Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொழுநோய் மறைக்க வேண்டிய நோய் அல்ல – குணப்படுத்தக்கூடியது; தொழுநோயை வென்ற ஒரு குடும்பத்தின் உண்மை கதை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தொழுநோய் மறைக்க வேண்டிய நோய் அல்ல – குணப்படுத்தக்கூடியது; தொழுநோயை வென்ற ஒரு குடும்பத்தின் உண்மை கதை

23 Feb, 2026 | 09:57 AM

image

(மனோகரன் பிரியங்கா) 

எனக்கு இரட்டைப் பிள்ளைகள் உள்ளனர். ஆரம்பத்தில் அவர்களுக்கு முகத்தில் வெள்ளை நிறத்தில் ஒரு வித்தியாசமான தேமல் தென்பட்டது. எனது கணவர் அதைப் பார்த்துவிட்டு, இது ஏதோ சாதாரணமாகத் தெரியவில்லை என்று கூறி, எங்களை மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு செல்லுமாறு அறிவுறுத்தினார். அங்குதான் அது தொழுநோய் (Leprosy) என்று எங்களுக்குத் தெரியவந்தது. அப்போது பிள்ளைகளுக்கு வெறும் இரண்டரை வயதுதான். "இவ்வளவு சிறிய பிள்ளைகளுக்குத் தொற்று ஏற்பட வாய்ப்பில்லை, உங்கள் குடும்பத்தில் வேறு யாருக்காவது இருக்கிறதா என்று பாருங்கள்" என்று மருத்துவர்கள் கூறினார்கள். தேடிப் பார்த்தபோது, என் கணவரின் தந்தைக்கும் இந்த நோய் இருந்ததைக் கண்டறிந்தோம். இறுதியில், நானும் அந்த நோயினால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது. எங்கள் குடும்பத்தில் நான்கு பேருமே நோயாளிகளானோம் என்றார் தொழு நோயால் பாதிக்கப்பட்டு முழுமையாக குணமடைந்த மட்டக்களப்பைச் சேர்ந்த 25 வயதான இளம் தாய்.

மட்டக்களப்பு மாவட்ட தொழுநோயாளர் சங்கத்தின் தரவுகளின் அடிப்படையில்,  2025 ஆம் ஆண்டில் இலங்கையில் மொத்தம் 1,282 புதிய தொழுநோய் நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். இதில் 123 நோயாளிகள் (சுமார் 10%) 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஆவர். கண்டறியப்பட்ட புதிய நோயாளிகளில் சுமார் 8% பேர் ஏற்கனவே ஊனமுற்ற நிலையில் (Disabilities) இருப்பதும் தெரியவந்துள்ளது. மக்கள் தொகையில் 95% பேருக்கு இந்நோய்க்கு எதிராக இயற்கை எதிர்ப்பு சக்தி உள்ளது. மீதமுள்ள 5% பேருக்கு மட்டுமே இது பரவ வாய்ப்புள்ளது. இலங்கை 1995 ஆம் ஆண்டிலேயே உலக சுகாதார அமைப்பின் (WHO) தரநிலைப்படி தொழுநோயை ஒழித்த நாடாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், நோய் இன்னும் முழுமையாகத் துடைத்தெறியப்படவில்லை என்பதால், விழிப்புணர்வும் கண்காணிப்பும் தொடர்ந்து அவசியமாகிறது.

WhatsApp_Image_2026-02-09_at_4.51.08_PM.

“ இலங்கையின் தொழுநோய் பாதிப்புப் பட்டியலில் மட்டக்களப்பு இன்று இரண்டாம் இடத்தில் இருப்பதன் பின்னணியில் பல நூற்றாண்டுகால வரலாறும், சமூகப் பயமும், வறுமையும் பின்னிப் பிணைந்துள்ளன. சுமார் 200 - 300 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, இலங்கையில் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டக்களப்பில் உள்ள மாந்தீவு என்ற இடத்தில் தனிமைப்படுத்தப்பட்டனர். ஒரு காலகட்டத்தில், அங்கிருந்தவர்கள் முறையான மற்றும் முழுமையான மருத்துவ சிகிச்சை பெறாமலேயே வெளியேறி, மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளில் குடியேறினர். அவர்கள் அறியாமலேயே இந்த நோய் பரவுவதற்கான தொடக்கப்புள்ளியாக அமைந்தனர். மேலும் வறுமை என்பது வெறும் உணவில்லாமை மட்டுமல்ல. முறையான வீட்டு வசதி மற்றும் ஊட்டச்சத்து இன்மையையும் குறிக்கும். சிறிய வீடுகளில் அதிக எண்ணிக்கையிலானோர் வசிப்பது, சுவாசம் வழியாக இந்நோய் மிக எளிதாகக் குடும்ப உறுப்பினர்களுக்குப் பரவக் காரணமாகிறது. போதிய குடிநீர், மலசலக்கூட வசதிகள் இல்லாமை மற்றும் குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி போன்றவை பாக்டீரியாக்கள் வேகமாகத் தாக்க வழிவகுக்கின்றன. மட்டக்களப்பின் பின்தங்கிய கிராமங்களில் நிலவும் நீண்டகால வறுமை தொழுநோய்க்கு முக்கியக் காரணியாகும்.” என்கிறார் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொழுநோய் மற்றும் சுகாதார மேம்பாடுகளை மேற்கொண்டுவரும் அமைப்பான  இலங்கை காவேரி கலா மன்றத்தின் இயக்குனர் வண ரி.எஸ். யோசுவா.

“ பயமும் சமூகப் புறக்கணிப்பும் தொழுநோய் என்றாலே கை, கால் அழுகிவிடும் என்ற பயம் எங்களுக்குள் இருந்தது. "மாந்தீவு" (தொழுநோயாளிகள் காப்பகம்) பற்றி கேள்விப்பட்டிருந்ததால், எங்களையும் அங்கு கொண்டு சென்று பிள்ளைகளிடமிருந்து பிரித்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் கடவுளிடம் அழுது வேண்டினேன். சிகிச்சைக்காக மருந்துகள் எடுக்கும்போது முகம் கறுக்கத் தொடங்கியது. இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் கேள்வி எழுப்பினார்கள். நாங்கள் எதையும் மறைக்காமல் உண்மையைச் சொன்னோம். ஆனால், உண்மை தெரிந்ததும் சமூகம் எங்களை விலக்கி வைக்கத் தொடங்கியது. பக்கத்து வீட்டுக்காரர்கள் எங்கள் வீட்டிற்கு வருவதை நிறுத்தினார்கள். உறவினர்கள், பெரியம்மா, அக்காமார் என நெருங்கியவர்களே வீட்டிற்கு வருவதையும் பிள்ளைகளைத் தூக்குவதையும் தவிர்த்தார்கள். எந்த நிகழ்வுகளுக்கும் எங்களை அழைப்பதில்லை ” என இளம் தாய் மனக் குமுறலுடன் கூறினார்.  

“ படித்தவர்கள் மத்தியில்கூட இந்த நோய் குறித்த புரிதல் குறைவாகவே உள்ளது. தவறான சிகிச்சைகள், ஆரம்பகாலத் தேமல்களைச் சாதாரணமானது அல்லது தோல் நோய் எனக் கருதி, முறையான மருத்துவரை நாடாமல் உள்ளூர் மருந்துகளையோ அல்லது எண்ணெய்களையோ பயன்படுத்துவதால் நோயின் தாக்கம் அதிகரிக்கிறது. "தொழுநோய் வந்தால் சமூகம் எங்களை ஒதுக்கிவிடும்" என்ற பயத்தால் பலர் நோயை மறைக்கின்றனர். இதனால் அவர்களுக்கு நெருக்கமானவர்களுக்குத் தொற்று பரவும் அபாயம் அதிகரிக்கிறது. சிறுவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால், அவர்கள் எளிதில் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, வீட்டில் இருக்கும் பெரியவர்களிடம் (தாத்தா, பாட்டி) இருந்து குழந்தைகளுக்கு இது பரவுகிறது. பாடசாலை ஆசிரியர்களிடம் இது குறித்த விழிப்புணர்வு குறைவாக இருப்பதால், ஆரம்பக் கட்டத்திலேயே இதைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கத் தவறி விடுகின்றனர் ” என்கிறார் ரி.எஸ். யோசுவா.

இந்நோய் குறித்த அறியாமையினால் குடும்பங்களில் பிரிவுகள் ஏற்படுதல் மற்றும் திருமணத் தடைகள் போன்ற சமூகப் பிரச்சனைகளையும் இவர்கள் சந்திக்கின்றனர். ஆரம்ப காலத்தில் மருந்து வசதிகள் இல்லாததால் இந்நோய் குறித்த பயம் மக்களிடையே இருந்தது, ஆனால் தற்போது முறையான மருத்துவ சிகிச்சை மூலம் தொழுநோயை முற்றாகக் குணப்படுத்த முடியும். உணர்ச்சியற்ற தேமல், தடித்த தேமல், வெளிறிய நிறத்திலான தேமல், ரோமங்கள் வளர்ச்சி இல்லாத தேமல்கள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனையைப் பெற வேண்டும்.

“ எனது பிள்ளைகளை மூன்று வருடங்களுக்குப் பின்னர் பாடசாலையில் சேர்த்தபோது, ஆசிரியர்களுக்கு எனது பிள்ளைகள் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் என தகவல் கிடைத்துவிட்டது. பிள்ளைகளுக்குத் தொழுநோய் இருக்கும்போது ஏனைய பிள்ளைகளுடன் எப்படிப் பழக விடலாம்? என்று ஆசிரியர்கள் என்னிடம் கேட்டனர். நான் மருத்துவரிடம் சென்று விளக்கம் கேட்டு, மருந்து எடுக்கத் தொடங்கிய உடனேயே இது மற்றவர்களுக்குத் தொற்றாது என்ற மருத்துவச் சான்றிதழைச் சமர்ப்பித்த பின்னரே பிள்ளைகள் பாடசாலையில் இணைய அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சைக்காக மருந்து எடுத்த காலத்தில் உடல் சோர்வு, பசியின்மை மற்றும் இரத்தச் சோகை போன்ற மாற்றங்கள் ஏற்பட்டன. எனினும், விடாமுயற்சியுடன் மருந்துகளை உட்கொண்டோம். இப்போது நாங்கள் நான்கு பேருமே முழுமையாகக் குணமடைந்து விட்டோம்” என அந்த தாய் மகிழ்ச்சியுடன் கூறினார்.

தொழுநோய் என்பது மைக்ரோ பாக்டீரியம் என்ற கிருமியால் வரும் ஒரு சாதாரண நோயாகும். 6 மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை முறையான மாத்திரைகளை உட்கொண்டால் முழுமையாகக் குணப்படுத்தலாம். மருந்து உட்கொள்ளத் தொடங்கிய முதல் 3 நாட்களிலேயே உங்களிடமிருந்து கிருமி மற்றவர்களுக்குத் தொற்றும் வாய்ப்பு 100 வீதம் நீங்கிவிடுகிறது. தோலில் உணர்ச்சியற்ற தேமல், கை-கால்களில் மந்தமான உணர்வு ஆகியவை தொழுநோய்க்கான ஆரம்ப அறிகுறிகள். இதை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் ஊனம் ஏற்படாமல் தடுக்கலாம். தொழு நோய் சிகிச்சையில் இரண்டு முறைகள் உள்ளன. முதலாவது, சிகிச்சை வகை ; PB (Paucibacillary) (குறைந்த பாதிப்பு) நோயாளியின் நிலை ; 3 அல்லது அதற்கும் குறைவான தழும்புகள் உள்ளவர்கள் சிகிச்சைக்கான காலம் 6 மாதங்கள் ஆகும். இரண்டாவது, MB (Multibacillary)(அதிக பாதிப்பு) நோயாளியின் நிலையானது 3-க்கும் மேற்பட்ட தழும்புகள் காணப்படுபவர்கள் சிகிச்சை காலம் 12 மாதங்கள் ஆகும்.

WhatsApp_Image_2026-02-09_at_4.53.40_PM.

“ ஒரு மாவட்டத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகக் காட்டப்படுவது, அங்குக் கண்காணிப்பு மற்றும் கண்டறிதல் பணிகள் மிகச் சிறப்பாக நடப்பதைக் குறிக்கிறது. இலங்கை சுகாதார அமைச்சின் தொழுநோய் தடுப்புப் பிரிவு (ALC) மற்றும் மாவட்ட ரீதியிலான மருத்துவக் குழுக்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றுகின்றன. மட்டக்களப்பில் நோயாளிகள் கண்டறியப்படுவது அதிகரித்திருப்பது, அங்கு மருத்துவத் துறை விழிப்புணர்வுடன் இருப்பதையே காட்டுகிறது. மறைந்திருக்கும் நோயாளிகளைக் கண்டறிந்து அவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதன் மூலமே வரும் காலங்களில் இந்நோயை முழுமையாக ஒழிக்க முடியும். தொழுநோய் என்பது மருத்துவர்கள் மட்டுமே தீர்க்கக்கூடிய ஒன்றல்ல. சமூகம், குடும்பம் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே இதை வேரறுக்க முடியும். தொழுநோயை கண்டு பயப்படத் தேவையில்லை. ” என இலங்கை காவேரி கலா மன்றத்தின் இயக்குனர் ரி. எஸ் யோசுவா தனது கருத்துக்களை முன்வைத்தார்.

“ சமூகத்திற்குச் சொல்லும் செய்தி தொழுநோய் குறித்துச் சரியான விழிப்புணர்வு இல்லாத காரணத்தினாலேயே மக்கள் எங்களை ஓரம் கட்டுகிறார்கள். மட்டக்களப்பு போன்ற பகுதிகளில் இன்னும் பலர் இந்த நோய்க்குச் சிகிச்சை பெறப் பயப்படுகிறார்கள். அவர்களுக்கு நான் சொல்வது ஒன்றே ஒன்றுதான். தொழுநோயைக் கண்டு பயப்படத் தேவையில்லை. இதற்கான மருந்துகள் இப்போது மிக எளிதாகக் கிடைக்கின்றன. சிகிச்சை எடுக்கத் தொடங்கிய முதல் நாளிலிருந்தே இது மற்றவர்களுக்குத் தொற்றாது. எனவே, மறைக்காமல் சிகிச்சை பெற்று இயல்பாக வாழுங்கள்” என ஏனையவர்களுக்கு மிகவும் தைரியத்துடன் கூறுகிறார் தொழுநோயை வென்ற இரண்டு பிள்ளைகளின் தாய்.

“மடக்களப்பு மாவட்டத்தில் தொழு நோயாளர் சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட நோயாளிகளாக 608 பேர் உள்ளனர். கடந்த ஆண்டை விட சில மாவட்டங்களில் நோயாளர்களின் எண்ணிக்கை அல்லது சங்கங்களின் செயல்பாடுகள் கணிசமாக அதிகரித்துள்ளன. இன்னும் சில மாவட்டங்களில் இந்த நிலைமை எந்தவித மாற்றமுமின்றி கடந்த ஆண்டைப் போலவே சமநிலையில் காணப்படுகிறது. தொழுநோய்க்கான சிகிச்சைகள் அரச வைத்தியசாலையில் மட்டுமே பிரத்தியேகமாக வழங்கப்படுகின்றன. நோயாளிகளைக் கண்டறிவதற்கும் அவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்கும் வாரத்தின் குறிப்பிட்ட நாட்கள் ஒதுக்கப்பட்டு, மிகச் சிறப்பான முறையில் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. நோயாளிகளைக் கண்டறிதல் முதல் அவர்களுக்கான மருந்து மற்றும் இதர மருத்துவ சேவைகள் வரை அனைத்தும் அரசின் நேரடி மேற்பார்வையில் சிறப்பாக நடைபெறுகின்றன ” என மட்டக்களப்பு மாவட்ட தொழுநோயாளர் சங்க இயக்குனர் டெபோரா தெரிவித்தார்.

தொழுநோய்கு காரணம் ஊட்டச்சத்துக் குறைபாடு அல்லது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதே என ஆய்வுகள் காட்டுகின்றன. வறுமை காரணமாக, வைத்தியசாலைக்குச் செல்வதற்கான போக்குவரத்துச் செலவைக் கூட ஈடுசெய்ய முடியாத நிலையில் பலர் உள்ளனர். இந்நோய் குறித்த விழிப்புணர்வு குறைவாக இருப்பதால், நோயாளிகள் தங்களைத் தாங்களே சமூகத்திலிருந்து தனிமைப்படுத்திக் கொள்ளும் நிலை காணப்படுகிறது. நோய் குறித்த பயத்தினால் ஏனையவர்களுடன் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவும் அவர்கள் தயங்குகின்றனர். தொழுநோயின் தீவிரத்தினால் ஏற்படும் ஊன நிலைகள் (Grade 2 Deformity) சாதாரண பார்வையில் ஒருவருக்குத் தெரியாமல் இருக்கலாம். இதனால், அவர்கள் மற்றவர்களைப் போல வேலை செய்ய முடியாத நிலை இருந்தாலும், அவர்களுக்கு உரிய சலுகைகள் கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன.

“புதிய நோயாளிகளைக் கண்டறியும் பணியில் தொழுநோயாளர் சங்கங்கள் (Leprosy People's Association) முக்கிய பங்கு வகிக்கின்றன. இவர்கள் மூலம் கண்டறியப்படும் புதிய நோயாளிகள் மேலதிக சிகிச்சைக்காக சுகாதாரத் திணைக்களத்திடம் (Health Department) ஒப்படைக்கப்படுகின்றனர். நோயாளிகளுக்குத் தேவையான அனைத்து மருத்துவ சிகிச்சைகளும் அரசால் வழங்கப்படுகின்றன. இலங்கையிலுள்ள 25 மாவட்டங்களில் தற்போது சுமார் 10 மாவட்டங்களில் மட்டுமே தொழுநோயாளர் சங்கங்கள் செயல்படுகின்றன. இந்தச் சேவையை 25 மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்துவதே பிரதான இலக்காகும். சங்கத்தின் உறுப்பினர்கள் தங்கள் சொந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம், நோய் குறித்த பயம் மற்றும் சமூகப் பாகுபாட்டினால் மறைந்திருக்கும் புதிய நோயாளிகளை வெளிக்கொண்டு வர உதவுகின்றனர். கண்டறியப்படும் நோயாளிகள் உடனடியாகச் சுகாதாரத் திணைக்களத்திடம் (Health Department) ஒப்படைக்கப்பட்டு, அவர்களுக்கான முறையான சிகிச்சைகள் உறுதி செய்யப்படுகின்றன ” எனத் தெரிவித்தார் டெபோரா.

i.jpg

மறைந்திருக்கும் நோயாளிகளைக் கண்டறிந்து அவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதன் மூலமே வரும் காலங்களில் இந்நோயை முழுமையாக ஒழிக்க முடியும். தொழுநோய் என்பது மருத்துவர்கள் மட்டுமே தீர்க்கக்கூடிய ஒன்றல்ல. சமூகம், குடும்பம் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே இதை வேரறுக்க முடியும். தொழுநோயை கண்டு பயப்படத் தேவையில்லை. அனைத்து தேமல்களும் தொழுநோய் அல்ல, அதனை மருத்துவர்களே உறுதி செய்வார்கள். ஒரு நோயாளி முறையாக மருந்துகளை உட்கொள்ளத் தொடங்கினால், அவரிடமிருந்து மற்றவர்களுக்கு இந்நோய் பரவாது. தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களைச் சமூகத்திலிருந்து ஓரங்கட்டத் தேவையில்லை. அவர்கள் மருந்து உட்கொள்ளும் போது மற்றவர்களுக்குப் பாதிப்பு ஏற்படாது என்பதால், அவர்கள் அனைவரையும் போல இயல்பாக வாழ்வதற்கு உரிமை உடையவர்கள். தொழுநோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டவர்கள் சமூகத்திற்கு ஒரு சுமையாக அல்லாமல், சமூகத்தின் அழகான ஒரு பகுதியாகவே இலங்கையில் கருதப்படுகின்றனர்.

சமூகத்தில் அல்லது மாவட்டங்களில் தொழுநோய்க்கான அறிகுறிகளுடன் எவரேனும் இனம் காணப்பட்டால், அவர்களை உடனடியாக அரச வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெறுவதற்கு வழிகாட்ட வேண்டியது அனைவரினதும் கடமையாகும். நமக்கோ அல்லது நமது குடும்ப உறுப்பினர்களுக்கோ ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால், தாமதிக்காமல் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். இலங்கையைத் தொழுநோயற்ற நாடாக மாற்றுவது ஒரு கூட்டுப் பொறுப்பு , அதனை நோக்கி அனைவரும் பயணிக்க வேண்டும். தொழுநோய் முற்றிலும் குணப்படுத்தக்கூடிய ஒரு நோய் என்பதால், விழிப்புணர்வுடன் செயல்படுவதன் மூலம் இதனைத் தடுக்க முடியும்.

https://www.virakesari.lk/article/238236

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.