Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெற்றியை நோக்கி தொலைநோக்குடனும் தீரத்துடனும் வழிநடத்துகிறார் பிரபாகரன்! அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் நடேசன் நேர்காணல்

Featured Replies

போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து சிறிலங்கா அரசாங்கம் வெளியேறியமை அனைத்துலக சமூகத்திற்கு விழுந்த அடி என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

சர்வதேச சமூகம் இலங்கையரசிடம் வாங்கிய அடிக்கு, தைலம் பூசிக்கொண்டிருக்கிறார்கள். எதற்குக் குணமடையுமோ தெரியாது.

தைலத்தின் வகைகள்.

1. தனிமைப்படுத்தப்படும்.

2. ஐ . நா கண்காணிப்பு மையம்.

3. ஐ . நா மனிதவுரிமைக் குழுவிலிருந்து நீக்கம்.

4. சர்வதேச நிதியுதவிகள் நிறுத்தப்படலாம்.

5. ஆயுத விற்பனைத் தடை.

தைலத்தின் பெயர்கள் வேறு யாருக்கும் தெரிஞ்சால் சொல்லுங்கோ. வாங்கிப் பூசிக்கொள்ளட்டும்.

'எங்களின் போராட்டத்தை இந்தியா அங்கீகரிக்கும் காலம் வரும்' : விடுதலைப் புலிகள்!

தமிழ் மக்களின் ஏக்கத்தைப் புரிந்து தனது கொள்கையை மாற்றிக் கொண்டு தங்களின் போராட்டத்தை இந்திய அரசு அங்கீகரிக்கும் காலம் வெகு விரைவில் வரும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ஆஸ்ட்ரேலியச் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், " இலங்கையின் அண்டை நாடான இந்தியா தங்களின் நியாயத்தை உணர்ந்து, தங்களின் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் என்ற ஏக்கம் தமிழ் மக்களுக்கு நீண்ட நாட்களாகவே உள்ளது. இந்திய அரசு கூட தற்போது அதை உணர்வதாகத் தெரிகிறது. இதனால் இந்திய அரசு தனது கொள்கையை மாற்றிக் கொண்டு எங்களின் போராட்டத்தை அங்கீகரிக்கின்ற காலம் வெகுவிரைவில் வரும் என நான் நினைக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

சிறிலங்கா அரசு, 'போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுகிறோம்' என்று அறிவிப்பதற்கு முன்பே போர் நிறுத்த ஒப்பந்த மீறல்களில் ஈடுபடத் தொடங்கிவிட்டது என்று குற்றம்சாற்றியுள்ள நடேசன், அந்த ஒப்பந்தம் கையெழுத்தான காலத்தில் இருந்து அதன் ஒவ்வொரு சரத்துகளையும் வேண்டுமென்றே மீறி அதைக் குழப்புகிற நோக்கத்தில் சிறிலங்கா அரசு செயல்பட்டதாகக் கூறியுள்ளார்.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட மறுசீரமைப்புப் பணிகளையும் வளர்ச்சிப் பணிகளையும் மேற்கொள்ள விடாமல் தடுத்ததுடன், அந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துகிற ஒவ்வொரு விடயத்தையும் சிறிலங்கா அரசு மீறியதைச் சர்வதேச நாடுகள் தற்போது நன்றாக புரிந்து கொண்டுள்ளதாகக் கூறியுள்ள நடேசன், அதன் இறுதிக் கட்டமாகத்தான் தற்போது அதிகாரபூர்வமாக போர் நிறுத்தத்திலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறது என்றுள்ளார்.

மேலும், சிறிலங்கா அரசின் இந்த நடவடிக்கையை சர்வதேச நாடுகளின் அமைதி முயற்சிகளின் மீது விழுந்த அடியாகத்தான் பார்க்க வேண்டும் என்பதையும், சர்வதேச நாடுகளை உதாசீனப் படுத்துகிற செயலாகத்தான் இது உள்ளது என்பதையும் உலகம் உணர வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

போர் ஏற்கெனவே வெடித்து விட்டது!

சர்வதேசச் செய்தியாளர்களும், ஆய்வாளர்கள் என்று கூறிக்கொள்பவர்களும் ஜனவரி 16 ஆம் நாள் நள்ளிரவிற்குப் பின்னர் போர் மிகத் தீவிரமாக வெடிக்கப்போகிறது என்று கணித்ததைப் பற்றிக் கேட்டதற்கு, "போர் ஏற்கனவே வெடித்து விட்டது. மன்னாரில் இராணுவ நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் அவர்களால் முன்னேற முடியவில்லை. அதேவேளை முகமாலை, மணலாற்றுப் பிரதேசம், வவுனியா மாவட்ட பிரதேசம் எனப் பல முனைகளிலும் சிறிலங்கா படைகள் முன்னேற முயற்சித்து இழப்புக்களைச் சந்தித்து பின் வாங்கிக் கொண்டிருக்கின்றன. இராணுவ நடவடிக்கைகளை அவர்கள் ஏற்கனவே தொடங்கி விட்டார்கள் என்பதனையே இது காட்டுகிறது." என்றார் நடேசன்.

இறுதியாக, அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்திற்கு உட்பட்ட ஒரு அதிகாரத் தீர்வுத் திட்டம் என்பது இனப் பிரச்சனையை தீர்ப்பதற்கு சரியான வழியா என்று கேட்டதற்கு, "13 ஆவது சரத்தின் அடிப்படையிலான தீர்வு என்பது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை முழுதாக நிறைவு செய்யக்கூடிய வகையில் இருக்காது.உண்மையில் இனப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு அவர்கள் இன்னும் விரும்பவில்லை" என்றார் நடேசன்.

http://tamil.webdunia.com/

.

.

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வெற்றியை நோக்கி

தொலைநோக்குடனும் தீரத்துடனும்

வழிநடத்துகிறார் பிரபாகரன்!

அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் நடேசன் நேர்காணல்

ஆஸ்திரேலியாவிலிருந்து ஒலிபரப்பாகும் ஆஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு அவர் வழங்கிய சிறப்பு நேர்காணல்:

கேள்வி: இலங்கை அரசாங்கம் ஒரு தலைப்பட்சமாக இந்தப் போர் நிறுத்த ஒப்பந் தத்திலிருந்து வெளியேறியிருக்கின்றது. இந்த ஒப்பந்தத்திலிருந்து அதிகாரபூர்வமாக வெளியேறுகின்றோம் என்பதனை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இலங்கை அரசாங்கம் எப்போது அறிவித்திருந்தது?

பதில்: சிங்கள அரசு நேரடியாக எமக்கு அறிவிக்கவில்லை. ஆனால், நார்வே அரசாங்கத்திற்கு அவர்கள் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தனர். நார்வே அரசாங்கமே எமக்கு அவர்களின் இந்த அறிவிப்பைத் தெரியப்படுத்தியது.

இது தொடர்பாக நாமும் ஓர் அறிக்கையை அண்மையில் எமைச் சந்தித்த போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவரின் ஊடாக நார்வே அரசாங்கத்திற்கு அனுப்பியிருக்கிறோம்.

சிங்கள அரசின் இந்த அறிவிப் பானது தற்போது அதிகாரபூர்வமாக விடப்பட்டிருந்தாலும் அவர்கள் ஏற்கனவே போர் நிறுத்த மீறல்களில்தான் தொடர்ச்சி யாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஆரம்பம் முதலே குழப்பினர்.

போர் நிறுத்தத்திலிருந்து வெளி யேறுகின்றோம் என்று அறிவிப்பதற்கு நீண்ட காலத்திற்கு முன்னரேயே சிங்கள அரசாங்கம் போர் நிறுத்த மீறல்களில் ஈடுபடத் தொடங்கி விட்டது. அது இங்குள்ளவர்களுக்கும் அனைத்துலகத் திற்கும் நன்கு தெரியும்.

போர் நிறுத்த ஒப்பந்தம் கைச் சாத்திட்ட காலத்திலிருந்து அந்த ஒப்பந் தத்தில் எழுதப்பட்டிருக்கின்ற ஒவ்வொரு சரத்துக்களையும் சிங்கள அரசு வேண்டும் என்றே மீறி, அதனைக் குழப்புகின்ற நோக்கத்திலேயே செயற்பட்டு வந்தது.

இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தத்தை அடிப்படையாக வைத்து செய்து கொள்ளப்பட்ட பல்வேறு கட்டமைப்புக் களையோ அல்லது இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துகின்ற எந்தவொரு விடயத்தையோ சிங்கள அரசாங்கம் மீறியே செயற்பட்டிருக்கின்றது. இதனை அனைத்துலக சமூகம் தற்போது நன்றாகப் புரிந்து கொண்டுள்ளது.

உதாரணத்திற்கு வடக்கு- கிழக்கிற்கான உடனடி கட்டுமானப்பணிகள் அதாவது "சிரான்" போன்ற அமைப்புக்கள் போர் நிறுத்தத்தை அடிப்படையாக வைத்தே உருவாக்கப்பட்டன. ஆனால் அவற்றை செயற்பட விடாமல், இழுத்தடித்து அதனைச் செயலிழக்கச் செய்தது சிங்கள அரசு.

இதனைத் தொடர்ந்து ஆழிப் பேரலை பேரனர்த்தம் எமது தாயகப் பகுதிகளில் ஏற்பட்டபோது சிங்கள அரசுடன் எமது இயக்கம் செய்து கொண்ட ஆழிப்பேரலைப் பொதுக்கட்டமைப்பு ஒப்பந்தத்தைக்கூட சிங்கள அரசு வேண்டும் என்றே தங்களின் நீதிமன்றத்தினூடாக இல்லாமற் செய்தது.

அது மட்டுமல்ல, தென்தமிழீழத்தில் குறிப்பாக திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு போன்ற இடங்களில் இராணுவ ஒட்டுக் குழுக்களை வைத்துக்கொண்டு போர் நிறுத்த மீறல்களில் ஈடுபட்டனர். அந்தப் பகுதிகளில் தொண்டு செய்கின்ற அரச சார்பற்ற நிறுவனப் பணியாளர்கள், மற்றும் பத்திரிகையாளர்களைக் கடத்தினர்.

அனைத்துலக சமூகத்தின் அழுத்தத்தின் காரணமாகப் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கம் கைச்சாத்திட்டாலும் இப்படியான போர் நிறுத்த மீறல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டுக்கொண்டே வந்தது. அதன் இறுதிக் கட்டமாகத்தான் தற்போது அதிகாரபூர்வமாக போர் நிறுத்தத்திலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறது.

கேள்வி: போர் நிறுத்த ஒப்பந்தத்தில் மூன்று தரப்பினர் அதிகாரபூர்வமாக தொடர்புடையவர்கள். இலங்கை, தமிழீழ விடுதலைப் புலிகள், அனுசரணையாளராக வந்த நார்வே ஆகியனவே அந்தத் தரப்புகளாகும். இந்த நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதை இலங்கை அரசாங்கம் ஏனைய இரண்டு தரப்பிற்கும் முதலில் அதிகாரபூர்வமாக அறிவிக்காது இருந்துள்ளது. அதாவது இலங்கையின் இந்த முடிவு, அது அமைச்சரவை முடிவாக இருந்தாலும் கூட, ஊடகங்களின் ஊடாகத்தான் முதன்முதலில் அறிவிக்கப்பட்டது. இது எதனை வெளிக்காட்டுகின்றது?

பதில்: சிங்கள அரசின் தன்னிச்சையான போக்கைத் தான் இது வெளிக்காட்டுகின்றது.

தற்போது இந்த தன்னிச்சையான போக்கை உலக நாடுகள் நன்றாக உணர்ந்திருக்கின்றன. ஏனெனில் இணைத்தலைமை நாடுகள் ஒன்றாகக்கூடி முடிவினை எடுத்திருக்கின்றன. அதாவது, இலங்கை அரசு தன்னிச்சையாக இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேறினாலும், கிளிநொச்சியில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளினுடனான தொடர்பிற்கு, தாங்கள் அங்கு சென்று வருவதற்கு, தங்களுக்கான வழி வகைகள் இருக்க வேண்டும் என்பதனை இணைத்தலைமை நாடுகள் கூட்டாக இலங்கை அரசிடம் அதிகாரபூர்வமாக வலியுறுத்தியுள்ளன.

அது மட்டுமல்ல, இணைத் தலைமை நாடுகள் இன்னுமொரு விடயத்தையும் வலியுறுத்தியிருந்தன. அதாவது நாங்கள் அதிகாரபூர்வமாக விட்ட அறிக்கையில் குறிப்பிட்டது போல, நார்வேயே தொடர்ந்தும் அனுசரணை யாளர்களாக இருக்க வேண்டும் என்பதனையும் இணைத்தலைமை நாடுகள் இலங்கை அரசிடம் வலியுறுத்திக் கேட்டுள்ளன.

இலங்கை அரசின் தன்னிச்சையான போக்கு தற்போது மிகவும் துலாம்பரமாக- அனைத்துலக சமூகத்திற்கும் நன்றாகத் தெரிந்திருக்கின்றது என்பதையே இணைத் தலைமை நாடுகளின் வலியுறுத்தல்கள் காட்டுகின்றன. அதாவது அரசியல் சூழல் தமிழ் மக்களுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தியிருக்கின்றது.

அனைத்துலக நாடுகளுக்கு விழுந்த அடி

கேள்வி: இலங்கையின் இறைமையைப் பாதிக்காது ஒற்றை ஆட்சிக்குள் தீர்வு என்று அனைத்துலக சமூகம் மீண்டும் மீண்டும் ஒரு விடயத்தைத் தெரிவித்து வந்தது. இந்த நிலையில் இலங்கை அரசாங்கம் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து ஒரு தலைப்பட்சமாக வெளியேறியிருப்பதனை அனைத்துலக சமூகத்திற்கு விழுந்த ஒரு அடியாக நாங்கள் பார்க்கலாமா?

பதில்: ஆம், உண்மையில் அனைத்துலக நாடுகளுக்கு விழுந்த அடியாகத்தான் இதனைப் பார்க்க வேண்டும். அனைத்துலக சமூகத்தை உதாசீனப்படுத்துகின்ற ஒரு செயலாகத்தான் இது இருக்கின்றது. அனைத்துலக சமூகம் தற்போது உணரத் தலைப்பட்டிருக்கின்றது என்றுதான் நான் நினைக்கின்றேன்.

கேள்வி: தமிழீழ விடுதலைப் புலிகளோடு போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கைச்சாத் திட்டவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியினர். அவர்களோடு கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் இப்போது வந்துள்ள புதிய அரசாங்கத்தால் ஒரு தலைப்பட்சமாக முறிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியோ அல்லது சிறுபான்மை மக்களுக்கு உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று குரல் கொடுத்து வரும் இடதுசாரிக் கட்சிகளோ குறிப்பிடத்தக்க எதிர்ப்பை தெரிவிக்கவில்லையே. இதிலிருந்து தமிழ் மக்கள் அறிந்து கொள்ளக்கூடிய விடயம் என்ன?

பதில்: இந்த ஒப்பந்தத்தில் நாம் கைச்சாத்திட்டது கட்சிகளுடன் அல்ல. இலங்கை அரசுடன்தான் கைச்சாத்திட்டோம். அது ஐக்கிய தேசியக் கட்சி அரசாக இருந்தாலும் சரி, அல்லது இலங்கை சுதந்திரக் கட்சி அரசாக இருந்தாலும் சரி, அல்லது இந்தக் கூட்டாட்சி அரசாக இருந்தாலும் சரி, நாம் இந்த ஒப்பந்தத்தில் இலங்கை அரசுடனேயே கைச்சாத்திட்டோம்.

இலங்கையை ஆட்சி செய்யும் எந்த கட்சியினாலும் பொதுவாகவே தமிழ் மக்களுக்கு விரோதமான அரசியல் கோட்பாடுகளைக் கொண்டவர்களாகத்தான் அன்றுதொட்டு இன்றுவரை செயற்பட்டு வந்திருக்கின்றனர். இது வரலாறு எமக்குப் புகட்டுகின்ற உண்மை.

கேள்வி: போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திட்ட பின்னர் தமிழ் மக்களுக்கே பாரிய இழப்புக்கள் ஏற்பட்டிருக்கின்றன. இந்தப் பின்னணியில் தமிழீழ விடுதலைப் புலிகள்தான் முதலில் இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறக்கூடும் என்று அனைவருமே எதிர்பார்த்திருந்த வேளை, சிங்கள அரசாங்கம் ஒரு தலைப்பட்சமாக வெளியேறியிருக்கின்றது. அதனை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்: பேரினவாத சக்திகளின் ஆதரவிலும் பேரினவாத சக்திகளின் தளங்களில் இருந்து கொண்டும் இலங்கை அரசு ஆட்சிக்கு வந்தது, பேரினவாதிகளே இந்த அரசை அமைத்திருக்கின்றனர். எனவே இந்தப் பேரினவாதக் கொள்கை யையும், கோட்பாடுகளையும் இந்த அரசு தொடர்ந்து கடைப்பிடிக்கின்றது. அத்த கையதொரு கட்டமாகத்தான் தமிழர் விரோதப் போக்கையும் கடைப் பிடிக்கின்றனர்.

இது உலகத்திற்கோ எமக்கோ புதிதான ஒன்றல்ல. இலங்கையில் எந்த அரசு வந்தாலும் தமிழர்களுக்கு எதிரான விரோதக் கொள்கைகளையே கடைப் பிடித்து வருகின்றனர். அந்தக் கோணத்தில் தான் நாங்கள் இதனைப் பார்க்கின்றோம்.

போர் நிறுத்தத்தை மீறியது யார்?

கேள்வி: இலங்கையின் வெளியுறவுச் செயலாளர் பாலித கோன்ன, அவுஸ்திரேலியாவிற்கு அண்மையில் வந்திருந்தார். இங்கு அவர் தேசிய தொலைக்காட்சியில் ஒரு செவ்வியை வழங்கியிருந்தார். அதில் அவரிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு பதிலளிக்கும்போது, "தமிழீழ விடுதலைப்புலிகள் பாரிய போர் நிறுத்த மீறல்களில் ஈடுபட்டிருக்கின்றனர். அவர்களோடு ஒப்பிடும்போது நாங்கள் 600 போர் நிறுத்த மீறல்களில்தான் ஈடுபட்டிருக்கிறோம். அதனால் போர் நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்தும் பேணுவது பிரயோசனமற்றது. அதனால்தான் நாங்கள் அந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியிருக்கிறோம்" என்று கூறியிருக்கின்றார். அனைத்துலக ஊடகவியலாளர்கள் சிலரிடமும் இப்படி யான கருத்தொன்று இருக்கின்றது. அதாவது இரு பகுதியினரும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியிருக்கின்றனர். குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள்தான் கூடுதலாக மீறியிருக்கின்றனர் என்ற ஒரு கருத்திருக்கின்றது. இதற்கு உங்கள் பதில்?

பதில்: உண்மையில் இங்கே வந்து பார்த்தால் போர் நிறுத்த ஒப்பந்தத்தை யார் அதிகமாக மீறினார்கள் என்பது தெரியவரும்.

தென்தமிழீழத்தில் நடைபெற்ற சம்பவங்கள் அதற்கு சான்று பகரும். இலங்கை அரச படைகளினால் எம் மீது அபாண்டமாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களே இவை ஆகும். இந்த குற்றச்சாட்டுகள் மீது உரிய முறையில் நடுநிலையாக விசாரணைகள் மேற் கொள்ளப்படாமல் உண்மையில் இது குற்றச்சாட்டா அல்லது வேண்டும் என்றே சிங்கள அரசால் புனையப்பட்ட குற்றச் சாட்டா என்பதனைக் கண்டறியாமலேயே இவ்வாறான எண்ணிக்கைகள் ஊடகங்களின் ஊடாக வெளிவரத் தொடங்கியுள்ளன.

உண்மையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியது சிங்கள அரசு என்பது சர்வதேச சமூகத்திற்கு தற்போது நன்றாகத் தெரிகின்றது. முலிதலும் நன்றாகத் தெரிந்துதான் இருந்தது.

உதாரணத்திற்கு மூதூர், சம்பூர் பிரதேசங்களை பாரிய நடவடிக்கையின் மூலம் கைப்பற்றியதும் அதேபோன்று

வலிந்த இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு மட்டக்களப்பு, அம்பாறை போன்ற எமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை ஆக்கிரமித்திருப்பதும் இதற்கு சான்றாக உள்ளன.

இதனை விட்டுவிட்டு காவல் நிலையங்களில் போய் சின்னச் சின்ன முறைப்பாடுகளைப் போடுவது போல் கண்காணிப்புக்குழு போர் நிறுத்த மீறல்களைப் பதிவு செய்கிறது.

உதாரணத்திற்கு எமது தேசியக் கொடியை ஏற்றினால் அதனைக்கூட போர் நிறுத்த மீறலாகக் கருதுகின்றனர். எமது புலிக்கொடியை எமது அரசியல் செயலகங்களில், இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் ஏற்றினால் அதனைக்கூட ஒரு போர் நிறுத்த மீறலாக பதிவு செய்கின்றனர். இப்படி ஏராளமான முறைப்பாடுகளைப் பதிவு செய்திருக்கின்றனர்.

அதேபோல் நாங்கள் இசைத் தட்டுக்களை வெளியிட்டாலோ அல்லது எங்கள் இயக்கப் பாடல்களை வெளி யிட்டாலோ அல்லது போட்டாலோ அதனையெல்லாம் போர் நிறுத்த மீறல் முறைப்பாடாகவே அவர்கள் அங்கே பதிவு செய்திருக்கின்றனர். இப்படியான சம்பவங்களை வைத்துக்கொண்டு

பாலித கோகன்ன போன்றவர்கள் அப் பட்டமான பொய்யைப் பரப்பி வரு கின்றனர். அது இங்கே இருந்த கண் காணிப்புக் குழுவினருக்கு நன்கு தெரியும்.

கேள்வி: போர் நிறுத்த ஒப்பந்தத்தின் போது நார்வேத் தரப்பு அனுசரணையாளர்களாகப் பணியாற்றியிருந்தது. கண்காணிப்புக் குழுவினரும் அங்கே இருந்தார்கள். ஆனால் அந்தக் கண்காணிப்புக்குழு போதிய அதிகாரத்தை எடுத்து ஒரு போர் நிறுத்த மீறல் நடைபெறும்போது அதனை விசாரித்ததாகவோ அல்லது அது தொடர்பாக அனைத்துலக சமூகத்திற்கு தெரிவித்ததாகவோ இல்லை. அவர்கள் வெறுமனே அது தொடர்பான அறிக்கையைச் சமர்ப்பிப்பார்களே தவிர கூடுதலான ஒரு அழுத்தத்தைத் தெரிவிக்க அவர்கள் தவறி விட்டார்கள் என்று நாங்கள் கருதலாமா?

பதில்: அவர்கள் தவறியது என்று சொல்வதனை விட இலங்கை அரசின் ஒத்துழைப்புக் கிடைக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். இது அனைத்துலக சமூகத்திற்கு தற்போது நன்றாகப் புரிந்திருக்கின்றது. குறிப்பாக இணைத்தலைமை நாடுகளுக்கு இது நன்றாகப் புரிந்திருக்கின்றது.

உதாரணத்திற்குக் கடந்த காலத்தில் போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழுத் தலைவர்களாக இரண்டு பேர் இங்கே இருந்தார்கள். திருகோணமலை மாவட்டத்தில் இருந்த மாவிலாறு நீர் அணைக்கட்டிற்கு கண்காணிப்புக் குழுத்தலைவர் அரச படைகளுக்கு அறிவித்து விட்டே சென்றார். அவர் சென்ற பின்னர் அங்கே இலங்கைப் படையினர் எறிகணை வீச்சுக்களை நடத்தினர்.

அதேபோன்று கண்காணிப்புக் குழுவின் மற்றொரு தலைவர் இலங்கை அரசிற்கும் அரச படையினருக்கும் அறிவித்து விட்டு பூநகரிப் பிரதேசத்திற்கு - அந்த இடத்தைப் பார்வையிடச் சென்றபோது அவருக்கும் அங்கிருந்து அவர்கள் ஆட்லெறி எறிகணை வீச்சுக்களை நடத்தினர்.

கண்காணிப்புக்குழுத் தலைவர்களை நோக்கியே போர் நிறுத்த மீறல் சம்பவங்கள் ஏராளமாக நடை பெற்றிருக்கின்றன. ஆகவே இலங்கை அரச தரப்பிலிருந்து கண்காணிப்புக் குழுவுக்கு போதிய ஒத்துழைப்புக் கிடைக்கவில்லை என்று தான் சொல்வேன்.

கேள்வி: போர் நிறுத்த கண்காணிப்புக் குழுத் தலைவரை நீங்கள் கடந்த வாரம் சந்தித்துப் பேசியிருந்தீர்கள். இந்தச் சந்திப்பில் என்ன விடயங்கள் ஆராயப்பட்டன?

பதில்: நாங்கள் மூன்று முக்கிய விடயங்களை வலியுறுத்தினோம். கண்காணிப்புக்குழுத் தலைவரின் ஊடாக அதிகாரபூர்வ செய்தியொன்றை நார்வே அரசிற்கு நாங்கள் தெரியப்படுத்தி யிருக்கின்றோம்.

போர் நிறுத்த ஒப்பந்தம் நூற்றிற்கு நூறு வீதம், வரிக்கு வரி சரியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் நோர்வேயே தொடர்ந்தும் அனுசரணையாளர்களாக இருக்க வேண்டும் என்றும், எம்மைத் தடை செய்த நாடுகள் அனைத்தும் எமது தடையை நீக்க வேண்டும் என்றும் மூன்று முக்கியமான விடயங்களை நாங்கள் அதிலே குறிப்பிட்டிருக்கின்றோம்.

போர் ஏற்கனவே வெடித்து விட்டது

கேள்வி: அனைத்துலக ஊடகவியலாளர்கள் சிலரும் ஆய்வாளர்கள் என்று கூறிக்கொள்பவர்களும் ஜனவரி 16 ஆம் நாள் நள்ளிரவிற்குப் பின்னர் போர் மிகத் தீவிரமாக வெடிக்கப்போகின்றது என்று எதிர்வுகூறுகின்றனர். அவர்களின் எதிர்வுகூறல் சரியானதா?

பதில்: போர் ஏற்கனவே வெடித்து விட்டது. எம் மக்கள் மீது பல இடங்களில் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்த வண்ணமிருக்கின்றனர். மன்னார் பிரதேசத்தில் பல இராணுவ நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் அவர்களால் முன்னேற முடியவில்லை. அதேவேளை முகமாலை என்றாலும் சரி, மணலாற்றுப் பிரதேசம் என்றாலும் சரி, வவுனியா மாவட்டப் பிரதேசம் என்றாலும் சரி பல முனைகளிலும் இலங்கை அரச படைகள் முன்னேற முயற்சித்து இழப்புக்களைச் சந்தித்து பின் வாங்கிக் கொண்டிருக்கின்றன.

இராணுவ நடவடிக்கைகளை அவர்கள் ஏற்கனவே தொடங்கி விட்டார்கள் என்பதனையே இது காட்டுகிறது.

கேள்வி: அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்திற்கு உட்பட்ட ஒரு அதிகாரத் தீர்வுத் திட்டம் என்று இப்போது புதிய ஒரு அத்தியாயம், ஒரு புதுக்கதை சோடிக்கப்படுகின்றது. இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இது சரியான வழியா?

பதில்: உண்மையில் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அவர்கள் இன்னும் சரியான வழிக்கு வரவில்லை. 13 ஆவது சரத்தின் அடிப்படையிலான தீர்வு என்பது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை முற்றுமுழுதாக நிறைவு செய்யக்கூடிய வகையில் இருக்காது.

அது மட்டுமல்ல, 13 ஆவது சரத்தின் அடிப்படையிலான தீர்வு விடயத்தில் ஒரு சுமூகமான முடிவை எடுப்பதற்குக்கூட அங்கே முடிவு எடுக்கின்ற அனைத்துக் கட்சிகளிடமும் ஒருமித்த கருத்து இல்லை. முரண்பாடுகள் ஏராளம் இருக்கின்றன.

கேள்வி: சமாதானப் பேச்சுவார்த்தை பல தடவைகள் நடைபெற்றிருந்தாலும் அனைத்துலக சமூகத்தால் இடப்பட்ட ஒரு போர் நிறுத்த உடன்பாடு இப்போது ஒரு தலைப் பட்சமாக மீறப்பட்டிருக்கின்றது. இதனையடுத்து இலங்கையில் தமிழர்களின் பிரச்சினைகளை சமாதான வழியில் தீர்ப்பதற்கான கதவுகள் மூடப்பட்டு விட்டன என்று கருதலாமா?

பதில்: கடந்த 50 வருட காலத்தில் தற்போதுதான் அனைத்துலக சமூகம் இலங்கை அரசு தொடர்பான பாடங்களைச் சரியான முறையில் கற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கின்றது என நினைக்கின்றேன்.

கடந்த காலங்களில் செய்து கொண்ட ஒப்பந்தங்களாயினும் சரி அல்லது எந்தப் பேச்சுவார்த்தைகளாயினும் சரி இலங்கை அரசாங்கம் அதனை மீறியதுதான் வரலாறு.

தற்போது இலங்கை அரசு தொடர்பான நிலைப்பாட்டை அனைத்துலக சமூகம் புரிந்து கொண்டிருக்கின்றது. இந்தப் புரிதலின் ஊடாக, எமது தடைகளை நீக்கி, எமது மக்களின் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தீர்வை அனைத்துலக சமூகம் வெகுவிரைவில் அங்கீகரிப்பதன் மூலம்தான் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணலாம்.

கேள்வி: அனைத்துலக சமூகத்திடம் இந்த சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழீழ விடுதலைப் புலிகள் எதனை எதிர்பார்க்கின்றனர்?

பதில்: அனைத்துலக சமூகம் எம்மை அங்கீகரிக்க வேண்டும். புலம்பெயர்ந்துள்ள எமது மக்கள் எமக்கு பக்க பலமாக செயற்பட்டு வருகின்றனர். அரசியல் ரீதீயாக, பொருளாதார ரீதியாக பல வழிகளிலிருந்தும் எமக்கு பக்க பலமாக அந்த மக்கள்தான் இருக்கின்றனர்.

கடந்த காலத்தைவிட வேகமாக, பல மடங்கு அதிகமாக அரசியல், பொருளாதார உதவிகளைச் செய்து எமது விடுதலைப் போரை மிக விரைவாக ஒரு முடிவிற்குக் கொண்டு வருவதற்கான அந்தப் பலமும், சக்தியும் அவர்களிடம் நிறைய இருக்கின்றது.

ஆகவே, அனைத்துலக சமூகம் என்று குறித்துச் சொல்வதனை விட எமது மக்கள் இந்த இடத்தில் பெரியளவு பங்களிப்பைச் செய்வதற்கு உடனடியாக முன்வர வேண்டும்.

கேள்வி: கிழக்கில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தப்போவதாக அறிவிக்கப் பட்டு அதற்கான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன. கிழக்கில் தமிழ் மக்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படும் இந்த வேளையில் இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் எந்த வகையிலே அவர்களின் தேவைகளை நிறைவேற்றும்?

பதில்: உண்மையில் கிழக்கில் தமிழ் மக்கள் மட்டுமல்ல, முஸ்ஸிம் மக்கள் கூட அச்சுறுத்தல்களுக்கு உட்பட்டு வருகின்றனர். இந்தவொரு நிலையில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் என்பது ஒரு நாடகம். இலங்கை அரசினால் இராணுவத்தை வைத்துக்கொண்டு நடத்தப்படுகின்ற தேர்தல் நாடகம் என்று தான் இதனைப் பார்க்க வேண்டும்.

கேள்வி: அனைத்துலக சமூகத்தார் தொடர்ச்சியாக பாராமுகமாகவே இருக்கின்றனர். பெருமளவில் மனித உரிமை மீறல்கள் நடைபெறும் போது அவர்கள் அதனைக் கண்டித்ததாகவும் தெரியவில்லை. இப்போது ஓரளவிற்கு நிலைமைகள் மாறி வந்தாலும், அவர்களின் அந்த மாறுதல் மிகவும் ஒரு மெல்லியதான மிகவும் காலதாமதமான ஒரு மாறுதலாகத்தான் இருக்கின்றது. இதற்கு முக்கிய காரணம் என்ன?

பதில்: அனைத்துலக சமூகம் கடந்த காலத்தில் இலங்கை அரசின் பல பொய்ப்பிரச்சாரங்களை நம்பியிருந்திருக்கலாம். ஆனால் அனைத்துலக சமூகம் தற்போது இலங்கை அரசின் கபடத்தனத்தையும் இரட்டை வேடத்தையும் புரிந்து கொள்கின்ற சூழல் வந்து விட்டது.

ஏனெனில் இப்போது பல்வேறு வழிகளின் ஊடாக பல அழுத்தங்கள் வரத் தொடங்கி விட்டதனை எங்களால் பார்க்க முடிகின்றது.

உதாரணத்திற்கு, மனித உரிமைகள் விடயத்தில் அவர்களது அண்மைக்கால அறிக்கைகள் அதனைத்தான் காட்டு கின்றன. அதுமட்டுமல்ல அவர்களுக்கான உதவிகளை அனைத்துலக சமூகம் தற்போது நிறுத்தத் தொடங்கிவிட்டது.

ஒரு நாட்டிற்கான அழுத்தத்தை ஒரே நாளில் கொடுக்க மாட்டார்கள். படிப்படியாகத்தான் அந்த அழுத்தங் களைக் கொடுப்பார்கள் என நான் நினைக்கின்றேன். அனைத்துலக சமூகம் வெகுவிரைவில் இலங்கை அரசிற்கு ஒரு பாடத்தைப் படிப்பிக்கும் என்றுதான் நினைக்கின்றேன்.

கேள்வி: அனைத்துலக நாடுகள் என்று பார்க்கும்போது எமது அயல் நாடான இந்தியா எமது நியாயப்பாட்டை உணர்ந்து எமது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் என்ற ஒரு ஏக்கம் தமிழ் மக்களுக்கு நீண்ட நாட்களாகவே இருந்து வருகின்றது. ஆனால் இந்தியா அதற்கு எதிர்மாறாக இலங்கை அரசிற்கும், இராணுவத்திற்கும் உதவிகளை வழங்குவதனையும், முண்டு கொடுப்பதனையும்தான் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றது. இதற்கு முக்கிய காரணம் என்ன?

பதில்: இந்திய அரசு கூட தற்போது அதனை உணர்வதாகத்தான் தெரிகிறது. ஏனெனில் அங்கேயும் பல மாறுதல்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்திய அரசுகூட தனது கொள்கையை மாற்றிக் கொண்டு எமது போராட்டத்தை வெகுவிரைவில் அங்கீகரிக்கின்ற காலம் வரும் என நான் நினைக்கின்றேன்.

கேள்வி: இன்னுமொரு விடயத்தை புலம்பெயர்ந்த மக்கள் சார்பில் உங்களுக்குத் தெரியப்படுத்த விரும்பு கின்றேன். அதாவது வன்னியில் வான்குண்டு வீச்சுக்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வான்படையின் வானூர்திகள் அங்கு அதற்காகவே அடிக்கடி வட்டமிட்ட வண்ணமும் இருக்கின்றன. இத்தகைய ஒரு தாக்குதலில்தான் சு.ப.தமிழ்செல்வன் அண்ணாவைக்கூட இழந்திருக்கின்றோம்.

எனினும், அண்மைய காலங்களில் கிளிநொச்சிப் பகுதிகளில் நடைபெறும் வைபவங்களின் நிழற் படங்களைப் பார்க்கும்போது தலைவர்கள், தளபதிகள் ஒன்றுகூடி அந்த நிகழ்வுகளில் பங்கு பற்றுவது புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு ஆதங்கத்தை உருவாக்கியுள்ளது.

அதாவது, பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருக்கும் போது ஏன் இப்படியான நிகழ்வுகளில் தலைவர்களும், தளபதிகளும் ஒன்றாகக்கூடி நிற்கின்றனர் என்ற ஆதங்கம் புலம்பெயர் வாழ் தமிழ் மக்களிடத்தில் எழுந்துள்ளது. இது தொடர்பில் தங்களின் கருத்து என்ன?

பதில்: நாங்கள் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்ட பின்னரே அவ்வாறான நிகழ்வுகளில் கலந்து கொள்கின்றோம்.

அது மட்டுமல்ல, நாங்கள் ஒரு விடுதலை இயக்கம், மக்கள் இயக்கம். மக்களைப் பிரதிநிதிப்படுத்துபவர்கள். உண்மையில் இன்று நாம் எமது கட்டுப்பாட்டு பிரதேசத்தில் ஓர் அரசு போன்றே இயங்குகின்றோம். அதனால் ஏராளமான விடயங்களை நாங்கள் மக்கள் மத்தியில் சென்றே செய்யவேண்டிய சூழ்நிலை உள்ளது. அத்துடன் மக்களின் நிகழ்வுகளில் கலந்து கொள்ள வேண்டிய நிலையிலும் இருக்கின்றோம்.

ஆகையால்தான் பிரதான பொறுப்பாளர்கள், தளபதிகள் வெளிப்படையாகவே வந்து நிகழ்வுகளில் பங்குபற்றி மக்கள் தொடர்பாக சில உரைகளை நிகழ்த்துகின்றனர். இதற்காக மக்கள் மத்தியில் செல்ல வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.

தகுந்த பாதுகாப்பு ஏற்பாடு மேற்கொள்ளப்பட்ட பின்னரே நாங்கள் அப்படியான நிகழ்வுகளில் கலந்து கொள்கின்றோம்.

கேள்வி: தமிழீழத் தேசியத் தலைவர் எதனையும் முன்கூட்டியே அறிந்து அதற்கு ஏற்றாற்போல் இந்தப் போராட்டத்தை சரியான வழியில் கொண்டு செல்லும் சாணக்கியம் மிக்க ஒருவராகத் திகழ்கின்றார். அதனைப் பல தடவைகள் கண்டிருக்கின்றோம். இந்திய இராணுவம் இலங்கைக்கு வரும்போது இந்திய இராணுவத்தோடு நாங்கள் மோதவேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பதனை முதலில் தெரியப்படுத்தியவர் அவர்தான். அதற்கு ஏற்றபடி தனது நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.

இலங்கையின் எந்தவொரு அரசும் எமக்கு ஒரு தீர்வையும் தராது என்பதனை அவர் நீண்டகாலத்திற்கு முன்னரேயே மீண்டும் மீண்டும் குறிப்பிட்டு வந்தார். அதனை இப்போது வெளிப்படையாக சாதாரண மக்களே அறிந்து கொள்ளக்கூடிய ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.

அதேபோல்தான் அனைத்துலக சமூகம் இலங்கை அரசாங்கத்திற்கு முண்டு கொடுத்துக் கொண்டிருக்கின்றது. மூக்குடையப் போகின்றது என்பதனை அறிந்து வைத்துக்கொண்டுதான் கடந்த மாவீரர் நாள் உரையை, அனைத்துலக சமூகத்திற்கான உரையாக நிகழ்த்தியிருந்தார். நீங்கள் தலைவருடன் அருகிலிருந்து நீண்ட காலம் பழகியவர் என்ற வகையில் தலைவரின் இந்தத் திறமை குறித்து உங்களின் பார்வை எவ்வாறிருக்கின்றது?

பதில்: எமது தலைவர் மிகவும் தீர்க்க தரிசனமான பார்வை கொண்டவர். எந்த ஒரு நடவடிக்கை என்றாலும் மிக நீண்ட தொலைநோக்குடனேயே ஒவ்வொரு விடயத்தையும் யோசித்து ஆழமாகச் சிந்தித்து அதனால் வரப்போகின்ற அரசியல், இராணுவ விளைவுகளை எல்லாம் எடை போட்ட பின்னரே ஒவ்வொரு முடிவும் அவரால் எடுக்கப்படுகின்றது.

அவ்வாறான ஒரு முடிவுதான் அண்மையில் எடுக்கப்பட்டு நாங்கள் அது தொடர்பில் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருக்கின்றோம். தற்போது உண்மையில் அனைத்துலக சமூகம் இதனை நன்றாக உணரத் தலைப்பட்டிருக்கின்றது.

கேள்வி: இலங்கை அரசாங்கம் அது எந்த அரசாங்கமாக இருந்தாலும் உண்மையில் தமிழர்களின் பிரச்சினைகளைப் புரிந்து வைத்திருக்கின்றதா?

பதில்: இலங்கை அரசு அது எந்த அரசாக இருந்தாலும் அவர்கள் எல்லோரும் தமிழர் விரோதப் போக்கைக் கொண்டவர்களாகத்தான் இருந்து வருகின்றனர்.

இதுதான் கடந்த கால வரலாறு. இலங்கை அரசாங்கம் ஒருபோதும் எங்களின் பிரச்சினைகளை சுமூகமான முறையில் அரசியல் பேச்சுவார்த்தைகளின் ஊடாகத் தீர்ப்பதற்கு முன்வருவார்கள் என்று நான் நினைக்கவில்லை.

அவர்கள் தற்போது அனைத்துலக சமூகத்தின் முன் செய்து கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைக்கூடத் தூக்கியெறிந்து விட்டு கொலை செய்வது பற்றிய கதைகளையே அளந்து கொண்டிருக்கின்றார்கள். இதன் ஊடாக அவர்கள் என்ன மனநிலையில் இருக்கின்றனர் என்பதனை நாங்கள் உணரக்கூடியதாக இருக்கின்றது.

இலங்கை அரச தலைவர் இந்தியாவிற்கு ஒரு பேட்டி கொடுத்திருக்கின்றாரே என்று இதற்கு முன்னர் என்னிடம் கேள்வி கேட்ட ஒரு பெரியவர் (நேயர்) கூறினார். இது ஒரு அநாகரிகமான பேட்டி என்றுதான் நான் நினைக்கின்றேன். நாகரிக உலகம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு பேட்டி இது.

ஒரு நாட்டின் அரச தலைவர் என்று இருப்பவர் இவரைக் கொலை செய்வேன் அவரைக் கொலை செய்வேன் என்று கூறுவது நாகரிக உலகத்தால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு வார்த்தைப் பிரயோகம் ஆகும்.

இலங்கை அரசு எந்த நிலையில் இருக்கின்றது என்பதை முழு உலக நாடுகளும் புரிந்து கொள்வதற்கு இது இலகுவாக இருக்கும் என்று நான் நினைக்கின்றேன்.

தகுந்த பாடம் புகட்டவே பொறுமை

கேள்வி: கிழக்குப் பகுதி படையினரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றது. யாழ்ப்பாணப் பகுதி தொடர்ச்சியாக படையினரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றது. மன்னாரில் தற்போது மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் இருக்கின்றன. வன்னிப் பெருநிலப்பரப்பின் மீதும் பாரிய இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள அவர்கள் தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஏன் ஒரு பாரிய தாக்குதல் ஒன்றை நிகழ்த்தவில்லை அல்லது ஏன் அத்தகைய முன்னெடுப்புக்களை முறியடிக்கும் சமரைக்கூட நடத்தவில்லை என்ற சிறு ஆதங்கம் தமிழ் மக்களிடத்தில் இருக்கின்றது. இது சரியான ஒரு ஆதங்கமா?

பதில்: அந்த ஆதங்கம் உண்மையில் எல்லோருக்கும் இயல்பாக வரக்கூடிய ஒன்றுதான். போர் நிறுத்த காலத்தில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறக்கூடாது என்பதற்காகவும் இன்னொரு புறம் இலங்கை அரசின் சுயரூபத்தை அனைத்துலக சமூகம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவுமே நாங்கள் பொறுமை காத்து வருகின்றோம்.

அது மட்டுமல்ல எமது மக்கள் மீது பாரிய இராணுவ நடவடிக்கையை அவர்கள் மேற்கொண்டால் நாங்கள் அவற்றை முறியடித்து அவர்களுக்குத் தகுந்த பாடத்தைப் புகட்டுவதற்கான ஒரு பலமான நிலையில் இன்று இருக்கின்றோம் என்பதனையும் நான் இந்தக் கட்டத்தில் உங்களுக்குக் கூற விரும்புகின்றேன்.

கேள்வி: போர் நிறுத்த ஒப்பந்தத்தின்போது எந்த விதத்திலும் வலிந்த ஒரு சமரை தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொள்ளா மல் அமைதி காத்து வந்தார்கள். எனினும் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாக இருந்த இந்தப் போர் நிறுத்த ஒப்பந்த அமைதியின் மூலம் சாதித்தது என்ன?

பதில்: அமைதியின் ஊடாக ஏராளமான விடயங்களை சாதித்திருக் கின்றோம். அத்துடன் அனைத்துலக நாடுகள் இலங்கை அரசை நன்றாகப் புரிந்து கொண்டிருக்கின்றன. அது மட்டுமல்ல அரசியல் ரீதியாகவும், இராஜதந்திர ரீதியாகவும் நாங்கள் நிறைய சாதித்திருக்கின்றோம்.

சிங்கள மக்கள் கூட அரசை இன்று நன்றாகப் புரிந்து கொள்ளக்கூடிய நிலைக்கு இந்த அரசு தள்ளப்பட்டிருக் கின்றது. இன்று உலக நாடுகள் இலங்கை அரசின் மீது பல கண்டனக்கணைகளைத் தொடுத்து வருகின்றன.

போர் நிறுத்தத்திலிருந்து அவர்கள் அதிகாரபூர்வமாக விலகியதனைத் தொடர்ந்து உலகத்தின் பல வல்லரசு நாடுகள்கூட இலங்கை அரசின் மீது கண்டன அறிக்கைகளை விடுத்தது மட்டுமல்ல இராணுவ உதவிகளைக்கூட நிறுத்தப் போவதாகவும் அறிவித்திருக்கின்றன.

இணைத்தலைமை நாடுகள் கூட அறிக்கையை விட்டிருக்கின்றன. அவர்கள் எல்லா உதவிகளையும் நிறுத்தப் போகின்றனர் என நான் நினைக்கின்றேன். ஏனெனில் இலங்கை அரசின் பொருளாதாரம் என்பது வெளிநாடுகளின் தங்கு நிலைகளிலே இருந்து வருகின்றது.

இந்த தங்கு நிலையின் மூலமே இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். எனவே உலக நாடுகள் இவ்வாறான பொருளாதார உதவிகளை நிறுத்துவதன் மூலம் அரசு இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என்ற ஒரு நிலை வரும்.

தற்போது உலக நாடுகள் மத்தியில் ஒரு கெட்ட பெயரை இலங்கை அரசு சம்பாதித்திருப்பதனை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆகவே காலம் கனிந்து கொண்டு வருகின்ற இந்த நேரத்தில் புலம்பெயர்ந்து இருக்கின்ற மக்களின் கைகளில்தான் நிறைய விடயங்கள் தங்கியிருக்கின்றன.

எமது விடுதலைப் போராட்டத்தை வெகுவேகமாக வென்றெடுப்பதற்கான சக்தி உங்களிடம் இருக்கின்றது. அதனை நான் சொல்லாமல் உங்களுக்குப் புரியும் என நினைக்கின்றேன்.

கேள்வி: மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் கீழ்தான் தமிழ் மக்களுக்கு கூடுதலான அழிவு ஏற்பட்டது என்று தமிழ் மக்கள் மத்தியில் ஒரு அனுமானம் உள்ளது. இது சரியான அனுமானமா?

பதில்: உண்மையில் இவர்கள் ஒரு தீவிர தமிழ் விரோதப் போக்கைக் கடைப்பிடித்திருக்கின்றனர். இவர்கள் மட்டுமல்ல ஏனையவர்களும் தான். இலங்கை அரசில் வருகின்ற எல்லோருமே தமிழர் விரோதப் போக்கைக் கொண்டவர்களாகவே உள்ளனர்.

கேள்வி: வன்னிப்பெரு நிலப்பரப்பு மீதான படை நடவடிக்கையை இலங்கை அரசு மேற்கொண்டு வருகின்றது. அதேநேரம் இலங்கை இராணுவத் தளபதியும் அமைச்சர்களும் விடுதலைப் புலிகளைக் நசுக்கிவிடுவோம் என்று சூளுரைக் கின்றனர். ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பை இத்தகைய ஒரு காலக்கெடுவை விதித்து நசுக்கிவிட முடியுமா?

பதில்: இது மக்கள் விடுதலைப் போராட்டம். இந்த விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலம் தொட்டே காலக்கெடுக்கள் விதிப்பது என்பது இலங்கை அரசினது வழமையான செயற்பாடாகும். முப்பது வருடங்களுக்கு முன்னர் ஜே.ஆர்.ஜயவர்த்தனா யாழ்ப்பாணத்திற்கு வீரதுங்க என்பவரை அனுப்பி விடுதலைப் புலிகளை ஆறு மாத காலத்தில் முற்றுமுழுதாக அழித்துவிடுவேன் என்று சூளுரைத்தார். இதனைப் போன்றே காலத்துக்குக் காலம் வருகின்ற சிங்கள இராணுவத் தளபதிகளும் அரசியல் தலைவர்களும் காலக்கெடு விதிப்பது வழமையாகும்.

இத்தகைய ஒரு காலக்கெடு விதிப்பது என்பது எமது போராட்டத்திற்கு மட்டுமல்ல-வியட்நாம் விடுதலைப் போராட்டம் என்றாலும், தென்னாப்பிரிக்க விடுதலைப் போராட்டம் என்றாலும் இத்தகைய காலக்கெடுக்கள் விதிக்கப்பட்டன. இது இராணுவச் சண்டியர்களின் கதை வசனங்களே தவிர மக்கள் விடுதலைப் போராட்டங்களை எந்தவொரு சக்தியாலும் ஒடுக்க முடியாது.

கேள்வி: தமிழக மக்களின் எழுச்சி- அவர்களின் ஊடாக இந்திய அரசாங்கத்திற்கு ஒரு அழுத்தத்தைக் கொடுக்கலாம் என்ற ஒரு பார்வை இருக்கிறது. இந்த மக்களின் எழுச்சியை அங்குள்ள ஊடகங்கள் சரியாக முன்னெடுத்துச் செல்கின்றதா?

பதில்: தற்போது தமிழக மக்களிடம் பாரிய எழுச்சி ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் உணர்வு ரீதியாக எமக்கு ஆதரவாக இருந்து வருகின்றனர். தமிழக மக்களின் இந்த எழுச்சியும், உணர்வும் இந்திய மத்திய அரசு எமது விடுதலைப் போராட்டம் குறித்து சாதகமானதொரு நிலைப்பாட்டை எடுக்க உதவும் என்றுதான் நாங்கள் கருதுகின்றோம்.

கேள்வி: புலம்பெயர் தமிழ்மக்கள் மத்தியில் உள்ள ஊடகங்கள் எத்தகைய பணிகளை ஆற்றவேண்டும் எனக் கருதுகின்றீர்கள்?

பதில்: புலம்பெயர்ந்துள்ள எமது மக்களை அணிதிரட்டி எமது தேசிய விடுதலைப் போராட்டத்திற்குப் பலம் சேர்ப்பதில் இந்த ஊடகங்களின் பங்கு என்பது மிகப்பெரிய விடயம். அது எந்த நாடாக இருந்தாலும் அங்கே உள்ள ஊடகங்கள் தமிழ் மக்களை அணிதிரட்டி, எமது விடுதலைப் போராட்டத்தோடு ஒன்றிணைத்து அவர்களை நிறுவனமயப்படுத்தி எமது விடுதலைப் போராட்டத்தின் பங்காளிகளாக மாற்றுவதில் பெரும் பங்கு வகிக்கின்றன.

இதே பணியைத் தொடர்ந்தும் அவர்கள் செய்வார்கள் என்ற நம்பிக்கை எமக்கு பெரியளவில் இருக்கிறது.

கேள்வி: புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் மத்தியில் போராட்டம் குறித்த சரியான அரசியல் அறிவு இருக்கிறதா என்ற ஒரு ஐயப்பாடு நிலவுகின்றது. அதாவது சரியானதொரு அரசியல் பார்வையில் இந்தப் போராட்டத்தை புலம்பெயர் தமிழ்மக்கள் பார்க்கின்றார்களா? இது குறித்து நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?

பதில்: புலம்பெயர்ந்துள்ள மக்கள் அரசியல் ரீதியாக நல்ல தெளிவுடன் இருக்கின்றனர். அவ்வாறான தெளிவான பார்வை இருப்பதால்தான் எமது போராட்டம் அன்று முதல் இன்றுவரை பலமாக இருந்து வருகின்றது. போர் நிறுத்தக் காலத்தில் அங்கேயுள்ள ஏராளமான மக்களைச் சந்திக்கும் வாய்ப்புக்கள் எமக்குக் கிடைத்தன. அங்கே உள்ள முதியோரில் இருந்து சிறியவர்கள் வரை இந்தப் போராட்டம் குறித்த தெளிவான பார்வையுடன்தான் இருக்கின்றனர்.

பிரபாகரன் நலன்

கேள்வி: இலங்கை வான் படையின் தாக்குதலில் தலைவர் பிரபாகரன் காயமடைந்திருப்பதாகத் தெரிவிக்கிறார்கள். இதனைப் பற்றி நீங்கள் ஏதாவது கூறமுடியுமா?

பதில்: இது அப்பட்டமான பொய். ஆழிப்பேரலை வந்தபோதுகூட தலைவரை ஆழிப்பேரலை இழுத்துக்கொண்டு போய்விட்டது என்ற பொய்ப்பிரச்சாரத்தை இலங்கை அரசு மேற்கொண்டது. அது போல் 1987 ஆம் ஆண்டில் இந்தியப்படைகள் இங்கிருந்த போது மாத்தையாவால் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டார் என்ற பொய்ப்பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.

காலத்துக்குக் காலம் இந்த ஆக்கிரமிப்பாளர்கள் தமது ஆசைகளை இப்படியான வார்த்தைகளின் ஊடாக, அறிக்கைகளின் ஊடாக வெளிப்படுத்துவது அப்பட்டமான பொய்ப் பிரசாரமாகவே உள்ளது.

கேள்வி: போராட்டத்தில் தமக்கு எந்தவித அக்கறையும் இல்லை என்று கூறிக்கொண்டிருக்கும் ஒரு சிலரும் புலம்பெயர்ந்துள்ளவர்கள் மத்தியில் இருக்கின்றனர். அவர்கள் உட்பட ஒட்டுமொத்த புலம்பெயர் வாழ் தமிழ் மக்களுக்கும் நீங்கள் கூற விரும்பும் செய்தி என்ன?

பதில்: புலம்பெயர்ந்துள்ள அனைத்து மக்களுமே விடுதலைப் போராட்டத்திற்கான ஆதரவையும் பங்களிப்பையும் செயற்படுத்தி வருகின்றனர் என்றே நினைக்கின்றேன். கடந்த காலத்தில் ஒரு சிலர் அப்படி இயங்கியிருந்தாலும் தற்போது அவர்களும் இந்தப் போராட்டத்தின் பங்காளிகளாக மாறியிருக்கின்றனர். இது நாம் எல்லோரும் பெருமைப்படக்கூடிய விடயம்.

எமது போராட்டம் வெல்லப்பட வேண்டும் என்பதில் புலம்பெயர்ந்துள்ள எமது உறவுகள் மிகவும் உணர்வுபூர்வமாக இருக்கின்றனர். ஆகவே கடந்த காலங்களை விடவும் தொடர்ந்து வரும் காலப்பகுதியில் புலம்பெயர்ந்த மக்கள் எமது போராட்டத்தில் பல மடங்கு பங்காளிகளாக இருக்க வேண்டும் என்றுதான் எமது தலைவரில் இருந்து போராளிகள், மக்கள் அனைவருமே ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

கேள்வி: விடுதலை அமைப்பு ஒன்று ஒரு சுதந்திரப் பிரகடனத்தை எந்த வகையில் வெளியிடலாம்? கடந்த வருடம் மாவீரர் நாள் உரையின்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் ஒரு சுதந்திரப் பிரகடனத்தை வெளியிடுவார் என்றும், தைப்பொங்கலுக்கு சுதந்திரதினப் பிரகடனத்தை வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. அது பற்றிய உங்கள் பார்வை என்ன?

பதில்: நாங்கள் எதனையும் உணர்ச்சிவசப்பட்டு அறிக்கைகளாக விடுவதில்லை. காலம் கனிந்து வரும்போது அனைத்துலக நாடுகளின் ஆதரவுடன் அவ்வாறான பிரகடனத்தைச் செய்யலாம். ஆனால் பலரதும் ஊகங்கள் பலவிதமாக இருந்தன.

காலம் கனிந்து வரும்போது அதற்கான செயற்பாடுகள் இயல்பாகவே இடம்பெறும்.

கேள்வி: கொழும்பில் உள்ள சிங்கள மக்களுக்கும் விடுதலைப் போராட்டம் குறித்த சில தெளிவுபடுத்தல்களைத் தெரியப்படுத்த வேண்டிய தேவை கொழும்பில் உள்ள ஊடகங்களுக்கு உள்ளது. அந்த வகையில் சிங்கள மக்களுக்கு எமது போராட்டத்தின் நியாயப்படுத்தல்களைத் தெரியப்படுத்துவதற்கு எந்த வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன?

பதில்: நாம் பல்வேறுபட்ட ஊடகங்களின் ஊடாக சிங்கள மக்களுக்கு எமது தகவல்களை அனுப்பிக்கொண்டிருக்கிறோம

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காலம் கனிந்து

காலம் கனிந்து வரும்போது அதற்கான செயற்பாடுகள் இயல்பாகவே இடம்பெறும்.

பதில்: புலம்பெயர்ந்துள்ள மக்கள் அரசியல் ரீதியாக நல்ல தெளிவுடன் இருக்கின்றனர். அவ்வாறான தெளிவான பார்வை இருப்பதால்தான் எமது போராட்டம் அன்று முதல் இன்றுவரை பலமாக இருந்து வருகின்றது. போர் நிறுத்தக் காலத்தில் அங்கேயுள்ள ஏராளமான மக்களைச் சந்திக்கும் வாய்ப்புக்கள் எமக்குக் கிடைத்தன. அங்கே உள்ள முதியோரில் இருந்து சிறியவர்கள் வரை இந்தப் போராட்டம் குறித்த தெளிவான பார்வையுடன்தான் இருக்கின்றனர்.

பதில்: புலம்பெயர்ந்துள்ள அனைத்து மக்களுமே விடுதலைப் போராட்டத்திற்கான ஆதரவையும் பங்களிப்பையும் செயற்படுத்தி வருகின்றனர் என்றே நினைக்கின்றேன். கடந்த காலத்தில் ஒரு சிலர் அப்படி இயங்கியிருந்தாலும் தற்போது அவர்களும் இந்தப் போராட்டத்தின் பங்காளிகளாக மாறியிருக்கின்றனர். இது நாம் எல்லோரும் பெருமைப்படக்கூடிய விடயம்.

எமது போராட்டம் வெல்லப்பட வேண்டும் என்பதில் புலம்பெயர்ந்துள்ள எமது உறவுகள் மிகவும் உணர்வுபூர்வமாக இருக்கின்றனர். ஆகவே கடந்த காலங்களை விடவும் தொடர்ந்து வரும் காலப்பகுதியில் புலம்பெயர்ந்த மக்கள் எமது போராட்டத்தில் பல மடங்கு பங்காளிகளாக இருக்க வேண்டும் என்றுதான் எமது தலைவரில் இருந்து போராளிகள், மக்கள் அனைவருமே ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

எங்கட "கோமணத்தாரை:" கேக்காமல் இப்படி ஒரு செவ்வி கொடுத்ததுக்காக எப்படியும் ஒரு இது உவருக்கு இருக்கு...

நிதானமான பேச்சு.......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குறுக்கால போற (எதிர் வினைக்) கருத்துக்களைக் கொட்ட இன்னும் ஒருவரும் கிழம்பவில்லைப் போல் இருக்கு!

"பதில்: அந்த ஆதங்கம் உண்மையில் எல்லோருக்கும் இயல்பாக வரக்கூடிய ஒன்றுதான். போர் நிறுத்த காலத்தில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறக்கூடாது என்பதற்காகவும் இன்னொரு புறம் இலங்கை அரசின் சுயரூபத்தை அனைத்துலக சமூகம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவுமே நாங்கள் பொறுமை காத்து வருகின்றோம்.

அது மட்டுமல்ல எமது மக்கள் மீது பாரிய இராணுவ நடவடிக்கையை அவர்கள் மேற்கொண்டால் நாங்கள் அவற்றை முறியடித்து அவர்களுக்குத் தகுந்த பாடத்தைப் புகட்டுவதற்கான ஒரு பலமான நிலையில் இன்று இருக்கின்றோம் என்பதனையும் நான் இந்தக் கட்டத்தில் உங்களுக்குக் கூற விரும்புகின்றேன்."

முன்னகர்வு முறியடிப்பு இவைகளுக்கான காரணங்கள், இந்தப்பதிலில் தெளிவாக்கப்பட்டுள்ளது. எதிர்ச் சமருக்கான தேவை எப்போது நிகழ்த்தப்படும் என்பதைப் புலிகளே தீர்மானிப்பார்கள். அதுவரை புலம்பெயர் ஈழத்தமிழர் தங்களது கடமை என்ன என்பதை உணர்ந்து செயற்பட்டாலே போதும். களத்திலிருந்து கிடைக்கும் நம்பிக்கையான செய்திகள், அந்தக் களத்தினைப் பலப்படுத்த நாம் செய்யப்போவது என்பவற்றில் தெளிவாயிருத்தல் முக்கியமானது.

உது 1 மாதத்திற்கு முன்னர் வந்ததுங்கோ. புலம்பெயர்ந்தவர்கள் நல்ல தெளிவாகத்தான் இருக்கினம். :D

பகுதி1 http://www.tamilnaatham.com/audio/2008/jan.../nadesan_1.smil

பகுதி2 http://www.tamilnaatham.com/audio/2008/jan.../nadesan_2.smil

பகுதி3 http://www.tamilnaatham.com/audio/2008/jan.../nadesan_3.smil

ஓமுங்கோ அதுதானுங்கோ இது. எழுத்து வடிவத்தில இப்பதானுங்கோ வந்திருக்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.