Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்காவின் பாதுகாப்பு உத்தரவாதம் கானல் நீரா? வளைகுடா நாடுகளில் நிலவும் கோபமும் ஏமாற்றமும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் பாதுகாப்பு உத்தரவாதம் கானல் நீரா? வளைகுடா நாடுகளில் நிலவும் கோபமும் ஏமாற்றமும்

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், வளைகுடா நாடுகள், மத்திய கிழக்கு, துபை, கத்தார், சௌதி அரேபியா

பட மூலாதாரம்,FADEL SENNA / AFP via Getty Images

கட்டுரை தகவல்

  • பவுலா ரோசாஸ்

  • பிபிசி நியூஸ் முண்டோ

  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

கடந்த தசாப்தங்களில், லெபனான் மீது குண்டுகள் விழுந்தபோதும், இராக் நாட்டின் மக்கள் நெரிசல்மிக்க சந்தைகளில் தற்கொலைப் படைத் தாக்குதல்தாரிகள் தங்களை வெடிக்கச் செய்தபோதும் சிரியாவில் வெளிநாட்டுத் தொழிலாளர்களை இஸ்லாமிக் ஸ்டேட் (ஐ.எஸ்) கடத்தி கொடூரமான முறையில் தலையை துண்டித்தபோதும், துபை ஒரு தொடர்ச்சியான கொண்டாட்ட இடமாகவே இருந்தது.

உலகின் செல்வந்தர்கள் அதன் கடற்கரைகளை ஒட்டி உள்ள செயற்கைத் தீவுகளில் மாளிகைகளை வாங்கினர், அபுதாபியின் லூவ்ரே அருங்காட்சியகத்தில் உலா வந்தனர் அல்லது கத்தார் பாலைவனத்தில் சஃபாரிகளை மேற்கொண்டனர்.

போர்கள், போராட்டங்கள் மற்றும் நிலையற்ற தன்மையால் உலுக்கப்பட்ட ஓர் அண்டைப்பகுதியில், பாரசீக வளைகுடா நாடுகள் பல ஆண்டுகளாகப் பாதுகாப்பு மற்றும் செழிப்பின் புகலிடமாக இருக்கும் பிம்பத்தை வளர்த்தெடுத்தன.

அவர்களின் முயற்சிகள் மற்றும் அவர்களின் சாதகமான வரி கொள்கைகள் ஆயிரக்கணக்கான மில்லியன் டாலர் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தன. துபை, அபுதாபி அல்லது தோஹா போன்ற நகரங்களை உலகின் கோடீஸ்வரர்களுக்கும் சொகுசு சுற்றுலாவுக்கும், அதே போல் சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மாநாடுகளுக்கும் விருப்பமான இடங்களாக மாற்றின.

அந்தக் கானல்நீர் பிப்ரவரி 28 அன்று உடைந்தது.

அன்று, இரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல் ஒரு போரைத் தூண்டியது, அதில் தெஹ்ரான் இஸ்ரேலிய நகரங்கள் மற்றும் இப்பகுதியில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது குண்டுகளை வீசி பதிலடி கொடுத்தது மட்டுமல்லாமல், வளைகுடாவில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்கும் பதிலடி கொடுத்துள்ளது.

இந்த முடியாட்சிகள் தாங்கள் நாடாத ஒரு மோதலில் திடீரென சிக்கிக்கொண்டன.

"அவர்கள் எக்காரணம் கொண்டும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இதில் ஈடுபட வேண்டாம் என்று தடுத்து நிறுத்த முயன்றனர்," என்று ஐரோப்பிய அமைதி நிறுவனத்தின் வளைகுடா நிபுணரான அன்னா ஜேக்கப்ஸ் கலாஃப் பிபிசி முண்டோவிடம் விளக்குகிறார்.

கத்தார், எமிரேட்ஸ், குவைத், பஹ்ரைன், செளதி மற்றும் ஓமானி மக்கள், அதே போல் பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டினர் மற்றும் சுற்றுலாப் பயணிகள் திகிலுடன் பார்த்துக்கொண்டிருந்தபோது, இரானிய ஏவுகணைகள் திடீரென வணிக வளாகங்கள், சொகுசு வானளாவிய கட்டடங்கள் மற்றும் படகுகள் நிறைந்த துறைமுகங்களுக்கு அருகில் விழுந்தன.

உலகின் மிகவும் ஆடம்பரமான சில ஹோட்டல்களையும் போர் எட்டியுள்ளது. இடைமறிக்கப்பட்ட ஒரு இரானிய ட்ரோனின் சிதறல்கள் துபை புர்ஜ் அல் அரப் மீது விழுந்தன, அதே நேரத்தில் பாம் ஜுமேரா செயற்கைத் தீவில் உள்ள ஃபேர்மாண்ட் தி பாம் நேரடியாகத் தாக்கப்பட்டது.

மேலும் கடந்த புதன்கிழமை, ராஸ் லாஃபன் தொழில் வளாகத்தில் ஏவுகணைத் தாக்குதல்களால் "பரந்த சேதத்தை" சந்தித்ததாக கத்தாரின் அரசு எண்ணெய் நிறுவனம் கூறுகிறது.

அவர்களின் சவுத் பார்ஸ் (South Pars) எரிவாயு வயல் வசதிகள் இஸ்ரேலிய தாக்குதல்களால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் செய்திகளுக்குப் பிறகு, தான் "தீர்க்கமான நடவடிக்கை" எடுப்பேன் என்று இரான் விடுத்த எச்சரிக்கையில் குறிப்பிடப்பட்ட இடங்களுள் ராஸ் லாஃபனும் ஒன்றாகும்.

இதன் விளைவுகள் அழிவுகரமானதாக இருக்கின்றன, மேலும் வளைகுடா தலைநகரங்களில் கோபம் உச்சத்தில் உள்ளது.

விமானங்கள், ஹோட்டல் முன்பதிவுகள், மாநாடுகள் மற்றும் பஹ்ரைன் மற்றும் செளதி அரேபியாவில் நடைபெறும் ஃபார்முலா 1 போன்ற சர்வதேச நிகழ்வுகள் ரத்தால் இந்த பணக்கார முடியாட்சி நாடுகளைத் தாக்கியுள்ளது.

இதனுடன் ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டதும் சேர்ந்துள்ளது, இது அவர்களின் எரிபொருள் ஏற்றுமதியை முடக்கியுள்ளது.

கானல்நீர் கரைந்ததா?

"வளைகுடா நாடுகள் மத்திய கிழக்கில் பாதுகாப்பான புகலிடங்கள் என்ற பிம்பத்தை உருவாக்க உழைத்துள்ளன. கடந்த வாரத்தின் நடவடிக்கைகள் மற்றும் நிகழ்வுகள் அந்த பிம்பத்தை மங்கச் செய்துள்ளன," என்று குவைத் பல்கலைக்கழகப் பேராசிரியரும், குவைத் பிரதமரின் அமைச்சரவையின் முன்னாள் துணைத் தலைவருமான பத்ர் அல் சைஃப் பிபிசி-யிடம் ஒப்புக்கொண்டார்.

இந்த பிராந்தியம் ஆடம்பரத்திலும் பாதுகாப்பிலும் முதலீடு செய்துள்ளது.

இப்பகுதியின் முடியாட்சி நாடுகள், அனைத்தும் சர்வாதிகார அமைப்புகள், கண்காணிப்பில் பெரும் முதலீடுகளைச் செய்துள்ளன, இது பயங்கரவாதத்திலிருந்து அவர்களைப் பாதுகாப்பாக வைத்திருந்தது, ஆனால் அவை அதிருப்தியாளர்களையும் அல்லது அவர்களின் பிம்பத்தைப் பாதிக்கக்கூடிய எதையும் வேட்டையாடின.

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், வளைகுடா நாடுகள், மத்திய கிழக்கு, துபை, கத்தார், சௌதி அரேபியா

பட மூலாதாரம்,Planet Labs PBC via REUTERS

படக்குறிப்பு,இடைமறிக்கப்பட்ட ஏவுகணையின் சிதறல்கள் ஜெபல் அலி துறைமுகத்தில் மோதின.

உதாரணமாக, இந்த மூன்று வாரப் போரில், இரானிய தாக்குதல்களின் வீடியோக்களை வெளியிட்டதற்காக வெளிநாட்டினர் உட்பட டஜன் கணக்கான மக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டினர், சுற்றுலாப் பயணிகள் மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களை ஈர்க்கும் முயற்சியில், இந்த பழமைவாத முஸ்லிம் நாடுகளில் குறிப்பிட்ட இடங்களில் மதுபானத்திற்கு அனுமதி; ஓரினச்சேர்க்கையின் பகிரங்க வெளிப்பாடுகளுக்கு அனுமதி இல்லை என சில வரம்புகளுடன் கூடிய அனுமதியை வழங்கியுள்ளன.

இது, குறைந்த அல்லது வரி இல்லாத சூழலுடன் சேர்ந்து, கடந்த தசாப்தங்களில் அந்நாடுகளைப் பிரபலமாக்கியது, மேலும் ஒரு முக்கியமான சுற்றுலாத் தலமாகவும் மாற்றியது.

ஆனால், போர் இந்த அனைத்து முயற்சிகளையும் சோதனைக்கு உட்படுத்துகிறது.

ஃபைனான்சியல் டைம்ஸ் மேற்கோள் காட்டிய உலகப் பயணம் மற்றும் சுற்றுலா கவுன்சிலின் தரவுகளின்படி, சுற்றுலாத் துறை மட்டும் இந்த பிராந்தியத்தில் ஒரு நாளைக்கு சுமார் 600 மில்லியன் அமெரிக்க டாலர்களை இழந்து வருகிறது.

இந்த கூட்டமைப்பு இந்தாண்டு இப்பகுதியில் சுற்றுலா மூலம் 207,000 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கிடைக்கும் என்று கணித்திருந்தது.

ஏர்பிஎன்பி மற்றும் விஆர்பிஓ போன்ற தளங்களில் செய்யப்பட்ட முன்பதிவுகளிலிருந்து ஏர்டிஎன்ஏ குழு சேகரித்த தரவுகளின்படி, மார்ச் 6 வாரத்தில் துபை நகரில் 80,000-க்கும் மேற்பட்ட குறுகிய காலம் வாடகைக்கு தங்கும் பதிவுகள் ரத்து செய்யப்பட்டன.

விமான ரத்துகளும் மில்லியன் கணக்கான பயணிகளைத் தவிக்க விட்டுள்ளன.

கடந்த தசாப்தங்களில், வளைகுடா பகுதி ஒரு உண்மையான சர்வதேச விமான இணைப்பு மையமாக மாறியுள்ளது, அங்கு தினமும் 500,000-க்கும் அதிகமான பயணிகள் கடந்து செல்கின்றனர்.

பிப்ரவரி 28 முதல், குறைந்தது மூன்று விமான நிலையங்கள் - துபை, குவைத் மற்றும் அபுதாபி - இரானிய ஏவுகணைகள் அல்லது ட்ரோன்களால் பாதிக்கப்பட்டுள்ளன, இது ஆயிரக்கணக்கான விமான ரத்துகளுக்குக் காரணமானது.

பாதுகாப்பு பிம்பம் "ஒரு பகுதி செயற்கையானது, ஆனால் ஒரு பகுதி உண்மையானது, ஏனென்றால் வளைகுடா நாடுகள் தசாப்தங்களாக மோசமான பிராந்திய வன்முறையிலிருந்து தங்களை உண்மையில் தனிமைப்படுத்திக்கொள்ள முடிந்தது," என்று ஹார்வர்ட் கென்னடி பள்ளியின் பெல்ஃபார் மையத்தின் ஆராய்ச்சியாளர் எல்ஹாம் ஃபக்ரோ பிபிசி முண்டோவிடம் விளக்குகிறார்.

முதலீட்டாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் நம்பிக்கையை மீட்டெடுப்பது "சாத்தியம்" என்று ஃபக்ரோ கருதுகிறார், "ஆனால் அது மோதல் எவ்வளவு காலம் நீடிக்கிறது என்பதைப் பொறுத்தது."

ஏமாற்றமும் கோபமும்

வளைகுடா நாடுகளை இலக்காக மாற்றிய இரான் உடனான போர் மிகவும் அதிக இழப்பை ஏற்படுத்துவதாக மாறி வருகிறது, இது அதன் குடிமக்கள் மற்றும் ஆட்சியாளர்கள் மத்தியில் கோபத்தையும் ஏமாற்றத்தையும் உருவாக்குகிறது.

போருக்குள் தங்களை இழுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முடிவை மிகவும் வெளிப்படையாக விமர்சித்த பொது நபர் எமிரேட்ஸை சேர்ந்த கோடீஸ்வர தொழிலதிபர் கலாஃப் அகமது அல் ஹப்தூர் ஆவார்.

"நமது பிராந்தியத்தை இரான் உடனான போருக்குள் இழுக்க அவருக்கு அதிகாரம் கொடுத்தது யார்? மேலும் இந்த அபாயகரமான முடிவை எடுக்க அவர் எதை அடிப்படையாகக் கொண்டார்?" என்று அல் ஹப்தூர் அமெரிக்க அதிபருக்கு எழுதிய சமீபத்திய கடிதத்தில் கேள்வி எழுப்பினார், அதில் அவர் "விசையை அழுத்துவதற்கு முன்பு கூடுதல் சேதங்களைக் கணக்கிட்டாரா?" என்றும் கேட்டிருந்தார்.

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், வளைகுடா நாடுகள், மத்திய கிழக்கு, துபை, கத்தார், சௌதி அரேபியா

பட மூலாதாரம்,Christopher Pike/Getty Images

படக்குறிப்பு,90% மக்கள்தொகையினர் வெளிநாட்டினராக உள்ள துபை போன்ற நகரங்கள், மத்திய கிழக்கை உலுக்கும் நிலையற்ற தன்மையிலிருந்து விலகி வாழ்வது போல் தோன்றியது.

"வளைகுடா தலைநகரங்களில் நிலவும் வஞ்சிக்கப்பட்ட உணர்வு கணிசமானது, இருப்பினும் இது சிறிது காலத்துக்குப் பகிரங்கமாக வெளிப்பட வாய்ப்பில்லை," என்று எல்ஹாம் ஃபக்ரோ விளக்குகிறார்.

வளைகுடா நாடுகள் அமெரிக்காவுடனான தங்கள் உறவில் பெருமளவு முதலீடு செய்துள்ளன, மற்றவற்றுடன் அமெரிக்க ராணுவ தளங்களை ஏற்றுக்கொள்வது, தளவாடங்களை எளிதாக்குவது, மிகப்பெரிய முதலீடுகளைச் செய்ய உறுதியளிப்பது மற்றும் அமெரிக்காவின் பிராந்திய கொள்கையுடன் இணைந்திருப்பதால் ஏற்படும் உள்நாட்டு அரசியல் விலையை ஏற்றுக்கொள்வது ஆகியவை இதில் அடங்கும்.

"அதற்கு ஈடாக, தவிர்க்க முடியாமல் தங்களை இலக்குகளாக மாற்றும் ஒரு போருக்கு முன்பு, குறைந்தபட்சம் தங்களைக் கலந்தாலோசிப்பார்கள் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் அப்படி நடக்கவில்லை. அவர்கள் செய்த எதற்காகவும் அல்ல, மாறாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் எடுத்த முடிவுகளால் இரானிய ஏவுகணைகள் அவர்களின் தலைநகரங்கள், விமான நிலையங்கள், எண்ணெய் உள்கட்டமைப்புகள் மற்றும் நிதி மாவட்டங்களைத் தாக்கின," என்று ஃபக்ரோ குறிப்பிடுகிறார்.

லண்டனைத் தளமாகக் கொண்ட சேத்தம் ஹவுஸ் ஆய்வு மையத்தின் ஆராய்ச்சியாளர் நீல் குல்லியமும் வளைகுடா தலைநகரங்களில் இப்போது "பெரும் கோபம் உணரப்படுகிறது" என்பதை ஒப்புக்கொள்கிறார், இருப்பினும் தற்போதைக்கு "அவர்களால் பெரிதாக எதுவும் செய்ய முடியாது மற்றும் அவர்கள் அதை எந்தப் பொது மன்றத்திலும் வெளிப்படுத்த வாய்ப்பில்லை." என சொல்கிறார்.

அமெரிக்கா அவர்களைப் புறக்கணிப்பது இது முதல் முறையல்ல.

2015-இல் இரான் உடனான அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானபோது, "தெஹ்ரானுடனான எந்தவொரு உடன்படிக்கையிலும் தாங்கள் ஓர் அங்கமாக இருக்க வேண்டும் என்று எப்போதும் கோரி வந்த வளைகுடா நாடுகள் விலக்கி வைக்கப்பட்டன," எனவே இந்த புதிய ஓரங்கட்டப்படுதல் "அவர்களின் உணர்வுகளைப் பாதிக்கிறது."

பாதுகாப்பு உத்தி

ஷா ரேஸா பஹ்லவியை வீழ்த்தி இரான் இஸ்லாமியக் குடியரசை அறிவித்த புரட்சிக்குப் பிறகு வளைகுடா முடியாட்சி நாடுகள் தங்கள் பாரசீக அண்டை நாட்டுடன் பதற்றமான உறவையே கொண்டுள்ளன.

இரான் ஒரு அரபு நாடு அல்ல, அது பெரும்பான்மையான ஷியாக்களைக் கொண்டுள்ளது - வளைகுடா நாடுகள் பெரும்பான்மையாக சுன்னி முஸ்லிம்களைக் கொண்டுள்ளன - மேலும் அது 1979 புரட்சிக்குப் பிறகு இப்பகுதியில் அமெரிக்காவின் பெரும் எதிரியாகத் தன்னைக் நிலைநிறுத்திக் கொண்டது, அதே அமெரிக்காவுக்கு அரபு முடியாட்சி நாடுகள் நட்பு நாடுகளாக உள்ளன.

இந்த வழியில், வளைகுடா நாடுகள் குறிப்பாக செளதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் கத்தார், அமெரிக்காவுடனான அந்தத் தொடர்பைச் சுற்றித் தங்கள் பாதுகாப்பைக் கட்டமைத்தன.

"அவர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் நேட்டோவின் 5-வது விதிக்கு (ஒரு உறுப்பினர் தாக்கப்பட்டால் மற்றவர்கள் அவரது பாதுகாப்புக்கு வருவார்கள்) இணையான ஒன்றை அதாவது அவர்களைப் பாதுகாக்க அமெரிக்கா உறுதியளிக்க வேண்டும் என்ற நிலையை கொண்டிருக்க முயன்றனர்," என்று நீல் குல்லியம் பகுப்பாய்வு செய்கிறார்.

1990-இல் சதாம் ஹுசைனின் இராக்கால் ஆக்கிரமிக்கப்பட்டு, வாஷிங்டன் தலைமையிலான கூட்டணியால் விடுவிக்கப்பட்ட குவைத்தின் முன்மாதிரியே இதற்கு குறிப்புப் புள்ளியாக இருந்தது.

ஆனால் 2019-இல் இரான் செளதி அரேபியாவின் எண்ணெய் உள்கட்டமைப்பு மீது குண்டு வீசியபோது அல்லது 2025-இல் கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் தலைவர்களை இஸ்ரேல் குண்டு வீசிக் கொன்றபோது, அமெரிக்கா கைகளைக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்தது.

வாஷிங்டன் தங்கள் மீட்க வராது என்ற உணர்வு விரிவடைந்தது, மேலும் இந்த நாடுகளில் சில தங்கள் சொந்த பாதுகாப்புத் துறையை உருவாக்கத் தொடங்கியுள்ளன மற்றும் தங்கள் பாதுகாப்புத் தொடர்புகளைப் பன்முகப்படுத்தத் தொடங்கியுள்ளன.

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், வளைகுடா நாடுகள், மத்திய கிழக்கு, துபை, கத்தார், சௌதி அரேபியா

பட மூலாதாரம்,Anadolu via Getty Images

படக்குறிப்பு,பஹ்ரைனின் மனாமாவில் உள்ள அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படை தளம் போன்ற வளைகுடாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீதும் இரான் தாக்குதல் நடத்தியது.

வளைகுடா நாடுகள் மூன்று தொடர்புடைய அனுமானங்களைச் சுற்றித் தங்கள் பாதுகாப்பைக் கட்டமைத்தன என்று எல்ஹாம் ஃபக்ரோ கூறுகிறார்: வெளிப்புற அச்சுறுத்தல்களுக்கு எதிராக அமெரிக்கா முக்கிய உத்தரவாததாரராகச் செயல்படும், இரான் உடனான பதற்றக் குறைப்பு நேரடி மோதலின் அபாயத்தைக் குறைக்கும் மற்றும் சிலருக்கு இஸ்ரேலுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட உறவுகளை ஏற்படுத்துவது உத்தி ரீதியான நன்மைகளைத் தரும்.

இந்த உத்திகள் "வளைகுடா அரசுகளுக்கு அமெரிக்கா, இரான் மற்றும் இஸ்ரேல் ஆகியவற்றுக்கு இடையே ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் இல்லாமல் ஒரு சமநிலையைப் பராமரிக்க அனுமதிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தன," என்று பெல்ஃபார் மைய ஆராய்ச்சியாளர் குறிப்பிடுகிறார்.

இரான் போர் அந்த கூட்டணியின் வரம்புகளை அம்பலப்படுத்தியுள்ளது.

சிலர் துருக்கி அல்லது பாகிஸ்தான் போன்ற பிற நாடுகளுடன் தங்கள் ராணுவ ஒத்துழைப்பைப் பன்முகப்படுத்தத் முடிவெடுக்கலாம், ஆனால் நீல் குல்லியத்தின் கருத்துப்படி, "அமெரிக்காவை விட்டு விலகிச் செல்ல அவர்களுக்கு நீண்ட காலம் எடுக்கும்", ஏனென்றால் அந்தப் பயிற்சி, ஆயுத அமைப்புகள் அல்லது விமான ஒப்பந்தங்கள் பல குறைந்தது 20 ஆண்டுகள் நீடிக்கின்றன.

தலைக்கு மேல் தொங்கும் கத்தி

தாங்கள் தேர்ந்தெடுக்காத ஒரு போரில் வளைகுடா நாடுகளுக்கு இன்று என்ன வழி உள்ளது?

எளிதான வழி எதுவும் இல்லை என்று நிபுணர்கள் கருதுகின்றனர். ஆனால் மோதல் எவ்வளவு சீக்கிரம் முடிகிறதோ அவ்வளவு குறைவாகவே சேதம் இருக்கும்.

குறுகிய கால போர் நிறுத்தம் மீட்புப் பணிகளைத் தொடங்க அனுமதிக்கும் என்று எல்காம் ஃபக்ரோ குறிப்பிடுகிறார்.

ஆனால் ஒரு நீண்ட காலப் போர் மாதந்தோறும் சேதத்தை அதிகப்படுத்தும், வெளிநாட்டுத் தொழிலாளர்களின் வெளியேற்றத்தையும் துபை போன்ற பொருளாதாரங்கள் சார்ந்திருக்கும் மூலதனம் வெளியேறுவதையும் துரிதப்படுத்தும்.

அது மட்டுமல்ல. வளைகுடா நாடுகளுக்கு ஹோர்மூஸ் நீரிணை மூடப்படுவதால் ஏற்படும் பொருளாதார இழப்பை ஒரு போர் நிறுத்தத்தின் மூலம் மட்டுமே நீடித்த முறையில் தடுக்க முடியும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விரும்புவது போல வலிமையின் மூலம் ஒருபோதும் முடியாது என்று நீல் குல்லியம் கருதுகிறார்.

இழப்புகள் எப்படியிருந்தாலும் பெரிதாக இருக்கும், ஏனெனில் சில நாடுகள் உற்பத்தியை நிறுத்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளன, மேலும் போருக்கு முன்பு இருந்த நிலைக்கு அதை மீண்டும் கொண்டு வர அவர்களுக்கு குறைந்தது ஐந்து அல்லது ஆறு மாதங்கள் ஆகலாம்.

போர் இன்றே முடிவுக்கு வந்தாலும், அதன் வீழ்ச்சி தற்போதைக்கு நிகழ வாய்ப்பில்லை என்று தோன்றும் இரானிய ஆட்சியின் அச்சுறுத்தல், வளைகுடா மீது தலைக்கு மேல் தொங்கு கத்தி போல தொடர்ந்து தொங்கிக்கொண்டிருக்கும்.

"இன்னும் இரண்டு மாதங்களில், அணுசக்தி திட்டம் அல்லது பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டத்தில் ஏதேனும் நகர்வைக் கண்டறிந்திருப்பதாகவும், மீண்டும் தாக்குவதாகவும் இஸ்ரேல் கூறக்கூடும்," என்று சேத்தம் ஹவுஸ் ஆராய்ச்சியாளர் கூறுகிறார். "அப்போது இரானிய மக்கள் பதிலடி கொடுப்பார்கள்."

ஐரோப்பிய அமைதி நிறுவனத்தின் அன்னா ஜேக்கப்ஸ் கலாஃப் குறிப்பிடுவது போல, வளைகுடா நாடுகள் "புவியியலை மாற்ற முடியாது", அவை 90 மில்லியன் மக்களைக் கொண்ட ஒரு பரந்த நாட்டின் அண்டை நாடுகள். "மேலும் அவர்கள் தங்கள் நாடுகளுக்கும் உலகளாவிய எரிசக்தி சந்தைகளுக்கும் தொடர்ந்து அச்சுறுத்தல் விடுப்பதைத் தவிர்க்க இரானின் புதிய தலைவர்களுடன் இணைந்து வாழ்வதற்கான ஒரு வழியைக் கண்டறிய வேண்டும்."

சமீபத்திய ஆண்டுகளில் அவர்கள் செய்து வந்தது போல சீனாவின் மத்தியஸ்தத்துடன் செளதி அரேபியாவும் இரான் நாடும் தங்கள் தூதரக உறவுகளை மீண்டும் நிலைநிறுத்தியபோல், மீண்டும் பேச்சுவார்த்தைக்குத் திரும்புவது ஒரு வழியாக இருக்கலாம்.

"வளைகுடா அரசுகள் இரான் நாட்டுடன் தங்கள் சொந்த நிபந்தனைகளின் அடிப்படையில் தங்கள் சொந்த உறவுகளைக் கட்டமைப்பதே ஒரே நீடித்த தீர்வு ஆகும்," என்று ஹார்வர்ட் ஆராய்ச்சியாளர் கருதுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cy41l2kljemo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.