Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுமுறையில் வாங்கிய  வில்லங்கமான நகை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுமுறையில் வாங்கிய  வில்லங்கமான நகை

விடுமுறைக்கு நாட்டுக்குப் போவதாக இருந்தால் பொதுவாக என் குடும்பத்தைத் தவிர வேறு யாரிடமும் அதை ப்  பற்றி நான் கதைப்பதில்லை.

“எதற்கு வில்லங்கத்தைச் சும்மா வாங்க வேண்டும்?” என்ற  உயரிய எண்ணம்தான் அதன் காரணம்.

ஆனால், சில சமயம் வில்லங்கம், நாங்கள் தேடாமல் எங்களைத் தேடித் தானாக வந்து விடும்.

அடுத்த நாள் எனது பயணம். செய்ய வேண்டிய வேலைகள் சில இருந்தன. அப்போது அலைபேசி அழைத்தது. அழைப்பு நியூசிலாந்தில் இருந்து வந்திருந்தது. அங்கு வசிக்கும் எனது உறவினர் ஒருவர். என்னை “தம்பி” என்று உரிமையோடு அழைப்பார். நானும் அவரின் பெயரின் பின்னால் “அக்கா” சேர்த்துஅழைப்பேன்.

“என்ன, சிறீலங்கா போறியாம்?”

“சிறீலங்காவுக்கா? யார் சொன்னது?”

“விடாதை . கதை விடாதை . எனக்குத் தெரியும். சிறீலங்காவிலையிருந்து எனக்கொரு தாலிக்கொடி வாங்கி அனுப்பிவிடுறியே?”

தங்கம் விற்கும் விலையில் தாலிக்கொடி வாங்க வேண்டுமா என்ற எண்ணத்தில் தலை சுற்ற ஆரம்பித்தது. நல்லவேளை அவர் அடுத்ததாகச் சொன்னவார்த்தைகளில் நான் தப்பித்தேன்.

“பவுணில இல்லை. இமிட்டேஷன் தாலிக்கொடி. இஞ்சை  எனக்குத்  தெரிஞ்ச ஒருத்தியின்ரை மகளுக்கு கொஞ்ச நாளைக்கு முன் கல்யாணம் நடந்தது. அவையள் ஹொலிடேக்குப் போயினம். போற இடத்திலை சொந்தக்காரர்கள்  வீட்டுக்கும் போவினம். பவுண்  தாலிக்கொடியை போட்டுக் கொண்டு போய் எதுவும் நடந்தாலும் எண்டு பயப்படுயினம். அதுக்குத்தான். வெள்ளவத்தையில வாங்கலாம். ‘யாழ்ப்பாணத் தாலிக்கொடி’ என்று கேள். வட்டமா இருக்கும்.”

IMG_6122

நான் பயணத்தை யாரிடமும் சொல்லாமல் இருக்க முயன்றாலும், வில்லங்கம் எப்படியோ என்னைத் தேடி வந்துவிடும் போல. இந்த இமிட்டேஷன் யாழ்ப்பாணத் தாலிக்கொடியே அதற்கான ஆரம்பமாக இருக்கப் போகிறது என்று அப்போது எனக்குத் தெரியவில்லை.

கொழும்பில் நான் வழமையாகத் தங்குவது என் நண்பன் கணேசனின் வீட்டில். அவன் சட்டத்தரணியாக இருந்த காலத்தில் மாலை நேரத்தில் மட்டும் “தீர்த்தம்” அருந்துவான். இப்போது வயதும் ஓய்வும் சேர்ந்து, மதியம் ,மாலை இரு வேளைகளிலும் தீர்த்தக் களிப்பில் இருக்கிறான்.

IMG_6020

இந்த வருடப் பொங்கலை அவனுடனேயே கொண்டாடினேன். 40, 45 வருடங்களுக்கு பிறகு நான் காணும் பொங்கல் அது. பொங்கல் முடிந்து இரண்டுநாட்களுக்குப்  பிறகு நியூசிலாந்து அக்கா கேட்ட யாழ்ப்பாணத் தாலிக்கொடி நினைவுக்கு வந்தது. அதை வாங்கி அனுப்பிவிட்டு அடுத்த வேலையைப்பார்க்கலாம் என்று கடைகள் ஏறி இறங்கிக் கொண்டிருந்தேன்.

நான் வாங்கி வந்த தாலிக்கொடியைப் பார்த்து கணேசனின் மனைவி உடனேயே சொன்னார், “பிழையா வாங்கிட்டீங்கள். இது இமிட்டேஷன் என்று அப்பிடியே காட்டிக்குடுக்கும்.” சொன்னதோடு மட்டும் நின்று விடாமல், தனது கழுத்தில் இருந்த தடித்த  தாலிக்கொடியைக் காட்டினார்.

“இது செய்து எத்தினை வருசமாச்சுது . செத்த பாம்பு மாதிரி இருக்குது. அவன் வாங்கினது சரிதான். யாழ்ப்பாணத் தாலிக்கொடி இப்பிடித்தான். இதுதான் இப்ப பாஷன்” என்று கணேசன் என்னைக் காப்பாற்றினான்.

“சிவபெருமான் கழுத்தில சுத்தியிருக்கிற பாம்பு மாதிரி…” என்று முணுமுணுத்தபடி கணேசனின் மனைவி எங்களை விட்டு அகன்றார்.

அடுத்த நாள் அந்த யாழ்ப்பாணத் தாலிக்கொடியை நியூசிலாந்துக்கு அனுப்பி வைத்தேன்.

அந்தத்  தாலிக்கொடி வாங்கச் சென்றபோது ஒரு கடையில் பார்த்த ஒரு விளம்பரம் என்னைச்  சற்று யோசிக்க வைத்தது.

“மாணிக்கக்கற்கள் பொருந்திய நகைகள் 40% முதல் 60% வரை தள்ளுபடி” என்று ஒரு கண்காட்சி விளம்பரம்.

சும்மா போய் பார்த்து வரலாம் என்று நினைத்து அந்த கண்காட்சிக்குச் சென்றேன். இடம் கொள்ளுப்பிட்டிய.

7eafa802-166f-4dc7-b733-1d67d277a368

அங்கு சென்றபோது, மூன்று ஊழியர்களும் ஒரு காவலாளியும் தவிர வேறு யாரும் இல்லை. அப்போதே திரும்பி வந்திருக்க வேண்டும். ஆனால் மாறாக உள்ளேபோனேன்.

அங்கு சபையர் கல் பதித்த ஒரு மோதிரம் என்னைக் கவர்ந்தது. அவர்கள் சபையரை பரிசோதித்து காட்டினார்கள். மோதிரம் 14 கரட் என்று சொன்னார்கள். விலையையும் குறைத்துத் தந்தார்கள். நான் வாங்கிவிட்டேன்.

யேர்மனிக்குத்  திரும்பினேன். சிறீலங்காவில் +30°C யேர்மனியில் -12°C என காலநிலை இருந்தது. நேரமாற்றமும் குளிரும் சேர்ந்து நீண்ட நேரம் தூங்கிக்கொண்டிருந்தேன். எழுந்தபோது சூட்கேஸ் எல்லாம் திறந்து ஒழுங்கு படுத்தப்பட்டிருந்தது. உடுப்புகள் தோயலுக்குப் போயிருந்தன. கொண்டு வந்தபொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றுக்குள் மோதிரப் பெட்டியும் இருந்தது.

மனைவியை ஆச்சரியப்படுத்த வாங்கி வந்த மோதிரம்.

“நல்ல வடிவான மோதிரம்,” என்றாள்.

கண்காட்சியில் வாங்கிய விபரத்தைச் சொன்னேன். ஆனால் அந்த மோதிரத்தை நான் மீண்டும் பார்த்தபோது, வாங்கிய போது இருந்த கவர்ச்சி கல்லில்இப்போது குறைந்திருப்பது போல எனக்குத் தோன்றியது. தவறு கல்லிலா? இல்லை நீண்ட நித்திரையில் இருந்த என் கண்களிலா?

அந்தச்   சந்தேகத்தை அப்போது மனைவியிடம் சொல்லவில்லை. அவளது மகிழ்ச்சி வீணாகிவிடக் கூடாது என்று நினைத்தேன்.

இரண்டு நாட்களுக்கு பிறகு வழமையான வாழ்க்கைக்கு திரும்பியபோது என் சந்தேகத்தை மனைவியிடம் கூறினேன்.

“கடையில குடுத்துக் கேட்டால் அதன் பெறுமதி சொல்லிவிடுவினம். வேணுமென்டால் நான் கேட்டுப் பார்க்கிறன்,” என்றாள்.

அடுத்த நாள் முடிவு தெரிந்தது.

மோதிரம் 14 கரட் தங்கம். அதில் பொருத்தியிருந்தது உண்மையிலேயே சபையர் கல்லுதான். ஆனால் அதன் தரம் வெறும் 0.9 கரட் மட்டுமே.

வாங்கி வந்தேன் ஒரு வாழைமரம்

வந்தபின்னே அது தாழைமரம்

அதாவது நான் கொடுத்த பணத்தின் மதிப்புக்கு ஏற்ற கல் இல்லை. நான் பார்த்த மோதிரத்தை மாற்றி வேறு ஒன்றைத் தந்திருக்கலாம் என்ற சந்தேகம்உறுதியாகியது.

அவர்களின் விவரங்களை இணையத்தில் தேடியபோது, நான் தனியாளாக இல்லை. எனக்குத் துணைகளும் இருப்பது தெரிந்தது.  என்னைப் போல சிலவெளிநாட்டவர்களும் ஏமாற்றப்பட்டிருப்பது அங்கே பதியப்பட்டிருந்தன. 

யேர்மனியில் என்றால் இப்படிப்பட்ட விஷயங்களைச் சட்டப்படி சுலபமாக கையாளலாம். ஆனால் சிறீலங்காவில் நடந்த விஷயம். அதுவும் நான் யேர்மனியில்இருந்து கொண்டே முடியுமா?

“விட்டு விடலாமா?” என்ற எண்ணம் ஒரு கணம் வந்தது. உடனேயே அந்த எண்ணத்தை  மாற்றிவிட்டேன்.

என்னைப் போல இன்னும் எத்தனை பேரை இவர்கள் ஏமாற்றப் போகிறார்கள்? குறைந்தபட்சம் சிலருக்காவது இது பற்றி எச்சரிக்கையைத் தரவேண்டும்

முதலில் யேர்மனியில் உள்ள சிறீலங்கா தூதரகத்துக்கு முழு விவரத்தையும் எழுதினேன். அவர்கள் உடனடியாக பதில் அனுப்பினார்கள், “இந்த தீவிரமானவிஷயத்தை எங்கள் கவனத்திற்கு கொண்டுவந்ததற்கு நன்றி. உங்கள் புகாரை விசாரணைக்காக இலங்கையில் உள்ள தொடர்புடைய அதிகாரிகளுக்குஅனுப்பியுள்ளோம். தகவல் கிடைத்தவுடன் தெரிவிப்போம்.”

அடுத்ததாக என் வங்கியையும் தொடர்புகொண்டேன்.

அவர்கள் சொன்னது, “நீங்கள் வாங்கிய பொருள் உங்களிடம் இருக்கிறது. ஆகவே நேரடியாக பணத்தைத்  திரும்பப் பெற முடியாது. அந்தப் பொருளைஅவர்களிடம் ஒப்படைத்து அவர்கள் பெற்றுக்கொண்டதாக உறுதிப்பத்திரம் கிடைத்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும்.”

மோதிரம்  வாங்கிய ரசீதைப் பார்த்தேன். அதில்,

“Goods once sold can be exchanged only” என்று இருந்தது.

ஆனால் நான் விடவில்லை.

அவர்களுக்கும் ஒரு கடிதம் எழுதினேன், “வாங்கிய பொருள் தரமற்றது. கொடுத்த பணத்தின் மதிப்புக்கு ஏற்ப இல்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. பொருளைத்  திருப்பி அனுப்புகிறேன். பணத்தை என் வங்கி கணக்கில் வரவு வைக்கவும். 14 நாட்களில் பதில் வரவில்லை என்றால் சட்ட நடவடிக்கைஎடுப்பேன்.”

காத்திருந்து சரியாக 14வது நாள் அவர்கள் பதில் அனுப்பினார்கள்.

“நாங்கள் விற்ற பொருள் தரமானது. திருப்பிப் பெற முடியாது.”

எதிர்பார்த்த பதில்தான். “அப்படியானால் நான் சட்ட நடவடிக்கை எடுக்கிறேன். உங்களின் இறுதிப் பதிலுக்கான கால எல்லை  நாளை சிறீலங்கா நேரம் 14:00வரை” எனப் பதில் அனுப்பினேன்.

மீண்டும் நான் எதிர்பார்ததபடி நேர எல்லைக்குள் அவர்களிடம் இருந்து பதில் வந்தது, “நேரடியாக எங்கள் நிறுவனத்துக்கு வாருங்கள். நாங்கள் பேசித்தீர்க்கலாம்”

“நன்றி. நான் இந்த விவகாரத்தை சட்டப்படி அணுகுகிறேன்” என அவர்களுக்கு பதிலைத் தந்துவிட்டு, அடுத்து நான் நாடியது சிறீலங்காவின் Tourist Police.

மறுநாள் மாலை நேரம், கணேசனிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

“எதுக்கு உன்னுடைய Power of Attorneyயை எனக்கு அனுப்பியிருக்கிறாய்? அதென்ன மோதிரம்? எப்ப வாங்கினனீ? ”

விஷயத்தைச் சொன்னேன்.

அவன் போனில் கன நேரம் என்னைத் திட்டிக் கொண்டிருந்தான். மாலை நேரமாக இருந்ததால் அவன் தமிழ் தறி கெட்டு ஓடிக் கொண்டிருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

சில விடயங்களுக்கு உள்ளூர் அனுபவ ஆட்டக்காறரரைத் தான் களத்தில இறக்கவேணும் ஐயா.

இந்த வில்லங்கத்தால எங்களுக்கு ஒரு கதை கிடைச்சதே!

அது சரி @Kavi arunasalam ஐயா அந்த நகல் தாலிக்கொடி தவறாகவில்லை தானே?!

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விழிப்புணர்வுக் கதைக்கு நன்றி . ....... பவுன், நகை விடயங்களில் போலிகள் நிறைந்து விட்டதால் யாரையும் நம்ப முடிவதில்லை..... எனக்கும் பவுன் சம்பந்தமான சில வேலைகள் இது போன்ற நம்பிக்கையீனங்களால் தாமதமாகிக் கொண்டு போகிறது . ......!

பகிர்வுக்கு நன்றி கவி . படங்கள் நன்று . ......!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.