Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'அடிமனை அரங்கநாதனுக்கே': ஸ்ரீரங்கம் கோவில் வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு ஒரு லட்சம் பேரை பாதிக்கும் என்ற அச்சம் ஏன்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

'அடிமனை அரங்கநாதனுக்கே': ஸ்ரீரங்கம் கோவில் வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு ஒரு லட்சம் பேரை பாதிக்கும் என்ற அச்சம் ஏன்?

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில், திருச்சி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு, பிபிசி கள ஆய்வு

கட்டுரை தகவல்

காவிரி ஆற்றின் கரையோரமுள்ள ஸ்ரீரங்கம், கடந்த சில வாரங்களாக பேசுபொருளாக மாறியுள்ளது. இதற்கு காரணம், ஸ்ரீரங்கம் கோவில் அடிமனை விவகாரம்.

'அடிமனைகள் அனைத்தும் அரங்கநாத சுவாமிக்கு சொந்தம்' என, பிப்ரவரி 20 ஆம் தேதி திருச்சி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் சுமார் ஒரு லட்சம் பேர் வெளியேற்றப்படும் நிலை வரும் என்று அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

"பூர்வீகமாக வாழ்ந்து வருவதால் இடம் தங்களுக்கே சொந்தம்" என இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

"கோவில் நிலத்துக்கு தனி நபர்கள் உரிமை கோருவதை அனுமதிக்க முடியாது" என இந்துசமய அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

கோவில் அடிமனை விவகாரத்தின் பின்னணியை அறிவதற்கு களத்துக்குச் சென்றது பிபிசி தமிழ்.

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில்

திருச்சியில் இருந்து சுமார் எட்டு கி.மீ தொலைவில் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. 108 வைணவ கோவில்களில் முதன்மையானதாக இந்தக் கோவில் உள்ளதாக இந்துசமய அறநிலையத்துறை கூறுகிறது.

பன்னிரு ஆழ்வார்களால் பாடப்பெற்ற கோவிலாக ஸ்ரீரங்கம் உள்ளது எனவும் பூலோக வைகுண்டம் என்று இந்தக் கோவில் அழைக்கப்படுவதாகவும் இந்துசமய அறநிலையத்துறை இணையதளம் கூறுகிறது.

காவிரி ஆற்றினால் சூழப்பட்ட திருநாவலந்தீவில் 236 அடி ராஜகோபுரம் உள்பட 21 கோபுரங்களுடன் 156 ஏக்கர் பரப்பளவில் அரங்கநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது.

அடிமனை என்று கூறுவது ஏன்?

கோவிலுக்கு வெளியில் நான்கு உத்தரவீதிகள், நான்கு சித்திரவீதிகள், நான்கு அடையவளைஞ்சான் (கோவில் பிரகாரத்தைச் சுற்றியுள்ள வீதிகள்) உள்பட 329 ஏக்கர் நிலத்தில் சுமார் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதாகக் கூறுகிறார், ஸ்ரீரங்கம் நகர நலச் சங்கத்தின் தலைவர் சுரேஷ் வெங்கடாச்சலம்.

ஸ்ரீரங்கம் கோவில் நிலங்களை 'அடிமனை' என கோவில் நிர்வாகம் கூறுகிறது. 1998ஆம் ஆண்டு இனாம் ஒழிப்பு தீர்ப்பாயத்தின் தீர்ப்பிலும் இதே வார்த்தையை நீதிபதி பயன்படுத்தியுள்ளார்.

மனையின் அடியில் உள்ள நிலம் என்பதைக் குறிக்கும் வகையில் 'அடிமனை' என்ற வார்த்தைப் பயன்படுத்தப்பட்டு வருவதாகக் கூறுகிறார், சுரேஷ் வெங்கடாச்சலம்.

கோவிலின் பராமரிப்பு செலவுக்காக தேவதாயம் (Devadayam) என்ற பெயரில் சுற்றியுள்ள நிலங்கள் மானியமாக வழங்கப்பட்டுள்ளன. இதுதொடர்பான விவரங்கள் 1864 ஆம் ஆண்டு இனாம் காட்சிப் பதிவேட்டில் (Inam Fair Register) பதிவாகியுள்ளது.

"தமிழ்நாட்டில் 1963 ஆம் ஆண்டு இனாம் ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி 1969 ஆம் ஆண்டு இனாம் ஒழிப்பு தாசில்தார் விசாரணை நடத்தி கோவில் நிலத்தில் குடியிருந்த மக்களுக்கு பட்டா வழங்கினார்" என சுரேஷ் வெங்கடாச்சலம் குறிப்பிட்டார்.

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில், திருச்சி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு, பிபிசி கள ஆய்வு

படக்குறிப்பு,"ஸ்ரீரங்கம் கோவிலைச் சுற்றி வசிக்கும் மக்கள் மட்டுமல்லாமல் அருகில் உள்ள திருவானைக்காவல் பகுதியில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இந்தத் தீர்ப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர்" எனக் கூறுகிறார், ஸ்ரீரங்கம் நகர நலச் சங்கத்தின் தலைவர் சுரேஷ் வெங்கடாச்சலம்.

மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய நீதிபதி

ஆனால், 'இந்த பட்டா செல்லாது' எனவும் இனாம் ஒழிப்புச் சட்டத்தின்கீழ் கோவில் நிலங்கள் வராது எனவும் அரங்கநாத சுவாமி தேவஸ்தானம் சார்பில் 1981 ஆம் ஆண்டு இனாம் ஒழிப்பு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இனாம் ஒழிப்பு தீர்ப்பாயம் (Inam Abolition Tribunal) என்பது பல்வேறு காரணங்களுக்காக வழங்கப்பட்ட இனாம் நிலங்களை ரத்து செய்து அவற்றுக்கு பட்டா வழங்குவதற்காகவும் இதுதொடர்பான பிரச்னைகளை தீர்க்கவும் அமைக்கப்பட்டது.

சுமார் 1500 பேருக்கு வழங்கப்பட்ட பட்டாவுக்கு எதிராக இந்த வழக்கை கோவில் நிர்வாகம் தொடர்ந்திருந்தது. 1998ஆம் ஆண்டு இந்த வழக்கில் தீர்ப்பளித்த இனாம் ஒழிப்பு தீர்ப்பாய நீதிபதி பொன்.கலையரசன், 'அடிமனை கோவிலுக்கு சொந்தம்; மனையில் உள்ள கட்டடம் மக்களுக்கு சொந்தம்' எனத் தீர்ப்பளித்தார்.

இதனை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஸ்ரீரங்கம் பகுதி மக்கள் வழக்கு தொடர்ந்தனர். கடந்த 2023ஆம் ஆண்டு இந்த வழக்கில் தீர்ப்பளித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, 1998ஆம் ஆண்டு பொன்.கலையரசன் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது.

'தங்களுக்கே முழு நிலமும் சொந்தம்' என அறிவிக்குமாறு கோரி உச்ச நீதிமன்றத்தில் ஸ்ரீரங்கம் பகுதி மக்கள் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்தநிலையில், பிப்ரவரி 20 ஆம் தேதி திருச்சி மாவட்ட நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில் தரப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. கோவிலைச் சுற்றி வசிக்கும் 41 பேர் வசிக்கும் இடத்தைக் காலி செய்து தங்களிடம் நிலத்தை ஒப்படைக்குமாறு கோவில் நிர்வாகம் அந்த மனுவில் கோரியிருந்தது.

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில், திருச்சி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு, பிபிசி கள ஆய்வு

'அடிமனைகள் அரங்கநாத சுவாமிக்கு சொந்தம்'

சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கில் திருச்சி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சுமார் 700 பக்கங்கள் கொண்ட தீர்ப்பில் பல்வேறு விஷயங்களை நீதிபதி சுவாமிநாதன் மேற்கோள் காட்டியுள்ளார்.

சொத்துகளின் முழு உரிமையாளராக கோவில் நிர்வாகம் இருப்பதாக முந்தைய வழக்குகளில் கூறப்பட்டுள்ளதாகவும் தனக்குள்ள உரிமை அடிப்படையில் கோவில் நிர்வாகம் உரிமை கோருவதாகவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'கோவில் நிலத்தில் குடியிருக்கும் மக்கள் 30.9.1951ஆம் ஆண்டுக்கு முன்பு தங்களுக்கோ அல்லது தங்களின் முன்னோடிகளுக்கோ இவற்றில் உரிமை இருந்தது என்பதை நிரூபிப்பதற்கு சட்டப்பூர்வமான எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்கவில்லை' என நீதிபதி தெரிவித்துள்ளார்.

குடியிருப்புவாசிகள் சமர்ப்பித்த ஆவணங்கள் பலவும் அர்ச்சகர்கள் உள்பட பல்வேறு உரிமைகளில் நடந்த பரிவர்த்தனைகளை மட்டுமே காட்டுவதாக தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

அந்த வகையில், 'ஸ்ரீரங்கம் கோவில் அடிமனைகள் அனைத்தும் அரங்கநாத சுவாமிக்கு சொந்தம்' எனவும் கோவில் நிலத்தின் குடியிருக்கும் மக்கள் மூன்று மாதங்களுக்குள் இடத்தைக் காலி செய்து நிலத்தை கோவிலுக்கு ஒப்படைக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, 2023 ஆம் ஆண்டில் மதுரை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், 'கட்டடம் மக்களுக்கு சொந்தம்' எனக் கூறப்பட்ட நிலையில், காலி இடத்தை ஒப்படைக்குமாறு மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

"ஸ்ரீரங்கம் கோவிலைச் சுற்றி வசிக்கும் மக்கள் மட்டுமல்லாமல் அருகில் உள்ள திருவானைக்காவல் பகுதியில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இந்தத் தீர்ப்பால் பாதிக்கப்படுவார்கள்ர்" எனக் கூறுகிறார், ஸ்ரீரங்கம் நகர நலச் சங்கத்தின் தலைவர் சுரேஷ் வெங்கடாச்சலம்.

'நிம்மதியாக தூங்க முடியவில்லை'

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில், திருச்சி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு, பிபிசி கள ஆய்வு

படக்குறிப்பு,"இந்த வீடு ஒன்று தான் எங்களுக்கு இருக்கும் ஒரே சொத்தாக உள்ளது. எனக்குத் திருமணம் முடிந்து 50 வருடங்களுக்கு மேலாக இங்கு தான் வசித்து வருகிறோம்" என்கிறார், திருவள்ளுவர் நகரில் வசிக்கும் ஜான்சிராணி.

ஸ்ரீரங்கத்தில் உத்தரவீதிகள், சித்திரவீதிகள், அடையவளஞ்சான் தெருக்களில் வசிக்கும் மக்களிடம் பிபிசி தமிழ் பேசியது.

"இந்த வீடு ஒன்று தான் எங்களுக்கு இருக்கும் ஒரே சொத்தாக உள்ளது. எனக்குத் திருமணம் முடிந்து 50 வருடங்களுக்கு மேலாக இங்கு தான் வசித்து வருகிறோம்" என்கிறார், திருவள்ளுவர் நகரில் வசிக்கும் ஜான்சிராணி.

கொரோனா தொற்று காலத்தில் கணவரை இழந்த இவர், தனது மகன்களுடன் வசித்து வருகிறார். "சுமார் 17 வருடங்களாகவே இது கோவில் நிலம் எனப் பேசி வருகின்றனர். நிம்மதியாக தூங்குவதற்கு ஓர் இடம் உள்ளது என நினைத்தோம். அதற்கும் பிரச்னையை ஏற்படுத்துகின்றனர்" என்கிறார் அவர்.

நீதிமன்றத் தீர்ப்பு குறித்துப் பேசும் ஜான்சிராணி, "இப்படியொரு தீர்ப்பை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நாங்களும் பெருமாளைக் கும்பிடுகிறவர்கள் தான். 90 நாள்களுக்குள் காலி செய்ய வேண்டும் என்றால் எங்கே போய் நிற்பது?" எனக் கேள்வி எழுப்புகிறார்.

கோவில் நிலம் எனக் கூறி 2007ஆம் ஆண்டு 329 ஏக்கரில் அமைந்துள்ள நிலங்களுக்கு பத்திரப்பதிவை மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகக் கூறுகிறார், கலைச்செல்வி.

இவர் தெற்கு அடையவிளைச்சான் பகுதியில் சுமார் 60 வருடங்களுக்கும் மேலாக வசித்து வருகிறார். "எனது முன்னோர் 1921 ஆம் ஆண்டில் இருந்தே இதே தெருவில் தான் வசித்து வருகின்றனர். இந்த சொத்தின் பத்திரத்தைக் கூட இப்போது எங்களால் அடமானம் வைக்க முடியவில்லை" என்கிறார் அவர்.

"வீடு கட்டுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் அனுமதி தருவதில்லை. ஆனால், வீட்டு வரி, குடிநீர் வரி ஆகியவற்றை தவறாமல் செலுத்தி வருகிறோம்" என்று கலைச்செல்வி கூறினார்.

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில், திருச்சி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு, பிபிசி கள ஆய்வு

படக்குறிப்பு,"வீடு கட்டுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் அனுமதி தருவதில்லை. ஆனால், வீட்டு வரி, குடிநீர் வரி ஆகியவற்றை தவறாமல் செலுத்தி வருகிறோம்" என்கிறார் கலைச்செல்வி

'தேர்தலை புறக்கணிப்போம்'

அடிமனை பிரச்னையால் மனதளவில் தனது குடும்பத்தினர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார், இதே பகுதியில் வசிக்கும் ஜெகதீஸ்வரி.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், " எனது கணவர், பூ சந்தையில் மூட்டை தூக்கும் வேலை செய்கிறார். தினமும் 200 ரூபாய் வரை வருமானம் வருகிறது. எங்களால் வேறு இடத்தில் வாடகை கொடுத்து வாழ முடியாது" என்கிறார்.

தற்போது குடியிருக்கும் வீட்டை சில ஆண்டுகளுக்கு முன்பு கடன் வாங்கிக் கட்டியதாகக் கூறும் ஜெகதீஸ்வரி, "கோவில் நிலம் எனத் தெரிந்திருந்தால் வீடு கட்டியிருக்க மாட்டோம். வாங்கிய கடனை இன்னும் கட்டி வருகிறோம்" எனக் கூறுகிறார்.

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில், திருச்சி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு, பிபிசி கள ஆய்வு

படக்குறிப்பு,தற்போது குடியிருக்கும் வீட்டை சில ஆண்டுகளுக்கு முன்பு கடன் வாங்கிக் கட்டியதாகக் கூறும் ஜெகதீஸ்வரி, "கோவில் நிலம் எனத் தெரிந்திருந்தால் வீடு கட்டியிருக்க மாட்டோம். இன்னமும் கடனை கட்டி வருகிறோம்" எனக் கூறுகிறார்.

'அரசே ரத்து செய்தது சரியல்ல'

"இனாம் ஒழிப்புச் சட்டத்தின்படி அரசே முன்வந்து மக்களுக்கு பட்டா கொடுத்தது. அதை அரசே ரத்து செய்தது எந்த வகையிலும் நியாயம் அல்ல" என்கிறார், ஸ்ரீரங்கம் நகர குடியிருப்போர் நலச் சங்க தலைவர் சுரேஷ் வெங்கடாச்சலம். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தலையிட்டு பிரச்னைக்கு நிரந்தர தீர்வை அளிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலின் இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் சிவராம்குமாரிடம் நேரில் பேச பிபிசி தமிழ் முயன்றது. ஆனால், அந்த முயற்சி பலன் தரவில்லை.

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில், திருச்சி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு, பிபிசி கள ஆய்வு

இதையடுத்து, இந்துசமய அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையர் கவிதாவிடம் பிபிசி தமிழ் பேசியது.

"கோவிலுக்கு 329 ஏக்கர் நிலமும் சொந்தம் என்பதற்கான ஆவணங்கள் முழுமையாக உள்ளன. உண்மையில் 454 ஏக்கர் நிலம் சொந்தமாக இருந்தது. சாலை உள்பட இதர பயன்பாடுகளைத் தவிர்த்து மற்றவை கோவிலுக்கு சொந்தமானவையாக உள்ளன" என்கிறார் அவர்.

"அனைவரிடமும் பணம் வாங்கி கோவிலை நடத்த வேண்டிய அவசியம் இல்லை" எனக் கூறும் கூடுதல் ஆணையர் கவிதா, "ஆனால் அந்த நிலம் கோவிலின் சொத்து என்பதை அனைவரும் ஏற்க வேண்டும் என்பது தான் இதில் முக்கியமானது" எனக் கூறுகிறார்.

கோவில் சொத்து என்பதை ஏற்றுக் கொண்டால் அதற்கேற்ப வரி வசூல் செய்ய வேண்டும் என 2003 ஆம் ஆண்டிலேயே அரசுக்குப் பரிந்துரை அளித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

"சுமார் 100 ஆண்டுகளுக்கு மேல் கோவில் நிலங்களில் மக்கள் குடியிருந்துள்ளனர். அவர்களை அப்புறப்படுத்த வேண்டும் என எந்த இடத்திலும் கூறவில்லை" எனக் கூறும் கவிதா, "கோவில் சொத்துகளை உரிய அனுமதியின்றி அனுபவிப்பதை ஏற்க முடியாது" என்றார்.

'இருமுறை பேசினேன்' - எம்.எல்.ஏ பழனியாண்டி

ஸ்ரீரங்கம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ பழனியாண்டியிடம் பிபிசி தமிழ் பேசியது.

"கோவில் அடிமனைப் பிரச்னை தொடர்பாக சட்டமன்றத்தில் இரண்டு முறை பேசியிருக்கிறேன். இதற்கென குழு அமைத்து பிரச்னையைத் தீர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறேன்" என்று மட்டும் பதில் அளித்தார்.

'காலம் காலமாக வசிக்கும் தங்களுக்கே நிலம் சொந்தம்' என ஸ்ரீரங்கம் பகுதி மக்கள் கூறினாலும், வரியை ஏற்றால் மட்டுமே சுமூக தீர்வு ஏற்பட வாய்ப்புள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

'அடிமனை அரங்கநாதனுக்கே': ஸ்ரீரங்கம் கோவில் வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு ஒரு லட்சம் பேரை பாதிக்கும் என்ற அச்சம் ஏன்?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.