Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உங்களால் முடியாது - சோம.அழகு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உங்களால் முடியாது!

- சோம.அழகு

தொண்ணூறுகள் வரை பிறந்த பெண்கள் எப்படியெல்லாம் பாதுகாக்கப்பட்டனர்(!) என்பதைப் பற்றித்தான் இக்கட்டுரை. இதை அநீதியாகப் பார்த்த சில விவரமறியாதவர்கள், ‘ஏன்?’ ‘எங்ஙனம்?’, ‘எவ்வாறு?’ என்றெல்லாம் மண்டையைப் போட்டுப் பிசைந்த போதுதான் மண்டைக்காடு அருகில் உள்ள எழுத்திட்டான் பாறையில் சில முக்கிய குறிப்புகள் அடங்கிய கல்வெட்டுகள் இருப்பதாகத் தகவல் கிடைத்தது. ஆண் இனத்திற்கு மட்டுமே புரியும் Menglish மொழியில் எழுதப்பட்ட கட்டளைகள் அடங்கிய குறிப்புகள். காலப்போக்கில் அக்குறிப்புகள் ஆடவர்களின் மரபணுவில் நிரந்தரமாகவும் இயல்பாகவும் ஏறிவிட்டதாம். அக்கட்டளைகளை ‘Immediate family members who happen to be the supposedly the weaker sex too’ – இவர்களிடம் செவ்வனே சிரமேற்கொண்டு நிறைவேற்றி ‘வந்த’ (அடுத்த தலைமுறையில் மாற்றம் துவங்கியிருக்கிறது என நம்ப விழைகிறேன்!) Rhada’man’thine வகையறாவுக்கு முதற்கண் நம் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் …. ஆமா, உங்களை யாரு இப்ப ரொம்பச் சரியா இதை வஞ்சப் புகழ்ச்சி தொனியில் வாசிக்கச் சொன்னது?

இனி கூகுள் மொழியாக்கத்துடன் ‘பெரும்பாலான’ ஆண்களுக்காக அருளப்பட்ட அக்குறிப்புகளின் தொகுப்பு தமிழில்: [‘பெரும்பாலான’ – என்ன ஒரு அற்புதமான வார்த்தை! நான் கூற வரும் விஷயத்தில், இந்த அருமையான சொல்லை விட்டு விடலாம்தான். ஆனால் ‘எல்லா ஆண்களும் ஒன்றும் அப்படி அல்ல” என்று அரிதிலும் அரிதான எடுத்துக்காட்டுகள் (‘அவ்வாறு இருக்கிறார்களா?’ என்பதே அலசி அலுப்படைய வேண்டிய விஷயம்!) மட்டுமே பூதக்கண்ணாடி வழியாகப் பேசப்படும். எனவே இவ்வார்த்தையைச் சும்மானாங்காட்டி போட்டு வைப்போம். அனைவரும் தாம் ‘மிச்சச்சொச்ச’ பிரிவில் நிற்பதாகத் தம்மைத் தாமே நம்ப வைத்து ஆசுவாசமடைந்து கொள்ளட்டுமே!]

பலதரப்பட்ட பெண்களுடன் உரையாடியதில் கீழுள்ளவை அனைத்தும் உண்மை என உறுதிபடுத்தப்பட்டுள்ளன.

Driving liberates a woman – எவ்வளவு பெரிய தான்தோன்றித்தனமும் மூடத்தனமும் நிறைந்த வாசகம்! இதை முக்காலத்திலும் மடவரல் எவரும் உணர்ந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

(circa கி.பி 1980) இளங்கன்று பயமறியாது. எனவே அப்பிராயத்தில் வண்டி ஓட்டிப் படிக்கும் ஆசை அரிவைகளுக்குத் துளிர் விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதையும் மீறித் துளிர் விட்டால் வேரோடு பிடுங்கிப் பிய்த்துக் களையெடுப்பு செய்தல் வேண்டும். ‘ஒழுங்கா காலேஜ் படிச்சு முடிக்குற வழிய பாரு’, ‘கல்யாணத்துக்கு அப்புறம் வண்டி ஓட்ட படிச்சுக்கோ’, ‘பச்சப்புள்ளைய கைல வச்சுக்கிட்டு இந்த ஆச என்னத்துக்கு இப்ப?’ என இருக்கவே இருக்கின்றன பல ஆயுதங்கள். வாழ்க்கையில் எது முதன்மையானது என்ற குழப்பத்தில் இருக்கும் அவர்களுக்கு நல்வழி காட்டுவது நம் தலையாய கடமையன்றோ? குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு வண்டி ஓட்டுவதைப் பற்றி நினைக்கக் கூட தைரியம் வராது.

அபூர்வமாக முப்பதுகளுக்குப் பிறகு அந்தத் தைரியம் பேரிளம் பெண்களிடம் எட்டிப் பார்ப்பதாக தெரிந்தால் ‘நேரம் எங்க இருக்கு?’, ‘கண்ணு தெரியாத வயசுல…’, ‘இன்னும் கொஞ்ச வருசத்துல பல்லு போன கெழவியாகப் போற…’, ‘இப்ப என்ன? கார் ஓட்டப் படிச்சு flightஆ ஓட்டப் போற?’ என அப்போதும் கை கொடுக்கும் அஸ்திரங்கள் உண்டு.

எதற்கும் மசியாத பிடிவாதக்காரியாக(!) (உலக வழக்கில் - அடங்காப்பிடாரியாக) இருந்தால் கற்றுக் கொடுக்கும் பணியை வீட்டின் ஆண்களே ஏற்றெடுப்பது உசிதம். கண்டிப்பாக ஓட்டுநர் பள்ளிக்கு இசைவு தெரிவிக்கக் கூடாது. அங்கு யாரேனும் ஒரு பெண் சொல்லிக் கொடுக்க வந்தால் அவர் சொல்வதைக் கேட்டு “வண்டி ஓட்டுறது ரொம்ப சுலபமாமே! எளிதா கத்துக்கிடலாம்னு சொல்றாங்க” என நம்மிடமே தன்னம்பிக்கையோடு வந்து சொல்வாள். பின் நாம் “அது…. அவங்க நல்லா ஓட்டத் தெரிஞ்சவங்களா இருப்பாங்க… அவங்க சொல்றதையெல்லாம் நம்பாத… ரொம்ப கஷ்டம்” என்று மீண்டும் மடவோளின் மண்டையைக் கழுவும் கடினமான பணியை ஏற்றெடுக்க வேண்டியிருக்கும்.

எல்லாவற்றையும் மீறி ஓட்டுநர் பள்ளிக்குச் சென்றால் நான்கைந்து பேருடன் ஒருவராக ஒரு நாளைக்கு சுமார் கால் மணி நேரப் பயிற்சி கிட்டினாலே பெரிய விஷயம். அதிலும் accelerator, brake, clutch என எல்லா கட்டுப்பாடுகளும் பயிற்சியாளரின் கையில்… இல்லை! காலில் இருக்கும். இவ்வளவையும் தாண்டி எகிறி குதித்துக் கற்றுக் கொண்டுவிட்டால் கூட, பிறகு எப்படியும் நம் முன் ஓட்டாமலேயா போய்விடுவார்கள். அப்போது “இந்த லட்சணத்துல ஓட்டத்தான் டிரைவிங் ஸ்கூல் போனியாக்கும்? என்னை விடவா அங்க சொல்லித் தந்துருக்க போறாங்க?” என்று கடித்து வைக்கலாம்.

வசதி வாய்ப்பு, அனுமதி, நெருக்கமானவர்களிடம் கற்றுக் கொள்ளக் கூடாது என்ற சமயோசிதம் - ஓட்டுநர் பள்ளிக்குச் செல்ல இவற்றில் ஏதேனும் ஒன்று வாய்க்கப்பெறாத தம் வீட்டு வனிதைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டிய காலக் கொடுமை அரங்கேறப் போகிறதெனில் ஆண்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் இன்னொரு கல்வெட்டில் கிடைக்கப் பெற்றன :

“I yell at you and stress you out, because I care for you” – நமது இந்த அன்பு, பாசம், நேசம், அக்கறையெல்லாம் பேதைகளின் பெரு மூளைக்கு உரைக்காது எனினும் இதனை விடாமல் கடைபிடிக்க வேண்டும்.

முதன்முதலாக வண்டியைக்(car) கிளப்பிச் சக்கரங்களைச் சுழல வைக்கும் rocket science காரிகைகளுக்குக் கை வராமல் பார்த்துக் கொண்டாலே போதும். பாதி வேலை முடிந்து விட்டது. இங்கு எவ்விதமான குற்றவுணர்வும் தேவையில்லை. இதன் மூலம் அவர்களையும் இன்ன பிற சக உயிர்களையும் பெரும் விபத்திலிருந்து காக்கிறோம் என்ற உயரிய(!) எண்ணத்தை நமது ஆழ்மனதில் நட்டு வைக்க வேண்டும்.

இயந்திரம்(engine) முட்டி முட்டி வண்டி முன்னும் பின்னும் வெடுக் வெடுக்கென இழுத்து நின்று போகும் ஒவ்வொரு முறையும் அருகில் அமர்ந்திருந்து ஏளனம் கலந்த எரிச்சலைக் காற்றில் பரவ விடுதல் (ராகு கேது சனி பெயர்ச்சிகளைக் காட்டிலும்) நல்ல பலன் தரும்.

ஒருவேளை இவ்வளவு முட்டுக் கட்டைகளையும் கடந்து ‘வண்டியைச் செலுத்துதல்’ என்னும் அடுத்த கட்டத்திற்கு நாரி நகர்ந்து விட்டாள் என்று கொள்க. ‘ப்ச்…’, ‘உஸ்ஸ்ஸ்…’, ‘ufffff...’, ‘அய்யோ..’, ‘கண்ணு என்ன பொடணிலயா இருக்கு?’ – நடுநடுவே இவ்வாறெல்லாம் வினையாற்றி அவளைக் கொலையாய்க் கொல்க.

[கொள்க – கொல்க , அட! அட! அட! நிச்சயம் இக்குறிப்புகளை இயற்றியவன் கவிஞனாகத்தான் இருக்க வேண்டும்]

‘எத்தன தடவ சொல்லிக் குடுத்தாலும் மண்டைலயே ஏறாதா? உள்ள மூளைதான் இருக்கா இல்ல களிமண் இருக்கா?’ – வாய்ச்சொற்கள் என்னப் பலனும் இல! எனவே தேவையற்ற சூழலில் அடிக்கடி இவ்வார்த்தைகள் மொத்தத்தையும் பரிகாசம் பரிமளிக்கும் பெருமூச்சாக பாவைகளிடம் வெளிப்படுத்தினால் பாற்கடலில் படுத்திருக்கும் பெருமாளே பாயாசம் கடைந்து பாசமாகத் தருவார்!

இடையிடையே ஆத்திரத்தை மிகவும் கடினப்பட்டு அடக்குவதைப் போன்ற பாவனைகளில் ஈடுபடுதல் நங்கையின் நாடித்துடிப்பை அதிகரித்து Cortisol, Adrenaline ஆகியவற்றின் உடனடி சுரப்பிற்குக் கண்டமேனிக்கு உதவும். அப்புறம் எவ்வளவு குட்டிக்கரணம் அடித்தாலும் அவர்கள் மனதால் நிதானத்திற்கு வரவே இயலாது. அப்படியே ஜென் மனநிலையைக் கடைபிடிக்க முயன்றாலும்தான் நாம் இருக்கிறோமே!

உலையில் கொதிக்கும் அரிசியைக் கிண்டியவாறே, குழம்புக்குப் புளியைக் கரைத்து விட்டு, கூட்டு பொரியலுக்கான தேங்காயையும் அரைத்து….. மதிய வேளைக்கான சமையலை முடித்து காலை உணவு தயாராகும் போது நடுவில் குழந்தையைப் பள்ளிக்குக் கிளப்பி அனைவருக்கும் உணவை டப்பாவில் அடைத்து…. இப்படி அநாயசமாகச் சுழல்பவர்களிடம் “Clutchஅ அழுத்தி gearஅ மாத்தி அப்புறம் clutchல இருந்து மெதுவா கால எடுக்கும் அதே நேரத்துல மெல்ல accelerator குடுக்கணும். Steering controlயையும் விட்டுற கூடாது. உனக்கு multi taskingலாம் வராது” என மனசாட்சியே இல்லாமல் மூஞ்சியில் அடித்தவாறு சொல்லிட வேண்டும்.

நாம் கொடுக்கும் இவ்வளவு குடைச்சலையும் இம்சையையும் தூக்கிப் போட்டுத் தப்பித் தவறி ஓரளவு நன்றாக ஓட்டுகிறார்கள் எனில் “வண்டி ஏன் வளைஞ்சு வளைஞ்சு போகுது? steeringஅ நேரா புடி” என ஒழுங்காகச் செல்லும் வண்டியில் நேராகப் பிடித்திருக்கும் steeringஐ இன்னும் நேராகப் பிடிக்கச் சொல்வது;

“அந்தா பாரு… லாரி நிக்குது (‘நிற்கத்தானே செய்கிறது!’ என்றெல்லாம் அவர்களை யோசிக்கவே விடக்கூடாது)… பாத்து பாத்து… கவனமா…” எனத் திடுக்கிடும் தொனியில் திணறடிப்பது;

“அங்க ஒருத்தர் ஓரமா நடந்து வராரு பாரு… தள்ளிப் போ… அங்க ஏன் பாக்குற?(‘நீதான மேன் பாக்கச் சொன்ன?’ என்று அவர்கள் கேட்பதற்கான நேர இடைவெளியே இருக்கப்பிடாது!) ரோட்ட பாத்து ஓட்டு” - புதிய பீதிகளைப் புழுதியாய்க் கிளப்பி எந்நேரமும் அவர்களைப் பதற்றத்திலேயே வைத்திருக்க வேண்டும்.

வீட்டில் சும்மா இருக்கும் போது கூட வண்டி ஓட்டும் சூட்சமங்களைப் புளி, எலுமிச்சை, சபீனா பொடி போட்டு விளக்கு விளக்குன்னு விளக்கி அவர்களுக்கு வண்டி ஓட்டும் ஆசையே போய்விடுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இது வேலை செய்யவில்லையெனில் கோர விபத்துகள் ஏற்படக் கூடிய சாத்தியக் கூறுகள், நிகழ்தகவுகள் (possibilities and probabilities) எல்லாவற்றையும் கற்பனைச் சூழல்களாக்கிக் கொடூரமாக விளக்கிப் பயத்தைப் பத்து கிலோ வகுறு புடைக்க ஊட்டி விட வேண்டும்.

“கொஞ்சம் தயக்கமா இருக்கு’ என்னும் பெண்ணிடம் ‘வண்டி ஓட்ட வரும் போது தைரியமா வரணும். Confidence ரொம்ப முக்கியம். இப்படி பயந்துட்டே இருந்தா ஒரு மண்ணும் படிக்க முடியாது” என்று ஆகக் கழிசடையான தன்னம்பிக்கை வகுப்பின் போர்வையில் - இப்படி ஒரு உருட்டு.

“Yes. I am confident” என்று அணங்கு போல் வந்து நின்றால் “நீ நினைக்குற மாதிரி அது ஒண்ணும் சாதாரண காரியம் இல்லை. தன்னம்பிக்கை மட்டும் போதாது. யார் மேலயும் மோதிடாம கவனமா ஓட்டணும். ஓட்டிருவியா? ரோட்டுல ரோடு ரோலர் போகும்; தலைக்கு மேல விமானம் பறக்கும்; கடல்ல கப்பல் போகும்…. எங்கயும் இடிச்சுட மாட்டேல்ல? அப்புறம் பெரிய பிரச்சனை ஆகிரும்” என்று அச்சுறுத்தும் வகையில் - அப்படி ஒரு உருட்டு. அம்புட்டுதேன்!

ஆக மொத்தம் ‘உனக்கு வண்டி ஓட்ட வராது’ – இதுவே தாரக மந்திரம். அவ்வப்போது இதை வெவ்வேறு வடிவங்களில் அள்ளித் தெரிவைகளின் மீது தெளித்துத் கொண்டே இருத்தல் நலம்.

இறுதியாக எல்லாவற்றையும் ஊதித் தள்ளி நன்றாக ஓட்டி ஓட்டுநர் உரிமம் பெற்றுவிட்டார்கள் எனில் சற்றும் கூச்சம், நாணம், வெட்கம் (அழுத்திக் கூறவே ஒருபொருட் பன்மொழி!) எதுவுமின்றி நமது கற்றுக் கொடுக்கும் திறனை எவ்விதத் தயக்கமும் இன்றி நாம் வியந்தே ஆக வேண்டும். ஒருபடி மேலே சென்று, “நானா கண்டு பொறுமையா சொல்லிக் கொடுத்தேன். வேற யாராவதா இருந்தா பாதிலயே ஓடிருப்பாங்க. இன்னும் சாவிய தடவிட்டு உக்காந்துருக்க வேண்டியதுதான்… ஹி ஹி ஹி” என்று வெற்றிக் களிப்பில், வெந்த புண்ணில் வெந்நீர் ஊற்றலாம்.

உரிமத்தோடு அவர்கள் ஓட்டுகையில் “உனக்கெல்லாம் யாருதான் உரிமம் குடுத்தாங்களோ? மானே தேனே….” என்று அவ்வப்போது மட்டம் தட்டி உரிமத்தை அவர்களே கிழித்துப் போட வேண்டி ஊக்குவிக்கலாம், பாசி மணி விக்கலாம், சீப்பு விக்கலாம் …..

நமது நசநசப்பு தாங்காமல் பாதியிலேயே கற்றுக்கொள்வதை விட்டு விட்டார்கள் எனில், உடனடியாகவோ சில வருடங்கள் கழித்தோ “ஒழுங்கா அன்னைக்கு விடாம வண்டி ஓட்டிருக்கலாம். இன்னைக்கு எவ்வளவு உபயோகமா இருந்துருக்கும்? ப்ச்… கொஞ்சம் பொறுமையா படிச்சுருக்கலாம்” என்று அறச்சீற்றம் கொள்ளலாம். ‘பொறுமையா சொல்லித் தந்திருக்கலாம்’ என்ற மடந்தைகளின் எதிர் வாதம் மடத்தனமானதாகவே பார்க்கப்பட வேண்டும்!

தாம் வண்டி ஓட்டக் கற்றுக் கொள்ளாதது மட்டுமே மாதுக்களுக்கு நினைவில் இருக்கும். ஏன் கற்றுக் கொள்ள மறுத்தோம் என்பதெல்லாம் மறந்து விடும். மறக்கடித்தே ஆக வேண்டும்.

‘சாலை விபத்துகளிலும் அபாயகரமாக ஓட்டுவதிலும் பெண்களை விட ஆண்களே முன்னிலை வகிக்கின்றனர்’ எனக் கூறும் புள்ளி விவரங்கள்; ஒரு நடிகரின் வண்டிக்கு அருகில் காட்டுத்தனமாக வண்டியை ஓட்டி வலுக்கட்டாயமாக விழுப்புண் வாங்குவது; சும்மா சாலையில் செல்லும் போதே முன் சக்கரத்தைத் தூக்கியவாறே பொறி பறக்கச் செல்வது; வேண்டுமென்றே வளைந்து நெளிந்து சென்று அனைவரையும் தடுமாறச் செய்வது…. இவ்வாறாகப் பலதரப்பட்ட அருமை பெருமைகள் அடங்கிய சில பல ஆடவர்களின் வரலாற்றை ஒரு புறமாக ஒளித்து வைத்து விட்டு, வண்டியைக் கொண்டு போய்ச் சில பல பெண்கள் எங்காவது முட்டி விழும் காணொளிகளைத் தூக்கிக் கொண்டு வந்து சில்லறைகளைச் சிதற விட்டுச் சிரிப்பாய்ச் சிரித்து வைக்கலாம்.

************************

எல்லா பெண்களும் சரியாக ஓட்டுவதில்லைதான். ஆனால் கற்றுத் தரும் ‘பெரும்பாலான’ ஆண்களிடம் இதை ஓங்கிச் சொல்லலாம் - ஓயாமல் ‘உன்னால் முடியாது’ என்ற சமிக்ஞைகளைத் தராமல் கற்றுத் தர உங்களால் முடியவே முடியாது. தெரியவும் தெரியாது. ஆண் ஒருவர் கற்றுக் கொடுப்பதைப் போலவே பெண் ஒருவர், (அதுவும் immediate family member) ஆணுக்கு அதே ‘வாஞ்சை’யுடனும்(!) அதே ‘ஊக்கமளிக்கும்’(!) தொனியுடனும் கற்றுக் கொடுத்தால் தாம் போதிக்கும் அதே பொறுமையை ஆண்கள் கடைபிடிப்பார்களா என்று சோதனை செய்து பார்க்கும் ஆவல் எட்டிக் கூடப் பார்க்க மாட்டேன் என்கிறது. முடிவுதான் தெரியுமே!

பயிற்சி காலத்தின் போது ரொம்பவே கைகொடுக்கும் பொன்மொழி – SILENCE IS GOLDEN! (AND DUCT TAPE IS SILVER!!!) வண்டி ஓட்டிப் பழகிக் கொண்டிருந்த காலத்திலும் அதன் பிறகும் ஆண்களைக் குட்டிக் கொண்டே இருக்க யாரும் இருந்ததே இல்லை!

And that ….. that alone makes a (freaking) hell lot of difference!

************************

நியூ யார்க்கின் ஒரு நீளமான தீவில்தான் தற்போது வாசம். என்னவன் பொருள்வயின் பிரிதல் படலத்தால் இரண்டு நாட்கள் வெளியூர் சென்று விட, கடும் குளிரில் அருகில் இருக்கும் பள்ளியில் குழந்தையை நடத்தியே அழைத்துச் செல்ல வேண்டிய கட்டாயம். பத்து நிமிட நடைதான் என்றாலும் எலும்பைத் துளைக்கும் குளிரிடம் தோற்றே ஆக வேண்டும். பள்ளியில் இருந்து ஒரு குறிப்பிட்ட பரப்பளவுக்குள் இருப்பவர்களுக்குப் பள்ளி வாகனம் கிடையாது. இந்தச் சின்ன தொலைவுக்கு Uberம் வராது.

இவ்வளவிற்கும் எனக்கு வண்டி ஓட்டத் தெரியாமல் இல்லை. விறைத்தபடியே வீட்டினுள் நுழைந்தும் குழந்தையின் ஆரோக்கியம் குறித்த கவலையும் கண் மண் தெரியாத கடுங்கோபமும் ஒன்று சேர இப்பிரச்சனையின் வேரைக் கண்டறிந்து இரண்டு பத்திகள் மேல் வரை எழுதி முடித்துவிட்டு என்னவன் திரும்பி வந்ததும் இக்கட்டுரையைப் பற்றிக் கூறினேன். சிரித்துக் கொண்டே “ஒரு நாள் ஒன்ன தனியா விட்டுட்டுப் போக முடியுதா? சரி, இன்னைக்கு நீயே வண்டி ஓட்டு. ரொம்ப பக்கத்துலதான? வா பழகிக்கோ” எனப் பரிவுடன் கூறியதைக் கேட்டு ‘மீண்டும் ஒரு முறை’ புத்தி கெட்டுப் போய் ஒப்புக் கொண்டேன்.

நெடு நாட்களுக்குப் பிறகு வண்டியை எடுக்கிறேன் ஆதலால் ரொம்ப மெதுவாகவே ஓட்டிக் கொண்டிருந்தேன். வண்டியை எடுத்த நொடியிலிருந்து அருகில் அமர்ந்திருந்த என்னவன் என்னும் ஜீவனின் வாய் ஒட்டே கிடக்கவில்லை. “வேகமா அழுத்து….” எனத் துவங்கி “ஏன் ஓரமா போற? அந்தக் கல்லு மேல ஏத்தப் போறியா?”, “போ ... போ… நிப்பாட்டு… brake புடி… ஏன் நிக்குற? நீதான் முதல்ல இந்த crossingக்கு வந்த… போ” (இவ்வார்த்தைகள் அனைத்தும் ஒரே வாக்கியத்தில் வர முடியும் எனப் புதிதாகக் கற்றுக் கொண்ட நாள் அது!)……. இப்படியாகப் பட்டியலில் உள்ள சில விதிமுறைகளைக் கனக்கச்சிதமாக என்னிடம் செயல்படுத்த, இம்முறை நான் “கொஞ்ச நேரம் பேசாம வாங்கப்பா… நான் பாத்துக்குறேன். Stop getting on my nerves” என்று சொல்வதை முழுதாகக் கூட முடிக்க விடாமல் “பேசீட்டே இருக்காத…. பேச்ச நிப்பாட்டீட்டு ஒழுங்கா ஓட்டு” என்ற ஜீவனிடம் “கண்ணாடி ப்பா அது!” எனச் சொல்ல நினைத்து வேறொன்றைச் சொன்னேன்.

“நான்கூட இதை எழுதி முடிச்சதும் கொஞ்சம் அதிகப்படியாதான் எழுதீட்டோமோன்னு நினைச்சுட்டு இருந்தேன். இல்லவே இல்லைன்னு என் மண்டையில் ஆணி அடிச்சாப்புல புரிய வச்சு, உடனே பிரசுரிக்க வேண்டிய அவசரத்தை உணர்த்தி உற்சாகமளித்ததற்கு நன்றி!” என்று நான் சொல்லவும் “இதையும் எழுதித் தொலைச்சுராத என் தெய்வமே!” என்று என்னவன் என்னிடம் மன்றாடிக் கேட்டுக் கொண்டதால் நீங்கள் இந்தப் பகுதியை மட்டும் அம்னீசியாவுக்கு ஒப்புக் கொடுக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்!

************************************

என்னைச் சுற்றியுள்ள ஆண்களிடம் அவர்கள் எப்படி ஓட்டக் கற்றுக் கொண்டார்கள் என்று கேட்டேன். அனைவரிடமும் கிட்டத்தட்ட ஒரே பதில்தான் – “முதலில் ஓட்டுநர் பள்ளியில் 3 மாதங்கள் கற்றேன். பின்னர் அப்பாவின்/நண்பரின்/உறவினரின்/எனது வண்டியை எடுத்துக் கொண்டு தனியாக நானாகப் பழகிக் கொண்டேன்”. ‘தனியாக நானாக’! ஹ்ம்ம்ம்.

மேலே இருக்கும் இந்தப் பத்தியை வாசித்து விட்டு என்னவன், “நான் எங்க சித்தப்பா வண்டியை எடுத்துட்டுப் போகும் போது அவங்களும்தான் கூட வருவாங்க. வண்டியைப் பின்னால் எடுக்கும் போது ‘தலையை வெளிய விட்டுப் பாரு’ன்னு அப்படியே கழுத்தோட பிடிச்சு வெளிய தள்ளுவாங்க, தெரியுமா? நாங்களும் திட்டெல்லாம் வாங்கியிருக்கோம்” என்று ஏதோ மெடல் வாங்கியதைப் போல் கூற, “ஆங்! அப்போல்லாம் இனிச்சுதா?” என்ற எனது கேள்விக்குப் பதிலே இல்லை. “சொல்லுங்கோள்” என்று என் தலையைச் சரித்து, குனிந்து கிடந்த என்னவனின் முகத்தைப் பார்க்கவும் “இதுக்கு மேல வாய தொறக்காம இருக்குறதுதான் என் கிட்னிக்கு நல்லதுன்னு நினைக்குறேன். போதும். இந்தக் கட்டுரையை இத்தோடு முடிச்சுக்கலாம்” என்று கெஞ்சிய என்னவனின் பேரன்புக்கு மதிப்பு கொடுப்பது என்னும் முடிவுக்கு வந்து விட்டேன்.

Not knowing how to drive is definitely a handicap!

நான் Car ஓட்டிப் படிக்க வேண்டும். நான் நளினமாக வண்டி ஓட்ட, தாம் ஓய்வாக அதைக் கண்டு பெருமிதத்துடன் ரசித்தபடியே வர வேண்டும் என்ற ஆசை என் அப்பாவுக்கும் என்னவனுக்கும் உண்டு. But what to do? எல்லா விஷயங்களிலும் பக்குவமாக இருக்கும் அப்பாவே என்னவனைப் போல் இவ்விஷயத்தில் பரபரவென்று நிற்பது சற்றே ஆச்சர்யமளிக்கும். அதீத பொறுப்புணர்வில் இவ்வாறு தாமும் படபடத்து நமக்கும் அதைக் கடத்துவது…. ஒருவேளை Y chromosomeகளுக்கே உரித்தான பண்பாக இருக்குமோ?

கடைசி வரியையும் வாசித்து விட்டு, “அடேய்! நீ தப்பு தப்பா ஓட்டுனேன்னு அதையும் சேர்த்து எழுது” என்று என்னவன் விண்ணப்பம் வைக்க ‘அப்படியே ஆகட்டும்!’ என்று அந்தப் பொய்யையும் சேர்த்துவிட்டேன். Anything for you my man!

முழுதாக வாசித்துவிட்டு என் அப்பா வேறு தம் பங்குக்கு, “நல்லா எழுதியிருக்க. அதுக்காகவெல்லாம் ஒண்ணும் சொல்லாம இருக்க முடியது. மறுபடியும் சொல்லி குடுக்கும் போது திருத்தம் போட்டுட்டுதான் இருப்போம்” என்று என்னிடமும், “அவ பாட்டுக்கு எழுதிட்டு போறா, மாப்பிள்ளை! அதுக்காக நாம அப்பிடியே விட்டுற முடியுமா? அவளுக்கு நல்லா எழுத வருது. நமக்கு நல்லா வண்டி ஓட்ட வருது. அவளுக்கு எழுத்து உயிரா இருக்கலாம்.(“நமக்கு அது ***’ என்று அவர்கள் கூறியதை எழுத்து நாகரிகம் கருதி விட்டு விடுகிறேன்!) நமக்கு உயிருதான் உயிரு” என்று என்னவனிடமும் அடுக்கிக் கொண்டே செல்ல “ஏ மக்களே! காரை இனிமேல் நான் தலையில தூக்கி வச்சுகிட்டு போய்க்கிறேன்” என்று முடித்தேன்.

படச்சோனே! என்டெ கர்த்தாவே! ஒன்று கூடி விட்டார்களய்யா! என்னை இரட்சியும் ஆண்டவரே!

Edited by சுப.சோமசுந்தரம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.