Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'சிறுத்தீவில் ஓர் அதிரடி"

Featured Replies

28-05-2008 அன்றைய நாள்:

நேரம் காலைப்பொழுதைக் கடந்து நண்பகலை வரவேற்கத் தயாராகிக் கொண்டிருந்த பொழுது..., கடலும் கடல் சார்ந்த இடமுமாகிய அந்த நெய்தல் மண் சுறுசுறுப்பாகியது. ஆங்காங்கே சுடுகருவி ஏந்திய போர் வீரர்களின் நடமாட்டம். போர்ச் சூழலுக்குள் கால் பதித்து விட்டதை உள்ளுணர்வு உணர்த்தியது.

வான்குண்டுத் தாக்குதல்களாலும், எறிகணை வீச்சுக்களாலும் தலைகள் சாய்க்கப்பட்ட பனை, தென்னை மரங்களும், கொப்புகளை இழந்து எலும்புக்கூடாய் நிற்கும் நெய்தல் நில மரங்களும் போரின் தாக்கத்தைத் தெளிவாகப் பறைசாற்றின.

பல்குழல் எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததற்கான தடயங்களாக வீதிகளில் ஆங்காங்கே குழிகள். போர் முகத்துக்குள் இருந்தாலும், வீரம்மிக்க போராளிகளைத் தன் மடியில் சுமந்திருந்ததனால் மிடுக்கோடு நிமிர்ந்திருந்தது அந்த ஊர்.

அங்குதான் சிறுத்தீவு மீதான அதிரடித் தாக்குதல் திட்டத்தில் இறுதி நேரத் தவறேதும் நேர்த்திடாத வண்ணம் களமிறங்கும் கடற்புலிகளின் ஆண்-பெண் போராளிகளை உள்ளடக்கிய சிறப்பு அணிப் போராளிகளுக்குத் திட்டத்தினைத் தெளிவுபடுத்தி விளக்கினார் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி கேணல் சூசையவர்கள்.

மண்டைதீவுக்கும் குருநகருக்கும் இடையே யாழ். பண்ணைப் பாலத்துக்கு அருகாமையில், தரைவழித் தொடர்புகள் எதுவுமற்ற ஒரு சிறு தீவுதான் 'சிறுத்தீவு". இந்தத் தீவு 1,400 மீற்றர் நீளத்தையும் 250 மீற்றர் அகலத்தையும் கொண்டது.

சிறீலங்காப் படைகளின் வல்வளைப்புக்குள் சிக்கிக்கொள்ள முதல் கடற்தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் தம் தொழில் நடவடிக்கைகளைச் செய்யும் போது ஓய்வுக்காகத் தங்கிச்செல்லும் ஒரு தளமாக இது அமைந்திருந்தது.

ஆனால், 1995 ஆம் ஆண்டின் இறுதியில் வலிகாமத்தைக் கைப்பற்றிக்கொண்ட, சிறீலங்காப் படை நடவடிக்கையின் பின், 'சிறுத்தீவு" சிறீலங்காக் கடற்படையின் சிறிய தளமாக மாறியதுடன், கடற் கண்காணிப்பு நிலையமும் இங்கு அமைக்கப்பட்டது. இந்தக் கண்காணிப்பு நிலையத்தின் ஊடாகத் தங்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதோடு, விடுதலைப் புலிகளின் கடல் நடமாட்டத்தையும் கட்டுப்படுத்தி விடலாம் எனப் படைத்தரப்பு நம்பியது.

எனினும், 23-05-2007 அன்று நெடுந்தீவில் சிறீலங்காக் கடற்படைக்குக் கடற்புலிகள் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம் போல் இன்னுமொரு அதிரடி வைத்தியம் கொடுக்கக் கடற்புலிகள் அணியமாயினர். அதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம்தான் 'சிறுத்தீவு".

சுற்றிவர எதிரியின் பாதுகாப்பு நிலைகள், கடல் கண்காணிப்பு வேலிகள், முட்கம்பித் தடைகள், கண்ணி வயல்கள் தாண்டி பலமான கோட்டைக்குள் இருக்கும் பலவீனங்களை இனங்கண்டு கடற்புலி வேவு வீரர்கள் உள்நுழைந்து சரியான வேவுத் தகவல்களைத் திரட்டினர்.

இந்த வேவுப் பணியில் திறம்படச் செயற்பட்டு 'சிறுத்தீவு"த் தாக்குதல் திட்டத்தை வரையச் சரியான தரவுகளைத் திரட்டி வந்த மேஜர் இமையவன் விபத்தொன்றில் சாவடைய, அந்த மாவீரன் பெற்றுத்தந்த தகவல்களின் அடிப்படையில், தொடர்ந்தெடுத்த வேவுத் தரவுகளின் படி தாக்குதலுக்கான இறுதித் திட்டம் வரையப்பட்டது.

கடற்புலிகளின் ஆண்-பெண் போராளிகளை உள்ளடக்கிய சிறப்பு அணியொன்று இத்திட்டத்திற்கமைய வடிவமைக்கப்பட்ட பயிற்சிக் களத்தில் களம் இறங்கியது.

'கடின பயிற்சி இலகு வெற்றி" என்ற போரியல் தத்துவத்திற்கு அமைய ஓய்வு உறக்கமின்றி இரவு-பகலாய்ப் போராளிகள் வெற்றிக்காகத் தம்மை அர்ப்பணித்து பயிற்சிகளில் ஈடுபட்டனர். மாதிரிப் பயிற்சிகள் ஒத்திகைகள் எல்லாம் நேர்த்தியாகச் செய்து முடித்தனர்.

இனி இறுதித் திட்டம். திட்டத்தின் படி, சிறுத்தீவு மீதான தாக்குதலை வழிப்படுத்தும் பொறுப்பாளராகக் கடற்புலிகளின் பூநகரிக் கட்டளைத் தளபதி லெப்ரினன் கேணல் பகலவன் நேரடியாகவே களமிறங்க, தடையுடைத்து உள்ளே நகரும் அணிக்குப் பொறுப்பாகக் கதிர்வாணனும், சிறுத்தீவுத் தளத்திற்கு உதவ வரும் படையினரைத் தடுத்து விரட்டியடிப்பதோடு, சிறுத்தீவுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அணிக்குப் பொறுப்பாகச் சான்றோனும், களமிறங்கும் பெண் போராளிகளுக்குப் பொறுப்பாகப் பார்த்தீபனாவும், தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.

களமிறங்கும் சிறப்பு அணிப் போராளிகளைக் கடற்புலிகளின் சிறியரகக் காற்றுப் படகுகளில் ஏற்றிச்சென்று தரையிறக்கம் ஒன்றைச் செய்வதே திட்டமாகியது.

இவ்வாறு சிறப்பு அணிக்கான திட்டங்கள் விரிய, கடலில் சமநேரத்தில் சிறுத்தீவு மீதான அதிரடிக்கு வலுச்சேர்ப்பதான இன்னுமொரு திட்டத்தையும் கடற்புலிகளின் கடற் தாக்குதலணிகளான டேவிற், நளாயினி படையணிகளுக்கு கேணல் சூசையவர்கள் தெளிவுபடுத்தினார்.

இதன்படி சிறியரகப் படகுகள் மூலம் மண்டைதீவில் அமைந்திருக்கும் சிறீலங்காக் கடற்படைத் தளம் மீதும் குருநகர் இறங்குதுறைப் பகுதியில் அமைந்திருக்கும் கடற்படைத்தளம் மீதும், கிழக்கு அரியாலைப் பகுதியில் அமைந்திருக்கும் கடற்படையினரின் தளங்கள் மீதும் தாக்குதலைத் தொடுக்க அணியமாயினர். இவர்களுக்கான தாக்குதலை ஒருங்கிணைத்து, கடல் நகர்வுகளைக் கண்காணித்து வழிப்படுத்தும் பொறுப்பு கட்டளை மையத்தை நெறிப்படுத்தும் லெப். கேணல் இளங்கோவிடம் வழங்கப்பட்டிருந்தது.

கடல், தரையென இருமுனை நகர்வுகளையும் ஒருங்கிணைத்து வழிப்படுத்தும் பொறுப்பு லெப்.கேணல் விடுதலையிடம் ஒப்படைக்கப்பட்டது. இவ்வாறாகத் திட்டங்கள் எல்லாம் நிறைவடைந்து விட, சிறப்பாக ஒழுங்குபடுத்தப்பட்ட மதிய உணவும் வந்து சேரக்கூடியிருந்து உணவு உண்டு போராளிகளுக்கே உரிய சிரிப்போடும் கலகலப்போடும் நகர்ந்தது பொழுது.

மாலை 3.00 மணி பயணத்திற்கான அணியப்படுத்தல்களில் எல்லோரும் முழுமூச்சாய் இறங்கினர். தரையிறங்கி நகர்ந்து செல்லும்போது சுடுகருவிகளுக்குள் கடல்நீர் பட்டுவிடாது பாதுகாப்பதில் தொடங்கிச் சேறும் சகதியுமாய் இருக்கும் சிறுத்தீவின் சதுப்பு நிலத்துக்குள் புதைந்து விடாத காலணி வரை சரி பார்த்து எடுத்தாயிற்று. அதுக்குள்ளும் கிடைத்த சொற்ப இடைவெளிக்குள் தலைவாரி, முகம் கழுவி, முகப் பூச்சுக்கள் பூசி தமக்கே உரிய மிடுக்கோடு அணியமாயினர் பெண்புலிகள்.

இருளுக்குள்தான் தாம் புறப்படப் போகின்றோம் என்றும், கடலால் நகர்ந்துதான் பாதி வழி கடக்கப் போகின்றோம் என்றும் நன்றாகவே அவர்களுக்குத் தெரியும். என்றாலும் தம் செயற்பாட்டைத் தவறவிடவில்லை.

இது ஒரு புறமிருக்க கடல் அணியினரும் தமக்கான படகுகளின் பொறிகளைச் சீர்செய்து, எரிபொருள் நிரப்பி, படகில் பொருத்தப்பட்டிருக்கும் பல்வகைக் கலங்களைச் சரிபார்த்து என, எல்லாம் சீர் செய்யப்பட்டாயிற்று.

இனி, களமிறங்கும் அணிகளுக்கான நேரம். பொழுதும் பின் நிலவாக இருந்ததனால், முன்னிரவில் ஆளையாள் தெரியாத இருள். எனினும் எந்தவித ஆர்ப்பாட்டம், ஆரவாரம் எதுவுமின்றி சிறப்பு அணிப் போராளிகளை ஏற்றிக்கொண்டு ஊர்ந்து சென்றது காற்றுப்படகு.

மண்டைதீவு, சிறுத்தீவு, குருநகர் என எந்த நேரமும் விழிப்பாக இருக்கும் எதிரியின் (ராடர்) கருவிகளின் கண்காணிப்புக்குள் சிக்கிவிடாது, நகர்ந்து சென்று போராளிகள் தரையிறங்கினர். தரையிறங்கினர் என்பதை விடக் கடலில் இறங்கினர் என்பதே பொருத்தமானது.

கடலில் இறங்கிய சிறப்பு அணியினர் எதிரி விழிப்படையா வண்ணம் மிக அமைதியான முறையில் கடலோடு கடலாகிச் சிறுத்தீவை நோக்கி நகரத் தொடங்கினர். வழமையாகவே எதிரி தனது பாதுகாப்பை உறுதிசெய்ய வீசிக்கொள்ளும் 'பரா" வெளிச்சக் குண்டுகளும் இடைக்கிடை அடித்து ஓயும் எறிகணைகளும் எதிரி விழிப்படைந்து விடவில்லை என்பதை உணர்த்தின.

இதேநேரம் மண்டைதீவுத் தளம் நோக்கி மிக அமைதியான முறையில் நகர்ந்த இலக்கியா, இலக்கியன், சுகந்தினியினது படகுகள் தாக்குதலுக்கான கட்டளையை எதிர்பார்த்துக் காத்திருந்தன.

இதேவேளை கிழக்கு அரியாலைப் பகுதி மீது நிலைகொண்டிருக்கும் சிறிலங்கா கடற்படை மீது தாக்குதலைத் தொடுப்பதற்காக தீபன், தமிழ்மாறனது படகுகள் அணியமாயின.

குருநகர் இறங்குதுறைப் பகுதியில் அமைந்திருக்கும் சிறிலங்காக் கடற்படைத்தளம் மீதான தாக்குதலைத் தொடுக்க அணியமாயின, சுகந்தன், மைவிழியினது படகுகள். எல்லாப் படகுத் தொகுதிகளும் தாக்குதலுக்கான அழைப்பிற்காகக் காத்திருந்தன.

இவ்வாறாக மூன்று பக்கமும் எதிரி மீதான தாக்குதலைத் தொடுப்பதற்காகப் படகுகள் உசார் நிலையில் இருக்க, நகரும் அணி வெற்றிகரமாக எதிரியின் கண்ணில் பட்டுவிடாது இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டே இருந்தது.

29-05-2008 அதிகாலை நேரம் 1.25 சிறுத்தீவு மீதான அதிரடி தொடங்கியது. சிறப்பு அணிப் போராளிகள் மிக வேகமாக எதிரி மீதான தாக்குதலைத் தொடுக்க, சமநேரத்தில் மண்டைதீவுத் தளம், குருநகர்த்தளம், கிழக்கு அரியாலைப் பகுதி மீது கடற்புலிகள் தாக்குதலைத் தொடுத்தனர்.

சற்றும் எதிர்பாராத, எதிரி கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத இந்தத் தாக்குதலால் எதிரி நிலைகுலைந்து போய், எங்கு என்ன நடக்கின்றது என்பதைப் புரிந்துகொள்ள எதிரி திண்டாடியதை அந்தக் களச்சூழல் மிகத் தெளிவாக உணர்த்தியது.

கடற்புலிகளின் சிறப்பு அணியினரின் முற்றுகைக்குள் சிக்கி உதவிகோரிக் குளறி அழும் கடற்படையினரைக் காப்பாற்ற விரைவதா...? அல்லது மண்டைதீவு, குருநகர், கிழக்கு அரியாலைப் பகுதி மீது தாக்குதலைத் தொடுக்கும் கடற்புலிகள் மீது தாக்குதலைத் தொடுப்பதா? என்ற திண்டாட்டம் நிறைந்ததாகவே தொடக்கத்தில் எதிரியின் தாக்குதல்கள் அமைந்திருந்தன.

இதன்பின் எதிரி விழிப்படைந்து இரவைப் பகலாக்கிக்கொள்வது போல் 'பரா" வெளிச்சக்குண்டுகளை எரியவிட்டபடி பல்குழல் எறிகணைத் தளத்திலிருந்து நான்கு பக்கமும் எறிகணைகளை விதைத்தபடி 'ராங்கி"களால் எதிர்த்தாக்குதலைத் தொடுத்தபடி இருந்தாலும், சிறுத்தீவுப் படைகளுக்கு உதவிக்கு வரமுடியாததான சூழ்நிலையைச் சிறப்பு அணியினர் உருவாக்கி இருந்தனர்.

களமிறங்கிய சிறப்பு அணியினர் சிறுத்தீவுத் தளத்தை முற்றாகத் தாக்கியழித்ததோடு, தப்பியோடிய கடற்படையினரையும் தேடி அழிப்பதில் பெரும் முனைப்புடன் இறங்கினர். இதே நேரம் எதிரியின் சுடுகருவிகளையும் கடற்படையின் கண்காணிப்பு மையத்தில் இருந்;த (ராடர்) கருவியையும் கழற்றி எடுத்துக்கொண்டு சிறீலங்காக் கடற்படையினரின் மூன்று உடலங்களையும் சுமந்துகொண்டு, கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் சிறுத்தீவை முற்றுகைக்குள் வைத்திருந்த சிறப்பு அணியினர் வெளியேறினர்.

13 கடற்படையினரைக் கொன்று எதிரியின் ஒரு தொகை ஆயுதங்களையும் கைப்பற்றிக்கொண்டு தளத்தை விட்டு வெளியேறிய இந்த வெற்றிச் சமரில் மேஜர் சீனுஃபோர்மாறன் என்ற மாவீரன் தன்னை வெற்றிக்கு வித்தாக்கிக் கொண்டான்.

இந்த வெற்றிச் சமரை நடாத்திவிட்டு களம் திரும்பும் புலிகளைக் கடலில் வைத்து அழித்தாவது தமக்கு வந்த அவமானத்தைப் போக்கிவிடலாம் என்ற கடற்படையினரின் கனவால். எதிரி தனது தளத்திலிருந்து எறிகணை மழை பொழிந்த போதும் எந்தவித இழப்புக்களுமின்றி வெற்றிகரமாகத் தளத்தை அடைந்தனர் கடற்புலிகள்.

கடற்புலிகளின் சிறப்பு அணியினர் நடத்திய இந்தத் தாக்குதல் உண்மையிலேயே யாழ். குடாநாட்டின் பாதுகாப்புக்கு விழுந்த பேரிடியாகவே இருக்கின்றது. ஏனெனில் யாழ். நகரில் இருந்து ஒரு கிலோமீற்றர் தூரத்திலும், மண்டைதீவில் அமைந்திருக்கும் 'வேலுசுமண" தளத்திற்கு அருகாமையிலும் அமைந்திருக்கும் சிறுத்தீவுத் தளம். யாழ் கடல் நீரேரியின் பாதுகாப்பு அரணாகவும் இருந்திருக்கின்றது.

சுற்றிவரப் பெரும் பாதுகாப்பு நிறைந்த இந்தத் தளத்தை 30 நிமிடத்துக்குள் கைப்பற்றி, ஒரு மணி நேரத்திற்குள் முற்றாக அழித்து படைத் தளபாடங்களையும் கைப்பற்றிக் கொண்டு வெற்றிகரமாகத் தளம் திரும்பிய கடற்புலிகளின் சிறப்பு அணியின் தொடரும் அதிரடி மூலம் சிறீலங்காக் கடற்படை பேரிடியை எதிர்கொள்ளப் போகின்றது என்பதே உண்மை.

இவ்வாண்டில் நாயாற்றில் நடந்த டோறாத் தாக்குதலாக இருக்கலாம், திருமலையில் தாக்கியழிக்கப்பட்ட யு-520 விநியோகக் கப்பல் அழிப்பாக இருக்கலாம். இப்போது சிறுத்தீவு அதிரடியாக இருக்கலாம். எல்லாமே எப்படி நடந்தது? என்ற கேள்விக்குறியோடும் கடற்புலிகள் பற்றிய வியப்போடும், அச்சத்தோடும் அரசதரப்பு குழம்பிப்போய் இருக்கின்றது என்பதே இன்றைய செய்தி.

தேசத் தலைவனின் சுட்டுவிரல் அசையும் திசையெங்கும் கடற்புலிகளின் விசைவில் அழுத்தும்.

நன்றி: விடுதலைப் புலிகள் ஏடு (04.07.08)

Edited by tamilsvoice

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி தமிழ்குரல்

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றிகள் . பயனுள்ள ஒரு இணைப்பு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.