Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழர் தாயகத்தில் நடைபெறும் சிறீ லங்கா ஆழ ஊடுறுவும் அணியின் கிளைமோர் தாக்குதல்கள் சொல்கின்ற செய்தி என்ன?

Featured Replies

அனைவருக்கும் வணக்கம்,

இப்ப என்ன எண்டால் எல்லாரும் ஆய்வுகள், ஆராய்ச்சிக்கட்டுரைகள் எழுதிறீனம். சிங்களவனும் எழுதுறான், தமிழனும் எழுதுறான், வெள்ளக்காரனும் எழுதுறான். தாயகத்தில நீர்மூழ்கிக் கப்பல்கள வெள்ளோட்டம் விடுறது தொடக்கம் மல்ரிபரலுகள், ஏவுகணைகள், சட்டலைட்டுக்கள் எண்டு தினுசுதினுசா நிறைய வித்துவான்கள் எழுதிக்கொண்டு இருக்கிறீனம். எனவேதான் இவர்கள்மாதிரி இப்பிடி ஆராய்ச்சிகள் செய்து நானும் ஒரு இக்பால் அத்தாஸ் மாதிரி ஒரு காலத்தில ஒரு பெரிய வித்துவானா வரலாம் எண்டு கற்பனை செய்துகொண்டு இந்த சிறிய செய்தி ஆய்வினை யாழ் இணையத்துக்காக எழுதுறன்.

நன்றி! வணக்கம்!

தலைவர்,

யாழ் அரட்டை அடிப்போர் சங்கம்

_____________________________________

தமிழர் தாயகத்தில் நடைபெறும் சிறீ லங்கா ஆழ ஊடுறுவும் அணியின் கிளைமோர் தாக்குதல்கள் சொல்கின்ற செய்தி என்ன?

22_04_08_karunarathnam_04.jpg

வருத்தக்காறர ஏற்றிக்கொண்டு போற அம்புலன்சுகள், பள்ளிக்கூடம் போற பிள்ளைகள ஏற்றிக்கொண்டு போற பேருந்துகள், சனங்களுக்கு சாப்பாட்டு சாமான்கள் கொண்டுபோற லொறிகள் எண்டு எல்லாப்பக்கத்தாலையும் சிறீ லங்கா ஆழ ஊடுறுவும் அணி கிளைமோர் வைக்கிறாங்கள். ருசிகண்ட பூனையாட்டம்… இதுகள் ரத்தவெறிகூடி இப்ப கிளைமோரும் கையுமா பற்றைகளுக்க அலைஞ்சு கொண்டு இருக்கிதுகள். இந்தவெறியாட்டத்துக்கு கடைசிப் பலிக்கடா அன்புக்குரிய எங்கள் அருட்தந்தை கருணாரட்ணம் அடிகளார்!

தற்போது சிறீ லங்கா அரசாங்கத்திற்கு இந்த ஆழ ஊடுறுவும் அணியின் தேவைதான் என்ன? இவர்கள் எதற்காக இந்த ஆழ ஊடுறுவும் அணியை பயன்படுத்துகின்றார்கள்? இந்த ஒளித்துபிடித்து விளையாட்டுக்கள் இன்னும் எவ்வளவு காலத்துக்கு நீடிக்கப்போகின்றது? இந்த ஆழ ஊடுறுவும் அணியினை தாயகமக்கள் வெற்றி கொள்வது எப்படி? இப்படி நிறைய கேள்விகளை தோண்டித் தோண்டிக் கொண்டு போகலாம்.

ஆழ ஊடுறுவும் அணி என்பது சிறீ லங்கா இராணுவத்தின் ஒருபிரிவாக பார்க்கப்படாது இன்னொரு தனிப்படையாக பார்க்கப்படவேண்டி உள்ளது. ஏன் என்றால் சிறீ லங்கா அரசாங்கம் சட்டத்திற்கு முரணான வகையில் தனது முப்படைகளால் சாதிக்கமுடியாததை இந்த ஆழ ஊடுறுவும் அணி மூலம் சாதிக்கப்பார்க்கின்றது. இது சிறீ லங்கா அரசாங்கத்தின் இயலாமையின் வெளிப்பாடு என்பது ஒருபுறம் இருக்க சிறீ லங்காவில் இருந்து பிரிந்து இன்னொரு புதிய தேசம் உருவாகி உள்ளது என்பதை பறைசாற்றும் நிகழ்வாகவும் இந்த ஆழ ஊடுறுவும் அணியின் செயற்பாடுகளை கருதமுடியும். மேலும், சர்வதேசத்தின் கண்களில் இலகுவாக மண்ணைத் தூவிவிட்டு தனது தமிழின அழிப்பை முடுக்கிவிடுவதற்கு சிறீ லங்கா அரசாங்கம் பாவிக்கும் ஒரு தந்திரமாகவும் இதை நோக்கமுடியும்.

இன்றுவரை சிறீ லங்காவின் ஆழ ஊடுறுவும் அணி செய்துள்ள சாதனைகள் மற்றும் அதுபட்டுள்ள வேதனைகள் என்று கூட்டிக்கழித்து பார்த்தால் மாதத்திற்கு ஒன்று, கிழமைக்கு ஒன்று என்று நடத்தப்பட்ட இந்தப்படையின் தாக்குதல்கள் தற்போது தாயகத்தில் நாளாந்தம் நடைபெறும் நிகழ்வாக மாறும் தன்மையில் இருந்து இந்தக்கட்டமைப்பின் திட்டமிட்ட விரிவாக்கம் பற்றி நாம் ஊகம் செய்யக்கூடியதாய் உள்ளது. ஆழ ஊடுறுவும் அணி தாயகத்தில் ஒரு புதிய போர்முனையை திறந்து உள்ளது என்பது தவிர, எதிர்காலத்தில் போரின் வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாக இந்த ஆழ ஊடுறுவும் அணி அமையப்போகின்றது என்பதையும் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

ஆழ ஊடுறுவும் படையின் செயற்பாடுகளை நேற்று ஆரம்பித்து இன்று தொடர்ந்து பின் நாளையுடன் முடிந்துவடைந்து விடக்கூடிய குறுகிய கால திட்டங்களாக பார்க்கமுடியாது. விரைவில் தமிழீழம் என்ற ஓர் தேசம் உருவாகினால் அங்கு உள்ள தலைவர்களின் சுதந்திர நடமாட்டங்களை கட்டுப்படுத்துவதோடு தமது துவேசங்களையும், வெறுப்புக்களையும் காலத்திற்கு காலம் காட்டுவதற்கு சிங்கள தேசம் பயன்படுத்தக்கூடிய ஓர் நீண்டகால திட்டமாகவும் ஆழ ஊடுறுவும் படையைக் கொள்ள முடியும். குறைந்த செலவுடன் நிறைந்த பயனைத்தரும் வழிமுறைகள் பற்றி யார்தான் அக்கறைகொள்ள மாட்டார்கள்? மேலைநாடுகளிடம் கடன்பட்டு நவீன ஆயுதங்களை வாங்கி அதைக்கொண்டு மரபுரீதியாக போரிடுவதைவிட உள்ளூர் மூலப்பொருட்களை பயன்படுத்தி, ஆளணி பலத்தோடு புதிய பாணியினாலான கெரில்லா போர்முறையில் பாரிய வெற்றிகள் பெறமுயற்சிப்பதில் சிறீ லங்கா அரசாங்கம் ஈடுபடுவதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை.

ஆரம்பத்தில் தமிழ் பொதுமக்கள் சிலருக்கு பணம்கொடுத்து அவர்கள் மூலம் தமது கிளைமோர் குண்டுகளை தமிழர் தாயகத்தில் வெடிக்க வைத்த சிங்கள அரசு பின்னர் இராணுவத்தின் ஒரு துணைப்பிரிவாக ஆழ ஊடுறுவும் அணியை வளர்த்தெடுத்தது. இனி, ஆள ஊடுறுவும் படைக்கென தனியாக நேர்முகப்பரீட்சை வைத்து, சிங்கள இளைஞர்களுக்கு ஆசைகாட்டி – ஆள்சேர்த்து – பயிற்சிகளும் கொடுத்து விரைவில் களத்தில் இறக்கியும் விடக்கூடும். காடுகளில் விலங்குகளை சத்தமில்லாமல் பின்தொடர்ந்து சென்று வேட்டையாடுவது போன்றதே எதிரியின் பிரதேசத்தினுள் இரகசியமாக நுழைந்து கிளைமோர் குண்டுகளை வெடிக்கவைப்பது என்பது. எனவே ஆழ ஊடுறுவும் அணியின் இலக்குகள் துல்லியமாக அடையப்படுவதற்கு காடுகளில் தற்போது வாழும் சிங்கள வேடர்களிடம் சிறீ லங்கா அரசு இதற்காக பிரத்தியேக உதவிகள் பெற்றாலும் சிரிப்பதற்கு ஒன்றும் இல்லை.

தாயகமக்கள் ஆழ ஊடுறுவும் அணி பற்றி எவ்வளவு தூரம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்? தாயக மக்கள் தினமும் தம்மீது விமானக்குண்டு வீச்சு நிகழ்த்தப்படுவதை அறிந்ததும் எப்படி வீட்டுக்கு வீடு, தெருவுக்கு தெரு பதுங்குகுழிகள் அமைத்து தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டார்களோ அதைவிடக் கூடுதலான முக்கியத்துவத்தை இந்த ஆழ ஊடுறுவும் படைக்கு கொடுக்கவேண்டும். ஏன் என்றால் விமானம் குண்டுவீசவரும் போது ஆகக்குறைந்தது முதலாவது குண்டுவிழுந்தபின் சத்தத்தை கேட்டுவிட்டாவது பதுங்குகுழியினுள் ஓடிஒளிந்து பாதுகாப்பு தேடிக்கொள்ள முடியும். ஆனால், இந்தக் கிளைமோர் குண்டுகள் எப்போது வெடிக்கும், எங்கு வெடிக்கும் என்பது ஒருவருக்குமே தெரியாது. ஒருமுறை வெடித்தால் வெடித்ததுதான். முன்பே எச்சரிக்கை அடைந்து தற்காப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்தாலொழிய அல்லாதுவிடின் மக்களிற்கு ஏற்படும் உயிர் இழப்புக்களையும், சேதங்களையும் தடுக்கமுடியாது.

விமானக்குண்டு வீச்சில் இருந்து தப்புவது என்பது வரும்போது காக்கும் தற்காப்பு முறை என்றால், கிளைமோர் குண்டு தாக்குதலில் இருந்து தப்புவது என்பது வரும்முன் காக்கும் தற்காப்பு முறை என்று கூறவேண்டும். நேற்று செஞ்சோலையில் விமானக்குண்டுவீச்சு மூலம் சிறுமிகளிற்கு நடந்த துயரத்திலும் மோசமான ஒரு சம்பவம் நாளை இதே கிளைமோர் குண்டுதாக்குதல் மூலம் நடக்கக்கூடும் என்பதை தாயகமக்கள் எதிர்பார்த்து அதற்கு ஏற்றவகையில் தமது தற்பாதுகாப்பு முறைகளை பலப்படுத்திக்கொள்ள வேண்டும். கவலையீனமாக இருந்துவிட்டு கடைசியில் செஞ்சோலையில் நடந்ததுபோல் ஓர் துயரசம்பவம் இடம்பெற்றபின் அழுதுபுழம்புவதில் பயனில்லை. அண்மையில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்ட அருட்தந்தை அவர்களிற்கு தலையில் காயம் ஏற்பட்டே அவர் இறந்தார் என்பது நாம் அறிந்ததே. இவர் வாகனத்தின் முன் இருக்கையில் அமர்ந்து இருந்தபோது ஓர் தலைக்கவசம் அணிந்து இருந்தால் அவரது உயிர் ஆகக்குறைந்தது காயங்களோடு மட்டுமாவது காப்பாற்றப்பட்டு இருக்கமுடியும் என்பதை நாம் மறுக்கமுடியுமா?

போர் நடைபெறும் இடங்களில் மக்கள் தமது உயிர்களைக் காப்பாற்றிக்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுப்பது நகைப்பிற்கு இடமான ஒன்று அல்ல. பார்ப்பதற்கு விநோதமாக இருந்தாலும் உயிரைக் காப்பது என்ற வகையில் பல தற்காப்பு நடவடிக்கைகளை மக்கள் எடுத்துக்கொள்ள முடியும். செஞ்சிலுவைச் சங்க அம்புலன்ஸ் வண்டியே சிறீ லங்கா ஆழ ஊடுறுவும் அணியின் தாக்குதலிற்கு உள்ளாகின்றது என்பதை அவதானிக்கும்போது வாகனத்தில் வெள்ளைக்கொடியை பறக்கவிடுவது எல்லாம் சிங்கள இனவாதிகளின் முன் ஒரு பாதுகாப்பு முறையாக கொள்ளப்படமுடியாது. மாறாக ஆள ஊடுறுவும் படையினை எதிர்கொள்வதற்கு திட்டமிட்ட நீண்டகால நடவடிக்கைகளை தாயக மக்கள் மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் இந்த கிளைமோர் குண்டுகள் இன்று நாளையுடன் முடிவடைந்துவிடப்போகின்ற ஓர் பிரச்சனை அல்ல. தமிழீழம் என்ற தேசத்தில் என்றென்றும் நிலைத்து இருக்கப்போகும் ஓர் தவிர்க்கமுடியாத பிரச்சனை.

இறுதியாக கத்தியை நீட்டுபவனுக்கு கத்தியை நீட்டுவதுதான் எமக்கு பாதுகாப்பானது. கத்தியை நீட்டிக்கொண்டு எமது புத்தியையும் பாவிக்கலாம். ஆனால் வெறுமனே கத்திக்கு புத்தியை பாவிப்பது ஆபத்தானது. எனவே, சிங்கள தேசத்தினுள்ளும் எப்போது நாளாந்தம் கிளைமோர் குண்டுகள் வெடிக்கின்றதோ அப்போதுதான் புதிதாக திறக்கப்பட்டுள்ள இந்தப்போர்முனையில் தாயக மக்கள் வெற்றிபெற முடியும். எதிரிமீது தாயக மக்களின் ஆழ ஊடுறுவும் அணிகள்மூலம் கிளைமோர் தாக்குதல்கள் செய்யப்பட்டு கிலி ஏற்படுத்தப்பட வேண்டும். ஓர் ஆழ ஊடுறுவும் படையை இன்னொரு ஆழ ஊடுறுவும் படைமூலமே வெற்றிகொள்ள முடியும். சிறீ லங்கா ஆழ ஊடுறுவும் படையின் தாக்குதலிற்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் அண்மையில் சாகடிக்கப்பட்டார். சிறீ லங்கா ஆழ ஊடுறுவும் படையின் கொலை வெறியாட்டத்தின் உச்சக்கட்டமாக தமிழர் தாயகத்தில் உள்ள மனித உரிமை அமைப்பின் முக்கியஸ்தரான அருட்தந்தை வணக்கத்துக்குரிய கருணாரட்ணம் அடிகளார் படுகொலை செய்யப்பட்டு உள்ளார். இவை எவற்றை உணர்த்துகின்றது?

சிறீ லங்கா அரசிற்கு சமாதானத்தின் மீது எதுவித நாட்டமும் இல்லை. தமிழ் மக்கள் அடக்கி ஒடுக்கப்பட்டு அடிமைகளாகவும், சிங்கள அரசு போடும் தாளத்திற்கு ஏற்றபடி ஆடும் பொம்மைகளாகவும் இருப்பதையே சிறீ லங்கா தேசம் விரும்புகின்றது. முன்பு பத்து மில்லியன் யூதர்கள் ஜேர்மன் நாசி அரசாங்கத்தினால் கொலை முகாம்களிற்கு அனுப்பப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்கள். இன்று தமிழர்களும் அவர்கள் வாழும் தாயகமே சிறீ லங்கா பேரினவாத அரசினால் கொலை செய்யப்படும் ஓர் திறந்தவெளி முகாமாக மாற்றப்பட்டு அங்குவைத்து கொலை செய்யப்படுகின்றார்கள். கொலை முகாம்களில் முன்பு யூதர்கள் கொலை செய்யப்பட்டபோது ஒருவர்பின் ஒருவராக சக யூதர்கள் முன்னிலையில் மானபங்கப் படுத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு சாகடிக்கப்பட்டார்கள். கொலை முகாம்களில் இருந்த யூதர்கள் தமது உறவுகள் கொல்லப்படும்போது பேசா மெளனிகளாக இருந்து, எதவித எதிர்ப்புக்களையும் காட்டாது தமது உறவுகள் கொலைசெய்யப்படும் காட்சிகளை மட்டும் கண்ணீர் மல்கியபடி பார்த்தார்கள். அவ்வளவு தூரம் அப்போது நாசி அரசின் கொலை முகாம்களில் இருந்த யூதர்கள் மூளை சலவை செய்யப்பட்டு இருந்தார்கள். இதே நிலமை தாயகத்தில் உள்ள எமது உறவுகளிற்கும் ஏற்படக்கூடாது. தமது உயிர்களை காப்பாற்றிக் கொள்ளவாவது தாயக மக்கள் கிளர்ந்து எழுந்து சிறீ லங்காவின் இந்த ஆழ ஊடுறுவும் அணிக்கு நீண்டகால நோக்கில் தகுந்ததொரு பாடம் புகட்டவேண்டும்!

_____________________________________

கள உறவுகளிடம் ஒரு கேள்வி. சிறீ லங்கா ஆழ ஊடுறுவும் படையினை வெற்றிகொள்ள நீங்கள் பரிந்துரை செய்யும் யோசனைகள் எவை?

Edited by முரளி

புலிகள் தென் இலங்கையில் தாக்குதல் நடத்துவதை விட இவங்கள் வன்னிக்குள் புகுந்து கிளைமோர் வைப்பது இலகுவாகபோய்விட்டதா..? வன்னியைச் சுற்றி தம் காவலரண் இருப்பதாக தலமை சொல்லுது.. ஏதோ புதுசா தாங்கள் செய்யப்போவதாகவும் சொல்லினம்...அது சரி.. ஆனால் ஒவ்வொரு முறையும் நீங்க ஒரு வாணவேடிக்கை காட்டேக்க.. அவங்களும் திருப்பி காட்டிறாங்களே..?

******

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றியில் கற்பது சொற்பம் தோல்வியில் கற்பது அதிகம்!

அனுபவங்களின் ஊடாகத்தான் உலகம் எல்லாவற்றையும் கற்று வருகின்றது. இப்பேர்பட்ட பேரரசான அமெரிக்காவே வளைகுடா யுத்தத்தை 1991 தொடங்குமுன் அல்கெய்த்தா பற்றி அக்கறை கொள்ளவில்லை பதிலாக அவர்களுக்கு பல உதவிகளை புரிந்துவந்தது. "புனித போர்" என்ற அவர்களது சுலோகம் அமெரிக்க உளவுபடையால் கூட அலசி ஆராயப்படாமல் இருந்திருக்கின்றது. ரஸ்யாவிற்கு எதிரான செச்செனிய போரில் அல்கெய்ததா உடன்நின்றதும் அதற்கு அமெரிக்கா மறைமுகமாக உதவியதும் செப்டம்பர் (9-11) 11ம் திகதி தக்குதல்களுக்கு சிலகாலம் முந்தியவை. அமெரிக்கா தனது எதிரியை தானே வளர்த்துவிட்ட துர்ஸ்டவசமான செயலுக்கு ஆளானது. அந்த படிப்பினையே ஆயுத குழுக்கள் என்றாலே தள்ளி நிற்பது என்ற காரசாரமான முடிவுக்கு அமெரிக்காவை தள்ளியது. உதாரணத்திற்காக பல விடயங்களை இப்படியே அடுக்கி கொண்டுபோகலாம். முக்கியமாக பார்க்க கூடிய உதாரணம் செச்செனிய போராட்ட இஸ்லாம் போராளிகள் மீது ரஸ்யா நடத்திய தாக்குதல். ஒரு மாலை நேரம் அவர்களது தலைவர் மீது ரஸ்யா ஏவுகணை தக்குதலை நடத்தியது....... அவர்களால் சற்றும் எதிர்பாராத தாங்கிகொள்ள அன்றி ஈடுசெய்யமுடியாத தாக்குதலாக அது அமைந்தது. இருப்பினும் இவ்வளவு விலையையும் கொடுத்துவிட் போராட்டத்தை இடை நிறுத்துவதா? அவர்களின் மிக திறமை வாய்ந்த பல தாக்குதல்களை முன்நின்று நடத்தியவர் என்ற அடிப்படையில் அவர்களது அடுத்த தலைவர் நியமிக்கப்படுகிறார். நியமிக்கபட்டு மறுநாள் ரஸ்யா அடுத்த ஏவுகணையை வீசியது அவர் அவ்விடத்திலே கொல்பட்டார். இப்போ மூன்றாம் ஆளை தேர்வு செய்ய வேண்டிய நிலைமையை ஏற்று அவர்களும் மூன்றாவது தலைவரை தேர்வு செய்து மிகவும் பாதுகாப்பான இடத்தில் வைக்கின்றார்கள். மறுநாளே அவர்மீதும் ஏவுகணையை வீசியது ரஸ்யா. அடுத்தடுத்து மூன்று தலைவர்களை இழந்த பின்தான் அவர்கள் தாக்குதலுக்கான காரணத்தை கண்டறிந்தார்கள். அவர்கள் பயன்படுத்திய தொலைபேசி கதிர்வீச்சை சற்றலைட்டின் ஊடாக பதிவு செய்து அதே இடத்திற்கு ஏவுகணைகளை வீசியது ரசியா. இதில் அவர்கள் மட்டும் பாடம் கற்கவில்லை உலகில் உள்ள அனைவருக்குமே அது நல்ல பாடமாக அமைந்தது. அதனால்தான் அவ்வாறான எந்த தாக்குதலும் அதன்பின் உலகில் நடக்கவில்லை எனலாம். அது போல்தான் அல்கெய்தா நடத்திய பயங்கரவாத தாக்குதல்

அதற்கு அமெரிக்கா இலக்கானது ஆனால் எல்லா நாடுகளுக்குமே அது ஒரு நல்ல பாடமாக அமைந்தது.

இனி நேரடியாக விடயத்திற்கு வருகிறேன் பிரிகேடியர் தமிழ்செல்வன் அவர்கள் மீதான தாக்குதலை புலிகள் எதிர் பார்த்தே இருந்திருப்பார்கள் அரசியல் போராளியாதலால் அவர் தலைகாடடாது இருப்பது தவிர்த்தே ஆகவேண்டும் வெளியே வருவதும் போவதும் அவருடைய பொறுப்போடு சம்மந்தபட்டது அது தவிர்க்க இயலாதது. ஆனாலும் உலக போர் முறைகளில் அரசியல் போராளிகளை இராணுவ ரீதியாக இலக்கு வைப்பது கண்டனத்திற்குரியது. காரணம் அவர்களது அரசிலமைப்பை தடுப்பது மறைமுகமாக அவர்களை போருக்கு தள்ளுவது என்பதற்கு சமமானது என்பதாலேயே. அந்த அடிப்படையில் பிரிகேடியர் தமிழ்செல்வன் மீதான தாக்குதல் புலிகளால் தடுக்க முடியாது போனது. அதுபோல பாராளமன்ற உறுப்பினர் சிவநேசன். அருட்தந்தை கருணாரட்ணம் ஆகியோரது மரணம் அவர்களாலேயே எதிர்பார்க்க பட்டதுதான். தமது உயிரை கொடுத்தும் இலட்சியத்தை காக்க வேண்டும் என்ற துணிவு கொண்டவர்கள் அவர்கள் காரணம் ஆள ஊடுருவும் படையின் நடவடிக்கையை புலிகள் நன்றே அறிந்திருக்கின்றார்கள் ஆனாலும் இவ்வாறான வெளிவிவகார பொறுப்போடு சம்ந்தபட்டவர்களை அதனிருந்து காப்பது தற்போதைக்கு முடியாதது. காரணம் தாக்குதல் நடாத்தபடும் விதமும் நவீன தொழில் நுட்பமும். அவர்கள் எவ்வாறு இந்த தாக்குதல்களை நடத்துகின்றார்கள்?

சற்றலைட்டின் உதவியுடன் குறிப்பிட்ட நபரின் வாகன போக்வரத்தை அவதானிப்பது. அவரது போக்குவரத்து பாதை நேரம் என்பன சரியாக நேரடியாக அவதானிக்க படுகின்றது. பின்பு குறிப்பிட்ட தாக்குதல் இடத்தை தேர்வு செய்து. அவ்விடத்திற்கு எவ்வாறு சென்றடைவது என்பதையும் சற்றலைடடியின் உதவியுடனேயே கணிப்பது.

பின் (GPS ) ஜிபிஸ் ன் உதவியுடன் அவ்விடத்தை சென்றடைவது. அவர்கள் சென்று கொண்டிருக்கும் பாதையும் சுற்று புறமும் நேரடியாகவே அவதானிக்க படுகின்றது ஏதாவது புதிதான நடமாட்டம் இருப்பின் அவர்கள் திருப்பி அழைக்கபட்டுவிடுவார்கள். அது பின்னொரு நாளில் நடத்தபடும்.

இதை தடுத்து நிறுத்த பல வழிகள் உண்டு புலிகளை பொறுத்த வரையில் அது இயலாது. இருப்பினும் அவர்கள் சில குறிபிட்ட பாதைகளையே பாவிக்க கூடியாதாக இருப்பதால் அந்த பாதைகளை வலுவாக கண்காணிக்கலாம். அந்த பாதைகளை கண்டறிய இலகுவாக மோப்ப நாய்களை பயன்படுத்தலாம். வாகன போக்குவரத்தை அதிகரிக்க வேண்டும் அவ்வாறு அதிகரிக்கும் படசத்தில் இராணுவமும் தாக்குதல் திட்டத்தை மாற்றலாம்....... ஆதாவது ஆழஊடுருவதிலிருந்து ஏவுகணைகளை வீசுவது என்பது என்ற நிலைக்கு மாறலாம் ஆனாலும் இவ்வாறான அரசியல் நபர்களை அவ்வாறு குறி வைக்க மாட்டார்கள் என்று தான் நான் நம்புகிறேன். ஆனால் சிங்களவன் மோடன் என்பது யாவரும் அறிந்ததே.

இது என்னுடைய அறிவுக்கு எட்டியது. உண்மை நிலமை நேர்மாறானதாகவும் இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு விடயத் தலைப்பு.

எதிரிக்கு இரையாக.. கெளசல்யன்.. அரியநேரு.. பரராஜசிங்கம்.. என்று தென் தமிழீழத்திலும்.. அப்புறம் வாகரைக்குள்.. கொக்கட்டிச்சோலைக்குள் வெடித்த கிளைமோர்கள்.. இன்று வன்னிக்குள் வெடிக்கின்றன. கேர்ணல் ராஜன் என்ற மூத்த போராளி உள்ளடங்க பல தளபதிகளைக் கிளைமோர் காவு கொண்டுள்ளது. பல அப்பாவிப் பொதுமக்களும் இலக்காகி இருக்கின்றனர்.

சிங்களம் தன் மீது புலிகள் வைக்கும் அச்சுறுத்தலுக்கு பதிலடியாக தானும் கிளைமோர்கள் மற்றும் விமானத்தாக்குதல் என்று தாக்குதல் பதிலடி செய்வது.. மகிந்த கூட்டணிக்கு சந்திரிக்கா அம்மையார் - ரத்வத்த கூட்டணியால் கற்றுக் கொடுக்கப்பட்டது. அது இப்போ மகிந்த - சரத் பொன்சேகாவின் இனவெறியின் வெளிப்பாடாகி இருக்கிறது.

பேச்சுக்குப் போக இருந்த தமிழ்செல்வன் அண்ணாவைக் கூட இலக்கு வைக்கிற அளவுக்கு கிளைமோர்கள் ஆதிக்கம் செலுத்தின வன்னியில். குறிப்பாக ஜெயசிக்குறு வன்னி ஆக்கிரமிப்பின் பின் கிளைமோர்களின் ஆதிக்கம் வன்னி நிலப்பரப்பில் அதிகரித்திருக்கிறது.

இந்த ஆழ ஊடுருவும் அணியை அமெரிக்கா உட்பட பல நாடுகள் தமது போர் உத்திகளில் ஒன்றாக குறிப்பாக காட்டுப்புறப் போரரங்குகளில் நடத்தி வருகின்றன. குறிப்பாக வியட்நாம் போரில் இது குறிப்பிடத்தக்க வெற்றிகளை அமெரிக்காவுக்கு பெற்றுக் கொடுத்தது. ஜெயசிக்குறு காலத்தில், வியட்நாமில் செயற்பட்ட அமெரிக்க கிரீன் பரேட் (Green Berets) நேரடியாக சிறீலங்காவுக்கு வந்து காட்டுப்புற போருக்கான பயிற்சிகளை வழங்கி இருந்தது. அதன் தொடர்சியாக இவை இடம்பெறுகின்றன.

300px-SF_Solders_at_Sampoor.jpg

http://en.wikipedia.org/wiki/Sri_Lanka_Arm...Forces_Regiment

The Sri Lanka Army Special Forces evolved from organization initially known as "Combat Tracker Team". This group at the inception in 1985 had two Officers and 38 men and was to be tasked to carry out small group operations which have capability of operating deep in enemy territory against LTTE terrorism in time of war.

ஆழ ஊடுருவும் அணி இரண்டு வகையில் இருக்கிறது.

ஒன்று நேரடியாக சிங்கள இராணுவத்தினரை உள்ளடக்கிய அணி. (இதன் ஆரம்பகால தளபதியாக செயற்பட்டவர் மேஜர் ஜெனரல் கெட்டியாராச்சி. இதன் இன்னொரு தளபதியாக இருந்து செயற்பட்டு 1996 இல் முல்லைத்தீவில் சாவடைந்து சிறீலங்கா அரசின் அதி உயர் விருதைப் பெற்றவர் கேர்ணல் லபீர்.)

இரண்டாவது.. வன்னிக்குள் வாழ்பவர்களை உள்ளடக்கிய அணி.

ஆழ ஊடுருவும் அணியின் செயற்பாட்டு வெற்றிக்கு வன்னிக்குள் ஊடுருவி அங்கு வாழ்ந்து உளவுத் தகவல்களை சேகரித்து வழங்கி.. அதன் வழி செயற்படும்.. தேசத் துரோகிகளின் செயற்பாடே ஆபத்தானது. துல்லியமாக இலக்குகளை அடையவும் செய்கிறது.

ஆழ ஊடுருவும் அணியில் இராணுவத்தின் பங்களிப்பு உண்டு என்பதை ஏலவே முறையடிக்கப்பட்ட ஆழ ஊடுருவும் அணிகளின் செயற்பாட்டிலும் கொல்லப்பட்ட படைவீரர்களின் உடலங்களை அரசு பெறுப்பேற்றுக் கொண்டதன் பின்னணியிலும் அறிந்து கொள்வது கடினமல்ல..!

எது எப்படியோ..போராளிகளை தளபதிகளை ஆழ ஊடுருவிக் கொல்வதன் மூலம் போர் தோல்வி அடைந்திடுமோ அல்லது எதிரிக்கு சாதகமாகி விட்டதோ என்ற ஒரு அச்ச உணர்வை... மற்றும் பாதுகாப்பற்ற உணர்வை தமிழ் மக்கள் மத்தியில் விதைக்கும் உளவியல் போரும் இதனுடன் கலந்துள்ளது. இந்தக் கிளைமோர் யுத்தம் மிக ஆபத்தானது தமிழர்களைப் பொறுத்தவரை.

சிங்களம் இன்று தென்னிலங்கையில் கிளைமோர்கள் வெடிப்பதைக் கட்டுப்படுத்தி இருக்கிறது. எப்படி..??! 150,000 பேர் கொண்ட சிவில் பாதுகாப்பு அணிகளை உருவாக்கி அதனையும் ஏனைய முப்படைப்பிரிவுகளையும் ஒருங்கிணைத்து செயற்படுத்துவதன் மூலம். வன்னியில் ஆழ ஊடுருவும் அணியின் செயற்பாடுகளை முற்றாக முடக்குவது கடினம் என்று கருதின்.. அவர்கள் வெற்றி பெறுவதை தடுக்க உள்ள வாய்ப்புக்களையாவது உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

குறிப்பாக பயணப்பாதைகள் நெடுகிலும் குறிப்பிட்ட தூரத்துக்கு அப்பால் மிதிவெடிகளை மற்றும் சத்த வெடிகளைப் பரந்து புதைத்தல். இதன் மூலம் கிளைமோர்களை வாகனங்களை வீதியில் செல்வோரை நோக்கி ஆழ ஊடுருவி வந்து வைப்பதை குறிப்பிடக் கூடிய அளவுக்கு இனங்காணலாம். அதுமட்டுமன்றி பரந்த நிலப்பரப்பில் எதிரி ஆழ ஊடுருவி சுயாதீனமாக செயற்படுவதில் சில தடைகளை உருவாக்கலாம்.

கிராம மக்களைக் கொண்டு ஊருக்கு ஊர் கண்காணிப்பு மையங்களை நிறுவுதல். இதன் மூலம் எதிரியின் இலகுவான செயற்பாட்டைக் கட்டுப்படுத்தலாம். குறிப்பாக வீதிகளை கண்காணிப்பதை செய்யலாம். காடுகளினுள் குறிப்பிட்ட அளவுக்கு கண்காணிப்பு நிலைகளை அமைத்தல். இதற்காக மர அரண்களை உருவாக்கிக் கண்காணிக்கலாம். போர் பயிற்சி பெற்ற சில துணைப்படை வீரர்களின் உதவியுடன் ஊர்மக்களின் பங்களிப்பை ஒரு ஒழுங்கு முறையில் பெற்று இதைச் செய்யலாம்.

பிரதான வீதிகளின் இரு மருங்கிலும் சுமார் 100 மீற்றர்கள் வரை துப்பரவு செய்தல் அவசியம் (பாவிக்கப்படும் கிளைமோர்களின் தாக்க வீச்சைப் பொறுத்து இதனைத் தீர்மானிக்கலாம்) அல்லது அடிக்கடி சோதனைகளுக்கு உள்ளாக்குவது அவசியம்.

கிளைமோர்களைக் கண்டறிய என்று செயற்பட கவசம் பொருத்தப்பட்ட வாகனங்களை உள்ளூரில் தயாரித்து அவற்றின் மூலம் கண்காணிப்பை அதிகரிக்கலாம். (புலிகள் வாகனங்களை கவசவாகனங்களாக வடிவமைப்பதில் சிறந்தவர்கள்.).

போராளிகளை தளபதிகளை முக்கிய பிரமுகர்களை கவசம் பொருத்திய வாகனங்களில் பயணிக்கச் செய்யலாம்.குறிப்பாக பைபர் இழை கொண்ட கவசங்கள்.. உலோககங்களை விட சிறந்தவையாக இருக்கும்..!

எதிரியை தமிழீழத்தின் எல்லையில் தூர நிறுத்துதல். இதனை போரில் வெற்றி மூலமே சாதிக்கலாம்..! இது தற்போதைக்கு சிரமமானது..!

இப்படி சாத்தியமான வழிமுறைகளை எல்லாம் கையாண்டு.. இந்த தாக்குதல் உக்தியை முறியடிக்க வேண்டிய அவசியம் தமிழர்களைப் பொறுத்தவரை இப்போ அவசியமாகி இருக்கிறது. போராளிகளை இதற்குள் மிணக்கெடுத்தாது.. துணைப்படை மற்றும் மக்கள் கண்காணிப்பு அணி.. மற்றும் மக்கள் உளவுப்படை போன்ற அமைக்குகளை உருவாக்கி.. ரகசிய மற்றும் பகிரங்க செயற்பாடுகள் மூலமும் மற்றும் எதிரிக்கு அனுப்பப்படும் செய்திகள் மூலமும் எதிரியின் செயற்பாடுளில் உள்ள சுதந்திரத்தன்மையை.. கட்டுப்படுத்த வேண்டும்.

இன்று.. தெற்கில் ஒரு சாவு என்றால் அடுத்த வாரமே வன்னியில் ஒரு சாவு என்று.. ராஜபக்ச கூத்துக் காட்ட நாம் அதனை வேதனையுடன் வேடிக்கை பார்க்க வேண்டிய சோகமான நிலை இருக்கிறது. இது தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஒரு பலவீனமான நிலையே..! இந்த நிலை தொடர்வது அல்லது தொடர அனுமதிப்பது சிங்களத்தின் போர் வெறிக்கு உந்து சக்தியாகவே அமையும்..!

----------------------

இது தொடர்பாக வேறோரு பகுதியில் நான் முன்னர் பதிந்த பதிவையும் இங்கிணைக்கின்றேன்..!

என்னிடம் ஒரு கேள்வி.. தெற்கில் இன்று கிளைமோர்கள் வெடிப்பது நின்றுவிட்டது அல்லது கட்டுப்படுத்தப்பட்டு விட்டது. ஆனால் வன்னியில்.. கடந்த ஜனவரியில் இருந்து தளபதி சாள்ஸ்.. எம் பி.. சிவநேசன்.. மனித உரிமைகள் அமைப்பாளர் கருணாரட்னம் அடிகளார்.. மற்றும் பொதுமக்கள் என்று கிட்டத்தட்ட கிளைமோர் வாரா வாராம் வெடித்துக் கொண்டிருக்கிறது.

ஒரு பக்கம் விமானத்தாக்குதல்கள் இலக்குகளை பதம் பார்க்கின்றன. இன்னொரு பக்கம் ஆள ஊடுருவும் அணியின் வெற்றிகர நடவடிக்கைகள். இவை எல்லாம் எதிரிக்கு உற்சாகம் அளிக்கும் விடயங்கள் தானே.

எத்தனை தளபதிகளை சண்டைக்கு வெளியில் கிளைமோருக்கு பலி கொடுத்திருக்கின்றோம். கேர்ணல் ராஜன்.. கங்கை அமரன்.. முன்னாள் மன்னார் மாவட்டத்தளபதி.. இப்படிப் பலர். இராணுவம் பாதுக்காப்போடு இருப்பதால்.. விழிப்போடு இருப்பதால் அதன் ஒரு தளபதியைக் கொல்ல தற்கொலைத் தாக்குதலை தேர்வு செய்ய வேண்டிய தேவை எமக்கிருக்கிறது. ஆனால் எதிரி கிளைமோர்களை வைத்தே அதை சாதித்துவிடுகிறானே..!

இருந்தும்.. தென்னிலங்கை செய்து கொண்ட பாதுகாப்பு ஏற்பாடுகளில் பாதியைக் கூடவா வன்னியில் உள்ள 3 இலட்சம் மக்களை வைத்துச் செய்து கொள்ள முடியவில்லை. இன்றும் கிளிநொச்சி மாவட்டம் வரை இராணுவம் ஆள ஊடுருவித் தாக்குதல் நடத்தி இருக்கிறது. அதிகாலையில் தாக்குதல். பொதுமக்களின் பார ஊர்தி இலக்கு. இதுவே போராளிகளின் பார ஊர்தியென்றால்.. போர்க்களத்துக்கு வெளியே விமானத்தாக்குதல்களுக்கு வெளியே.. இதுவும் போராளிகளுக்கு இழப்பைத்தானே அதிகரிக்கும்.

வன்னி பரந்த நிலப்பரப்பு என்பதால் இராணுவம் ஊடுருவித் தாக்குவது இலகு என்று சாக்குப் போக்குச் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. வன்னியை விட பரந்தது தெற்கும்.. மேற்கும். ஆனால் அங்கு இப்போ கிளைமோர்கள் வெடிப்பது கிட்டத்தட்ட முற்றாக கட்டுப்படுத்தப் பட்டிருக்கிறது.. அல்லது கட்டுப்படுத்த நடவடிக்கைகள் இருக்கின்றன.

ஆனால்.. வன்னியில் இருந்து வரும் செய்திகளைப் பார்த்தால்.. எதிரியின் விமானத் தாக்குதலை விட ஆள ஊடுருவும் அணியின் தாக்குதல்களே பலத்த சவாலாக.. இழப்புக்களை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்திருக்கிறது..! வன்னி மக்களைக் கொண்ட கண்காணிப்புக் குழுக்களை நிறுவுவதன் மூலம்.. இதற்கென தனியான துணைப்படைகளை உருவாக்குவதன் மூலம்.. இவற்றைக் கட்டுப்படுத்த முடியாதா...???! குறிப்பாக உயிர்ப்புள்ள வீதிகளை தொடர்சியாக கண்காணிப்புக்குள் வைப்பதன் மூலம்.. இதைக் கட்டுப்படுத்த முடியாதா..??! பொறிவெடிகளை விதைப்பதன் மூலம் எதிரியின் ஊடுருவலை கட்டுப்படுத்த முடியாதா..??!

எதிரிக்கு நாமே இலகுவாக செயற்பட சந்தர்ப்பம் அளிப்பது எம்மை நாமே பலவீனப்படுத்தி கொள்வதற்கு நிகரானது..! இப்படியே கிளைமோர்களை அனுமதிப்பின்.. நாம் எதிர்பார்க்காத பல வேதனைகளை சந்திக்க நேரலாம். பல திறமை மிக்க தளபதிகளைக் கூட எந்த வேளையிலும் இழக்க நேரலாம். மக்களை போராளிகளை கொத்துக் கொத்தாக பலி கொடுக்கவும் நேரலாம்..! இவை போரின் போக்கை எதிரிக்கு சாதகமாகவும் மாற்றி அமைக்கலாம்..! :huh:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

நன்றி மருதங்கேணி, நெடுக்காலபோவான் பல முக்கிய தகவல்களை வழங்கி இருக்கிறீங்கள்.

மருதங்கேணி சொல்லிறது உண்மையாய் இருக்குமோ இந்த ஜீ.பீ.எஸ் சிஸ்டம் மூலம் விளையாட்டு காட்டுறது எல்லாம்? அமெரிக்க படைகளாய் இருந்தால் இந்த ரேஞ்சுக்கு சட்டலைட்டை தொடர்புபடுத்தி கதைக்கலாம் ஆனால் சிறீ லங்கா அரசாங்கத்திற்கு இந்த வசதிகள் இருக்கின்றதா? அப்படியாயின் இது மிகவும் ஆபத்தான ஒரு விசயம்.

அதாவது ஒரு முறை ரிஸ்க் எடுத்து தேவையான இடங்களில் கிளைமோர்கள விதைச்சுப்போட்டு வாகனங்கள் வரேக்க நேரடியாக சட்டலைட் தொடர்பு மூலமே ரீவி ஸ்கிரீனில பார்த்தபடி இன்னொரு லொகேசனில பாதுகாப்பாக நின்று குண்டை துல்லியமாக வெடிக்க வைக்கமுடியும். இப்படியான விபரீதத்தை தடுக்க ஒரு வழி தினமும் தெருவை ஸ்கான் பண்ண வேண்டும். ஆனால் இந்த வசதிகள் எல்லாம் தாயக மக்களிடம் இருக்கின்றதா?

சிறீ லங்கா ஆழ ஊடுறுவும் அணி நவீன தொழில்நுட்பங்களை பாவிக்குமாய் இருந்தால் அது பேராபத்தை விளைவிக்கும்.

தாயக மக்களுக்கு பொருத்தமான குறைந்த பட்ஜட்டுடன் பின்பற்றக்கூடிய ஒரு வழிமுறை நெடுக்காலபோவான் சொன்னமாதிரி கண்காணிப்பு குழுக்களை உருவாக்குதல்.

Edited by முரளி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.