Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விரியும் களமுனைகள் - குவியும் புலிகளின் கவனம்! காத்திருப்பது என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடத்தல்தீவைச் சென்றடைந்த இராணுவத்தினரின் அடுத்த இலக்கு கிளிநொச்சியே என்று தெரிவித்துள்ளார் பாதுகாப்பு விவகாரப் பேச்சாளரும் அமைச்சருமான கெகலிய ரம்புக்வெல. இதேபோன்ற கருத்தை திருகோணமலையில் நடந்த வன இலாகா கட்டடத் திறப்பு விழாவில் உரையாற்றும்போது அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும் தெரிவித்திருந்தார். இராணுவத்தினர் விரைவில் கிளிநொச்சியை பிடித்ததும் அங்கேயும் இதேபோன்றதொரு அலுவலகமும் ஏனைய அலுவலகங்களும் திறக்கப்படும் என்று அவர் தனது உரையில் தெரிவித்திருந்தார். இதுதவிர ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கடந்த 3 ஆம் திகதி தேசிய விளையாட்டு நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போது கிளிநொச்சியிலும் விரைவில் இதுபோன்றதொரு விளையாட்டுப் போட்டியை நடத்துவோம் என்று சூளுரைத்திருந்தார்.

விடத்தல்தீவை சென்றடைந்த இராணுவத்தினர் அடுத்த கட்டமாக கிளிநொச்சியை இலக்குவைத்த நகர்வை ஆரம்பிக்கப் போகின்றனர் என்ற கருத்து அரச உயர்மட்டத்திலிருந்து வந்திருப்பதன் பின்னணியில் வன்னிக களமுனையின் நிலவரங்களை ஆராயலாம்.

தற்போது வன்னிக் களமுனையின் மேற்குப்புற சமர்க்களமான விடத்தல்தீவிலேயே இராணுவத்தினரின் கவனம் செறிவாகியுள்ளது. மன்னாரில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கைகளின் இலக்கு இதுவரை பகிரங்கமாக வெளியே சொல்லப்படாத ஒன்றாக இருந்துவந்த போதும் இராணுவத்தினரின் நகர்வு மடுவையும் விடத்தல்தீவையும் முதற் கட்டமாகக் கைப்பற்றுவதாகவே அமைந்திருந்தது.

மடுவிலிருந்து சண்டைகளேதுமின்றி எப்படி புலிகள் விலகிச் சென்றார்களோ அதேபோல் விடத்தல்தீவிலும் புலிகள் தமது அதிகபட்ச எதிர்ப்பைக் காட்டாமல் அங்கிருந்து விலகிச் சென்றுள்ளனர். அதாவது விடத்தல்தீவை புலிகள் தாமாகவே கைவிட்டு விலகிய சூழலிலேயே இராணுவத்தினர் அங்கு சென்றுள்ளனர். இதனை இராணுவத் தலைமையும் ஏற்றுக் கொண்டுள்ளது.

விடத்தல்தீவில் கடற்புலிகளின் முக்கியதளம் இருப்பதாகவும் அந்தத் தளத்தைக் கைப்பற்றிவிட்டால் புலிகளின் ஆயுத மற்றும் பொருள் விநியோகத்திற்கு இடைய+று ஏற்படுத்தி விடலாமென்றும் இராணுவத் தலைமை பெரிதும் நம்பியிருந்தது. அதற்காக தமது முழுமையான சூட்டுவலுவையும், அளவுக்கு மீறிய ஆயுதப் பாவனையும் விடத்தல்தீவு நோக்கிய நகர்வுக்காக பயன்படுத்தியிருந்தனர்.

ஆனால் விடத்தல்தீவிற்குச் சென்ற இராணுவத்தினருக்கு அங்கு ஏமாற்றமே எஞ்சியிருந்தது. விடத்தல்தீவில் கடற்புலிகளின் முக்கியதளம் இருந்ததற்கான எந்த அறிகுறியும் காணப்படவில்லை. சாதாரண ஒரு வற்றுப்பெருக்குக் கடலாகவே விடத்தல்தீவுக் கரையோரம் காணப்படுகிறது. கடற்புலிகளின் விநியோக நடவடிக்கைகளோ அல்லது அவர்களது தளமோ அங்கிருக்கவில்லை என்ற உண்மை தற்போதுதான் இராணுவத் தளபதிக்கு உறைத்திருக்கிறது. சுமார் இரண்டுவருட காலமாக மினக்கெட்டதற்கு போதிய பயனில்லை என்ற நிலையிலேயே இராணுவத்தினர் தற்போதுள்ளனர்.

ஏனெனில், விடத்தல்தீவில் கடற்படையினரும் தமது செயற்பாடுகளை இலகுவாக மேற்கொள்ள முடியாத நிலையே உள்ளது. கடற்படையினரைப் பொறுத்தவரை அவர்கள் பெரிதும் நம்பியிருப்பது அதிவேக தாக்குதல் படகுகளையும் டோறா பீரங்கிப் படகுகளையும்தான். ஆனால் வற்றுப்பெருக்குத் தன்மைகொண்ட விடத்தல்தீவு கரையோரத்திற்கு அதிவேகத் தாக்குதல் படகுகளையோ அல்லது டோறாக்ககளையோ கொண்டுவருவது இயலாத காரியமென்பதால் விடத்தல்தீவு கடற்படையினருக்கு சாதகமாகவிருக்கும் என்றும் கருதிவிட முடியாது.

அந்தவகையில் பார்த்தால் சுமார் இரண்டுவருடகால இராணுவத்தினரின் முயற்சிக்கு விடத்தல்தீவு மீட்பு என்பது போதிய திருப்தியளிக்கும் என்று கருதிவிட முடியாது. எனினும் 1990 களுக்கு பின்னர் முதற்தடவையாக விடத்தல்தீவு தம்வசப்பட்டிருப்பதாகவும் மன்னாரில் இடம்பெற்ற நடவடிக்கைகளின் முதற்கட்ட இலக்கை அடைந்து விட்டதாகவும் இராணுவத்தினர் உற்சாகப்பட முடியும்.

விடத்தல்தீவை நோக்கிய நகர்வுக்காக தயார்படுத்தப்பட்ட பிரிகேடியர் சவீந்திர டி சில்வா தலைமையிலான 58 ஆவது படையணி உயிலங்குளத்தில் இருந்தே தனது நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தது. 58 ஆவது படையணியில் மூன்று முழுமையான பிரிகேட்டுகள் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டன. 58-1 ஆவது பிரிகேட் லெப். கேணல் தேசப்பிரிய குணவர்த்தன தலைமையிலும், 58-2 ஆவது பிரிகேட் லெப். கேணல் லால் சந்திரசிறி தலைமையிலும், 58-3 ஆவது பிரிகேட் லெப். கேணல் சுராஜ் பஞ்சய தலைமையிலும் விடத்தல்தீவை நோக்கிய நகர்வுகளை மேற்கொண்டிருந்தன.

பெரியமடுவை அண்மித்த பகுதியில் லெப். கேணல் லால் சந்திரசிறி தலைமையிலான 58-2 ஆவது பிரிகேட் நகர்வுகளை மேற்கொண்டிருந்தததால் அந்த பிரிகேட்டை விடத்தல்தீவு நோக்கிய நேரடி நகர்வுக்காக அழைக்காமல் உதவித் தாக்குதல்களை வழங்கும் பொறுப்பு அதற்கு வழங்கப்பட்டிருந்தது. ஏனைய இரண்டு பிரிகேட்டுகளுமே (58-1, 58-3) விடத்தல்தீவு நடவடிக்கையில் நேரடியாகக் களமிறக்கப்பட்டன.

இந்த இரண்டு பிரிகேட்டுகளையும் சேர்ந்த எட்டு பற்றாலியன்கள் விடத்தல்தீவை நோக்கி நகர்ந்தன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகவுள்ளது. விடத்தல்தீவில் இருந்த புலிகள் உக்கிரச் சமரை மேற்கொண்டிருந்தாலும்கூட இத்தகைய எட்டு பற்றாலியன்களை களமிறக்க வேண்டியது அவசியம்தானா என்பது கேள்விக்குறியே. ஒரு பற்றாலியனில் சுமார் 750 இராணுவத்தினர் என்று கணிப்பிட்டாலும்கூட எட்டு பற்றாலியன்களிலும் மொத்தம் 6000 இராணுவத்தினர் அங்கேயிருந்த நூற்றுக்கும் குறைவான புலிகளை விரட்டுவதற்காக விடத்தல்தீவிற்குள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

லெப். கேணல் சுமிந்த ஜெயசுந்தர தலைமையிலான 8 ஆவது கெமுனுவோச், லெப்.கேணல் கமால் பின்னவெல தலைமையிலான 6 ஆவது கெமுனுவோச், லெப்.கேணல் சாரத சமரக்கோன் தலைமையிலான 10 ஆவது கஜபா, மேஜர் சாலிய அமுனுகம தலைமையிலான 12 வது கஜபா, 2 ஆவது கொமாண்டோ பிரிகேட், லெப்.கேணல் லால் சந்திரசிறி தலைமையிலான 9 ஆவது கெமுனு வோச், லெப். கேணல் நந்தன துணவில தலைமையிலான 12 ஆவது கெமுனு வோச் உட்பட மொத்தம் எட்டு பற்றாலியன்கள் விடத்தல்தீவைக் கைப்பற்றும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டன.

விடத்தல்தீவைக் கைப்பற்றுவதுதான் 58 ஆவது படையணியின் நோக்கம் என்று கூறப்பட்டபோதும் மன்னார் - ப+நகரி பிரதான பாதையான ஏ-32 ஐ கைப்பற்றி ப+நகரியுடன் தரைவழித் தொடர்பை ஏற்படுத்துவதே இந்த படையணியின் இறுதி இலக்கு என்று கருதப்படுகிறது. ஏ-32 வீதியை இலக்குவைத்தே 58 ஆவது படையணியின் நகர்வுப் பாதை அமைந்திருப்பதும் அதனையே உறுதிசெய்வதாக உள்ளது.

விடத்தல்தீவைக் கைப்பற்றுவதற்கு இறுதியாக மூன்று முனைகளில் இராணுவத்தினர் தயார் செய்யப்பட்டனர். முதலாவது முனை - விடத்தல்தீவிற்கு தெற்கே ஏ-32 வீதியில் 4 கிலோமீற்றர் தூரத்திலுள்ள 13 ஆவது மைல்கல் பகுதியில் இருந்தும், இரண்டாவது முனை – விடத்தல்தீவிற்கு தென்கிழக்கே அமைந்திருக்கும் ஓட்டுப்பள்ளம் பகுதியில் இருந்தும், மூன்றாவது முனையை - விடத்தல்தீவிற்கு கிழக்காக பள்ளமடு ஊடாக முன்னேறி அங்கிருந்து திறப்பதென்றும் இராணுவத்தினர் திட்டம் வகுத்தனர்.

அத்துடன் விடத்தல் தீவிற்கு மேற்குப் புறமாக கடல் அமைந்திருந்ததால் மீதமிருக்கும் வடபகுதி கரையோரமாக புலிகளை பின்தள்ளுவதே இராணுவத்தினரின் நோக்கம். அப்படி பின்வாங்கும் புலிகளை பெட்டி கட்டி வழிமறித்து தாக்குதல் நடத்தும் திட்டமும் இராணுவத்திடம் இருந்ததாக பாதுகாப்பு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்காகவே பெருமளவு இராணுவத்தினர் ஒரே இலக்கை நோக்கி நகர்ந்தனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. எனினும் பெட்டி கட்டி புலிகளை வளைக்கும் திட்டம் புலிகளின் விய+கத்தால் கைகூடவில்லை.

விடத்தல்தீவை அண்மித்த பகுதிகளில் படைக்குவிப்பு இடம்பெறும்போதே இத்தகைய திட்டத்தை ஊகித்திருந்த புலிகள் தமது அணிகளை பாதுகாப்பாக ஏற்கனவே பின்னநகர்த்தியிருந்தனர். அதாவது இராணுவத்தினர் தாக்குதல்களை ஆரம்பிப்பதற்கு முன்பாகவே புலிகள் அங்கிருந்து விலகியிருந்தனர். விடத்தல்தீவை கைப்பற்றுவதற்கு முன்னரான சுமார் 10 நாட்களில் புலிகள் விடத்தல்தீவை விட்டு வெளியேறி வருவதாக இராணுவப் புலனாய்வுத்துறை தெரிவித்திருந்தது. விமானப்படைத் தகவல்கள் மற்றும் புலிகளின் வாகனச் சத்தங்களின் அடிப்படையில் வைத்து இந்த முடிவுக்கு அவர்கள் வந்திருக்கலாம்.

புலிகள் அங்கிருந்து விலகி வருகின்றனர் என்று தெரிந்தும் கூட 6000 இராணுவத்தினர் விடத்தல்தீவு நோக்கிச் செல்ல முற்பட்டுள்ளனர் எனில் புலிகள் குறித்த அச்சமே அதற்குக் காரணம் என்பதையும் மறுத்துவிட முடியாது. பின்வாங்குவதுபோல் போக்குக் காட்டிவிட்டு புலிகள் விடத்தல்தீவிற்குள் தமக்கு சமாதிகட்டி விடுவார்களோ என்ற அச்சம் இராணுவத்தினர் மத்தியில் இருந்துள்ளதாகவும் கருத வேண்டியுள்ளது.

விடத்தல்தீவில் நிலைகொண்டிருந்த புலிகளுக்கு ப+நகரிப் பிரதான பாதையே முக்கிய விநியோகப் பாதையாக இருந்து வருகிறது. அதனால் புலிகள் விடத்தல்தீவைக் கைவிட்டு இலகுவாக ஏ-32 பாதை வழியே விலகியிருந்தனர். விலகிய புலிகள் நீண்டதூரம் சென்றுவிடவில்லை. இலுப்பைக்கடவையில் நிலைகொண்டிருப்பதாக இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர்.

புலிகள் விடத்தல்தீவை விட்டு விலகும் முடிவை எப்போது எடுத்தார்களோ அதன் பின்னணியில் ஏதேனும் ஒரு வலுவான காரணம் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

விடத்தல்தீவில் நிலைகொண்ட புலிகள் ப+நகரிப் பக்கமாக விலகிச்செல்ல மற்றுமொரு காரணமும் உள்ளது. விடத்தல்தீவில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உருவாக்கிய ப+நகரிப் படையணியும் நிலைகொண்டிருந்தது. இந்த படையணி தற்போது மன்னாரிலிருந்து ப+நகரி பாதை வழியே நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்க விடயமாகவே உள்ளது.

மன்னார் களமுனையை பொறுத்தவரை புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும் பல களமுனைகளை வெற்றிகண்டவருமான தளபதி பானுவின் தலைமையிலான படையணிகளே நிலைகொண்டுள்ளன. தளபதி பானு தவிர தளபதி லக்ஸ்மன், தளபதி யாழினி (விதுசா) ஆகியோரும் மன்னார் களமுனையில்தான் நிற்கின்றனர். தளபதி பானு எப்போதும் எதிரியின் நடவடிக்கை விய+கத்தை முறியடிப்பதிலும் அந்த விய+கத்தை களநிலமைகளை வைத்து முற்கூட்டியே அறிந்துகொள்வதிலும் கை தேர்ந்தவர். எனவே அவரது தலைமையிலான படையணிகள் பெரியளவிலான சண்டைகள் இன்றியே விலகி வருவது இராணுவத்தினருக்கு ஆபத்தான சில செய்திகளையே எடுத்துச் சொல்வதாக உள்ளது.

விடத்தல்தீவில் இருந்து விலகிய புலிகள் இலுப்பைக் கடவையிலிருந்து சுமார் 8 கிலோமீற்றர் தூரத்திற்கு காவலரண்களை அமைத்துள்ளனர் என்று இராணுவ புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளதைப் பார்க்குமிடத்து புலிகள் இராணுவத்தினர் எடுத்த எடுப்பில் முன்னேறுவதற்கு இனிமேலும் வாய்ப்பளிக்க போவதில்லை என்பது புலனாகிறது.

விடத்தல்தீவிலிருந்து முன்னேறிய இராணுவத்தினர் சுமார் 4 கிலோமீற்றர் தூரத்திலுள்ள இலுப்பைக் கடவைக்கு கடந்த வெள்ளிக்கிழமை மாலை சென்றுள்ளனர். அங்கிருந்து தேக்கம்பிட்டி, மூன்றாம்பிட்டி, வெள்ளாங்குளம் என முன்னேறிச் செல்லும் வாய்ப்புகளுக்காக இராணுவத்தினர் தற்போது காத்திருக்கின்றனர்.

தற்போதைய நிலையில் வெள்ளாங்குளம்வரை இராணுவத்தினர் முன்னேறுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. எனினும் அடுத்துள்ள நாச்சிக்குடா நோக்கி இராணுவத்தினர் முன்னேற முற்படும்போதே புலிகளின் கடுமையான எதிர்ப்புகளை அவர்கள் சந்திக்க கூடும். இலுப்பைக் கடவையிலிருந்து சுமார் 7 கிலோமீற்றர் தூரத்தில் வெள்ளாங்குளம் அமைந்துள்ளது. வெள்ளாங்குளத்திலிருந்து சுமார் 7 கிலோமீற்றர் தூரத்தில் நாச்சிக்குடா அமைந்துள்ளது. எனவே இனிவரும் 14 கிலோமீற்றர் தூரத்தைக் கடப்பதற்கு இராணுவத்தினர் அதிகளவான சூட்டு வலுவைப் பயன்படுத்தக்கூடும்.

ஆயிரத்திற்கும் குறைவான புலிகளே இந்த களமுனையில் நிலைகொண்டிருப்பதால் விடத்தல் தீவிற்குச் சென்ற 6000 இராணுவத்தினரை பயன்படுத்தி தொடர்ந்து முன்னேறும் வாய்ப்புகள் கனியும் என இராணுவத்தினர் எண்ணியுள்ளனர். இராணுவத்தினரது எதிர்பார்ப்புகளை புலிகள் இலகுவாக நிறைவேற விடுவதில்லை. அந்த வகையில் விடத்தல்தீவிலிருந்து பூநகரி நோக்கி முன்னேறும் இராணுவத்தின் எதிர்பார்ப்பிற்கு புலிகள் முட்டுக்கட்டை போட முயல்வர் என்பதில் சந்தேகமில்லை.

ஏனெனில், விடத்தல்தீவை விட்டு விலகிய புலிகள் தொடர்ந்தும் கரையோரம் தமது கட்டுப்பாட்டைவிட்டு நழுவுவதை விரும்பப் போவதில்லை. அது அவர்களுக்கு நிச்சயம் பாதகமாக அமையலாம். அத்தகையதொரு நிலையிலும் விடத்தல்தீவை விட்டு புலிகள் விலகியுள்ளனர் எனில் விடத்தல்தீவைக் காட்டிலும் வசதிகொண்ட கடற்புலிகளுக்குரிய ஏனைய தளங்களை மன்னார் கரையோரத்தில் புலிகள் கொண்டுள்ளனர் என்பது வெளிப்படையாகியுள்ளது. அதாவது மாற்று ஏற்பாடுகளை கடற்புலிகள் தாரளமாக மன்னார் கரையோரத்தில் கொண்டுள்ளனர்.

குறிப்பாக நாச்சிக்குடா, குமுளமுனை, இரணைதீவு, காக்கைதீவு, எருமைத்தீவு, பேய்முனை, வலைப்பாடு, பாலாவி என கடற்புலிகளின் செயற்பாடுகள் நிறைந்த பகுதிகள் மன்னார் கரையோரத்தில் அதிகமுள்ளன. எனவே, விடத்தல்தீவின் இழப்பு இராணுவத்தினர் குறிப்படுவது போன்று புலிகளுக்கு பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தப் போவதில்லை.

ஆய்வு: நிலவரம் பத்திரிகைக்காக மகிழினி

ஆனால், மன்னார் கரையோரத்தில் சிலாவத்துறை, விடத்தல்தீவு, இலுப்பைக் கடவை ஆகிய இடங்களை இழந்த புலிகள் தொடர்ந்தும் கரையோரப் பகுதிகளை இழப்பதற்கு நிச்சயம் விரும்பமாட்டார்கள். அத்துடன் கரையோரப் பாதைவழியே ப+நகரியைச் சென்றடைவதே இராணுவத்தினரின் திட்டமாக இருப்பதால் கரையோரத்தை தக்கவைப்பதற்கு புலிகள் இனிமேல் முனையக்கூடும்.

அதுமட்டுமன்றி கிளிநொச்சி என்பது அரசாங்கத்தினதும் இராணுவத்தினரதும் தற்போதைய கனவுகளில் ஒன்றாக உள்ளது. எனவே, கரையோரத்தை கைப்பற்றிக் கொண்டே கிளிநொச்சி நோக்கிய நகர்வையும் மெதுமெதுவாக நடத்துவதற்கு இராணுவத் தலைமை திட்டமிடுகிறது. வெள்ளாங்குளத்தின் அமைவிடத்தை எடுத்துக் கொண்டால் கிளிநொச்சி மாவட்டத்தின் எல்லையிலேயே அது அமைந்துள்ளது. எனவே வெள்ளாங் குளத்தை இராணுவத்தினர் சென்றடைவார்களாயின் கிளிநொச்சி மாவட்டத்திற்குள் இலகுவாக கால்பதித்து விடலாமென அரச தரப்பு கணக்கு போடுகிறது.

அத்துடன் வெள்ளாங் குளத்திற்கு முன்னேறும் பட்சத்தில் துணுக்காய் பகுதியை நோக்கி நகரும் வாய்ப்பும் இராணுவத்தினருக்கு கனியலாம். தற்போது 57 ஆவது படையணியின் சில பிரிகேட்டுகளும் 58-2 ஆவது பிரிகேட்டும் துணுக்காயைக் குறிவைத்துத் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. எனவே வெள்ளாங்குளம் - துணுக்காய் வீதியைக் கைப்பற்றி புலிகளின் விநியோகத்தைத் தடுத்து கிளிநொச்சி மாவட்டத்தில் இலகுவாகக் கால்பதிக்க இராணுவத்தினர் முற்படக்கூடும். கிளிநொச்சியை நோக்கிய நகர்வுக்கும் புலிகள் இடமளிக்கப் போவதில்லை.

இந்நிலையில் புலிகள் நீண்டநாட்களாக பாரிய வலிந்த தாக்குதல்களை நடத்தாது அமைதி காப்பதை நோக்குமிடத்து புலிகள் தமது அடுத்த நகர்வுக்கு தயாராகி விட்டார்களா என்ற சந்தேகத்தையே ஏற்படுத்துகிறது. இங்கு இன்னொரு விடயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனைய களமுனைகளில் குறிப்பாக வடபோர்முனையில் ஏற்படும் திடீர் திருப்பம் ஒன்று மன்னார் களமுனையில் எதிர்பாராத மாற்றங்களுக்கும் வித்திடலாம். எனவே தற்போதைய இராணுவ நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்த விடயமாக உள்ளதால் தனியே ஒரு களமுனையை வைத்து அதன் போக்கைக் கணித்துவிட முடியாது.

அனைத்துக் களமுனைகளின் போக்குக் குறித்து புலிகளின் தலைமை நன்கு ஆராய்ந்து அனைத்துக் களமுனைகளிலும் சமகாலத்தில் பதிலடி கொடுத்தாலும் ஆச்சரியப்பட முடியாது. புலிகளின் பொறுமையும் அரசாங்கத்தின் கிளிநொச்சியைக் கைப்பற்றுவதான கொக்கரிப்பும் நல்லதற்கல்ல என்றே கருதப்படுகிறது.

போர்முனையில் இன்று வலிந்த தாக்குதல் என்ற பந்து இராணுவத்தினரின் கைகளிலேயே தொடர்ந்தும் இருந்து வருகிறது. இந்தப் பந்து புலிகளின் கைக்கு மாறும் நாட்களே தற்போது எண்ணப்படுகின்றன எனக் கருதவேண்டியுள்ளது. அதற்கான களச் சூழ்நிலைகள் இராணுவத்தினர் கைப்பற்றிய இடங்களில் காணும் பாதுகாப்பு ஓட்டைகளை அடிப்படையாகக் கொண்டதாகவே அமையலாம்.

நன்றி: நிலவரம்

விபரம்

http://www.swissmurasam.info/content/view/8161/31/

---

வணக்கம் கஜவன்,

ஏற்கனவே சில உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல் தான். முழுமையாக ஆக்கத்தை இங்கு இணைத்து - அந்த ஆக்கம் பெற்றுக்கொள்ளப்பட்ட இணையத்தளத்தின் இணைப்பைக் கொடுங்கள். அரைகுறையாக இணைப்பதென்றால், ஆக்கத்தை இணைக்கவேண்டாம். புரிந்துணர்வுக்கும், ஒத்துழைப்புக்கும் நன்றி.

Edited by வலைஞன்
முழுமையான கட்டுரை இணைக்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரை கொஞ்சம் பழசாகிவிட்டது. இராணுவம் வெள்ளாங்குளத்தையும் அதிக எதிர்ப்புக்களின்றி அடைந்துவிட்டது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.