Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஜினியின் முடிவுக்குப் பின்னால்...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரஜினியின் முடிவுக்குப் பின்னால்...

மீண்டும் ரஜினி வாய்ஸ்! ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆகும் சமயத்திலும், புதுக்கட்சி அறிவிப்பு நிச்சயம் வரும் என்று காத்தி-ருப்-பான் ரஜினி ரசிகன். 'எந்திரன்' வருகைக்கும் அப்படியரு எதிர்பார்ப்பை ஏற்படுத்திக்கொண்டவனுக்கு ஷாக் சர்ப்ரைஸ். அதற்கு முன்பே தன்னைச் சந்திக்க வரும்படி சூப்பர் ஸ்டார் அழைக்கவும் உற்சாகப் பெருங்கடலில் ஆழ்ந்தான் அவன். ஆனால், தலைவனுடனான அந்த மெகா மீட்டிங்குக்குப் பிறகு உற்சாகத்தை ஒதுக்கி வழக்கம் போலக் குழப்பத்தில் ஆழ்ந்து கிடக்கிறான் அவன்.

p8ctc4.jpg

ஆர்வத்தோடு தன்னைத் தேடி சென்னை வந்தவர்களுக்கு, ஆரம்பத்தில் ஐஸ் வார்த்தைகள் சொன்ன ரஜினி, இறுதியாகக் கூறியதுதான் அவனது குழப்பத்துக்கும் கவலைக்கும் காரணம். ''அரசியல்ல ஜெயிக்கணும்னா திறமை, புத்திசாலித்தனம், உழைப்பு மட்டும் பத்தாது. சந்தர்ப்பம், சூழ்நிலை, நேரம்... இந்த மூன்றுக்கும் மிகப் பெரிய இடமுண்டு. அரசியலுக்கு நான் வந்திருக்-கணும்னா 1996-லயே வந்திருக்கணும். என்னைக் கட்டாயப்படுத்தி வர வைக்க முடியாது. கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணினா வாழ்க்கை நல்லாவா இருக்கும்? வரணும்னு நினைச்சா நாளைக்கே ஏற்பாடு பண்ணிடுவேன். ஆனா அவன் சொல்லணும்!'' என்று தனது வழக்கமான, 'வரும்... ஆனா, வராது' ஸ்டைலில் வார்த்தைகளை உதிர்த்தாரே தவிர, எதையும் தீர்க்கமாக இந்த முறையும் அறிவிக்கவில்லை. அரசியல் என்ட்ரி அறிவிப்பு என்று எதிர்பார்த்தவர்களுக்கு இது சரியான பதில் இல்லை. அதேசமயம், ரஜினி மேடையில் பளீர் எழுத்துக்களில், 'கடமையைச் செய்! பலனை எதிர்பார்!' என்று எழுதி வைத்திருந்தது தந்திரமா, தற்செயலா என்றும் எவராலும் யூகிக்க முடியவில்லை!

'இனி ரஜினி அரசியலில் இல்லையா?' என்ற சந்தேகத்தையே எழுப்பிருக்கிறது ரசிகர்களுடனான அவரது சமீபத்திய சந்திப்பு. அரசியல் சூறாவளி அவரை அலைக்கழித்த புயல் சின்னங்கள் இதோ...

முதல் குண்டு!

எம்.ஜி.ஆர். காலத்திலேயே அவருக்கும் ரஜினிக்கும் மோதல் இருந்ததாக உலவிய கதைகள் உறுதிப்படுத்த முடியாதவை. அப்போதும் அரசியல் பற்றி எந்தக் கருத்தும் இல்லாமல் ஒதுங்கியேதான் இருந்தார் ரஜினி. ஜெயலலிதா முதல்வரானதும் ராகவேந்திரர் படத்தை அளித்து வாழ்த்திவிட்டு வந்தார். 'அவர் நம் துறையைச் சேர்ந்தவர்' என்பது அவரது விளக்கம். ரஜினி ஜெயலலிதாவுடன் நட்பு பாராட்டவே விரும்பினாலும் அடுத்தடுத்த சம்பவங்கள் அதற்குச் சாதகமாக இல்லை. போயஸ் கார்டன் வீட்டுக்கு ரஜினி திரும்பிய ஒரு நாளில், பாதுகாப்புக் காரணங்களுக்காக அவரது கார் நிறுத்தி சோதிக்கப்பட்டது. அரசியல்வாதிகளின் அர்த்தமில்லாத பந்தாக்கள் மீது ரஜினிக்குக் கசப்பு உணர்வை ஏற்படுத்திய முதல் நிகழ்ச்சி இது.

செய்திகள் வெளியான சமயம்தான், 'அண்ணாமலை' படம் ரிலீஸ். அதில் அரசியல்வாதி வினுச்சக்கரவர்த்தியை விமர்சித்த ரஜினியின் டயலாக் வெடிகள், 'அண்ணாமலைக்குத் தடை விதிக்கப்படலாம்!' என்றெல்லாம் பத்திரிகையாளர்களை எழுதவைத்தன. 'பாட்ஷா' பட விழாவில் தனது கோபத்தை மேடையிலேயே கொட்டினார் ரஜினி. 'மணிரத்னம் வீட்டில் குண்டு வெடித்தது தமிழகத்தில் வெடிகுண்டு கலாசாரம் பரவ ஆரம்பித்ததன் அறிகுறி' என்று துவங்கி, ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை விடும் தொனியில் அமைந்த அந்தப் பேச்சு, ஜெயலலிதா அரசு மீது மக்களுக்கு ஏற்படத் துவங்கியிருந்த ஏமாற்றத்துக்கு எரிபொருள் சேர்த்தது. அதுதான் ரஜினிகாந்த்தின் முதல் அரசியல் குண்டு.

சிவாஜி கணேசன் செவாலியே விருது வாங்கியதற்காக நடந்த பாராட்டு விழாவில் ஜெயலலிதாவுடன் ரஜினியும் பங்கேற்று ஆச்சர்யமளித்தார். ஆனால், அதே மேடையில் ''புதிதாகத் துவங்கப்பட்ட திரைப்பட நகருக்கு 'ஜெ.ஜெ. திரைப்பட நகர்' என்று பெயரிட்டுள்ளனர். அதற்கு எம்.ஜி.ஆர். பெயரையோ அல்லது சிவாஜி பெயரையோதான் வைத்திருக்க வேண்டும்!'' என்று ரஜினி பேசப் பேச, ஜெயலலிதா முகம் சிவந்தது. 'அரசியல் முகமும் காட்ட வேண்டும். அதை ரசிகர்கள் விரும்புகிறார்கள்' என்ற ரஜினியின் தீர்மானம் அந்தப் பேச்சில் பளிச்சிட்டது.

களமிறங்குவது கட்டாயம்!

அடுத்தடுத்து, அரசியல் அரங்கில் ரஜினி சீண்டப்பட... ஆவேசமானான் ரஜினி ரசிகன். 'தலைவா! கட்சி ஆரம்பி', 'நீதான் நாளைய தமிழகம்' என்ற போஸ்டர்கள் முளைத்தது அப்போது முதல் தான். தனிக் கட்சி எண்ணம் ரஜினிக்கும் இல்லாமல் இல்லை. அது தொடர்பாகப் பலரிடமும் ஆலோசித்தபடி இருந்தார்.

p8amn2.jpg

சரியாகச் சொன்னால் அரசியல் புள்ளிகளான சுமார் 300-க்கும் மேற்பட்ட தனி மனிதர்களைஅவர் 1995-96 காலகட்டத்தில் மட்டும் தனித் தனி-யாகச் சந்தித்து ஆலோசித்ததாகப் புள்ளிவிவரங்கள் உண்டு. 'புதுக் கட்சி துவக்குங்கள்!' என்று அதில் பலர் தூபம் போட்டதில் அதிகமாகக் குழம்பிப் போனது ரஜினிதான்! ''நீங்கள் கருணாநிதியைப் பற்றி முதலில் தெரிந்துகொள்ளுங்கள். எந்தப் பிரச்னையும் நாட்டில் இல்லை என்று நாங்கள் காத்திருக்கும்போது ஒரு புதுப் பிரச்னையை அவர் கையில் எடுப்பார். பூதாகார-மாகக் கிளம்பி வரும் ஒரு விவகாரத்தை மறு நாளே வேறொரு சிறு அறிக்கையால் திசை திருப்பிவிடுவார். நாங்கள் வேறு வேறு கட்சியில் இருந்தாலும் அவரதுநிழலைப் பார்த்து-தான் அரசியல் செய்துகொண்டு இருக்கி-றோம்!'' என்று எம்.ஜி.ஆர். அமைச்சரவை-யில் அங்கம் வகித்து அப்போது தனிக் -கட்சி கண்ட முன்னாள் அமைச்சர் ரஜினியிடம் சொன்னார்.

கருணாநிதி மீது தனிப்பட்ட முறை-யில் ரஜினிக்கு அதிக மரியாதை அப்போது முதல் துளிர்விட்டது. 'அப்படின்னா, முதல்கட்-டமா அவரை ஆதரிக் கலாமே!' என்று தனது தனி ஆவர்த்தன சுருதியை இறக்க ஆரம்-பித்தார்.

வார்த்தைக்கு வார்த்தை தான் மதிப்போடு கூறும் 'கலைஞர் சார்' கரத்தை வலுப்படுத்த 96 தேர்தலில் சந்தோஷமாக ஒத்துழைத்தார் ரஜினி. தி.மு.க. வெற்றி பெற்றதைத் தனது கட்சி வென்றதாகவே நினைத்தார். ஜெயலலிதாவை யாராவது வீழ்த்தினால் போதும் என்று நினைத்து அமைதியானார். மு.க.அழகிரியின் மகள் அஞ்சுகச்செல்வி திருமணத்தில் பேசும்-போது, 'கழக உடன்பிறப்புக்களே!' என்று பேசும் அளவுக்கு அவரது கறுப்பு- சிவப்பு பாசம் கனிந்து போயிருந்தது.

வேதனைகள் வெடித்தன!

அடுத்தடுத்த படங்களில் பிஸியானதால் அரசியலை ஒதுக்கிவைத்தார் ரஜினி. ஆனால், அப்படி ஒதுங்கிவிட அவரது ரசிகர்களால் முடியவில்லை. தேர்தல் சமயத்தில் ரசிகர்களுக்கு அளிக்கப்பட்ட மாலை மரியாதை, உபசார கவனிப்புகள் குறைந்தன. ''தேர்தல் முடிந்துவிட்டது. இனி அவரவர் தங்கள் வேலையைப் பார்க்கப் போகலாம்'' என்று ரஜினி இவர்களிடம் சொல்ல ஆரம்பித்தார்.

1998 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக கோவை தொடர் குண்டுவெடிப்பு அன்றைய தி.மு.க. ஆட்சிக்குக் கெட்ட பேரை ஏற்படுத்தியது. ரஜினி அதைப் பொருட் படுத்தாமல், ''இப்போது நல்லாட்சிதான் நடக்கிறது. இன்னொரு தடவை இங்கே குண்டுவெடிச்சா கலைஞர் சார் ரிஸைன் பண்ணிடுவார்!'' என்றே தேர்தலுக்கு முன் தி.மு.க-வுக்கு அழுத்தமாக ஆதரவு அளித்தவர். ஆனால், அதன்பிறகு அவர் அரசியல் நடப்புகளில் அதிகம் ஆர்வம் காட்டவில்லை. ஆனால், கர்நாடக நடிகர் ராஜ்குமாரை சந்தனக் கடத்தல் வீரப்பன் கடத்தியபோது துடித்துப் போய்விட்டார் ரஜினி. ''இது என் பிராப்ளம். அவரை மீட்டுத் தர வேண்டியது என் கடமை'' என்று தன்னைச் சந்தித்த ராஜ்குமார் மனைவி பர்வதத்தம்மாளிடம் கண்கலங்கிய ரஜினி, தனது அரசியல் தொடர்புகள் மூலம் நினைத்ததைச் சாதித்தார். 'அரசியலில் இறங்காமலேயே சாதித்துக் காட்டியவன் நீ. இனியும் என்ன யோசனை? இறங்கு தலைவா. வேலை கொடு தலைவா!' என்ற போஸ்டர்கள் முளைத்தன. ஆனாலும், 2001 தேர்தலில் அமைதியாகி-விட்டார் ரஜினி.

ரசிகர்களுக்குத் தீனி!

ரஜினி தனது ரசிகர்களுக்கு மறுபடி வேலை கொடுத்-தாக வேண்டிய நெருக்கடியை உருவாக்கியவர் டாக்டர் ராமதாஸ். ''சினிமாவில் விதவிதமாக சிகரெட் பிடித்து இளைஞர்களைச் சீரழித்தவர் ரஜினி. அதைத்தான் 'பாபா' படத்திலும் செய்கிறார்!'' என்று ராமதாஸ் ஆவேசம் காட்ட, 'பாபா' படப் பெட்டிகளைத் தூக்கிக் கொண்டு ஓடினார்கள் பா.ம.க-வினர்.

அடுத்து வந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்டது பா.ம.க. எதையாவது செய்தாக வேண்டிய நெருக்கடி ரஜினிக்கு. பா.ம.க. போட்டியிட்ட ஆறு தொகுதிகளில் மட்டும் அவர்களை தோற்கடியுங்கள் என்று ஒரு விநோத அசைன்மென்ட் கொடுத்தார். எப்போதும் தான் மதிக்கும் 'கலைஞர் சார்' கூட்டணியில் இருப்பவர்களைத் தோற்கடிக்க-லாமா என்றெல்லாம் அவர் யோசிக்கவில்லை. மறைமுகமாக தி.மு.க-வோடும் அவருக்குக் கசப்புகள் ஆரம்பித்தது அப்படித்தான்! 'இப்படை தோற்கின் எப்படை வெல்லும்' என்று இறங்-கிப் பாடுபட்டார்கள் அப்பாவி ரசிகர்கள். ஆனாலும், பா.ம.க. போட்டியிட்ட அனைத்திலும் வென்றது.

'ஆஹா... ஓஹோ... தைரியலட்சுமி'!

அடுத்த சில மாதங்களில் வீரப்பனை அ.தி.மு.க. அரசு என்கவுன்ட்டர் செய்தது. ராஜ்குமாரை மீட்கப் பாடு பட்டபோது ஏற்பட்ட தனிப்பட்ட கசப்பு அனுப-வங்கள், வீரப்பனை 'அசுரன்' என்று வர்ணித்த ஒரே காரணத் துக்காக பா.ம.க-வினர் தனக்குக் கொடுத்த இடைஞ்சல் எல்லாமாக ரஜினியின் மனதில் புகைந்து-கொண்டே இருந்தது. வீரப்பன் வீழ்ந்தவுடன் ஜெய-லலிதாவை 'தைரியலட்சுமி' என்று புகழ்ந்தார். தனது மகள் திருமணத்துக்கு ஜெயலலிதாவை நேரில் சென்று அழைத்தார். சினிமா துறைக்கு ஜெயலலிதா செய்த சேவைக்காக நடந்த பாராட்டு விழாவில் பொன்னாடை-யின் ஒரு பக்கத்தை கமல் பிடித்திருக்க இன்னொரு பக்கத்தை ரஜினி பிடித்திருந்தார்.

ஜெ. எதிர்ப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட அந்த தருணத்தில்தான், அவரது ஆக்ரோஷ அரசியல் தோற்றத்துக்கும் மறைமுக முற்றுப்புள்ளி விழுந்தது!

எது அவர் அரசியல்?

நரசிம்மராவைச் சந்தித்ததன் மூலம் தன்னைக் காங்கிரஸ்காரராகக் காட்டிக்கொண்டார். ''நதி நீர் பிரச்னைக்கு ஆதரவளிப்பதால் பி.ஜே.பி-க்குத்தான் எனது ஓட்டு'' என்றார். இது தேசிய அரசியல்!

'இந்திய அரசியலில் மூத்த அரசியல் தலைவர்' என்று கருணாநிதியை மனம்குளிரப் பாராட்டியவர், ஜெயலலிதா-வுக்கு அளித்த பட்டம் தைரியலட்சுமி. இது மாநில அரசியல்!

தமிழகத்தின் இரு திராவிடக் கட்சிகளையும் பகைக்க விரும்பாதது மட்டுமல்ல... ஒரே நேரத்தில் தயக்கமில்லாமல் பாராட்டவும் தயங்காதவர் ரஜினி. ''நல்லது பண்ணும்-போது பாராட்டுவேன்... பிடிக்கலேன்னா கட்டாயம் விமர்சனம் செய்வேன்'' என்ற அவரின் நிலைப்பாடு ரசிகர்களுக்குத்தான் கொஞ்சம் பிடிபடவில்லை. இது சமூகத்தை நடுநிலையோடு பார்க்கிற தனிமனிதருக்கு சரியாகவே இருக்கும். ஆனால், தேர்தல் களங்களில் மாறி மாறி பகையைத் தேடிக்கொண்ட தங்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கும் என்று குழம்பினார்கள் ரசிகர்கள். ஒருநாள் தங்கள் தலைவர் அரசியலுக்கு வரத்தான் போகிறார் என்றால், அவரது அரசியல் யாரை எதிர்த்து அல்லது யாரை ஆதரித்து தொலைநோக்கோடு நகர்கிறது என்று ரசிகனுக்குப் புரியவில்லை.

மூன்றாம் பகை:

கருணாநிதி, ஜெயலலிதா என்ற இரண்டு சக்திகள் மட்டுமே நிர்ணயித்த அரசியலை, ரஜினிக்குப் பின்னால் சினிமாவுக்கு வந்த விஜயகாந்த்தும் ஒரு சக்தியாக மாறி 'சுக்கான்' பிடித்துச் செலுத்த ஆரம்பித்-தார். இதை ரஜினி எப்படி எடுத்துக்கொண்டாரோ... அவருடைய ரசிகர்கள் மானப் பிரச்னையாகவே எடுத்துக்கொண்டனர். கொடி அறிமுகம், பஞ்சாயத்து தேர்தலில் போட்டி, தனிக் கட்சி, மாநாடுகள், எம்.எல்.ஏ-வாகப் பிரவேசம்... சரியோ தவறோ... எதிரி என்று எடுத்துக்கொண்டவர்களைத் தயங்காமல் கடும் விமர்சனம் என்று வேகமாக நகரத் தொடங்கிய விஜயகாந்த்தின் நடவடிக்கை, ரஜினியின் ரசிகர்களைக் கூர்ந்து கவனிக்க வைத்தது.

p8buv6.jpg

கொடி பிடித்து கோஷம் போடுவதோடு, கௌரவமான பதவிகளில் அமருவதற்கு விஜயகாந்த் கட்சியில் ரசிகர் களுக்கு மளமளவென வாய்ப்பும் கிடைத்துவிட, இலவு காத்த கிளியாக நின்ற ரஜினியின் ரசிகர்கள் உச்சகட்ட மாகப் பொறுமை இழந்தார்கள்.

இதுவரை இல்லாத வண்ணமாகக் கடந்த சில மாதங்-களாக, தங்கள் தலைவரை அரசியலுக்கு வரும்படி சற்று முரட்டுத்தனமாகவே அழைப்பு வைக்கத் தொடங்கினார்-கள். தன்னிச்சையாக மன்றக் கூட்டங்கள் போட்டார்கள். சிலர், தனிக் கட்சியே தொடங்கிவிட்டார்-கள்! தன் ரசிகர்களின் இந்த ஆவேசம் இயல்பானதா... அல்லது, தனக்கெதிரான சக்திகளின் இயக்கம் இதன் பின்னால் இருக்கிறதா என்று ரஜினியால் முடிவு செய்ய முடிய-வில்லை. அதேசமயம், நிஜமாகவே தான் அரசிய-லுக்-குள் இழுத்துவிடப்பட்டால் அது தன் சினிமா வாழ்க்-கையில் முன்னெப்போதையும்விட பலமாக எதிரொலிக்கும் என்று கடந்த கால அனுபவங்களிலிருந்து அவர் கற்று முடித்திருந்தார். மளமளவென்று வளர்ந்து வரும் எந்திரனை உச்சத்தில் தூக்கி நிறுத்த ரசிகனின் அன்புக்கரங்கள் அவசியமல்லவா..? அவனைச் சந்திக்கவே மறுத்துக்கொண்டு இருந்தால், 'எந்திரன்' வரும்போது ரசிகனின் ஆதரவு எப்படி இருக்குமோ?

அதற்காகக் குறிக்கப்பட்டதுதான் 'நவம்பர் 3' சென்னை சந்திப்பு!

இந்தக் கூட்டத்திலும், ''அரசியலுக்கு வருவது இப்போதைக்கு ஆகக்கூடியதல்ல'' என்றுதான் ரஜினி சொல்லியிருக்கிறாரே தவிர, ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஒரேயடியாக அணைத்துவிடவில்லை. கூட்டத்துக்குப் பின் மூன்று முக்கிய முடிவுகளை ரஜினி எடுத்திருப்பதாக சொல்கிறார்கள்.

முதலாவது, ஆண்டுதோறும் தனது ரசிகர்களை இதுபோன்ற மெகா சந்திப்புகள் ஏற்பாடு செய்து பார்க்க இருக்கிறார் ரஜினி. அடுத்ததாக, 1991-க்குப் பிறகு அனுமதி வழங்கப்படாமல் இருக்கும் ரசிகர் மன்றங் களுக்குப் பதிவு எண் வழங்கி உற்சாகமூட்டுவது. மூன்றா வதாக, சில மாவட்டங்களில் மட்டும் ரசிகர் மன்றமாவட் டத் தலைமை அலுவலகங்களைத் திறக்க அனுமதி கொடுக்க இருக்கிறார் என்கிறார்கள். அடுத்த மாதம் 12-ம் தேதி ரஜினிக்கு 58-வது பிறந்த நாள். அதை இதுவரை இல்லாத உற்சாகத்துடன் கொண்டாடவும் ரசிகர்கள் திட்டமிட்-டுள்ளார்கள். ''தனக்கு எல்லாம் கொடுத்ததமிழ் நாட்டுக்கு என்ன வேண்டுமானாலும் செய்வார் எங்கள் தலைவர். அரசியலா, ஆன்மிகமா என்று தீர்மானித்து தலைவர் எங்கு அழைத்துப் போனாலும் நாங்கள்தயார்!'' என்று இத்தனை வருடங்களில் குறையாத உணர்ச்சி வேகத்தில் பூரிக்கிறான் ரஜினி ரசிகன்.

ரஜினியைப் பொறுத்தவரை சினிமா உலகில் தொடர்ந்து வசூலைக் குவிப்பதில் அவர் ஒரு அசாத்திய 'எந்திரன்'! தன் வெற்றிக்கு ரசிகர்களைப் பயன்படுத்துவதில்..?

விகடன்.கொம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.