர் வெறும் உடலுக்கு மட்டும் அல்ல; அந்த நாளில் மனங்களுக்குள் கூட ஒரு எதிர்பார்ப்பு நடுங்கிக் கொண்டிருந்தது. அது 14.02.2025, காதலர் தினம் [வாலண்டைன் டே]. உலகம் முழுக்க காதல் ஒரு நாளுக்குள் அடைக்கப்பட்டு கொண்டாடப்படும் நாள். வேடிக்கையாக இல்லையா? தந்தையர் தினம், தாயார் தினம் எனற வரிசையில், இன்று காதலர் தினம்.

"நாளைத் தேர்ந்து எடுத்து
அன்பு செய்தோரல்ல அவர்கள்;
நாம் பிறந்த நொடியிலே
அன்பு நம்மோடு பிறந்தது!

நன்றி சொல்லாத நாளிலும்
தாயின் கரம் குறையாது;
நினைவு மறந்த காலத்திலும்
தந்தையின் நிழல் விலகாது!

நாட்காட்டி எண்ணும் உறவு அல்ல
நாடிதுடிக்கும் உயிர் உறவு அது;
'ஒரு நாள் கொண்டாடலாமா?' எனில் —
ஒவ்வோர் நாளும் அவர்தம் திருநாளே! "

அம்மா, அப்பா— இவர்கள் நாள் தேர்வு செய்து நம்மை நேசிக்கவில்லை. நாம் அவர்களை நாள் தேர்வு செய்து நினைக்க வேண்டிய அவசியமும் இல்லை. அம்மாவின் அன்பு – நாம் நன்றி சொல்லாத நாளிலும் தொடர்கிறது. அப்பாவின் பொறுப்பு – நாம் மறந்த நாளிலும் நின்று கொண்டே இருக்கிறது. அவர்கள் உறவு நாட்காட்டியில் [காலண்டரில்] அல்ல, உயிரில் எழுதப்பட்ட உறவு. அதனால் “ஒரு நாள் மட்டும் கொண்டாடலாமா?”

அவ்வாறே காதல் – ஏன் ஒரு “தினம்” ஆனது? இங்கேதான் வேடிக்கை தொடங்குகிறது. காதல்— ஒரு காலத்தில் வாழ்க்கை முறை. இன்று அது ஒரு நிகழ்ச்சி. சங்கக் காலத்தில் காதல் என்பது கண்களில் தொடங்கி மனதில் பதிந்து வாழ்க்கையோடு கலந்து விடும் ஒன்று. அப்போது “காதலர் தினம்” என்று ஒன்றே இல்லை; ஏனெனில் ஒவ்வொரு நாளும் காதலின் நாளே!

அப்படி என்றால், இன்று காதலர் தினம் ஏன்? ஏனெனில் இன்று காதல் நிலைக்காத ஒன்றாக மாறிவிட்டது. நிலைக்காததை நினைவூட்ட ஒரு நாள் தேவைப்படுகிறது. மறந்துபோகும் ஒன்றுக்கு நாள்காட்டி வேண்டும். அதனால்த் தான்— "காதல் நினைவு நாள்", "பரிசு பரிமாறும் நாள்", "பொதுவெளியில் காட்சிபடுத்தும் நாள்" என்று காதல் ஒரு காலண்டர் நிகழ்வாக [“Love reminder day” , “Gift exchange day”, “Public display day” என்று காதல் ஒரு calendar event] மாறிவிட்டது.

இங்கேதான் உண்மையான வேடிக்கை ஆரம்பிக்கிறது. அம்மாவுக்கு ஒரு நாள். அப்பாவுக்கு ஒரு நாள். காதலுக்கும் ஒரு நாள். ஆனால் யோசித்துப் பாருங்கள்— அம்மா, அப்பா நம்மை விட்டு போக முடியாத உறவுகள். காதல்? போய்விடக்கூடிய உறவு. அப்படியிருக் போகக்கூடிய உறவுக்குத்தான் அதிக விளம்பரம். அதிக நிகழ்ச்சி. அதிக அலங்காரம். இதுதான் வேடிக்கை.

சங்கத் தலைவி இப்படிச் சொல்வாள்: “அறத்தோடு நிற்றல் காதல்.” அதாவது— காதல் என்பது ஒரு நாள் உணர்ச்சி அல்ல, ஒரு நெறி. நாள் வேண்டிய காதல்— அதிகம் நீடிக்காது. நெறியாக வாழும் காதல்— நாள் தேவைப்படாது. அதனால்… காதலர் தினம் தவறில்லை. கொண்டாடுவதும் தவறில்லை. ஆனால் கேள்வி இது: நீ காதலை கொண்டாடுகிறாயா? அல்லது காதலை மறக்காமல் இருக்க ஒரு நாள் வைத்திருக்கிறாயா?

இதற்குப் பதில்தான் நீ காதலன்தானா அல்லது காதலின் பயனாளியா என்று தீர்மானிக்கிறது. அதனால்த்தான்— இது சற்றே வேடிக்கையாக இருக்கிறது. யாழினியன் — அந்த வளாகத்தின் ஓரத்தில் தனியாக நின்றபடி காதலர் தினம் பற்றி சிந்தித்துக் கொண்டு இருந்தான்.

“யாழினியன்… நீ ஏன் இப்படி தனியா நிற்கிற?” என்று ஒரு நண்பன் சிரித்துக் கொண்டே கேட்டபோது, “காதலைத் தேட வரல; நடக்குது என்றா நடக்கட்டும்,” என்று அமைதியாகச் சொன்னான். அப்போதுதான் கூட்டத்துக்குள் ஒரு வெண்ணிலா, தரையில் நகர்ந்து வந்தது போல, அவன் உணர்ந்தான். அவள் வந்தாள்.

இதழினி — அவள் பெயர் என்று சொல்லப்படும் முன்பே, அவள் இருப்பு யாழினியனின் மனதில் பதிந்துவிட்டது. “Hi… I’m Idhazhini.” [ஹாய், நான் இதழினி] என்றாள் அவள். அவள் சொன்ன அந்த வாக்கியம் சாதாரணமாக இருந்தாலும் அந்தச் சிரிப்பு… அழகுக்காக அல்ல. நேர்மைக்காக இருந்தது போல் அவன் மனது கருதியது. அதனால்த்தான் அவனுக்கு அவளை உடனே பிடித்தது.

யாழினியன் உடனே, எந்தத் தாமதமும் இன்றி: “நான் யாழினியன்.” என்றான். அந்தச் சொல்லில் பெருமை இல்லை. மறைவும் இல்லை. ஒரு மனிதன் தன்னை வெளிப்படுத்தும் அளவுக்கு மட்டும் இருந்தது. “Are you doing PhD?” ["நீங்க முனைவர் பட்டம் படித்துக் கொண்டிருக்கிறீர்களா?"] அவள் கேட்டாள். “Just started.” (இப்பொழுது தான் ஆரம்பித்தேன்) அவன் பதிலளித்தான். அவள் கண்களில் ஒரு மெல்லிய மரியாதை தெரிந்தது. அந்த மரியாதைதான்— அவர்களுக்குள் வந்த முதல் நெருக்கம்.

அன்று Valentine Day [காதலர் தினம்] கொண்டாட்டம். இசை, விளக்குகள், சிரிப்புகள். சிவப்பு நிறம் எல்லா இடங்களிலும். யாரோ யாரையோ கட்டிப் பிடித்திருந்தார்கள். யாரோ யாருக்கோ காதலை அறிவித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் இதழினியும் யாழினியனும் அதிகம் பேசவில்லை. பேசாத அந்த இடைவெளியே அவர்களை அருகில் வைத்திருந்தது. பிரிய மனம் வரவில்லை. அதனால் அவர்கள் அருகில் அருகிலேயே இருந்தார்கள்.

வார்த்தைகள் தோற்றுப்போகும் இடத்தில்,
நம் மௌனம் பேசத் தொடங்குகிறது...
சிவப்பு நிறம் சூழ்ந்த இந்த இரவில்,
உன் அருகாமை தரும் கதகதப்பில்
காலம் உறைந்து நிற்கிறது.

யாரோ யாருக்கோ காதல் சொல்லட்டும்,
யாரோ யாரையோ கட்டிப் பிடிக்கட்டும்...
ஆனால், நம் இதயங்களின் துடிப்பு
இந்த நிசப்தத்தில் தான்
ஒன்றாகச் சங்கமிக்கிறது.

பிரிய மனம் இல்லை நமக்கு,
பேசத்தான் அவசியம் இல்லை...
அருகில் அமர்ந்திருக்கும் இந்த மௌனமே,
ஆயிரம் கவிதைகளைவிட
அழகாக நமக்குள் காதல் சொல்கிறது!

யாழினியன் அவளைப் பார்க்கும்போது, அவன் நினைவில் ஒரு சங்கத் தலைவி வந்தாள். “காமம் கலந்த காதல் உண்டு எனின், நன்றுமன்.” வெறும் காமமல்ல— காதல் கலந்த காமம் என்றால் அது நன்று என்று சொன்ன அந்தப் பெண், இன்றைய இந்தக் கொண்டாட்டத்தைப் பார்த்திருந்தால் என்ன சொல்வாளோ? அவன் மனம் உடனே மறுத்தது. “அது எல்லாம் உறுதியான பிணைப்பு வந்த பின்பே,” என்று அவன் உள்ளம் அவனுக்குச் சொன்னது.

ஆனால் மற்றவர்களின் கவனம் அவர்களிடமிருந்து விலகிய ஒரு நொடி— இதழினி அவன் கையை மெல்ல வருடினாள். அது பிடித்தல் அல்ல. ஒரு அழைப்பும் அல்ல. “நான் இங்கே இருக்கிறேன்” என்ற அமைதியான உறுதி. அவள் தன்னுடன் அவனை மெல்லக் கட்டிப்பிடித்தாள். அவனின் காதருகே ஏதோ கிசுகிசுத்தாள். அந்தச் சொற்கள் தெளிவாகக் கேட்கவில்லை. ஆனால் அவனின் மனம் முழுவதும் அது கேட்டது.

நன்றி

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

பகுதி 2 தொடரும்

துளி/DROP: 2027 [சிறு கதை - 198 / "காதலர் தினம் [VALENTINE DAY]" / பகுதி 1

https://www.facebook.com/groups/978753388866632/posts/33739053352409879/?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறு கதை - 198 / "காதலர் தினம் [VALENTINE DAY]" / பகுதி 2

14.02.2025, காதலர் தின கொண்டாட்டத்தின் முடிவில், அவனுக்கு ஒரே நேரத்தில் இச்சையும் வந்தது. அச்சமும் வந்தது. அதனால்த்தான் கொண்டாட்டம் முடியும் தருவாயில் அவன் மெதுவாகச் சொன்னான்: “காதல் மெதுவாக வளரணும்.” அந்தச் சொல்லில் ஒரு எல்லை இருந்தது. ஒரு பொறுப்பு இருந்தது.

இதழினி சிரித்தாள். மறுப்பு இல்லை. ஏமாற்றமும் இல்லை. “அதுதான் எனக்கும் பிடிக்கும்,” என்றாள். அந்த ஒரு வரியில், Valentine Day [வேலன்டைன் நாளின்]-யின் எல்லா அலங்காரங்களும் மெல்ல அணைந்தன. அந்த இரவு அவர்கள் காதலர்கள் ஆகவில்லை. ஆனால் காதல்— அவர்களைச் சோதிக்கத் தொடங்கியது.

அந்த நாளிலிருந்து அவர்களின் நட்பு நாட்கள் சிவப்பு ரோசாவாக அல்ல — மெதுவாக மலரும் காட்டு மலர்களாக மலரத் தொடங்கின. நேரம் பத்தாத நாட்களாக நகர்ந்தது. பேசுவதற்கு சொற்கள் குறைந்தன; பார்வைகள் மட்டும் ஒருவரை ஒருவர் நிறைவாக ரசித்தன. இலண்டன் பல்கலைக்கழக நூலகம், சின்ன சின்ன காபி கடைகள், தேம்சு நதிக்கரை— அவை இனி இடங்கள் இல்லை. அவை அவர்களின் உலகங்கள்.

இலண்டன் நூலகத்தில், ஒரே மேசையின் எதிர் முனையில் அமர்ந்து புத்தகம் வாசிப்பதுபோல் நடித்துக் கொண்டு, ஒருவரை ஒருவர் பக்கவாட்டுப் பார்வையில் ரசித்துக் கொண்டார்கள். அவர்கள் மெல்ல மெல்ல மற்றவரின் கைகளைப் பிடிக்கத் தொடங்கினார்கள். ஆனால் அவசரப்படவில்லை.

“நீ பயப்படுறியா?” என்று அவள் ஒருநாள் கேட்டபோது, “இல்ல… நான் காதலை காப்பாற்ற முயற்சிக்கிறேன்,” என்றான். அவள் பதில் சொல்லவில்லை. அந்த மௌனம் அவனுக்குள் ஒரு சங்கக் கவிதையை எழுப்பியது:

யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.

சிவந்த நிலத்தில் விழுந்த மழைநீர் போல, அன்பு கொண்ட இரு நெஞ்சங்களும் எவ்வித முயற்சியும் இன்றி ஒன்றாகக் கலந்துவிட்டன. இலண்டன் குளிர்காலம் நண்பன் - நண்பிகளை நெருக்கமாக்கி கலந்து போல.

ஒரு மாலை, நூலகத்திலிருந்து வெளியே வந்தபோது, “குளிரா?” என்று அவன் கேட்டான். “சிறிது,” என்றாள். எந்த வார்த்தையும் இல்லாமல், உடனே அவன் தன் மேலங்கியின் [கோட்டின்] முனையை அவள் தோள்மேல் சற்றே இழுத்தான். அவள் தடுக்கவில்லை. அந்தச் சின்னச் செயலில் அவன் நெஞ்சில் ஒரு வரி ஒலித்தது: “மெல்ல மெல்லக் கலத்தல் காதல்.”

மெல்லமெல்ல அருகில் வந்து
மென்மையான கையைத் தொட்டு
அள்ளிஅள்ளி இருவரும் அணைக்க
மெல்லமெல்லக் கலத்தல் காதல்

ஒரு நாள் தேம்சு ஆற்றங்கரையில் [Thames river] அமர்ந்திருந்தார்கள். நீர் ஓடியது. ஆனால் அவர்களுக்கு நேரம் நின்றுவிட்டது; ஓடவில்லை. அவள் திடீரென அவன் தோளில் தலையைச் சாய்த்தாள். “பேச வேண்டாமே?” என்றாள். “வேண்டாம்,” என்றான். அந்த மௌனம் எந்த முத்தத்தையும் விட அதிக நெருக்கமானது. ஒரு சங்கத் தலைவி அதைப் பார்த்திருந்தால், “மௌனமும் ஒரு மொழிதான்” என்றிருப்பாள்.

ஒரு இரவு அவள் மனம் உடைந்திருந்தது. “பயமா இருக்கு… எல்லாம் மாறிடுமோன்னு,” என்றாள். அவன் அவள் கையைப் பிடித்தான்— இறுக்கமாக இல்லை; விடாமல் மட்டும். “மாறும் .. ஆனா உண்மை மாறாது,” என்றான். அவள் கண்களில் நீர் திரண்டது. அவன் கையில் அவள் விரல்கள் இன்னும் இறுகின. அந்த நிமிடம் காதல் உடல் அல்ல
என்று அவன் உணர்ந்தான். அது — பாதுகாப்பு. "அஞ்சுதல் நீங்கி அணைவதே அன்பு."

காதலில் சில வாக்குறுதிகள் சொல்லப்படுவதில்லை. அவை எழுதப்படுவதும் இல்லை. ஆனால் அவை உடைக்கப்படும் போது தான் அதன் இருப்பு தெரியவருகிறது.

யாழினியன் உறுதியாய் இருந்தான். ஆனால் இதழினி எதையும் உறுதியாகச் சொல்லவில்லை. அவள் அவனின் பெண் நண்பியாக [girl friend] ஆக இருந்தாள். நெருக்கமாக. அன்புடன். பயமின்றி. ஆனால்—“நாளை திருமணம்.” “என்றென்றும் நீ மட்டும்.” “நாம் பிரியவே மாட்டோம்.” இந்த மூன்றிலும், அவள் ஒரு சொல்லையும் வாய்விட்டுச் சொல்லவில்லை. யாழினியன் இவற்றை வெளிப்படையாகக் கேட்கவும் இல்லை. மெல்ல மெல்ல மலரட்டும் என்று காத்திருந்தான்.

ஆனால் ஒன்றை மட்டும் இருவரும் மௌனமாகச் செய்தார்கள்— ஒருவரின் பயத்தையோ தடுமாற்றத்தையோ மற்றொருவர் கேலி செய்யவில்லை.

ஒரு மாலை, சின்ன காபி கடை ஒன்றில் இரண்டாவது காபி அருந்திக்கொண்டு இருந்தார்கள். அவன் திடீரெனக் கேட்டான்: “இதழினி… நாம் இப்படியே இருந்தா போதுமா?” அந்தக் கேள்வியில் ஆசை இருந்தது. குற்றச்சாட்டு இல்லை. அதில் இருந்தது — பயம்.

அவள் உடனே பதில் சொல்லவில்லை. ஜன்னல் வழியே வெளியே பெய்துகொண்டு இருந்த மழையைப் பார்த்தாள். “இப்படியே இருந்தது போதும்னு சொல்ல நான் துணியல,” என்று மெதுவாகச் சொன்னாள். “ஆனா பின்னாடி அப்படியே இருக்க மாட்டோம் என்று சொல்லவும் எனக்கு மனசில்லை.”

அவன் சிரிக்கவில்லை. அவன் அழவும் இல்லை. “அப்போ நாம என்ன?” என்றான். “நாம்… உண்மை சொல்லிக் கொண்டிருக்கிறோம்,” என்றாள். அந்தப் பதில் அவனுக்குப் புரிந்தது. ஆனால் அது ஆறுதலாக இல்லை.

சிலருக்கு காதல் ஒரு நாள்.
சிலருக்கு அது வாழ்நாள்.

சிலருக்கு அது கொண்டாட்டம்.
சிலருக்கு அது பொறுப்பு.

யாழினியனுக்கு —
காதல் ஒரு மலர் அல்ல;
அது ஒரு விதை.
மண்ணுக்குள் மெதுவாகப் பதிந்து
வேர் பிடிக்க வேண்டிய ஒன்று.

இதழினிக்கு —
காதல் ஒரு உணர்வு.
ஆனால் வாழ்க்கை ஒரு தீர்மானம்.

அவள் அவனை நேசித்தாள்.
ஆனால் “என்றென்றும்” என்று சொல்லத் தயங்கினாள்.

அவன் அவளை காத்திருந்தான்.
ஆனால் “இப்போதே” என்று வற்புறுத்தவில்லை.

அவர்கள் காதலில் இருந்தார்கள்.
ஆனால் ஒரே வேகத்தில் இல்லை.

சிலருக்கு காதல் பொழுதுபோக்கு.
சிலருக்கு காதல் வாழ்வின் நாடி.

யாழினியனுக்கு — அது உயிர்.
இதழினிக்கு — அது உண்மை,
ஆனால் இன்னும் தீர்மானமாகாத உண்மை

நன்றி

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

பகுதி 3 தொடரும்

சிறு கதை - 198 / "காதலர் தினம் [VALENTINE DAY]" / பகுதி 2

https://www.facebook.com/groups/978753388866632/posts/33774366895545191/?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறு கதை - 198 / "காதலர் தினம் [VALENTINE DAY]" / பகுதி 3

ஒரு முறை, அவன் அவள் முகத்தைப் பார்த்து சொன்னான்: “இன்றைக்கு எல்லாருக்கும் காதல் வேணும். ஆனா அதை நிரந்தரமாக்க யாருக்கும் பொறுமை இல்லை.” “சங்கக்காலத்துல காதலர்கள் ‘உறுதி’யை வாக்கியமாக எதிர்பார்க்கல. நடத்தையில்தான் பார்த்தாங்க.” அவன் நினைவில் ஒரு வரி எழுந்தது: “அறம் இனிது ஆயினும் காதல் இனிது.” அதாவது— அறம் உயர்ந்தது. ஆனால் மனம் இணையும் காதல் அதையும் தாண்டி இனிமை தரும்.

“அறம் காக்கணும்னு சொல்லி
காதலை கொல்லல.
காதல் காக்கணும்னு சொல்லி
அறத்தை மறக்கல.”

அவள் மெதுவாகச் சொன்னாள்: “நீ சொல்றதெல்லாம் அழகா இருக்கு. ஆனா இன்றைக்கு—” அவள் வாக்கியத்தை முடிக்கவில்லை. அந்த சொல்லப்படாத வார்த்தை யாழினியனின் நெஞ்சில் கேள்வியாக நின்றது. அவன் அவள் தோளருகே சற்றே நகர்ந்து அமர்ந்தான். “எனக்குத் தெரியல நாளை என்ன ஆகும்னு,” என்றான்.
“ஆனா இன்னைக்கு நீ இங்கே இருக்கிறதுல நான் உண்மை.” அவன் அவளை நீண்ட நேரம் பார்த்தான். அவள் எதோ சிந்தனையில் மூழ்கியிருந்தாள்.

2025 ஆம் ஆண்டு இறுதி நாளில், மத்திய லண்டன் ஒரு மென்மையான மழையில் நனைந்து கொண்டிருந்தது. குளிர் கடுமையாக இல்லை; ஆனால் காற்றில் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. புத்தாண்டு—2026—பிறக்க இன்னும் சில மணித்துளிகள் மட்டுமே.

இரவு பன்னிரண்டு மணிக்கு, தேம்ஸ் நதிக்கரையிலும் லண்டன் ஐயின் [Thames River & London Eye] அருகிலும் வானவேடிக்கை வெடிக்கப் போகிறது என்று நகரமே அறிந்திருந்தது. வழக்கமாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் திரளும் அந்த இடத்திற்கு அவர்கள் போகாமல், சனநெரிசல் இல்லாமல், சத்தமில்லாமல், நீரின் ஓசையோடு புத்தாண்டை வரவேற்க விரும்பி, வேறு ஒன்றைத் தேர்ந்தெடுத்தார்கள்— தேம்ஸ் நதியில் ஒரு படகுச் சவாரி.

படகு மெதுவாக நகர்ந்தது. விளக்குகளின் பிரதிபலிப்பு நீரில் குலுங்கியது. மழைத் துளிகள் தேம்ஸுடன் கலந்தன; அவள் மூச்சு அவன் அருகில் கலந்தது. அவள் மெதுவாகக் கேட்டாள்: “நாம் இப்படியே இருக்கலாமா?” சிறிது இடைவெளியின் பின் மீண்டும் கேட்டாள்: “ஒருவரை ஒருவர் மாற்ற முயலாமல்…”

அவன் பதில் சொல்லவில்லை. தலையசைத்தான். அந்த மௌனம் தான் அவன் சம்மதம். அவன் அவள் நெற்றியில் மென்மையாகத் தொட்டு நின்றான். அது உரிமை அல்ல. அது உறுதி.

பன்னிரண்டு மணி அடித்தது. வானம் ஒளியால் பிளந்தது. லண்டன் ஐ [London Eye] சுற்றிக்கொண்டே இருந்தது— ஆனால் அவனுக்கு உலகமே நின்றுவிட்டது போல இருந்தது.

2026 தொடங்கியது. புத்தாண்டு விடியலில், அவள் அவன் தோளில் சாய்ந்தபடி சொன்னாள்: “அடுத்த காதலர் தினத்தில்…” சிறிது தயக்கம்.“எமது நட்பின் முதல் ஆண்டு நினைவில் … நம் நண்பர்கள் முன்னாடி … நமது காதலை அதிகாரப்பூர்வமாக்கலாமா?” அவனுக்குப் பேச வார்த்தைகள் வரவில்லை. கண்கள் மட்டும் பதில் சொன்னது.
அவன் தலையசைத்தான்.

எதற்காக இதுவரை காத்திருந்தானோ — அது தேனாக அவள் வாயிலிருந்து வந்தது. “நீ எனக்கு இப்பவும், எப்பவும் ஒருத்திதான்.” , அவளை அவன் முதல் முறையாக ஆரத்தழுவினான். அந்த அணைப்பு ஆசை அல்ல. அது அவன் மனம் நிரந்தரமாக விரும்பிய உணர்வு. அவள் சொன்னாள்: “நானும்.”

ஆனால்… 14.02.2026க்கு ஒரு வாரம் முன்பு, அவள் வழக்கத்தைவிட அமைதியாக இருந்தாள். அவள் சிரிப்பு குறைந்தது. அவள் வரவு எப்போதாவது ஒருக்க என ஆகியது. பேசும் வார்த்தைகள் கூட குறுகின. “நீ மாறிட்ட மாதிரி இருக்கு,” என்றான் அவன். “இல்ல,” என்றாள். ஆனால் அவள் குரல் நடுங்கியது.

அன்று அவள் அவன் கையை வழக்கத்தைவிட நீண்ட நேரம் பிடித்திருந்தாள். அந்தப் பிடிப்பு பாதுகாப்புக்கானது அல்ல விடை சொல்லும் பிடிப்பு என்று அப்போது அவனுக்குத் தெரியவில்லை. சங்கக் கவிதை எச்சரித்தது: “பிரியும்நாள் அணைதல் அதிகம்.” அவன் அந்த வரியை மனதிலிருந்து தள்ள முயன்றான். ஏனெனில் அவன் காதலை நம்பினான். வாக்குறுதிகளைவிட, நடத்தை மீது.

14.02.2026. காதலர் தினம். அவன் நேரத்துடன் வந்தான். தேர்ந்தெடுத்த உடை—அவள் ஒருநாள் “உனக்கு இது நல்லா இருக்கு” என்று சொன்ன அதே நிறம். முகத்தில் மகிழ்ச்சி. கண்களில் எதிர்பார்ப்பு. நேரம் ஓடியது. நிமிடங்கள் மணிநேரங்களாக மாறின. அவள் வரவில்லை.

போன் பண்ணினான் — பதில் வரவில்லை என்றாலும் மனம்—இன்னும் நம்பிக்கையுடன் காத்திருந்தான் .“Girls are always late,” [“பெண்கள் எப்போதும் தாமதமாகத்தான் வருவார்கள்,”] என்று நண்பன் நகைச்சுவையாகச் சொன்னான். அவன் சிரிக்கவில்லை. காதல் நகைச்சுவை அல்ல.

அப்போது அவள் வந்தாள். அவனின் முகம் மலர்ந்தது. அடுத்த நொடியில் — அந்த மலர் உதிர்ந்தது. அவள் அவன் கையைப் பிடிக்கவில்லை. வேறு ஒருவனின் கையைப் பிடித்தபடி வந்தாள். பணம் தெரிந்த உடை. அதிகாரம் பழகிய நடை. கண்களில் —திட்டமிட்ட வாழ்க்கையின் அமைதி. “யாழினியன்…” அவ்வளவுதான். “இவன்?” அவன் கேட்டான். அவள் பதில் சொல்லவில்லை. அந்த மௌனத்தில் ஒரு சங்க வரி அவன் உள்ளத்தை கிழித்தது: “அறத்தொடு நிற்றல் காதல்.”

“நான் உனக்கு என்ன குறை செய்தேன்?” அவன் கேட்டான். அவள் அவனை நேருக்கு நேர் பார்க்கவில்லை. கண்கள் தரையில் இருந்தன. உண்மை மேலே வர தயங்கும் போது கண்கள் எப்போதும் கீழே தான் பார்க்கும். அது அவனுக்கு நன்றாகப் புரியும்

“இது… practical,[நடைமுறை] ” அவள் மெதுவாகச் சொன்னாள். அந்தச் சொல்லே— காதலின் மரணம். சங்கத் தலைவி இப்படி சொல்லியிருப்பாளா? இல்லை. அவள் சொல்லியிருப்பாள்:
“உயிரினும் சிறந்தது காதல்.”

அவள் தொடர்ந்தாள்: “Feelings are fine. But life needs stability.” [உன்னுடன் என் காதல் உணர்வுகள் பரவாயில்லை. ஆனால் வாழ்க்கைக்கு நிலைத்தன்மை தேவை.] அவன் சிரித்தான். அது மகிழ்ச்சி அல்ல. புரிதலின் கசப்பு. “Stability-யை [ஸ்திரம்] வாங்கலாம்,” “ஆனா காதலை வாங்க முடியாது.” என்றான். அவளுடன் வந்த அவளின் இன்றைய காதலன் சொன்னான்: “Love is good. But marriage needs sense.” [காதல் நல்லதுதான். ஆனால் திருமணத்திற்குப் புத்தி தேவை.] அதில் இன்றைய உலகத்தின் குரல் இருந்தது.

அவன் காதலை அவமதிக்கவில்லை. ஆனால் காதலை வாழ்க்கையின் மையத்திலிருந்து மெல்ல நகர்த்தினான்.

எனினும் யாழினியின் அதற்குப் பதில் சொல்லவில்லை. அதற்கு அவனுக்கு அவசியமும் இல்லை. ஏனெனில் சில உண்மைகள் வாதத்தில் வாழ்வதில்லை.

அந்த இரவு அவன் தனியாக நடந்தான். காதல் தோற்றதா? இல்லை. காதல் அவனை விட்டு போகவில்லை. அதைப் பயன்படுத்தியவர்கள் விலகினார்கள். அவ்வளவுதான்!

அப்போது அவனுக்குப் புரிந்தது — சங்கக் காலத்தில் காதல் ஒரு வாழ்க்கை. இன்றைய காலத்தில் அது ஒரு நிகழ்ச்சி. அப்போது காதல் உயிரோடு இணைந்தது. இன்று வசதியோடு பேச்சுவார்த்தை நடத்துகிறது.

காதலர் தினம் ரோஜா வாங்கும் நாள் அல்ல. அது — நீ உன் நெஞ்சத்தோடு உண்மையாக நிற்கிறாயா என்று நீயே உன்னை கேட்கும் நாள். சிலர் கொண்டாடுவார்கள்.

சிலர் பயன்படுத்துவார்கள். ஆனால் சிலர் — கைவிடப்பட்டாலும் காதலை கைவிடமாட்டார்கள். அவர்கள்தான் சங்கக் காலமும் இன்றைய காலமும் ஒரே சொல்லில் சொல்லும் உண்மையான காதலர்கள்.

போகும் வழி எனக்கு நீண்டது
போனவள் நினைவு நெஞ்சை நெருங்குது
விலகிய கைதான் இன்று காலியானது
விலகாத காதல் இதயத்தில் நின்றது!

வாங்கிய வசதி அவளோடு சென்றது
வாழும் உண்மை என்னோடு இருந்தது
உலகம் பகட்டில் பணத்தில் வாழுது
உயிர் மட்டும் அன்பால் துடிக்குது!

இலாபநஷ்டம் எழுதப்பட்ட புத்தகங்கள் போல
இவளில் மறந்திருந்த உண்மை தெரியுது
மனித வாழ்வை உயிரோடு வைக்கும்
மங்காத உறவின் சுடர் காதலாகட்டும்!

மாற்றம்தேடி மாறும் காதல் உலகில்
தோற்றம்தேடி அலையும் காதல் தினத்தில்
கண்ணுக்குத் தெரியாத கருணை எங்கே
பெண்மையில் வாழும் அமைதி எங்கே!

நன்றி

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

முற்றிற்று

துளி/DROP: 2035 [சிறு கதை - 198 / "காதலர் தினம் [VALENTINE DAY]" / பகுதி 3

https://www.facebook.com/groups/978753388866632/posts/33809788578669689/?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.