Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இஸ்ரேல் - கட்டார் - துபாய் - அபுதாபி மீது ஈரான் தாக்குதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கட்டார் - துபாய் - அபுதாபி மீது ஈரான் தாக்குதல்

புதிய இணைப்பு 

துபாய் மற்றும் அபுதாபியில் வெடிப்புகள் நடப்பதாக பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி பின்வரும் நாடுகளின் விமான தளங்களை இலக்கு வைத்து ஈரான் தனது தாக்குதவை ஆரம்பித்துள்ளது.

  • கத்தாரில் உள்ள அல்-உதெய்த் விமானத் தளம்

  • குவைத்தில் உள்ள அல்-சேலம் விமானத் தளம்

  • ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அல்-தஃப்ரா விமானத் தளம்

  • பஹ்ரைனில் ஐந்தாவது அமெரிக்கத் தளம்

மேலும், சவுதி அரேபியாவின் ரியாத்திலும் குண்டுவெடிப்புகள் நடந்ததாக AFP செய்தி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

கட்டார் - துபாய் - அபுதாபி மீது ஈரான் தாக்குதல் | Iranian Missiles Entered Qatar S Airspace

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபியில், ஈரானில் இருந்து ஏவப்பட்ட பல ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டதில், குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டதாக அந்நாட்டின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

"இந்த தாக்குதல் தேசிய இறையாண்மை மற்றும் சர்வதேச சட்டத்தின் அப்பட்டமான மீறல்" என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கூறுகிறது. "இந்த அதிகரிப்பிற்கு பதிலளிக்கும் முழு உரிமையும் அதற்கு உள்ளது" என்று கூறுகிறது.

முதலாம் இணைப்பு 

ஈரானிய ஏவுகணை ஒன்று கட்டாரின் வான்பரப்புக்குள் பாய்ந்த நிலையில் அதை தடுத்து வீழ்த்தியதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதன்படி , குறித்த ஈரானிய ஏவுகணை Patriot வான் பாதுகாப்பு அமைப்பின் மூலம் தடுக்கப்பட்டது என சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

மேலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைநகர் அபுதாபியில் இருந்து ஒரு பெரிய வெடிப்புச் சத்தம் கேட்டதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பஹ்ரைனில் வெடிப்புகள்

அத்தோடு குவைத்தில் வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும், பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளம் உள்ளிட்ட பகுதிகளில் தாக்குதல் நடந்ததாக தற்போது சர்வதேச ஊடகங்கள் விளக்கியுள்ளன.

அமெரிக்க கடற்படையின் 5வது கடற்படையின் சேவை மையம் "ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது" என்று பஹ்ரைனின் தேசிய தொடர்பு மையம் தெரிவித்துள்ளது.

இது அரசு நடத்தும் பஹ்ரைன் செய்தி நிறுவனம் (BNA) மேற்கோள் காட்டிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளைகுடா, செங்கடல், அரேபிய கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலின் சில பகுதிகளை உள்ளடக்கிய 5வது கடற்படையின் தலைமையகம் பஹ்ரைனில் உள்ளது.

பஹ்ரைன் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் வீசப்படும் என்ற அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், அமெரிக்க தூதரகம் குடிமக்கள் தஞ்சம் அடையுமாறு எச்சரித்திருந்தாலும், அமெரிக்க இராணுவத்திடமிருந்து உடனடி கருத்து எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்தலையில் வளைகுடா நாடுகள் தங்களது வான்வெளியை மூடுவதாக அறிவித்துள்ளன.

இதன்படி கட்டார், குவைத் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை தங்கள் வான்வெளியை மூடியுள்ளன.

கட்டார் - துபாய் - அபுதாபி மீது ஈரான் தாக்குதல்

Edited by ஏராளன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல் மீது ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் !

28 Feb, 2026 | 02:09 PM

image

இஸ்ரேல் இன்று (28) அதிகாலை ஈரான் மீது மேற்கொண்ட தாக்குதலுக்கு பதிலடியாக, ஈரான் தற்போது இஸ்ரேல் மீது எதிர்த் தாக்குதலை ஆரம்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனையடுத்து, இஸ்ரேலில் பாதுகாப்பு நிலைமை பதற்றமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக, பொதுமக்கள் பாதுகாப்பாக பதுங்கு குழிகளில் தஞ்சமடையுமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இஸ்ரேல் – ஈரான் இடையிலான மோதல் தற்போது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், தாக்குதல்களால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அல்லது சேதங்கள் குறித்து இதுவரை அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

 ஈரானில் இருந்து ஏவப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்று இஸ்ரேலிய ஹைபா பகுதியில் விழுந்து வெடித்துள்ளதாகவும் ஈரான் மீது அமெரிக்க மற்றுமொரு சுற்று தாக்குதலை தற்போது ஆரம்பித்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, அமெரிக்க இராணுவமும் ஈரான் மீது “பாரிய போர் நடவடிக்கைகளை” ஆரம்பித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அவர் தனது ‘Truth Social’ சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோ பதிவின் மூலம் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

இஸ்ரேல் மீது ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் !

  • ஏராளன் changed the title to இஸ்ரேல் - கட்டார் - துபாய் - அபுதாபி மீது ஈரான் தாக்குதல்
  • கருத்துக்கள உறவுகள்

முன்னைய மன்னர் ஆட்சியின் ஆட்சி மோதல்களில், பூமியில் உயிர்கள் மட்டுமே பாதிப்புக்கு உள்ளாகி அழிந்தன அழிக்கப்பட்டன. பூமி பாதிப்பின்றிச் சுற்றியது. தற்போது மக்கள் ஆட்சியில் மக்கள் அறிவும் அதிகரித்த ஆட்சி மோதல்களில், உயிர்களோடு பூமியும் பாதிப்புக்கு உள்ளாகி அழிந்துவிடும்போல் தெரிகிறது. மக்களாட்சியை விடவும் மன்னராட்சி பூமிக்கு மேலானதுபோல் தோன்றுகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா – இஸ்ரேல் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி : மத்திய கிழக்கில் பதற்றம் தீவிரம் – பல நாடுகள் வான்வெளி மூடல்

28 Feb, 2026 | 06:41 PM

image

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்கள் மற்றும் அதற்கு ஈரானின் பதிலடி ஆகியவற்றால் மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன. இதன் விளைவாக, மத்திய கிழக்கின் பெரும்பாலான வான்வெளிகள் மூடப்பட்டு, உலகெங்கிலும் அதன் தாக்கம் எதிரொலித்து வருகிறது.

சனிக்கிழமை (28) மோதல் வெடித்ததை அடுத்து ஈரான், இஸ்ரேல், ஈராக், ஜோர்தான், கத்தார், பஹ்ரைன், குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உட்பட குறைந்தது எட்டு நாடுகள் தங்களது வான்வெளிகளை மூடுவதாக அறிவித்தன. சிரியாவும் அதன் தெற்குப் பகுதியில் இஸ்ரேலுடனான எல்லைப் பகுதியில் 12 மணிநேரத்திற்கு வான்வெளியை மூடுவதாக அறிவித்துள்ளது.

ஈரானின் ஏவுகணைத் மற்றும் கடற்படையை அழிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உறுதியளித்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது இந்தத் தாக்குதல்களை நடத்தின.

இந்தத் தாக்குதல் நடக்கும் வரை அமெரிக்காவுடன் அணுசக்தி திட்டம் குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்த ஈரான், இதற்கு கடுமையான பதிலடி கொடுக்கப்போவதாக உறுதியளித்தது.

அதன்படி இஸ்ரேல் மீதும், அமெரிக்க இராணுவத் தளங்களைக் கொண்டுள்ள கத்தார், குவைத், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் போன்ற வளைகுடா நாடுகள் மீதும் ஈரான் தனது தாக்குதலைத் தொடங்கியது.

"மத்திய கிழக்கில் உள்ள அனைத்து அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய சொத்துக்களும் நலன்களும் நியாயமான இலக்குகளாக மாறிவிட்டன. இந்த ஆக்கிரமிப்பிற்குப் பிறகு எங்களுக்கு எந்தவிதக் கட்டுப்பாடுகளும் (Red lines) இல்லை, எதையும் செய்யத் துணிவோம்," என்று மூத்த ஈரானிய அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக ஏற்கனவே அந்த நாட்டு வான்வெளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், ஐரோப்பா மற்றும் ஆசியாவிற்கு இடையிலான முக்கியப் பாதையாக இருக்கும் மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள இந்த இடையூறு காரணமாக, உலகளாவிய விமான நிறுவனங்கள் பல தங்களது விமானங்களை ரத்து செய்துள்ளன அல்லது வேறு பாதையில் திருப்பிவிட்டுள்ளன.

ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கான விமான சேவைகளை ரஷ்ய விமான நிறுவனங்கள் நிறுத்தி வைத்துள்ளதாக ரஷ்ய போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் மத்திய கிழக்கு வான்வெளியை முழுமையாகத் தவிர்க்கப்போவதாக அறிவித்துள்ளது.

ஸ்ரீலங்கன் ஏயார் லைன்ஸ், லுஃப்தான்சா (Lufthansa), ஏர் பிரான்ஸ், கத்தார் ஏர்வேஸ், பிரிட்டிஷ் ஏர்வேஸ் மற்றும் இண்டிகோ (Indigo) உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களும் இந்தப் பிராந்தியத்திற்கான சேவைகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளன.

அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலும், அதற்குப் பல வளைகுடா நாடுகளைப் பாதிக்கும் வகையிலான ஈரானின் பதிலடியும் இரண்டு 'இணையான' (Parallel) மோதல்களை உருவாக்கியுள்ளன.

இது இந்தப் பிராந்தியத்தில் இதுவரை கண்டிராத ஒரு சிக்கலான மற்றும் ஆழமான ஸ்திரமற்ற நிலையை ஏற்படுத்தக்கூடும்.

https://www.virakesari.lk/article/239825

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஈரான் பாரிய தாக்குதல்: மூவர் பலி!

Mar 1, 2026 - 08:31 PM

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஈரான் பாரிய தாக்குதல்: மூவர் பலி!

ஈரான் நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சு இன்று (01) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தத் தாக்குதல்களில் மேலும் 58 பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிந்த பாகிஸ்தான், நேபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மூவராவர்.

அமீரகத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகளை மீறி வந்த ஈரானிய ட்ரோன்கள் தரையில் விழுந்து வெடித்ததாலேயே இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஈரான் ஐக்கிய அரபு அமீரகத்தை நோக்கி 165 பலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளதுடன், அவற்றில் 152 ஏவுகணைகளைப் பாதுகாப்புத் தரப்பினர் வானிலேயே அழித்து வெற்றி கண்டுள்ளனர்.

எஞ்சிய 13 ஏவுகணைகள் கடலில் விழுந்துள்ளன. இதற்கு மேலதிகமாக, இரண்டு குரூஸ் ஏவுகணைகளும் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈரான் ஒட்டுமொத்தமாக 541 ட்ரோன்களைத் தாக்குதலுக்குப் பயன்படுத்தியுள்ளதுடன், அவற்றில் 506 ட்ரோன்கள் இடைநடுவிலேயே வீழ்த்தப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், 35 ட்ரோன்கள் அமீரகத்தின் நிலப்பரப்பிற்குள் விழுந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் இந்தப் போர்ச் சூழலுக்கு மத்தியில், ஐக்கிய அரபு அமீரகம் தனது வான் பாதுகாப்பு அமைப்புகளை உச்சக்கட்ட நிலையில் செயற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஈரான் பாரிய தாக்குதல்: மூவர் பலி!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈரான் தாக்குதலில் மூன்று அமெரிக்கப் படையினர் பலி

Mar 1, 2026 - 09:17 PM

ஈரான் தாக்குதலில் மூன்று அமெரிக்கப் படையினர் பலி

ஈரானை இலக்கு வைத்து ஆரம்பிக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகளின் போது மூன்று அமெரிக்கப் படைவீரர்கள் உயிரிழந்துள்ளதை அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது.

ஈரானுக்கு எதிரான தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் அமெரிக்கத் தரப்பில் பதிவான முதலாவது உயிரிழப்புகள் இவை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த நடவடிக்கையின் போது மேலும் ஐந்து படைவீரர்கள் பலத்த காயமடைந்துள்ளதாக அந்நாட்டு இராணுவ அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

உயிரிழந்த வீரர்களின் விபரங்கள் இதுவரை உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை. அமெரிக்க இராணுவ மரபுகளின்படி, உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டு 24 மணி நேரம் கழிந்த பின்னரே பெயர்கள் பகிரங்கப்படுத்தப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈரானுக்கு எதிரான இந்த இராணுவ நடவடிக்கையை அறிவித்திருந்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், முன்னதாகவே எச்சரிக்கை விடுத்திருந்தார். "அமெரிக்க வீரர்களின் உயிர்கள் பறிபோகலாம், போரின் போது இத்தகைய உயிரிழப்புகள் சாதாரணமானவை" என அவர் தெரிவித்திருந்தார்.

இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ள நிலையில், அமெரிக்கா ஈரானுக்கு எதிரான தனது தாக்குதல்களை மேலும் தீவிரப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரான் தாக்குதலில் மூன்று அமெரிக்கப் படையினர் பலி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரான் அதன் அண்டை இஸ்லாமிய நாடுகள் மீது தாக்குதல் நடத்துவது ஏன்?

இரான், அமெரிக்கா, இஸ்ரேல், மத்திய கிழக்கு, அரபு முஸ்லிம் நாடுகள்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,கத்தார் தலைநகர் தோஹாவுக்கு அருகிலுள்ள அல் உதெய்த் விமானப்படைத் தளம்

1 மார்ச் 2026, 08:20 GMT

புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

சனிக்கிழமை அமெரிக்காவும் இஸ்ரேலும் இரான் மீது தாக்குதல்களைத் தொடங்கின, இதை ஈரானுக்கு எதிரான "பெரிய இராணுவ நடவடிக்கை" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விவரித்தார்.

தாக்குதல்களின் போது, இரானின் அதிஉயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி அலுவலகமும் குறிவைக்கப்பட்டது. அதில், காமனெயி கொல்லப்பட்டதாக டிரம்ப் அறிவிக்க, பின்னர் இரானிய அரசு ஊடகமும் அதனை உறுதிப்படுத்தியது.

இந்தத் தாக்குதல்களுக்குப் பிறகு, இரான் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களைக் குறிவைக்கத் தொடங்கியுள்ளது.

"பஹ்ரைனில் உள்ள ஒரு அமெரிக்க கடற்படைத் தளம் தாக்கப்பட்டுள்ளது. இரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய பெரிய அளவிலான மற்றும் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக, இரான் பிராந்தியம் முழுவதும் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது," என்று இரானிய ராணுவம் கூறியது.

இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை ஒரு அறிக்கையில், "அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக 'உண்மையான வாக்குறுதி 4' நடவடிக்கையின் கீழ் அமெரிக்க தளங்கள் மற்றும் சொத்துகளைக் குறிவைக்கிறோம்" என்று கூறியது.

அதே நேரத்தில், மத்திய கிழக்கில் உள்ள தனது குடிமக்களுக்கு அமெரிக்கா ஓர் எச்சரிக்கையை விடுத்துள்ளது.

"ஐக்கிய அரபு அமீரகம், தோஹா மற்றும் பஹ்ரைனில் உள்ள தனது குடிமக்களை 'உள்ளேயே பாதுகாப்பாக இருக்க' அமெரிக்க அரசாங்கம் வலியுறுத்துகிறது," என்று அமெரிக்கா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் அமெரிக்க தளங்கள் மீதான தாக்குதல்கள்

இரான், அமெரிக்கா, இஸ்ரேல், மத்திய கிழக்கு, அரபு முஸ்லிம் நாடுகள்

படக்குறிப்பு,இரான் குறிவைத்த நாடுகள்

இதற்கிடையில், இரான் தற்காப்புக்காக அனைத்து ராணுவ வழிகளையும் பயன்படுத்தும் என்று இரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறியுள்ளார்.

சௌதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், குவைத், பஹ்ரைன் மற்றும் இராக் போன்ற நாடுகளில் உள்ள தனது சகாக்களை அராக்சி அழைத்துப் பேசியதாக ஒரு அறிக்கை தெரிவிக்கிறது.

இரான் தனது இறையாண்மையைப் பாதுகாக்க "தன்னுடைய சுய பாதுகாப்புக்கான சட்டப்பூர்வ உரிமையின் கீழ் அதன் அனைத்து தற்காப்பு மற்றும் ராணுவ திறன்களையும்" பயன்படுத்தும் என்று அந்த அறிக்கை இந்த நாடுகளிடம் கூறியது.

அந்த அறிக்கையின்படி, "அமெரிக்காவும், இஸ்ரேலும் இரான் மீதான தாக்குதல்களுக்கு உங்கள் நாட்டிலுள்ள தளவாட வசதிகள் மற்றும் நிலப்பரப்பை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பது" அவர்களின் பொறுப்பு என்பதை அராக்சி இந்த நாடுகளுக்கு "நினைவூட்டினார்".

இரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியின் இந்த அறிக்கைக்கு முன், கத்தாரின் தலைநகர் தோஹாவில் தாக்குதல்கள் மற்றும் சைரன்களின் சத்தம் கேட்டது.

"நாட்டை குறிவைத்து நடத்தப்பட்ட பல தாக்குதல்கள் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளன." என்று கத்தாரின் பாதுகாப்பு அமைச்சகம் மேற்கோள் காட்டி அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

"அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்பு இரானிய ஏவுகணையை இடைமறித்தது," என்று ஒரு கத்தார் அதிகாரி ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

கத்தார் தலைநகரான தோஹாவுக்கு அருகிலுள்ள அல் உதெய்த் விமானத் தளமானது, மத்திய கிழக்கில் அமெரிக்க மத்திய கட்டளை மையத்தின் வான் நடவடிக்கைகளின் தலைமையகமாகும்.

இரான், அமெரிக்கா, இஸ்ரேல், மத்திய கிழக்கு, அரபு முஸ்லிம் நாடுகள்

படக்குறிப்பு,குவைத் நெடுஞ்சாலையில் நடந்த தாக்குதலின் புகைப்படம்

குவைத்தில் ஒரு நெடுஞ்சாலையில் பதிவு செய்யப்பட்டதாக கூறப்படும் தாக்குதலின் பின்விளைவுகளைக் காட்டும் படங்களை பிபிசி பெற்றுள்ளது, அதில் எரிந்த லாரியும் அடங்கும்.

முன்னதாக, குவைத்தின் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கர்னல் சவுத் அப்துல்அஜிஸ் அல்-அத்வான் ஒரு பேஸ்புக் பதிவில், "அலி அல்-சலேம் விமானத் தளம் (அமெரிக்க விமானப்படை இருக்கும் இடம்) பல பாலிஸ்டிக் ஏவுகணைகளால் குறிவைக்கப்பட்டது, ஆனால் குவைத் விமானப் பாதுகாப்புப் படைகள் அவற்றை வெற்றிகரமாகத் தடுத்தன." என்று கூறினார்.

இதற்கிடையில், பஹ்ரைனின் உள்துறை அமைச்சகம் தனது எக்ஸ் சமூக ஊடக பக்கத்தில் அவசர நிலை எச்சரிக்கை பற்றிய தகவலை வெளியிட்டது. பஹ்ரைனும் அதன் குடிமக்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு வேண்டுகோள் விடுத்தது.

"அமெரிக்க கடற்படையின் ஐந்தாவது பிரிவின் சேவை மையம் ஏவுகணைத் தாக்குதலின் இலக்காக இருக்கிறது," என்று பஹ்ரைனின் தேசிய தகவல் தொடர்பு மையம் தெரிவித்துள்ளது.

"கூடுதல் தகவல்கள் சரியான நேரத்தில் வழங்கப்படும்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

"குடிமக்கள் அதிகாரிகள் வழங்கிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்."

பஹ்ரைனில் அமெரிக்க கடற்படையின் ஐந்தாவது பிரிவின் சேவை மையம் உள்ளது. இது வளைகுடா, செங்கடல், அரபிக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலின் சில பகுதிகளைக் கண்காணிக்கிறது.

இரான், அமெரிக்கா, இஸ்ரேல், மத்திய கிழக்கு, அரபு முஸ்லிம் நாடுகள்

படக்குறிப்பு,பஹ்ரைனில் பதிவான காட்சி

பஹ்ரைன் மீதான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களின் அச்சுறுத்தல் காரணமாக குடிமக்களை வெளியேறுமாறு அமெரிக்க தூதரகம் முன்னர் எச்சரித்திருந்தாலும், அமெரிக்க இராணுவத்திடமிருந்து எந்தக் கருத்தும் இல்லை.

ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிக்கையில், "இரானிய பாலிஸ்டிக் ஏவுகணைகளின் தாக்குதலால்" நாடு பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியது.

"ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வான் பாதுகாப்பு அமைப்புகள் அந்த ஏவுகணைகளை திறம்பட எதிர்கொண்டு பல ஏவுகணைகளை வெற்றிகரமாக இடைமறித்தன."

"அபுதாபியின் குடியிருப்புப் பகுதியில் ஏவுகணை சிதைவுகள் விழுந்ததால், சில சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டது மற்றும் ஒரு ஆசிய நாட்டவரின் உயிரிழந்தார்" என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலை கடுமையாகக் கண்டித்த ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பாதுகாப்பு அமைச்சகம், இது ஆபத்தை தூண்டும் செயல் என்றும் இதற்குப் பதிலடி கொடுக்கும் உரிமை தனக்கு இருப்பதாகவும் கூறியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியின் தெற்கே அல் தஃப்ரா அமெரிக்க விமானப்படைத் தளம் அமைந்துள்ளது. அந்த தளத்திலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விமானப்படையுடன் இணைந்து அமெரிக்க விமானப்படை செயல்படுகிறது.

மத்திய கிழக்கில் அமெரிக்க ராணுவ தளங்கள் எங்கே உள்ளன?

இரான், அமெரிக்கா, இஸ்ரேல், மத்திய கிழக்கு, அரபு முஸ்லிம் நாடுகள்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,அமெரிக்க கடற்படையின் ஐந்தாவது பிரிவின் சேவை மையம் பஹ்ரைனில் அமைந்துள்ளது.

மத்திய கிழக்கில் அமெரிக்கா பல இராணுவ தளங்களைக் கொண்டுள்ளது. வளைகுடா மற்றும் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் அமெரிக்க கடற்படையின் ஐந்தாவது பிரிவின் தலைமையகம் பஹ்ரைன் ஆகும்.

கத்தாரின் தலைநகரான தோஹாவுக்கு அருகிலுள்ள அல் உதெய்த் விமானத் தளம், மத்திய கிழக்கில் அமெரிக்க மத்திய கட்டளை மையத்தின் விமான நடவடிக்கைகளின் தலைமையகமாகும். இது மத்திய கிழக்கில் உள்ள மிகப்பெரிய அமெரிக்க விமானப்படைத் தளமாகும். சுமார் 10 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் இங்கு உள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அல் தஃப்ரா விமானப்படைத் தளமும் அமெரிக்க விமானப்படைக்கு ஒரு முக்கியமான தளமாகும்.

துபாயில் உள்ள ஜெபல் அலி துறைமுகம் ஒரு அதிகாரப்பூர்வ அமெரிக்க இராணுவத் தளம் அல்ல, ஆனால் பிராந்தியத்தில் முக்கிய அமெரிக்க கடற்படைத் துறைமுகமாகும்.

இராக்கில் உள்ள ஐன் அல்-அசாத் விமானப்படைத் தளத்தில் அமெரிக்கா தனது இருப்பைப் பேணுகிறது.

வடக்கு இராக்கில் உள்ள எர்பில் விமானத் தளமும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஒரு முக்கிய அமெரிக்க தளமாகும்.

சௌதி அரேபியாவில், 2,300-க்கும் மேற்பட்ட அமெரிக்க துருப்புகள் சௌதி அரசாங்கத்துடன் இணைந்து வான் மற்றும் ஏவுகணை பாதுகாப்பை வழங்குகின்றன. பிரின்ஸ் சுல்தான் விமானப்படைத் தளம் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்கு ஒரு முக்கிய இடமாகும்.

ஜோர்டானில் உள்ள முவாஃபாக் அல் சால்டி விமானப்படைத் தளம் லெவண்ட் பிராந்தியத்தில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அமெரிக்க விமானப்படை மையத்தின் 332வது விமானப் பயணப் பிரிவுக்கு முக்கியமானது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

இரான் அதன் அண்டை இஸ்லாமிய நாடுகள் மீது தாக்குதல் நடத்துவது ஏன்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மத்திய கிழக்கு முழுவதும் இரான் தாக்குதல் - செளதி, இராக், குவைத், கத்தாரில் என்ன பாதிப்பு?

லெபனான் - இஸ்ரேல், ஹெஸ்பொலா

பட மூலாதாரம்,Reuters

2 மார்ச் 2026, 02:31 GMT

புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இரானைத் தொடர்ந்து லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியுள்ளது. லெபனானில் உள்ள ஹெஸ்பொலா இலக்குகளைத் தாக்கத் தொடங்கியுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது.

இஸ்ரேலை நோக்கிய ஹெஸ்பொலாவின் ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அதன் ஒரு அறிக்கை கூறுகிறது.

பெய்ரூட் மற்றும் தெற்கு லெபனான் பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 31 பேர் கொல்லப்பட்டதாகவும், 149 பேர் காயமடைந்ததாகவும் லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பெய்ரூட் மீது தாக்குதல்

பெய்ரூட்டில், உள்ளூர் நேரப்படி அதிகாலை 03:00 மணிக்கு சற்று முன்பு தொடர் வெடிப்புச் சத்தங்களால் மக்கள் விழித்துக் கொண்டனர். இரான் ஆதரவு பெற்ற ஹெஸ்பொலா ஆயுதக்குழு வடக்கு இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதற்குப் பதிலடியாக அதன் இலக்குகளை இஸ்ரேலிய இராணுவம் தாக்கத் தொடங்கியது.

பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் புகை மூட்டங்கள் எழுவதை சமூக ஊடகங்களில் வெளியான வீடியோ காட்டுகிறது.

விமான நிலைய சாலையிலும் வடக்கு நோக்கிச் செல்லும் முக்கிய நெடுஞ்சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதையும், இரவு வரை நீண்ட வரிசைகள் உருவாகி இருப்பதையும் வீடியோக்கள் காட்டுகின்றன. பெய்ரூட்டில் அது இன்னும் நீண்ட இரவாக இருக்கும்.

விமான நிலையத்திற்குச் செல்லும் பிரதான சாலையில் தாக்கத்தை ஆன்லைனில் உள்ள பிற படங்கள் காட்டுகின்றன. சேதமடைந்த கார்கள் மற்றும் உடைந்த கண்ணாடிகள் தெருவில் உள்ளன, ஆனால் சேதத்தின் அளவு தெளிவாகத் தெரியவில்லை.

ஹெஸ்பொலா இரானுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் இஸ்ரேலிய பொதுமக்களை குறிவைப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் ஒரு அறிக்கையில் குற்றம் சாட்டியிருந்தது.

"அந்த குழுவின் முடிவுக்கு" எதிராக செயல்படுவோம் என்றும், ஹெஸ்பொலா வடக்கு இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக இருக்க அனுமதிக்க மாட்டோம் என்றும் இஸ்ரேலிய ராணுவம் கூறியுள்ளது.

ஹெஸ்பொலாவின் நடவடிக்கைகள் லெபனானுக்கு மேலும் அழிவை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாகவும், தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு வலுவாக பதிலடி கொடுத்து வருவதாகவும் இஸ்ரேலிய ராணுவம் கூறியது.

லெபனான் - இஸ்ரேல், ஹெஸ்பொலா

பட மூலாதாரம்,Houssam Shbaro/Anadolu via Getty Images

படக்குறிப்பு,பெட்ரோல் நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் கார்கள்

இஸ்ரேலை தாக்கியதை உறுதிப்படுத்தியது ஹெஸ்பொலா

லெபனானில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை ஏவியதாக ஹெஸ்பொலா உறுதிப்படுத்தியுள்ளது.

இரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் விதமாக இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக அந்த குழு கூறியுள்ளது. இது "சட்டபூர்வமான தற்காப்பு நடவடிக்கை" என்றும் வடக்கு இஸ்ரேலில் உள்ள ஒரு ஏவுகணை தளத்தில் "துல்லியமாக இலக்கைத் தாக்கும் ராக்கெட்டுகள் மற்றும் டிரோன்களின் கூட்டத்தை" ஏவியதாக ஹெஸ்பொலா கூறியது.

ஆனால் இஸ்ரேலிய இராணுவத்தின் கூற்றுப்படி, இஸ்ரேலிய பிரதேசத்தில் திறந்தவெளியில் அந்த ஏவுகணைகள் விழுந்தன.

ஷியா முஸ்லிம் அரசியல் மற்றும் இராணுவக் குழுவான ஹெஸ்பொலாவுக்கு இரானின் வலுவான ஆதரவு உள்ளது. இந்த குழு இஸ்ரேலின் இருப்பையே எதிர்க்கிறது.

லெபனான் - இஸ்ரேல், ஹெஸ்பொலா

பட மூலாதாரம்,Anwar AMRO / AFP via Getty Images

படக்குறிப்பு,காமனெயிக்கு அஞ்சலி செலுத்த பெய்ரூட்டில் ஹெஸ்பொலா ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் திரண்ட மக்கள்

லெபனான் பிரதமர் எச்சரிக்கை

தெற்கு லெபனானில் இருந்து ராக்கெட்டுகளை ஏவுவதற்கு எதிராக எச்சரிக்கும் வகையில் லெபனான் பிரதமர் நவாஃப் சலாம் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

"தெற்கு லெபனானில் இருந்து ராக்கெட்டுகளை ஏவுவது ஒரு பொறுப்பற்ற மற்றும் சந்தேகத்திற்கிடமான செயலாகும், இது லெபனானின் பாதுகாப்பை ஆபத்தில் ஆழ்த்துகிறது. இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதல்களைத் தொடர சாக்குப்போக்குகளை வழங்குகிறது," என்று அவர் கூறுகிறார்.

இஸ்ரேலும் லெபனானும் 2024 இல் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தின் பேரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டன, இது இஸ்ரேல் - ஹெஸ்பொலா இடையே ஓராண்டுக்கும் மேலாக நீடித்த சண்டையை முடிவுக்குக் கொண்டு வந்தது. ஆனாலும் அப்போதிருந்தே இரு தரப்பினரும் போர் நிறுத்தத்தை மீறியதாக ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

13 மாத மோதலைத் தொடர்ந்து வந்த ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தபோதிலும், லெபனானில் ஹெஸ்பொலாவுடன் தொடர்புடைய இலக்குகள் என்று கூறி இஸ்ரேல் கிட்டத்தட்ட தினசரி தாக்குதல்களை நடத்தி வருகிறது.

அமெரிக்கப் படைகள் தளம் கொண்டுள்ள ஈராக்கின் எர்பில் சர்வதேச விமான நிலையத்தில், ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 1) அன்று கரும்புகை எழும்புவது போன்ற காட்சிகள் வெளியாகியுள்ளன.

பட மூலாதாரம்,Reuters

படக்குறிப்பு,அமெரிக்கப் படைகள் தளம் கொண்டுள்ள இராக்கின் எர்பில் சர்வதேச விமான நிலையத்தில், ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 1) அன்று கரும்புகை எழும்புவது போன்ற காட்சிகள் வெளியாகியுள்ளன.

தாக்குதலைத் தொடரும் இரான்

செளதி அரேபியாவின் எரிசக்தி அமைச்சகம், நாட்டின் அரசு எண்ணெய் நிறுவனமான அராம்கோவின் ராஸ் தனூரா சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

சுத்திகரிப்பு நிலையம் அருகில் பறந்த இரண்டு டிரோன்கள் இடைமறிக்கப்பட்டபோது விழுந்த சிதிலங்களால் சிறிய அளவு சேதம் ஏற்பட்டதாக செளதி பிரஸ் ஏஜென்சி கூறியுள்ளது.

பிபிசி உறுதிப்படுத்திய வீடியோவில், சுத்திகரிப்பு நிலையத்தில் தீ மற்றும் அதிக அளவில் புகை எழுவது காணப்படுகிறது.

செளதி அரேபியா நீண்ட காலமாக அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் ராணுவ தளங்களைக் கொண்டுள்ளது.

சனிக்கிழமை, சௌதி அரசு இரான் தாக்குதலைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டது.

செளதி, கத்தார், குவைத், இராக்கில்

பட மூலாதாரம்,Social media

தோஹாவில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததாக வந்த செய்திகளைத் தொடர்ந்து, பஹ்ரைன் மற்றும் துபையிலும் வெடிச்சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பிரெஞ்சு செய்தி நிறுவனமான ஏஎஃப்பி (AFP) தெரிவித்துள்ளது.

வடக்கு இராக்கின் குர்திஸ்தான் பிராந்தியத்தில் உள்ள எர்பில் விமான நிலையத்திற்கு மேலே மூன்று ஆயுதம் ஏந்திய டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கப் படைகள் தளம் கொண்டுள்ள அந்த விமான நிலையத்திற்கு அருகே பலத்த வெடிச்சத்தம் கேட்டதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் தெரிவித்ததைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் நடந்துள்ளது

குவைத் - இரான் - இஸ்ரேல் - அமெரிக்கா

பட மூலாதாரம்,AFP via Getty Images

குவைத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அல்லது அதன் அருகில் கரும்புகை எழும்புவதாக ஏஎஃப்பி மற்றும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

அப்பகுதியில் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் காணப்பட்டதாகவும் ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

மேலும், சமீபத்தில் வெளியாகியிருக்கும் புதிய படங்கள், குவைத் நகரத்தின் மீது புகைத் தூண்கள் எழுவது காட்டுகின்றன.

அங்குள்ள அமெரிக்க தூதரகம் அருகே தாக்குதல் நடந்திருக்கலாம் என்ற தகவல்களின் பின்னர் இது வெளியாகியுள்ளது. குவைத்தில் உள்ள அமெரிக்க குடிமக்கள் தூதரகத்திற்கு வர வேண்டாம் என்றும், வீட்டிலேயே பாதுகாப்பாக தங்கிக் கொள்ளவும் தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நேற்று, மத்திய கிழக்குப் பகுதியில் முழுவதும் இரான் தாக்குதல்கள் நடத்திய நிலையில், குவைத்தில் ஒருவரின் உயிரிழப்பு பதிவாகியுள்ளது. அமெரிக்காவின் கூட்டாளியான குவைத்தில் அமெரிக்க இராணுவத் தளம் உள்ளது. தங்களை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகளை தடுத்து நிறுத்தியதாகவும் குவைத் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், குவைத்தில் அமெரிக்க விமானம் தாக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது.

"இன்று காலை பல அமெரிக்க போர் விமானங்கள் கீழே விழுந்தன," என்று குவைத்தின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விமானப் பணியாளர்கள் "பாதிப்பின்றி உயிர் தப்பினர்" என்றும், அவர்கள் வெளியேற்றப்பட்டு உடல்நல பரிசோதனைக்காக மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர் என்றும் அது கூறியுள்ளது. அவர்களின் உடல்நிலை "நிலையாக உள்ளது" என்றும் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தின் "சூழ்நிலைகள்" குறித்து தனது அமெரிக்க கூட்டாளியுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாகவும், சம்பவத்தின் "காரணங்கள்" குறித்து விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

மத்திய கிழக்கு முழுவதும் இரான் தாக்குதல் - செளதி, இராக், குவைத், கத்தாரில் என்ன பாதிப்பு?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஈரான் தாக்குதல்?

Mar 2, 2026 - 05:58 PM

இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஈரான் தாக்குதல்?

ஈரான் அணு ஆயுத தயாரிப்பை நிறுத்த வேண்டும், யுரேனியம் செறிவூட்டலை நிறுத்த வேண்டும், நீண்ட தொலைவு சென்று தாக்கும் ஏவுகணை திட்டங்களை ரத்து செய்ய வேண்டும், மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் தனது கிளர்ச்சி படைகளின் செயல்பாட்டை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்டிரம்ப் வலியுறுத்தினார்.

ஆனால் இதற்கான ஒப்பந்தத்தில் ஈரான் கையொப்பமிட மறுத்தது. இதுதொடர்பாக அமெரிக்கா-ஈரான் இடையே நடைபெற்ற 2 சுற்று பேச்சுவார்த்தைகளிலும் சுமுகமான உடன்பாடு ஏற்படவில்லை.

அதைத் தொடர்ந்து, ஈரான் உடனடியாக ஒப்பந்தம் மேற்கொள்ளாவிட்டால் மோசமான பேரழிவைச் சந்திக்க நேரிடும் என்று டிரம்ப் மிரட்டல் விடுத்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இராணுவத்தினர் இணைந்து ஈரான் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். ஈரான் தலைநகர் தெஹ்ரான் உள்பட பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் ஈரான் அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.

தெஹ்ரானில் உள்ள கமேனியின் இல்லம் தரைமட்டமாக்கப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்தார்.

இந்த தாக்குதலில் கமேனியின் மகள், மருமகன் மற்றும் பேரப்பிள்ளை ஆகியோரும் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.

அலி கமேனி உயிரிழந்ததையடுத்து ஈரானில் 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் பஹ்ரைன், கட்டார், சவுதி அரேபியா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க படைத் தளங்கள் மீது ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தியது.

அதே சமயம், ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் தொடர்ந்து ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், டெல் அவிவ் நகரில் உள்ள இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை தெரிவித்துள்ளது.

அதே போல், இஸ்ரேல் விமானப்படை தளபதியின் இருப்பிடம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இந்த தாக்குதல்கள் கெய்பர் ஷேகான் பெலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் துல்லியமாக நடத்தப்பட்டதாகவும் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை குறிப்பிட்டுள்ளது.

ஆனால், தாக்குதல் நடத்தப்பட்ட சமயத்தில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அவரது அலுவலகத்தில் இருந்தாரா? என்ற விவரம் தெரியவில்லை.

இதனால் நெதன்யாகுவின் நிலை என்ன? அவர் உயிருடன் இருக்கிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும் இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் தரப்பில் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஈரான் தாக்குதல்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரானின் பதிலடி தாக்குதல் அமெரிக்க வான் பாதுகாப்பு அமைப்பின் திறன் பற்றி எழுப்பும் கேள்விகள்

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், மத்திய கிழக்கு, பஹ்ரைன்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படையின் ஐந்தாவது கடற்படை தலைமையகத்தை குறிவைத்து இரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது.

கட்டுரை தகவல்

  • ஜோனாதன் பீல்

  • பிபிசி பாதுகாப்பு செய்தியாளர்

  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படைத் தளத்தை இரான் குறிவைத்து தாக்குதல் நடத்தியிருப்பது அமெரிக்க வான் பாதுகாப்பு அமைப்பில் உள்ள பலவீனங்களை அம்பலப்படுத்தியது.

வெளிப்படையாக, இது அமெரிக்காவிற்கும் பிராந்தியத்தில் உள்ள அதன் கூட்டாளி நாடுகளுக்கும் கவலை அளிக்கும் செய்தியாக இருக்கும்.

பஹ்ரைனில் உள்ள அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படை பிரிவின் தலைமையகத்தைச் சுற்றி ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் தாக்குதல் நடத்தும் வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த செய்தி எழுதும் நேரம் வரை, இந்த தாக்குதலில் எந்த உயிரிழப்புகளும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.

இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்க இராணுவத்திற்கு சில எச்சரிக்கைகள் கிடைத்திருக்கலாம். முன்னெச்சரிக்கையாக, இங்கிருந்து அதன் பணியாளர்களை வெளியேற்றியிருக்கலாம்.

ஒப்பீட்டளவில், பஹ்ரைனின் மோசமான வான் பாதுகாப்பு காரணமாக, இரான் அதை ஒரு முக்கிய இலக்காகக் கண்டிருக்கலாம் என்று பிரிட்டிஷ் ராயல் கடற்படையின் முன்னாள் தளபதி டாம் ஷார்ப் கூறினார்.

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், மத்திய கிழக்கு, பஹ்ரைன்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,அமெரிக்க கடற்படையின் ஐந்தாவது பிரிவு தலைமையகம் மீதான இரானிய தாக்குதலுக்குப் பிறகு மேலெழும் புகை

அமெரிக்க வான் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிப்பு

மெதுவாக நகரும் இரானின் ஷாஹெட் ட்ரோன் அமெரிக்க வான் பாதுகாப்பு அமைப்பை தாண்டிச் செல்வதை ஒரு காணொளி காட்டுகிறது.

யுக்ரேனில், இதுபோன்ற டிரோன்களை சாதாரண இயந்திர துப்பாக்கியால் சுட்டு வீழ்த்த முடியும். கடந்த சில வாரங்களாக, அமெரிக்கா இந்தப் பகுதிக்கு அதிகமான வான் பாதுகாப்பு அமைப்புகளை அனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது, இதில் நவீன THAAD மற்றும் பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்புகளும் அடங்கும்.

இவற்றால் பாலிஸ்டிக் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்த முடியும், ஆனால் அவை மிகவும் அதிக மதிப்பு மிக்கவை. அவற்றின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

யுக்ரேனிடம் 10க்கும் குறைவான பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்புகள் உள்ளன. யுக்ரேன் தலைநகர் கீவை பாதுகாக்க அவை இன்னும் போராடி வருகின்றன என்பதன் மூலமும் இதைப் புரிந்து கொள்ளலாம்.

மத்திய கிழக்கில் உள்ள அனைத்து ராணுவ தளங்களையும் பாதுகாக்க போதுமான அளவு அவற்றை வைத்திருப்பது அமெரிக்காவிற்கு இன்னும் எளிதானது அல்ல.

அமெரிக்க கடற்படை வளைகுடா மற்றும் கிழக்கு மத்திய தரைக் கடலில் சுமார் ஒரு டஜன் ஆர்லீ பர்க் வகை போர்க் கப்பல்களை (Arleigh Burke-class destroyers) நிறுத்தியுள்ளது.

அவற்றில் உள்ள வான் பாதுகாப்பு அமைப்புகளால் டிரோன்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் சுட்டு வீழ்த்த முடியும். ஏமனில் இரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக செங்கடலில் அவை ஏற்கனவே திறம்பட செயல்பட்டுள்ளன.

2024 மற்றும் 2026 க்கு இடையில், அமெரிக்கா சுமார் 400 ஹூதி டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை இடைமறித்தது.

இந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க போர் விமானங்கள், டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை இடைமறிக்கும் திறன் கொண்டவை.

அமெரிக்கா தற்போது இந்தப் பகுதியில் 100க்கும் மேற்பட்ட போர் விமானங்களை நிலைநிறுத்தியுள்ளது. ஆனால் இந்த பெரிய திறன்களால் கூட இரான் சில இலக்குகளை வெற்றிகரமாக தாக்குவதைத் தடுக்க முடியவில்லை.

இந்தப் புதிய அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு முன்பு, இரான் சுமார் 2,000 குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளைக் கொண்ட ஆயுதக் களஞ்சியத்தைக் கொண்டிருந்திருக்கலாம். மேலும் பல ஒருவழி தாக்குதல் டிரோன்களையும் அது கொண்டுள்ளது.

இரானின் ஷாஹெட் டிரோன் ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு யுக்ரேன் முழுவதும் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. ரஷ்யா இப்போது ஒவ்வொரு மாதமும் இதுபோன்ற ஆயிரக்கணக்கான டிரோன்களை உற்பத்தி செய்து வருகிறது. இரானின் தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும் ரஷ்யா உதவியிருக்கலாம்.

ஷாஹெட் டிரோனால் யுக்ரேனில் பேரழிவு

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், மத்திய கிழக்கு, பஹ்ரைன்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு, இரானின் ஷாஹெட்-136 ட்ரோன் குறைந்த உயரத்தில் பறக்கிறது மற்றும் இதனை ரேடார் மூலம் கண்டறிவது கடினம். இது அதிகபட்சமாக 2,500 கிலோமீட்டர் தூரம் வரை பறந்து செல்லும்.

பிரிட்டிஷ் ராயல் கடற்படையில் தான் பணியாற்றிய காலத்தில், மத்திய கிழக்கில் உள்ள ஒரு ராணுவத் தளத்தின் மீது இரானிய தாக்குதலை உருவகப்படுத்தி போர் பயிற்சிகளை நடத்தியதாக ஷார்ப் கூறுகிறார்.

இந்தக் காலகட்டத்தில் ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் பெரும்பாலும் வரையறுக்கப்பட்ட வான் பாதுகாப்புப் பகுதிகள் வழியாகச் சென்றன.

ஆட்சி அச்சுறுத்தப்படுவதாக உணர்ந்து விரைவாகத் தாக்கினால், அமெரிக்கா இறுதியில் தாட் (THAAD) மற்றும் பேட்ரியாட் (Patriot) வான் பாதுகாப்பு அமைப்புகளை இழந்துவிடும் என்று அவர் கூறுகிறார்.

இரானின் டிரோன் மற்றும் ஏவுகணை திறன்கள் "மிகவும் விரிவானவை" என்றும் ஷார்ப் கூறினார்.

ஆனால், அமெரிக்க வெளியுறவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனமான ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான அறக்கட்டளை (Foundation for Defense of Democracies) மூத்த உறுப்பினரான எட்மண்ட் ஃபிட்டன்-பிரவுன், "இரான் பதிலடி கொடுக்க விரும்புகிறது என்பதற்கான சான்றுகள் இருக்கலாம், ஆனால் அதை ஒரு பெரிய மோதலாக விரிவாக்க விரும்பவில்லை" என்று கூறுகிறார்.

கடந்த ஆண்டு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்கள் இரானின் சில ராணுவத் திறன்களுக்கு எவ்வளவு சேதத்தை ஏற்படுத்தியுள்ளன என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று அவர் கூறுகிறார்.

"இரானின் பதிலடி மிகவும் லேசானதாக இருந்ததற்கான அறிகுறிகள் உள்ளன. யேமனில் ஹூதி கிளர்ச்சியாளர்களின் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் திறனை அமெரிக்கா சேதப்படுத்தினாலும் அவற்றை முற்றிலுமாக அழிக்கவில்லை என்பதை நினைவில் கொள்வது உகந்தது" என்று அவர் மேலும் கூறுகிறார்.

அமெரிக்காவிலிருந்து வெகு தொலைவில் போர்க்களம் உள்ளது

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், மத்திய கிழக்கு, பஹ்ரைன்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,இரானின் ஷாஹெட் டிரோன்கள் யுக்ரேன் முழுவதும் பேரழிவை ஏற்படுத்துகின்றன (கோப்புப் படம்)

வான்வழியே மட்டுமே நடத்தப்படும் போர்கள் அரிதாகவே வெற்றியையோ அல்லது அரசாங்கத்தை மாற்றுவதற்கான வாய்ப்பையோ அளிக்கின்றன.

2011-இல் லிபியாவிற்கு எதிரான நேட்டோ தலைமையிலான தாக்குதல் நடவடிக்கை ஒரு பெரிய விதிவிலக்காக இருக்கலாம். இருப்பினும் அது கணிசமான குழப்பத்தை அது ஏற்படுத்தியது.

இரானின் தாக்குதல் வரம்புக்குள் அமெரிக்க கடற்படை வந்தால் அதைத் தாக்கும் திறன் இரானுக்கு உள்ளது. அது கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளின் பெரிய தொகுப்பையும், சிறிய, வேகமான, ஆளில்லா தாக்குதல் படகுகளையும் கொண்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக சீனா இரானுக்கு இராணுவ ஆதரவை வழங்கியிருக்குமா என்பது இன்னும் பதிலளிக்கப்படாத மற்றொரு கேள்வியாகும்.

"ஆரம்ப தாக்குதல்கள் இரானின் தலைமையையும் இராணுவ சொத்துகளையும் சேதப்படுத்தக் கூடும், ஆனால் அமெரிக்கா தனது நடவடிக்கையைத் தொடர போராட வேண்டியிருக்கும். அதே நேரத்தில் இரான் அரசு தனது இருப்பை உறுதிப்படுத்திக் கொள்ள தன் நிலையை வெறுமனே தக்கவைத்துக் கொள்வதே போதுமானது" என்று அமெரிக்காவின் மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வு மையத்தின் டேனியல் பைமன் கூறினார்.

வான் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை யுக்ரேன் தெளிவாக நினைவூட்டுகிறது. அதிபர் ஸெலென்ஸ்கி தனது கூட்டாளிகளுக்கு விடுக்கும் மிக முக்கியமான கோரிக்கையாக இது இன்னும் உள்ளது. நூற்றுக்கணக்கான டிரோன்கள் மற்றும் டஜன்கணக்கான ஏவுகணைகளை உள்ளடக்கிய பல, சிக்கலான தாக்குதல்களுக்கு எதிராக பாதுகாத்துக் கொள்வது எவ்வளவு கடினம் என்பதையும் யுக்ரேன் நிகழ்வுகள் நிரூபிக்கின்றன.

அமெரிக்காவிடம் அதிக வலிமையும் வளங்களும் உள்ளன. அத்துடன் இஸ்ரேலுடன் இணைந்து இரானின் டிரோன் மற்றும் ஏவுகணை தொழிற்சாலைகளையும் ஏவுதளங்களையும் அமெரிக்கா குறிவைத்து தாக்கலாம்.

ஆனால் அந்த அச்சுறுத்தலை முற்றிலும் அகற்றுவது எளிதல்ல. நீடித்த போர் இரானுக்கு மட்டுமல்ல, அமெரிக்க ஆயுத இருப்பு மற்றும் சப்ளைக்கும் ஒரு சவாலாக இருக்கும். ஏனெனில் இது அமெரிக்காவிலிருந்து வெகு தொலைவில் நடத்தப்படும் ஒரு போர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

இரானின் பதிலடி தாக்குதல் அமெரிக்க வான் பாதுகாப்பு அமைப்பின் திறன் பற்றி எழுப்பும் கேள்விகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டது; கடந்து செல்ல முயற்சிக்கும் கப்பல்களைத் தாக்குவோம் - ஈரான் எச்சரிக்கை

Published By: Digital Desk 3

03 Mar, 2026 | 10:16 AM

image

ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி, இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்குப் பதிலடியாக, உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணை வழியாக எந்தவொரு கப்பலும் செல்ல அனுமதி இல்லை எனவும், மீறிச் செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் எனவும் ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஹோண்டுராஸ் நாட்டின் கொடி ஏந்திய 'ஏதி நோவா' என்ற எரிபொருள் கப்பல் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த கப்பல் தற்போது தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கப்பல் அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட்டதாகவும், அமெரிக்க கடற்படைக்கு எரிபொருள் வழங்கியதாகவும் ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் போக்குவரத்து இந்தப் பாதை வழியாகவே நடைபெறுகிறது.

இந்த நீரிணை உலகின் மிக முக்கியமான எண்ணெய் ஏற்றுமதி பாதையாகும், இது சவுதி அரேபியா, ஈரான், ஈராக் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற மிகப்பெரிய வளைகுடா எண்ணெய் உற்பத்தியாளர்களை ஓமன் வளைகுடா மற்றும் அரேபிய கடலுடன் இணைக்கிறது.

இந்த பாதை மூடப்பட்மையினால் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை கடுமையாக அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டது; கடந்து செல்ல முயற்சிக்கும் கப்பல்களைத் தாக்குவோம் - ஈரான் எச்சரிக்கை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க விமானத் தளம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

Mar 4, 2026 - 09:20 AM

அமெரிக்க விமானத் தளம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

மத்திய கிழக்கிலுள்ள மிகப்பெரிய அமெரிக்க இராணுவத் தளமான அல் உதைத் (Al Udeid) விமானத் தளம் மீது ஈரானிய ஏவுகணை ஒன்று தாக்கியுள்ள போதிலும், உயிர்ச்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று கட்டார் தெரிவித்துள்ளது.

ஈரானில் இருந்து தமது நாட்டுக்கு ஏவப்பட்ட மற்றுமொரு ஏவுகணையை தாம் வெற்றிகரமாக வழிமறித்துள்ளதாக கட்டார் பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.

இதேவேளை, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையுடன் (IRGC) தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் 10 பேரை தாம் கைது செய்துள்ளதாக கட்டார் அறிவித்துள்ளது.

கட்டாரில் IRGC சார்பாக செயற்பட்டதாகக் கருதப்படும் இரண்டு குழுக்களை அதிகாரிகள் கைது செய்துள்ளதாக அந்நாட்டு அரச செய்தி நிறுவனமான QNA குறிப்பிட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் ஏழு பேர் கட்டாரின் இராணுவ நிலைகளை உளவு பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும், ஏனைய மூவரும் ட்ரோன்களைப் பயன்படுத்தி "சதிவேலைகளை" முன்னெடுப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"முக்கியமான இடங்களின் வரைபடங்கள், தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றும் தொழில்நுட்ப உபகரணங்கள் என்பனவும் அவர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளன" என QNA செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க விமானத் தளம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.